Thanimai – 23 Pre – Final

7ed166bf46fc59194cfafc75efa382cb-7ceca074

Thanimai – 23 Pre – Final

வரமாக வந்த இளந்தளிரே

அவர் கூறிய காரணத்தைப் பொறுமையுடன் கேட்டவன் சிறிதுநேரம் அமைதியாக இருந்தான். அவனின் சிந்தனையைக் கலைக்க விரும்பாமல் மேகலா அம்மாவும் மெளனமாக இருக்க, பிறகு ஒரு முடிவிற்கு வந்தவனாய் சட்டென்று நிமிர்ந்தான்.

“எங்கயோ ஒரு அனாதை ஆசரமத்தில் சேர்ப்பதற்கு பதிலாக இந்த குழந்தையை நானே வளர்த்துக்கிறேன். என்னை நம்பி குழந்தையைக் கொடுப்பீங்களா?” என குரல் கரகரக்க கேட்டுவிட்டு அவரின் முகத்தையே இமைக்காமல் பார்த்தான்.

அவனின் கேள்வி மனதை உலுக்கிட, “ஹே நீ திடீரென்று குழந்தையோடு போய் நின்றால் உங்க வீட்டு ஆளுங்க விசாரிக்க மாட்டாங்களா?” என கேட்டவுடன் முகம் கசங்க அவரை ஏறிட்டான்.

“என் ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஒரு விபத்தில் நான் இழந்துட்டேன். அந்த நேரத்தில் என் மனைவி கருவுற்று இருந்தாள். அதையும் சேர்த்து” என்றவனின் தொண்டை அடைக்க கலங்கிய கண்களை இடது கையால் துடைத்தான்.

மேகலா தண்ணீரை பருக சொல்லி கொடுக்க அதை வாங்கி மடமடவென்று குடித்தவன், “எட்டு மாசமாக தனிமையை அனுபவிச்சேன் என்னை பரிதாபத்துடன் பார்ப்பவர்கள் மத்தியில் நடமாடவே ஒருமாதிரியா இருக்கும். அதிலிருந்து தப்பிக்க தான் இந்த ஊருக்கு வந்தேன்” என்றவன் சொல்ல அதைக் கேட்டவரின் மனம் கனத்துப்போனது.

“கீர்த்தி என்னோடு இயல்பாக பேசி பழகியது என் காயப்பட்ட மனசுக்கு இதமாக இருந்தது. உங்களுக்கு மகள் பிறந்திருக்கு என்று அன்னைக்கு அந்த நர்ஸ் சொன்னபோது என் குழந்தையே மீண்டும் பிறந்துவிட்டதாக தோணுச்சு” என்றவன் குழந்தையின் முகத்தில் பார்வை பதித்தான்.

“என் மனைவியின் கருவில் கலைந்த குழந்தை இப்போ கீர்த்தியின் மூலமாக கைக்கு கிடைத்துவிட்டது என்று நினைச்சேன். அதனால் தான் இந்த குழந்தையை நானே வளர்த்துக்கிறேன் என்று சொல்றேன். என்னோட தனிமைக்கு ஒரு முற்றுபுள்ளியாக இந்த குழந்தை இருக்கும்னு நான் நம்பறேன்” அவன் தன் முடிவைத் தெளிவாக கூறினான்.

சிறிதுநேரம் சிந்தனையில் ஆழ்ந்த மேகலாவிற்கு அவனின் பக்கமிருக்கும் நியாயம் புரிந்தது. அவனுடன் பழகிய இந்த இருபது நாளில் அவனின் குணத்தை வெகுவாக எடைபோட்டு இருந்ததால் குழந்தையை அக்கறையுடன் பத்திரமாக பார்த்து கொள்வான் என்ற நம்பிக்கை மனதில் வந்தது.

எங்கோ ஒரு ஆசரமத்தில் சேர்த்துவிட்டு பதறுவதைவிட இவனிடம் குழந்தையைக் கொடுப்பது சரியென்றே தோன்றியது. அதே நேரத்தில் கீர்த்தனா தன் குழந்தையின் நினைவுகளை மறந்துவிட்டு செல்லும் பெண் அல்ல என்ற உண்மையும் புரிந்தது.

