Thenmazhai – Episode 7 (Final Part)

Thenmazhai – Episode 7 (Final Part)

 

தேன் மழை அத்தியாயம் – 7

கரிகாலன் துரிதமாகச் செயல்பட்டு அவர்களிடமிருந்து தப்பிவிட, கரிகாலனைச் சிறை செய்யும் வேலையைக் காவலர்களிடம் ஒப்படைத்துவிட்டு, கயல்விழி இருக்கும் இடத்திற்கு விரைந்தார் மந்திரி.

கயல்விழியை அழைத்துக் கொண்டு, தேன்மழையை நோக்கி நடந்தார் மந்திரி.

கயல்விழியின் கைகள் சிறைப்பட்டிருக்க, “மந்திரியாரே! அச்சம் வேண்டாம். யாம் அச்சமின்றி தேன்மழைக்கு வருவோம். தங்களுக்கு உம் வீரத்தின் மீது நம்பிக்கையிருந்தால், என் கை விலங்கினை அவிழ்த்துவிடலாம்.” என்று கயல்விழி ஏளனமாகக் கூற, மந்திரி கை கட்டுகளை அவிழ்த்துவிடுமாறு செய்கை காட்டினார்.

மந்திரியை பின் தொடர்ந்தாள் கயல்விழி. கயல்விழி படைத்தலைவரின் அறையைக் கடந்து செல்ல, தன் ஆபரணத்தைக் கழட்டி யாரும் அறியாவண்ணம் தனக்கு ஆபத்து என்று தெரிவிக்கும் விதமாகப் படைத்தலைவர் அறைக்குள் வீசிவிட்டு கயல்விழி மௌனமாக நடக்க, மந்திரி இளவரசியின் செயலை கண்டும் காணாது போலவும் ஏளன புன்முறுவலோடு நடந்தார்.

தேன்மழை. அவர்கள் அந்த இடத்தை கடந்து செல்கையில், அந்த இடத்தின் பசுமை, செழுமை நம்மை மயக்குகிறது. அந்த இடம் அடர்த்தியாகவும், ரமணீயமாகவும் இருந்தது.  புஷ்பக கொடிகள் மரங்கள் மீது தாவித் தாவி அதன் கொத்துக்களைக் கீழே தொங்கவிட்டு அவர்களின் முகத்தைத் தீண்டி வழியை விட்டன.

அந்த நொடியிலும், மலர் கொடியின் தீண்டல் தன்னவனின் தீண்டலைக் கயல்விழிக்கு நினைவூட்ட, அவள் முகம் சிவந்தது. கொடி கூட்டத்தை விலக்கி அவர்கள் மேலே நடக்க அங்குத் தெரிந்தது ஓர் அழகிய பூந்தோட்டம்.  அங்கு அமைத்திருந்த சுனை நீரை நோக்கிச் சென்றனர்.

அவர்கள் அங்குச் சென்றதும் அந்த பாதை குறுகி வளைந்து நெளிந்து சென்றது. புஷ்பக மணம் அனைவரையும் மயக்க, மேலும் செல்ல செல்ல அந்த இடம்  சற்று அச்சத்தை அளிக்க, “அனைத்தும் விஷ செடிகள். யாரவது வழி தெரியாமல் இங்கு வந்தால் மனிதரைக் கொன்றுவிடும்.” என்று கூறி பெருங்குரலில் சிரித்தார் மந்திரி. அங்கு ஓர் குகை இருக்க.. அதன் வாயிலிலிருந்த கதவு திறக்க கயல்விழி உள்ளே சென்றாள்.

குகையின் மேல் வாயில் வழியாகச் சில்லென்ற காற்று வீச, அந்த இடம் ஓர் சொர்க்கமாகக் காட்சி அளித்தது.

“வாருங்கள் இளவரசியாரே!” என்று அங்கு ஓர் குரல் ஓங்கி ஒலிக்க, அவரை கூர்மையாகப் பார்த்தாள் கயல்விழி.

ஆம்… அங்குக் கயல்விழிக்காகக் காத்திருந்தார் படைத் தலைவர் நெடுமாறன்.

