Thaagam 25

Thaagam 25

 

 

தாகம் – 25

          அந்த சின்ன சந்தில் கால் வைக்க இடம் இல்லை. தண்ணீர் தேங்கி அதில் துர்நாற்றம் வீசியது.  திவ்யா தன் துப்பட்டாவால் மூக்கை மூடிக் கொண்டு உள்ளே சென்றாள். “இந்த இடத்தில் வாழும் மக்களுக்கு நான் என்ன செய்ய போகிறேன். என் தந்தையின் கனவு எப்படி நிறைவேறப் போகிறது….” , என்று நினைத்துக் கொண்டே கூவம் நதிக்கரை பக்கம் சென்றாள்.  

                 அதில் மிதந்து வந்த குப்பை, ஓரமாக ஒதுங்கி இருந்த அட்டை பெட்டிகள்,  பிளாஸ்டிக்  பாட்டில் , பிளாஸ்டிக் கவர்   திவ்யாவின் சிந்தனையை தூண்டியது.

                     இந்த கூவம் நதி இப்படி மாறியதிற்கு, இண்டஸ்ட்ரியில் இருந்து வரும்  திரவக் கழிவுகள் மட்டும் தான் காரணமா..?

” நானும் ஒரு காரணம்.. ஒவ்வொரு மனிதனும் காரணம். நான் என் வீட்டருகே இருக்கும் குப்பையை சுத்தப்  படுத்துகிறேனா..? பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் கெடுதல் என தெரிந்தும் நான் பிளாஸ்டிக் உபயோக படுத்தாமல் இருக்கிறேனா..? என் முதுகில் தவறு மூட்டைகளை சுமந்து கொண்டு.., பணக்கார வர்கத்தையும் , அரசியல் வாதிகளையும் குறை சொல்லுவதில் என்ன லாபம்…? ” , என்று திவ்யா தன்னை தானே நொந்துக் கொள்ள,  “அக்கா.” , என்று சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள்  திவ்யா.

 

“உள்ள வரும்  பொழுதே  உன்னையும் தம்பியையும் பார்த்தேன் … நீ எங்கயோ அவசரமா போயிட்டு இருந்த மாதிரி தெரிஞ்சிது… ” , என்று திவ்யா கூறினாள்.

 

“ஆமாம் அக்கா.. வாட்டர் பாட்டில் வாங்க டீக்கடை போனேன்.. அவர் வெயில் காலத்தில் தான் பாட்டில் வச்சிருப்பாராம். இப்ப பாட்டில் எல்லாம் வித்து போச்சுன்னு சொல்லிட்டாரு..” , என்று தீபா சோகமாக கூற,  “நான் போன வாரம் வந்த அப்பவே இதை சொன்னாரே… “, என்று  தனக்குள் நினைத்துக் கொண்டாள் திவ்யா.

 

“நான் வேற கடைக்கு போகலாமுன்னு கூப்பிட்டா இந்த பாண்டி பையன் வர முடியாதுனு சொல்லிட்டான்… எப்பவும் வெளியவே சுத்துவான்.. நான் கூப்பிட்டா வரலைன்னு சொல்லிட்டான்.. ” , என்று வெள்ளந்தியாக பேசிய தீபாவை பார்த்தாள் திவ்யா.

 

“இந்த சிறுமிக்கு ஒரு வாட்டர் பாட்டில் வாங்குவதே பெரிய கனவாக இருக்கிறது..  இந்த குப்பைக்கு இவர்கள் சொந்தக்கார்கள் இல்லை…   இந்த குப்பைக்கு சொந்தக்காரர் எங்கோ  வசதியாக வாழும் ஒவ்வொரு ஜீவ ராசிகளும் தான்…  பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்  , என்று  அமைந்த இந்த வாழ்வியல் நியதியை என்ன செய்வது..? ” , என்று யோசித்துக் கொண்டே நடந்து வந்தாள் திவ்யா.

