Thendral’s KL 39
Thendral’s KL 39
கந்தர்வ லோகா 39
அதிகாலையில் விஷ்வா கண்கள் சிவக்க குருஜியின் முன் அமர்ந்தான். அவனுக்கு உறக்கம் வராமல் இருக்க, கண்களில் குளிர்ந்த நீரை வைத்து துடைத்துக் கொண்டே இருந்தான்.
அதனாலேயே கண்கள் பாதி சிவந்து விட்டது.குருஜி அவன் நிலையை நன்கு அறிந்தார்.
“விஷ்வா ரொம்ப கஷ்டமா இருக்கா?”
“இல்லை குருஜி. லோகா வ பத்தி நினைச்சுகிட்டா இதெல்லாம் ஒண்ணுமே இல்ல. என்னோட காதலை கடைசி வரை காப்பாத்த ஒரு வாரம் கஷ்டப்பட மாட்டேனா? அவ சின்ன வயசுலேந்து என்மேல காட்டின அன்புக்கும் அக்கறைக்கும் முன்னாடி இதெல்லாம் சாதாரணம்.
நான் எவ்வளவு அடிச்சாலும், கோபமா பேசி துரத்தினாலும், திரும்ப என்கிட்ட தான் வருவா. கொஞ்சம் கூட என்கிட்ட ஈகோ காட்ட மாட்டா.
அன்னைக்கி அவ கனவுல நான் வராம வேற ஒருத்தன் வந்தான்னு என்கிட்டே சொல்லி சின்ன புள்ள மாதிரி அழுதா. அப்போவே முடிவு பண்ணிட்டேன். அவளுக்காக என்ன வேணா செய்யலான்னு.
எனக்கு இப்போ ஒரு விஷயம் தெரியனும் குருஜி!” சோகாமாகச் சொல்லியவன் சிறு சந்தேகத்தில் நிறுத்த,
குருஜியும் என்னவென்று பார்த்தார்.
“ சொல்லு விஷ்வா..!”
“ அந்த கந்தர்வன் கிட்டேந்து அவளை நாம வெளில கொண்டு வந்ததுக்குப் பிறகு , அவளுக்கு அவனோட இருந்த நிகழ்வுகள் ஞாபகம் இருக்குமா?”
அவன் கேட்டது அவருக்கு சிறு உறுத்தல் இருந்தது.
“ ஏன் விஷ்வா கேட்கற?”
“ அவளுக்கு நடந்தது நிஜம்ன்னு அவளுக்குத் தெரிஞ்சா என்கூட அவ ஒரு உறுத்தலோட வாழ ஆரம்பிச்சுடுவாளோனு எனக்கு பயமா இருக்கு குருஜி! என்னோட பழைய லோகி எனக்கு வேணும். அந்த குறும்புத்தனம் , துருதுருப்பு இதெல்லாம் வேணும். அவ இத நினச்சு கஷ்ட படறது எனக்கு சுத்தமா பிடிக்கல. எப்படி இருந்தாலும் அவ என்னோட லோகி. அவ எப்படி இருந்தாலும் எனக்கு அவ வேணும். ஆனா அவளுக்கு நடந்தது எதுவும் தெரியாமல் இருக்கறது நல்லது. அவள பொறுத்த வரை அது ஒரு கெட்ட கனவாவே இருக்கணும். அப்படி தானே குருஜி இருக்கும்!” ஆவலாக அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“நீ சொல்லவறது எனக்கும் புரியுது விஷ்வா. ஆனா அது நம்ம கையில இல்லை. அது விதியோட கையில இருக்கு. அவன் எப்படி அவள விட்டு போகப் போறாங்கறத பொறுத்து இருக்கு. அவனோட நினைவுகளையாவது கொடுக்கணும்னு சில பேர் நினைக்கலாம். இல்லனா எந்த சுவடும் இல்லாம அழிச்சுட்டு போனாலும் போகலாம். நீ கவலைப் படாத. இப்போதிக்கு நாம நம்பிகையோட இருப்போம். நம்மளோட பாசிடிவ் வேவ்ஸ் தான் நமக்கு பலம். அது உனக்கு நல்லாவே தெரியும். அதுனால நல்லதையே நினைப்போம். “ குருஜி நம்பிக்கை கொடுத்தார்.
நீண்ட ஒரு மூச்சை வெளிவிட்டான் விஷ்வா. ‘இன்னும் எத்தனை கஷ்டம் தான் தாங்குவாள் அவள். எதுவாக இருந்தாலும் நான் தாங்கறேன் டி. உனக்கு வேண்டாம்.’ அவன் மனம் அவளுக்காகவே துடித்தது.
