Thaagam 27

Thaagam 27

தாகம் – 27
திவ்யா அவள் அறையின் ஜன்னலை சரியாக மூடவில்லை. மழையின் வேகம் அதிகமாக இருந்ததால் அவள் அறைக்குள் தண்ணீர் சிறிதாக திறந்திருந்த ஜன்னல் வழியாக வந்தது. அதை பார்த்த திவ்யா, ஜன்னலை நன்றாக மூடிவிட்டு விக்ரம் கொடுத்த கிப்ட்டை பார்த்தாள்.
 அவள் அதை அசைக்க அதிலிருந்த மணியும் அசைந்து மெல்லிய மணி ஓசையை எழுப்பியது. இந்த முறை வந்த மணியோசை விக்ரம் கூறிய வார்த்தைகளை அவள் காதில் ஒலிக்க செய்தது. “ஒவ்வொரு முறையும் மணியோசை கேட்கும் பொழுது இனி என் ஞாபகம் மட்டும் தான் வரணும்… எந்த பிரச்சனையிலும் நான் உன் கூட இருப்பேன்னு உனக்கு நம்பிக்கை இருக்கனும்…” விக்ரம் ஆழமாகவும் அழுத்தமாகவும் பேசியது காதில் விழுந்தது.
 ஒரு பக்கம் திவ்யாவிற்கு சிரிப்பு வந்தது. “எனக்கு என்ன பிரச்சனை வரப் போகிறது… இந்த ரமேஷுக்கும் இது தான் நினைப்பு… அவன் தான் காவலன் விஜய்னு… இப்ப விக்ரமுக்கும் இதே நினைப்பு… என்ன காப்பாத்த போற ஹீரோ மாதிரி…” என்று தனக்கு தானே நினைத்துக் கொண்டு விக்ரம் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தாள்.
 திவ்யாவின் கனவுக்கு இடைஞ்சல் இல்லாமல் நாம் ரமேஷின் அறைக்கு செல்வோம்.
 ரமேஷ் முகத்தில் சந்தோசம் இருந்தாலும் ஒரு ஓரத்தில் வலி தெரிகிறதே…
 ரமேஷ் அந்த அறையில் தனக்கு தானே பேசிக்கொண்டான்…
“காதல் வந்தால் கள்ளத்தனமும் கூடயே வந்து விடுமா? திவ்யா கூட பொய் சொல்லுவாளா? என்னதிது? வளர்ப்பு மாறிவிடுமா? காதல் வருவது தவறில்லை… ஆனால் மறைப்பது? பல விஷயங்களுக்காக திவ்யாவை கண்டித்திருக்கிறேன். ஆனால் இதற்கு என்ன செய்வது? ஒரு பக்கம் அவளை நினைத்து சிரிப்பு வந்தாலும்…” என்று ஓடிக் கொண்டிருந்த ரமேஷின் சிந்தனை அவன் அறையின் கதவு தட்டப்பட்ட சத்தத்தில் நின்றது.
படுத்திருந்த ரமேஷ் எழுந்து சென்று, கதவை திறக்க அங்க குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டு திவ்யா நின்று கொண்டிருந்தாள்.
அவன் முன் ஒரு வேலைப்பாடு நிறைந்த காபி கோப்பையை நீட்டினாள். அந்த காபி கோப்பையின் கைப்பிடியில் வேலை பாடு நிறைந்த சிறிய மணி அழகாக அசைந்தாடியது. அசைந்தாடிய அந்த மணி ரமேஷின் முகத்தில் புன்முறுவலையும் திவ்யாவின் செய்கை ரமேஷின் மனதில் சந்தோஷத்தையும் ஏற்படுத்தியது.
 ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, காதல் வருவது இயற்கையாக இருக்கலாம்… ஆனால் அவர்கள் காதலை கையாளுவது அவர்கள் வளர்ப்பில் தான் இருக்கிறது.
 திவ்யா இதை எப்படி கையாள போகிறாள்?
