Thenmazhai – Episode 3 – Akilakannan

 

தேன் மழை அத்தியாயம் – 3

அந்த காரிகை, அவளைத் தேடி வந்த தோழிகளோடு புரவித்தேரில் ஏறிச் சென்றாள்.

அந்த புரவித்தேர் காற்றைக் கிழித்துக் கொண்டு,       புயலென வேகமாகப் பறந்து   வெளித்தோற்றத்தில் ஆணின் கம்பீரத்தோடும், உள் தோற்றத்தில் பெண்ணின் நளினத்தோடும் அமைக்கப்பட்டிருந்த  பிரமாண்டமான அரண்மனைக்குள் நுழைந்தது.

அந்த காரிகையை கண்டவுடன் அரண்மனையில்  சூழ்ந்திருந்த பதட்டம் சூரியனை கண்ட பனி போல் விலகியது.

அந்த காரிகை தன் கூந்தல் அங்குமிங்கும் நடனமாட, தன் பாதங்களை அழுத்தமாக பதித்து நிதானமாக அரண்மனையை கடந்து  மாளிகையை நோக்கி  சென்றாள். அங்குப் பல பணிப்பெண்கள் தங்கள் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். உயர்ந்து நின்ற தூண்களைத் தாண்டி  தன் மாளிகைக்குள் சென்றவுடன் மாளிகை தோட்டத்தை நோக்கி குதித்து ஓடினாள் அந்த காரிகை.

அங்கு மரக்கிளையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சல் முன்னும் பின்னும் அசைந்தாட   தன் பாதங்களைத் தரையில் அழுத்தி அவர்கள் செழிப்பைக் காட்டும் வண்ணம் அமைந்திருந்த  பலகையில் ஏறி அமர்ந்தாள். காற்றின் வேகத்தில் ஊஞ்சல் அவளை தாலாட்ட,  தென்றல் அவளைத் தீண்ட, அந்த ஆட்டத்தில்  மனம் லயிக்காமல் தரை  இறங்கினாள்.

முல்லைக் கொடிகளும், மல்லி கொடிகளும் பூத்து குலுங்கின. பந்தல் எங்கும் படர்ந்த செடிகளில் பூத்த மலர்கள் தன் மணத்தைப் பரப்பி அவர்கள் வேலையை செவ்வனே செய்தது கொண்டிருந்தன. ஒவ்வொரு மலர் பந்தலுக்கு அருகே சென்றும் அந்த மணத்தை நுகர்ந்தாள் அந்த பேரழகி.

‘மல்லியும், முல்லையும் இன்று வழக்கத்தை விட அதிகமாக மணந்து என் உள்ளத்தை கொள்ளை கொள்ளுகிறதே!’ என்று எண்ணிக் கொண்டே அந்த தோட்டத்தை சுற்றி வந்தாள்.

அவள் எண்ணங்கள் இன்று சந்தித்தவனை நோக்கி சென்றது.

‘அவனைப் பார்த்தால் ஒரு வழிப்போக்கன் போல் இல்லையே? அவன் என்னிடம் உண்மையை மறைக்கிறானோ? அவன் கண்களில் ஒரு தேஜஸ்… அவன் முகத்தில் ஓர் ராஜகளை.. அவன் முறுக்கேறிய புஜங்கள், பல வாள்களை அசாத்தியமாக வீழ்த்தும்… அவன் மாவீரன். ஆனால், யாராக இருக்கும்? ஏன் அந்த காட்டில் இருக்கிறான்?’ என்ற கேள்விகள் அவள் மனதில் எழ, அந்த பெண்ணின் காதல் கொண்ட மனமும் வெளி வந்தது.

அவள் மனம் ஒரு நிலை பாட்டில் இல்லமால் கடல் அலை போல் அலைபாய, அந்த தோட்டத்தில் நடுநாயகமாக இருந்த வட்ட வடிவ சிவப்பு நிற  பஞ்சணையில் தன் இருக்கைகளையும் விரித்து ஆசுவாசமாகப் படுத்தாள்.

அவள் தன் இமைகளை மூட, அவள் முன் தோன்றினான் கரிகாலன்.

புரவி மீது கம்பீரமாக அமர்ந்திருப்பது போல் காட்சி அளித்தான் கரிகாலன்.

