கந்தர்வ லோகா 40(Pre-Final)
தன்னுடைய அந்த அழகிய தேகம் விட்டு வெளி வந்து காற்றில் கலந்தவனாக இப்போது இருந்தான் அதீந்த்ரியன். லோகாவை நெருங்க முடியாத காரணத்தால் அவளை நெருங்க முயற்சித்து தோற்றுவிட்டான். இப்போது வேறு வழியின்றி தன்னுடைய தெய்வமான காமதேவனை அழைத்துக் கொண்டிருந்தான்.
காற்றைக் கிழித்துக் கொண்டு புயல் வேகத்தில் வந்தது ஒரு பூப்பந்து. அதை வணங்கிக் கொண்டு நின்றான் அதீந்த்ரியன்.பூப்பந்து அவன் எதிரே வந்து நின்றது. அது முழு உருவம் பெறாமல் அப்படியே அந்தரத்தில் பறந்தபடி இருந்தது. காற்றில் கலந்து அரூபமாக இருந்த அதீந்த்ரியன் தனது வரிவடிவத்தை மட்டும் பெற்று அதன் முன் மண்டியிட்டான்.
அந்தப் பூக்குவியல் பேச ஆரம்பித்தது.
“ அதீந்த்ரியா.. என்ன உனது சங்கடம்?” கேட்டது தான் தாமதம், உடனே நெருப்புப் பற்றிக் கொண்ட பட்டாசைப் போல வெடிக்க ஆரம்பித்தான். தன் மனக் குமுறல்களை , இத்தனை நாள் யாரிடமும் பகிரப்படாத தன் எண்ணங்களை சொல்ல ஆரம்பித்தான்.
“ தேவ தேவா! என்னுடைய கவலை ஒன்றே! அது லோகாஷி.. நான் இந்த பூமிக்கு பல நூறு முறை வந்திருக்கேன். வந்து ஒரு பெண்ணைக் காதலிக்கத் தொடங்கிவிட்டால், அவளுடன் மனதோடு மனதாக காதலித்து, அந்த இன்பத்தை சுகித்து, உடலோடு உடல் கலந்து, காம ரசத்தை அனுபவிக்காமல் நான் கந்தர்வ லோகம் திரும்பியது இல்லை.
அனைத்து பெண்களும் என்னை விரும்பினர். முழு மனதோடு அவர்களை நானும் என்னை அவர்களும் கொடுத்து வாங்கிக் கொண்டோம்.
பேரின்பத்தில் திளைத்து தோல்வியே காணாமல் இருந்து வந்தேன். ஆனால் இன்று, நடப்பவை அனைத்தும் என் காதலியை என்னிடம் சேர விடாமல் செய்கிறது. நான் இம்முறை இந்த உலகிற்கு வந்ததன் பலன் கிடைக்காமலே போய்விடும் போல இருக்கிறது. லோகாவை நான் அவளது சிறு வயது முதலே காதலிக்கிறேன்.
பார்த்துப் பார்த்து ரசித்து அவளை செதுக்கி, அணு அணுவாக அவளை காதலித்து, என் மனம் உடல் அனைத்தும் இப்போது அவளைத்தான் தேடுகிறது.
இனி இந்த உலகத்தில் வேறு ஒரு பெண்ணை நான் பார்க்க வருவேனா என்பதும் சந்தேகம் தான். மனம் வேதனைப் படுகிறது. இந்த உலகத்தை விட்டு சென்ற பிறகு , முன்பு நான் பழகிய அனைத்து பெண்களையும் மறந்துவிட்டேன். அது நியதி.
ஆனால் நான் மறக்கக் கூடாது என்று நினைப்பது லோகஷியை மட்டும் தான். இனி இந்த உலகிற்கு நான் திரும்பி வரவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் லோகா எனக்கு வேண்டும்.
ஏன் இந்தப் பெண்ணை நான் நெருங்கவும் முடியவில்லை? மற்ற பெண்களுக்கு நான் இத்தனை நாள் எடுத்துக் கொண்டதே இல்ல. மொத்தம் ஒரே மாதத்தில் அனைவரும் என் மடியில் இருந்தனர்.
