Thanimai – 19

images - 2021-05-01T124733.940-e7a9f57e

Thanimai – 19

வாழ்வில் வந்தது வசந்தம்

இதற்கிடையே விக்னேஷ் வீட்டில் தன் அத்தையுடன் இணைந்து சமையலில் ஈடுப்பட்டிருந்த மௌனிகா தீவிரமான சிந்தனையில் இருப்பதைக் கவனித்தார் நிர்மலா.

“காலையில் இருந்து பார்க்கிறேன். ஏதோ யோசனையிலேயே இருக்கிற.. ஆமா என்ன விஷயம்?” மருமகளிடம் விசாரித்தார்.

அவரின் குரல்கேட்டு தன்னிலைக்கு மீண்டவள், “கீர்த்தி ஊருக்குப் போன இரண்டே நாளில் திரும்பி வந்ததைப் பற்றி யோசிச்சிட்டு இருந்தேன் அத்த..” என்று சொல்ல உதட்டில் புன்னகை அரும்பிட மருமகளை ஏறிட்டார்

“ஆயிரம் தான் பொண்ணுங்களுக்கு பிறந்த வீடு இருந்தாலும், கல்யாணம் ஆகிட்டா அவ மனசு முழுக்க புகுந்த வீட்டில் தான் இருக்கும். கீர்த்தனா மட்டும் அதுக்கென்ன விதிவிலக்கா” என்றார்.

மாமியாரின் பேச்சின் சாராம்சம் விளங்க, “ம்ஹும் அதென்னவோ உண்மைதான் அத்தை. அரவிந்தன் அண்ணாவே பிறந்த வீட்டுக்கு அனுப்பி வச்சும் இவ உடனே திரும்பி வந்தது எனக்கு சந்தோசம்தான். ஆனால் இத்தனை நாளாக இருவரிடமும் இல்லாத நெருக்கும் இப்போ வந்திருக்கிற மாதிரி தோணுது” என்றவள் காலையில் நடந்ததை சொல்ல பொறுமையாக கேட்டார் நிர்மலா.

கடைசியில், “சின்ன பிரிவு ஆழமான அன்புக்கான அஸ்திவாரம். இத்தனை நாளாக உணராத அன்பை இந்த பிரிவு அவர்களுக்கு புரிய வச்சிருக்கலாம். அவங்க சந்தோசமாக இருக்கட்டும் மௌனி. அரவிந்தன் எவ்வளவு கஷ்டம் அனுபவிச்சவன் தெரியுமா?” என்றவர் சிந்தனை எங்கோ சென்று திரும்பியது.

அவள் மறுபேச்சின்றி வேலையைத் தொடர, காற்றாட சிறிதுநேரம் அமரலாம் என்று வெளி வாசலுக்கு வந்தார். அரவிந்தன் ஏதோ சொல்ல, கீர்த்தனாவும், உதயாவும் கிளுக்கேன்று சிரித்தபடி வருவதைக் கண்டு நிர்மலாவின் உள்ளம் நிறைந்து போனது.

வீட்டின் வாசலில் பைக்கை நிறுத்திய அரவிந்தனிடம், “என்னப்பா வெளியே போயிட்டு வரீங்களா?” என விசாரித்தார்.

“ஆமாம்மா” புன்னகை மாறாத முகத்துடன் பதில் கொடுத்துவிட்டு மகளை கீழே இறக்கிவிட்டவுடன் நிர்மலாவை நோக்கி ஓடினாள். அவரிடம் கோவிலுக்கு சென்றதில் தொடங்கி நடந்தததை விவரிக்க, “இந்தாங்கம்மா பிரசாதம்” என்றாள் கீர்த்தி புன்னகையுடன்.

திருநீரை எடுத்து நெற்றியில் வைத்தவர், “மௌனிக்கு குங்குமத்தை கொண்டுபோய் கொடுமா” என்றதும் சரியென தலையசைத்துவிட்டு வீட்டிற்குள் செல்ல அவளோ களைப்பாக சோபாவில் அமர்ந்திருந்தாள்.

