Thendral’s Un Vizhigalil vizhuntha naatkalil 3

    உன் விழிகளில் விழுந்த நாட்களில் ..3

 

“வேறு ஒரு பெண், அதுவும் அவனது தங்கை, அவளை வைத்துக் கொண்டே தன்னை சைட் அடிக்க அவனுக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கவேண்டும். அவளுக்கு முன்னால என்ன நீ டீஸ் பண்ணிட்டு வேற இருக்க, உன்ன…” புலம்பிக் கொண்டே வகுப்பிற்கு வந்து சேர்ந்தாள்.

அவளது கூட்டம் அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தது. அந்த வகுப்பு ஆசிரியை சென்ற பிறகு அவர்களின் பேச்சு ஆரம்பமானது.

(அவளோட ப்ரெண்ட்ஸ் ஒரு அஞ்சு பேர் இருக்காங்க. எல்லாரும் கதைக்குள்ள வரமாட்டாங்க. அதுனால நாம அவங்கள தோழி 1 2 3 ன்னே இந்த பகுதில பார்ப்போம்.)

“என்ன டி ஆச்சு, அவ எதுக்கு வந்து உன்ன கூப்பிட்டா” – தோழி 1

“ அவ கிட்டலாம் நீ பேசமாட்டியே” – தோழி 2

“ இவ தான நீ சொன்ன அந்த பையனோட பேசிட்டு வர பொண்ணு. என்ன டி சார் தூது விட்ருக்காரா “ – தோழி 3

“ இவளும் தான டி அவன சைட் அடிக்கறா அதுனால இவ எதாச்சும் சொல்ல சொல்லியிருப்பாளோ” – தோழி 1

வாணிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. என்ன சொன்னாலும் கிண்டல் செய்து தான் தீருவார்கள். வேறு வழியே இல்ல.

“ இவ அவனோட தங்கச்சியாம்…அதை தான் சொல்லிட்டு போறா” அலுத்துக்கொண்டு கூறுவதைப் போல  வாணி சொல்ல,

“ஓஓஓஓஓஓஓ………… சார் கன்ஃபார்ம் பண்றாரா அவரு இன்னும் கமிட் ஆகலன்னு “ – தோழி 2

“ இத்தனை நாள் இல்லாம இன்னிக்கு ஏன் சொல்லணும்.. நேத்து எதாச்சும் பேசுனியா? “ தோழி 3

“ ஐய்யைய கொஞ்சம் சும்மா இருங்க டி. அவன் என்ன டீஸ் பண்ணிட்டான். அவள வெச்சுகிட்டே என்ன ஒட்டிட்டான்.” முறைத்துக் கொண்டு சொன்னாள்.

“என்ன டி ஆச்சு” – தோழீஸ்

காலை நடந்தது வரை அனைத்தையும் சொல்ல,

“ அவன் உன்ன ஏன் அப்படி பண்ணனும். அவனுக்கு உன்ன பிடிச்சிருக்கு. வேற ஒருத்தர் கிட்ட கேட்காம உங்கிட்ட வந்து ஜெனியூனா கேட்டான்ல. ஹி இஸ் சோ நைஸ் . எனக்கு புடிச்சிருக்கு” தோழி 3

“ அடிங்க.. கொன்னுடுவேன் .. “ வாணி சீறினாள்.

“ ஹ்ம்ம் க்கும்… இவ்ளோ பொசசிவ்நெஸ் இருக்கு. அப்பறம் ஏன் சீன் போடற. போய் புடிச்சிருக்குன்னு சொல்லு” தோழி 2

“ ஹே! புடிச்சிருக்கு தான். அவனை பத்தி எனக்கு எதுவும் தெரியாது” சோர்வாக அமர்ந்தாள்.

“ அன்னிக்கு அவன பத்தி எல்லாம் சொன்னான்னு சொன்னியே” – தோழி 1

“ எனக்கு அது சுத்தமா ஞாபகம் இல்ல டி.” முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு சொல்ல,

“ ஏன் டி!!!!” – கோரஸ்

“ அவன் என்கிட்ட முதல் முதலா பேசுனானா. நான் அவனையே தான் பாத்துட்டு இருந்தேன். எனக்கு அவன் முகத்தை தவிர வேற எதுவுமே மைன்ட் ல ரெஜிஸ்டர் ஆகல பா. நானும் பல தடவ யோசிச்சுட்டேன். அவனோட முகம், அசைவு , சிரிப்பு , கண் இது மட்டும் தான் ஞாபகம் வருது. வேற எதுவும் தெரியல. ஐயோ!!!” தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

