Thanimai – 17

3e926b8b6e7dc7e45d4d1cff0dc6157f-c8813ed0

Thanimai – 17

அர்ஜூனின் வருகை

கல்லூரி சேர்ந்த கீர்த்தனா அடிக்கடி வீட்டிற்கு செல்ல முடியாது என்ற காரணத்தினால் பக்கத்தில் இருந்த லேடிஸ் ஹாஸ்டலில் தங்கிக் கொள்ள மகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்துவிட்டு ஊருக்கு சென்றார் ராமலிங்கம்.

மீரா, மௌனிகா, ஜெயராம், ரோஹித் நால்வரோடும் இணைந்து ஆர்ப்பாட்டமாக நகர்ந்தது. கீர்த்தி வகுப்பறையில் பாடத்தை கவனித்து நல்ல பெயர் எடுத்தாலும் சேட்டை செய்வதில் வானரங்களை மிஞ்சிவிடுவாள்.  கல்லூரி ஆண்டுவிழா போன்ற நாட்களில் சுவரேறி குதித்து படத்திற்கு போவாள்.  

அவளின் செயலைக் கண்டு மற்ற தோழிகள் கேள்வி கேட்டால், “நமக்கு இன்னும் கிழவி வயசு ஆகல. காலேஜ் லைப் ஒரு முறை போனால் கிடைக்காது. இந்த நினைவுகள் மட்டும்தான் காலம் முழுக்ககூட வரும்” மனதின் அடியாழத்தில் இருந்து உணர்ந்து சொல்வாள்.

“எங்க வீட்டில் தெரிஞ்சா அப்பா அவ்வளவுதான் கொன்னே போட்டு விடுவார் கீர்த்தி” மீரா ஆரம்பத்தில் பயத்துடன் கூறினாள்.

“இங்கே பாரு நம்ம  பெற்றவர்களுக்கு தேவை நல்ல மார்க். காலேஜ்ல பொண்ணு ரொம்ப நல்லா படிக்கிறா என்ற பெயர். நம்ம கவனம் படிப்பில் இருக்கு என்றால் படம் பார்ப்பதில் தவறு என்ன இருக்கு” என்று தோழிகளின் வாயை அடைத்து விடுவாள்.

ஹாஸ்டலில் பத்து மணிக்கு மேல் லைட் எரிக்கக் கூடாதென்ற சட்டம் விதித்தால் விடிய விடிய படிக்கிறேன் என்ற பெயரில் பாட்டு கேட்டு வார்டனின் கோபத்தை அதிகரிக்க வைப்பாள்.

எல்லோரும் சீக்கிரம் எழுந்து குளித்து கிளம்பினால் இவள் மட்டும் ரொம்ப லேட்டாக எழுந்து கல்லூரிக்கு தாமதமாக செல்வாள். இவளின் நடவடிக்கை ஒவ்வொன்றும் ஹாஸ்டல் வார்டனை கடுப்பாக்கியது என்னவோ மறுக்கமுடியாத உண்மை.

காதல் மற்றும் திருமணம் இரண்டையும் நினைத்து மனதை அலைபாய விடாமல், படிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்திய கீர்த்திக்கு பாட்டு கேட்பது, படம் பார்ப்பது, சரித்திர நாவல்களை வாசிப்பது பிடித்தமான பொழுதுபோக்கு.

தன் எதிர்காலத்திற்காக உழைக்கும் பெற்றோருக்கு எந்தவிதமான அவபெயரையும் சம்பாரித்து தரக் கூடாதென்ற கொள்கையில் உறுதியாக இருந்தாள்.

பிடிக்காத பாடங்களையும் விருப்பத்துடன் படிக்கும் அவளை கண்டால், “எனக்கு பாடமே மண்டைக்கு ஏறல. நீ மட்டும் எப்படித்தான் படிக்கிறீயோ? நான் கேட்டா மட்டும் லூசு மாதிரி ஏதாவது உளறுவ..” என்று ரோஹித் அவனிடம் சண்டைக்கு வருவான்.