 

“என்ன அக்கா யோசிக்கிறீங்க..? எப்படி இந்த இடத்தை சுத்தம் பண்ணலாமுன்னு யோசிக்கிறீங்களா..? ” , என்று தீபா கேட்க ,” என்ன பதில் சொல்வது” ,  என்று தெரியாமல் அவளை பார்த்தாள் திவ்யா.

 

” எங்க இடமும் சுத்தமா மாறிரும் இல்லை..? ” , என்று தீபா ஆர்வமாக கேட்க , அவளை ஏமாற்ற விரும்பாமல் “ஆம்” என்று தலை அசைத்தாள் திவ்யா.

 

” எங்களை  பேட்டி எடுத்தீங்களே..? போட்டோ எடுத்தீங்களே..? அது எப்ப  பேப்பர்,  டிவி ல  வரும் ?” ,என்று ஆர்வமாக வினவினாள் தீபா.

“சீக்கிரமா வரும் “, என்று  அங்கும் இங்கும் நோட்டமிட்டபடி நடந்தாள் திவ்யா .

இந்த மழையால் அந்த பகுதி அன்று பார்த்ததை விட இன்னும் மோசமாக இருந்தது.

“மறுபடியும் வருகிறேன் “, என்று கூறிக்கொண்டு கிளம்பினாள் திவ்யா.

 

அந்த பகுதியை விட்டு வெளியே வந்ததும், விக்ரமின் ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரி கண்ணில்  பட்டது.

 

திவ்யாவிடம் வண்டி இல்லை. “ரமேஷிற்கு கால் செய்து, அவனை ட்ரோப் பண்ண  சொல்லலாமா..? ” , என்று ஒரு முறை யோசித்தாள். 

இப்பொழுது அவளுக்கு யாரை  பார்க்கவும் மனம் இல்லை..

தன் போக்கிலே நடந்தாள்.

 

        மொத்த சென்னை மாநகரமும் அவள் கண்ணில் படமாக்கப்பட்டது..

 

   சொகுசு கார் ஒருபக்கம்

   தள்ளு வண்டி ஒரு பக்கம்

   இடையில் ஒரு டூ வீலெர்….

 

   பிரமாண்ட எ சி கட்டிடம் ஒரு பக்கம்

   தார்பாய் ஷீட்டோடு கடைகள்  ஒரு பக்கம்

   இடையில் சாமானியர்களின்  கடைகள்

 

   டிப் டாப் உடைகள் அணிந்த மனிதர்கள்  ஒரு பக்கம்

   அழுக்கு தோய்ந்த கிழித்த உடைகளோடு மனிதர்கள் ஒரு பக்கம்

   இடையில் ஏழ்மை மறைக்கும் உடைகளோடு மனிதர்கள்

 

   பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒரு பக்கம்

   கையேந்தி பவன் ஒரு பக்கம்

   இடையில் கூட்டம் அலைமோதும் ஹோட்டல்..

 

   எல்லோர் முகத்திலும் ஒரு தன்னம்பிக்கை

       எளியோர் என்ன ?

          வலியோர் என்ன ?

 

  அனைவரையும் வாழவைக்கும் மண் இது…

  சாதி மத பேதம் இல்லை….

  தாழ்ந்தோர் உயர்ந்தோர் பேதம் இல்லை..

 

  ஆண் பெண் பேதம் இல்லை….

  சென்னை வந்தோர் வீழ்ந்ததில்லை ….

  உழைத்தால் வெற்றி நிச்சயம்…

  தமிழனை மட்டுமில்லை

    வேற்று மொழியினரையும் வாழ வைக்கும் மண்ணை..

             நாம் சுத்தத்தோடு பாதுகாக்க வேண்டாமா ?? என்ற கேள்வி, வைராக்கியம் அந்த இளம் பெண்ணின் மனதில் இன்று மரமாய்  வளர்ந்து விஸ்வரூபமாய் காட்சி அளித்தது.

 

 

“திவ்யா .. திவ்யா.. ” , என்ற குரலில் திடுக்கிட்டு நின்றாள் திவ்யா.

