Thanimai – 15

04ca11c89e709725d2ccd771ed69ac51-7aa76a12

Thanimai – 15

கீர்த்தனாவின் மனமாற்றம்

அவன் கடந்தகாலத்தின் பிடியிலிருந்து வெளியே வந்தவன் கீர்த்தனாவின் முகத்தை ஏறிட்டான். தன் கன்னங்களில் கண்ணீர் வழிவதைக் கூட உணராமல் கற்சிலைபோல அமர்ந்திருந்த மனையாளின் கைப்பிடித்து அழுத்தம் கொடுத்தான்.

அவனின் விரல் ஸ்பரிசத்தில் தன்னிலைக்கு மீண்டவள், “எட்டு மாசம் தனிமை.. எவ்வளவு வலிக்கும் தெரியுமாங்க.. காதலிக்கும்போது தனிமையைத் தேடி ஓடும் மனசு, கஷ்டம் வரும்போது மற்றவர் துணையைத் தேடும். சில நேரங்களில் தனிமை ரொம்பவே அழகானது. பல நேரங்களில் கொடுமையானது. நானும் அதை அனுபவிச்சிருக்கேன்” குரல் கரகரக்க கூறியவளின் கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது.

அவளின் மனவலியை வார்த்தைகளினால் உணர்ந்தவன், “ஆமா சாப்பிட்டியான்னு கேட்க கூட ஆளில்லாத தனிமை. எல்லோரும் பரிதாபமாக பார்க்கும்போது எங்காவது ஓடிவிடலாமான்னு தோணும். அதுவே வீட்டுக்கு வந்து உட்கார்ந்தால் மீண்டும் அவர்களின் ஞாபகம் மட்டும் வரும்” என்றவன் சொல்ல இடது கையால் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

“இவ்வளவு வலியை மனசில் வச்சிட்டு எப்படித்தான் சிரிக்கிறீங்களோ எனக்கு தெரியல” அவனிடம் அகப்பட்டிருந்த தன் கரத்தை உருவியபடி கேட்டாள்.

அவளின் முகத்தை நோக்கியவன், “உதிம்மா வரும்வரை சிரிப்பை மறந்தே போயிருந்தேன். அவ என் வாழ்க்கையில் வந்த பிறகுதான் முதல்முறையாக அழுதேன்” என்றவனின் பார்வை அவளின் இதயம் ஆழம்வரை ஊடுருவிச் சென்றது.

அந்த பார்வைக்கான அர்த்தம் என்னவென்று அவளால் கணிக்க முடியவில்லை. அவனின் விழிகளை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் தடுமாறிய கீர்த்தனா, “சரி நீங்க வாங்க நான் போய் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று எழுந்தவளின் கரம்பிடித்து தடுத்தவனை கேள்வியாக நோக்கினாள்.

“கொஞ்சநேரம் உன் மடியில் படுத்துக்கவா?” என்றவனின் கண்ணில் தெரிந்த வலி அவளின் இதயத்தைக் கசக்கி பிழிந்தது. மறுப்பு சொல்லாமல் அவனின் அருகே அமர மறுநிமிடமே அவளின் மடியில் தலைவைத்து விழி மூடினான்.

அவளின் கரங்கள் அனுமதியின்றி தன்னவனின் கேசத்தை கொதியது. காயப்பட்ட மனதிற்கு இதமாக இருந்தது. சிறிதுநேரம் மெளனமாக கழிந்தது. சட்டென்று மடியில் இருந்து எழுந்தவன், “தேங்க்ஸ்” என்று சொன்னதும் புன்னகையோடு அவனைவிட்டு விலகி சென்றாள். 

தன்னவளின் நடையில் தடுமாற்றத்தை  கவனித்தவன், ‘இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் இந்த ஓட்டமோ?’ தனக்குள் நினைத்தபடி கண்முன்னே பரந்துவிரிந்த வானத்தில் மேகங்கள் தவழ்ந்து செல்வதைக் கண்டு மனம் லேசானது.