லோகாவிற்காக மட்டுமே நான் இத்தனை ஆண்டுகள் இங்கு இருந்தேன். அவளைக் கண்டதும் நான் கொண்ட காதல் என்னை காத்திருக்க வைத்தது. ஆனால் அவளை என்னிடமிருந்து பாதுகாக்க இத்தனை பேர் போராடுகிறார்கள். அவள் பின்புலம் சாதரனமாது இல்லை என்பதை நான் உணர்வேன்.
இருப்பினும் என்னால் ஏன் அவளிடம் முன்னேற முடியவில்லை?. என் சக்திகள் அனைத்தும் செயலிழக்கிறது. ஒரு புறம் அவளின் பாட்டி, மறுபுறம் அவளுக்காக காத்திருக்கும் விஷ்வா இன்னொரு புறம் காவல் தெய்வம் .
நானும் ஒரு கந்தர்வன். தேவலோகப் பிறவி. ஏதோ அசுரனை கொல்லக் காத்திருப்பது போல என்னை விரட்ட நினைப்பதும், அவளைத் நெருங்க விடாமல் செய்வதும் , எனக்கே என்னைக் கெட்டவன் போல சித்தரிக்கிறார்கள்.
லோகாவிற்கும் என்னைப் பிடித்திருக்கிறது. அவளும் என்னைக் காதலிக்கிறாள். வேறு என்ன வேண்டும் தேவா.. எனக்கு ஒரு வழி சொல்லுங்கள். லோகாவை அடைய இன்னும் நான் என்ன செய்வது என்று புரியவில்லை.” முழுமூச்சாக அனைத்தையும் சொல்லி முடித்தான்.
அவன் சொல்வதை கேட்டு அமைதியாக இருந்தப் பூச்செண்டு இப்போது மீண்டும் பேசத் தொடங்கியது.
“அதீந்த்ரியா.. உன் மன நிலை எனக்கு நன்றாகப் புரிகிறது. நீ ஒரு பெண்ணை நேசித்தால், அது மனதின் அடி ஆழத்திலிருந்து புறப்படும் நேசம் மட்டுமே. ஆனால் அது நிச்சயம் கூடலில் முடிந்தவுடன், உன்னுடைய உலகத்திற்கு நீ திரும்பியே ஆகவேண்டும்.
அதை உன்னால் ஒருக்காலும் மாற்ற முடியாது. அப்படி வந்த வேலை முடியவில்லை என்றாலும் உன் மனது சங்கடப் பட்டாலும் உனக்கான நேரம் முடிந்த தருவாயில் நீ திரும்பி விட வேண்டும்.
நீ இந்த உலகத்தில் இம்முறை வந்ததற்கு , லோகாஷியை யும் அடையவில்லை. உன்னுடைய காலத்தையும் இழந்துவிட்டாய். இன்னும் உனக்கு பூலோக கணக்குப் படி ஒரே ஒருசில நாட்கள் மட்டுமே மிச்சம். நீ வந்த வேலை முடிந்தாலும் முடியாவிட்டாலும் , இந்த உலக நினைவை இழந்து உன்னுடைய உலகத்தின் நினைவில் மட்டுமே நீ இருக்க முடியும்.
லோகாஷி என்பவள் சாதாரணப் பெண் தான். ஆனால் அவளது முன்னோர்கள் செய்த பலன்களினாலும் , தெய்வ சக்தி பொருந்திய அவளது பாட்டிமார்களின் உதவியினாலும் அவள் வாழ்வு காக்கப் படுகிறது.
அவளைக் காதலிப்பவனும் உனக்கு இணையாக, உன்னை விட ஒரு படி மேலேயே அவளைக் காக்கத் துடிக்கிறான்.
அதனால் இதில் நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை. உன்னால் அவளை விட்டுவிட முடிந்தால் அதை செய்துவிடு. இல்லையென்றால் வேறு வழியில் அவளை நெருங்க முயற்சி செய். அந்த காவல் தெய்வத்தை தாண்டி நீ அவளை நெருங்க வேண்டுமென்றால் அந்த தெய்வத்திடம் வேண்டு. அனைத்தும் உன் கையில் தான் இருக்கிறது.
உன்னுடைய காலம் முடிந்த பிறகும் நீ இங்கு தங்கினால் உனக்கு அங்கு தண்டனை கிடைக்கும். அதையும் நினைவில் வைத்துக் கொள். நான் வருகிறேன்.” ஒரு பெரிய அறிவுரையைப் போல சொல்லிவிட்டு மீண்டும் வந்த வழியே சுழன்று சென்று விட்டது அந்தப் பூங்கொத்து.