“என்னதிது?” என்று ரமேஷ் வினவ, “உன் நண்பன் கொடுத்த கிப்ட்…” என்று திவ்யா சிரித்துக் கொண்டே கூறினாள்.
“உன் நண்பனா… இந்த திவ்யா நம்மளை எங்கையோ சிக்க வைக்க திட்டம் போடுற மாதிரி தெரியுதே…” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.
 இடி, மின்னலுடன் கூடிய மழை வெளுத்துக் கொண்டிருந்தது…
ரமேஷ் எதோ பேசிக் கொண்டிருக்க, ரமேஷின் அறை ஜன்னலை திறந்தாள் திவ்யா.
“திவ்யா ஜன்னலை திறக்காத… தண்ணி உள்ள வரும்…” என்று ரமேஷ் கூற, “அதனால தான் என் ரூம் ஜன்னலை திறக்காம, உன் ரூம் ஜன்னலை திறக்கறேன்…” என்று ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடி கூறினாள் திவ்யா.
 திடீரென்று வேகமாக காற்று வீச, மழை சாரலின் திசை மாறி திவ்யாவின் முகம் முழுவதும் நீர் துளிகள். இந்த எதிர்பாராத இயற்கையின் விளையாட்டில் திவ்யாவுக்கு உடல் முழுதும் சிலிர்க்க முகத்தை வேகமாக உள்பக்கம் திருப்பிக் கொண்டு ரமேஷின் அறை ஜன்னலை இழுத்து மூடினாள்.
 இதை பார்த்த ரமேஷ், “அடுத்தவன் ரூம்ல தண்ணி வரணும்னு நினச்சா இப்படி தான் ஆகும்… என்று கூறியபடி கட்டிலில் விழுந்து விழுந்து சிரிக்க, திவ்யாவிற்கு கோபம் வந்து, “உன்னை என்ன பண்றேன் பாரு…” என்று அவனை ஆள் காட்டி விரலால் மிரட்ட, மேலும் அவளை பார்த்து சிரித்து கடுப்பேற்றினான் ரமேஷ்.
 ரமேஷ் அவளை பார்த்து சிரித்ததில், கோபம் தலைக்கேறிய திவ்யா, அவள் பேச நினைத்ததை கூட பேசாமல் தன் அறைக்கு சென்றாள்.
“முடிந்ததை பண்ணு” என்ற மீண்டும் ரமேஷ் சத்தமாக கூற திவ்யாவிற்கு இன்னும் கடுப்பேறியது.
 மறுநாள் காலை மழையின் வேகம் குறைந்திருந்தது, ஆனால் நின்றபாடில்லை.
 ஷண்முகம் சோபாவில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருக்க, மழையின் காரணமாக ஜாகிங் போகாமல் ரமேஷ் வீட்டிலிருந்து பேப்பர் வாசித்து கொண்டிருந்தான். புஷ்பா, ரமேஷின் தாய் இருவரும் தரையில் அமர்ந்தபடி சமையலுக்கு தேவையான காய்கறிகளை நறுக்கி கொண்டிருந்தனர். இது தான் சமயம் என்று நினைத்த திவ்யா, நேற்று விக்ரம் கொடுத்த காபி கோப்பையை நடு ஹாலில் வைத்தாள்.
“என்னதிது?” என்று ஷண்முகம் வினவ, அதை பார்த்த ரமேஷிற்கு நெஞ்சு நின்று விடும் போல் அதிர்ச்சி உண்டாகி, அவன் கண்கள் பெரிதாக விரிந்தது.
“இது என்னடி?” என்று புஷ்பா வினவ, “காபி குடிக்கிற கப்புக்கு இவ்வளவு அலங்காரமா?” என்று ரமேஷின் தாய் அதை கையில் எடுத்து பார்த்தார்.
