Thenmazhai – Epiosde 4 – Akila kannan

Thenmazhai – Epiosde 4 – Akila kannan

தேன் மழை அத்தியாயம் – 4

ஆதித்த கரிகாலன் சென்று பல மணித்துளிகள் ஆனதால் அவனைக் காணாமல் அவன் சென்ற வழியே அவனைத் தேடி வந்தான் முத்தழகன்.

அந்த காரிகையை நோக்கி வாள் வேகவீச்சாய் பாய, தன் வசமுள்ள கத்தியால் அவள் தன்னை அந்த வாளிடமிருந்து சாமர்த்தியசாலித்தனமாக பாதுகாத்துக்  கொண்டிருந்தாள்.

அப்பொழுது    புரவியிலிருந்த ஒருவன் வீசிய விஷம் தோய்க்கப்பட்ட வாள் அந்த காரிகையை நெருங்க, சரேலென்று தன் இடது கையால் அந்த காரிகையை தன் கை வளைவுக்குள் கொண்டு வந்து தன் வலக்கையால் இடுப்பு கச்சையிலிருந்த தன் கத்தியை எடுத்து  வாள் வீசியவனின் கால்களை நோக்கிக் குறி பார்த்து வீசினான் கரிகாலன்.

“ஆ..” என்று அலறலோடு வாள் வீ சியவன் புரவியிலிருந்து கீழே விழுந்தான்.

கரிகாலனின் புஜங்கள் இழுத்த வேகத்தில் அவன் மார்பில் சாய்ந்து  அவன் கண்களை அதிலிருந்த கூர்மையை, அதில் தெரிந்த ஒளியை ஆழமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த காரிகை.

“இளவரசிக்கு ஆபத்து…” என்று யாரோ கூச்சலிட, அங்குக் கூட்டம் கூடியது.   அப்பொழுது அங்கு வந்து சேர்ந்தான் நெடுமாறன். இருவர் புரவியில் பறந்துவிட, கரிகாலனால் கத்தி காயப்பட்டு புரவியிலிருந்து கீழே விழுந்தவன் நெடுமாறனிடம் அகப்பட்டுக் கொண்டான்.

“இளவரசி எங்கே?” என்று நெடுமாறனின் குரல் கர்ஜனையாக வெளிவந்தது.

நெடுமாறன், பாண்டிய நாட்டு குறுநிலமன்னன் சுந்தர பாண்டியனின் தமயன். படைத் தலைவன்.

“படைத்தலைவரே! இளவரசி… இங்கே இல்லை  அவர் அப்பொழுதே மாயமாகி விட்டார்.” என்று அங்கிருந்த காவலாளி கூற, காவலாளி கூறுவதை  ஆமோதிப்பது போல் தலை அசைத்தான் நெடுமாறன். நெடுமாறன் யோசனையாக தன் நீண்டு வளர்ந்த புருவங்களை நீவிக்  கொண்டான்.

 

இளவரசியை தன்பக்கம் இழுத்துக் கொண்டு, அங்கிருந்த பாறைக்குப் பின் ஒளிந்துக் கொண்டான் கரிகாலன்.

“தாங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள்?” என்று வினவினாள் அந்த காரிகை.

“தங்கள் பெயர் என்ன என்றறியும் நோக்கோடு இளவரசியாரை பின் தொடர்ந்தேன்…” என்று  கரிகாலன் அவள் அழகில் மயங்கி, கிரக்கமாகக் கூறினான்.

“இன்னும் என் பெயரை தாங்கள் ஊகிக்கவில்லையா?” என்று அங்கிருந்த பாறையின் மீது சாய்ந்து சலிப்போடு கேட்டாள் அந்த காரிகை.

அந்த காரிகையின் இருபக்கங்களிலும் தன் கைகளை ஊன்றி,  அவளை மேலிருந்து கீழ்வரை பார்த்தான் கரிகாலன்.

அந்த பாறையின் அருகே சிற்றருவி பாய்ந்து கொண்டிருந்தது.   அந்த பசுமையான செடிகொடிகள் பூத்துக் குலுங்கி இவர்களுக்கு அரணாய் அமைந்தது. அந்த பாறை நீர் அவள் மேல் மெலிதாக வருட, மெல்லிய வாடை காற்றில் உடல் சிலிர்த்தாள் அந்த காரிகை. அத்தோடு கரிகாலனின் பார்வையும் சேர்ந்து கொள்ள, அவள் முகம் வெட்கத்தில் அந்திவானமாய் சிவந்தது.

“தங்கள் மேனியின் அழகு உங்களுக்கு சுந்தர… என்று தொடங்குவது போல் பெயரிட்டிருக்க வேண்டும் என்று எடுத்துரைக்கிறது…” என்று கரிகாலன் அவள் தேக அழகை ரசித்து கூற, தன் சங்குக் கழுத்தை அசைத்து, “அப்படியா?” என்று கேள்வியாக நிறுத்தினாள் அந்த காரிகை.