அவன் திட்டுவதைக் காதிலேயே வாங்காமல் தனக்கு பிடித்த பாடலின் வரிகளை ஹம்மிங் செய்தபடி புத்தகத்தின் மீது பார்வையைப் பதித்திருக்கும் அவளைக் கொலைவெறியுடன் நோக்கினாள் மௌனிகா.

சட்டென்று அவளிடமிருந்து புக்கை பிடிங்கிய பிறகும், “காதல் என்பது கடவுள் அல்லவா அது கனவு தேசத்தின் கோவில் அல்லவா.. காதல் என்றால் பொய்கள் அல்லவா.. அது இதயம் வாங்கும் வலிகள் அல்லவா..” என்று பாடலை முணுமுணுக்க,

“ஏய் அப்போ நீ படிக்கலையா?” என்று மீரா கேட்க, “பிடிக்காத பாடம்தான். அதுக்காக ஃபெயில் ஆக முடியுமா? அதுதான் பாட்டு கேட்டுட்டே படிக்கிறேன்” என்று உதட்டை பிதுக்கி தோளை குலுக்கிவிட்டு தன் புத்தகத்தை விரித்து படிக்க தொடங்கினாள்.

அவளின் உக்திகள் சில நண்பர்களுக்கு புரியாமல் இருந்தது. ஆனால் தேர்வறையில் அதே கேள்வி வந்தால் பாடலை நினைவு வைத்து பதில் எழுதுவிட்டு வந்துவிடுவாள். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக தோன்றிய விஷயம் போக போக நண்பர்களுக்கும் புரிய தொடங்கியது. 

கீர்த்தனாவிற்கு கேரம், செஸ் என்ற விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். கல்லூரியில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு முதல் பரிசை வென்றும் இருக்கிறாள். அத்தோடு நில்லாமல் தன் நண்பர்களிடம் இருக்கும் தனித்தன்மையைக் கண்டறிந்து அவர்களை அதில் பயணிக்க சொல்வாள்.

கல்லூரி காலம் நம் திறமையை வெளிபடுத்த அமைந்த மிகபெரிய களம். சரியான வழிகாட்டுதலோடு சரியான பாதையைத் தெரிந்தெடுத்து அதில் முன்னேறினால் கட்டாயமாக நல்லதொரு எதிர்காலத்தை அமைத்து கொள்ளள முடியும் என்று முழுமனதாக நம்பினாள். அந்த நம்பிக்கையை இழக்க வைக்க மீண்டும் அவளின் வாழ்க்கையில் குறுக்கிட்டான் அவன். 

முதல் செமஸ்டர் முடிந்தபிறகு அசைன்மென்ட் எழுதவும், ப்ராஜெக்ட் வொர்க் முடிக்க தேவையானவற்றை பிரவுசிங் செய்து எடுக்க வேண்டுமென்று கல்லூரிக்கு அருகில் இருக்கும் பிரவுசிங் சென்டருக்கு சென்றாள் கீர்த்தனா.

அவள் உள்ளே நுழைந்ததும், “ஹலோ கீர்த்தி மேடம் எப்படி இருக்கீங்க?” என்றவனின் குரல் வெகு பரிட்சயமான குரலாக இருக்கவே சட்டென்று நிமிர்ந்து அவனின் முகம் நோக்கிய கீர்த்திக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அது அவள் வழக்கமாக வந்து செல்லும் கம்பியூட்டர் சென்டர் என்பதால் அங்கிருக்கும் அனைவரும் அவளுக்கு தெரியும். அந்த இடத்தில் திடீரென்று அவனை கண்ட கீர்த்தி, “நீங்க எப்படி இங்க?” குழப்பத்துடன் அவனை ஏறிட்டாள்.

“நான் நேற்றுதான் இங்கே வேலைக்கு சேர்ந்தேன்” வெகு இயல்பாக சொல்லிவிட்டு தொலைக் குலுக்கினான்.

