Thanimai – 4

download (53)-bb306dd8

Thanimai – 4

பெயர் சூட்டு விழா

அவளின் அருகே வந்து அமர்ந்த ரோஹித், “ஹே! என்ன இவ்வளவு பயப்படற..?” என்றவுடன் நெஞ்சில் கைவைத்து சிறிதுநேரம் மெளனமாக இருந்தாள் கீர்த்தனா.

“என்ன இன்னைக்கு பார்க் பக்கம் வந்திருக்கிற?” கேலியுடன் பேச்சை மாற்றினாள்.

“ம்ஹும் அம்மா ஊரிலிருந்து வந்து இந்நேரம் வரை பார்க்கில் உட்கார்ந்து பேசிட்டு இருந்தாங்க. இப்போதான் அவளை அனுப்பிவிட்டு வரும்போது நீ இங்கே உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன்” என்றான் சாதாரணமாக.

“ஓஹோ அம்மா நல்ல இருக்காங்களா?” சந்தோசம் குரலில் தெரிய தலையை மேலும் கீழும் ஆட்டினான்.

 “உன்னோட அப்பாவும், தங்கச்சியும் வரலயா?” என்றாள்.

“தங்கச்சிக்கு எக்ஸாம் நடக்குது.. சோ அவளுக்குத் துணையாக அப்பாவையும் இருக்க சொல்லிட்டு அம்மா மட்டும் கிளம்பி வந்தாங்க” என்றான் சிரிப்புடன்.

“அம்மாவுக்குப் பசங்கதானே பிடிக்கும்” அவள் குறும்பு பேச,

“உன்னை மாதிரி துறுதுறுன்னு இருக்கும் மகள்களையும் பிடிக்கும்”  கையோடு கொண்டு வந்த டிப்பன் பாக்ஸை அவளிடம் நீட்ட அதை வாங்கி திருந்து பார்த்தாள்.

குலோப்ஜாமூன் இருப்பதைக் கண்டு கீர்த்தியின் நிமிர்ந்து அவனைக் கேள்வியாக நோக்கிட, “நம்ம கேங்கில் அவங்களுக்கு பிடிச்ச சில பதார்த்தம் செஞ்சி எடுத்து வந்தாங்க. இது உனக்கு கொடுக்கச் சொன்னாங்க” முகத்தில் சிந்தனை படர மௌனமானாள்.

தன் நண்பனே ஆனாலும் கொடுத்ததை சாப்பிட மனம் இல்லாமல் அமர்ந்திருக்க, ‘எல்லோரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பதை முதலில் நிறுத்து. ஒருவன் செய்த தவறுக்காக அனைவரும் அதே எண்ணத்துடன் உன்னிடம் பழகுவாங்க என்று நினைக்காதே. அந்த நினைவுகள் உன்மீது  உண்மையான பாசம் வைத்திருப்பவர்களைக் காயப்படுத்திவிடும்’ என்ற அவனின் குரல் காதோரம் ரீங்காரமிட்டது.

அவளின் சிந்தனை முகத்தைக் கண்ட ரோஹித், “நேற்று ஒரு போஸ்ட் படிச்சேன். வெளியிடங்களுக்கு சென்றால் குடிக்கும் கூல்ரிங்ல நிமிடத்தில் கரையும் மாத்திரைகளைப் பயன்படுத்தி பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்யறாங்களாம். அதைக் குடிச்சா நடந்த எதுவும் நினைவே இருக்காதாம். அந்த நியூஸ் படிக்கும்போது ஒரு தங்கைக்கு அண்ணனாக என் மனசு பதறுச்சு கீர்த்தி” என்றான்.

“ம்ஹும் உண்மைதான் ரோஹித். சில நேரத்தில் நல்லவர்களைக் கூட நம்ப முடியாத சூழ்நிலையை உருவாக்குது.. யாரோட வற்புறுத்தலுக்கும் இடம் கொடுத்து நம்பி ஒரு தண்ணிகூடக் குடிக்க முடியல” என்றவளின் வார்த்தைகளின் பின்னோடு வலி மட்டுமே நிறைந்திருந்தது.

