Tamil Novel Chakraviyugam 26

26

“உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை, அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் ‘சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்” என்றான் கிருஷ்ணன்.

“நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?” என்றார் உத்தவர்.

“உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினைகளையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்துவிடுபோதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள். பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?” என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.

உணர்வுகளைத் துடைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ஸ்ரீதரன்… அருகில் அவனது மனைவி தமிழ்நதி… முந்தைய தினம் தான் கோர்ட்டில் கிருஷ்ணர் கோவிலின் தேவசம்போர்டின் சார்பாக நிலவறைகளை திறக்க ஒப்புக்கொண்டு அதற்கான உத்தரவில் தானே கையெழுத்தும் இட்டான்…

ஒரு வருடமாகக் கோர்ட்டில் கேஸை நிலுவையில் வைத்து, முடிக்க வேண்டிய காரியங்களை எல்லாம் முடித்துவிட்டு கடைசியாகத்தான் ஒப்புக்கொண்டான்…

அன்று வாமனன் பிரச்சனையைக் கோர்ட்டுக்கு எடுத்துச் சென்று விட்டப்பின், ஸ்ரீதரன் காய்களை மிகவும் வேகமாக நகர்த்தினான்…

வேறு வழியில்லை என்பதுதான் முன்பே தெரிந்ததாயிற்றே… அவனும் சற்று எதிர்பார்த்திருந்தான்… ஆனால் இவ்வளவு விரைவாக இந்த வேலையை வாமனன் செய்வான் என்று அவன் நினைக்கவில்லை…

கிருஷ்ணர் கோவிலின் நிலவறைக் கதவுகள் எந்தக் காலத்திலும் திறக்கப்பட்டதில்லை… அதன் ரகசியத்தை அறிந்தவர் யாரும் இல்லை… வாரிசாக வருபவர்களுக்குச் சில ரகசியங்கள் மூத்த தம்புரானால் ஒப்புவிக்கப் படும்… அதைக் காப்பாற்ற வேண்டியது அந்த வாரிசுகளின் கடமை…

அப்படி அவனிடம் ஒப்படைக்கப்பட்டது தான் நிலவறை ரகசியங்கள்…

எந்த நேரத்திலும் வெளியாகக் கூடாது என்ற உறுதிமொழியோடு அவன் ஏற்றுக்கொண்ட கடமை அது!

அந்த நிலவறைகள் எப்போதுமே வாமனனை ஈர்த்திருக்கின்றன… அவனது பேராசையை நீரூற்றி வளர்த்திருக்கின்றன…

ஆசைகள் பேராசையாகும்போது தர்மங்களும் நியாயங்களும் அர்த்தமற்றதாகி விடுகின்றன… அது போலத்தான்… வாமனன் தர்மங்களை சற்றும் பார்க்காமல் செய்த வேலைகளனைத்தும்…

இந்த நிலை வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் முதலில் சென்னைக்கு அவன் சென்றது… அதன் பின் இங்கு வந்ததும் இந்தப் பிரச்சனையை முடிக்கத்தான்… இப்படித்தான் முடிய வேண்டும் என்று அந்தக் கிருஷ்ணர் ஆசைப்படுகிறார் போல…

அதை முடிவு செய்தவுடன் அன்று அவ்வளவு தெளிவாக இருந்தது மனது… எப்படியும் சமாளித்து விடலாம் என்று தோன்றியது…

இன்னும் அவனது வியூகத்தை எப்படித்தான் வகுப்பான் என்று பார்க்கலாம் என்று எண்ணிக்கொண்டான்…

“சர்… ஒரு வார்த்தை சொல்லுங்க… இப்பவே அந்த ஆளைத் தூக்கிடலாம்…” ராஜீவ் கோபமாகப் பொரும, ஸ்ரீதரன் நிதானமாக அமர்ந்திருந்தான்.

“அவனோட மரணம் தான் வேணும்னா அவன் என்னுடைய அம்மா அப்பாவைக் கொன்ற போதே நான் செய்திருப்பேன் ராஜீவ்… இப்போதும் சொல்கிறேன்… ஒருவருடைய மரணம் தான் நமது வெற்றியை உறுதி செய்கிறது என்றால் வென்றது நானில்லை… அவன் தான்! அந்த நிலை நமக்கு வேண்டாம்… அவன் இருக்க வேண்டும்… நமது வெற்றியைப் பார்க்க அவன் இருக்க வேண்டும்…”

“அப்படீன்னா… அவனை என்னதான் செய்வது?” ஸ்ரீதர் கேட்க…

“ம்ம்ம் பார்க்கலாம்…” என்று புன்னகைத்தான்.

அவ்வளவு நெருக்கடியான நிலையில் சிரிப்பவன் அவன் ஒருவனாகத்தான் இருப்பான் என்று நினைத்துக்கொண்டான்… ஆனால் சந்தர்ப்பங்கள் அதீதமான நிலையிலிருக்கும்போது, பயணம் செய்யும் வழி சரியான இலக்கைத்தான் சென்றடைகிறதா என்பதில் முழு உறுதியில்லாதபோது தம்மையும் அறியாமல் ஒரு புன்னகை மலருமே… அந்தப் பாவப்பட்ட மனிதனின் புன்னகையே அது!

அதன் பின் எளிய முறையில் தமிழ்நதியை திருமணம் செய்து கொண்டதாகட்டும், திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்று முரண்டு பிடித்தவர்களை அரசியல் அஸ்திரங்களை கொண்டு வழிக்குக் கொண்டு வந்ததாகட்டும், கோர்ட்டில் அந்த வழக்கை இழுத்தடித்ததாகட்டும், அனைத்துமே ஏதோ ஒரு கணக்கீட்டில் நடந்தது போலவே தோன்றியிருந்தது.