சிறிதுநேரத்தில், “என்னங்க வாங்க சாப்பிடலாம்” மனையாளின் குரல்கேட்டு எழுந்து கீழே சென்றான். அடுத்தடுத்து வந்த நாட்களில் கீர்த்தனாவிடம் சில மாற்றங்கள் தெரிந்தது.

ஆரம்பத்தில் கணவனிடம் அளந்து பேசுபவள் இப்போது உதயாவோடு பேசுவது போல இயல்பாக பேசினாள். அவன் தனியே அமர்ந்திருப்பதைக் கண்டால் போதுமே ஏதேதோ சொல்லி அவனின் கவனத்தை திசை திருப்புவாள்.

மெல்ல தன் கூட்டைவிட்டு வெளியே வரும் பட்டாம்பூச்சிபோல அவளின் இயல்பான குறும்பும், கலகலப்பும் தலைக்காட்ட தொடங்கியது. சின்ன விஷயங்களில் கூட அவனின் விருப்பத்தைக் கேட்டு முடிவெடுக்க தொடங்கினாள்.

அந்த மாற்றம் அனைத்தும் அரவிந்தனின் மனதில் நம்பிக்கையை விதைத்தது. தன்னவளின் கண்ணீருக்கு பின்னால் மறைந்திருக்கும் வலியை மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறினாலும், அவன் சற்று நிதானமாகவே இருந்தான்.

எந்தவொரு பிரச்சனைக்கும் அது தொடங்கிய இடத்தில் தான், அதற்கான தீர்வும் இருக்கும். அதுபோல கீர்த்தனாவின் பின்னோடு மறைந்திருக்கும் மர்மம் என்னவென்று தெரிந்து கொள்ள பொறுமையைக் கடைபிடித்தான். திடீரென்று அவள் கண்ணில் தோன்றி மறையும் வெறுமைக்கான காரணத்தை அவளே மனம் திறந்து சொல்லும் நாளுக்காக காத்திருந்தான்.

சில நேரங்களில் முயல் வேகத்தைவிட ஆமை வேகம் சிறந்தது அல்லவா?

மற்றொரு பக்கம் விக்னேஷ் – மௌனிகா இருவரின் வாழ்க்கையும் எந்தவிதமான இடையூறும் இன்றி சென்றது.

தன் மருமகள் கர்ப்பமாக இருக்கும் செய்தி அறிந்த நிர்மலாவின் கால்கள் தரையில் பதியவில்லை. விக்னேஷிற்கு சந்தோசமாக இருந்தது. தன் மனைவியை இப்போது அதிக அக்கறையுடன் கவனிக்க தொடங்கினான்.

மௌனிகா விஷயமறிந்து பொள்ளாச்சியிலிருந்து வந்த தேவகி தன் மகளுக்கு திருஷ்டி கழித்தார். ஒரே நாளில் திருமணமான பெண்களில் ஒருவர் கர்ப்பமான விஷயமறிந்த பக்கத்து வீட்டினரின் பார்வை கீர்த்தியின் பக்கம் திரும்பியது.

“ஏன்மா நீ..” என்று பக்கத்து வீட்டு ராஜி ஆரம்பிக்கும்போதே கீர்த்தியின் அருகே வந்தார் நிர்மலா.

“அரவிந்தன் உன்னிடம் ஏதோ சொல்லனும்னு கூப்பிட்டான். என்னன்னு போயி பாரும்மா” அவளை அனுப்பிவிட்டு அவரிடம் பேச தொடங்கினார்.

அவள் சிந்தனையோடு படுக்கை அறைக்குள் நுழைய, அங்கே இரண்டு நாளுக்கு தேவையான துணிகளைப் பெட்டிக்குள் அடிக்கி வைத்து கொண்டிருந்த கணவனை வழக்கம்போலவே தவறாகப் புரிந்து கொண்டாள்.

