Thendral’s Un Vizhigalil Vizhuntha Naatkalil – 4
Thendral’s Un Vizhigalil Vizhuntha Naatkalil – 4
ஜீவாவிடம் தன்னால் சிறுது நேரம் கோபமாக நடிக்கக் கூட முடியவில்லை என்று புரிந்தது வாணிக்கு. அதற்கு காரணம் அவன் மேல் தனக்கு ஏற்பட்ட ஈர்ப்பா அல்லது அவன் இயல்பாகவே அனைவரையும் இப்படி தன்வசம் இழுக்கிறானா என்ற சந்தேகம் அவளுக்கு.
தன் மனதில் காதல் உதயமாவதில் அவளுக்கே தயக்கம் இருந்தது. காரணம் அவளது குடும்ப சூழல். அண்ணன் வெற்றி தன் விருப்பத்திற்கு தடை சொல்லமாட்டான் என்றாலும், ரேகாவின் மனநிலை தான் அவளைத் தடுத்தது.
‘அப்பா இல்லாம வளர்க்கறா இதுங்க உருப்படாம தான் போகப் போகுது’ என்று ரேகாவின் அண்ணன் தம்பி இருவரும் அடிக்கடி சொல்வதுண்டு. அவர்களின் வாய்க்கு பயந்தே பிள்ளைகளை வெகுவாக கண்டிப்பாள். வெற்றி இயல்பிலேயே பொறுப்புடன் இருப்பவன், அதனால் ரேகா சொல்வதற்கு அவசியமே இல்லை. இதயவாணி அண்ணனின் செல்லத்தால் சற்று துடுக்காகவே வளர்ந்தாள். அதனால் அவளை எப்போதும் அடக்கிவைக்கவே முயற்சி செய்வார்.
ஒரு விஷயம் செய்யாதே என்று சொல்லும் போது தான் குழந்தைகள் அதை வேண்டுமென்றே செய்யும் என்பார்கள். அதே போலத் தான் வாணி சிறு வயது முதலே இருந்துவிட்டாள். அந்த எண்ணம் அவளோடே வளர்ந்தது. ஆனால் இப்போது விவரம் தெரிந்த பெண் என்பதால் தாயின் மனதை காயப் படுத்த அவள் விரும்ப வில்லை.
அதனாலேயே ஜீவாவிடம் அதிகம் பேசக் கூடாது என்றே நினைத்திருந்தாள். தொடர்ந்து அவனுடன் பேசினால் எங்கே அவன் வசம் முழுவதும் தான் சாய்ந்து விடுவோமோ என்று அஞ்சினாள்.
யாருக்கும் தெரியாமல் காதலித்து விடலாம். அந்தக் காதலை பெற்றவர்களிடம் சொல்லி, அவர்களின் சம்மதத்துடன் திருமணம் வரை செல்வது என்பது வாணியைப் பொறுத்தவரை முடியாத காரியம்.
நிச்சயம் ரேகா இதற்கு சம்மதிக்க மாட்டார் என்று நன்றாக உணர்ந்திருந்தாள். தனி ஆளாக இருந்து தங்களை வளர்த்த தாயின் மனதை காயப் படுத்த அவளுக்கு சிறிதும் விருப்பமில்லை. ரேகாவிற்கு பிள்ளைகளின் ஆசையை விட குடும்ப மானம் தான் பெரிது.
மறுநாள் ஜீவாவை வாணி சந்தித்தாலும், தூரத்திலிருந்து பார்வையால் மட்டுமே பேசிக் கொண்டனர். வாணியுடைய தோழி கண்மணி விடுப்பிற்குப் பிறகு அன்று தான் வந்திருந்தாள்.
அவள் முன்பு பேசத் தயக்கமோ அல்லது மனதில் இருந்த குழப்பத்தின் காரணமோ அவளாக அவனிடம் பேச முயற்சிக்கவே இல்லை.
ஜீவாவும் அன்று காலையில் அவளைப் பார்வையால் தழுவிக் கொண்டிருந்தானே தவிர அவளிடம் பேச முடியவில்லை. வண்டி நின்றதும் தோழிகள் இருவரும் பேசிக் கொண்டே வேகமாக சென்றுவிட்டனர்.