“கீர்த்தனாவின் நல்ல எதிர்காலத்திற்காக இந்த காரியத்தை நான் செய்தேன். இப்போ குழந்தையை வைத்து அவளை நீ பின்தொடர்ந்து செல்வாயா?” என நம்பாமல் கேட்டார்.

சற்றுநேரம் அமைதியாக இருந்த அரவிந்தன், “இந்த ஊருக்கு வரும்வரை என் வாழ்க்கையில் இப்படியொரு திருப்பம் வரும்னு நினைக்கல. அதே மாதிரி இங்கிருந்து கிளம்பிய கீர்த்தியோட வாழ்க்கையிலும் மாற்றம் வரலாம்” சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தான்.

“நான் குழந்தைக்காக அவளைத் தேடி போக மாட்டேன். என்னால் அவளோட படிப்புக்கு எந்தவிதமான பாதிப்பும் வராது. இன்னைக்கு எனக்கு தெரிந்த உண்மை என்னோடு புதைந்து போகுமே தவிர கடுகளவு கூட வெளியே வராது. என்னை நீங்க தாராளமாக நம்பலாம்” என்றவனை சிந்தனையோடு ஏறிட்டார்.

“அப்போ மறுதிருமணம் செய்தால்..” என்று கிடுக்குப்பிடி போட்டவரை நிமிர்ந்து பார்த்தான்.

சிறிதுநேர மௌனத்திற்கு பிறகு, “வாழ்க்கையில் இந்த நேரத்தில் இது நடக்கும் என்று வரையறுத்து சொல்ல முடியாது. அதனால் என்னோட மறுமணமும் வாழ்க்கையோட ஓட்டமே தீர்மானிக்கட்டும்” என்றவன் சொல்ல அவரும் ஒப்புதலாக தலையசைத்தார்.

“சரி அப்போ குழந்தையை நீயே வளர்த்துக்கோ..” என்றவர் சொல்ல அவனின் முகம் பளிச்சென்று பிரகாசம் வீசியது.  சிறிதுநேரத்தில் தன் உடமைகளை எடுத்துகொண்டு வீட்டை காலி செய்தான்.

தன் கையில் குழந்தையோடு கிளம்பிய அரவிந்தனை வழியனுப்ப வாசல் வரை வந்த மேகலாவை கையெடுத்து கும்பிட்டவன், “உங்களை என்னைக்கும் மறக்க மாட்டேன்” என்றான்.

அவர் கீர்த்தி பற்றி சொல்ல வர, “இல்லம்மா கீர்த்தனா என்ற பெயரைத் தவிர எனக்கு வேற எதுவும் தெரிய வேண்டாம். அதுவே நாளைக்கு அவளைத் தேடிப்போக காரணமாகிடும்” என்றவனின் கையிலிருந்து குழந்தையை வாங்கி முத்தமிட்டார் மேகலா.

தன் குழந்தையைப் பாரமாக நினைக்கும் இந்த காலத்தில் அவனின் இந்த முடிவு அவரின் மனதில் நல்ல எண்ணத்தை மட்டுமே உருவாக்கியது.

அவனின் வாழ்க்கை வளமானதாக அமைய வேண்டும் என்ற எண்ணத்துடன், “நானும் உன்னிடம் எங்கே போறன்னு கேட்க மாட்டேன் கண்ணா. மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு அமையுமா என்று எனக்கு தெரியாது. ஆனால் எங்கிருந்தாலும் நீயும், குழந்தையும் சந்தோஷமாக இருக்கணும்” என்றவரிடம் இருந்து விடைபெற்று கிளம்பினான்.

இருவரும் கிளம்பிய இரண்டு நாளில் தனக்கொரு வேலையைத் தேடிக்கொண்டு அவரும் வேறு ஊருக்கு பயணித்தார். அதன்பிறகு மூவரும் சந்திக்கவில்லை.

சில நேரங்களில் இன்னார்க்கு இன்னார் என்று கடவுள் போடும் முடிச்சு மாறுவதில்லை. அதுபோல கீர்த்திக்கு அரவிந்தன் என்று எழுதி வைத்திருந்தாரோ என்னவோ?