அவை சக்கரவியூகம் அவனைச் சுற்றி வளைத்த உச்சபட்ச காட்சிகள்!

காலம் காலமாகக் கிருஷ்ணர் கோவிலில் கடைபிடித்து வந்த தேவசம்போர்டு வழிமுறைகளை மாற்றினான்… அதோடு மற்ற தேவசம்போர்டுகளையும் கூட… சுதந்திர அமைப்பாகச் செயல்பட்டு வந்தவைகளை இன்னமும் பொறுப்பு வாய்ந்த அமைப்பாக உருவாக்கினான்…

உறுப்பினர்களைத் தேர்வு செய்வது, தலைமையைத் தேர்ந்தெடுப்பது என அனைத்தும் இனி ஜனநாயக முறைப்படி நடக்கும் என்பதை அறிவித்தான்… இதன் மூலம் மோசடிகள் நடப்பதும் தடுக்கப்படும் அதே சமயத்தில் தேவசம்போர்டுகளின் சுதந்திரத்திற்கும் பங்கம் வராது.

கிட்டத்தட்ட இந்த அறிவிப்பு தேவசம் போர்டுகளின் செயல்முறைக்குப் பெரிய அறிவிப்பாக இருந்தது… கிட்டத்தட்ட ஒரு புரட்சியைச் செய்வது போல… பல இடங்களில் அதற்கும் எதிர்ப்புகள் வரத்தான் செய்தது… ஆனால் கலங்கவில்லை…

போலி சந்தனக் கட்டைகள் கடத்தல் வழக்கில் விசாரணைகள் விரைந்து முடிக்கப்பட்டு, வாமனன் மேல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

அவனது கட்சியினர் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று திட்டித்தீர்த்தனர்… மீடியா மக்கள் உள்ளுக்குள் என்ன நடக்கிறது என்பதை அறியாமலேயே அறிந்தது போல எழுதித் தள்ளிக்கொண்டிருந்தனர்.

ஸ்ரீதேவி அவனிடம் உதவிக்கு வரவில்லை… வாமனனின் பேராசையின் விளைவுகளும், அதன் பொருட்டு அவன் கொடுக்கும் விலைகளும் நியாயமானவையே என்பது அவளதுக் கருத்தாக இருந்தது… அவன் சற்று உண்மையானவனாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று அடிக்கடி எண்ணிக்கொண்டாள்…

ஆனால் வேறு வழியில்லை இப்போது…

அனைத்தும் கைமீறி விட்டன…

வாமனனை பொறுத்தமட்டிலும் அவன் சிறைக்கு சென்றாலும் கிருஷ்ணர் கோவிலின் நிலவறைகள் திறக்கபட்டேயாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். ஒன்று தான் அனுபவிக்க வேண்டும் அல்லது முற்றிலுமாக நசுக்கப்பட வேண்டும்… அது ஒன்றே அவனது தாரக மந்திரமாக இருந்தது…

வெளியாட்கள் கவனத்திற்கு வந்தபின் எதையும் தடுத்து வைக்கவோ இனியும் நிலவறைகளின் ரகசிய இருப்பை காப்பாற்றவோ முடியாது என்பதை புரிந்து கொண்டவன், அதற்கான பாதுகாப்பை அதிகப்படுத்தினான்…

அனைத்தும் முடிந்த பின் தான் நீதிமன்றத்தில் நிலவறைகளை திறக்கக் கிருஷ்ணர் கோவில் தேவசம்போர்டின் சார்பாக ஒப்புக்கொண்டான்… தன்னால் அரணாக இருந்து காத்துவிட முடியும் என்ற தைரியம் அவனுக்கு இருந்தது…

அன்று பத்திரிக்கைகளும் மீடியாவும் கிருஷ்ணர் கோவிலுக்கு வெளியே குவிந்திருந்தது… கோவிலைச் சுற்றி போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது… ஒரு வருடமாக அவர்களுக்குச் சுவாரசியமாகத் தீனியளித்த ஒரு விஷயத்தின் முடிவை அறிந்து கொள்ள அவர்களும் ஆர்வமாக இருந்தனர். திருவிதாங்கூருக்கு அடுத்து கிடைத்த சுவாரசியமான செய்தி அல்லவா அவர்களுக்கு!

முந்தைய இரவும் கூட அவன் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தபோது,

“என்னம்மா? ஏன்? ரொம்ப டென்ஷனா இருக்கா?” தமிழ்நதி ஆதரவாகக் கேட்க, அவன் பதில் பேசாமல் அவளது மடியில் படுத்துக் கொண்டான்.

இந்த ஒருவருடத்தில் அவள் அந்த நிலவறைகளை பற்றி ஒரு வார்த்தைக் கூடக் கேட்கவில்லை… அவனே ஒருமுறை,

“எல்லாருக்கும் அதுக்குள்ளே என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமா இருக்காங்க உனக்குக் கேட்கணும்ன்னு தோன்றவில்லையா தமிழ்?” குறும்புக்குரலில் அவளது இடையில் மீசையால் கோலமிட்டுக் கொண்டே அவன் கேட்க,

“சொல்லனும்னா நீங்களே சொல்லியிருப்பீங்களே…” என்று அவள் நிறைவாகப் புன்னகைத்த போது அவனது அன்னையை நினைவூட்டினாள். அவளது அந்த முதிர்ச்சியான பதில் அவனை ஆச்சரியமடைய செய்யவில்லை…

“முதல்ல எல்லாம் என்கிட்டே வெளிப்படையா பேச மாட்டேங்கறன்னு சண்டை போடுவியே…” வேண்டுமென்றே அவன் வம்பிழுக்க…

“அதெல்லாம் உங்களைப் புரிந்துக் கொள்வதற்கு முன் தான்…” என்று அவள் கிளுக்கி சிரித்துக்கொண்டு கூற… அவன் வேண்டுமென்றே குறுகுறுப்பூட்டியது அவளை மேலும் நெளிய வைத்தது.