 

              அவள் திரும்பி பார்த்தாள், அங்கு ரமேஷ் பைக்கோடு நின்று கொண்டிருந்தான்.

 

” திவ்யா .. என்ன ஆச்சு..? உன் வண்டி எங்க..? ஏன் இங்க நடந்திட்டு இருக்க?” , என்று ரமேஷ் கேட்க , அவள் கண்களில் கண்ணீர் துளிகள்..

 

” திவ்யா வண்டில ஏறு….. “, என்று அதட்டலாக கூறினான் ரமேஷ்.

 

அமைதியாக வண்டியில் ஏறினாள். “நான் எதற்காக அழுகிறேன்..? என் ஒரு துளி கண்ணீர்  இந்த சென்னை மாநகரத்தை சுத்தமாக மாற்றி விடுமா..? இல்லை இன்று காலையிலிருந்து கேள்வி பட்ட விஷயங்கள் என்னை பலவீனமாக்கி விட்டதா..?” , என்று சுய ஆராய்ச்சியில் இறங்கினாள் திவ்யா.

 

            ரமேஷின் பைக் திவ்யாவின் அலுவலகத்தின் முன்  நின்றது.. இயந்திரமாய் இறங்கினாள் திவ்யா.

“போய் வண்டி எடுத்திட்டு வா.. ” , என்று பைக்கின்  சைடு ஸ்டாண்டை போட்ட படியே கூறினான் ரமேஷ்.

 

திவ்யா வண்டியை எடுத்துக் கொண்டு முன்னே செல்ல, ரமேஷ் அவளை  பின் தொடர்ந்து சென்றான்.

 

          தேங்கி கிடந்த தண்ணீரை தாண்டி அவர்கள் அபார்ட்மெண்டுக்குள் இருவரும் செல்ல ஷண்முகம் அவர்களுக்குக்காக காத்திருந்தார்.

 

” மழையால் ரோடு சரியில்லை.. ரெண்டு பெரும் வண்டில போயிருக்கீங்க.. நேரம் ஆச்சு.. அது தான் வாசலிலே காத்துக்கிட்டு இருக்கேன்..” , என்று தனக்கு தானே பேசியபடி சோபாவில் அமர்ந்தார் ஷண்முகம்.

 

“திவ்யா ஏன் உன் முகம் ஒரு மாதிரி இருக்கு?” , என்று வினவினார் புஷ்பா.

 

“ஒண்ணுமில்லை அம்மா….. வேலை ஜாஸ்தி…. “, என்று கூறிக்கொண்டே தன் அறைக்கு சென்று குளிக்க சென்றாள் வ்யா.

 

            குளியலோடு அவள் கண்களில்  இருந்து வந்த கண்ணீரும் கரைந்தது. “எதற்காக அழுகிறாள் ?” , இந்த கேள்விக்கு பதில் திவ்யாவிடம் இல்லை. “அப்பாவை நினைத்து அழுகிறேனா ? “, என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டாள். அமைதியாக தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“திவ்யா… ரமேஷ் … சாப்பிட வாங்க” , என்று அழைத்தும் யாரும் வரவில்லை.

 

“சீக்கிரமா சாப்பிட வாங்க.. எவ்வளவு நேரமா கூப்பிடுறேன்… “, என்று புஷ்பா அழைக்க , “வந்துட்டோம் அத்தை .. ” , என்று கூறிக் கொண்டே ரமேஷ் வர, திவ்யா அமைதியாக வந்தமர்ந்து சாப்பிட்டாள்.

 

“என்ன பிரச்சனை ? ” , என்று வினவினார் புஷ்பா.

 

“ஒன்னும் இல்லையே… நான் அமைதியா இருந்தாலும் குற்றம்…  பேசினாலும் குற்றம்… ” , என்று சலித்துக் கொண்டாள் திவ்யா.

 

அதற்கு மேல் யாரும் அவளை கேள்வி கேட்க வில்லை.