‘இத்தனை தூரத்திலா? அதுவும் புரவி மீதா?’ என்ற அந்த காரிகையின் மனம் சுணங்க, கரிகாலன் கம்பீரமாக நடந்து அவள் அருகே வந்தான். கரிகாலன்  தன் முறுக்கிய மீசையை முறுக்கிக் கொண்டு அவள் அருகே நெருங்க நெருங்க அவள் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. ‘வந்துவிட்டான்… வந்துவிட்டான்… அந்த மாவீரன் வந்துவிட்டான்.’ அவள் மனம் பதட்டமும், ஆசையும் ஒரு சேரத் துடிக்க, அந்த முறுக்கேறிய புஜங்கள் தன்னை தழுவும் நொடிகளுக்காக அந்த காரிகையின் மனம் விழைய, “இன்று தங்களை ஆற்று நீரில் காப்பாற்றியது யாரோ?” என்று அவள் நெருங்கிய தோழி ஒருத்தி கேலியாக வினவ, நனவுலகத்திற்கு திரும்பினாள் அந்த காரிகை.

அந்த கேள்வியில் கரிகாலனின் அருகாமை  நினைவு வர, அவள் மனம் அவனை காண வழிவகுத்த நீரைத் தழுவ விரும்பி, நீராட ஏதுவாக தன் கச்சையைத் தளர்த்திக் கொண்டு, விலை உயர்ந்த துணியால் தன் வதனத்தை மறைத்துக் கொண்டு வாசனைத் திரவியங்கள் கலந்த நீருக்குள் இறங்கினாள் அந்த காரிகை.

காதலியின் ஒதுக்கத்திற்கு மதிப்பு கொடுத்து விலகும் உன்னத காதலன் போல, அந்த காரிகைக்கு மதிப்பு கொடுத்து, மேகத்திற்குள் மறைந்துக் கொண்டான் ஆதவன்.

தென்றல் அவள் தேகத்தைத் தீண்ட… கரிகாலன் அவளை தென்றலாக நெருங்கினான்.

கரிகாலனின் அருகாமையில் அவள் அதரங்கள் மெல்லிய கானத்தை வெளிப்படுத்தியது

“பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்…”

அந்த குளிர்ந்த தென்றல் நீரில் புதைந்திருக்கும் அவள் தேகத்தைத் தீண்ட அவள் உடல் சிலிர்த்தாள்.

“பதி மதுரை வீதியிலே வளம் வரும் தென்றல் இந்த பாண்டியனார் பைங்கிளியை தீண்டிடும் தென்றல்…”

“பாண்டிய பைங்கிளி” என்று அவள் உச்சரிக்க, அவள் முகத்தில் கர்வமும், வீரமும் குடிகொண்டது.

“கார் குழலை நீராட்டி  கண் இரண்டை தாலாட்டி தேனிதழில் முத்தமிட்டு சிரித்திடும் தென்றல்…”

அந்த காரிகையின் முகம் வெட்கத்தில் சிவந்தது.  விலை உயர்ந்த மோதிரத்தை அணிந்திருந்த நீளமான அவள் விரல்கள், அவள் அழகிய முகத்தை மறைத்துக் கொண்டன.

தன் விழிகள் மூடி, அந்த காரிகை நீருக்குள்ளும் கனவில் மிதக்க, கரிகாலனின் புஜங்கள் அவள் மேனியைத் தழுவ, அதைக் கண்மூடி அந்த காரிகை ரசிக்க, அவள் சிவந்த அதரங்கள் மேலும் மெல்லிசையை  முணுமுணுத்தது.

“கட்டிலிலே சேர்ந்திருக்கும் காதலர்கள் மேனியிலே வட்டமிட்டு பாதை தேடி மயங்கிடும் தென்றல் போக வழியில்லாமல் வந்த விழி சுழன்றிடும் தென்றல் வான் பறக்கும் கொடியினிலே மீன் பறக்கும் மதுரையிலே…”

காரிகையின் கனவை கலைக்கும் விதமாக, “இளவரசியாரே… பாண்டிய நாட்டிற்குப் பேராபத்து. சோழ நாட்டு ஒற்றன் ஒருவன் பிடிபட்டுள்ளான். கிடைத்த செய்தி அத்தனை மகிழ்ச்சி அளிக்கவில்லை.” என்று பரபரப்பாகத் தகவல் கூறினாள் ஒரு பணிப்பெண்.

