Thenmazhai – Epiosde 5 – Akila kannan

தேன் மழை அத்தியாயம் – 5

கரிகாலனைக் காவலாளிகள் சோதனையிட, கரிகாலன் எந்த வித அச்சமுமின்றி அவர்கள் முன் கம்பீரமாக நின்று கொண்டிருந்தான்.

அவனிடம் எந்த ஓலைச்சுவடுகளும் கிட்டாமல்  போக,  காவலாளிகள் அந்த வெண் புரவியைச் சோதனையிட ஆரம்பித்தனர். அப்பொழுது  அந்த வெண் புரவி, “ம்… க்கும்… ம்… க்கும்…” என்று கனைத்துத் திமிறியது. கரிகாலன் தன் புஜங்களால் அதைத் தடவிக் கொடுக்க, அது சாதுவாக அடங்கி நிற்கக் கரிகாலன் புரவியிடமிருந்து ஒதுங்கி நின்று கொண்டான்.

அந்த நொடிப் பொழுதில், புரவியின் கழுத்திலிருந்த ரோமங்களுக்குள் மறைந்திருக்கும் வாரின் உள் பகுதியில் மறைக்கப்பட்ட ஓலையை தன் கச்சைக்குள் மாற்றிவிட்டு சாதுவாக நின்ற கரிகாலனை தன் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் மெய்சிலிர்த்துப் பார்த்தான் முத்தழகன்.

காவலர்களின் சோதனைக்குப் பின் இருவரும் அவர்கள் புரவியில் பாண்டிய நாட்டை நோட்டமிட்ட படி தங்கள் புரவியை மெதுவாகச் செலுத்திக் கொண்டிருந்தனர்.

சந்திரோதயம் தன் வெள்ளிக் கிரணங்களால் பாண்டிய நாட்டை ஜாஜ்வல்லியமாகப் பிரகாசிக்கச் செய்து கொண்டிருந்தது. பண்டக சாலைகளில் வணிகர் கூச்சல் பாண்டிய நாட்டின் செழிப்பைப் பறைசாற்றியது.

கரிகாலன் இவை அனைத்தையும் கணக்கிட்டு, தன் புரவியைச் செலுத்தியபடியே அங்கு நடந்து கொண்டிருக்கும் மனிதர்களைக் கண்காணித்தபடி பயணம் செய்து கொண்டிருந்தான்.

இருவரும் அங்கிருந்த மண்டபத்தில் தங்க முடிவு செய்தனர்.

பொழுது சாய்ந்து விடவே, தன் புரவியை மண்டபத்தில் முத்தழகன் பொறுப்பில் விட்டுவிட்டு, தன் வேடத்தை மாற்றிக்கொண்டு கரிகாலன் அந்த பாண்டிய வீதியில் நடக்க ஆரம்பித்தான்.

“இளவரசே! தாங்கள் இந்நேரத்தில் அவசியம் தனியே சென்றாக வேண்டுமா?” என்று முத்தழகன் கேட்க, “ஆம் முத்தழகா! நான் சென்றாக வேண்டும். விடியுமுன் வந்துவிடுவேன்.” என்று கூறி சென்று, சற்று தூரம் நடந்தான்.

மீண்டும் திரும்பி முத்தழகனை பார்த்து,  “அப்படி நான் திரும்பி  வரவில்லை என்றால், நீ நம் சோழ நாட்டுக்குச் சென்று  அரசருக்கு தகவல் கொடு. அவர் அடுத்த கட்டளையைச் சொல்லுவார்.” என்று கூறி வேகமாக நடந்தான் கரிகாலன்.

அந்த இருட்டில் எந்த சப்தமும் செய்யாமல், சிங்கம் போல்  நடந்து அரண்மனை அருகே சென்றுவிட்டான் கரிகாலன்.