“ பாரு டி இவள, எப்படி சைட் அடிச்சிருக்கான்னு.. கிராமத்தான் மிட்டாய் கடைய பாத்தா மாதிரி இருந்துட்டு வந்திருக்கா.. வாய் ல ஈ போன கூட தெரியாம இருந்திருப்பா போல.. அவன் அவ்ளோ அழகா டி.. எங்கள ஒரு தடவ கூட்டிட்டு போயேன்!” – தோழி 1

“ முடியாது போங்கடி.. “ லேசான வெட்கப் புன்னகையுடன் சொல்ல,

“ வேணாம்மா தாயே ! நீயே வெச்சுக்கோ… ஆனா அடுத்த தடவையாவது காதை திறந்து வெச்சு அவன் என்ன சொல்றான்னு கேட்டுட்டு வா. ப்ரொபோஸ் பண்ணா கூட அப்படியே நின்னுட்டு வராத..” அனைவரும் கிண்டல் செய்ய, அவனிடம் ஒரு நாள் அவனைப் பற்றி மறுபடி கேட்டே தீர வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டாள்.

என்னதான் கோபாமாக இருக்க முயற்சி செய்தாலும், அவன் முகம் நினைவுக்கு வந்ததும் அது காணாமல் போகும் விந்தை மட்டும் அவளுக்கு விளங்கவே இல்லை.

ஆனால் இன்று அவனிடம் பேசும் மனநிலை இல்லை. அவன் செய்ததற்கு கொஞ்சமாவது அவனைத் தவிக்க விட வேண்டும் தான் தோன்றியது.

மதிய உணவு இடைவேளை..

 தான் கொண்டு வந்த சாப்பாடு ஜீவாவிற்கு கொடுத்துவிட்டதால், காண்டீனுக்கு தோழியுடன் சென்றாள். அங்கே காண்டீன் வாசலில் நின்று கொண்டிருந்தாள் யமுனா.

யமுனா அவளைப் பார்த்து கை அசைக்க, வாணி அவளைப் பார்த்து ஒருவாறு சிரித்தாள். 

“உனக்காக தான் வெயிட் பண்றேன்.”  அவசரமாகப் பேசினாள்.

“ எதுக்கு ?” குழப்பமாக அவளைப் பார்க்க,

“ அண்ணன் உனக்கு லஞ்ச் வாங்கி தர சொன்னாங்க. இந்தா புடி டோக்கன். உனக்கு என்ன வேணுமோ வாங்கிக்கோ. எனக்கு பசிக்குது பை” அவள் கையில் டோக்கனை  திணித்து விட்டு பதிலை எதிர்ப்பார்க்காமல் ஓடிவிட்டாள்.

எரிச்சலுடன் நின்றிருந்தாள் வாணி. “ என்ன நெனச்சுட்டு இருக்கான் அவன். இவன் வாங்கி தந்து நான் சாப்பிடனுமா. முடியாது. என்கிட்டே காசு இல்லன்னு நெனச்சுட்டானா” காண்டீன் வாசலில் நின்று கத்திக் கொண்டிருந்தாள்.

அவளது நண்பி அவளைப் பார்த்து சிரிக்க, “ ஏன் டி சிரிக்கற” அவள் மேல் பாய்ந்துவிடும் அளவு பேச,

“ இல்ல, காலைல நீ ஏன் அவனுக்கு சாப்பாடு குடுத்த, அவன் கிட்ட காசு இல்லன்னா ? இல்ல பசியா இருக்கான்னு குடுத்தியா?” கிடுக்குப் பிடியாக கேள்வி கேட்டாள்.

“ அது…அந்த நேரத்துல பசிக்குதேன்னு கையில இருந்த சாப்பாடக் குடுத்தேன். அதுக்காக இப்போ அவன் குடுக்கணுமா?” யோசித்துக் கொண்டே பதில் சொன்னாள்.

“ அவனும் உனக்கு இப்போ பசிக்குமேன்னு வாங்கிக் குடுக்க சொல்லிருக்கான். எல்லாத்துக்கும் டென்ஷன் ஆகாத. உன்னோட காசுல இன்னொரு பரோட்டா எக்ஸ்டிராவா சாப்பிடலாம். டைம் வேற ஆகுது வா சீக்கிரம்.” அவளை இழுத்துக் கொண்டு சென்றாள்.