கரிகாலன் மறுப்பாகத் தலை அசைத்து,  “உங்கள் அதரங்கள் உங்களுக்குத் தேன்…  என்று தொடங்குவது போல் பெயரிட்டிருக்க வேண்டும் என்றும்… உங்கள் மதி முகம் வேறு கூற…” என்று அவள் முகத்தை தன் கைகளால் தீண்டியபடி கரிகாலன் யோசனையாகக் கூற, அந்த காரிகை அவனைக் கோபமாக முறைக்க, கரிகாலன் பெருங்குரல் எடுத்துச் சிரிக்க, கரிகாலனின்  உதடுகளை தன் கைகளால் மூடினாள் அந்த காரிகை.

“இன்னும் வீரர்கள் என்னைத் தேடிக்  கொண்டு தான்  இருக்கிறார்கள்.” என்று தன் காந்த விழிகளை விரித்து, கரிகாலனை எச்சரித்தாள்.

“இளவரசியாருக்கு அச்சமோ?” என்று கரிகாலன் ஏளன நகையோடு கேட்க, “அச்சம் என்னை நினைத்தில்லை. இந்த பாண்டிய நாட்டில், என்னை யாராலும் நெருங்க இயலாது. அச்சம் தங்களை நினைத்துத் தான். வழிப்போக்கனாகிய உங்கள்  தலையைக் கொய்து வீசி விடுவார்கள்?” என்று தன் ஆள் காட்டி விரலை உயர்த்தி கரிகாலனை எச்சரித்தாள் அந்த காரிகை.

“இப்பொழுது தங்களை நெருங்கியது யாரோ?” என்று கரிகாலன் ஏளன புன்னகையோடு வினவ, “இந்நேரம், எங்கள் படைத்தலைவர் அவர்களை கண்டுபிடித்திருப்பார்.” என்று கர்வமாக கூறினாள் இளவரசி.

“உங்கள் படைத்தலைவர் காலம் தாழ்ந்தே இவ்விடம் வந்தார். நான் மட்டும் தக்க சமயத்தில் வரவில்லையென்றால்?” என்று கரிகாலன் அவளை கேள்வியாக நோக்க, “அட… வீரரே… நீங்கள் வரவில்லை என்றாலும், என்னை நான் பாதுகாத்திருப்பேன்.” என்று உறுதியோடு தன் கண்களை விரித்து இளவரசி கூற, அவள் பேச்சைத் திசை திருப்பி, “மீன் போன்ற தங்கள் கண்களைப் பார்த்தால்…” என்று கூறி கரிகாலன் நிறுத்த, அந்த காரிகை வெட்கப்பட்டு புன்னகைத்தாள்.

“ஆக… என் கணிப்பு சரி என்றால் தங்கள் பெயர்…” என்று கரிகாலன் வெற்றி புன்னகை பூக்க, “தாங்கள் வீரமும், அறிவும் நிறைந்தவர் தான்…” என்று கூறி கரிகாலனின் கை வளைவிலிருந்து தப்பித்து வேகமாக மாயமாக மறைந்தாள் அந்த காரிகை.

கண்களில் காதல் வழிய இயற்கையை ரசித்தபடி கம்பீரமாக நடந்து வந்தான் கரிகாலன். ஆதவன் இவர்கள் காதல் காட்சியைக் கண்டு வெட்கப்பட்டு மேகத்திற்குள் ஒளிந்து கொள்ள, கரிகாலனின் வரவை தனக்கு எந்த வெட்கமும் இல்லை என்றபடி பார்த்துக் கொண்டிருந்தான் முத்தழகன்.

“இளவரசே… நீங்கள் செய்வது உண்மையில் எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. நம் பணி இன்னும் முடியவில்லை. இங்கு நாள் கணக்காகத் தங்கியிருப்பது எனக்கு அத்தனை சரியாகப்படவில்லை… இளவரசே!” என்று முத்தழகன் வருத்தத்தோடு கூற, “முத்தழகா! நாம் வந்த பணியில் ஒரு பகுதி முடிந்துவிட்டது.” என்று நகைத்துக் கொண்டே கூறினான் கரிகாலன்.

“இளவரசே. இது எப்பொழுது?” என்று அதிர்ச்சியாக முத்தழகன் கேட்க, “நான் வீசிய கத்தியைப் பார்த்த நீர், நம் ஒற்றர்களுக்கு நான்  வீசிய ஓலை அம்பை கவனிக்கவில்லையா?” என்று கரிகாலன் கேட்க, கரிகாலனை அதிர்ச்சியாகப் பார்த்தான் முத்தழகன்.

