Thanimai – 3

1-795d5345

Thanimai – 3

மௌனிகாவின் சந்தேகம்

அதிகாலை ஐந்து மணியளவில் தாயின் குரல்கேட்டு சட்டென்று கண்விழித்த விக்னேஷ் எழுந்து சென்று கதவைத் திறந்து, “என்ன அம்மா” அரைத்தூக்கத்தில் கொட்டாவி விட்டபடி கேட்டான்.

“சீக்கிரம் முகம் அலம்பிட்டு வா.. மார்கெட் போகணும்” என்றவரின் கட்டளைக்கு இணங்க அறைக்குள் சென்று சிறிது நேரத்தில் தயாராகி வெளியே வந்தான்.  சில்லென்ற காற்று உடலைத் தழுவிச் சென்றது.

தாயும், மகனும் பைக்கில் மார்கெட்டிற்கு சீரான வேகத்தில் செல்ல ஓரிரு நாட்களில் அரவிந்தன் குழந்தையோடு செலவழிக்கும் நேரத்தை கணக்கிட்ட விக்னேஷ், “ஒருநாள் வேலைக்குப் போகலன்னாவே செலவை சமாளிக்க முடியாமல் திண்டாடுறோம். ஆனால் எதிர் வீட்டில் இருப்பவர் வேலைக்கே போகாமல் குழந்தையோட தேவைகளை எப்படித்தான் சமாளிக்கிறாரோ” குழப்பத்துடன் கேட்டும் முடிப்பதற்கு அன்னூர் சந்தை வந்திருந்தது.

மற்றவர்கள் அனைவரும் தூங்கும்போது சந்தையில் விவசாயிகள் மற்றும் மளிகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் கூலியாட்கள் என்று அந்த இடமே பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்தது. அதிகாலை காய்கறிகளை விற்பனை செய்ய லாரியில் ஒருபக்கம் லோடு வந்து இறங்கியது.

மற்றொரு பக்கம் விவசாயிகளிடம் காய்கறிகளைப் பேரம் பேசி வாங்கும் சந்தையின் கடை ஊழியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டு இருந்தார்கள் மளிகைக்கடை உரிமையாளர்கள். அது மட்டுமின்றி தள்ளுவண்டியில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் நல்ல காய்கறிகளை வாங்கிகொண்டு அங்கிருந்து கிளம்பினர்.

இப்படி அந்த இடமே பரபரப்புடன் இருக்க தாயுடன் கடைக்குச் சென்று காய்கறி வாங்கும்போது அரவிந்தனின் குரல்கேட்டு சட்டென்று திரும்பிப் பார்த்தான் விக்னேஷ். அங்கே அவன் விவசாயிடம் அதற்கான பணத்தை பேரம் பேசாமல் வாங்குவதைக் கண்ட மற்ற கடை வியாபாரிகள், “இது சரியில்ல தம்பி. நீங்கக் கேட்ட காசைக் கொடுத்தால் நாளைக்கு எங்களுக்கும் பிரச்சனை வரும் இல்ல” என்று அவனிடம் கண்டிப்புடன் பேசினார்கள்.

சட்டென்று நிமிர்ந்து அனைவரையும் ஒரு முறை பார்த்தவன், “இந்தக் காய்கறிகள் விவசாயிடம் தொடங்கி நடுத்தர மக்களின் கைக்குச் செல்வதற்குள் இடையே எத்தனை பேரிடம் கைமாறும் என்று நமக்கு நல்லாவே தெரியும். அவங்க கையிலிருந்து வாங்கி விற்பவர்கள் இலாபம் இல்லை என்றாலும்,போட்ட பணத்தை எடுத்துவிடுகிறோம். உண்மையாக உழைத்த விவசாயிகளுக்குக் கேட்ட பணத்தைக் கொடுக்காமல் பேரம் பேசுவது சரியில்ல” என்றவன் நியாயமாகப் பேசினான்.

அவனின் பேச்சில் இருந்த உண்மை விக்னேஷ் மனதை சுட்டது. எத்தனையோ முறை ரோட்டோரம் விற்பவர்களிடம் பேரம் பேசி வாங்கியிருக்கிறான்.

இன்று அரவிந்தனின் பேச்சில் தன் தவறை உணர்ந்து, ‘முடிந்தவரை நம்ம பேரம் பேசுவதை நிறுத்தனும்’ என்று நினைக்கும்போது மகனின் அருகே வந்தார் நிர்மலா.