கண்ணை மூடி தன்னை சமன் செய்துகொண்டவன், உடனே குருஜியிடம்,
“அடுத்த நாம தொண்டை பகுதில இருக்கற சக்கரத்த தான திறக்கப் போறோம் “ தன் அடுத்த செயலில் கவனம் வந்தது..
குருஜியும் அதில் கவனத்தை செலுத்த, கழுத்துப் பகுதியில் இருக்கும் சக்கரம் அவனுக்கு மிகவும் எளிதானது.
அது உண்மையை மட்டும் சார்ந்தது. உண்மை என்னும் பொக்கிஷம் பொய்களால் மறைந்திருக்கும். அதை தூசிதட்டி வெளியே எடுக்கும்போது அது இன்னும் பிரகாசமாக இருக்கும்,
சிலர் வேண்டுமென்றே பொய் கூறுவது இல்லை. ஆனால் உண்மையை மறைத்து அல்லது திரித்துக் கூறுவர். அந்த நேரங்களில் நம் மனது அதை தவறென்று உணர்ந்தும் செய்கிறது.
ஆனால் உண்மை சொல்வதில் இருக்கும் ஆனந்தம் என்றும் நிரந்தரமானது. யாருக்கும் பயப்படாமல் எந்த வித மனச்சங்கடமும் இல்லாமல் வாழ அது ஒரு சிறந்த மருந்து.
விஷ்வா எந்த சூழ்நிலையிலும் உண்மையை மறைத்தது இல்லை, ஒரு சில நேரங்களில் மட்டும் செய்திருக்கிறான், ஆனால் அது மற்றவரை சந்தோஷப் படுத்துவதற்காக மட்டுமே தான் இருக்கும்.
அவனுக்கு இந்த சக்கரத்தை திறப்பது ஒன்றும் சிரமமாக இல்லை. அதை எளிதாக அவன் செய்தான்.
அதனால் அடுத்த நிலையான நெற்றிப் பொட்டில் இருக்கும் சக்தி , அது தான் ஒளி சக்கரம்.
அதையும் அவன் திறப்பதற்கு உதவினார். அந்த சக்கரம் மிகவும் சக்தி வைத்தது. அது அனைவருக்கும் வசப்படாது.
ஏனெனில் அதை முழுமையாகப் பெற பரந்த மனதும் அறிவும் வேண்டும்.
இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளும் ஒன்று என்று உணரும் நிலையை அவன் அடையவேண்டும்.
ஆடு மாடு முதலிய விலங்குகளும் , காட்டில் வாழும் உயிரினங்களும், மற்றும் பறப்பன ஊர்வன மிதப்பன , மரம் ,செடி கொடி ஆகியனவும் மனிதனும் அனைத்தும் ஒன்று என்ற நிலை.
அது அனைவருக்கும் சாத்தியமில்லை. மனிதர்களுக்குளேயே ஏற்றத் தாழ்வு நிலவும் உலகமிது. பணக்காரன் ஏழை , உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி போன்ற சச்சரவுகள் நிறைந்த வாழ்வு. இதில் விலங்குகளுடன் ஒன்றாவது எவ்வாறு சாத்தியம்!
ஆனால் விஷ்வா இதை முன்னமே அறிவான். குருஜி அவனுக்கு முதலில் எடுத்த பாடமே இது தான்.
‘அனைத்து உயிர்களும் இறைவனுக்குள் ஐக்கியம். இதில் ஏற்றத் தாழ்வுக்கு இடமில்லை. உன்னைப் படைத்தது போலவே சில குணங்களுடன் அவற்றையும் படைத்தான் இறைவன்.
மரங்களோடு உன்னை நீ ஒப்பிட்டுப் பார்க்கும் போது நீ உயர்ந்தவனாக உனக்கு தெரியலாம். ஆனால் அதற்கு இருக்கும் தன்னலமற்ற குணம் மனிதனுக்கு இல்லை. அவற்றை வெட்டினாலும் நமக்கு மேசை நாற்காலி கதவு சன்னல் கட்டில் போன்றவைகளாக பயன்படுகின்றன.
ஆனால் ஒரு மனிதனை கொஞ்சம் திட்டினாலும் அவன் அன்று முதல் அவர்களிடம் முகம் திருப்ப ஆரம்பித்துவிடுவான்.
அதே போல மிருங்களுக்குள்ளும் ஒற்றுமை இருக்கும். தன் இனம் என்றால் எங்கிருந்தாலும் வந்து அதற்காகப் போராடும். அந்த குணம் மனிதனுக்கு இல்லை.
எந்த வகையிலும் அவை உயர்ந்தவையுமில்லை தாழ்ந்தவையுமில்லை. அதனால் அனைத்தும் ஒன்றெனக் கொள்.
அடுத்து மனிதருக்குள் இருக்கும் பாகுபாடு.