“இப்ப மேடம் புரிஞ்சுக்கிட்டீங்களா?” என்று கேலியாகக் கேட்க…

“ம்க்கூம்… அதெல்லாம் சான்ஸே இல்லை… இப்ப உங்க கூடச் சண்டை போட எனக்கு நேரமா கிடைக்குது? அதனால மகனே நீங்கத் தப்பிச்சுட்டு இருக்கீங்க…” என்று அவள் கிண்டலாகக் கூறியதில் பெருமையும் மன நிறைவுமே தெரிந்தது.

காரணம் தன் மனைவிக்கென்று தனியாக ஆடை வடிவமைப்பு நிறுவனத்தை ஆரம்பித்துக் கொடுத்திருந்தான்… அதில் அவள் வெகு கர்மசிரத்தையாக ஓய்வு இல்லாமல் தன்னுடைய திறமையைக் காட்டிக்கொண்டிருந்தாள்.

“ஏய் உனக்கு நிஜமாவே நல்லாத்தான் டிசைன் பண்ண வருது இங்கிலீஷ்… ஏதோ கொஞ்சம் கிட்னி இருக்கு போல…” என்று அவ்வப்போது அவளது டிசைன்களைப் பார்த்து அவன் கிண்டலடிப்பதும் உண்டு…

“கிட்னி கிட்னின்னு கிண்டலடிச்ச உன்னைச் சட்னியாக்கிடுவேன் பார்த்துக்க…” என்று அவளைப் பிடித்து உலுக்கிவிடுவாள்… ஆனால் அவன் தான் அவளது அந்தத் திறமையை ஊக்குவிக்க, அத்தனை உதவிகளையும் செய்துக் கொண்டிருந்தான். ஏற்றுமதியையும் சமீபமாக ஆரம்பித்திருந்தது அவளது நிறுவனம்.

ஸ்ரீதரனும் ஸ்ரீதரும் புகழும் ஒன்று சேர்ந்து விட்டால் அந்த இடம் சந்தைக்கடையாகி விடும்… தமிழும் வாசுவும் அந்த மூவரிடமும் சிக்கி பிரியாணியாகி விடுவதும் உண்டு… நல்ல மூடு இருக்கும் பட்சத்தில் அவர்கள் மூவரையுமே பிரியாணியாக்கி விடுவதும் உண்டு.

“உன்கிட்ட இருந்து நான் ஏன் தப்பிக்க போறேன் இங்கிலீஷ்? நீ ஏதாவது பண்ண மாட்டியான்னு தானே வெய்ட் பண்றேன்…” என்று கள்ளப்புன்னகையோடு அவன் கூறிவிட்டு அவளது முகத்தைக் குறும்பாகப் பார்க்க, அவளது முகம் சிவந்து செவ்வானமானது…

“ம்ம்ம்… பூரி கட்டையால ரெண்டு அடி கொடுத்தா போதுமாங்க?” என்று அப்பாவித்தனமாகக் கேட்டவளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துக் கொண்டே,

“நீ கொடுத்தா எதுன்னாலும் ஓகே தான் ஜில்ஸ்…” என்று அவளை ஒரு மார்கமாகப் பார்த்தபடி மயங்கிய குரலில் அவன் கூற,

“சரி சரி… நாளைக்கு கொடுத்துடறேன்… ஓகே வா…” என்று அவள் சிரிக்க…

“அது எதுக்கு நாளைக்கு… இப்பவே இங்கவே கொடு…” பார்வை வெகுவாக மாறியிருந்ததை அப்போதுதான் கவனித்தவள், முகச்சிவப்பை மறைத்தபடி,

“அதெப்படி கொடுக்கறது?” குரல் வெளியே வராமல் அவள் கேட்க,

“எப்படி கொடுக்கறதுன்னு நான் சொல்லித்தரேன் இங்கிலீஷ்… ஐ ம் ஆல்வேஸ் அட் யுவர் சர்வீஸ்…” என்று அவளது காதில் கிசுகிசுப்பாகக் கூற,

“நீ ஒரு பிராடு… தப்புத் தப்பாத்தான் சொல்லித் தருவ…” வார்த்தை வெளிவராமல் முரண்டு பிடிக்க,

“இங்க தப்பெல்லாம் சரி ன்னு மாத்திருக்காங்க தெரியாதா ஜில்ஸ்?” கைகள் அதன் போக்கில் அத்துமீறிக்கொண்டிருக்க, அவள் வெளிவர முடியாத கருந்துளைக்குள் விழுந்துக் கொண்டிருந்தாள்…

அது அவள் வெளிவர விரும்பாத கருந்துளை… அவனும் அதனுள்ளே ஆழ்ந்து அமிழ்ந்து அடங்கினான்.களைத்த அவளைத் தன் நெஞ்சில் தாங்கிக்கொண்டு,