அவள் வந்து நிற்பதை அறியாமல், “உதிம்மாவிற்கு எந்த துணி பிடிக்குமோ எடுத்து வச்சுகோங்க செல்லம்” என்றதும் தனக்கு பிடித்த உடைகளை தேர்ந்தெடுத்து தகப்பனிடம் கொடுக்க அவன் அதை நேர்த்தியாக பெட்டியில் அடுக்கினான்.

“ஏங்க இப்போ எதுக்கு இதெல்லாம் எடுத்து வச்சிட்டு இருக்கீங்க” அவனின் கையிலிருந்த புடவையைப் பிடுங்கி படுக்கையில் வீசிவிட்டு கோபத்துடன் கணவனின் பக்கம் திரும்பினாள்.

தந்தையின் கழுத்தைக் கட்டிக்கொண்ட உதயா,  “கீதும்மா தேவையில்லாமல் அப்பாவிடம் சண்டை போடாதே” குறும்புடன் கண்சிமிட்டினாள் சின்னவள்.

அவன் நடந்த விஷயத்தை சொல்ல தொடங்கும் முன்னே கைநீட்டி தடுத்தவள், “மௌனி கர்ப்பமானதை வச்சு என்னை யாராவது பேசி காயப்படுத்திடுவாங்கன்னு யோசிக்காதீங்க. அவங்களுக்கு எப்படி பதிலடி கொடுக்கணும்னு கீர்த்திக்கு நல்லாவே தெரியும்” என்றவளை தடுத்து ஏதோ சொல்ல முயற்சித்தான்.

“மூட்டப்பூச்சிக்கு பயந்து வீட்டையே கொளுத்திய மாதிரி முடிவெடுத்துட்டு இருக்கீங்க. என்னை ஊருக்கு கிளம்ப சொல்வதற்கு முன்னால் நீ போறியான்னு என்னிடம் ஒரு வார்த்தை கேட்டீங்களா? நீங்களா முடிவெடுத்து நீங்களா ஒன்னு செய்ங்க” அவன் பேச இடம் கொடுக்காமல் பேசியவளை கண்டு அரவிந்தன் அமைதியாகிவிட்டான்.

“அப்பா அம்மா என்ன லூசா?” உதயா தன் தந்தையின் முகத்தை கேள்வியாக நோக்கிட உதட்டைப் பிதுக்கி மறுப்பாக தலையசைத்தான்.

“என்ன அப்பனும், மகளும் சேர்ந்து விளையாடுறீங்களா?” அதற்கும் அவள் சண்டைக்கு வந்தாள்.

பட்டென்று கீழிறங்கி அறையின் வாசலுக்கு சென்ற மகளை இருவரும் கேள்வியாக நோக்கிட, “இல்லப்பா நிஜமாவே அம்மா லூசு ஆகிடுச்சு”  அவளின் கைக்கு அகப்படாமல் அங்கிருந்து ஓடிவிட்டாள்.

“உதயா” என்ற மிரட்டலோடு அவள் பின்னோடு சென்ற மனைவியின் கரம்பற்றி இழுத்தான் அரவிந்தன்.

அவனின் இழுப்பிற்கு மசியாமல் காலைத் திரையில் ஊன்றி நின்றவள் அவன் கைபிடிக்குள் சிக்கியிருந்த கரத்திற்கு விடுதலை கொடுத்துவிட நினைத்து, “என் கையைக் கொஞ்சம் விடுங்க” என்றபடி நிமிர்ந்து அவனின் விழிகளை சந்தித்தாள் கீர்த்தி.

“உன்னை இங்கிருந்து அனுப்ப எனக்கு எள்ளளவும் ஆசை இல்ல கீர்த்தி. ஆனால் உங்க அப்பா உடல்நிலை சரியில்லாத விஷயமறிந்த பிறகும் அப்படியிருக்க முடியாது இல்ல” என்றான்.