கரிகாலன் அரண்மனை அருகே சென்றுவிடவே, சோழ நாட்டு ஒற்றன் கரிகாலனை நோக்கி வேகமாக நடந்து நொடிப்பொழுதில்  ஓலையை அவன் கைகளில் சொருகி விட்டு சடாரென்று அவன் கரிகாலனைக் கடந்து சென்றான்.

கரிகாலன் அங்கிருந்த தூணுக்குப் பின் மறைந்து சந்திர ஒளியிலும், அரண்மனை விளக்கின் ஒளியிலும் அதை உள்வாங்கிக் கொண்டு பதுங்கி பதுங்கி ரகசிய வழியில் அரண்மனைக்குள் நுழைந்தான்.

ஆரம்ப கட்டுகளிலிருந்த யானைக் கூடங்களில் கேட்ட யானையின் பிளிரும் ஒலிகள், குதிரை மண்டபத்தில் கேட்ட புரவிகள் கனைப்பு சத்தங்களும் பாண்டிய நாட்டின் படைபலத்தைப் பறைசாற்ற, அதை மனதில் குறித்துக் கொண்டான் கரிகாலன்.

கரிகாலன்  படிப்படியாக முன்னேறி, இளவரசியின் மாளிகைக்குள் நுழைந்து விட்டான்.

தூணுக்குப் பின் மறைந்திருந்து, அங்குப் பணிப் பெண்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க.. அங்கும் யாருமில்லாததைக் கண்டு ஐயம் கொண்டான் கரிகாலன்.

கரிகாலனின் ஐயத்தை ஊர்ஜிப்படுத்துவது போல், “வா… கரிகாலா… ஆதித்த கரிகால சோழர்…” என்று அந்த சந்திர ஒளியில் கர்ஜனையாக ஒலித்தது அவள் குரல்.

தூணுக்குப் பின்னே இருந்து, வெளிவந்து அந்த காரிகையைப் பார்த்தான் கரிகாலன். வெள்ளி ஒளி பட்டு, மெலிதான ஆபரணத்தோடு தங்கச் சிலையாக மின்னினாள் அந்த காரிகை.

“கயல்விழி…” கரிகாலனின் உதடுகள் அவனறியாமல் அவள் பெயரை உச்சரித்தது. அவளைப் பார்த்து அவன் ஸ்தம்பித்து நின்றதே நிஜம்.

“சோழ இளவரசே! உங்களுக்குத் தான் அச்சமென்பது கிஞ்சித்தும் கிடையாதே? பின் எதற்கு இந்த தயக்கம்?” என்று அங்கிருந்த மேடையில் ஓயாரமாக  அமர்ந்து பெண் புலியாகக் கர்ஜித்தாள் அந்த காரிகை கயல்விழி.

“அச்சம் இல்லை என்பது ஏதோ ஒரு வகையில் உண்மை தான். ஆனால், உங்களிடம் அச்சம் கொள்ள வேண்டுமோ என்ற தயக்கம் தான் காரணம்.” என்று கரிகாலன் அடக்கமாகக் கூற, “என்னிடம் அச்சமா? அதுவும் மாவீரனுக்கா?” என்று தன் வில் போன்ற புருவத்தை உயர்த்தி வினவினாள் கயல்விழி.

“ஆம்… இளவரசியாரே… உங்கள் சௌந்தரியத்தைக் கண்டு என் மனம் அச்சப்படுவது உண்மை தான்.” என்று கரிகாலன் கூற தன் அதரங்களை மெலிதாக வளைத்துச் சிரித்தாள் கயல்விழி.

“கரிகாலா… பேச்சைத் திசை திருப்ப வேண்டாம். தாங்கள் இங்கு வந்த காரணம்…” என்று கரிகாலனிடம் பதிலை எதிர்பார்த்து அவள் கட்டளையாகக் கூற, “தாங்கள் என்னை எதிர்பார்த்தது போல் தெரிகிறதே.” என்று கரிகாலன் மெட்டு விடாமல் கூற, கிண்கிணியாகச் சிரித்தாள் கயல்விழி.