ஆனால் வாணிக்கு அந்த டோக்கனில் உண்ண மனம் வரவில்லை. அவன் தனக்காக அக்கறையாக கொடுத்தனுப்பியது என்னவோ ரசிக்கும்படியாக இருந்தாலும், காலையில் அவள் கொடுத்த உணவிற்காக மதியம் அவன் திருப்பிக் கொடுப்பது, அத்துடன் கணக்குத் தீர்ந்தது என்று சொல்வதைப் போல உணர்ந்து வருந்தினாள். (பைத்தியக்காரி. காலம் ஃபுல்லா வெச்சு சோறு போடறேன்னு தான் சொல்ல வரான். கேரெக்டரையே புரிஞ்சுக்கலயே!! )

அந்த டோக்கனை தன் பையில் பத்திரப் படுத்தினாள். தன் கையிலிருந்த பணத்தில் வாங்கி உண்டுவிட்டு வந்தாள். கோபமும் சாப்பாட்டோடு சேர்ந்து உள்ளே சென்றது.

தனக்காக அவன் கொண்ட அக்கறை மட்டுமே முன்னே நின்றது.

மாலை மெதுவாக கல்லூரியிலிருந்து கிளம்பி தனியாக ஸ்டேஷனை நோக்கி நடந்தாள்.

நேரம் நிறைய இருக்கவே, ஆமை போல நடந்தாள். எவ்வளவு மெதுவாக நடந்தும் இருபது நிமிடத்தில் ஸ்டேஷன் வாயிலை அடைந்தாள்.

அங்கே உள்ளே நுழைந்ததும் இருக்கும் ரயில்வே குவாட்டர்ஸ் அவளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. வரிசையாக அமைந்த அந்த வீடுகளின் வாயிலில் சுற்றிலும் பூச்செடிகள் நட்டு வைத்து வளர்த்திருந்தனர். அதற்கு நடுவே அழகிய பறவைகளையும் வளர்த்தனர்.

எப்போதும் வாணிக்கு அதை ரசித்துக் கொண்டே இருக்கப் பிடிக்கும். அவளது தோழியுடன் வந்தால் பேசிக்கொண்டே நேரம் போய்விடும் நேராக ஸ்டேஷன் உள்ளே சென்று அமர்ந்து கொள்வார்கள்.

இன்று நேரம் இருப்பதால் அவற்றை சிறிது நேரம் ரசித்துவிட்டு செல்லலாம் என முடிவு செய்தாள். ரோடு ஓரத்தில் இருந்த அந்த வீட்டின் முகப்பில் இருந்தது அந்த பறவைக் கூண்டு.

அதன் உள்ளே இரண்டு வண்ணப் பறவைகள். ‘ லவ் பேர்ட்ஸா இருக்குமோ!’ அதைப் பார்த்துக் கொண்டே நின்றாள். அங்கே சிதறிக் கிடந்த கேழ் வரகுகளை அழகாகத் தின்றன.

“ ஹே மஞ்ச கலர்! அங்க பாரு உன் ஆளு பச்சை கலர் உன்ன சைட் அடிக்குது. அதுக்கும் கொஞ்சம் குடு.”

“ பச்சை இங்க வா, ரெண்டு பெரும் ஷேர் பண்ணிக்கோங்க. வா வா”

“ம்ம்ம் குட். இப்படித் தான் உன் வோய்ஃப் சாப்பிட வெச்சு  சாப்பிடனும்.. சரியா!

இரண்டு பறவைகளிடமும் பேசிக் கொண்டிருந்தாள். இவள் சொல்வதற்கு ஏற்ப அதுவும் பறந்து வந்து உண்டது. இரண்டையும் பார்க்க பார்க்க அவளுக்கு ஆனந்தம். உலகத்தையே மறந்து அந்த பறவைகளின் வாழ்விற்குள் தானும் புகுந்து கொண்டாள்.

“மஞ்ச கலர் ! நீ ஐ லவ் யூ சொன்னியா இல்லையா.. ?”

“சொல்லையா..? அதான் அவ கோவமா இருக்கா. சரி சொல்லிடு சீக்கிரம்.”

என கொஞ்சிக் கொண்டிருந்தாள் .

நேரம் போனதே தெரியாமல் அவள் நிற்க, ரயிலுக்கு கொடுக்கும் முதல் பெல் அடித்ததும் தான், இந்த உலகத்திற்கு வந்தாள்.

“இன்னும் பத்து நிமிஷம் இருக்கு.. சரி அப்பறம் இன்னொரு நாள் மீட் பண்ணலாம். பை ..” என அந்த பறவைகளுக்கு பை சொல்லிவிட்டு திரும்ப, எதன் மீதோ இடித்தாள்.

இடித்ததும் இரண்டடி பின்னால் நகர்ந்தவளின் இதயம் வேகமாகத் துடித்தது. அவள் இதயத்தில் இருப்பவன் மீது தான் மோதிவிட்டாள்.