ராமாயணத்தில் ராமனும் மனிதனே! ராவணனும் மனிதனே! இவன் நல்லவன் அவன் கெட்டவன்.
அப்படித்தான் அனைவரும் நினைப்போம். அது அப்படி அல்ல. அனைத்தும் அந்த கடவுளின் படைப்பே! இது இவ்வாறு நடக்க வேண்டும் என்று அவன் தீர்மானித்து நடக்க வைப்பது தான்.
ஒரு சிறு கதை-
இது பல பேர் அறிந்த ஒன்றே!
பிருங்கி என்ற முனிவரை, ஸ்ரீமன் நாராயணனை சந்திக்க விடாமல் தடுத்தனர் அவருடைய வாயில் காப்பாளர்களான ஜெய,விஜயன். அந்த முனிவர் கோபம் வந்து , நீங்கள் அந்த நாராயணனை விட்டு பிரிய வேண்டும் என்று சாபம் அளித்தார்.
உடனே ஜெய, விஜயன் இருவரும் நாராயணனிடம் சென்று முறையிட, அவர் இவர்கள் இருவருக்கும் இரண்டு யோசனை சொன்னார்.
ஒன்று ஏழு ஜென்மங்கள் பூமியில் நல்லவர்களாகப் பிறந்து என்னையே துதித்து பின்பு என்னை வந்து அடைவது.
இரண்டாவது மூன்று ஜென்மங்கள் தீயவர்களாகப் பிறந்து என்னை எதிர்த்து என் கையால் மரணம் அடைந்து பின் என்னை வந்து சேர்வது.
இதில் எதை தேர்ந்த்டுக்க உள்ளீர்கள் என்று கேட்க, இருவரும் சற்றும் யோசிக்காமல்,
தங்களால் எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் தங்கள் கடவுளான நாராயணனை வந்து சேர்வதே விருப்பம் என்று, தீயவர்களாகப் பிறந்தனர்.
முதல் பிறப்பில் ஹிரண்யகசிபு , ஹிரஞாக்ஷனாக
இரண்டாம் பிறப்பில் ராவணன் , கும்பகர்ணன்
மூன்றாம் பிறப்பில் சிசுபாலன், தந்தவக்ரன் எனப் பிறந்து சீக்கிரம் கடவுளை அடைந்தனர்.
அவர்கள் கெட்டவர்களாகப் பிறந்து கொடுமை செய்தது மட்டுமே சாதாரண மனிதர்களுக்குத் தெரியும், ஆனால் அதன் பின்புலம் பார்த்தால் அவர்களின் நோக்கம் இறைவனை சீக்கிரம் அடைவதென்பதாகும்.
ஆகையால் எந்த மனிதனையும் சாதாரணமாக நினைத்து விடக் கூடாது. ஒவ்வொருவரின் குணம் செயலுக்குப் பின்னால் அவருக்கே தெரியாமல் கடவுளின் செயல் இருக்கும்.
அனைவரும் கடவுளின் முன் சமமே! அதனால் எல்லோரும் ஒன்று என்று அறிந்து கொள்ள நுண்ணறிவு வேண்டும்.
ஆகவே அனைத்தும் அனைவரும் ஒன்று தான்.
இதை நன்றாக உணர்ந்தான் விஷ்வா. அவனது நெற்றியில் இருந்த அந்த சக்கரம் இப்போது திறந்து அவன் தலை முதல் கால் வரை ஒரே சீராக சக்தி ஊடுருவுவதை நன்றாக உணர்ந்தனர்.
குருஜிக்கு நன்றாகவே விஷ்வாவின் உடலில் சக்கரங்கள் உயிர் பெற்று சுழல்வது தெரிந்தது.
இன்னும் ஒன்று தான் பாக்கி அவன் இறைவன் என்று தன்னை உணரும் நிலையை அடைய. ஆனால் அவனுக்கு அது தேவைப் படாது.
அது தான் கடைசி சக்கரம். உச்சிமண்டையில் இருப்பது. ஆசை அறுத்த சாமியாரின் நிலை.அதை எவன் ஒருவன் திறக்கிறானோ அவன் கடவுளின் நிலையை அடைகிறான். அவனால் எதையும் செய்ய முடியும். சித்தர்களைப் போல.
நினைத்த நேரத்தில் எங்கும் சென்று எந்த உருவமும் எடுத்துக் கொள்ள முடியும்.
லோகாவை மனதில் நினைத்து அவளோடு இல்லறத்தில் ஈடுபட்டு காதலை பொழியக் காத்திருக்கும் விஷ்வாவால் அதை நிச்சயம் ஏற்க முடியாது. ஒருவேளை அவன் அதை செய்தால் லோகா, கந்தர்வன் என அனைவரையும் மறந்து மன்னித்து, காதலை துறந்து , இல்லறம் துறந்து காவி அணிய நேரிடும்.