“தாங்கள் நுண்ணறிவு கொண்ட மாவீரராக இருக்கலாம். ஆனால், எம் பாண்டிய நாட்டை அத்தனை எளிதாகக் கணக்கிட வேண்டாம். என் தயவின்றி உங்களால் உங்கள் மூச்சுக் காற்றைக் கூட இங்கு வெளியிடமுடியாது.” என்று கயல்விழி கூற, ‘இவள் பேரழகி மட்டுமல்ல, வீரமும், விவேகமும் நிறைந்தவள்…’ என்றெண்ணினான் கரிகாலன்.

“தங்கள் என்னைத் தேடி வந்த காரணம்.” என்று கயல்விழி தன் வினாவில் உறுதியாக நிற்க, “தங்கள் பெயர் கயல்விழி என்று கூறத்தான்.” என்று கரிகாலன் இன்முகமாகக் கூற, அவனைச் சீற்றமாகப் பார்த்தாள் கயல்விழி.

“என்ன இளவரசே விளையாடுகிறீர்களா? நீங்கள் வழிப்போக்கன் என்று கூறும்பொழுதும் நான் நம்பவில்லை. உங்கள் முகத்தில் உள்ள ராஜகளை, நீங்கள் யாரென்று தெளிவாகக் கூறியது.” என்று கூற, கயல்விழி கூறுவதைத் தலை அசைத்துக் கேட்டுக் கொண்டான் கரிகாலன்.

“நீங்கள் யாருக்கும் தெரியாமல் கத்தி வீச்சோடு ஓலையை வீசுவதாக எண்ணிக் கொண்டீர். நொடிப் பொழுதில் உங்கள் ஓலை பறந்ததையும் யான் கண்டோம்! உங்கள் நெருக்கம் உங்கள் சோழ முத்திரையை என்னிடம் வெளிப்படுத்திவிட்டது.” என்று கயல்விழி கூற, அவளை நெருங்கினான் கரிகாலன்.

“கரிகாலனின் மனதைத் தொட்டவள் பேரழகி மட்டுமில்லை… மாமேதையும் கூட என்பதில் இந்த கரிகாலன் பெருமிதம் அடைகிறான்.” என்று கரிகாலன் கூற, “இளவரசே! இது என்ன பிதற்றல் பேச்சு…” என்று காட்டமாகக் கூறினாள் கயல்விழி.

“உங்கள் அதரங்கள் மட்டும் தான் பிதற்றல் பேச்சு என்று கூறுகிறது இளவரசியாரே. உங்கள் கண்கள் என்னைக் காதலோடு தழுவுகிறது.” என்று கரிகாலன் கூற, கயல்விழி தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

கரிகாலன் அவளை இடையோடு அணைத்து, அவள் மதி முகத்தைக் தன் வல கையின் ஆள்காட்டி விரலால் உயர்த்தி, “இளவரசியாரே… உங்கள் கண்களைத் திறந்து, என் மேல் காதல் இல்லையென்று சொல்லுங்கள். நான் இந்த நொடி இங்கிருந்து செல்கிறேன்.” என்று கரிகாலன் சாவல் விட, “நீங்கள் இன்று என்னை காண  வருவீர்கள் என்று என் உள்மனம் கூறியது. ஆனால் உங்கள் தலைக்கு ஆபத்து என்றறிந்து,  உங்கள் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்றஞ்சியே உங்கள் வருகைக்காகக் காத்திருந்தேன்.” என்று உணர்ச்சி துடைத்த  சொற்களைப் பொழிந்தாள் கயல்விழி.