“அந்தத் தம்பி இங்கேதான் வேலை பார்க்குது. இந்தத் தொழிலில் ஐயாயிரம் இலாபம் வருமென்று நினைக்கிறேன். அடுத்தவர் வயிற்றில் அடித்துச் சம்பாரிக்க கூடாதுன்னு நினைக்கும் பையனோட நல்ல குணத்துக்கு எப்போது நல்லாவே இருப்பான்” என்று தன்போக்கில் சொல்லிவிட்டு மகனை அழைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.

திடீரென்று குழந்தையில் அழுகுரல் கேட்க இருவரும் திரும்பிப் பார்க்க அரவிந்தன் தன் மகளைத் தூக்கி சமாதானம் செய்தான். தன் குழந்தையை கவனிக்க ஆளில்லை என்ற ஒரே காரணத்திற்க்காக இப்படியொரு தொழிலைத் தேர்ந்தெடுத்து இருப்பது அவர்களுக்குத் தெளிவாக புரிந்தது.

கல்லூரி திறக்க இரண்டு நாள் இருக்கும் நிலையில் தனக்கு தேவையான உடைகளை எடுத்து வைத்த மகளுக்குப் படிப்பின் மீதிருக்கும் ஆர்வத்தை புரிந்துகொண்டார்.

“பாப்பா உன் விளையாட்டை ஓரம் கட்டிவிட்டு ஒழுங்காகப் படி. இன்னும் இரண்டு வருடம் படிப்பு முடிந்து நீ சம்பாரிக்க ஆரம்பித்துவிட்டால் உன் அப்பாவுக்குக் கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்கலாம்” என்றார்.

கீர்த்தனாவின் படிப்பிற்காக இரவு பகல் பார்க்காமல் உழைக்கும் கணவனை நினைத்து அவர் மனம் வேதனையடைத்தது. அதற்கு ஏற்றார்போல மகளும் நன்றாகப் படிக்கிறாள் என்பது மட்டுமே அவருக்கு கிடைக்கும் ஒரே ஆறுதல்.

அவளின் படுக்கையில் அமர்ந்த செல்வி, “பாவம் மனுஷன் உன் படிப்பிற்காகப் படாதபாடு படுகிறார்” என்று தாயின் வருத்தம் அவளுக்குப் புரிந்தது.

தன் மகள் நன்றாகப் படிக்க வேண்டுமென்று தருமபுரி ஹாஸ்டலில் தங்கி படிக்க வைப்பது மட்டுமின்றி கேட்ட நேரத்தில் காரணம் கேட்காமல் பணத்தை அனுப்பி வைக்கும் தந்தையை நினைத்து அவளின் கண்கள் கலங்கியது.

“நான் நன்றாக படிப்பேன் அம்மா” என்றதும் பாசத்துடன் மகளின் தலையை வருடிவிட்டு கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்து நின்ற தாயை கேள்வியாக நோக்கினாள் கீர்த்தனா.

 “உனக்குச் சாப்பிட சப்பாத்தி செய்து வைத்திருக்கிறேன். நீ சாப்பிட்டு முடிப்பதற்குள் உங்கப்பா வந்துவிடுவார்” என்று சொல்லவே அவளும் சரியென்று தலையசைத்தாள். தாயுடம் அமர்ந்து சாப்பாட்டை முடித்துவிட்டு எழும்போது, “பாப்பா போலாமா?” கேட்டபடி வீட்டிற்குள் நுழைத்தார்.

“ம்ஹும் கிளம்பலாம் அப்பா” என்றவள் பேக்கை எடுத்துக்கொண்டு வெளிவர மகளின் கையில் பணத்தைக் கொடுக்க மறுத்தவளை பேசவிடாமல் கையமர்த்திவிட்டு,

 “இதைத் தனியாக வைச்சுக்கோ. இதற்கிடையே என்ன தேவை என்றாலும் அப்பாவுக்கு ஒரு போன் மட்டும் பண்ணுடா. நீ நல்ல படிக்கணும்” மனைவியிடம் கண்ணசைவில் விடைபெற்று மகளை ஒரு கையில் பிடித்தபடி முன்னே நடந்தார்.

கீர்த்தனாவை இமைக்க மறந்து பார்த்த தாயிடம், “அம்மா போயிட்டு வரேன்” என்றவள்  தந்தையுடன் கிளம்பினாள்.

தன்னைப் பற்றி மட்டுமே யோசிக்கும் தாய் – தந்தையின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியுடன் எடுத்தாள். சேலம் பஸ் நிலையம் வந்து மகளைப் பஸ் ஏற்றிவிட்டு, “பாப்பா ஹாஸ்டல் சென்று சேர்ந்ததும் எனக்கு ஒரு போன் பண்ணுடா” என்றவர் பஸ் கிளம்பிய பிறகு வீட்டிற்கு செல்லத் திரும்பினார்.