ஸ்டேஷனுக்கு உள்ளே நுழையும் போது தான் ஜீவா அவளைப் பார்த்தான். அங்கிருந்த பூக்களோடு பூக்களாக அவளும் நிற்பதைக் கண்டவுடன், என்ன தான் செய்கிறாள் என்று பார்க்க, அவள் பின்னால் நின்றுகொண்டிருந்தான். அவளின் அழகான பேச்சு அந்தப் பறவைகளுக்குப் பிடித்ததோ இல்லையோ, அவனுக்கு மிகவும் ஆசையாக இருந்தது. இதைப் போல தன்னிடம் எப்பொழுது கொஞ்சிப் பேசப் போகிறாள் என்று மனம் ஏங்க ரசித்துக் கொண்டிருந்தான். இன்னிக்கு எப்படியாவது நல்லா பேச வெச்சிடணும். அவளிடம் லயித்து நின்று கொண்டிருந்த போது அவள் மேல இடித்துத் திரும்பினாள்.

“ சாரி..நான் உங்கள பாக்கல” குரல் நடுங்கியது.

‘இவன் எவ்வளவு நேரமா இங்க நிக்கறான்!!? ஐயோ ஏற்கனவே ஃப்ளேம்ஸ் (flames) போட்டு பாதத்துக்கு சின்ன புள்ளத் தனமா நெனச்சான். இப்போ இன்னும் பால்வாடிப் புள்ளையா நினைப்பானோ!. ‘

ஜீவாவோ, ‘என்ன வேலை இது ‘ என்பது போல நக்கலாக அவளைப் பார்க்க, அந்தப் பார்வையை எந்தமாதிரி ஏற்பது என்று தெரியாமல், திரும்பி நடந்தாள்.

சற்று இடைவெளி விட்டு அவளுக்குச் சமமாக அவனும் நடக்க,

ரயில் வரும் சத்தம் கேட்டதும், ஓரக்கண்ணால் அவனைப் பார்த்துக் கொண்டு , வேகமாக எட்டுக்களை வைத்து நடந்தாள். அவனும் தன்னுடைய நீண்ட கால்களால் அவளுக்கு ஈடாக நடந்த படியே கேட்டான்.

“ உங்கிட்ட பேசணும்.”

‘நீ சொன்ன நான் பேசணுமா.போடா’

“ முடியாது” வெடுக்கென கூறியவளைப் பார்த்து சிரிப்புத் தான் வந்தது அவனுக்கு.

“ என் மேல கோவமா ?..” அவள் மனதைப் படித்துவிட,

பதில் ஏதும் சொல்லாமல் ரயிலில் ஏறிக் கொண்டாள். வழக்கம் போல.

அதே கம்பார்ட்மெண்டில் ஏறியவன், அவளுக்கு எதிரேயே அமர்ந்தான்.

தலையில் கைவைத்துக் குனித்து கொண்டாள்.

“ கோவமா ?.. யமுனா பேசினாளா? எதாவது சொன்னாளா?”

(ஆடு தானாகவே சென்று தலையைக் கொடுத்தது)

கேட்டது தான் தாமதம்.

“ என்ன பார்த்தா எப்படித் தெரியுது? நான் என்ன நீங்க வெச்சு விளையாடற பொம்மையா ? “ துடைத்த முகத்துடன் கேட்க,

அவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.

“ ஹே அப்படி எல்லாம் இல்ல.. சும்மா..” விளக்கம் தர முன்வந்தான்.

“என்ன சும்மா.. அவ உங்க சிஸ்டராவே இருந்தாலும் எனக்கு காலேஜ் மேட். அவ முன்னாடி என்ன அசிங்கப் படுத்திட்டீங்க. என்ன உரிமைல இப்படி எல்லாம் செய்யறீங்க? ஏதோ ரெண்டு மூணு தடவ பேசியிருப்போமா.. உடனே அட்வான்டேஜ் எடுத்துக்க வேண்டியது. ச்சே! “ அவள் தன்னையும் மீறி சத்தமாகப் பச, அருகில் இருப்பவர்கள் அவர்களையே பார்த்தனர். அவள் வேண்டுமென்றே பேசுகிறாள் என்பதை  உணர்ந்தவன், சட்டென அவள் அருகிலேயே வந்து அமர்ந்தான்.

“ எதுவா இருந்தாலும் நமக்குள்ள பேசு இதயா.. “ அவள் காதருகில் அவனது குரல் கேட்க, அவளுக்கு கூச்சமாக இருந்தது.