“என்னை ஒருத்தர், கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன்னு சொல்லி இதை கொடுத்தாரு…” என்று திவ்யா கூற, “யார் எதை குடுத்தாலும் வாங்கிருவியா?” என்று புஷ்பா கோபமாக வினவ,
“நான் மறுத்து பிரச்சனையை பெரிசு பண்றதை விட, உங்கள நேர்ல வந்து பார்க்க சொல்லிட்டேன்… எதுவாக இருந்தாலும் எங்க மாமா, அத்தை, அம்மா கிட்ட பேசுங்கன்னு சொல்லிட்டேன்…” என்று திவ்யா பாவமாக கூறினாள்.
“அடிப்பாவி… எவ்வளவு பொய்…!!! இவ இப்படியெல்லாம் நிச்சயமா பேசியிருக்க மாட்டா…” என்று மனதிற்குள் நினைத்து கொண்டான் ரமேஷ்.
“யாருமா அது?” என்று ஷண்முகம் வினவ, “ரமேஷோட நண்பன் மாமா” என்று அப்பாவியாக கூறினாள் திவ்யா.
“நேத்து என்னை பார்த்து சிரிக்கவா செய்ற?” என்று திவ்யாவின் கண்கள் ரமேஷை பார்த்து கேட்டது.
அனைவரின் கவனமும் ரமேஷிடம் திரும்ப, ரமேஷ் பதட்டத்தின் உச்சிக்கே சென்றான்.
“கிராதகி… என்ன மாட்டிவிட்டு அவ தப்பிச்சிகிட்டா…” என்று ரமேஷ் திவ்யாவை மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தான்.
“யாருடா?” என்று ஷண்முகம் மீண்டும் அழுத்தமாக வினவ, “விக்ரம்” என்று ரமேஷ் கூறினான்.
“நீ என்ன நினைக்கிற?” என்று ஷண்முகம் திவ்யாவிடம் வினவ, திவ்யா, “தெரியலை மாமா…” என்று பதில் கூறினாள்.
“ரொம்ப பெரிய இடமாச்சே… அவன் அம்மா, அப்பா சம்மதிப்பாங்களா?” என்று ரமேஷிடம் ஷண்முகம் வினவ, விக்ரமின் குடும்ப பின்னணியை ரமேஷ் கூறினான்.
இதை கேட்டுக் கொண்டிருந்த புஷ்பாவின் முகம் மாறியது. “அத்தை எனக்கு இந்த விஷயமெல்லாம் சமீபத்துல தான் தெரியும்…” என்று பரிதாபமாக கூறினான்.
 புஷ்பா பதில் எதுவும் பேசாமல், தன் அறைக்கு சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள்.
அனைவரும் அமைதியாக இருக்க, “ரமேஷ் எனக்கு நேரம் ஆச்சு… மழை அதிகமா இருக்கு… என் வண்டியை விட உன் பைக் பெட்டெர்… நீ என்னை டிராப் பண்றியா?” என்று திவ்யா வினவ, “அத்தை…” என்று இழுத்தான் ரமேஷ்…
“நான் திருட்டு கல்யாணம் பண்ணலை… இவனை தான் காதலிக்கிறேன்… இவனை தான் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லல… என்ன நடந்ததோ அதை வீட்ல வந்து சொல்லிருக்கேன் அவ்வளவு தான்… பெரியவங்க முடிவு… எல்லாரும் என்ன சொல்றாங்களோ அதுக்கு நான் கட்டு படுறேன்… என் மேல எந்த தப்பும் இல்லை… இது அம்மாவுக்கும் தெரியும்… புரியும்… அம்மாவா யோசிச்சி ஒரு முடிவு எடுப்பாங்க… அவங்களை தொந்திரவு பண்ண வேண்டாம்…” என்று தெளிவாகவும் கோர்வையாகவும் திவ்யா பேசி முடிக்க, “அவ சொல்றது தான் சரி…” என்று ரமேஷின் தாய் கூறினார்.