“நிஜமாவே உனக்கு என்னன்னு கேட்கணும்ன்னு தோன்றவே இல்லையா…” நிறைவான மனதோடு அவனது கேள்வியை மீண்டும் கேட்க,

“உனக்கு நியாபகம் இருக்காடா புஜ்ஜிம்மா? ஒரு தடவை நீ என்கிட்டே சொன்ன… சில விஷயங்களைப் பேசக் கூடாது… சில விஷயங்களைப் பேச முடியாதுன்னு…” என்று கூற…

“ம்ம்ம்… ஆமா…” என்று அவன் ஒப்புக்கொண்டான். இருவரும் நெருக்கமாக இருக்கும் இது போன்ற சந்தர்ப்பங்களில் தான் அவனை இம்மாதிரி அழைப்பதெல்லாம்… மற்ற நேரங்களில் எல்லாம் மரியாதையை சற்றும் குறைத்து விடமாட்டாள்… இதென்ன பழம் பஞ்சாங்கமாய் இருக்கிறாய் என்று அவனும் குறைபட்டுக் கொள்வதுண்டு… ஆனால் அவள் ஒப்புக்கொள்வதே இல்லை… அவனும் இப்போதெல்லாம் விட்டு விட்டான்…

“மரியாதையெல்லாம் மனதில் இருந்தாப் போதும்ன்னு சொல்லுவியே…” என்று கிண்டலடித்தாலும் கூட,

“அதுவும் இருக்குதான்… ஆனா வெளிய என்னால அப்படி சாதாரணமா கூப்பிட முடியல ஸ்ரீ… அதுவும் நீங்க இப்ப எவ்வளவு பெரிய அப்பாடக்கர் வேற…” மிகவும் சீரியசான குரலில் ஆரம்பித்துவிட்டு அவனை கலாய்க்கும் மூடுக்கு வந்துவிட்டவளை அப்போது வேறு மாதிரியாகத் தான் சமாளித்திருந்தான் ஸ்ரீதரன்…

தம்பதிகளுக்குள் இது எப்போதுமேயான விளையாட்டு! அவள் “ஏங்க…” என்று குரல் கொடுத்தால் அவன் “என்னங்க…” என்று சிரித்துக் கொண்டே கிண்டலாகக் கேட்பான்… அது இருவருக்குமிடையே ஒருவிதமான விளையாட்டு… அவர்களை நெருக்கமாக்கும் விளையாட்டு.

இப்பொழுதோ “நீ பேசக்கூடாதுன்னு நினைக்கற விஷயத்தை நான் நினைக்கக் கூடக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்… எப்பவுமே அதைப் பற்றின நினைப்பு கூட வந்ததில்லை… சொல்லனும்ன்னு இருந்தா நீயே சொல்ல மாட்டியாடாக் குட்டி?” என்று அவனது நெஞ்சில் கோலமிட்டுக்கொண்டே அவள் கூற… அவனது மனம் என்ன உணர்கிறது என்பதும் அவனுக்குப் புரியவில்லை…

இந்தப் புரிதலையும் காதலையும் தவிர வேறு என்ன வேண்டும் ஒருவனுக்கு!

‘காதல் ஒருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைக்கொடுப்பதோடு மட்டுமில்லாமல் அவனைப் பூரணமாக நம்பி தன்னை ஒப்படைத்தவளுக்கு என்ன திருப்பித் தரப் போகிறேன்? எனது காதலைத் தவிர? ’ இறுக்கமாக அணைத்துக் கொண்டான் அவனது மனைவியை!

“தேங்க்ஸ் ஜில்ஸ்… நீ வேற நான் வேற இல்லடா… பொறுப்பு எனக்கு மட்டும் கிடையது… உனக்கும் சேர்த்து தான்…” என்று இடைவெளி விட்டவன்,

“எப்படியும் நாளைக்கு ஒரு முடிவுக்கு வர வேண்டியிருக்கும்… இந்த விஷயத்தைச் சரியா செட்டில் செய்யலைன்னா அது மிகப்பெரிய சாபம் தமிழ்… அந்தச் சாபத்தை நானோ என்னோட வாரிசோ வாங்க விரும்பலை…” என்றவனின் வாயைத் தன் கைக்கொண்டு மூடினாள்.

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது… எது நடந்ததோ அது நல்லதுக்கு தான்னு நீயே தானே சொல்வ? அதை நான் உனக்குச் சொல்றேன் ஸ்ரீக்குட்டி… ஆல் இஸ் பைன்…” என்று அவனுக்குத் தைரியம் கூறியவள் அடுத்த நாள் அவனை விட்டு விலகாமல் அமர்ந்திருந்தாள்.

உடன் ராஜீவ், ஸ்ரீதர் மற்றும் ஜோஸ். வேறு யாரையும் அனுமதிக்கவில்லை… மாவட்ட நிர்வாகத்தின் முன்பாக நிலவறைகளை திறக்கக் கூறியிருந்தது நீதிமன்றம். பத்திரிக்கையும் மீடியாவும் வெளியே காத்துக் கொண்டிருந்தது…

கிருஷ்ணர் கோவிலின் கன்னி மூலையிலிருந்த அந்த அறைக்குக் கீழிருந்து நிலவறைகள்.

அதன் இருப்பைப் பற்றி அறிந்தவன் ஸ்ரீதரன் மட்டுமே! தொல்பொருள் ஆராய்ச்சித் துறையைக் கூட விட்டதில்லை அவன்… ரகசியங்கள் வெளியே கசிந்துவிடக் கூடாது என்பதில் வெகுதீவிரமாக இருந்தவர்கள் வல்லிய கொட்டாரத்தின் தம்புரான்கள்!