“அதுதான் தங்கச்சிட்ட யார் என்ன சொன்னாலும் வெளியிடங்களுக்கு போனால் வற்புறுத்தலுக்காக எதையும் சாப்பிட வேண்டான்னு சொல்லியிருக்கேன்” என்றதும் புன்னகையுடன் அவனை ஏறிட்டாள்.

தன் கையிலிருந்த குலோப்ஜாமூனை நம்பிக்கையோடு அவள் எடுத்து சுவைக்க, “ஹே பேச்சுவாக்கில் எனக்குக் கொடுக்காமல் சாப்பிடற.. அது எங்கம்மா செய்தது எனக்கும் பிடிக்கும்” என்று தோழியிடம் சண்டையிட்டு குலோப்ஜாமூனை சாப்பிட்டான்.

அவளின் சிரித்த முகம் மனதிற்கு சந்தோசத்தைக் கொடுத்தது. அதே நேரத்தில் பெரிய ஆபத்தில் சிக்கி மீண்டு வந்திருப்பதை அவளின் செயலில் உணர்ந்தான். அதைக்கேட்டு கஷ்டப்படுத்த வேண்டாமென்று மௌனமாகிவிட்டான்.

அன்றுடன் அன்னூர் வந்து சேர்ந்து ஒரு மாதம் சென்றிருந்தது. திடீரென்று ஏற்பட்ட புயலின் காரணமாக விடாமல் கனமழை பொழிந்தது.  மாலை நேரத்தில் மழையை வேடிக்கைப் பார்த்தபடி காஃபி போட்டு எடுத்துக்கொண்டு மாடிக்குச் சென்றான். இரண்டு அறைகளுக்கு நடுவே விசாலமாக விடபட்டிருந்த இடம் மழையின் சாரலினால் நனைந்திருந்தது.

அங்கிருந்த ரூமில் மகளைப் படுக்க வைத்துவிட்டு கையுடன் கொண்டு வந்த காஃபியை பருகியபடி சோபாவில் அமர்ந்தான். மழை ஈரத்திற்கும், சூடான காஃபி ருசியில் மெய் மறந்தவனின் உள்ளம் அவளை நோக்கிச் சிறகடித்தது.

நிறைமாதமாக இருந்த பெண்ணவள் காஃபி கேட்டு அடம்பிடித்து மாடிப்படிக்கட்டில் கன்னத்தில் கை வைத்துச் சோகமாக அமர்ந்திருந்த காட்சி மனதினுள் படமாக விரிய, ‘இன்னும் குழந்தையாகவே இருக்கிறா’ என்று நினைத்தவனின் உதடுகளில் புன்முறுவலோடு மழையை ரசித்தான்.

அந்த வானிலை மிகவும் பிடித்திருந்தது. அத்தோடு அவளின் நினைவுகள் மேலெழும்பி வருவதை அவனால் தடுக்க முடியவில்லை. அதை  ரசித்தபடியே இரவு உணவை முடித்துக்கொண்டு மேல் அறைக்கு வந்து சோபாவில் அமர்ந்தவனின் பார்வை தொட்டிலில் தூங்கிய குழந்தை மீதே நிலைத்தது.

அடுத்தடுத்து வந்த நாட்களில் விடாமல் பொழிந்த மழையும், குளிர்ந்த சில்லென்ற காற்றும் இணைந்து குழந்தையின் உடலுக்குச் சேராமல் போனதால் குழந்தைக்குக் காய்ச்சல் வந்தது.

இரவாகிய பின்பும் பாலுக்கு சிணுங்காமல் இருந்த குழந்தையை நினைத்ததும், ‘பாப்பாவுக்கு இன்னைக்கு என்னாச்சு?’ என்ற யோசனையோடு குழந்தையைக் கையில் தூக்கியவனுக்கு தூக்கி வாரிப்போட்டது.

