Thithikkum theechudare – 12

TTS

Thithikkum theechudare – 12

தித்திக்கும் தீச்சுடரே – 12

முகிலன் தீவிர யோசனையில் இருந்தான். அவனால், எதுவும் சரியாக சிந்திக்க கூட முடியவில்லை. முதல் வேலையாக அவனும், மீராவும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினான்.

 அவன் தன் நெற்றியைத் தடவிக்கொண்டு, ‘மத்ததெல்லாம் அப்புறம் யோசிப்போம்.’ என்று நிதானித்துக் கொண்டான்.

மைதிலியின் தந்தை அனைவரையும் பல மணிநேரம் சோதிக்காமல் சில மணி நேரத்தில் கண் விழித்தார். மைதிலியின் குடும்பம் அடைந்த நிம்மதிக்கு சற்றும் குறைவில்லாமல் அவர்கள் குழு முழுவதுமே நிம்மதி அடைந்தது.

மருத்துவ செலவு மொத்தத்தையும் முகிலன் செய்துவிட்டு, அவன் பங்களா நோக்கி சென்றான். அவன் செல்வதைப் பார்த்து மீராவும், அவர்கள் தங்கி இருக்கும் இடம் நோக்கி செல்ல ஆரம்பித்தாள்.

அப்பொழுது, அவள் அழுது கொண்டே இருக்கும் மைதிலியை பார்க்க, மீராவின் கால்கள் அவளை நோக்கி சென்றது. “மைதிலி என்ன ஆச்சு? எதுக்கு அழுதுகிட்டு இருக்க?” மீரா கேட்க, “அதெல்லாம் ஒண்ணுமில்லை மேடம்” என்று கண்களை துடைத்துக் கொண்டாள்.

“அது தான் அப்பாவுக்கு சரியாகிருச்சில்லை?அது தான் முகிலன் சார் எல்லாம் பார்த்துப்பாங்கள்ல?” மீரா கன அக்கறையாக கேட்க, “இல்லை, அப்பா சரியாகிட்டாங்க. ஆனால், ஷூட்டிங் நடக்குமான்னு தெரியலை. உடம்பு சரி இல்லாததால எங்க அப்பாவுக்கு வேலை இருக்காது இந்த ஷூட்டிங்கில். ஆனால், அம்மா முடிஞ்ச வேலை செய்வாங்க. நான் கூட முடிஞ்ச வேலை செய்யறேன்னு சொல்லுவேன். முகிலன் சார் தான் விட மாட்டாங்க.” மைதிலி சோகமாக சொல்ல, “இதுக்கா அழுதுகிட்டு இருக்க?” என்று மீரா கேட்க, மைதிலி மறுப்பாக தலையசைத்தாள்.

“இந்த ஆக்சிடென்ட்  ஆனதால ஷூட்டிங் கேன்சல் ஆகுமுன்னு எல்லாரும் பேசுறாங்க. அடுத்த ஷூட்டிங் அப்ப தான் எல்லாருக்கும் வேலை. எங்க குடும்பம் மட்டுமின்னா பரவாயில்லை. ஆனால், என் பிரெண்ட்ஸ் குடும்பம் எல்லாரும் இப்ப கஷ்டப்படுவாங்க. ஷூட்டிங் ஆரம்பிச்சா தான் வேலை. அடுத்தால எப்ப வேலை ஆரமிப்பாங்கன்னு தெரியலை” மைதிலி சோகமாக கூற, ‘இந்த சின்ன வயதில், இந்த பெண்னுக்கு எத்தனை யோசனை?’ என்ற எண்ணம் தோன்ற, மீரா மறுப்பாக தலையசைத்தாள். அதே நேரம், அவளுக்கு வேறு ஒன்று பொறி தட்ட, திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

மைதிலி அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, மீரா சட்டென்று தன்னை மீட்டுக்கொண்டு, “மைதிலி கவலைப்படாத. ஷூட்டிங் எல்லாம் கேன்சல் ஆகாது. இரெண்டு மூணு நாள் தள்ளி போகலாம். மத்தபடி வேலை நடக்கும்.” மைதிலிக்கு தைரியம் கூறிக்கொண்டு அவள் தங்கியிருக்கும் பங்களாவை நோக்கி செல்ல, இடையில் முகிலனும் அவன் மேலாளரும் பேசுவதை பார்த்துவிட்டு தன் நடையின் வேகத்தை குறைத்தாள்.

அவர்கள் ஏதோ வாக்குவாதம் செய்து கொண்டிருப்பது போல் அவளுக்கு தெரிந்தது. அவள் தன் நடையின் வேகத்தை இன்னும் குறைத்துக் கொண்டாள். சில நிமிடங்களில் மேலாளர் வேறு திசையில் செல்ல, “ஹீரோ…” என்று அழைத்துக் கொண்டு அவள் முகிலன் அருகே செல்ல, அவள் குரலில் மேலாளர் அவளை குரோதமாக பார்த்துவிட்டு சென்றார்.

“ஹீரோ…” அவள் அந்த கடல் காற்றில் மணலில் அவன் முன்னே நிற்க, “என்ன மீரா?” அவன் முகத்தில் எந்தவித உணர்வுமின்றி கேட்டான்.