‘நான் வழிப்போக்கன்… என்று கூறிய அந்த வீரன் யாராக இருக்கும்? ‘ என்று பல  யூகங்களோடு சிந்தித்தாள் அந்த காரிகை.

நாட்கள் நகர, அந்த காரிகை வராத ஏமாற்றத்தில், கோபமாக அடர்ந்த காட்டுக்குள் நுழைந்தான் கரிகாலன்.

உள்ளே செல்ல செல்ல காடு மிகவும் அடர்த்தியாகவும், ரமணீயமாகவும் இருந்தது. புஷ்பக கொடிகள், மரங்கள் மீது தாவிச் சென்று கரிகாலனின் முகத்தைத் தீண்டி, தீண்டி வழி விடக் கரிகாலனுக்கு அந்த காரிகையின் பட்டு மேனி நினைவு வந்தது. கரிகாலனின் எண்ணம் காரிகையைச் சுற்றி இருக்க, கொடிகளில் சலசலப்பு ஏற்பட்டது.

கரிகாலன் சலசலப்பைக் கேட்கும் மனநிலையில் இல்லை. அந்த புதர் போன்ற கொடிகளின் வழியே இரு கண்கள் பளபளத்தது. அந்த நான்கு கால் பிராணி மனித வாசனையிலும்,புரவியின் குளங்களின் ஓசையிலும் பதுங்கியது. கரிகாலன்  தன் சுற்றுப் புறத்தை மறந்து தன் வெண் புரவியை மெதுவாகச் செலுத்திக் கொண்டிருந்தான்.

அப்பொழுது, ராட்சஷ உருவத்தோடும், கூறிய நகங்களோடும், கண்களில் பளபளப்போடும் வனப்பான புலி ஒன்று கரிகாலனை நோக்கிப் பாய… அரை நொடியை விடக் குறைந்த வினாடியில் சரேலென திரும்பி தன் இடுப்பு கச்சையிலிருந்து வாளை உருவி வரிகள் நிறைந்த அந்த வனப்பான புலியை நோக்கி வீசினான் கரிகாலன். அந்த வீச்சு மந்திர வீச்சாகப் பாய்ந்து, புலியின் தலையைக் கரிகாலனுக்குப் பின் பக்கமும், உடலை அவனுக்கு முன் பக்கமும் வீசியது.

சற்று அருகேயிருந்த மரக்கிளையிலிருந்த ஒரு  மைனா தனது மஞ்சள்நிற மூக்குடன் கீழே நடப்பத்தை சற்று அச்சத்துடன் உற்றுப் பார்த்தது. இதர பட்சிகள் கூச்சலிட்டுப் பறந்தது.

கரிகாலன் தன்  சினத்திற்கு மேலும்  உயிர்ப் பலி கொடுக்க விரும்பாமல், அவர்கள் கூடாரமிட்டிருக்கும் இடத்தை நோக்கிச் சென்றான்.

சற்று கோபம் தணிந்து,  அந்த இரண்டாம் சாமத்தில் அந்த காரிகை சென்ற வழி பார்த்து அமர்ந்திருந்தான் கரிகாலன்.

“இளவரசே! நம் ஒற்றர்கள் நமக்காகக் காத்திருப்பார்கள். நாம் இந்த காட்டுக்குள் கூடாரமிட்டு அமர்ந்திருப்பது நமக்கு அத்தனை பாதுகாப்பில்லை இளவரசே.” என்று தயக்கமாகக் கூறினான் முத்தழகன்.

“ஏன் முத்தழகா? நெஞ்சுரம் குறைந்து அச்சம் உன்னைச் சூழ்ந்து கொண்டதோ?இல்லை இந்த கரிகாலனின் வீரத்தில் ஐயம் வந்துவிட்டதோ?” என்று கரிகாலன் தன் வலக்கையால்  உறையில் உள்ள கூரிய வாளை உருவி தன் இடக்கையால் அதை நீவியபடி கேட்டான் கரிகாலன்.

“இளவரசரின் வீரத்தை  இந்த தரணி மீது வாழும் ஒருவர் சந்தேகிக்க இயலுமா? ஆனால், வந்த காரியத்தை விட்டுவிட்டு அந்த பெண்ணிற்காகக் காத்திருப்பது எனக்கு அத்தனை உசிதமாகப் படவில்லை. அந்த காரிகை மீது தங்களுக்கு உள்ள நம்பிக்கை…” என்று முத்தழகன் நேர விரயத்தை குறிப்பிட்டு தன் உரையை முடிக்காமல் தயக்கத்தோடு  நிறுத்த, “முத்தழகா…” என்று கர்ஜித்தான் கரிகாலன். அந்த கர்ஜனை காடெங்கும் எதிரொலித்தது.