“என்னடி வீட்டில் வேலை அதிகமா?” என பேசியபடியே கீர்த்தி அமர்ந்துவிடவே கார்ட்டூன் பார்ப்பதாக சொல்லிவிட்டு சிட்டாக பறந்தாள் சின்னவள் உதயா.

மூவரின் முகத்திலும் மகிழ்ச்சியைக் கவனித்த நிர்மலா, “உன்னை இப்படி பார்ப்பதற்கு மனசுக்கு நிறைவாக இருக்குப்பா” என்றவருக்கு அவன் புன்னகையைப் பதிலாக கொடுத்தான்.

மதியம் உணவை முடித்துவிட்டு மகளோடு உறங்கிய கணவனை இமைக்காமல் நோக்கிய கீர்த்தி, ‘என்னை எவ்வளவு தூரம் புரிஞ்சி வச்சிருக்காரு. இவரோட இடத்தில் வேற யாரும் இருந்திருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும்?’ என யோசிக்கும்போது பிரம்மிப்பாக இருந்தது.

அந்த நேரத்தில், ‘உன்னை உனக்காக நேசிக்கிறவன் கட்டாயம் உன் பக்க நியாயத்தை புரிஞ்சிக்குவான்’ என வார்டன் அம்மா சொன்னது காதில் ரீங்காரமிட்டது. அவர் சொன்ன வார்த்தைகள் எவ்வளவு உண்மையென்று இப்போது புரிந்து கொண்டாள்.

தன் பெற்றோர் தன்னை புரிந்து கொள்ளவில்லையே என்ற கவலை ஒருப்பக்கம் இருக்கவே செய்தது. அதற்காக வருத்தபட்டு நடக்கபோவது ஒன்றுமில்லை என்ற நிதர்சனம் உணர்ந்து மனதை வேறுபக்கம் திசை திருப்பினாள்.

காலையில் கணவன் தனக்காக சமைத்தது நினைவு வர, ‘இனிமேல் அவரை சமையலறை பக்கம் விடக்கூடாது’ என்ற உறுதிமொழி எடுத்தவளுக்கு உறக்கம் வர அவளும் சென்று படுக்கையில் படுத்து கண்ணயர்ந்தாள்.

அதன்பிறகு வந்த நாட்கள் ரெக்கைகட்டி பறந்தது.

அரவிந்தன் – கீர்த்தனா இருவரும் ஒவ்வொரு நொடியை ரசிக்க தொடங்கியிருந்தனர். அந்த நெருக்கம் கணவன் – மனைவிக்கும் இடையே உண்டான நெருக்கமில்லை. அவர்கள் இருவரும் மனத்தால் ஒருவரையொருவர் புரிந்து வைத்திருந்தாலும் ஏதோவொரு விஷயம் அவர்களை உடலளவில் இணையவிடாமல் தடுத்தது.

அவளின் விருப்பமின்றி முதலடி எடுத்து வைக்கக் கூடாதென்று அவன் பொறுமையாக இருந்தான். தன் நாணத்தை உடைக்க முடியாமல் பெண்ணவள் தயங்கி மெளனமாக இருந்தாள். பூனைக்கு மணியை யார் கட்டுவதென்று இருவரும் சிந்தனையோடு நாட்களைக் கடத்தினர்.

அன்று அரசு விடுமுறை நாள் என்ற காரணத்தினால் வீட்டில் இருந்தான் விக்னேஷ். காலையில் வேலைகளை முடித்துவிட்டு ஓய்வாக அமர்ந்தவளிடம், “உனக்கு ஆசையிருந்தா சொல்லுடி”  மனையாளிடம் விசாரித்தான்.

அவனை மார்க்கமாக பார்த்தவள், “என்ன திடீரென்று கேட்கிறீங்க?” என்றாள் சிந்தனையுடன்.