ஒரு ஆண், அழுகும் கை குழந்தையைச் சமாளிக்க முடியாமல் மனைவியைத் தேடுவதை கவனித்தவர், “அரவிந்தன் எப்படிதான் குழந்தையை தனியாகச் சமாளிக்கிறானோ?” முணுமுணுத்தபடி வண்டியை எடுத்தார்.

கல்லூரி திறப்பதற்கு முன்னரே தன் ஹாஸ்டல் ரூமிற்கு வந்து சேர்ந்த கீர்த்தனா மனதளவில் சோர்வுடன் காணப்பட்டாள்.

அவளை வரவேற்ற புது ஹாஸ்டல் வார்டனான விஜயலட்சுமியைக் கண்டவுடன், “பழைய வார்டன் மேகலா மேடம் எங்கே?” என்ற கேள்வி அவளின் மனதில் எழுந்தது.

அதை அவள் புது ஹாஸ்டல் வார்டனிடம் கேட்க, “அவங்க டெம்ப்ரவரியாக வந்தவங்க.  இந்த வேலைக்கு நான் வந்துவிட்டதால் அவங்களை அனுப்பிட்டாங்க” என்று சொல்ல அவளின் மனதில் மீண்டும் கவலைகள் தலை தூக்கியது.

 ‘எனக்கு அத்தனை அறிவுரை பண்ணி அனுப்பி வச்சாங்க. அவங்களை இனிமேல் நான் பார்க்கவே முடியாதா? ஐயோ இனிமேல் என் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளைச் சமாளித்து நான் எப்படி மீண்டு வரப் போகிறேன்’ என்ற கவலை மேலோங்கிட இரண்டு கைகளில் தலையைத் தாங்கிப் படுக்கையில் அமர்ந்தாள்.

 ‘உன் வாழ்க்கை இனி உன் கையில் தான் இருக்கு கீர்த்தி. இதிலிருந்து மீண்டு வர நான் வழி காட்டிட்டேன். இதுக்குமேல் படிப்பை முடிச்சுட்டு வேலையைக் கவனி. திருமணம் என்ற ஸ்டேஜ் வரும்போது கண்டிப்பா உன் மனசு பக்குவமடையும்போது உனக்கே ஒரு தெளிவு கிடைக்கும்’ என்றவரின் குரல் அவளின் காதோரம் ஒலித்தது.

அதில் ஓரளவு தெளிவடைந்த கீர்த்தி தனிமையைத் தவிர்க்க எண்ணி களைப்பு தீரக் குளித்துவிட்டு அன்று முழுவதும் வெளியில் லைப்ரரி மற்றும் ஷாப்பிங் என்று சுற்றியவள் இரவு வந்து படுக்கையில் விழுந்தவளின் விழிகளைத் தூக்கம் தழுவியது.

மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது.

அந்த அறையில் அவளோடு தங்கியிருந்த மற்ற தோழிகளும் வந்துவிடவே, “ஹே கீர்த்தி ஊருக்குப் போயிட்டு இரண்டு நாள் முன்னாடியே வந்துவிட்டாயே அதிசயம் தான்” என்று கிண்டலடித்த மௌனிக்கு புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்தாள்.

இந்தக் கீர்த்தனா அவளுக்கு முற்றிலும் புதியவள். எந்த நேரமும் குறும்பும், கலகலப்புடன் வலம் வரும் கீர்த்தி காணாமல் போயிருந்தாள். அதைக் கவனித்த மௌனியின் மனம் பின்னோக்கிச் சென்றது.

முதல் வருட கல்லூரி விடுமுறையின்போது அழைத்துச் செல்ல வந்திருந்த தாய் – தந்தையிடம் அடம்பிடித்து ஹாஸ்டலில் தங்கிவிட்டாள். இவளால் மௌனிகா ஊருக்குச் செல்வதும் தடைபட்டு போய்விடவே அந்த விடுமுறை நாட்களை இருவரும் ஹாஸ்டலில் களித்தனர்.

ஆனால் இந்த வருடம் விடுமுறை விட்டதுதான் தாமதம் ஊருக்குக் கிளம்பியவளைக் கண்டு, “இதெல்லாம் ஆண்டவனுக்கே அடுக்காது” என்றவள் தன் ஊருக்குப் பயணமானாள்.

கல்லூரி விடுமுறை அறிவிப்பு வந்ததும் கிளம்பிய கீர்த்தி வழக்கத்திற்கு மாறாகப் பதட்டத்துடன் இருப்பது போலவே உணர்ந்த மௌனியால் வெளிப்படையாக  எதையும் கேட்க முடியவில்லை.