தன் மகளின் முதல் பிறந்த நாளில் தான் கீர்த்தியின் கவிதையை வாசித்தவனின் மனம் அவளைத் தேடியது. ஆனால் அவளின் பின்னணி தெரியாத நேரத்தில் திருமணம் செய்ய சொல்லி நிர்மலா கட்டாயப்படுத்தினார்.

ஜாதகம் என்ற பெயரில் மீண்டும் கீர்த்தனாவை புகைப்படத்தில் கண்டபோது, ‘தன்னவள்’ என்ற எண்ணமே மேலுங்கி நிற்க எதைபற்றியும் யோசிக்காமல் திருமணத்திற்கு சம்மதித்தான். உதயா அவளின் குழந்தை என்ற உண்மையை அவன் மறைக்க ஒரு காரணம் மட்டும் இருந்தது.

அந்த குழந்தைக்காக அவன் தன்னை நேசிக்கிறான் என்று அவள் நினைக்கக்கூடாது என்ற முடிவில் தெளிவாக இருந்தான். அவனின் காதல் உண்மையானது. திருமணம் முடிந்து மனைவி இறந்தபிறகு இருபது நாள் மட்டுமே பழகிய பெண்ணின் மீது வந்த காதலை அவனே முதலில் உணரவில்லை. அதை உணர்ந்த நாளில் இருந்து கீர்த்தனாவை மனதில் நேசித்தவன் அவளைத் தேடி செல்லவில்லை.

விதிப்படி மீண்டும் கீர்த்தியை கரம்பிடிக்க வாய்ப்பு தானாக அமையும்போது அதை கைநழுவவிட மனமில்லாமல், திருமணத்தை முடித்து இன்றளவும் அவளின் மீது பாசத்தை பொழிந்து அவளை மீண்டும் பழைய கீர்த்தியாக மீட்டெடுத்து இருந்தான்.

உதயாவைப் பற்றிய உண்மை தெரிய வந்தால் தன் காதலை சந்தேகப்பட்டு விலகி செல்வாளோ என்ற பயத்தினால் அவன் விஷயத்தை சொல்லாமல் தன் மனதோடு வைத்திருக்கிறான். அவள் ஒவ்வொரு முறை குழந்தையைப் பற்றி சொல்லும்போதும் உண்மையைச் சொல்ல முடியாமல் தவித்தான்.

அதற்கு ஒரு விடிவுகாலம் வராதா என்று யோசித்த நேரத்தில் மீண்டும் மேகலாவை சந்தித்தான். அவர் உண்மையைச் சொல்லிவிட்டால் என்ன செய்வதென்று அவருக்கு இருக்கும் ஞாபகமறதியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டான்.

தன் கடந்தகால நினைவிலிருந்து மீண்ட அரவிந்தனின் பார்வை தோளில் சாய்ந்திருந்த மனையாளின் மீதே படிந்தது. அவளும் அவனை நிமிர்ந்து பார்க்க, “என்னைவிட்டு பிரிஞ்சி போக மாட்டே இல்ல” கலக்கத்துடன் கேட்டவனை குழப்பத்துடன் ஏறிட்டாள் கீர்த்தனா.

“உங்களைவிட்டு எங்கேயும் போக மாட்டேன்” என சொல்லி மார்பில் புதைந்தவளை இறுக்கியணைத்து கொண்டான்.

அந்த நேரத்தில் கண்விழித்து எழுந்து வந்த உதயா, “அம்மா பசிக்குது..” என்றதும் கணவனிடமிருந்து வேகமாக விலகியவள் மகளைத் தூக்கிக்கொண்டு சமையலறைக்கு சென்றாள்.

அதேநேரத்தில் கடந்த காலத்தின் பிடியிலிருந்து வெளியே வந்த மேகலா, “இன்னும் எத்தனை நாளைக்கு மறைத்து வைக்க போறா கண்ணா. அடுத்த வாரம் உன் மகளுக்கு பிறந்தநாள் வருதே அன்னைக்கு கீர்த்திக்கு சந்தேகம் வந்தால் நீ உண்மையைச் சொல்லித்தானே ஆகணும்” என்று வாய்விட்டே கூறியவர் அந்த நாளுக்காக காத்திருக்க தொடங்கினார்.