“படைத்தலைவரே! தாங்கள் இளவரசியாரைக் காப்பாற்ற வருவீர்கள் என்ற எண்ணத்தோடு தங்கள் அறைக்கு ஆபரணத்தை வீசி  உங்களுக்குச் செய்தி கொடுத்திருக்கிறார் இளவரசி.” என்று நக்கல் தொனிக்கும் குரலில் கூறினார் மந்திரி.

“படைத்தலைவர் மீது அத்தனை நம்பிக்கை…” என்று தன் இடுப்பு கச்சையிலிருக்கும் வாளை பிடித்தபடி கூறினார் படைத்தலைவர்.  அங்கு ஓர் சிறிய நீர்வீழ்ச்சி. வடிவமைக்கப்பட்ட  அழகிய தோட்டம் அமைந்திருக்க, அதன் அருகே நின்று கொண்டு மேலும் பேசினார் படைத்தலைவர்.

“அந்த நம்பிக்கையைச் சற்று பாசமாக மாற்றி, தங்கள் தந்தை… அது தான் என் தமயன் என்னிடம் ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்திருந்தால் இளவரசியாருக்கு இந்த பாதிப்பு வந்திருக்காது. என்னை மன்னித்துவிடுங்கள் இளவரசியாரே. இனி இதுவே உங்கள் அரண்மனை.  உங்களைக் கஷ்டப்படுத்துவது என் விருப்பமில்லை. நான் நியமிக்கும் பணிப்பெண்கள் உங்களுக்கு இங்கு பணிபுரிவார்கள். ஆனால், இங்கிருந்து எந்த மார்க்கத்தில் தப்பிக்க விரும்பினாலும், மேலே இருக்கும் தேன்கூடு கலைக்கப்படும். தேன்மழை சிந்தும். உங்கள் அதரங்கள் தேனை ருசிக்க, தேனீக்கள் உங்களை ருசிக்க விஷம் தோய்ந்து தங்கள் மரணம் கொடூரமாக அமையும்.” என்று பணிவாக ஆரம்பித்து குரூரமாக முடித்தார் நெடுமாறன்.

“படைத்தலைவரே! இது தான் தேன்மழையின் சிறப்போ? அருமை. அருமை. இந்த இடத்தை காணவேண்டும் என்ற என் அவா இன்று தான் நிறைவேறியது.” என்று கயல்விழி அச்சமின்றி கூற, “என்ன இளவரசியாரே! இங்கிருந்து தப்பிவிடலாம் என்ற இறுமாப்பா?” என்று படைத்தலைவர் சீற்றமாகக் கேட்க, “அரசருக்குத் தெரியா இடம் இங்குண்டோ?” என்று கயல்விழி நக்கல் தொனியில் கேட்டாள்.

“ஹா… ஹா…” என்று பெருங்குரலில் சிரித்து, “அரசருக்குத் தெரியாத இடமில்லை. ஆனால், தாங்கள் இங்கு இருப்பது அரசருக்குத் தெரிய வாய்ப்பில்லை இளவரசியாரே! தாங்கள் இங்கிருப்பதை அறியுமுன் அவர் உயிர் இம்மண்ணுலகை விட்டு நீங்கிவிடும்.” என்று நெடுமாறன் கூற, கயல்விழி அவரை புன்னகையோடு பார்த்தாள்.

இளவரசியாரின் மாளிகையிலிருந்து தப்பிய கரிகாலன் முத்தழகன் இருக்கும் இடத்தை அடைந்து, “முத்தழகா! நாம் தாமதியாமல் அரண்மனைக்குக்  கிளம்ப வேண்டும். இளவரசியார் உயிருக்கு ஆபத்து.” என்று கரிகாலன் தன் வெண்புரவியைச் செலுத்த ஆயத்தமாகியபடியே கூற, முத்தழகனும் தன் புரவியைச் செலுத்தினான்.