“இல்ல இந்தமாதிரி நேரத்தில் பெண்களுக்கு ஆசையிருந்தால் நிறைவேற்றி வைக்கணும்னு கேள்விபட்டேன்” என்று இழுத்த கணவனை ஏற இறங்க பார்த்தாள்.

“எனக்கு மருதாணி வைக்க ஆசையாக இருக்கு” என்றாள்.

“இதெல்லாம் ஒரு ஆசையா?” கிண்டலோடு கேட்ட கணவனை முறைக்க கப்பென்று வாயை மூடிக் கொண்டான்.

அவள் ஆசை என்று சொன்னபிறகு கேலி செய்வது தவறென்று புரிய, “சரி நான் போய் மருதாணி பறிச்சிட்டு வரேன்” சட்டையை எடுத்து போட்டுக்கொண்டு வெளியே கிளம்பிய மகனை வழி மறிந்தார் நிர்மலா,

“எங்கே இவ்வளவு வேகமாக போறடா” என்ற தாயிடம் விஷயத்தை கூற,

“அரவிந்தன் வீட்டில் செடியிருக்கு போய் பறிச்சிட்டு வா” என்றார் சிரிப்புடன்.

விக்னேஷ் கீர்த்தியிடம் சொல்லிவிட்டு மருதாணியைப் பறித்து சென்றவன் இரவு உணவை முடித்துவிட்டு மனைவிக்கு அவன் கைகளால் மருதாணியை வைத்துவிட்டான். தான் கேட்டவுடன் மெனக்கெட்டு செய்யும் கணவனை காதலோடு பார்த்தபடி மௌனிகா அமைதியாக இருந்தாள்.

இதை பார்த்த உதயா, “அத்த எனக்கும் மருதாணி வச்சிவிடுங்க” என்று குதிக்க தொடங்க,

“உனக்கு இல்லாமலா.. நீ வாடி என் ராஜாத்தி” என்று அவளைத் தூக்கி மடியில் அமர வைத்து சின்ன கைக்கு அழகாக மருதாணி வைத்தார் நிர்மலா.

எதையோ நினைத்து சிரித்தவரை மற்றவர்கள் கேள்வியாக நோக்கிட, “மருதாணி நல்லா சிவப்பதை வைத்து கணவன் தன் மீது வச்சிருக்கும் அன்பை எடை போடலாம்னு எங்க அத்தை சொல்வாங்க” என்ற நிர்மலா பழைய நினைவுடன் கூற,

“மருதாணி சிவக்காமல் இருக்கட்டும் அத்தை உங்க மகனுக்கு இருக்கு கச்சேரி” என்றாள் குறுஞ்சிரிப்புடன்.

“அம்மா இதெல்லாம் இப்போ எதுக்கு சொல்றீங்க.. இதனால் உங்க மருமகளிடம் மாட்டிட்டு முழிக்க போவது நான்தான்” விக்னேஷ் ஒருபக்கம் புலம்ப இதையெல்லாம் கேட்டு மற்றவர்கள் சிரித்தனர்.

“ஆமா அரவிந்தன் எங்கே?” – நிர்மலா.

“உள்ள ஏதோ வேலையாய் இருந்தாரு அம்மா” – கீர்த்தனா.

சிறிதுநேரத்தில் தூங்கி விழும் மகளைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு உள்ளே வந்தவளைக் கண்டவுடன், “உதயா தூங்கிட்டாளா?” தன்னவளிடம் இருந்து மகளை வாங்கி படுக்கையில் படுக்க வைத்தான்.

அவன் வேலைகளை முடித்துவிட்டு படுக்கைக்கு செல்ல அங்கே உறங்காமல் அவனுக்காக காத்திருந்தவளிடம், “என்னாச்சு தூங்காமல் உட்கார்ந்திருக்கிற” மனைவியின் அருகே அமரும்போதுதான் அவளின் கையில் கிண்ணம் வைத்திருப்பதைக் கவனித்தான்.