 “ஐயோ காய்ச்சல் இப்படி கொதிக்குதே! இப்போ என்ன செய்யறது?” வாய்விட்டுப் புலம்பியவன் குழந்தையைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு பக்கத்தில் இருந்த கிளினிக் கிளம்பினான்.

அங்கே சென்று பார்த்தால் எண்பதுக்கும் மேல் டோக்கன் நம்பர் சென்றிருக்கவே, ‘இவ்வளவு பேர் இருக்காங்களே..’என்ற தவிப்புடன் கையில் குழந்தையை வைத்து நின்றிருந்த கோலம் கண்டு ஒரு தாயாக நிர்மலாவிற்கு மனம் பதறியது.

அவர் எழுந்து செல்ல, “அம்மா எங்கே போறீங்க?” என்று கேட்டான் விக்னேஷ்.

சற்று தள்ளி நின்றிருந்த அரவிந்தனை கைகாட்டி, “நம்ம எதிர்வீட்டில் தங்கியிருக்கும் பையன் குழந்தையோடு வந்திருக்கிறான். அதுதான் என்னன்னு விசாரிச்சிட்டு வரேன்” என்றார்.

சட்டென்று நிமிர்ந்து பார்த்த விக்னேஷ், “நீங்க உட்காருங்கம்மா. நான் போறேன்” தாயைத் தடுத்து எழுந்து அவனின் அருகே சென்றான்.

“என்னங்க ஹாஸ்பிட்டல் வந்திருக்கீங்க? ஆமா குழந்தைக்கு என்னாச்சு?” அவனின் கலங்கிய தோற்றம் கண்டு விசாரித்தான்.

அதுவரை குழந்தையின் மீதே கவனத்தை பதித்திருந்த அரவிந்த் நிமிர்ந்து, “பாப்பாவுக்கு காய்ச்சல் அடிக்கிறது” என்றவனின் குரல் கரகரக்க கண்கள்  லேசாகக் கலங்கியது. 

தன் குழந்தையோடு சிரித்தபடியே வலம்வரும் அரவிந்தனை இப்படியொரு கோலத்தில் கண்ட விக்னேஷிற்கு ஒரு மாதிரியாகிவிட்டது. அதே நேரத்தில் அவனின் மனதில் தன்னுடைய தந்தையின் முகம் தோன்றி மறைந்தது. அவனுக்குக் காய்ச்சல் என்றாலே விடியும் வரையில் தோளில் சுமக்கும் தந்தையின் நினைவில் ஆழ்ந்தவனை நர்ஸின் குரல் நடப்பிற்கு இழுத்து வந்தது.

“இங்கே நிர்மலா யாருங்க” என்றவுடன் வேகமாக அவரின் அருகே சென்றவன்,

 “சிஸ்டர் இவரோட குழந்தைக்கு ரொம்ப முடியல. அதனால் இவங்களை உள்ளே அனுப்புங்க, இவரோட டோக்கன் நம்பர் வரும்போது என்னிடம் சொல்லுங்க” என்று கூற சரியென்று தலையசைத்து அரவிந்தனை உள்ளே செல்ல அனுமதித்தார்.

தன் மகனின் செயலைக் கண்டு மனம் நெகிழ, “நீயும் உள்ளே போ” என்றவர் சொல்ல அவனும் மறுப்பு சொல்லாமல் டாக்டர் குழந்தைக்கு ஊசிபோட வலியால் வீரிட்டு அழுதது குழந்தை.

 “இல்லடா செல்லம்.. பாப்பாவுக்கு இனிமேல் ஊசியே போட வேண்டாம்.. என் தங்கம் அழுகாதீங்க” அரவிந்தன் குழந்தையைச் சமாதானம் செய்ய, டாக்டர் மருந்தை எழுதிக் கொடுத்தார்.