“நானும் அனைவரையும்  போல், சத்தம் வந்த திசையை மட்டுமே கவனித்தேன்.” என்று முத்தழகன் தன் தலை அசைத்துக் கூற, கரிகாலன் முத்தழகனை அழைத்துக் கொண்டு அவர்கள் தங்கியிருக்கும் இடம் நோக்கிச் சென்றான்.

“இளவரசே… அப்படியென்றால்  நாம் வந்த வேலை முடிந்துவிட்டது. நாம் நம் சோழ நாட்டை நோக்கி நம் பயணத்தைத் தொடங்கலாம்.” என்று முத்தழகன் கூற, மறுப்பாகத் தலை அசைத்தான் கரிகாலன்.

அதே நேரம், இளவரசியின் மீது வாளை பாய்ச்ச முனைந்தவர்கள் பிடிபட, அவர்கள் அந்த குறுநில மன்னன் முன் நின்றுகொண்டிருந்தனர்.

இந்த பரணியின் மொத்த செழிப்பையும் தாங்கி இருப்பது  போன்ற பிரமாண்டமான மாளிகை. ஆங்காங்கே அழகான வடிவமைப்பில் வெள்ளை கரியைப் போன்ற தூண்கள்.

வரிசையாக அமர்ந்திருந்த அமைச்சர்கள். நடுவில் சிகப்பு நிற தங்கப் பிடிமானம் வைத்திருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார் சுந்தரபாண்டியர். அவருக்கு இரு பணிப்பெண்கள் சாமரம் வீசிக் கொண்டிருந்தனர்.

“மன்னன் வாழ்க! மன்னாதி மன்னன் வாழ்க!” என்று கூறி நெடுமாறன் சுந்தர பாண்டியரை வணங்க, “வாருங்கள் படைத்தலைவரே! இவர்கள் மூலம் ஏதாவது செய்தி கிடைத்ததா?” என்று சுந்தரபாண்டியரின் குரல் கோபமாக ஒலிக்க, “கிடைத்தது மன்னா… இவர்கள் சோழ இளவரசர் ஆதித்த கரிகாலனால் நம் இளவரசியைக் கொல்வதற்காக ஏவப்பட்டவர்கள்.” என்று நெடுமாறன் கூற, சுந்தர பாண்டியன் யோசனையாகத் தலை அசைத்தார்.

“இவர்கள் இருவரையும் சிறையிடுங்கள்.” என்று சுந்தர பாண்டியரின் குரல் ஓங்கி ஒலிக்க, “அரசே! கரிகாலன் நம் எல்லையில் தங்கி இருப்பதாகச் செய்தி கிடைத்துள்ளது அரசே! விரைவில் நம் நாட்டிற்குள் நுழையும் வாய்ப்புள்ளது.” என்று குரல் தாழ்த்தி கூறினான் நெடுமாறன்.

“இளவரசியின் உயிரைப் பறிக்க நினைக்கும் அவன் இந்த பாண்டிய மண்ணை மிதிக்கும் பொழுது தலை இல்லா முண்டமாகட்டும்.” என்று சுந்தரபாண்டியரின் குரல் அரண்மனை எங்கும் ஆணையாக ஒலித்தது.

அதே நேரம், “இளவரசே நாம் சோழ நாட்டை நோக்கிச் சென்றுவிடலாம். சூழ்நிலை அத்தனை உசிதமாக இல்லையென்று என் உள்மனம் கூறுகிறது.” என்று முத்தழகன் தயக்கமாகக் கூற, “முத்தழகா… கிளம்பு பாண்டிய நாட்டை நோக்கி.” என்று ஆணையிட்டான் கரிகாலன்.

இளவரசரின் சொல்லுக்கிணங்கி கிளம்பினான் முத்தழகன்.

இருவரும் மாறு வேடமிட்டு புரவியில் கிளம்ப, “ஒரு சாராருக்கு மட்டுமே செய்தி சென்றுள்ளது முத்தழகா. என்னிடம் மற்றொரு ஓலையும் உள்ளது.” என்று கூறி கரிகாலன் தன் வெண் புரவியைச் செலுத்த, முத்தழகன் அவனை பின் தொடர்ந்தான்.

இருவரும் ஊர் எல்லைக்குள் நுழைய, காவலாளிகள் அவர்களைச் சோதனையிடத் தொடங்கினர். ‘எங்கோ… ஏதோ  இடறியிருக்கிறது. ஆகையால் தான் இத்தனை பலத்த சோதனை…’ என்று இருவரும் எண்ணினர்.

கரிகாலனிடம் ரகசிய செய்தி கொண்ட ஓலை இருப்பது அறிந்த முத்தழகனின் முகத்தில் வியர்வை துளிகள். அவர்கள் முத்தழகனை சோதித்துவிட்டு கரிகாலனைச் சோதிக்க ஆரம்பித்தனர். முத்தழகன் கரிகாலனை அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

தேன் மழை பொழியும்…

 

error: Content is protected !!