அந்த அலட்சியத்தைக் கண்டவுடன், ‘இவன் எங்கே வேலை செய்தால் எனக்கென்ன’ என்ற சிந்தனையோடு தான் வந்த காரியத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பியவளை வழிமறித்து, “என்மேல்  இன்னும் கோபம் தீரல போல” என்றான் சன்ன சிரிப்புடன்.

அவனை நிமிர்ந்து பார்த்த கீர்த்தி, “முதல் கோணல் முற்றிலும் கோணல். அதனால் நீங்க இனிமேல் என்னோட பேச முயற்சி பண்ணாதீங்க ஸார். அதுதான் எல்லோருக்கும் நல்லது” அவனின் பதிலை எதிர்பார்க்காமல் விலகி நடந்தாள்.

‘இந்த அர்ஜூனுகே கீதை உபதேசமா? அதுக்கு நீ கண்ணன் இல்லடி செல்லம்’ என்று தனக்குள் நினைத்தவனின் கழுகு பார்வை அவளையே சுற்றி வந்தது.

எந்தவிதமான பின்னணியும் இன்றி தன் திறமையை மூலதனமாக வைத்து முன்னேற நினைப்பவனுக்கு பெண்கள் என்றாலே பிரியம் அதிகம். அதற்காக அனைவரிடமும் தவறு செய்யும் ரகம் இல்லையென்ற போதும் கீர்த்தியின் மீது இனம்புரியா ஈர்ப்பு தோன்றி மறைவதை அவனால் தடுக்க முடியவில்லை.

ஆரம்பத்தில் அவனிடம் சற்று கோபமாக பேசிய கீர்த்தினா பிறகு அவனிடம் இருக்கும்  எதார்த்தைதை உணர்ந்து சாதாரணமாக பேச தொடங்கினாள். வெற்றிகரமாக முதல் வருட படிப்பை முடித்து இரண்டாம் வருடத்தில் அடியெடித்து வைத்தாள்.

ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி கல்லூரியில் நடந்த கட்டுரை போட்டியில் கலந்துகொண்ட மௌனிகா கலெக்டர் கையில் முதல் பரிசு வாங்கியதை கொண்டாட நண்பர்களோடு வெளியே சென்று திரும்பினாள்.

அந்த வார இறுதியில் முக்கியமான செமினாருக்கு தேவையானவற்றை பிரவுசிங் செய்ய நினைத்து மாலை ஆறு மணிபோல கம்ப்பூட்டர் சென்டருக்கு செல்ல வேண்டும் என்று கிளம்பினாள் கீர்த்தி.

“ரொம்ப நேரம் அங்கிருக்காதே. நம்ம ஹாஸ்டல் அமைந்திருக்கும் இடம் கொஞ்சம் காடு நிறைந்த பகுதி. இருட்டிட்டா நடந்து வரும் பாதையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் முடிந்தவரை வேலையை சீக்கிரம் முடிச்சிட்டு வரணும்” என்ற எச்சரிக்கையுடன் அவளை அனுப்பி வைத்தார் வார்டன்.

அவள் வந்த நேரமோ என்னவோ வழக்கத்திற்கும் மாறாக கூட்டம் அதிகமாக இருந்தது. கீர்த்தனா பதட்டத்துடன் வெளியே நிற்பதைக் கண்டு, “சர்வர் பிராப்ளம்” என்றான். அவளுக்கு அந்த செமினார் முக்கியம் என்பதால் வார்டனின் எச்சரிக்கையை மறந்து காத்திருக்க தொடங்கினாள்.

இறுதியில் இரவு ஒன்பது மணியளவில் அவளுக்கு சிஸ்டம் கிடைக்கவே வேக வேகமாக தனக்கு தேவையானவற்றை பிரிண்ட் அவுட் போட்டு எடுத்துகொண்டு கிளம்ப நினைத்தாள்.