மாலையும் அவனுக்கு வேலையின் காரணமாக சரியான நேரத்திற்கு கிளம்ப முடியாமல் போயிற்று.
இவ்வாறே பல நாட்கள் அவர்களின் சந்திப்பும் பேச்சும் தடை பட்டது. என்ன இருந்தாலும் இருவரது மனத்திலும் ஒரு இணக்கம் இருக்கவே செய்தது. தினமும் பேசி , பார்த்துக் கொண்டால் தான் காதலா? பார்க்காமல் பல நாட்கள் இருந்தாலும் மற்றவர் மீது இருக்கும் அதீத அன்பு இம்மியும் குறையாமல் இருப்பதே சிறந்த காதல்.
இதுவே இவர்களின் விதி என்றால் அதை யாரால் மாற்ற முடியும்?
அவர்களின் காதல் கண்களில் ஆரம்பித்து இதயத்தில் குடிகொண்டது. அவர்களின் முதல் சந்திப்பு எதிர்பாராமல் நடந்த ஒன்று, இருந்தாலும் ஒருவர் மனதில் ஒருவர் பதிந்தது அன்று தான்.
தீராக் காதலாக மாறும் என்று இருவரும் நினைக்கவில்லை. பார்த்தவுடன் ஒரு தீ மனதில் பற்றிக் கொண்டது.
அன்று மாலை நேரம். கதிரவன் மேற்கில் மறையும் நேரம். கல்லூரி முடிந்து தங்கள் ஊருக்குச் செல்ல மாணவர்கள் பலர் பாசென்ஜெர் ரயிலுக்காகக் காத்திருந்தனர். இது தினசரி நடக்கும் ஒரு நிகழ்வு தான். அன்று ஏனோ நிறைய கூட்டம் இருப்பதாகத் தோன்றியது. அன்று காலை ராசி பலனில் ‘ எதிர்பாராத சந்திப்பு ‘ என்று பார்த்ததிலிருந்து அவளுக்கு மனதில் ஒரு ஆர்வம் இருந்தது. ‘அப்படி யாரைச் சந்தித்து விடப் போகிறோம்!’
அதோ! ரயில் வருவதற்குக் கடைசி மணியும் அடித்தாகி விட்டது. அங்கிருந்த கல் மேடையில் அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து சென்று விட அவள் மட்டும் ஏனோ கடைசியாகச் சென்று ஏறிக்கொள்ளலாம் என்று அங்கேயே அமர்ந்திருந்தாள்.
ரயிலும் வந்துவிட்டது. ‘ என்னடா வாழ்க்கை இது ஒரே போர் ‘ சலிப்புடன் அவளும் கிளம்ப நினைக்க , அவளால் அந்த இடத்தை விட்டு அசைய முடியாமல் அவள் பார்வை இமைக்கவும் மறந்து அந்த ரயில்நிலைய வாசலில் நின்றுவிட்டது. சுற்றியிருக்கும் எதுவும் கண்ணில் படவில்லை. அவ்வளவு ஏன் ! தான் எப்படி இருக்கிறோம் என்பது கூட மறந்து விட்டது. அருகில் இருக்கும் அவள் தோழி அவளை வெகு நேரமாகக் கூப்பிட்டும் அவள் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை.
இளஞ்சிவப்பு நிற சட்டையும் கருப்பு நிற பேண்ட்டும் அணிந்து , லேசாக வியர்த்திருந்த நெற்றியல் காலையில் இட்ட சந்தனம் காய்ந்து அவன் மாநிறத்திற்கு மேலும் மெருகூட்ட , அவன் அணிந்திருந்த அந்த ரிம் லெஸ் கண்ணாடியின் வழியே , கல் பெஞ்சின் மீது அசையாமல் அமர்ந்திருந்த அந்தப் பதுமையின் கண்களை மட்டும் நோக்கினான். பார்த்துக்கொண்டே மேலும் நடந்து வர,
பார்வைப் பரிமாற்றம் அவர்களுக்கும் தெரியாமல் இதயப் பரிமாற்றம் ஆனது. அதை அவன் உணர்ந்தானோ இல்லையோ ?! அவள் மரமண்டைக்கு எதுவும் தோன்றவில்லை. ஆனால் கண்களை மட்டும் அவனை விட்டு விலக்க முடியாமல் தவித்தாள். அவள் தோழி அவளை இழுத்துச் சென்று பெண்கள் பெட்டிக்குள் புகுந்து விட, அவனும் அதற்கு அடுத்து இருந்த பெட்டியில் ஏறிக்கொண்டான்.