வாமனனுக்கு நிலவறைகள் உண்டு என்பது தெரியுமே தவிர அது எங்கு இருக்கிறது என்பதோ அதன் அமைப்போ அதைத் திறக்கும் முறைகளோ தெரியாது. அதை அறிந்துக் கொள்ளத்தான் அவனை விட்டு வைத்திருந்தான். சுதர்சனர் அவனுக்குச் சொத்துக்களை கொடுத்தாரே தவிர, அவனது பேராசையை உணர்ந்தவர் போல இந்த ரகசியத்தைச் சொல்லித்தரவே இல்லை…

அவருக்குமே தனது பிள்ளை என்பதை விட அந்தத் தெய்வ கைங்கர்யமும் பாரம்பரியமும் மிக முக்கியம்… அதைக் காப்பாற்றக் கூடியவன் ஸ்ரீதரன் மட்டுமே என்பது அவரளவில் தீர்மானமான ஒன்று… அதனால் அந்த முறைமை அவனுக்கு மட்டுமே வந்தது.

மாவேலிக்கரா மாளிகை மார்த்தாண்ட வர்மாவின் காலத்திற்கு முன் சுதந்திரமான அரசாக இருந்தது… வடக்கிலிருந்த கோலஸ்வரூபத்தின் ஒரு பிரிவினர் தான் மாவேலிக்கரா மாளிகையைச் சேர்ந்தவர்கள்.

மார்த்தாண்ட வர்மா அனைத்து சிறு வேளிர்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தபோது மாவேலிக்கரையும் அவரது ஆளுகையின் கீழ் வந்தது… ஆனாலும் வரி செலுத்திக் கொண்டு தனிப்பட்ட மாளிகையாகத்தான் இருந்தது… அதன் பின் திருவிதாங்கூருக்கும் மாவேலிக்கரைக்கும் பெண் சம்பந்தங்கள் அதிகமாகத் துவங்கியது…

திருவிதாங்கூரில் வாரிசில்லாத சமயங்களில் எல்லாம் மாவேலிக்கரா பெண் வாரிசுகளைக் கொடுத்து இருக்கிறது… அதே போலத் திருவிதாங்கூரின் இளவரசிகளுக்கு வாழ்க்கை துணைகளைக் கொடுப்பதிலும் மாவேலிக்கரா முதன்மையாக இருந்திருக்கிறது!

இவ்வளவு பெருமைக்குரிய மாவேலிக்கரையின் பொக்கிஷங்களைக் கிருஷ்ணருக்கு அர்ப்பணம் செய்து அதை நிலவறைகளில் வைத்துப் பாதுகாப்பது நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த பழக்கம்… அந்தப் பொக்கிஷங்களை அந்த மாளிகையைச் சேர்ந்தவர்கள் கூடச் சொந்தம் கொண்டாடியது கிடையாது…

அது கிருஷ்ணரின் சொத்து… அவர்களைப் பொறுத்தவரை!

தம்முடைய வாழ்நாளில் அந்தக் கிருஷ்ணரின் சொத்தைப் பாதுகாப்பதோடு தங்களால் முடிந்த கைங்கர்யத்தையும் அதில் சேர்த்து விடுவார்கள்… அப்படி சேர்ந்தவை தான் அந்த நிலவறைக்குள் இருக்கும் பொக்கிஷங்கள்.

அதை ஒரு முறை, அதாவது சுதர்சனரின் காலத்தில் அவரது கைங்கர்யத்தை சேர்ப்பதற்காகத் திறந்த போது அவருடன் பார்த்தது… வாழ்நாளிலேயே அந்த ஒருமுறை மட்டுமே ஸ்ரீதரனும் அதனுள் சென்றிருந்தான்…

ஆனால் அதை அடைந்து விட வேண்டுமென்றோ அதைத் தான் சொந்தம் கொண்டாட வேண்டுமென்றோ அவன் சற்றும் எண்ணியதில்லை… அது போன்ற எண்ணமும் தோன்றியதில்லை…

ஒரு கதை சொல்வார்கள்… இறைவனுக்கு செலுத்தப்படும் பரிகாரங்கள் எல்லாம் ஒருவனுக்கு தங்கமும் வைரமுமாகப் பட… இன்னொருவனுக்கு அம்பாள் மேலிருந்த காசுமாலை ஒருவனுடைய காசநோயை காட்ட, மணியாரம் மேக நோயைக் காட்டியதாம். அந்த நோய் கண்டவர்கள் குணமானால் அம்பாளுக்கு செய்த பரிகாரங்களை எல்லாம் எப்படி தங்கமும் வைரமுமாகப் பார்க்க முடியும் என்று கேட்டானாம் அவன்!

அவன் ஸ்ரீதரனின் ஜாதி!

ஸ்ரீதரனை பொறுத்தவரை அவையெல்லாம் கிருஷ்ணரின் சொத்துக்கள்… அவற்றைக் காப்பாற்றுவது மட்டுமே அவனது கடமை என்று கடைசி வரை நின்று விட்டவன்… அதற்காகவே உயிரையும் பணயம் வைத்தவன்… தாய் தந்தையின் உயிரைப் பறிக்கொடுத்து தனிமரமாக நின்றவன்… இப்போது அந்த பொக்கிஷங்களைப் பாதுகாக்கவே அரசியலில் நுழைந்து அத்தனை வழிகளையும் பயன்படுத்தி அமைச்சராகி, வாமனனின் சக்கரவியூகத்தை உடைத்து அர்ஜுனனாக மையத்தில் நின்றுக் கொண்டிருந்தான்!