“ஆமா சாப்பிட்ட பிறகு சட்னி எதுக்கு எடுத்துட்டு வந்திருக்கிற?” என்று விசாரித்தான்.

அவனிடம் கையிலிருந்த மருதாணியைக் காட்டி, “நிர்மலா அம்மா இன்னைக்கு ஒன்னு சொன்னாங்க” என்று தொடங்கி நடந்ததை தகுந்த ஏற்றயிறக்கத்துடன் கூறியவள், “இன்னைக்கு உங்க கை சிவப்பதை வைத்து நீங்க கீர்த்தி மீது எவ்வளவு அன்பு வச்சிருக்கீங்கன்னு டெஸ்ட் பண்ண போறேன்” குறும்புடன் கண்சிமிட்டி சிரித்தவளை மார்க்கமாக பார்த்தான்.

“மருதாணி சிவக்கும் பொருள். சோ யார் வைத்தாலும் சிவக்கும்” என்ற கணவனின் கையைப்பிடித்து இழுத்து அரைத்த மருதாணியை வலுக்கட்டாயமாக வைத்தாள்.

அவளது செய்கையை ரசித்தவனின் பார்வை மெல்ல கணவனுக்கு உரிய பார்வையாக மாற்றம் பெற்றது. அவனின் இடது கையில் மருதாணி வைத்துக் கொண்டிருந்த கீர்த்தனாவை பார்வையால் வருடினான்.

அவள் மருதாணி வைத்து முடியும் வரை பொறுமையாக இருந்தவனிடம், “ம்ம் வச்சாச்சு.. விடியும் வரை கையை அசைக்காமல் வச்சிருங்க” என்றவளின் படுக்கையில் உறங்கிக்கொண்டு இருந்த மகளின் மீது படிந்து மீண்டது.

வலது கையால் தன்னவளின் இடது கன்னத்தை வருடி,“என் அன்பை டெஸ்ட் பண்ண மருதாணி வேணுமா? என்னிடம் கேட்டிருந்தால் நான் செயலில் காட்டியிருப்பேனே?” கணவனின் குரலில் இருந்த மாறுதலைக் கண்டு நிமிர்ந்தவள் மூச்சுவிட மறந்தாள்.

அவனது பார்வையில் வழிந்த காதலுடன் தாபம் அவளை உறைய வைத்தது.  அவளின் கையில் இருந்த மருதாணி கிண்ணத்தை எடுத்து மேஜை மீது வைத்தவன் வலது கையால் அவளை அருகே இழுத்தான்.

அவளது மனம் படபடவென்று அடித்துக்கொள்ள, “மருதாணி..” என்ற மனையாளின் நெற்றியில் இதழ் ஊர்வலத்தை தொடங்கியவன், கண்கள், கன்னம் என இறங்கி வர அவளின் இமைகள் தானாக மூடிக் கொண்டது. இறுதியில் அவளின் இதழில் வந்து இளைப்பாறினான். இதுவரை அவள் உணராத புது ஸ்பரிசத்தில் பாவை அவளின் கன்னங்கள் இரண்டும் சிவந்தது.

அவளைவிட்டு விலகிய பிறகும் மயக்கத்துடன் அமர்ந்திருந்தவளின் காதோரம், “இன்னைக்கு நீ ஆசையாக வைத்த மருதாணியை கலைக்க மனசில்ல.. என் அன்பை டெஸ்ட் பண்ண மருதாணி எடுத்து வர இல்ல.. உன்னை நாளைக்கு கவனிச்சுக்கிறேன்” மீசை முடிகளின் உராய்வோடு அவன் கூறிய செய்தியால் அவளின் உடல் சிலிர்த்து அடங்கியது.

உதயாவை தோள்மீது போட்டுக்கொண்டு மனைவியை மறுகையால் அணைத்தபடி உறங்கினான். மறுநாள் காலைக் கண்விழித்ததும் உதயா கையைக் கழுவிவிட்டு வந்து, “அப்பா என் கை சிவந்திருக்கா?” என்று கேட்டாள்.