அடுத்தடுத்து வந்த நாட்கள் வேகமாக சென்று மறைந்தது.  தன் மனைவி மற்றும் மகளை அழைத்துச்சென்று இருவருக்கும் தேவையான அனைத்தையும் வாங்கி குவித்ததோடு நில்லாமல் அவர்களுக்கு என நகையையும் எடுத்துக் கொடுத்தான்.

அவனின் அதிரடியில் செயலைக் கண்டு, “ரவி ஏன் இவ்வளவு வாங்கறீங்கன்னு புரியாமல் கேட்டாலும் முறைக்கிறீங்க. அதே நேரத்தில்  வேண்டான்னு சொன்னாலும் கோபம் வருது..” மறைமுகமாக விஷயத்தை கேட்க முயன்றாள்.

அவளின் கண்ணில் தெரிந்த காதலில் கட்டுண்டு, “இன்னும் இரண்டு நாளில் நம்ம மகளுக்கு பிறந்தநாள் வருது கீர்த்தி” என்றான்.

அவன் சொன்னதைகேட்டு மனம் பதறாமல், “இதை முதலிலேயே சொல்வதற்கு என்ன?” என அதட்டிவிட்டு அதற்கான வேலையில் தீவிரமாக இறங்கினாள்.

அடுத்த இரண்டு நாளும் மின்னல் வேகத்தில் சென்று மறைந்தது.

அன்றைய பொழுது அழகாக விடிந்திட சீக்கிரமே எழுந்து குளித்துவிட்டு அரவிந்தன் எடுத்து கொடுத்த புடவையை அணிந்து கண்ணாடி முன்னாடி நின்று தயாராகிட அவளை ரசித்தபடி படுக்கையில் படுத்திருந்தவனை முறைத்தவள், “சீக்கிரம் எழுந்து குளிங்க” என மிரட்டிவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தாள்.

அவள் ஈர கூந்தலை தளர்வாக பின்னிவிட்டு நிமிரும்போது அவளின் பார்வை எதர்ச்சியாக தேதி காலண்டரின் மீது படிந்து மீண்டது. அந்த தேதியைப் பார்த்தவுடன் மறந்த அனைத்தும் நினைவு வர சட்டென்று கணவனின் பக்கம் திரும்பினாள்.

தன்னவளின் பார்வையில் வித்தியாசத்தை உணர்ந்தவன், “நான் குளிச்சிட்டு வரேன்” என்று குளியலறைக்குள் சென்று மறைய கவலையுடன் படுக்கையில் அமர்ந்தவளின் பார்வை உதயாவின் மீதே நிலைத்தது.

முதல்நாள் அவளை தூக்கிய போது மனதில் தோன்றிய பரவசம், சில நேரங்களில் உதயாவிடம் உன் சாயல் இருப்பதாக மௌனிகா சொல்வது அனைத்துக்கும் மனதில் வரிசைகட்டி நின்றது. மேகலா அம்மாவிடம் இருந்து விடைபெறும் போது அரவிந்தன் அங்கே இருந்தது காரணமின்றி திடீரென்று நினைவு வந்தது. 

அத்தோடு சில நேரங்களில் விளையாட்டாக அவன் சொன்ன வார்த்தைகளை கோர்த்து பார்த்தபோது ஏதோ புரிவதுபோல இருந்தது. மேகலா அம்மாவை அவன் தெரியாதது மாதிரி நடந்து கொண்டது அவனின் மீதான சந்தேகத்தை அதிகரிக்க செய்தது.

அவள் சிந்தனையோடு அமர்ந்திருக்க, “என்ன கண்ணை திறந்துட்டே கனவு கட்டுட்டு இருக்கிற கீர்த்தி. உதயாவை எழுப்பி குளிக்க வை.. இன்னும் கொஞ்ச நேரத்தில் மத்தவங்க வந்திருவாங்க” என்றவன் கண்ணாடி முன் நின்று தலையைத் துவட்டினான்.

சட்டென்று எழுந்து அவனின் முன் வந்து நின்ற கீர்த்தி, “உதயா என்னோட மகளா?” என கேட்க அவன் பதில் சொல்லாமல் மௌனமாக நின்றான்.