அதீந்த்ரியன் இப்போது இரு மனதுடன் மிதந்து கொண்டிருந்தான். நேரம் முடிவதற்குள் தன் இடத்திற்கு செல்ல வேண்டும் என்பது, மற்றொன்று லோகாவை எப்படி அடைவது என்பது.
ஆனால் அவளை விட்டுவிடும் எண்ணம் மட்டும் அவனுக்கு வரவே இல்லை. அந்த அளவிற்கு லோகாவின் மேல் அவன் அன்பு செலுத்தினான்.
இப்போதும் லோகாவை அவன் நெருங்க முடியவில்லையே தவிற, இன்னும் அவள் அவனது கட்டுப்பாட்டில் தான் இருந்தாள். அந்த காவல் தெய்வத்தின் பிடியிலிருந்து அவளைக் கொண்டு வர நினைத்தான்.
அதற்கு முதலில் அவளது கனவிற்குள் புகுந்து அவளை எழுப்பி, பின்பு அவளை அங்கிருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அவளது கனவிற்குள் புகுந்தான்!
கனவில் அவளை மென்மையாக எழுப்பினான். அவள் இருந்த அந்த வீட்டைப் போலவே கனவிலும் அமைத்து அதை நிஜம் என்று நம்ப வைக்க முயன்றான். அவள் நன்றாக உறங்கிக் கொண்டிருக்க, மெல்ல அவளை நெருங்கி அவளது கன்னத்தை தொட நினைக்க, அவனால் முடியவில்லை. அவள் அருகில் நெருங்கினால் , நடுவில் ஏதோ தடுப்பு வைத்து அவனைத் தடுப்பது போல இருந்தது.
“ச்சே! என்ன இது கனவிலும் அவளை நெருங்க முடியவில்லையா!” அவனது கோபம் தலைக்கேறியது.
இதற்கு ஒரே வழி மன்மதன் சொன்னது போல அந்த தெய்வத்திடம் வேண்டுவது மட்டுமே என்று அவன் எண்ணிக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் அவளை நிஜத்தில் யாரோ எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.
அது யாரென்று பார்த்தவன் அதிர்ந்தான். அது விஷ்வா தான். இன்னும் இரண்டு நாள் கழித்துத் தான் வருவான் என்று எதிர்ப்பர்த்திருந்தான். ஆனால் இப்போதே அவன் வந்தது இவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது.
விஷ்வா அங்கே சென்று முதலில் தேடியது லோகாவைத் தான். பாட்டியை முதலில் பார்க்க வேண்டும் என்று குருஜி சொன்னாலும், அவன் மனது லோகவிடம் தான் வந்து நின்றது.
அதை சொல்லாமல் அவன் வந்தாலும், குருஜி புரிந்து கொண்டார்.
“சரி விஷ்வா நான் பாட்டியை தேடிப் போறேன், நீ லோகா கிட்ட போ. அவளையும் கூட்டிட்டு சீக்கிரம் வா.. “ அவர் ஒரு அழுத்தம் கொடுத்து சொல்ல,
அவன் சாதரணமாக எடுத்துக் கொண்டு, “ அவள எழுப்பிட்டு உடனே அங்க வரேன் குருஜி!” அவளைக் காணப்போகும் உற்ச்சாகத்துடன் துள்ளினான்.
“ விஷ்வா! உனக்கு புரியல. நீ அவள எழுப்பினாலும், இன்னும் அவ அதீந்த்ரியனோட கட்டுப்பாட்டுல இருக்கா.. இது தான் உனக்கான சந்தர்ப்பம்.
அவள நீ எழுப்பினாலும் எந்திரிக்க மாட்டா. அது அதீந்திர்யனோட கட்டு. அவன் தான் அவளை எழுப்ப முடியும். ஆனா, இந்த சந்தர்ப்பத்தை நீ நல்லா பயன்படுத்திக்கோ. “ அவர் எச்சரிக்கையாகக் கூற,
“ஓ! என்னை அவளுக்கு இப்போ தெரியாதுல்ல..” அவன் குரலில் வலி இருந்தது. தாழ்ந்த குரலில் பேச அவன் கண்ணில் வருத்தத்தை உணர்ந்தார் குருஜி. அவனது கையை ஆதரவாகப் பற்றிக் கொண்டார்.