ரமேஷ் யோசித்து கொண்டே நிற்க, “காதல், கல்யாணம் எல்லாம் இரெண்டாவது பிரச்சனை… இன்னக்கி மழை தான் முதல் பிரச்சனை… இவ்வளவு மழைல ரோடு ரொம்ப மோசமா மாறிருக்கும், கரண்ட் கம்பி அறுந்து விழுந்திருக்கும், டிராபிக் ஜாம் இருக்கும்… சாக்கடை தண்ணீரும் நல்ல தண்ணீரும் கலந்திருக்கும்… இப்படி நிறைய கவரேஜ் இருக்கு ரமேஷ்… சீக்கிரம் கிளம்பு…” என்று திவ்யா அவசர படுத்த, ரமேஷ் திவ்யா இருவரும் கிளம்பி அலுவலகத்திற்கு சென்றனர்.
அவர்கள் செல்லும் வழியெல்லாம், மழையால் எங்கும் நீர் பெருக்கெடுத்து ஓடியது. சிலர் குடைகளோடும், சிலர் ரெய்ன் கோட் அணிந்து கொண்டும், சிலர் தலையில் பிளாஸ்டிக் கவரோடும் சாலையில் சென்று கொண்டிருந்தனர். பேருந்தில் கூட்டம் அலை மோதியது. ஜன்னல் வழியாகவும்… பேருந்தில் இருந்த ஓட்டை வழியாகவும் பேருந்திற்குள்ளும் நீர் கசிந்து கொண்டிருந்தது. எங்கும் தண்ணீர்… எதிலும் நீர் துளிகள்…
“இந்த வருடம் நல்ல மழை… சரியாக சேகரிச்சா நல்லா இருக்கும்…” என்று திவ்யா கூற, “நீ ரொம்ப மழைல சுத்திக்கிட்டு இருக்காத… ரோட்ல நடக்கும் பொழுது பார்த்து நட… எங்கயாவது கீழ விழுந்து வைக்காத… வேலை வேலைனு வேலையை மட்டும் யோசிக்காத…அத்தை கிட்ட கால் பண்ணி பேசு… அத்தை பாவம்…” என்று ரமேஷ் கூற, “சரி” என்று தலை அசைத்து கேட்டுக் கொண்டாள் திவ்யா.
 திவ்யா அலுவலகத்தில் இறங்கி கொள்ள, “பார்த்து பத்திரம்” என்று கூறிவிட்டு கிளம்பி சென்றான் ரமேஷ்.
நாமும் ரமேஷோடு சென்று டீக்கடை பக்கம் இறங்கி கொள்வோம். தீபாவும், பாண்டியும் இந்த மழையில் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.
டீக்கடையில் ஒரு சிலர் டீ குடித்துக் கொண்டிருந்தனர். டீக்கடைக்கு ஒட்டிய சந்துக்குள், அந்த இடத்திற்கு பழக்கப்பட்டவர்களால் மட்டும் தான் நடந்து செல்ல முடியும். பாதை மறைந்து தண்ணீர் தேங்கி இருந்தது. இங்கு பலர் தலையில் பிளாஸ்டிக் கவர் அணிந்திருந்தனர். சில பெண்கள் சேலையால் தலையை மறைத்திருந்தனர்… சிலர் மழையில் நனைந்த படியே சென்று கொண்டிருந்தனர்.
 இன்று குழந்தைகள் மழையில் விளையாடவில்லை.
சந்துக்குள் நடக்க ஆரம்பித்து பல குண்டுகுழிகளை தாண்டி நாம் சென்றால், தீபாவின் குரல் கேட்கிறது.
 தீபாவின் வீடு நமக்கு அடையாளம் தெரியவில்லை. பெரிய நீல நிற தார்பாய் ஷீட்டால் வீடு கூரை முதல் வாசல் வரை மறைக்க பட்டிருந்தது. மழைக்காக இந்த ஏற்பாடு போல் தெரிகிறது. பாக்கியத்தின் சம்பளமும் வேலை செய்தது தெரிகிறது. தீபாவின் குரலை அடையாளம் வைத்து அவள் வீட்டிற்குள் சென்று பார்த்தால், இப்பொழுது தண்ணீர் ஒழுக வில்லை.