அவனிடம் மருந்துச் சீட்டை வாங்கிகொண்டு, “நீங்க இங்கேயே இருங்க.. நான் போய் வாங்கிட்டு வரேன்” என்றதும் சரியென்று தலையசைத்து நிர்மலாவின் அருகே அமர்ந்தான். தன் மகனுக்கு நிகரான வயதுடையவன் தனியாகக் குழந்தையை வைத்துக்கொண்டு கஷ்டப்படுவதை காணும்போது மனம் வலித்தது.

அதற்குள் குழந்தைக்குக் கொடுக்க வேண்டிய மாத்திரை மருந்துகளை வாங்கி வந்தவனிடம், “தேங்க்ஸ்” என்றுபோது அரவிந்தனின் பெயர் அழைக்கபடவே நிர்மலா எழுந்து டாக்டரைப் பார்க்கச் செல்ல மகனும் அவரைப் பின்தொடர்ந்தான்.

சிறிது நேரத்தில் வெளியே வந்தவர், “லோ சுகர் இருக்காம் விக்கி. இனிமேல் ஜாக்கிரதையாக இருக்கணும். நேரத்துக்கு மெடிசன் எடுத்துக்க சொன்னாங்க” என்று கவலையோடு புலம்பினார்.

“அதெல்லாம் சரியாகப் போயிரும்மா” தன் தாய்க்கு ஆறுதல் கூறினான் விக்கி.

அவர்களுக்காகக் காத்திருந்த அரவிந்தனின் அருகே வந்தவர், “பிள்ளைக்குக் காய்ச்சல் எப்படி இருக்குப்பா” என்றார்

“இப்போ பரவால்லங்க” என்றவுடன் குழந்தையைப் பரமாரிக்கும் விதத்தை கூறவே, அவனும் கவனமாக கேட்டுக் கொண்டான். அதன்பிறகு மூவரும் வீடு சென்று சேரும்போது இரவு பதினோரு மணியைக் கடந்திருந்தது.

நிர்மலாவின் பேச்சு அரவிந்தனுக்கு தன் தாயை நினைவுபடுத்திட, “தேங்க்ஸ் அம்மா” என்றான்.

“இதில் என்ன இருக்கு. நீ ஹாஸ்பிட்டலில் கலங்கி நின்ற தோற்றம் இன்னும் மனசில் அப்படியே இருக்கு. இனிமேல் எதுவாக இருந்தாலும் எங்ககிட்ட சொல்லுப்பா” என்றதும் அவன் சரியென்று தலையசைக்க வீட்டிற்குள் சென்று மறைந்தார் நிர்மலா.

அரவிந்தனிடம் சாவியை வாங்கி வீட்டைத் திறந்தான் விக்னேஷ்.  தூங்கும் மகளைப் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு வெளியே வந்தவன், “திடீரென்று பாப்பாவிற்கு காய்ச்சல் அடிக்கவும் பதறிப் போயிட்டேன்” என்றான் நிம்மதியுடன்.

பிள்ளையின் மீது அவன் வைத்திருக்கும் பாசத்தை உணர்ந்தவன், “இதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லுவாங்களா? நீ முதலில் போய் பாப்பாவைப் பாரு” அவனிடமிருந்து விடைபெற்றுச் சென்றான்.

அதன்பிறகு தூங்கி எழுந்தவுடன் சிரித்த மகளைத் தூக்கி மார்புடன் அணைத்து, “பாப்பா கொஞ்ச நேரத்தில் என்னை இப்படி பயமுறுத்திட்ட செல்லம். உன் சிரிப்பு சத்தம் கேட்காமல் அப்பாவுக்கு ஏதோ மாதிரி ஆகிடுச்சு” என்று மகளுடன் பேசியபடி பாலைப் புகட்டினான்.

சற்றுநேரம் குழந்தையைத் தூக்கி தோளில் போட்டுத் தட்டி கொடுத்தவன் வீட்டிற்குள் நடை பயின்றான். காய்ச்சலில் கஷ்டப்பட்ட மகளை அல்லும் பகலும் அருகே இருந்து கவனித்துக் கொள்வதே அவனின் வேலையாகிப் போனது.