கடையை மூடும் நேரம் என்பதால், “இதெல்லாம் செல்லில் பண்ணலாமே கீர்த்தி” என்ற கேள்வியுடன் பணத்தை வாங்கி கல்லாவில் போட்டான் அர்ஜூன்.

“ம்ஹும் பண்ணலாம் தான். ஆனால் அதுக்கும் பிரிண்ட் அவுட் எடுக்க இங்கேதானே வரவேண்டி இருக்கு. சில நேரம் செல் வேற ஹேங் ஆகிடுது. அதுதான்..” என்று காரணத்தை கூறி நிமிர்ந்தவள் அப்போதுதான் மணியைக் கவனித்தாள்.

சட்டென்று முகம் வேர்த்திட, “ஐயோ வார்டன் இப்போ போனால் திட்டுவாங்களே.. சரி நான் கிளம்பறேன்” என்றவளை தடுத்து,

“எதுக்கு இவ்வளவு பதட்டம். நானும் கடையை மூடிட்டு அந்த வழியாகத்தான் போவேன். அதனால் ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணு” என்றவன் அவளின் பதட்டத்தை குறைக்க தண்ணீரை எடுத்து நீட்டினான்.

வெகு இயல்பாக அதை வாங்கி குடித்துவிட்டு, “இல்ல உங்களோட போனால் இன்னும் பிரச்சனை பெருசாகும். வார்டனுக்கு ஒழுக்கம் ரொம்ப முக்கியம். நான் என்ன சேட்டை பண்ணினாலும் என் மேல் ரீமார்க் வரும் அளவிற்கு நடந்துக்காத காரணத்தால் மேடம் அமைதியாக இருக்காங்க” என்றவள் அங்கிருந்து கிளம்புவதில் குறியாக இருந்தாள்.

ஆனால் அவளைத் தடுத்த அர்ஜூன், “உன்னை உங்க ஹாஸ்டல் கேட்டிற்கு முன்னாடி இறக்கி விடுறேன். என்னோடு பயப்படாமல் வா..” கடையை மூடிவிட்டு பைக்கை ஸ்டார்ட் செய்து அவளை அமர சொன்னான்.

முதலில் அவனோடு செல்ல தயங்கியவளுக்கு, அந்த தண்ணீரைக் குடித்ததில் இருந்து தலை லேசாக சுற்றுவதுபோல இருக்கவே, ‘வேற வழியில்ல. இன்னைக்கு இவரோடு போய் தான் ஆகணும்..’ நினைத்தபடியே அவனின் பின்னோடு அமர்ந்தாள்.

சற்றுதூரம் செல்லும் வரை நிதானத்தில் இருந்தவள் சட்டென்று மயங்கினாள். அவள் மீண்டும் கண்விழிக்கும் போது ஹாஸ்டலில் இருப்பதை உணர்ந்தவளுக்கு, ‘நான் எப்படி இங்கே வந்தேன்’ என்ற கேள்விக்கு அவளிடம் விடையில்லை.

கடைசியாக அர்ஜூனின் பைக்கில் ஏறியது மட்டும் நினைவிருந்தது. அதன்பிறகு நிகழ்ந்தது என்னவென்று புரியாமல் மனம் குழப்பத்தில் ஆழ்ந்தது.

“ஏய் கீர்த்தி பொழுது இருட்டுவதற்குள் வர சொன்னால் அவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு இருந்த?” என்ற அதட்டலில் வார்டனின் பக்கம் பார்வையைத் திருப்பினாள்.

“இல்ல மேடம். நான்..” என்று தொடங்கியவளை கையமர்த்திவிட்டு,

“இரவு நேரத்தில் ரோட்டில் மயங்கி கிடப்பதாக ஒரு தள்ளுவண்டி நடத்தும் கடைக்காரர் போன் பண்ணி சொன்னாரு. எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?” என்று கோபத்துடன் எரிந்து விழுந்தவரை குழப்பத்துடன்  ஏறிட்டாள்.