சோபாவில் அமர்ந்திருந்த அரவிந்தன், “ஆமா செல்லம்” என்று மகளைத் தூக்கி மடியில் அமர வைக்க அவனும் மருதாணி வைத்திருப்பதை ஆச்சரியத்துடன் நோக்கினாள் சின்னவள்.

“அப்பா உங்க கை என்னைவிட ரொம்ப சூப்பரா சிவந்திருக்கு” என்று சொல்லும்போது உதயாவிற்கு பால் எடுத்துக்கொண்டு வெளியே வந்த மனையாளை கண்டவுடன் வழக்கமான குறும்பு தலை தூக்கியது.

“அன்பை டெஸ்ட் பண்ண மருதாணி வைப்பாங்களாம். அப்படி பார்த்தால் உதயாகுட்டி கைதான் இவ்வளவு அருமையா மருதாணி சிவந்திருக்கு. ஆமா நீ யார் மேல அன்பு வச்சிருக்க..” என்ற கணவனைப் பொய்யாக முறைத்தாள் கீர்த்தனா.

தாய் கொண்டு வந்து தந்த பாலை அருந்திய மகளோ, “எனக்கு அப்பாவைத் தான் ரொம்ப பிடிக்கும். அதுதான் பாப்பா கை சிவந்திருக்கு” என்றவள் பாட்டியிடம் காட்டிவிட்டு வருவதாக எழுந்து ஓடிய மகளின் வாலைப் பிடித்துகொண்டு செல்ல நினைத்த மனையாளைத் தடுத்தான்.

“எங்கே ஓடுற.. நைட் மருதாணி வைக்கும்போது அன்பை டெஸ்ட் பண்றேன்னு சொன்ன இல்ல.. இங்கே பாரு என் கை மருதாணி எப்படி சிவந்திருக்கு” என்ற கணவனின் கையை பார்த்தவள் உதட்டை சுளித்தாள்.

பிறகு, “மருதாணி சிவக்கும் பொருள் யார் வைத்தாலும் சிவக்கும்” என்று சொல்லி நழுவ பார்த்தவளை இறுக்கியணைத்த அரவிந்தன் காதோடு கிசுகிசுக்க, “ஐயோ நீங்க ரொம்ப மோசம்” அவளின் முகம் வெக்கத்தில் சிவந்தது.

அன்றைய பொழுது ஓடி மறைய இரவு வெகுவிரைவில் தூக்கிய மகள் கீழே விழாமல் இருக்க இரு புறமும் தலையணை வைத்துவிட்டு நிமிர கையில் பாலுடன் வந்த மனைவியை இரு கரங்களில் ஏந்திக்கொண்டு பக்கத்து அறைக்கு சென்றான்.

“உதயாவைத் தனியாக படுக்க வச்சிட்டு வரீங்க” என்று பதறினாள்.

“ம்ஹும் விடியும் வரை உதயா அங்கே தூங்கட்டும், நம்ம இங்கே தூங்கலாம்” இருபொருள்பட கூறியவன் குனிந்து படுக்கையில் அவளை படுக்க வைத்தவன் கதவை தாழிட்டுவிட்டு வந்தான்.

கணவனைக் கண்டவுடன் நாணத்துடன் திரும்பிப் படுத்தவளின் மீது படர்ந்த அரவிந்தனின் கரங்கள் மெல்ல அவளின் மேனியில் பயணத்தைத் தொடங்கியது. அவளை முத்தத்தால் அர்ச்சித்து மெல்ல தடைகளை விலகி பூவிற்குள் தேனைத் திருடும் வண்டாக மாறினான்.

அவனின் கரங்களில் கட்டுண்ட கிடந்தவளின் மனம் அவனின் ஆளுகைக்கு அடங்கி கிடந்தது. அவளை பெண்ணாக உணர வைத்தவனின் மென்மையில் தன்னையே மறந்தாள்.