அவன் முதல் சொன்ன வாக்கியத்தைக் கேட்டு துள்ளிய மனம், பிற்பாதியைக் கேட்டவுடன் பதற, “அப்பாவுக்கு என்னாச்சுங்க” என்றவள் கோபத்தை மறந்து கேட்டாள்.

“பிரஷர் அதிகமானதால் மயக்கம் போட்டு விழுந்துட்டார்னு அத்தை போன் பண்ணாங்க. என் மகளைப் பார்க்கணும்போல இருக்கு அவளை வீட்டுக்கு அனுப்பி வைக்க முடியுமான்னு மாமா கேட்கும்போது மறுத்து பேச முடியல” அவன் தன்னிலை விளக்கம் கொடுக்க அவளின் கோபம் சூரியனைக் கண்ட பனிபோல விலகி சென்றது.

 “சாரிங்க நான் புரியாமல் பேசிட்டேன்” என்றதும் சரியென்று தலையசைத்து அறையைவிட்டு வெளியேறினான்.

திடீரென்று நினைவு வந்தவளாக, “நீங்க ஊருக்கு வரீங்களா?” என்று ஆர்வமாக கேட்டாள்.

“இல்ல கீர்த்தி இங்கே கொஞ்சம் வேலையிருக்கு. அதனால் நீயும், பாப்பாவும் போயிட்டு வாங்க” என்றான்.

அவளுக்கு செல்ல விருப்பம் இல்லாதபோதும் அரை மனதாக சம்மதித்த மனைவி மற்றும் மகளை சேலம் அனுப்பிவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தான். திருமணமாகி முதல் முறையாக தந்தையின் வீட்டிற்கு சென்றாள் கீர்த்தனா.

உதயாவின் முதல் பேருந்து பயணம் என்பதால் துருதுருவென்று சேட்டை செய்தபடி தாயிடம் ஏதேதோ கேள்விகளை கேட்டவளுக்கு, சளைக்காமல் பதில் சொல்லியபடியே வந்தாள்.

அவள் சேலத்தில் சென்று இறங்கிட, “பாப்பா எப்படி இருக்கிற” என்ற கேள்வியுடன் அருகே வந்த ராமலிங்கம் உதயாவைத் தூக்கிக் கொண்டார்.

தந்தையின் குரல்கேட்டு நிமிர்ந்த கீர்த்தனா, “அம்மா உங்களுக்கு உடல்நிலை சரியில்லன்னு சொன்னாங்களே அப்பா.. நீங்க எதுக்கு இவ்வளவு தூரம் வந்தீங்க? நாங்களே வந்திருப்பேன் இல்ல” எனத் தந்தையைக் கடிந்து கொண்டாள்.

தன் பேத்தியோடு ஐக்கியமாகிவிட்ட தகப்பன் சின்னவளிடம் பேசியபடி வண்டியை எடுக்க செல்ல, “பேத்தி வந்ததும் பெத்த மகளைக் கண்ணுக்கே தெரியல” புலம்பியபடி அவரைப் பின் தொடர்ந்தாள். மூவரும் வண்டியில் வீடு நோக்கி பயணித்தனர்.

வீட்டின் வாசலில் வண்டியை நிறுத்திய ராமலிங்கம், “வீட்டுக்கு வந்தாச்சு குட்டிம்மா. உன் பாட்டி உள்ளே இருக்கிறா போய் பாரு” என்று சொல்லி அவளை அனுப்பிவிட்டு மகளின் பக்கம் திரும்பினார்.

அவளோ கோபம் கொண்ட குழந்தை போல தரையில் காலை உதைத்தபடி முகத்தைத் திருப்பிட, “என்னடா அப்பா மீது கோபமா?” பாசத்துடன் மகளின் தலையை வருடினார்.