அவளை பொறுத்தவரை அர்ஜூனுடன் பைக்கில் கிளம்பியது மட்டும் நினைவிருந்தது. ஆனால் வழியில் என்ன நடந்ததென்று அவளுக்கே தெரியவில்லை.

“நான் வந்து பார்க்கும்போது..” என்றவர் அவளின் முகம் தெளிவின்றி இருப்பதை கண்டு துணுக்குற்றார்.

அதிலிருந்தே அவளுக்கு ஏதோ நடந்திருப்பதை உணர்ந்தவர், “நேரா நேரத்திற்கு நல்லா சாப்பிடுங்க என்று சொன்னால் கேட்டால் தானே..” என்று பேச்சை மாற்றி அவளைப் படுக்க வைத்துவிட்டு வெளியே சென்றார்.

சிறிது நேரத்தில் திரும்பி வந்து, “கீர்த்தி உனக்கு நடந்த ஏதாவது நினைவிருந்தால் சொல்லு” என்று கேட்க மறுப்பாக தலையசைத்துவிட்டு படுத்தவளுக்கு உடல் முழுவதும் வலி வின் வின் என்றது.

மனம் வெகுவாக குழம்பி இருந்ததால் கீழே விழுந்ததால் அப்படி இருக்கிறதென்ற முடிவிற்கு வந்தாள் கீர்த்தி.

மறுநாள் காலை டிஸ்சார்ஜ் செய்து அவளை ஹாஸ்டலுக்கு அழைத்து வந்தார். அதன்பிறகு கல்லூரி நாட்கள் தொடங்க அர்ஜூனை பற்றிய குழப்பம் நீங்காமல் படிப்பில் அவளின் கவனம் குறைய தொடங்கியது.

அத்துடன் செமினாரை நல்லபடியாக முடித்துவிட்டு அன்று மாலையே கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்ற கீர்த்தியை வரவேற்றார் கடையின் ஓனர். அங்கே அர்ஜூனை காணாமல், “ஸார் இங்கே வேலை செய்தவர் எங்கே?”என்று கேட்டாள்.

“அவனுக்கு வேலை பிடிக்கலன்னு கடை சாவியை கொடுத்துட்டு போயிட்டான்” என்று கூற அவளின் சந்தேகம் வலுப்பெற்றது.

‘திடீரென்று இப்படியொரு முடிவெடுக்க என்ன காரணம்?’ என்ற கேள்வி அவளின் மனத்தைக் குடைய, “அவர் எப்போ அண்ணா வேலையை விட்டார்” என்று விசாரித்தாள்.

“இப்போ இரண்டு வாரம் இருக்கும்மா” என்றார் ஓனர்

“அவருக்கு எந்த ஊர்ன்னு தெரியுமா அண்ணா?” என்று விசாரிக்க,

“ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு ஊரை சொல்றான். எதை நம்புறது என்ற குழப்பத்தில் வேலையைவிட்டு நிறுத்தலாம் என்று நினைக்கும் வேலையைவிட்டு போறேன்னு சொல்லி கடை சாவியை கொடுத்துட்டு போயிட்டான்” என்பதோடு பேச்சிற்கு முற்றிபுள்ளி வைத்துவிட்டார்.

அங்கிருந்து வெளியே வந்த கீர்த்தி, ‘ம்ஹும் இவனுக்கு எதுக்கு அவ்வளவு இம்பார்ட்டன்ஸ் கொடுக்கணும். நம்ம படிக்க வந்திருக்கோம். அதை முடிச்சிட்டு கிளம்பலாம்’ என்ற முடிவுடன் படிப்பை தொடர்ந்தாள்.

ஆரம்பத்தில் அடிக்கடி வாந்தி வருவதும் உணவு சாப்பிட முடியாமல் போவதுமாக நாட்கள் நகர்ந்தன. கேண்டீன் சாப்பாடு ஏற்றுக் கொள்ளவில்லை  என்று நினைத்து தன்னைத் தேற்றிக்கொண்டு படிப்பின் மீது கவனத்தை திருப்பிய கீர்த்திக்கு மாதவிலக்கு ஏற்படாமல் போனது.