அவனின் பனியனை கொத்தாக பற்றியவள், “என் கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா? முடியாதா?” என ஆவேசத்துடன் தொடங்கி கதறலோடு முடித்தாள்.

தான் உண்மையைச் சொல்லவேண்டிய சமயம் வந்துவிட்டத்தை உணர்ந்தவன், அவளின் மலர் முகத்தைக் கைகளில் ஏந்தி அவளின் விழிகளில் தன் பார்வையைக் கலந்தவன் அடுத்து சொன்ன விஷயம் சந்தோஷத்தின் உச்சிக்கே அவளை அழைத்துச் சென்றது.

“உதயா உன் மகள்தான். நீ சுமந்து பெற்ற குழந்தைதான்” என்றவுடன் அவளின் கண்ணீர் ஆனந்த கண்ணீராக மாறிப் போனது.

“இதை ஏன் நீ முன்னாடியே சொல்லல ரவி” என கண்ணீரோடு அவனை உலுக்கினாள்.

“ஆரம்பத்தில் இருந்தே உன்னை எனக்கு பிடிக்கும். என்னையும் அறியாமல் நான் உன்னை காதலிச்சதை உணர்ந்தது நம்ம பாப்பாவின் பிறந்தநாள் அன்றுதான். ஆனால் உன்னைத் தேடி வரும்போது உனக்கு திருமணம் ஆகியிருந்தால் என்ற கேள்வியால் என் காதலை எனக்குள் புதைச்சுகிட்டேன்” என்றவனை இமைக்க மறந்து பார்த்தாள்.

அவளின் கண்களை நேருக்கு நேர் சந்தித்தவன், “நிர்மலா அம்மாவின் கட்டாயத்தால் இரண்டாம் திருமணம் செய்ய ஒத்துகிட்டு பெண் தேடும்போது உன் ஜாதகம் கிடைச்சது. உன்னை கை நழுவவிட தயாராக இல்ல ” என ஆரம்பித்து அவளிடம் அனைத்தையும் கூறினான்.

அனைத்தையும் கேட்டபிறகும் அவள் மெளனமாக இருக்க, “உன்னை உனக்காக நேசிச்சேன். ஆமா உன்னை பார்த்த முதல்நாளே முகம் சுளிச்சுட்டு நீ விலகி போனதில் தொடங்கி பிரசவலியில் நீ துடித்தது எல்லாமே என் மனசில் ஆழமாக பதிந்து போச்சு. குழந்தை பிறந்ததும் என்னையும் அறியாமல் சந்தோஷத்தில் உன நெற்றியில் முத்தமிட்டதை நம்ம இருவரும் உணரல” என்றவன் தன்னவளிடம் மனதை பகிர்ந்தான்.

“உதயாவை என் கையில் வாங்கும்போது அவளை என் மகளாக பாவிச்சேன். இன்னைக்கும் அவள் மீது நான் காட்டும் அன்பு போலியானது இல்ல. அதே மாதிரி என் குழந்தைக்காகத் தான் நீ என்னை திருமணம் செய்தாயா என்று நீ கேட்டால் அதை தாங்கும் சக்தி என்னிடம் இல்ல. ஏன்னா நான் உன்னை உண்மையாகவே லவ் பண்றேன்” அழுத்தத்துடன் கூறியவனை திகைப்புடன் ஏறிட்டாள்.

கடைசியாக, “இதுவரை உண்மையைச் சொல்லாமல் இருந்ததுக்கு இரண்டே காரணம் தான். ஒன்னு நீ என் அன்பை சந்தேகப்படுவிட்ட கூடாது. இன்னொன்று உதயா உன் மகளென்று தெரிந்தால் என்னிடமிருந்து பிரிச்சு கூட்டிட்டுப் போய் விடுவாயோ என்று பயந்தேன்” அவளிடமிருந்து விலகி படுக்கையில் அமர்ந்தான்.

அவனின் ஒவ்வொரு வார்த்தையிலும் வெளிபட்ட காதல் அவளை உருகியது. இருவேறு பாதையில் பயணிக்க இருந்தவர்களின் வாழ்க்கையில் விதி கோரதாண்டவம் ஆடியது மறுக்க முடியாத உண்மை.  ஆனால் உதயாவின் பிறப்பு இருவரையும் இணைத்திருப்பதை நினைத்து மகளின் அருகே சென்று அமர்ந்தாள்.