தான் தேடி வந்ததை அவளிடம் கொள்ளையடித்துவிட்டு களைப்புடன் விலகிய அரவிந்தன் மென்மையாக அவளின் நெற்றியில் இதழ்பதித்து, “உன்னை கஷ்டப்படுத்திட்டேனா?” என்ற கேள்விக்கு மறுப்பாக தலையசைத்தவள் அவனின் மார்பினில் புதைந்தாள்.

அவனுடன் கூடிய கூடல் இன்பத்தை மட்டும் பரிசாக கொடுக்க, “என்னை எனக்காக நேசிக்கிற உன்னை பிடிச்சிருக்கு ரவி” என்றவளின் குரலில் வெளிபட்ட காதலில் தன்னைத் தொலைத்தான்.

அவன் பதிலை முத்தத்தில் வெளிபடுத்திட விடியும் வரையில் காதல் கதை பேசி காலத்தை கடத்திட அதிகாலைப்பொழுதில் அழகாக புலரும் வேலையில் கண்ணயர்ந்தனர்.

காலை உறக்கம் கலைந்தவுடன், “கீத்தும்மா” என்ற உதயாவின் அழைப்பில் வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தவள் அவசரமாக இழுத்தணைக்க வந்த கணவனின் கைகளில் சிக்காமல் விலகியவள்,

“உதயாவைக்  கவனிக்கணும். பக்கத்தில் யாரும் இல்லன்னா அழுவா” என்றவள் உடையணிந்து வெளியே செல்வதற்குள் அழுகத் தொடங்கினாள் மகள்.

உதயா தூங்கும்போது கடைசியாக யாரின் முகத்தைப் பார்க்கிறாளோ அவள் மறுநாள் கண்விழிக்கும்போதும் அவர்கள் அருகே இருக்க வேண்டும். இல்லையெனில் அழுது ஆர்ப்பாட்டம் செய்துவிடுவாள்.

“என் செல்லக்குட்டியை யார் அடிச்சாங்க” என்று மகளைத் தூக்கி கலங்கிய கண்களைத் துடைத்து சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினாள்.

அதற்குள் எழுந்து குளித்துவிட்டு வந்த அரவிந்தன், “நீ போய் குளிச்சிட்டு வா” என்று மனையாளை அனுப்பிவிட்டு மகளுக்கு பால் காய்ச்சி கொடுத்து பசியாற்றினான்.

அவள் குளித்துவிட்டு வந்ததும் உணவை சமைக்க ஒன்றாக அமர்ந்து உணவை முடிக்க, “நான் மார்கெட் போயிட்டு வரேன்” என்றவன் பார்வையால் மகளைத் தேடினான்.

உதயா பின் வாசலில் விளையாடிக்கொண்டு இருப்பதை உறுதி செய்து வழியனுப்ப வந்த மனைவியை இழுத்து அணைத்து இதழில் இதழ் பதித்துவிட்டு, “நல்லா தூங்கி ரெஸ்ட் எடு” என சொல்லிவிட்டு கிளம்பிவிட அவனின் திடீர் தாக்குதலில் சிலையென உறைந்து நின்றாள் கீர்த்தனா.

அடுத்தடுத்து வந்த நாட்களில் அன்பை வெளிபடுத்துகிறேன் என்ற பெயரில் அவன் செய்த சேட்டைகளில் உலகம் ஒன்று இருப்பதையே மறந்தாள். அவளை தன் அன்பினால் குளிப்பட்டினான். அரவிந்தனின் இந்த மாற்றத்தை அவள் விரும்பி ஏற்றாள். தாயாக – தந்தையாக இருந்தவன் இன்று அவளின் உலகமாக மாறிப்போனான்.

அரவிந்தனின் சின்ன உலகம் மனைவி மற்றும் மகளால் அழகாக மாறியது. அடுத்த இரண்டு மாதங்கள் மின்னல் வேகத்தில் சென்று மறைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!