முத்தழகன்  மௌனம் காக்க, “அவள் வருவாள்…” என்று கரிகாலன் உறுதியாகக் கூறினான்.

காலை கதிரவன், தன் கதிர்வீச்சுகளைத் தங்க ஒளி போல் பரப்பிக் கொண்டிருக்க, பச்சை நிற உடையுடுத்தி தன் அடையாளத்தை  மறைத்துக் கொண்டு அத்தனை ஜனநடமாட்டம் இல்லாத வழியாக நடந்து வந்தாள் அந்த காரிகை. அவள் சற்று களையிழந்த மதிபோலிருந்தாள். பச்சை பசேலென்று இருந்த இடத்திற்குள் நுழைந்தவுடன் வேகவேகமாக குதித்தோடிய அந்த காரிகை அனைவரின் கண்களிருந்தும் மறைந்துவிட்டாள்.

அதே நேரம், கரிகாலன், முத்தழகனும் யாரும் அறியாவண்ணம் அந்த வனப்பகுதியில் அந்த ஆற்று நீர் அருகே தங்கியிருந்தனர்.

அப்பொழுது மல்லிகை மணம் வீச, “முத்தழகா, மல்லிகை நம் மனதைக் கொள்ளை கொள்கிறதல்லவா?” என்று ஆர்வமாகக் கேட்டான் கரிகாலன்.

“இளவரசே… என்னை மன்னித்துவிடுங்கள். எந்த மல்லிகை மனமும் என்னைக் கவரவில்லை.” என்று உறுதியாகக் கூறினான் முத்தழகன்.

“ஹா… ஹா..” என்று சிரித்தான் கரிகாலன். இந்த முறை சிரிப்பு சத்தம் மெதுவாகவே இருந்தது. அவன் கண்கள் அவளைத் தேடின.

அந்த காரிகை, ஆற்று நீர் அருகே, படர்ந்திருந்த ஒரு கொடிக்குள் அமர்ந்து அன்று கரிகாலனைச் சந்தித்த இடத்தில் தன் விழிகளால் அந்த பசுமையான இடத்தை நோட்டமிட்டாள்.

அங்கு மானிடர்கள் இருப்பதற்கான அறிகுறியே இல்லாமல் இருக்க அவள் கண்கள் சோர்வை வெளிப்படுத்தின. கரிகாலன் மல்லிகையின் மணத்தில் மரத்திற்குப் பின்னே ஒளிந்து கொண்டு அந்த காரிகையைத் தேட, அவன் கூர்மையான கண்கள் அவள் விழிகளில் நிலைத்தன. அந்த முறுக்கு மீசையின் கீழே இருந்த அந்த அழுத்தமான உதடுகள் புன்னகையில் விரிந்தன.

பச்சை துகில் அவள் தேகத்தை மறைக்க, பச்சைக் கொடிகள் அவளை மறைக்கக் கொடிகளின் புஷ்பங்கள் அவள் மதி முகத்தை மறைக்க, இலைகளுக்கு இடையே தெரிந்த அவள் விழிகள் கரிகாலனின் தேடலுக்குப் பதில் கொடுத்தது.

யாரையும் காண முடியாத ஏமாற்றத்தில், அந்த காரிகை சர்ப்பம் போல் நெளிந்து வளைந்து சட்டென்று மறைய அவளை பின்  தொடர்ந்தான் கரிகாலன்.

‘இவள் எப்படி வந்தாள்? அன்று போல் நீர் வழியாக வரவில்லையே? யாரும் அறியாவண்ணம் வந்திருக்கிறாள்.’ என்று யோசனையோடு அவள் சென்ற வழியைப் பின்தொடர்ந்தான் கரிகாலன்.

மல்லிகை மணம் மட்டுமே அந்த பாதையில் சூழ்ந்திருக்க, அவளைக் காணவில்லை. அவள் சென்றதற்கான அடையாளம் மட்டுமே ஆங்காங்கே இருக்க… கரிகாலன் மேலே செல்ல செல்ல அங்கு அவன் கண்ட காட்சி அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தேன் மழை பொழியும்…

 

error: Content is protected !!