இரண்டாம் ஆண்டியின் இறுதியில் எந்தநேரமும் களைப்புடன் சோர்வாக இருந்த கீர்த்தியிடம் வித்தியாசத்தை உணர முடியாமல் தடுமாறினாள். அதே நேரத்தில் விடுமுறை முடியும் முன்னரே வந்து சேர்ந்தவளின் முகம் தெளிவாக இருந்தது.  இவையனைத்தும் மௌனிகாவின் மனதில் குழப்பத்தைக் கொடுத்தது.

தன் தோழியுடன் மறுநாள் காலைக் கல்லூரி வளாகத்தின் உள்ளே காலடி எடுத்து வைத்தாள். கீர்த்தனா B.E.  கம்யூட்டர் இஞ்சினியரிங் மூன்றாம் வருடத்தில் சிறப்பாக அடியெடுத்து வைக்கிறாள்.

அவர்கள் வழக்கமாக அமரும் இடத்தில் அவளின் கேங்கை கண்டவுடன், “ஹாய் கைஸ்.. என்னப்பா லீவ் எல்லாம் எப்படி போச்சு” சாதாரணமாகக் கேட்டு மீராவின் அருகே அமர்ந்தாள் கீர்த்தனா.

அவளோ சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு, “ஏன்டா ஊருக்குப் போனோம்னு தோணுது. எங்க வீட்டில் இப்பவே திருமணப் பேச்சை எடுத்துட்டாங்க” என்று மீரா ஒருப்பக்கம் புலம்பினாள்.

அதற்குள் இடையே புகுந்த ரோஹித், “உங்க வீடு எவ்வளவோ பரவால்ல மீரா. எங்கப்பா நீ முதலில் படிப்பை முடிச்சு சம்பாரிக்க ஆரம்பி. அப்புறம் கல்யாணத்திற்கு பொண்ணுன்னு பார்க்கலாம்னு சொல்லிட்டாரு தெரியுமா?” என்று கண்ணைக் கசக்குவதுபோல பாவனைச் செய்தான்.

அவன் சொன்னதைக்கேட்டு தன்னை மீறிச் சிரித்துவிட்ட கீர்த்தனா, “பொண்ணுங்களுக்கு தான் படிகின்ற வயசில் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு பெத்தவங்க சொல்றாங்க. அதுவும் ஒரு சிலர் தான். ஆனால் பசங்க உங்களுக்கு எதுக்குடா இப்பவே கல்யாணம்?” நக்கலோடு   நண்பனை வாரினாள்.

அவள் கேட்ட கேள்வியில் மற்றவர்கள் அனைவரும் சிரிக்க, “காலகாலத்தில் பொண்ணுங்களுக்கு செய்ய வேண்டியதைச் சரியாக செய்யணும்னு சொல்லி உங்களைக் கல்யாணத்தை சரியான வயசில் செய்யறாங்க. ஏன் பசங்க எதில் குறைஞ்சு போயிட்டோம்” என்று எதிர் கேள்வி கேட்டான் ஜெயராம்

தன் நண்பனுக்கு ஹை – பை கொடுத்த ரோஹித், “எங்கள மட்டும் முப்பது வயசாகும் வரை எப்படியோ போன்னு விடுறாங்க. நாங்களும் வயசிலேயே என்ஜாய் பண்ணனும்னு எதிர்பார்க்க மாட்டோமா?” என்று அவளிடம் சண்டைக்கு வந்தான்.

அவர்களுக்கிடையே நடக்கும் சண்டையை மற்றவர்கள் சுவாரசியமாக வேடிக்கைப் பார்க்க, “எங்களுக்குச் சீக்கிரமே கல்யாணம் பண்ணி வைத்து இருபத்தி மூன்று வயதில் பக்கத்துவிட்டு குட்டிஸ் எல்லாம் ஆண்ட்டின்னு கூப்பிடும் கொடுமை எங்களுக்குத் தாண்டா தெரியும்..” என்று மௌனிகா உண்மையைப் போட்டு உடைக்க அவளுக்கு ஹை – பைக் கொடுத்தாள் கீர்த்தி.

“எங்களை எல்லாம் இப்பவே குட்டிஸ் எல்லாம் நயன்டிஸ் கிட்ஸ்னு கலாய்க்குது தெரியுமா?” இப்படி அவரவர் ஒரு கருத்தை முன்வைக்க நேரம் சென்றதே தெரியாமல் சண்டையில் ஈடுபட்டிருந்தனர்.