“ இது நீ தைரியமா கடக்க வேண்டிய ஒரு பாதை. இத தாண்டி நீ வந்துட்டா அப்பறம் உங்க வாழ்க்கை முழுசும் ஆனந்தமா இருக்கலாம். அவ உனக்காகப் பிறந்தவ விஷ்வா. அவளை நீ தான் வெளில கொண்டு வரணும்” உடைந்த அவனது மனதிற்கு ஓட்டுப் போட்டுக் கொண்டிருந்தார்.
அவனுக்கும் தாள முடியாத வேதனை மனதை அடைத்தது. இருந்தும் அதை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு , தன்னவளை காக்கும் கடமை தனக்கு இருப்பதை உணர்ந்தான்.
சக்கரங்களை திறந்ததன் மூலம் அவனுக்கு முதிர்ச்சி அதிகமாகியிருந்தது.அது எந்த வருத்தத்தையும் கடந்து வர உதவி செய்தது.
அந்த ஊர் வந்ததும் முதல் வேலையாக பாட்டியை பார்க்கச் சென்றார் குருஜி! பாட்டியின் இந்த முடிவில் குருஜிக்கு பெரும் அதிர்ச்சியே! ஆனாலும் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளதை நினைத்து மிகவும் ஆனந்தப் பட்டார்.
பாட்டி கோயில் மண்டபத்தில் அம்மனின் அருள் கிடைத்த மகிழ்ச்சியிலும், அடுத்து தான் உயிர் துறக்க வேண்டிய சமயத்தையும், லோகாவின் நிலையையும் குறித்து உறங்காமல் விழித்திருந்தார்.
‘அம்மா, விஷ்வா பாத்துப்பான்னு சொல்லிட்டா.. ஆனா விஷ்வா இங்க இல்லையே! அவன் எப்படி இங்க வர முடியும்! லோகா இப்போ என்ன செஞ்சுட்டு இருப்பா..!’ மனதில் அனைத்தையும் போட்டு யோசிக்க, தூக்கம் எங்கிருந்து வரும்!
விடியும் சமயம் அந்த பூசாரியின் வீட்டை விசாரித்துக் கொண்டு போனார் குருஜி. ஆங்காகே மக்கள் எழுந்து நடமாடியதால் அவரால் சுலபமாக அது முடிந்தது.
பூசாரி வாசில் நின்று கொண்டிருந்தார். அவராலும் அன்றிரவு உறங்க முடியவில்லை. தன்னுடைய அம்மனிடம் பாட்டி சரணடையப் போவது அவருக்கு உடம்பில் ஒரு படபடப்பை உண்டு செய்தது.
குருஜி அங்கு சென்று பூசாரியைப் பார்த்தார்.
“வணக்கம்! நான் வெளியூர்ல இருந்து வரேன். லோகாஷி அவங்க பாட்டிய நான் பார்க்கணும்.” அவருக்கே உரித்தான சாந்தமான குரலில் விசாரிக்க,
“ அவங்கள பார்க்கத் தான் நானும் கிளம்பறேன். கோயில் இன்னும் கால் மணி நேரத்துல திறந்திடுவோம். அப்போ பார்க்கலாம் அவங்களப் பத்தி உங்களுக்கு எல்லாம் தெரியுமா? இப்போ அவங்க அங்க தங்கியிருக்கற விவரம்…” என்று இழுக்க,
“ எனக்கு எல்லாம் தெரியும். அவங்களுக்கு யோகா சொல்லிக் குடுத்த குரு நான். அவங்களப் பத்தி எல்லாம் சொல்லியிருக்காங்க. அதுனால தான் இப்போ அவசரமா வந்தோம்.” ‘வந்தோம் என்று பன்மையில் கூற, அருகில் யாரும் இல்லாதததை பூசாரி கவனிக்க,
“என்கூட வந்த விஷ்வா இன்னும் கொஞ்ச நேரத்துல வருவான். லோகா வை பார்க்கப் போயிருக்கான்.” என்று சொல்ல,
பூசாரி அனைத்தும் புரிந்து கொண்டார்.