அதனால் விஷ்வாவை அவர் இதோடு நிறுத்திக் கொள்ளச் சொன்னார்.
“விஷ்வா இப்போ உன்னால கந்தர்வனையும் அவன் செயல்களையும் கூட கணிக்க முடியும். லோகாவின் நிலையும் உன்னோட ஞானத்தால் பார்க்க முடியும். அந்த கந்தர்வன நேருக்கு நேர் சந்திக்கும் சக்தி உனக்கு இருக்கு. உன்னோட லோகாவை நீ அடையப் போகும் காலம் நெருங்கி விட்டது. “ குருஜி மகிழ்ச்சிப் பொங்க அவனைப் பார்த்துக் கூறினார்.
விஷ்வா இப்போது தன் லோகியை தன்னால் காப்பாற்ற முடியும் என்ற நினைப்பே அவனுக்கு பேரானந்தமாக இருந்தது.
“குருஜி இப்போ நான் உடனே அதை செய்யறேன். லோகி என்ன செய்யறானு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன்!” அவனது ஆர்வம் கண்களில் மின்னியது. அவனுக்குள் இருக்கும் சக்தி அவனை புடம் போட்ட தங்கமாக மாற்றியிருந்தது.
“ உடனே செய்” சம்மதம் தந்தார் குருஜி. அவருக்கு தன் தலையாய கடமையை முடித்த திருப்தி ஏற்பட்டது.
விஷ்வா தன் கண்ணை மூடி முதலில் லோகாவை தேடினான். அவனது எண்ணங்கள் லோகாஷியை நோக்கி பயணித்தது.
அதே நேரம் அவன் அருகில் இருந்த மீனாக்ஷி பாட்டி அவனைப் பெருமிதமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரும் இப்போது லோகாவைக் காணச் சென்றார்.
vவிஷ்வாவின் தேடல் இப்போது லோகாவை சென்று அடைந்தது. இப்போதும் அவள் அந்த மண் மேட்டில் தான் படுத்திருந்தாள். குழந்தை போலத் தூங்கும் அவளைக் கண்டதும் விஷ்வாவின் மனம் காதலால் கசிந்தது. இத்தனை நாள் தூக்கத்தை தொலைத்த அவளோ இன்று தான் மிகவும் நிம்மதியாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
சுற்றும் முற்றும் அருகே தேடியவன், அங்கே அந்த அதீந்த்ரியன் இல்லாததைக் கண்டு குழம்பினான்.
என்ன நடந்தது என்பதை அவனே இப்போது தான் பெற்ற அந்த சக்திகளின் மூலம் அறிந்து கொண்டான். பாட்டியைப் பற்றியும் அவன் தெரிந்து கொண்டான்.
இத்தனை தியாகம் செய்ய எப்படித் துணிந்தார் என்பதை நினைக்க அவனுக்கு மனம் கணத்தது. ஆனால் ஒரு புறம் இப்போது லோகா பாதுகாப்பாக இருப்பதைப் பார்க்க அவனுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. தியானத்திலிருந்து வெளிவந்தவன் குருஜியிடம் ,
“ குருஜி! நாம உடனே லோகா இருக்கற கிராமத்துக்குப் போகணும். கிளம்பலாம் குருஜி! லோகி ” அவன் அவசரப் பட,
“ போகலாம் விஷ்வா! ஒன்னு தெரிஞ்சுக்கோ , இப்போ லோகா தனியா இருக்கலாம். ஆனா அவ இன்னும் கந்தர்வன் கட்டுப்பாட்டுல தான் இருக்கா. அவன் நினைவு தான் இருக்கும். அதுனால தான் அவன் தைரியமா போயிருக்கான்.” அவர் சொல்வது ஓரளவு புரிந்தாலும் இப்போது அந்த கந்தர்வன் எங்கே சென்றான் என்பது மூளையை அரித்தது.
‘ அவனை என் நினைவுகளால பார்க்க முடியலையே!’ யோசித்தவன் அதையே அவரிடம் கேட்க,
“ அந்த கந்தர்வனை ஏன் என்னால இன்னும் நெருங்க முடியல குருஜி?”
“ அவன் இப்போ காற்றோட கலந்து இருக்கான். அதுனால தான் உனக்கு தெரியல. கூடிய சீக்கிரம் வருவான். சரி நாம அதுக்குள்ள அங்க கிளம்புவோம். “ குருஜி சொல்ல,
“ஆமா! பாட்டிய பார்த்தே ஆகணும். சீக்கிரம் வாங்க” என்று இருவரும் கிளம்பினர்.