கணவனை  இழந்து அவளுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மாவின் வலி  முதல் முறையாக திவ்யாவிற்கு ஏதோ ஒரு உணர்வை கொடுத்தது..

 

“அம்மாவை விட விக்ரம் எனக்கு முக்கியம் இல்லை ” , என்று திவ்யாவிற்கு தோன்றியது

 

 

திவ்யா ரமேஷின் அறைக்கு சென்றாள்.

            விக்ரமும் ரமேஷிடம் நடந்த அனைத்தையும்  பகிர்ந்திருந்தான்.

 

“வாங்க மேடம்… ” , என்று ரமேஷ் கூற, “என்னை கிண்டல் பண்ற …?” , என்று திவ்யா சிணுங்கினாள்.

 

“கிண்டல்  எல்லாம் இல்லை… எதுக்கு அழுத? என்ன பிரச்சனை?” , என்று ரமேஷ் சமாதானமாக கேட்க  அன்று நடந்ததை முழுதாக கூறினாள் திவ்யா.

 

“நாட்டு பிரச்சனையை தள்ளி வச்சிட்டு வீட்டு பிரச்சனையை பார்ப்போம்…”, என்று கூறினான் ரமேஷ்.

 

“உனக்கு விக்ரமை பிடிச்சிருக்கா..?” , என்று நேரடியாக கேட்டான் ரமேஷ்.

 

“நான் எவ்வளவு முக்கியமான விஷயத்தை சொல்லிருக்கேன்… நீ இதை கேட்கற..?” , என்று திவ்யா சலித்து கொள்ள , “எனக்கு சென்னை மாநகரமோ…   கூவம் நதியோ ரெண்டாம் பட்சம் தான்…. உன் சந்தோசம்.. குடும்ப நிம்மதி தான் எனக்கு பிரதானம்.. ” , என்று தீர்க்கமாக கூறினான் ரமேஷ்.

 

“சொல்லு உனக்கு விக்ரமை பிடிச்சிருக்கா..? ” , என்று மீண்டும் ரமேஷ் வினவ.., “அது தான் ஆண்ட்டி சொன்னாங்களே,  அம்மா சம்மதிக்க மாட்டாங்கன்னு,…” , என்று திவ்யா கூற, “உனக்கு விக்ரமை பிடிச்சிருக்கா..? “, என்று மீண்டும் சிரித்துக் கொண்டே ரமேஷ் வினவினான்.

 

“தேஞ்சி போன டேப் ரிக்கார்டர் மாதிரி ஒரே கேள்வியை கேட்கற… ” , என்று திவ்யா  எரிச்சலோடு கூற, “நீ இன்னும் பதில் சொல்லலியே… ” , என்று புருவங்களை உயர்த்தி கேட்டான்  ரமேஷ்.

 

“பிடிக்காமலியா விக்ரம் கூட கார்ல  போயிருப்பேன்…. இது நடக்காது ரமேஷ்.. அம்மா வாழ்ந்த வாழ்கையில ஒரு அர்த்தம் இருக்கு அதை நான் உடைக்க விரும்பலை…” , என்று திவ்யா கூற , அவள் கண்ணீரின் காரணம் ரமேஷிற்கு புரிந்தது. “தந்தையின் இழப்பு, ஏமாற்றம்.. ” , என்று நினைத்துக் கொண்டான்.

 

             ஆசை படுவதை இழக்க நேர்ந்தால் கண்ணீர் வருவது இயல்பு  தானே…?

திவ்யா ஆசைப்பட்டுவிட்டால் , அதை இழந்து போக ரமேஷ் விடுவானா..?