அதையும் தாண்டி அவளை நெருக்கிக் கொண்டு அவன் அமர்ந்திருக்க, அவனிடமிருந்து வந்த அவனது வாசம் , அவனது தோள் இடித்துக் கொண்டு அளித்த கதகதப்பு , அவளை அடுத்து பேசவிடாமல் கட்டிப் போட்டது. மயக்கமே வந்துவிடும் போல இருந்தது. முதல் ஸ்பரிசம். கோபத்தையும் மீறி மனது அவனிடம் தாவியது.

மிகவும் கஷ்டப் பட்டு, “ ப்ளீஸ் அங்க உட்காருங்க..” சொல்லிவிட்டாள். அவளது நிலைய அறிந்தவன், மனதில் சிரித்துக் கொண்டே மீண்டும் பழைய இடத்திற்கு வந்தான்.

‘ நான் பக்கத்துல வந்து உட்கார்ந்தா உனக்கு இருக்கற அவ்வளவு ஃபீலிங்க்ஸும் எனக்கும் இருக்கு டி. உன்ன விட அதிகமாவே! உன்னோட மனசு எனக்கு புரியறப்ப என்னோட மனசும் உனக்கு கண்டிப்பா புரியும். ஏன் இந்த நாடகம்!’

“ இதயா.. இங்க பாரு. எனக்கு உன்கிட்ட எந்த உரிமையும் இல்ல தான். ஆனா உன்ன கலாட்டா பண்ண நினைக்கல, நீ என்கிட்ட பேசணும்னு தான் அப்படி வம்பு வளத்தேன். அதுவும் இல்லாம யமுனாக்கு என்ன பத்தி நல்லாவே தெறியும். அவ நான் பேசுனதை வெச்சு கண்டிப்பா உன்னை கிண்டல் செய்ய மாட்டா. சரி அதை விடு. மதியம் சாப்டியா?”

அவள் எவ்வளவு தான் கத்தியிருந்தாலும் சிறு பிள்ளைக்கு சொல்வது போல தன்னிடம் விளக்கம் கொடுத்து இப்படி பொறுமையாக பேசுபவனிடம் இன்னும் எப்படி சண்டை போடுவது. அவளுக்கும் அது மனதிலிருந்து வந்த சண்டை இல்லையே. அதை இன்னும் எவ்வளவு நேரம் தான் தாக்குப் பிடித்து வைப்பது.

அவன் சாப்டியா என்று கேட்டதிலேயே உருகி விட்டாள். இருந்தாலும்                    ‘ எந்த உரிமையும் இல்ல’ என்று அவன் சொன்னது வலிக்கவே செய்தது.  ‘உனக்கு எல்லா உரிமையும் இருக்கு’ என்று அவளின் மனது கத்தியது.

“ ம்ம்” கோபத்தையும் காட்ட முடியாமல், உடனே மாறிய தன் மனதையும் வெளிப் படுத்த முடியாமல் இருந்தாள்.

“ என்கூட பேசுறது உனக்குப் பிடிக்கலையா? பிடிக்கலன்னா சொல்லிடு. நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். ”  அங்கிருந்து எழுந்தான். அவளை வழிக்கு கொண்டு வர முயற்சி செய்தான்.

உடனே பதறி, “ இல்ல இல்ல .. “ என்றாள்.

அவளின் பதட்டம் அவனுக்கு ஏதோ உணர்த்த, புன்னகைத்த வாரே ,

“ அப்போ புடிக்குமா? “

அவன் கேட்ட தோரணை அவளை சிநேகமாக பேச வைத்தது.

“ இப்படி எல்லாம் லாக் பண்ணா நான் என்ன சொல்லுவேன்னு நீங்க எதிர்ப்பார்க்கறீங்க?” அவளின் துடுக்குத் தனம் எட்டிப் பார்த்தது.

புருவத்தை ஏற்றி இறக்கி, மெல்ல விசிலடித்தான்.

“ இதயா க்கு இப்படியும் பேசத் தெரியுமா?” இலகுவாக பேச,

அவளும் அதே மனநிலைக்கு வந்தாள்.

“ இது தான் இதயவாணி.” அவளின் பதில்.

“பாத்தேன். புறாவுக்கு கிளாஸ் எடுத்தப்பவே .“ கிண்டல் செய்தான்.

“ நெனச்சேன் . இப்போ இத வெச்சு அடுத்த சீன் என்னை ஓட்ட போறீங்க”

இருவரும் சேர்ந்து சிரிக்க, ஒரு அழகிய நட்பு அங்கே மலர்ந்தது.

Your Comments Here