“இளவரசே! தாங்கள் அங்கிருந்து தானே வருகிறீர்.” என்று முத்தழகன் தயக்கமாகக் கேட்க, “ஆம்.. விரிவாகக் கூற, இப்பொழுது சமயமில்லை. வாரும் விரைவோம் அரண்மனையை நோக்கி.” என்று கூறி ஆதித்த கரிகாலன் அரண்மையை நோக்கி வெண்புரவியில் மின்னல் வேகத்தில் பறந்தான்.

அப்பொழுது பொழுது புலர்ந்து, ஏழு நாழிகையானதால் பாண்டியன் அரண்மனைச் சிகரங்களிலிருந்த தங்கக் கலசங்கள் கதிரவன் ஒளிபட்டு ஜாஜ்வல்லியமாக பிரகாசித்துக் கொண்டிருந்தது. வைகையிலிருந்து நீராடி வந்து கொண்டிருந்த அந்தணர் வேதமோதிய சப்தமும், ஓதுவார்களின் தமிழிசை ஒலிகளும், அறநெறி தவறாத ஆட்சியைப் பறைசாற்றியது. வயலுக்குச் செல்ல துவங்கிய கால்நடைகளின் கழுத்தில் ஆடிய மணி அரவம் நாட்டின் செழுமையைக் கூற, இதை எதையும் ரசிக்க மனமில்லாமல் வேகமாக அரண்மனை நோக்கிச் சென்றான் கரிகாலன்.

காவலாளிகள் கரிகாலனை வழி மறிக்க, “ஆதித்த கரிகாலனின் வருகையை உமது அரசருக்கு தெரிவியும்.” என்று கர்ஜித்தது அவன் குரல்.

கரிகாலனின் தேஜஸ் நிறைந்த கண்கள் காவலாளியை மிரளச்  செய்யக் கட்டளைக்கு அடிபணிந்து துரிதமாகச் செயல்பட்டான் காவலாளி.

கரிகாலனை வரவேற்ற சுந்தரபாண்டியர், கரிகாலனை ஆரத் தழுவி, “எத்தனை திட்டமிட்டும் என் மகளை நான் இழந்து விட்டேனே!” என்று கவலை தோய்ந்த குரலில் கூறினார்.

“அரசே! நீர் கலங்க வேண்டாம். கயல்விழியின் நுண்ணறிவு தாங்கள் அறியாததா?” என்று ஆதித்த கரிகாலன் நம்பிக்கையோடு கூற, “அவள் வீரம், நுண்ணறிவு அனைத்தும் யான் அறிந்ததே! ஆனால், முதுகில் குத்தும் நம்பிக்கைத் துரோகிகள் முன் அவள் நுண்ணறிவும், வீரமும் பயனற்று போகுமென்று அஞ்சுகிறேன்.” என்று சுந்தரபாண்டியன் கூற, “இல்லை. நேற்று இளவரசியார், சம்பந்தமில்லாமல் தேனீக்களைப் பற்றியும், அதன் சுவையைப் பற்றியும்  பேசியதை போல் நான் உணர்ந்தேன். இளவரசியாருக்கு எதோ செய்தியறிந்தே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்று இப்பொழுது தோன்றுகிறது.” என்று கரிகாலன் தீவிரமாகக் கூற, யோசனையாகத் தலை அசைத்தார் சுந்தரபாண்டியர்.

‘இளவரசியாரை தாங்கள் சந்தித்தீர்களா?’ என்ற கேள்வியோடு சுந்தர பாண்டியர் கரிகாலனைப் பார்க்க, “அரசே, தங்கள் ஓலை கிடைத்து, உமக்கு உதவி புரிய யாம் இங்குப் பயணித்தோம். ஆனால், இளவரசியாரைச் சந்தித்ததும், அவர் பக்கம்  என் மனம் சென்றதும்…” என்று கரிகாலன் மேலே கூறாமல் நிறுத்த, “என் மகளின் மனமும் உங்கள் பக்கம் சாய்ந்ததை நீங்கள் கூறாமல் நான் அறிய என் மகள் உங்களிடம் இந்த முத்திரை மோதிரத்தை அளித்திருக்கிறாள். ம்… கெட்டிக்காரி தான். ” என்று அவர் தன் மீசையை முறுக்கிக் கொள்ள, கரிகாலன் கயல்விழியின் செயலில் மெய் சிலிர்த்து நின்றான்.