” விக்ரம் அம்மா சொல்றது ஏத்துக்கற மாதிரியே இல்லை.. தேவை இல்லாம பயப்படறாங்க.. அந்த நேர இழப்பு அத்தை எதோ வருத்தத்தில் பேசிருப்பாங்க..  இவ்வளவு சீரியசா எடுத்துக்க வேண்டிய அவசியம் இல்லைனு எனக்கு தோணுது… நான் பேசுறேன் ” , என்று ரமேஷ் கூற, “இதை விட பல முக்கியமான பிரச்சனைகள் இருக்கு ரமேஷ்… அதை பார்ப்போம்”,  என்று கூறிக்கொண்டு  அவள் அறைக்கு செல்வதற்காக எழுந்தாள் திவ்யா..

“யார் கால் பண்ணி விக்ரமை மிரட்டிருப்பாங்க..?” , என்று ரமேஷ் வினவ,   “அது அவ்வளவு முக்கியமுன்னு எனக்கு தோணலை, அது ஒரு பெரிய ரகசியமுன்னு எனக்கு தோணலை….. ” , என்று திவ்யா கூற அவளை ஆச்சரியமாக பார்த்தான் ரமேஷ்.

.

“ஏன் அப்படி சொல்ற…? “, என்று ரமேஷ் வினவ ,”இந்த விஷயம் விக்ரம் அப்பாவோட நண்பர்கள் எல்லாருக்கும் ஏற்கனவே தெரிஞ்சிருக்கும்.. நம்ம வீட்ல கூட, உன்னையும்  என்னையும்  தவிர எல்லாருக்கும்  இந்த விஷயம் தெரியும்… நமக்கு தான் இது புது விஷயம்.. என்னை மிரட்டணுமுனா  எனக்கு கால் வரணும் , எனக்கும், விக்ரமிற்கும் இருக்கிற Relationship status என்னனு எங்களுக்கே இன்னும் சரியா தெரியாத நிலைமையில விக்ரமுக்கு எதுக்கு கால் பண்ணனும்?”, என்று கேட்டாள் திவ்யா.

 

ரமேஷ் அமைதியாக அமர்ந்திருக்க ,  “பார்த்துக்கலாம் தூங்கு…. குட் நைட்”, என்று கூறிக்கொண்டு திவ்யா அவள் அறைக்கு சென்றாள்.

 

திவ்யா சென்றதும் அவள்  கூறிய அனைத்து விஷயங்களையும் யோசித்து பார்த்தான் .

 

தீபா மனதில் தண்ணீரின் எண்ணங்கள் ஓட

திவ்யா மனதில் கூவம் நதியின் எண்ணங்கள் ஓட

விக்ரம் மனதில் திவ்யாவின்  எண்ணங்கள் ஓட

ரமேஷின் மனதில் விக்ரம் திவ்யாவின் எண்ணங்கள் ஓடியது….

 

அப்பொழுது ரமேஷின் மொபைல் ஒலித்தது..

 

ரமேஷ் மொபைலில் “Private number calling” என்ற வர, அதை ஸ்பீக்கரில் ஆன் செய்தான்.

 

” அந்த பொண்ணு சின்ன பொண்ணு அறிவில்லாம தனியா சுத்துது..

           விக்ரமிற்கு அந்த பொண்ணு மேல அக்கறை இருக்கிற  மாதிரி தெரியலியே…. இவ்வளவு சொன்ன பிறகும்..  அந்த பொண்ணை  தனியா இறக்கி விட்டுட்டு போயிருக்கான்… அது தான் அந்த அம்மா கல்யாணம் வேண்டாமுன்னு சொல்லுதுல…. திவ்யா கூவம் நதிக்கரை பக்கம் போக கூடாது……”, என்ற கம்பீர குரல் ஒலித்தது.

 

”  நீங்க யாரு..? ” , என்று ரமேஷ் வினவ, சிரிப்பு சத்தத்தோடு  மொபைல் 

   பேச்சு  துண்டிக்கப்  பட்டது..

 

ரமேஷ் என்ன செய்ய போகிறான்…?

             எத்தனை பிரச்சனை வந்தாலும் எதிர் கொண்டு

திவ்யாவின் கனவு , விக்ரமின் ஆசை நிறைவேற போகிறதா?

 

                                      தாகம் தொடரும்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!