போகும் வழி முக்கியமல்ல… இலக்கை மட்டுமே முக்கியமாகப் பார்த்தான்… அந்த இலக்கை இப்போது சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும்… அது மட்டுமே அவனது இப்போதைய குறிக்கோள்!

கன்னி மூலையிலிருந்த அந்த அறையைத் திறந்தார்கள்… உள்ளே எதுவுமில்லை… நடுவில் ஸ்வஸ்திகா சின்னம் பதித்த ஒரு கல் மட்டும் இருந்தது…

அந்த ஸ்வஸ்திகா சின்னத்தை அப்படியே நகர்த்தினான்… சிறு வழி தென்பட்டது… பக்கத்திலிருந்த கற்களை அதே போல நகர்த்த ஒரு பெரிய பள்ளம் தென்பட்டது…

ஒரு ஆள் இறங்குமளவு.

தமிழ்நதியை கையைப் பிடித்துக் கொண்டு அவன் முன்னே இறங்கினான்… கையில் டார்ச்… இடுப்பில் பிஸ்டலும் கூட இருந்தது… எதற்கும் இருக்கட்டுமென்று எடுத்து வந்திருந்தான்…

படிகள் இருந்தது… ஒருவர் பின் ஒருவராக அவர்களிருவரும் இறங்கினர். கட்டியிருந்த சேலை அவளது காலைத் தடுக்க பார்த்தது… கால்கள் நடுங்கியது…

“பார்த்துடா…” என்று அவளைப் பிடித்துக் கொண்டான்.

டார்ச் வெளிச்சத்தை தவிர இடம் கும்மிருட்டாக இருந்தது… தமிழ்நதியின் கைகள் சில்லிட்டு போனது… வெகுகாலமாக அடைத்து வைத்திருந்த வாசனை நாசியை தீண்டியது!

“ஸ்ரீதர்… அந்த லைட்டை அப்படியே கனெக்ஷன் கொடுத்துக் கீழ அனுப்பு…” கீழே நின்று கொண்டு ஸ்ரீதரன் கேட்க,

மேலிருந்து ஸ்ரீதரும் ராஜீவும் அந்தப் பெரிய ஸ்டாண்டிங் லைட்டை கீழே அனுப்ப… கீழே நின்று கொண்டிருந்த அவன் வாங்கிக்கொண்டான்…

“பார்த்துங்க…”

அருகில் நின்று கொண்டிருந்த தமிழ்நதிக்கு மனம் திக் திக்கென்று இருந்தது…

“வெச்சுட்டேன் ராஜீவ்… லைட்டை ஆன் பண்ணு…” ஸ்ரீதரன் சப்தமிட்டான்… கைகள் நடுங்க ராஜீவ் ஆன் செய்தான்… அவனுக்கும் உள்ளுக்குள் நடுக்கம்… காணாத ஒன்றை காணப்போகிறார்கள் என்றாலும் அந்தத் தெய்வ கைங்கர்யத்தை சேர்ந்ததாயிற்றே… எப்படி இருக்கும் என்னவிருக்கும் என்பதை கூட அவன் கற்பனை செய்யவில்லை… அப்படி செய்வதும் கூடத் தெய்வ குற்றமாகப் பட்டது அவனுக்கு!

கீழே பளீரென்று வெளிச்சம் பரவியது…

இருவருக்கும் கண்கள் கூசியது…

அவர்களுக்கு முன்னே நீண்ட காரிடார் தென்பட… அந்தக் காரிடரை ஒட்டியே ஆறு அறைகள் பூட்டப்பட்டிருந்தன… அத்தனையும் மிகப்பழமையான அறைகள்… முழுவதுமாக ஒட்டடை பிடித்து ஆங்காங்கே மண் உதிர்ந்து இருந்தது….

மெளனமாக அவனைப் பார்த்தாள் தமிழ்நதி…

கண்களை மூடி எதையோ தீர்மானித்துக் கொண்டவனாக,

“நமக்கு எதுவுமே சொந்தமில்லைன்னு நினைச்சுக்க தமிழ்… அத்தனையும் கிருஷ்ணரை சேர்ந்தது…” என்று இடைவெளி விட…

“இங்கயே நாம சமாதியாகலாம்னு சொன்னாக் கூட நான் கேள்வியே கேட்க்காம தலையாட்டுவேன்னு தெரிஞ்சும் சொல்ற…” புன்னகைத்த முகத்தோடு அவனைப் பார்க்க…

“எனக்குக் கிடைத்த மிகப்பெரிய சொத்து நீதான்டா…” என்றவன்… அவளது தோளைப் பற்றிச் சிறு அழுத்தம் கொடுத்து விடுவித்தான்… தான் கொண்டு வந்திருந்த அந்தப் பெரிய கருப்பு லெதர் பேகை எடுத்தான்… ரொம்பவுமே கனமாக இருந்தது போல… அதிலிருந்த இரண்டு சாவிகளை எடுத்து ஒன்றை போட்டுத் திருகி விட்டு இன்னொன்றை வைத்துத் திறந்தான்.