“அரசே! இப்பொழுது கயல்விழி இருக்குமிடம்?” என்று கேள்வியாக நிறுத்த, “கயல்விழி பேச்சில் அவள் தேன்மழையை தான் குறிப்பிட்டறிகிறாள். ஆனால் தெரிந்தே அபாயம் நிறைந்த அந்த இடத்திற்கு  சென்றதன் காரணம்.” என்று சுந்தரபாண்டியர் சிந்திக்க, “அரசே! அதற்கு இப்பொழுது நேரமில்லை. நிச்சயம் இளவரசியின் செயலில் ஓர் காரணமிருக்கும்.” என்று உறுதியாகக் கூறினான் கரிகாலன்.

 

அதே க்ஷணம் தேன்மழையில், “என்ன இளவரசியாரே புன்னகைக்கிறீர்? எமது ராஜதந்திரத்தைப் பார்த்து, உமது சித்தம் கலங்கிவிட்டதா?” என்று கேட்டு நகைத்தான் நெடுமாறன்.

“படைத்தலைவரே! தாங்கள் செய்தது ராஜ துரோகம்! பின்பற்றியது நரித்தந்திரம். ராஜ தந்திரம் என்னவென்று உமக்குத் தெரியுமா?” என்று கம்பீரமாகக் கேட்டாள் கயல்விழி.

“அரசருக்கு எதிராக தாங்கள் செயல்பட, நம்பிக்கைத் துரோகியை இனம் காண அவரது உற்ற தோழரான சோழ அரசரின் உதவியை நாடிய எமது தந்தையின் செயலே ராஜ தந்திரம். எமக்கும் உமது மேல் சந்தேகம் தான். அன்று என் மேல் வாள் வீசப்பட்ட, காப்பாற்ற வராமல்… காலம் தாழ்ந்து வந்து ஏமாற்றமாகத் திரும்பினீர் அல்லவா? அன்று ஊர்ஜிதமாகியது எமது ஐயம்.” என்று கயல்விழி கூற, அதிர்ச்சியாக இளவரசியாரைப் பார்த்தார் படைத்தலைவர்.

“என்ன படைத்தலைவரே? அதற்குள்  அதிர்ச்சியாகிவிட்டீர்? உமது சேவகராய் செயல்படும் மந்திரியை திசை திருப்பவே உமது அறையில் ஆபரணத்தை எரிந்தேன். அதே நேரத்தில் அரசருக்கும் என் ஓலை தொடுத்த எமது கத்தி அவரது அறைக்கும் பாய்ந்திருக்கும்.” என்று கூறி  கலகலவென சிரித்தாள் கயல்விழி.

“இன்னும் பல சுவாரசிய  செய்திகள் உள்ளன. கவனியுங்கள் படைத்தலைவரே. நான் அப்புறப் படுத்திய பணிப்பெண்கள் கண்களிலிருந்து மட்டும் தான் அப்புறப்படுத்தப்பட்டார்கள். அரண்மனையிலிருந்து அல்ல. அவர்களுக்கு உமது திட்டம் தெரியும். அரசரும், இளவரச ஆதித்த கரிகாலனும் சில நொடிகளில் இங்கிருப்பார்கள்.” என்று கயல்விழி உறுதியாகக் கூற, டொக் டொக் டொக்கென்ற புரவிகளின் சத்தம் அந்த பூந்தோட்டத்தை அதிரச் செய்தது.

அப்பொழுது கரிகாலன் உள்ளே நுழைய, அங்கு வீரர்கள் வாளோடு சூழ்ந்தனர்.

தன் கையிலுள்ள கத்தியால் வீரரைத் தாக்கி அங்கிருந்த வாளை உருவி வேகமாக வீசினாள் கயல்விழி. கயல்விழி வீசிய வாள் வெகு துரிதமாக நெடுமாறனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீரர்களின் வாளை பலமாகத் தாக்கியது. வீரர்களின் வாள் கையை விட்டு அகன்று பறந்தோடியது.