பத்து நாள் மட்டுமே தன் மார்பினில் பால் அருந்திய மகளின் நெற்றி, கன்னம் என முத்தமிட்டவள், பிறகு மெல்ல கைகால்களை வருடிய மனையாளின் மீதே நிலைத்தது அரவிந்தனின் பார்வை. கீர்த்தனா கணவனை நிமிர்ந்து பார்க்க, அவனும் அவளையே பார்த்தான். நான்கு விழிகளும் மெளனமாக காதல் பாசை பேசியது.

மெல்ல எழுந்து அவனின் அருகே அமர்ந்த கீர்த்தி, “உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?” என்றவளை கேள்வியாக நோக்கினான்.

“பொண்ணுங்களுக்கு அப்பாவைத்தான் பிடிக்கும். அதே மாதிரிதான் உன் மகள் உதயாவும்! இந்த உலகமே வந்து இவன் உன் அப்பாவே இல்லன்னு சொன்னாலும் அவள் நம்பமாட்டா. அந்தளவுக்கு அவமேல நீ உயிரையே வச்சிருக்கிற.. நான் வான்னு சொன்னதும் வந்துருவான்னு நினைச்சியா?” என்று கேட்டு அவனின் பயத்தைப் போக்கினாள்.

அவனின் கரத்துடன் தன் கரம்கோர்த்து மெல்ல கணவனின் தோள் சாய்ந்தவள், “அடுத்து பொண்ணுங்க நினைப்பது எங்க அப்பா மாதிரி எனக்கு வர கணவனும் இருக்கணும்னு எதிர்பார்ப்பாங்க. ஆனால் எனக்கு கிடச்ச கணவன் அனைத்து உறவுகளுக்கும் ஈடனவன். உன்னை பிரிய நினைச்சா என் உயிர் உடலில் தங்காது. அந்தளவுக்கு உன்னை நேசிக்கும் நான் எப்படிடா விலகி போவேன்னு யோசிக்க மாட்டியா?” என்று கேட்டவுடன் அதுவரை மனதை அழுத்திய சோகம் விடைபெற்று சென்றது.

தன்னை மீது கதறி அழுதவள் ஆறுதல் தேடி அவனின் மார்பினில் சரணடைந்தவள், “ஐ லவ் யூ ரவி” என்றவளை வலுக்கட்டாயமாக பிரித்து அவளின் முகத்தை முத்தத்தால் அர்ச்சனை செய்தான்.

அவளின் முகம் வெக்கத்தில் சிவந்ததிட, “ஐ லவ் யூ கீர்த்தி. நீ என்னை புரிஞ்சுக்குவ என்று நினைக்கவே இல்லடி” என்றவன் சொல்லி முடிக்கும்போது உதயா கண்விழித்தாள்.

அவளிடம் அசைவை உணர்ந்து, “குட்டிமா விஷ் யூ மேனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆப் தி டே” என நெற்றியில் முத்தமிட்டு மகளைத் தூக்கி அணைத்துக்கொண்டவனின் மறு தோளில் சலுகையுடன் சாய்ந்தாள் கீர்த்தனா.

இருவரையும் அணைத்த அரவிந்தனின் மனம் ஹாலில் மாட்டப்பட்டிருந்த தாய் – தந்தையின் படத்தின் மீது படிந்து மீள்வதைக் கண்ட கீர்த்தி, “நம்ம இதுநாள் வரை தனி தனியாக அனுபவித்த தனிமைக்கு முற்றுப்புள்ளி வைத்தது நம்ம மகள் உதயாதான். அவமட்டும் பிறக்காமல் இருந்திருந்திருந்தால் நம்ம இருவரின் வாழ்க்கையும் திசைமாறி போயிருக்கும்” என்று நிறைவுடன் கூறியவள் மகளின் உச்சிதனை முகர்ந்தாள்.

அவளின் கருத்தை ஏற்றுக்கொண்டு, “நீ சொல்வதும் உண்மைதான்” என சொல்லும்போது வாசலில் இருந்து மேகலாவின் குரல்கேட்டு மூவரும் எழுந்து வெளியே சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!