தமிழ்நதியின் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றான்…

அவர்களுக்கு முன்னே பொக்கிஷக் குவியல்… எத்தனை காலத்தைச் சேர்ந்ததோ? அவ்வளவு தங்கமும் வைரமும்… நிறைய ஏடுகளும் கூட இருந்தது…

தமிழ்நதி மனதை சமனப்படுத்திக் கொண்டாள்…

சலனமே இல்லாத மனதோடு தான் கொண்டு வந்திருந்த பையைத் திறந்து அதிலிருந்த தங்க கட்டியைத் தமிழ்நதியின் கையில் கொடுத்தான்… அது போலவே இன்னும் பல கட்டிகள் இருந்தன…

“இந்தப் பொக்கிஷத்தில் நமது பங்கைச் சேர்க்கணும் தமிழ்… இந்தக் கைங்கர்யத்தை செய்யப் போகிற கடைசி தலைமுறை நாம் தான்… இனிமேல் இவையெல்லாம் வெளிச்சத்துக்கு வந்து விடும்… அத்தனையும் ரிசர்வ் பேங்க் கட்டுபாட்டிற்கு போனாலும் போகக்கூடும்… கிருஷ்ணரை வணங்கி நம்முடைய பங்கை நீயே செலுத்தி விடு…” என்றுக் கூற, அவள் பக்தியோடு அதை வாங்கி அவற்றை வணங்கி அந்தப் பொக்கிஷ குவியலோடு சேர்த்தாள்.

மீதமுள்ளவற்றை அவன் சேர்த்து விட்டு, மேலே காத்துக்கொண்டிருந்தவர்களை அழைத்தான்…

அதன் பின்னர் நிகழ்ந்ததெல்லாம் வரலாறு!

கிருஷ்ணர் கோவிலில் பொக்கிஷ அறைகள் திறக்கப்பட்ட செய்தி காட்டுத்தீயாகப் பரவியது… ஒரே நாளில் உலக அளவில் பரபரப்பான இடத்தைப் பிடித்தது மாவேலிக்கரா. எங்கும் அதைப் பற்றியே பேச்சு… அத்தனையையும் மெளனமாக நிர்மலமான முகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான் ஸ்ரீதரன்.

அள்ள அள்ளக் குறையாத அவற்றை மதிப்பு போடவே முடியாத நிலையிலிருப்பதாக அரசு அறிவித்தது…

திருவிதாங்கூரின் பத்மநாபசுவாமி கோவிலும் மாவேலிக்கரையின் கிருஷ்ணசுவாமி கோவிலும் அங்கு ஆட்சி செய்தவர்களின் பற்றற்ற மனநிலையையும் பண்டைய திராவிட நாட்டின் கொள்ளைப் போகாத பொக்கிஷங்களின் அளவையும் காட்டிக்கொண்டிருக்கின்றது…

இந்த பொக்கிஷங்களைப் போலத்தான் ஒவ்வொரு முக்கிய கோவில்களிலும் பொக்கிஷங்களை நமது ஆட்சியாளர்கள் சேர்த்து வைத்திருந்தனர்… அவை நம் மேல் படையெடுத்து வந்தவர்களின் கண்களை உறுத்தியது… பதினெட்டு முறை படையெடுத்த கஜினி ஒவ்வொரு முறையும் இந்தப் பொக்கிஷங்களை வாரிக்கொண்டுப் போனான்…

நாம் ஏழைகள் அல்ல… ஏழைகளாக ஆக்கப்பட்டவர்கள்!

நம்மிடமிருந்த வளங்கள் அனைத்தும் கொள்ளையர்களால் திட்டமிட்டு கொள்ளையடிக்கப்பட்டு வந்திருக்கிறது…

இந்தப் பொக்கிஷங்களை நாங்கள் இதுநாள் வரை காப்பாற்றிவிட்டோம்… இனியும் காப்பாற்றவேண்டியது அரசின் வேலை… கடவுள் அதற்குத் துணையிருப்பார் என்று நம்ப வேண்டும்…

தனக்கு முன் இருந்த மைக் குவியலின் முன் நின்றிருந்த ஸ்ரீதரன் இவ்வாறு பேசி முடித்தவுடன் ஒரு நிமிடம் முழுதாக மௌனம் பரவியது… அதன் பின் ஒவ்வொருவராகக் கைதட்டும் ஓசை கேட்க… நிறைவாக அகன்றான் ஸ்ரீதரன் வெர்மா!

****

“இப்ப நீங்கக் கன்ட்ரோலை உங்க கிட்ட வெச்சுருக்கீங்க… ஓகே… உங்க கிட்டேயே இருக்கும்னு சொல்ல முடியாதே… வேற யாராவது ஆட்சிக்கு வந்தா என்ன பண்ணுவீங்க?”

அவனது நெஞ்சில் கோலமிட்டபடியே தன்னுடைய சந்தேகத்தைத் தமிழ்நதி கேட்க,

“யாரும் எதையும் செய்ய முடியாத மாதிரி தான் க்ளாசஸ் கொண்டு வந்திருக்கேன் தமிழ்… மொத்தமா அத்தனை உடமைகளையும் லிஸ்ட் அவுட் செய்து கோவில் ட்ரஸ்ட் பேர்ல ரிசர்வ் பேங்க்ல பத்திரமா வெச்சாச்சு… அந்தப் பொக்கிஷத்தை முழுக்க இங்கேயே எந்த அளவு பாதுகாப்பா வைக்கனுமோ அதைச் செய்தாச்சு… அரசியல்வாதிகள் யாருமே அதில் கை வைக்க முடியாது… ட்ரஸ்ட்டுக்கு சொந்தம் அந்தப் பொக்கிஷம்…”

அவளை அணைத்துக் கொண்டே அவன் கூற,

“இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பாதுகாக்க முடியும்? யாராவது தப்பானவர்கள் கையில் போனால்?” அவளுக்கு உள்ளுக்குள் அந்தப் பயம் இருந்து கொண்டே இருந்தது.