“இந்த சோழ இளவரசர் உயிருக்கு ஆபத்து வந்தால், பாண்டிய இளவரசியின் மனம் சஞ்சலபப்டும் காரணம் என்னவோ? ” என்று கரிகாலன் மிதப்பாகக் கேட்க, “பாண்டிய இளவரசி உயிருக்கு ஆபத்து வரும்பொழுது சோழ இளவரசரின் மனம் சஞ்சலபப்டும் அதே காரணம் தான்.” என்று கயல்விழி வெட்கப்பட, அவள் கண்களை ஆழமாகப் பார்த்தான் கரிகாலன்.

அன்று போல் இன்றும் கயல்விழியின் விழிகள் காதல் மொழி பேச, “நீங்கள் உங்கள் நாட்டிற்குத் திரும்புங்கள். நீங்கள் என்னைக் கொலை செய்ய ஆள் அனுப்பியதாக உங்கள் மீது பழி  வந்துள்ளது. அதனால் தான் சொல்கிறேன் உங்கள் உயிருக்கு ஆபத்து. கிளம்புங்கள் விரைவாக…” என்று கயல்விழி எச்சரிக்க, “என்னைக் கோழை என்றெண்ணியா? புறமுதுகிட்டு ஓட?” என்று சீற்றமாகக் கேட்டான் கரிகாலன்.

கயல்விழி மௌனமா காக்க, ” ஓர் பெண்ணைக்  கொல்லுவதற்கு நான் ஆள் அனுப்பினேனா? எந்தக் கயவன் சொன்னான்? அதை நீயும் நம்புகிறாயா?” என்று கர்ஜித்தான் கரிகாலன்.

“நான் நம்பியிருந்தால் இப்படி உங்களோடு தனியாகப் பேசிக் கொண்டிருப்பேனா?” என்று கயல்விழி பரிதாபமாகக் கேட்டாள்.

“ஆபத்து என் தலைக்கு இல்லை. உமது தலைக்குத் தான் இளவரசியாரே!” என்று கரிகாலன் கோபம் தனியாதவனாக கூற, “எம் பாண்டிய நாட்டில் என்னைத் தொட யாருக்குத் தைரியம் வரும்.அப்படி ஒரு எண்ணம் வந்தால், அந்த எண்ணம் கொண்ட மனிதர் என்முன் நிற்கும் பொழுது, அவன் மூச்சுக் காற்று விண்ணை நோக்கிப் பறந்து கொண்டிருக்கும்.” என்று கயல்விழி, தன் விழிகளை விரித்து சீற்றமாகக் கூறினாள்.

“தாங்கள்  என்னை நம்புவது உண்மையென்றால், நான் சொல்வதைக் கேள்.” என்று கரிகாலன் ரகசியமாக சில திட்டங்களை அவள் காதில் கிசுகிசுக்க, கரிகாலனைக் கோபமாகப் பார்த்தாள் கயல்விழி.

“கரிகாலரே! என்னை வைத்தே பாண்டிய நாட்டை அடையும் திட்டமா?” என்று கரிகாலனைப் பார்த்து கயல்விழி சினத்தோடு   கேட்க, “என்னை ஒரு காரிகையை  வைத்து நாட்டை பிடிக்கும் கோழை என்று நினைத்தாயா? இல்லை வீரமற்றவன் என்றெண்ணினாயா?” என்று கயல்விழியின் சங்கை பிடித்து கேட்டான் கரிகாலன்.

சிறிதும் அச்சமின்றி அவனை க்ரோதமாக பார்த்தாள் கயல்விழி.

இவர்கள் காதல் புரிவார்கள் என்றெண்ணி ஆவலாய் காத்திருந்த அந்த நிலவு, இவர்கள் சண்டையிடுவதைக் காண சகியாமல் மேகத்திற்குள் மறைந்து கொண்டது. முதல் சந்திப்பில் காதல் பேசிய அவர்கள் விழிகள், இன்று பாண்டிய நாட்டின் பெருமையையும், சோழ நாட்டின் பெருமையையும் விவாதித்துக் கொண்டிருந்தது.

தேன் மழை பொழியும்…