ஒரு  குழந்தையின் விளையாட்டு வாளைத் தடுப்பது போல் வீரர்களின் வாளை மிக அலட்சியமாகத் தடுத்து விளையாடினாள் அந்த காரிகை.

தன்னவளின், வீரம், விவேகம், சுந்தரம் என அனைத்திலும் ஈர்க்கப்பட்டான் கரிகாலன்.

மனம் எங்கிருந்தாலும், கரிகாலனின் கருத்து நெடுமாறன் வீசிய வாளிலிருந்தது. எதிரியின் வாளை பின்னுக்கு இழுத்து, சரேலென வாள் பிடித்த கையை பின்னால் இழுத்தான் கரிகாலன்.

நெடுமாறனின் வாள் கையிலிருந்து விடுபட்டு, பல அடிகள் தள்ளி கீழே விழுந்தது.

“படைத்தலைவரே! தங்களை கையும்  களவுமாக பிடிக்க நான்  செய்த ராஜதந்திரமே இது!” என்று பெண்சிங்கமாகக் கர்ஜித்தாள் கயல்விழி.

“அடையுங்கள் இவரைச் சிறையில்.” என்று கயல்விழி  ஆணையிட, “விரைவில் பரணி போற்றும்  திருமணத்தை ஏற்பாடு செய்கிறேன்.” என்று கூறி புன்னகையோடு சென்றார் சுந்தர பாண்டியர்.

“இளவரசியாரே! என்ன இது விபரீத விளையாட்டு?” என்று சற்று சினத்தோடு கேட்டான் கரிகாலன்.

“இளவரசே நான் தான் சொன்னேன் அல்லவா? எங்கள் நாட்டுத் தேனீக்கள் மாயாஜாலம் நிறைந்தவை என்றும் தேனும் அதீத ருசியுடவை என்றும்…” என்று கயல்விழி சரசமாக வினவ, “தேனை ருசிக்கும் எண்ணமிருந்தால் தாங்கள் இப்படி விஷபரீட்சையில் இறங்கக் கூடாது.” என்று கரிகாலன் அன்பாகக் கட்டளையிட்டான்.

“வீரமும், விவேகமும் இருக்கும் தங்கள் மனதில் நான் நிறைந்திருக்க, என்றும் என் வாழ்வில் தேன்மழை பொழியும்.” என்று உணர்ச்சி பொங்க ஆரம்பித்து, “நான் எந்த விஷப்பரீட்சையிலும் இறங்கலாம்.” என்று கூறி குறும்பாகச் சிரித்தாள் அந்த காரிகை.

முறுக்கேறிய புஜங்களை தன் மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு , கரிகாலன் அவளைப் பார்க்க, “இளவரசே, நாம் தனிமையை விரும்பும் நாட்களில் தேன்மழைக்கு வந்துவிடுவோம்.” என்று கயல்விழி  கோரிக்கை வைக்க, “கயல்விழி, நீ என் அருகிலிருந்தால் எனக்கு எப்பொழுதும் தித்திக்கும் தேன்மழை தான். ஆனால், சகலமும் வெற்றிகரமாக முடிந்த இந்த தேன்மழை நமக்கு ஒரு  அழகிய நந்தவனமே! நீ விரும்பும் நாட்களில் நிச்சயம் வருவோம்.” என்று அவளை தன் மீது சாய்த்துக் கொண்டு கூறினான் கரிகாலன்.

கரிகாலனின் பேச்சில் கயல்விழி கிண்கிணியாகச் சிரிக்க, அந்த காரிகையின் புன்னகையில் முத்துக்கள் உதிர, அவள் மீன் விழிகள் காந்தமாய் இழுக்க, அவள் செந்தாமரை முகம் குங்குமமாய் சிவக்க… இன்னும் நமக்கு அங்கு என்ன வேலை?

அவர்கள் வாழ்வு என்றும் தேன்மழையாய் தித்திக்கட்டும் என்று வாழ்த்தி அவர்களுக்கு  தனிமை கொடுத்து விடைபெறுவோம்!!!

 

error: Content is protected !!