“எனக்குள் இருக்க இறைவன் தான் உனக்குள்ளும் இருக்கிறான்னு சொல்வாங்க… பாதுகாப்பவன் இறைவனோட படைப்புன்னா அதைத் திருட நினைப்பவனும் அவனுடையப் படைப்புத்தானே… தன்னோட இன்னொரு படைப்புகிட்ட இந்தப் பொக்கிஷம் போக வேண்டுமென்று அந்த இறைவன் விரும்பினா நாம் தடுக்க முடியாது… எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது… எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்… இதுதான் கீதை… இதுதான் வாழ்க்கையும் கூடத் தமிழ்…” என்று புன்னகையோடு முடிக்க… அவனது முகத்தை ஆழ்ந்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்…

என்ன தவம் செய்தனை என்று கேட்கத் தோன்றியது! எத்தனையோ ஜென்மங்களாக உயிரோடு உயிராக உறைந்திருந்த ஜீவனை கண்ணோடு கண் கலந்து பார்த்துக் கொண்டேயிருந்தாள்.

மனம் அவ்வளவு நிறைவாக இருந்தது.

என்னவென்று அவன் புருவத்தை உயர்த்தி கேட்க… அவனைச் சற்று வம்பிழுத்தால் என்னவென்று எண்ணியது மனது!

“இந்த இடத்தில் கீதா உபதேசம் பண்ற ஒரே ஆள் நீங்களாத்தான் இருப்பீங்க…” என்று சிரிக்க…

“சரி… இங்க என்ன உபதேசம் பண்ணலாமாம்?” அவளது இடையில் குறுகுறுப்பூட்டிக் கொண்டே அவன் கேட்க, அவள் நெளிந்தாள்…

“நீ ஒரு திருட்டு பூனை…” என்று அவனது மீசையை இழுத்துப் பார்க்க…

“ஹேய் வலிக்குதுடி…” என்று அவளைத் தன்னோடு இறுக்கிக் கொள்ள… தமிழ்நதி சிரித்தாள்…

அந்தப் புன்னகை கவர்ச்சியாக இருந்தது… அவனது நிலையை மறக்க வைத்தது…

“ஒன் மினிட்… அந்த வாமனன் என்ன ஆனான்? அதைச் சொல்லுங்க…” அவனைத் தடுத்து நிறுத்தி அவள் கேட்க,

“ம்ஹூம்… இது ஆவறது இல்ல…” அவளை அவனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்க…

“ப்ளீஸ்…” என்று அவள் கெஞ்ச,

“சரி போனா போகுது… சொல்றேன்…” என்றவன்… “கிருஷ்ணன் கோவில் கொலைகள் கேஸை மறுபடியும் தூசி தட்டியாச்சு இல்லையா…”

“ம்ம்ம் ஆமா… சொன்னீங்க…”

“அந்தக் கேஸ்ல எப்படியும் ஆயுள் தண்டனை வாங்கி தந்துடுவேன்… என்னோட அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அப்புறம் அங்க உயிரை விட்டவங்களுக்கும் நியாயம் வாங்கி தந்தே தீருவேன்…” உறுதியாகக் கூறிவிட்டு இடைவெளி விட…

“ஏன் தூக்கு தண்டனை அவனுக்கு வேண்டாமா?”

“இல்ல… அவனுக்கு ஆயுள் தண்டனை தான்… இருக்கற வரைக்கும் என்னைப் பார்க்கறதுதான் அவனுக்கு நான் கொடுக்கற தண்டனை…” என்று தீர்க்கமாகக் கூற, அவனை ஆழ்ந்துப் பார்த்தாள்.

“என்னடா… இப்படி பார்க்கற?” என்று கேட்க,

“இது தான் உன்னோட முகமா இல்ல முகமூடியான்னு யோசிக்கறேன்டா மிஸ்டர் ஹஸ்பன்ட் ?” மிகவும் தீவிரமான குரலில் அவள் கேட்க… அவன் வாய்விட்டுச் சிரித்தான்…

“நான் உன்னோட ஹஸ்பன்ட்… அது மட்டும் தான் எந்தவித பூச்சும் இல்லாத உண்மையான முகம் ஜில்லு… வெளிய நாம போட்டுக்கற அத்தனையும் முகமூடி தான்… அது ஒவ்வொரு இடத்துக்குத் தகுந்த மாதிரி, நேரத்துக்குத் தகுந்த மாதிரி…” மனதார அவன் உணர்ந்துக் கூற, அவனைக் கண்களால் நிரப்பிக் கொண்டாள்.

அவளது அந்த நேசப் பார்வையை தன்னோடு கலந்து, எப்போதும் போல உருகி உறைந்து உணர்வில் கலந்து கரைந்துப் போனான்.

ஆன்மா மிகவும் பழமையானது… யுகம் யுகமாய் உணர்வுகளால் பயணித்து மீண்டும் மீண்டும் தன் இணையை சேரும் அந்த ஆன்ம தரிசனம் தான் இந்த தாம்பத்யம்… பிறவி தோறும் தொடரும் பந்தம்… இது யாரும் வெளிவர விரும்பாத சக்கரவியூகம்… தெரிந்தே தொலைந்துப் போக விரும்பும் பரவெளி!

அந்த பரவெளியில் படர்ந்து ஒன்றி, நீயும் நானும் வேறல்ல என்று உணர்வதும் ஒருவித தியானமே!  

யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே!

பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி விடை பெறுவோமா?

வாழ்க வளமுடன்!