“பாண்டி வா டா… எதிர் பக்கம் போய் வாட்டர் பாட்டில் வாங்கி வருவோம்… டீக்கடையில் வாட்டர் பாட்டில் இல்லை டா…” என்று தீபா கெஞ்ச, “ஏய் அக்கா… எப்ப பார்த்தாலும் உனக்கு வாட்டர் பாட்டில்… வாட்டர் பாட்டில்… வாட்டர் பாட்டில் மட்டும் தானா?. எனக்கு உடம்பெல்லாம் வலிக்குது… அங்க பாரு வீட்ல எவ்வளவு தண்ணீர் இருக்கு… இப்ப யாராவது காசு குடுத்து தண்ணீ வாங்குவாங்களா?” என்று பாண்டி கோபமாக கேட்க, “இப்ப தான்டா என்கிட்ட காசு இருக்கு… அந்த பாட்டில் தண்ணி குடிக்கனுமுனு ஆசையா இருக்கு டா.” என்று தீபா பரிதாபமாக கூற, பாண்டி அவளை முறைத்து பார்த்து விட்டு குளிருக்கு இதமாக போர்வைக்குள் படுத்துக் கொண்டான்.
“ஏய்… தீபா…எங்க போகணும் உனக்கு? மழை அதிகமா இருக்குனு தான் பள்ளிக்கூடம் லீவு வுட்டுருக்காங்க… எங்கயும் போகாம ரெண்டு பேரும் வூட்ல கம்முனு இருங்க… தீபா தம்பியையும் பத்திரமா பார்த்துக்கோ… அவனை வெளியில விளையாட விடாத…” என்று பாக்கியம் கூறிவிட்டு தார்பாய் ஷீட்டால் வீட்டை மறைத்து விட்டு விக்ரம் ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரி நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
சுமார் காலை 11:00 மணியளவில், மழையின் காரணமாக வெளியே விளையாட செல்ல முடியாமல் வீட்டுக்குள் படுத்துக்கொண்டிருந்த பாண்டி தூங்கி விட்டான்.
 அதை அறிந்த தீபா, ஒரு பிளாஸ்டிக் கவரால் தலையை மூடிக் கொண்டு, தன் உடலை சாக்கு பையால் மறைத்துக் கொண்டு அவளிடம் இருந்த ஐம்பது ரூபாய் கொண்ட துணி பையை எடுத்துக் கொண்டு வாட்டர் பாட்டில் வாங்க நடக்க ஆரம்பித்தாள்.
 மழையால் எங்கும் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.
நிதானமாக சாலையை கடந்து எதிர் பக்கம் வந்தாள். விக்ரம் ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரி பெயர் பலகையை பார்த்த உடன் அவள் மனதில் பயம் அதிகரித்தது…
“வெளியே வரக் கூடாது என்று கூறியும் தம்பியை தனியாக விட்டுவிட்டு வந்திருக்கிறோம்… அம்மா பார்த்து விட்டால், என்ன வாகும்?” என்ற எண்ணம் தோன்ற பயம் அதிகரித்து அவள் தாயின் கண்ணில் பட்டு விட கூடாது என்று ஓரமாக நடக்க ஆரம்பித்தாள்.
 அப்பொழுது வீசிய காற்றில் மின்சார கம்பி அறுந்து விழ, பாக்கியத்தின் கண்ணில் பட்டு விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த தீபா அந்த மின்சாரக் கம்பியை கவனிக்கவில்லை. தீபாவின் கால் பெரு விரல் அந்த கம்பியில் பட, அந்த கம்பியில் பாய்ந்து வந்த மின்சாரம் தீபாவை தாக்கி அவளை தூர வீசியது.
திவ்யாவும் அவள் குழுவினரும் மழையால் அந்த பகுதியில் ஏற்பட்ட பாதிப்பை படமெடுக்க, தீபாவின் அலறல் சத்தத்தில் அனைவரும் அங்கு விரைந்தனர்.
இயற்கையும், மனிதனின் செயல்களும் நமக்காக என்னென்ன பரிசுகளும் சோதனைகளும் வைத்திருக்கின்றன?
 காத்திருப்போம்…
 தாகம் தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!