“சரி வாங்க! நாம கோயிலுக்குப் போகலாம்” இருவரும் வேக நடை போட்டு கோயிலிக்கு விரைந்தனர்.
விஷ்வா ஊர் எல்லையிலேயே படுத்திருந்த தன்னவளை நோக்கி ஓடினான். அங்கே தன் நிலைமையை அறிந்து கொள்ளாமல் படுத்து இருந்தாள் லோகா. அவளிடம் எந்த அசைவும் இல்லை.
மெல்ல அவள் அருகில் சென்றவன், நெடுங்காலம் அவளைப் பிரிந்து இருந்துவிட்டதைப் போல உணர்ந்தான். அமைதியாகத் தூங்கும் குழந்தை போல அவள் படுத்துக் கிடந்தாள்.
அருகில் சென்று அமர்ந்தான். அவளது தலையை தூக்கி தன் மடியில் கிடத்திக் கொண்டான்.
தூக்கத்தில் அவள் ஏதோ சங்கடமாக உணர , புருவத்தை சுருக்கினாள். அதை மெல்ல நீவிக் கொடுக்க, மீண்டும் அசைவின்றி உறங்கினாள்.
“’லோகி! ஏன் டி இப்படி இருக்க? நமக்கு ஏன் இந்த நிலை? ஏன் அவன் கண்ணுல பட்ட.. என்னால உன்ன அவனோட பிடில வெச்சுட்டு நிம்மதியா இருக்க முடியல. அவன விட்டு சீக்கிரம் வந்துடு செல்லா.. ப்ளீஸ் நீ இல்லாம என்னால இருக்க முடியாது. என்னதான் மைன்ட் அண்ட் மனச நான் ரெடி பண்ணிட்டு வந்தாலும் உன்கிட்ட வரப்ப அந்த மெச்சூரிட்டி காணாம போய்டுது.
நீ என்னோட உயிரோட கலந்தவ. உணர்வுகளோட கலந்தவ. நீ வேற நான் வேற இல்ல. “ அவளது அந்த அழகிய முகத்தை கையில் எடுத்துக் கொண்டு பேசிக்கொண்டிருந்தான். பித்தன் போல புலம்பினான்.
அத்தனையும் அவளைப் பிரிந்து இருந்து வலி. வேறு ஒருவன் பிடியில் அவள் இருகந்தும் மீட்க முடியாமல் இருப்பதன் இயலாமை. வெடித்து அழ வேண்டும் போல இருந்தது அவனுக்கு. அனால் இத்தனை நாள் பயிற்சி அதை செய்ய விடவில்லை.
மனதின் அழுத்தம் உயிர் வலியை கொடுத்தது. அவள் விழித்துக் கொண்டிருப்பதாக நினைத்து புலம்பினான் அந்த பதுமையிடம்.
“ இங்க பாரு வாண்டு! நான் இப்போ உன்னை எழுப்புவேன். எந்திரிச்சு ஒழுங்கா விஷ்வா வந்துட்டியானு என்னை கட்டிக்கணும். இல்லனா எனக்கு கேட்ட கோவம் வரும்.!புரியுதா டி” அவளின் முகமெங்கும் முத்தமிட்டான்.
பின் சுதாரித்துக் கொண்டு அவளைப் பிடித்து உலுக்க ஆரம்பித்தான்.
அந்த நேரம் அவளைக் கனவில் எழுப்ப முயன்ற அதீந்த்ரியன் , இதனால் எரிச்சலுற்றான்.
தன்னுடைய ஆன்ம பலத்தாலும் , தேவ லோகப் இரவி என்பதாலும், கடவுடன் எளிதில் பேசும் வரம் வாய்க்கப் பெற்றிருந்தான்.
அதன்படி அந்த காவல் தெய்வத்தை வேண்டினான். தெய்வம் அவனிடம் அசரிரியில் பேசியது.
“உன்னுடைய விருப்பம் நிறைவேற நீ கேட்கிறாய். இருந்தாலும் என் பக்தர்களின் விருப்பங்களை நான் நிறைவேற்ற வேண்டும்.”