உடல் சிலிர்த்து அவளுக்கு. இத்தனை நேரம் அவனும் தன்னைப் பார்த்துக்கொண்டே தான் இருந்திருக்கிறான் என்று நினைக்கும்போது வெட்கம் பிடுங்கித் தின்றது. நடந்தவை அனைத்தையும் அப்போதுதான் மனதில் ஓட்டிப் பார்த்தாள்.அவன் முகம் கூட நினைவுக்கு வரவில்லை. அவன் அணிந்திருந்த உடைகள் எதுவும் மூளையில் பதியவில்லை. இப்படியும் நடக்குமா! அவன் கண்கள், அவன் அணிந்திருந்த கண்ணாடியையும் தாண்டி அந்தக் கண்கள் மட்டும் மனதில் அழியாமல் நிலைத்துவிட்டது. அவனை நன்றாக ஒரு முறைப் பார்க்கும் ஆவல் அவளுக்குள் எழ அவள் நின்றிருந்த இடத்திலிருந்தே அடுத்தப் பெட்டியில் எட்டிப் பார்க்க, அவனும் அதே எண்ணத்தில் இருந்திருப்பானோ! அந்த நேரம் அவனும் இவளைத் தான் தேடித்பிடித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனுக்குள் “ இவ தான் உனக்கானவள்” என்று வானிலிருந்து ஒரு தேவதை உரக்கக் கூறிச் சென்றது போன்ற உணர்வு. அன்றே முடிவு செய்து விட்டான். தன் வாழ்வில் திருமணம் என்று நடந்தால் அது அவளுடன் மட்டுமே!
அதற்காக அவன் மிகவும் போராட வேண்டி வரும் என்று அவனுக்கு அப்போது தெரியவில்லை.
அவளுடன் பேசும் வாய்ப்பும் எதிர் பாராமலேயே நடந்தது. அன்றொரு நாள் காலையில் இருந்தே ஜீவா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். அவனுக்கு இப்போது பதவி உயர்வு கிடைத்திருந்தது. குறுகிய காலத்தில் அவன் அலுவலகத்தில் யாருக்கும் இந்த பதவி உயர்வு கிடைத்திருக்கவில்லை. பலபேருடைய பொறாமையும் வயித்தெரிச்சலையும் பெற்றுக் கொண்டு இருந்தாலும் எதையு பொருட்படுத்தாமல் மகிழ்ச்சியாக இருந்தான்.
தவசிக் கவுண்டருக்கு பெருமை தாங்கவில்லை. இருந்தாலும் மகனை மனம் விட்டுப் பாராட்டவும் இல்லை. அவருக்கு இருக்கும் கவுரவம் அதை செய்யவும் விடவில்லை. தான் கொடுத்த காரை வேண்டாம் என்று தானே சம்பாதிக்க நினைத்தவனின் தந்தை அல்லவா. அது தான் தடுத்தது.
அம்மா சங்கரிக்கு , ஜீவா பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கினாலே ஒரு வாரம் வரை அனைவரிடமும் சொல்லி சொல்லி பூரித்துப் போவார். இப்போதோ கேட்கவே வேண்டாம்.
அனைவரும் மகிழ்ச்சியுற்றாலும் அவனுக்கு தன் இதயத்தில் இருக்கும் இதயாவிற்கு சொல்லவில்லையே என்ற தவிப்பு. இன்றாவது அவளிடம் பேசிவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தான்.
ஆனால் இதயவாணியோ அன்று தனது தோழியின் வீட்டில் தங்கிவிட முடிவு செய்திருந்தாள். நீண்ட நாட்கள் அவளது தோழி ஒருத்தி அவள் வீட்டில் வந்து தங்குமாறு கேட்க, அன்று தான் ரேகாவிடம் அனுமதி பெற்று கல்லூரி முடிந்ததும் அவளுடன் சென்று விடுவதாக தீர்மானித்திருந்தாள்.