இதற்கிடையே அரவிந்தன் – விக்னேஷ் இடையே அழகான நட்பு மலர்ந்தது.

காலைபொழுது வழக்கத்திற்கு மாறாக மிக அழகாக விடிந்தது. அவனின் மனமெங்கும் ஒரு புத்துணர்ச்சி ஊற்றாகப் பெருகியது. பல நாட்களுக்குப் பிறகு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதுபோல அரவிந்தனுக்கு தோன்றியது .

ஒரு குழந்தையை யாரின் துணையுமின்றி வளர்ப்பது எவ்வளவு கடினம் என்பதை நாளுக்கு நாள் தன் தகப்பனுக்கு உணர்த்தினாள். அதே நேரத்தில் அரவிந்தனின் வாழ்க்கையை பூஞ்சோலையாக மாற்றினாள்.

காலையில் மனம் நிறைவாக இருக்கவே, “இன்னைக்கு அப்பாவும், பாப்பாவும் கோவிலுக்குப் போயிட்டு வரலாமா?” மகளிடம் கேட்க அவளோ கைகால்களை உற்சாகத்துடன் அசைத்துத் தன் சம்மதத்தைக் கூறினாள்.

தன் மகளைக் குளிக்க வைத்து ரெடி பண்ணிய சிறிது நேரத்தில், “அரவிந்தா?” என்று வாசலில் நிர்மலாவின் குரல் ஒலித்தது.

அவன் குழந்தையோடு எழுந்து வந்து எட்டிப்பார்க்க, “நானும், விக்கியும் கோவிலுக்குப் போறோம். நீயும் எங்களோடு வருகிறாயா?” என்று கேட்டவர் அவனின் கையிலிருந்த குழந்தையை வாங்கினார்.

“அச்சோ செல்லம் ரெடியாகிட்டாங்களா?” குழந்தைக்குச் சிரிப்பு மூட்டி சிரிக்க வைத்தவர்,

“ம்ம் நீ போய் சீக்கிரம் குளிச்சிட்டு வா” அதட்டல் போட்டு அரவிந்தனை அங்கிருந்து விரட்டினார்.

அவன் குளிக்கச் சென்ற சில நொடிகளில் தாயை தேடி வந்தவன், “ஓ மேடம் கூட பேசிட்டு இருக்கீங்களா?” சொடக்குப் போட்டுக் குழந்தைக்கு விளையாட்டு காட்டினான் விக்னேஷ்.

சிறிதுநேரத்தில் அரவிந்தன் கிளம்பி வரவே நால்வரும் குழந்தையுடன் திருப்பூர் திருப்பதி கோவிலுக்குச் சென்றனர்.  நிர்மலா வரிசையாக அர்ச்சனை செய்ய பெயர் மற்றும் ராசியைக் கூறினார்.

கடைசியாக, “குழந்தை பெயர் சொல்லுங்கோ” என்றதும் திருவிழாவில் காணாமல்போன பிள்ளை மாதிரி திருதிருவென்று விழித்தான் அரவிந்தன்.

“என்னப்பா குழந்தைக்கு இன்னும் பெயர் வைக்கவில்லையா?” நிர்மலா அவனிடம் கேட்டதற்கு மறுப்பாகத் தலையசைக்க,

“சரி சாமி பெயரில் அர்ச்சனை பண்ணிருங்க” என்றபோது தான் அவனுக்கும் தன் தவறு புரிந்தது.

விழிமூடி நின்றவனின் நினைவில் அவளின் பளிங்கு முகம் தோன்றி மறைய, ‘அவ எங்கிருந்தாலும் நல்லபடியாகப் படிச்சு நல்லவொரு நிலைக்கு வரணும் கடவுளே! இதுவரை நீ அவளுக்குக் கொடுத்த கஷ்டங்கள் போதும். இனிமேலாவது அவளோட வாழ்க்கையில் சந்தோஷத்தை மட்டுமே கொடுப்பா’ அவனையும் அறியாமல் மனமார வேண்டிக் கொண்டு விழி திறந்தான்.