“ என்னுடைய இயல்பு மாறாமல் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறன். அதற்குத் தான் இந்த வேண்டுதல் தாயே!” – அதீ
“இருக்கலாம்.இருந்தாலும் சாதாரண மக்கள் , அவர்கள் உன்னை தடுக்க இத்தனை முயற்சி செய்தும் நீ அவளை விடாமல் இருப்பது தான் வியப்பு. “ – அசரிரி
“ அந்த அளவு நான் அவளை நேசிக்கிறேன் தாயே! ஒரு வாய்ப்பை எனக்குத் தர வேண்டும்!” – அதீ
“ சரி உன் நேசம் தூய்மை அதனால் உனக்கு ஒரு வாய்ப்பளிக்றேன். அவளை முன் போல் நீ நெருங்க முடியும். என்னுடைய காவலை நான் நிறுத்தி விடுகிறேன். இனி வேறு ஒருவர் முயற்சியால் அவர்கள் உன்னை வென்றால் அதற்கு நான் பொறுப்பல்ல. என் வழியிலிருந்து நான் விலகுகிறேன் அவ்வளவே!” – அசரிரி
“மிக்க நன்றி தாயே! இனி நானா அந்த விஷ்வாவா என்று பார்த்துவிடுகிறேன்”
விஷ்வா அவளை எழுப்பிக் கொண்டிருக்க, திடீரென அவன் முன்னே குதித்தான் அதீந்த்ரியன்.
லோகா விஷ்வாவின் மடியில் இருப்பதைக் கண்டு கொதித்தான். எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மெதுவாக அவனைப் பார்த்தான் விஷ்வா. அவனுக்கு இப்போது அந்த கந்தர்வனும் சாதாரண மனிதனைப் போலத் தான் தோன்றினான்.
“ விஷ்வா! அவளை என்கிட்டே கொடுத்திடு!” கோபத்தை கண்ணில் தேக்கி வைத்துக் கேட்டான்.
“ உனக்கும் அவளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அவள விட்டுப் போயிடு!” பல்லைக் கடித்துக் கொண்டு பேசினான்.
“ இதோ பார். உனக்கு விளக்கம் கொடுத்து அவளை நான் நெருங்க வேண்டும் என்ற அவசியமில்லை.” அவனிடம் நின்று பேசவே அவன் விரும்பவில்லை. லோகா தன்னை விட்டுப் போய்விடக் கூடாது என்று மட்டுமே எண்ணினான்.
“எனக்கு நீ விளக்கம் கொடுக்கணும்னு நான் கேட்கல, போய்டுன்னு தான் சொல்றேன். அவளோட வாழ்க்கை என்னோட பிணைக்கப் பட்டு இருக்கு. அவ்வளவு சாதாரணமா உனக்கு தூக்கிக் கொடுக்க நான் ஏமாளியில்ல.
அதோட, உன்கூட பேசற வல்லமை, உன்னை கண்ணால பார்க்கற வலிமை எல்லாம் நானும் கஷ்டப் பட்டு வரவெச்சுகிட்டு தான் வந்திருக்கேன். என்னை அவ்வளவு சீக்கிரம் நீ துரத்த முடியாது.” அவன் லோகாவின் தலையை வருடிய படியே அவனைப் பார்த்து நக்கல் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு சொல்ல,
வெகுண்டான் அதீந்த்ரியன். கோபக் கனல் கண்களில் வீச, அவன் எதிர் பாராத நேரத்தில் சட்டென காற்றாய் பறந்து லோகாவைத் தூகிக் கொண்டான்.
அவன் தூக்கிய வேகத்தில் உடனே எழுந்தாள் லோகா. அதைக் கண்ட விஷ்வா அவளை தன்னிடம் அழைத்தான்.
“லோகி இந்தப் பக்கம் வா. அவன் வேண்டாம் உனக்கு. வா லோகி!” பதறிய மனதை அடக்கிக் கொண்டு கத்தினான். ஆனால் அடுத்த நொடியே அவன் மனத்தைக் கூறு போட்டுக் கிழித்தாள் அவனது மகாராணி.
அதீயின் கையில் இருந்தவள், விஷ்வா என்று ஒருவன் நின்று அங்கு கத்திக் கொண்டிருப்பதையே அறியவில்லை. அவள் கண்களுக்கு அதீந்த்ரியன் மட்டுமே தெரிந்தான். விஷ்வாவை அவள் கண்களிலிருந்து மறைத்து விட்டான் அதீ.