“பின்ன என் கேள்விக்கு பதில் சொல்லாமல் பேத்திக்கிட்ட மட்டும் பேசிட்டே வரீங்க?” குமரியவள் குழந்தையாய் மாறி பொறாமையில் தந்தையை வேண்டுமென்றே வம்பிழுத்தாள்.

“அன்னைக்கு வேலை அதிகமானதால் அப்படி ஆகிடுச்சு அவ்வளவுதான். சரி நீ வா நம்ம வீட்டுக்குள் போய் பேசலாம்” இருவரும் உள்ளே செல்ல,

பேக்கை ஹாலில் வைத்துவிட்டு, “அம்மா” என்ற அழைப்புடன் சமையலறையை நோக்கி சென்றாள். அங்கே செல்வி பேத்தியை சமையல் மேடையில் அமரவைத்து கேரட்டை கையில் கொடுக்க அதை சாப்பிட்டபடி பேசிக் கொண்டிருந்தாள் உதயா.

“அம்மா அவளிடம் வாய் கொடுக்காதே. அப்புறம் மீளவே முடியாது. ஊரில் நடந்ததில் இருந்து இப்போ வரை நடந்ததை எல்லாம் சொல்லுவா” சிரிப்புடன் தாயை எச்சரித்தாள் கீர்த்தனா.

 “குழந்தைனா அப்படிதான் இருக்கும். உன்னைவிட இவ ஒண்ணும் வாய்  பேசல. நீயும்தான் உங்க அப்பாகிட்ட என்னை போட்டு கொடுப்பியே.. ஹப்பா நடந்ததை ஒண்ணுவிடாமல் தந்தையிடம் ஒப்பிச்சிட்டு ஒண்ணுமே தெரியாதுங்கிற மாதிரி இருப்ப வாலு” என்று மகளுக்கு பதில் கொடுத்தார்.

“என் மகள் முன்னாடி மானத்தையே வாங்குறீங்க.. ஐயோ இதை இவ அப்படியே அவங்க அப்பாகிட்ட சொல்லுவாளே..” மகள் புன்னகையோடு புலம்புவது கண்டு மற்ற மூவரும் சிரித்தனர்.

மகள் வரும் விஷயமறிந்து பால் பாயசம் வைத்த செல்வி, “நீ எப்படி இருக்கிற? மாப்பிள்ளையை கூட்டிட்டு வந்திருக்கலாம் இல்ல” ஆதங்கத்துடன் மகளிடம் கேட்டார்.

“அவரும் எங்களோடு கிளம்பினாரு. கடைசி நேரத்தில் லோடு வந்து இறங்கிடுச்சு. அதனால் தான் அவரால் வர முடியல. எனக்குமே அவரை விட்டுட்டு வர மனசே இல்லம்மா” என்று கணவனை தாயிடம் விட்டுக் கொடுக்காமல் பேசிட அவரும் சரியென்று தலையசைத்தார்.

அவள் வார்த்தைகளில் வெளிப்பட்ட அன்பை கண்டு பெற்றவர்களின் மனம் குளிர்ந்து போனது. திருமணமே வேண்டாமென்று சொன்ன மகள் வார்த்தைக்கு கூட கணவனை விட்டுக் கொடுக்காமல் பேசுவதை நினைத்து சந்தோசப்பட்டனர்.

உதயாவைக் கவனிக்க அவர்கள் இருவருக்கும் நேரம் போதவில்லை. ராமலிங்கம் உடல்நிலை பற்றி விசாரித்தவள், தாயை அமர வைத்துவிட்டு சமையலை கவனித்தாள்.

பகல் நேரம் செல்ல இரவு தூங்குவதற்கு படுக்கைக்கு வந்த கீர்த்தியின் மனமோ கணவனின் அரவணைப்பை தேடியது. அவள் உதயாவின் முகம் பார்க்க அவளோ கீர்த்தனாவின்  மார்பில் முகம் புதைத்து தூங்கி இருந்தாள். கணவனின் நினைவில் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு விட்டத்தை பார்த்தபடி விழித்திருந்தாள் கீர்த்தனா.