ரயிலில் அவனைப் பார்க்கக் கூட முடியாது என்று வருந்தினாள்.
ஆனால் எதிர்பாராமல் சந்திப்பும் நடந்தது.
கல்லூரி முடிந்து அவளது தோழியுடன் ஸ்கூட்டயில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தாள். அவளுடன் வாணி மிகவும் நெருக்கம் என்பதால் அன்று தான் ஜீவாவைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவனை முதலில் சந்தித்தது , ஆனால் இன்னும் அவனிடம் பேசவில்லை, வெறும் பார்வை பரிமாற்றம் மட்டுமே என்று சொல்லிக் கொண்டே வந்தாள்.
“ அவன் பேர் என்னன்னு உனக்குத் தெரியுமா?” – தோழி
“ம்ம்ம்… கன்ஃபார்ம்மா தெரியாது டி. ஆனா என் மனசு சொல்லுது அவன் பேரு ஜீவான்னு தான் இருக்கும்ன்னு” – வாணி
“ எப்படி அவ்ளோ உறுதியா சொல்ற? “ – தோழி
“ தெரியல டி . சும்திங் மை இன்ஸ்டிங்ட்( instinct) சொல்லுது” – வாணி
“ சரி அவன் கிட்ட பேச ட்ரை பண்ணு”
“ நானா? சான்சே இல்ல. அவனும் தான பாக்கறான். அவனுக்கு தைரியம் இருந்தா அவனே வந்து பேசட்டும். “ சத்தமாகவே பேசிக் கொண்டு வந்தாள்.
அவளின் தோழி வண்டி ஓட்டிக்கொண்டிருப்பதால், எதிர்க் காற்றில் அவளுக்குக் கேட்க வேண்டும் என்று உரக்கவே பேசிக் கொண்டு வந்தாள்.
ஆனால் அது அருகில் வண்டியில் வருபவர்கள் காதிலும் விழும் என்பது மறந்து போனது!
அவனைப் பற்றிய வர்ணனையில் தெரிந்தது அவனை எத்தனை ஆழமாக அவளறியாமலே நேசிக்கிறாள் என்று.
“ ஹே! வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடி ஒரு சின்ன வேலை இருக்கு டி. இங்க கம்பியூட்டர் சென்டர்ல எங்க கிளாஸ் க்கு ஒரு நோட்ஸ் பிரிண்ட்க்கு குடுக்கணும். ஒரு பதினஞ்சு நிமிஷம் ஆகும். சொல்லிட்டு போய்டலாம்.” தோழி கேட்க,
“ சரி . ஒன்னும் வேலை இல்ல எனக்கு. பொறுமையா போலாம்” வாணி சொல்ல, வண்டியை அந்த சென்டரின் வாசலில் நிறுத்தினாள் தோழி.
வண்டியை விட்டு இறங்கியதும் ,
“ ஹாய் இதயா..!! “ ஜீவா பின்னாலேயே வண்டியில் வந்து இறங்கினான்.
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. திரு திரு வென விழித்தாள்.
அதைக் கண்டவனுக்கு சிரிப்புத் தான் வந்தது.
‘ஐயோ ! இவன் பின்னாலையே வந்தானா? எப்போலேந்து!! ‘ எச்சில் விழுங்கினாள்.
“ ஹாய்..” மொட்டையாக சொல்லிவிட்டு இழுக்க,
“ உனக்கு என் பேர் தெரியுமே!” குறுகுறுப்பாக அவளைப் பார்க்க,
“ஜீ……வா…” என்று சத்தமே வராமல் சொல்ல,
“ எஸ். அது தான் என் பேரு.” அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.
நொடிக்கு ஒரு தரம் வித விதமாகப் பேசும் அவளது கண்களை அவனது ரசனைப் புத்தகத்தின் ஒரு பகுதியாக எழுதி வைத்தான்.
“ என்ன இங்க வந்திருக்க? ட்ரெயின் க்கு டைம் ஆச்சு வா போலாம்” உரிமையாக அவளை அழைத்தான்.