திடீரென்று கல்லூரி பெல் அலறவும் சுற்றுப்புறம் உணர்ந்து வகுப்பறை நோக்கிச் செல்ல, “அவனவனுக்கு ஆயிரம் பிரச்சனை. அதெல்லாம் இந்தப் பெல்லிடம் சொல்ல முடியுமா? நேரம் தவறாமல் அது ஊதும் சங்கை சிறப்பா ஊதுவிடுகிறது” என்று புலம்பியபடியே நண்பனோடு இணைத்து நடந்தான் ஜெயராம்.

மற்றவர்களோடு சாதாரணமாகப் பேசியபோதும் மௌனிகாவின் பார்வை கீர்த்தியின் மீதே நிலைத்தது. ஏற்கனவே இடையைத் தொடும் கூந்தல், வசீகரமான புன்னகையோடு வலம் வரும் கீர்த்தினாவின் அழகு அவளுக்குப் பிடிக்கும்.  இப்போது அவளின் அழகு இன்னும் மெருகேறி இருந்தது.

ஐந்தடி உயரத்தில் மெரூன் கலர் சல்வாரில் அழகாக இருந்தவளின்  கையைப்பிடித்து தனியே இழுத்த மௌனிகா, “மச்சி நீ ஊருக்குப் போவதற்கு முன்னால் வயிறெல்லாம் தொப்பை போட்டுக் கொஞ்சம் உடம்பு ஏறிய மாதிரி தெரிந்தது. இப்போ பார்க்க இவ்வளவு அழகாக இருக்கிறீயே என்ன விஷயம்?” என்று விசாரித்தாள்.

“நான் எப்போதும் போலத்தான் இருக்கேன். உனக்குத்தான் வித்தியாசமாகத் தோணுது போல.. எனிவே நான் அழகாக இருக்கேன்னு கமெண்ட் கொடுத்ததுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ். இப்போ வா கிளாஸிற்கு போலாம்” அவளை இழுத்துச் சென்ற கீர்த்தியின் வாயிலிருந்து உண்மையை வரவழைக்க முடியாமல் எரிச்சலோடு சென்றாள்.

மௌனிகாவின் ‘அழகு’ என்ற வார்த்தை அவளின் மனதை வெகுவாகப் பாதித்தது. எப்போதும் அவள் அழகை ஒரு பொருட்டாக மதித்ததில்லை. தனக்கே தெரியாமல் நடந்துவிட்ட நிகழ்வின் தாக்கத்தின் பிரதிபலிப்பாக அவள் அனுபவித்த வலி அனைத்தும் நினைவு வந்தது.

தன் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட நிகழ்வை மறக்க முடியாமல் அதனால் தான் எடுத்த முடிவுகளை நினைத்து மனம் பாரமாகிவிட கண்கள் லேசாகக் கலங்கியது. மற்றவர்கள் கவனிக்கும் முன்பே நாசுக்காகக் கண்ணீரைத் துடைத்து ஓரளவு தன்னை நிலைபடுத்திகொண்டு வகுப்பறைக்குள் நுழைந்தவளின் கவனம் மீண்டும் படிப்பில் திரும்பியது.

அவளின் மனவலிகள் அனைத்தும் பின்னுக்கு தள்ளப்பட்டது. அடுத்தடுத்து வந்த நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது.

அன்று ஹாஸ்டல் ரூமில் அடைந்து கிடக்க மனமின்றி வார்டனிடம் சொல்லிவிட்டு பக்கத்தில் அமைத்திருக்கும் பூங்காவில் வந்து அமர்ந்தாள் கீர்த்தனா. மரங்களின் புடை சூழ கிடைத்த நிழலில் குழந்தைகள் சற்று தூரத்தில் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அதைப் பார்க்க ஏற்றபடி அங்கே இருந்த சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்தவளின் உடலைக் குளிர்காற்று மெல்ல வந்து வருடிச் சென்றது. புதிதாகத் திருமணமான ஜோடிகள் சிலர் புல்வெளியில் அமர்ந்து தங்களின் உலகில் சஞ்சரிக்க, வயதானவர்கள் பேரக்குழந்தைகளோடு வந்திருந்தால் அவர்களை விளையாடவிட்டு வேடிக்கைப் பார்த்தனர்.

தன் நண்பர்களின் பட்டாளத்தை விட்டு விலகித் தனித்து வந்த கீர்த்தனாவின் மனதில் மீண்டும் பழைய நினைவுகளின் ஊர்வலம். தன்அருகே நிழலாடக் கண்டு திடுக்கிட்டு நிமிர்ந்தவளின் மனம் படபடத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!