அதே சமயத்தில் தங்களின் அறைக்குள் நுழைந்த அரவிந்தனுக்கு காரணமே இல்லாமல் கோபம் வந்தது. தன் மனைவி மற்றும் மகளை மார்பில் போட்டுக் கொண்டு தூங்கியே பழகியதால் அவனுக்கு தூக்கம் வர மறுத்தது.

தன் அலைபேசியை எடுத்த அரவிந்தன் மனைவிக்கு அழைக்க, இரண்டே ரிங்கில் போனை எடுத்தவள், “ஹலோ” என்றாள்.

“கீர்த்தி பாப்பா எங்கே?” மறுப்பக்கமிருந்து கேட்ட கணவனின் குரலில் தன்னை மறந்தாள்.

அதற்குள் அவன் ஆயிரம் முறை அவர் பெயரைக் கூறியிருக்க, “ம்ம் இருக்கேங்க. உதயா நல்ல தூங்கறா” என்று பதில் கொடுத்தாள்.

“மாமா – அத்தை எப்படி இருக்காங்களா?” என்றதும்,

“ம்ஹும் நல்ல இருக்காங்க” என்றாள். அவள் ஒரு வரியில் பதில் சொல்வதைக் கவனித்த அரவிந்தனின் பழைய குறும்பு தலைத் தூக்கியது.,

“என்னை ரொம்ப மிஸ் பண்றீயா?” அவனின் குரல் அவளின் மனதை என்னவோ செய்தது.

“ம்ஹும் ஆமா..” சட்டென்று சிந்திக்காமல் பதில் கொடுக்க, மறுப்பக்கம் அதைக்கேட்ட அரவிந்தனுக்கு உற்சாகம் ஊர்றேடுத்தது.

“என்னை லவ் பண்றீயா?” அவன் ஹஸ்கி வாய்சில் கேட்க, தன்னிலை மறந்தவள்,

“உன்னை மட்டும் நேசிக்கிறேன்” என்றதும் அவன் வாய்விட்டு சிரிக்க  தன்னிலைக்கு மீண்டாள் கீர்த்தனா.

“ஏய் என்ன கேட்டீங்க?” என்றாள் வேகமாக..

 “பதில் சொல்லிட்டு என்னை கேட்டால் என்ன அர்த்தம்?” அவளை வம்பிற்கு இழுக்க அவளின் வதனங்கள் வேகத்தில் சிவந்தது.

அவளை அதற்குமேல் யோசிக்கவிடாமல், “சரி தூங்கு காலையில் பேசலாம்”  போனை வைத்துவிட்டு படுக்கையில் விழுந்த அரவிந்தன் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது.

தன்னிலை உணராமல் பதில் சொன்னாலும், அவளின் ஆழ்மனதில் தனக்கென்று ஓரிடம் உண்டென்று உணர்ந்தான் அரவிந்தன். மறுநாள் காலை பதினோரு மணியளவில் கீர்த்தியிடமிருந்து அழைப்பு வருவதை கவனிக்காமல், “ஹலோ” என்றான்.

அவன் குரல்கேட்டதுதான் தாமதம், “என்ன செய்வீங்களோ எனக்கு தெரியாது. இப்போவே வந்து எங்களைக் கூட்டிட்டு போங்க” அவனின் பதிலுக்கு காத்திருக்காமல் போனை வைத்துவிட என்னவென்று புரியாமல் குழம்பினான்.

அவன் மீண்டும் அழைக்க அவள் போனை எடுக்கவில்லை என்றவுடன் மனதில் பயம் அதிகரித்திட உடனே நிர்மலாவிடன் விஷயத்தை கூறிவிட்டு சேலம் கிளம்பிச் சென்றான் அரவிந்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!