அவனுக்கு முன்பின் பேசிப் பழக்கம் இல்லாத பெண்ணிடம் பேசுகிறோம் என்ற நினைப்பு சுத்தமாக இல்லை. பலநாள் பழகியது போன்ற உணர்வு. அவள் தன்னவள் என்ற நினைப்பு.
அவன் கேட்டதும் தான் அவளுக்கு நினைவு வந்தது, தன்னுடைய தோழி என்ற ஒருத்தி அங்கு நின்றுகொண்டிருப்பதே!
அவளைத் திரும்பிப் பார்க்க, அவளோ கைகளைக் கட்டிக் கொண்டு இருவரையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தலையில் அடித்துக் கொண்டு, “ சாரி டி “ என்க,
அவளோ லேசாக சிரித்தாள். வாணியின் நிலை புரிந்தது. இத்தனை நேரம் அவனைப் பற்றித் தானே பேசிக் கொண்டு வந்தாள்.
“ இது தான் ஜீவா. ஜீவா , இவ என்னோட ப்ரென்ட்” என்று இருவருக்கும் அறிமுகம் செய்ய ,
அவள் “ஹலோ “ என்றாள்.
ஜீவாவிற்கு வாணியைத் தவிர வேறொன்றும் கண்ணில் படவில்லை.
‘ இந்த அசிங்கம் உனக்குத் தேவையா ‘ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள்.
“நான் போய் என் வேலைய பாக்கறேன் வாணி” அவள் கிளம்பி விட,
வாணிக்கு அவன் செயல் தர்ம சங்கடமாக இருந்தது.
அவள் சென்ற பிறகு,
“ நான் என் ப்ரென்ட இன்ட்ரோ பண்ணேன்.” அத்துடன் நிறுத்திக் கொண்டாள்.
“ எனக்கு அது தேவை இல்லாத ஒன்னு” பைக்கின் மேல் சாய்ந்து கொண்டு சொன்னான்.
“ ம்ம்ம்..” அதற்கு மேல் அவள் என்ன சொல்வது என்று யோசிக்கும் போதே அவனது பேச்சு அவளை உறைய வைத்தது.
“ வண்டில வரப்ப காத்து அடிக்கும் அதுனால பேசுறது கேட்காதுன்னு நீ சத்தமா பேசலாம் ஆனா அக்கம் பக்கம் பாத்து பேசு. நீ பேசுனது அந்த தெருவுக்கே கேட்டிருக்கும்” இதழோரம் சிரிப்பை மறைக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தான்.
வாணிக்கு அந்த இடத்திலிருந்து மாயமாக மறைந்து விட மாட்டோமா என்று இருந்தது. ‘ எல்லாத்தையும் கேட்டுட்டான்.. போச்சு போச்சு.. என் மானமே போச்சு’ உள்ளங்கை கூட வியர்த்தது அவளுக்கு.
“ நீங்க எங்க பின்னாடி தான் வந்தீங்களா …?நான் பேசுனது கேட்டுச்சா….?” மெதுவாகக் கேட்டாள்.
“ஹா ஹா … ஆமா.. ஒரு சின்ன வேலையா வெளில வந்தேன். சிக்னல உன்ன வண்டில பாத்ததும் , ட்ரெயின் க்கு வராம எங்க போறன்னு பாக்க உன் பின்னாடி வந்தேன். அப்போ தான் நீ ஸ்பீகர் ஆன் பண்ண…” சொல்லிவிட்டு அவள் சங்கடமாக உணர்வதைப் பார்த்தான்.
‘ இந்த மாறி மாட்டிக்கிட்டு முழிக்கறப்ப கூட ஏன் டி அழகா இருந்து தொலைக்கற…’ அவளின் முகம் தாங்கி முத்தமிடத் துடித்த எண்ணத்தை சிரமப் பட்டு மறைத்தான்.
அந்த எண்ணத்தை மாற்றி அவனே அவளை அதிலிருந்து மீட்டான்.
“ சரி வா . டைம் ஆச்சு கிளம்பு..போலாம்.”
“எங்க…?” குழப்பமாக அவனைப் பார்க்க,
“ ட்ரெயின் க்கு தான்” இலகுவாக அவன் அழைத்தான். அதுவும் அவனது வண்டியில்.