அதை கவனிக்க நேரமின்றி நாட்கள் விரைந்தோடிச் செல்ல,  உடல் சற்றே குண்டாகி தொப்பை போட தொடங்கியது. ஆரம்பத்தில் உடல்மேலிவுக்கும், தற்போதைய நிலைக்கும் இருக்கும் மாறுதலை முதலில் கவனித்தது மௌனிகா மட்டுமே!

“காலேஜ் சேரும்போது இருந்த கீர்த்திக்கும் இப்போ இருக்கும் கீர்த்திக்கும் அதிக வித்தியாசம் தெரியுது. நல்ல உடல்நிலை தேறியிருக்கு. என்ன பார்க்க கொஞ்சம் அசிங்கமாக இருக்க கீர்த்தி. உடம்பை கொஞ்சம் குறைக்க பாரு” என்று அட்வைஸ் செய்தாள் மௌனி.

அப்போதுதான் தனக்கு மாதவிலக்கு ஏற்பட்டு கிட்டதட்ட ஐந்து மாதங்கள் கடந்துவிட்டதை உணர்ந்த கீர்த்தி, ‘ஏதாவது நோயாக இருக்குமோ?’ என்ற சந்தேகத்துடன் ஹாஸ்டல் வந்து சேர்ந்தாள்.

அதே நேரத்தில் வார்டன் உடல்நிலை சரியில்லாமல் இருக்க, “கீர்த்தி என்னோடு ஹாஸ்பிட்டல் வரை வருகிறாயா?” எனக் கேட்க சரியென்று தலையசைத்தவள் அவருடன் கிளம்பி சென்றாள்.

அங்கே அவருக்கு ட்ரீட்மெண்ட் பார்த்த டாக்டர், “என்ன மேடம் உங்க மகள் கன்சீவாக இருக்காளா? இது எத்தனாவது மாசம்?” எதார்த்தமாக விசாரிக்க அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.

அவள் அதிர்ச்சியுடன் வார்டனை பார்க்க, “இவளை செக் பண்ணுங்க” என்றார்.  அவளிடம் சில கேள்விகளைக் கேட்டு கர்ப்பத்தை உறுதி செய்து கீர்த்தியின் தலையில் இடியை இறக்கினார் அந்த பெண் மருத்துவர்.

ஏற்கனவே மனதளவில் குழப்பத்தில் இருந்த கீர்த்தி வெட்டிய வாழை மரமாக மயங்கி சரிந்து விழுக, அவளைத் தாங்கிப் பிடித்த வார்டன், “இந்த பொண்ணுக்கு கரு உருவாகி எத்தனை மாசம் ஆகிருக்கு டாக்டர்?” என விசாரிக்க, “இது ஆறாவது மாசம்” என்றார் மருத்துவர்.

அதன்பிறகு மயக்கம் தெளிந்து எழுந்தவளுக்கு விஷயத்தை பக்குவமாக கூறிய வார்டன், “அவனோட பேரு மட்டும் வச்சுத் தேட முடியாது கீர்த்தி. இந்த உண்மை வெளியே வந்தால் உனக்கும் உன் குடும்பத்திற்கு கெட்ட பெயர். அத்தோடு படிப்பும் கெடும். இப்போ இருக்கிற நிலையில் கருவை கலைத்தால் உன் உயிருக்கு ஆபத்து. அதனால் முடிந்தவரை பல்லைக் கடித்து இந்த செமஸ்டர் எழுது மா” என்று சொல்ல வேறு வழியில்லாமல் கண்ணீருடன் தலையாட்டியவளை இழுத்து அணைத்துக் கொண்டார்.

அவரின் சொல்படி கேட்ட கீர்த்தி வெற்றிகரமாக தன் தேர்வுகளை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதாக சொல்லிவிட்டு வார்டனுடன் விழுப்புரம் சென்றாள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!