அப்போது கடவுளுக்குத் தீபாராதனை காட்டப்படவே நிறைவாக உணர்ந்தான்.

அங்கிருந்த பிரகாரத்தில் அமர்ந்த நிர்மலா, “குழந்தைக்குக் பெயர் வைக்காமல் இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கிற?” என்று கோபத்துடன் கேட்டார்.

தன் மகளுக்குப் பசியை ஆற்றி விக்கியிடம் கொடுக்க, “பாப்பா உங்க அப்பாவுக்கு அறிவே இல்ல” தகப்பனை கேலி செய்ய, குழந்தையோ கிளுக்கென்று சிரித்தது.

அந்தச் சிரிப்பில் தன்னை மறந்த அரவிந்தன், “உனக்குப் பெயர் வைத்துத் தொட்டிலில் போடும் எண்ணமே எனக்கு வரல பாப்பா. இந்நேரம் நம்ம குடும்பம் எல்லோரும் இருந்திருந்தால் என்னைத் திட்டியே தீர்த்திருப்பாங்க” மன வருத்தத்தை வெளியிட அவனுக்கு ஆதரவாகத் தோளில் கை வைத்தான் விக்னேஷ்.

சட்டென்று சோகத்திலிருந்து மீண்டு வந்தவன் குழந்தையைத் தூக்கி மடியில் படுக்க வைத்தான். மகளின் தளிர் விரல்களை வருடியவன், ‘என் வாழ்க்கைக்கு வரமாக வந்தவள் நீதான். இன்னைக்கு நான் மனதார சிரிக்க நீதான் காரணம். என் வாழ்க்கைப் பாதையை மாற்றிய செல்வம்’ மனதினுள் நினைத்தபடி மகளின் கரம்பற்றி முத்தமிட்டான்.

அவனின் மனநிலை உணர்ந்து நிர்மலா, விக்னேஷ் இருவரும் அமைதியாக இருக்க, “உதயா” என்றழைக்க குழந்தை கிளுக்கென்று சிரித்தது.

மகளின் சிரிப்பில் மெய் மறந்த அரவிந்த், “என் தங்ககட்டிக்கு இந்தப் பெயர் பிடிச்சிருக்கிறதா?”  நெற்றியில் முட்டி குறும்புடன் சிரித்தவனின் மீசையைப் பிடித்து இழுத்தாள் சின்னவள்.

“ஆ உதிம்மா அப்பாவுக்கு வலிக்குதுடா” செல்லமாகச் சிணுங்கியவன் குழந்தையைத் தூக்கி தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்தான்.

தகப்பனும், மகளும் இருக்கும் உலகத்திற்குள் செல்ல முடியாமல், “உங்க டிஸ்கஷன் முடிஞ்சுதா?” குறுஞ்சிரிப்புடன் கேள்வியாகப் புருவம் உயர்த்தினான் விக்னேஷ்.

பிறகு,“உன் குடும்பம் இல்லன்னு கவலைபடாதே அரவிந்த். உனக்கு நல்லது சொல்லிதர நாங்களும் பக்கத்தில் இருக்கோம் என்பதை மட்டும் மனசில் நினைச்சுக்கோ” என்று கூறிய நிர்மலா குழந்தைக்குப் பெயர் வைக்க நல்ல தேதியைக் குறித்து தரச் சொல்லி ஐயரிடம் பேசினார்.

அடுத்து வந்த ஒரு நல்ல நாளில் வீட்டிற்கு அருகில் இருப்பவர்களை அழைத்து மகளுக்கு வெகு விமரிசையாகப் பெயர் வைக்கும் வைபவத்தை நடத்தினான் அரவிந்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!