அவளுக்கு அந்த உரிமை ஏனோ மிகவும் பிடித்தது. அவனுடனேயே வாழ்க்கை முழுவதும் செல்வதானாலும் அவளுக்கு விருப்பம் தான். இருந்தாலும் இப்போது அவள் வரும் நிலையில் இல்லையே!
“ இல்ல, நான் இனிக்கு என் ப்ரென்ட் வீட்ல தான் தங்கப் போறேன். அம்மா கிட்ட சொல்லிட்டேன்.” அவனுக்கு ஏனோ விளக்கம் கொடுத்தாள்.
“ ப்ரென்ட் வீட்ல எல்லாம் ஸ்டே பண்ண வேண்டாம். நீ மொத்தல கிளம்பு. வா போலாம்.” மீண்டும் அழைத்தான்.
“ இல்ல. இவ என்னோட க்ளோஸ் ப்ரென்ட் தான். அவங்க வீட்ல கூட எல்லாரையும் அம்மாக்கும் அண்ணாக்கும் தெரியும். ஃபேமிலி ப்ரென்ட்ஸ் தான். எல்லாரும் ரொம்ப நல்லவங்க” அவனை சம்மத்திக்க வைக்க வேண்டும் என்று முயன்றாள்.
அவனிடம் ஏன் சொல்ல வேண்டும் என்ற கேள்விக்கு வாணியிடம் பதில் இல்லை.
அவள் எங்கு தங்கினால் உனக்கென்ன என்ற கேள்விக்கு ஜீவாவிடமும் பதில் இல்லை.
அவர்கள் பேசிக் கொள்வது யாரேனும் பார்த்தால் முதல் முறை பேசுபவர்கள் என்று சொல்லவே மாட்டார்கள். அத்தனை அன்னியோன்யம். அத்தனை உரிமை.
“ சரி.. கேர்ஃபுல்லா இரு. நாளைக்கு வீட்டுக்கு போய்டுவல்ல?”
“ம்ம்ம் ஆமா” அவள் தோழி வருகிறாளா என்று வாசலைப் பார்க்க,
“ சரி அப்போ இன்னும் கொஞ்ச நேரம் பேசு. அப்புறம் போகலாம். “
“ என்ன பேசறது…” கையைப் பிசைந்தாள்.
“ சரி. அப்போ நான் என்னைப் பத்தி சொல்றேன். கேட்டுக்கோ” என்று சொல்ல ஆரம்பித்தான்.
அவன் பேசப் பேச அவனின் அசைவுகளையும், கண்களையும், அவனது நெற்றியில் புரளும் கேசமும், சந்தனக் கீற்றும் , அவன் நின்று பேசும் அழகும் மட்டுமே அவளது கருத்தில் பதிந்தது.
அவன் பேசிய எதுவும் காதில் விழவில்லை. மனதில் ஓடிய பாடல் மட்டுமே அவனின் அசைவுக்கு பின்னிசையாக இருந்தது.
“ இதுவரை என் இருதயம் இந்த உணர்வினில் தடுமாறவில்லை
முதல்முறை இந்த இளமையில் சுகம் உணர்கிறேன் நான் தூங்கவில்லை
குடையோடு நான் போனேன் வழியினில் என்னோ நனைகின்றேன்
கடிகாரம் இருந்தாலும் காலடி சத்தத்தில் மணி பார்த்தேன்
என் தனிமைக்கு தனிமைகள் நீ வந்து குடுத்தாய்
விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிகாலம் நீ தான் என்று உயிர் சொன்னதே “
அவன் பேசி முடித்துவிட்டு அவளிடம் ,
“ சரி உன் ப்ரென்ட் வராங்க. நான் கிளம்பறேன். கேர்ஃபுல்லா இரு ! நாளைக்கு ஈவ்னிங் மீட் பண்ணலாம் . பை..” வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பிவிட்டான்.
அவளது தோழி , “ என்ன பேசிட்டு இருந்தீங்க?” என்று கேட்க,
“ சத்தியமா எதுவும் ஞாபகம் இல்லை டீ!” மண்டையைப் பிய்த்துக் கொண்டு யோசித்தாள்.
அவன் முகம் மட்டுமே நினைவில் தவழ்தது.
– மீண்டும் விழிகளில் விழுவாள்(ன்)….