“மைதிலி அப்பா ஓகே தானே? ஒன்னும் பிரச்சனையில்லையே?” அவள் கேட்க, “ஒரு மாசம் ரெஸ்ட் எடுக்கணும். மத்தபடி எல்லாம் ஓகே தான்” அவன் முகத்தில் மெல்லிய புன்னகையோடு கூறினான்.

“உங்க வேலை ரொம்ப கஷ்டம்” அவன் முன்னே நடக்க, அவளும் அவனோடு பேசியபடியே நடக்க ஆரம்பித்தாள். அவன் எதுவும் பேசவில்லை. “என்ன பதில் சொல்ல மாட்டேங்குறீங்க?” அவள் கேட்க, “இல்லை, நீ தான் பத்திரிக்கைக்காரி ஆச்சே. ஏதாவது எழுத வேண்டியது தானே? இது சரியில்லை. அது சரியில்லைன்னு” அவன் கடுப்பாக கூற,

“பொய்யை எழுதணுமுன்னு எங்களுக்கு, எந்த பத்திரிகைக்கும் அவசியமில்லை. நான் உங்களை பார்க்குறேன். எல்லாம் ஒழுங்கா தான் நடக்குது. இங்க ஏதாவது தப்பா நடந்திருந்தா, அதை பகிரங்கம்மா எழுதவும் நான் தயங்க மாட்டேன்.” அவள் ஆணித்தரமாக கூற, அவன் எதுவும் பேசாமல் நடந்தான்.

“என் மேல கோபமா?” அவள் கேட்க, அவன் தன் நடையை நிறுத்தி அவளை ஆழமாக பார்த்தான்.

“ஏன் அப்படி கேட்குற?” அவன் தன் கண்களைச் சுருக்கி பார்க்க, “இல்லை, நான் தானே எப்பவும் உங்க கிட்ட வம்பு வளர்ப்பேன். நீங்க பொதுவா வம்பு வளர்க்க மாட்டீங்க. அது தான் கேட்டேன்” அவள் விளக்கத்தில் அவன் தன்னை கொஞ்சம் சுதாரித்துக் கொண்டான்.

மெல்லிய புன்னகையோடு மெதுவாக நடந்தான். ‘இவள் அப்பாவின் மீதான கோபத்தை இவள் மீது காட்டி என்ன பயன். பெர்சனல் மேனேஜர் இவளை பத்தி சொல்லி சொல்லி, நானும் ஏன் இவளை கூட்டிகிட்டு வந்தேன்னு யோசிக்குறேனோ? இல்லை, இவளை கூட்டிகிட்டு வந்து ஒரு பிரயோஜனமும் இல்லை. திருப்பி அனுப்ப போறோமேன்னு கடுப்பில் இருக்கேனோ?’ அவன் சுயஅலசலில் இருக்க, “என்ன ஹீரோ, முடிஞ்சிதா?” அவள் அவனைப் போல் புருவம் உயர்த்தி சிரித்தாள்.

“என்ன முடிஞ்சிதா?” அவன் புரியாமல் கேட்க, “இல்லை, என் மேல கோபமா இல்லையான்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தீங்களே. அந்த ஆராய்ச்சி” அவள் சிரிக்க, அவள் சிரிப்பு அவனையும் தொற்றிக் கொண்டது.

“நீங்க ரொம்ப குழப்பத்தில் இருக்கீங்க. நான் என்ன கேட்டாலும் மலங்க மலங்க விழிக்கறீங்க” மீரா கூற, “இல்லை, இந்த விபத்துனால கொஞ்சம் குழப்பம். வேலையை இன்னைக்கு ஆரம்பிக்க முடியாது.” அவன் யோசனையோடு கூற, “மிஸ்டர் ஜெயசாரதிக்கு இதில் சம்பந்தம் இருக்குமுன்னு யோசிக்கறீங்களா?” அவள் வினவ, அவன் அதிர்ந்து நிற்க, “என்னை கூட்டிகிட்டு வந்ததால் தான் பிரச்சனையா?” அவள் தொடர் கேள்வி கேட்க, “மீரா, ப்ளீஸ் ஹோல்டு ஆன்” அவன் இரு கைகளைத் தூக்கி மேலே இருந்து கீழ இறக்குவது போல் பாவனை செய்து அவளை அமைதி காக்க சொன்னான்.

“மீரா, இவ்வளவு வேகம் ஆகாது. நீ இப்படி கேள்வி கேட்டா எனக்கு மூச்சு வாங்குது. இட் இஸ் ஜஸ்ட் அன் ஆக்சிடென்ட்” என்றான் அழுத்தம் திருத்தமாக. “அப்ப, ஏன் என் மேல கோபப்பட்டீங்க?” அவள் தலைசாய்த்து கேட்க, ‘ஒரு பொண்ணுக்கு இவ்வளவு விவரமா?’ அவன் உள்ளம் நடுங்கியது. ‘இவளை இவங்க அப்பா பிள்ளை பூச்சின்னு சொல்றார்.’ அவன் கண்கள் இடுங்கியது.

“கோபமெல்லாம் படலை மீரா. கொஞ்சம் குழப்பம். மானேஜர் கூட கொஞ்சம் விவாதம் பண்ணிட்டு இருந்தேன். அது தான்.” அவன் கூற, “ஓகே ஹீரோ” அவள் சில நொடிகள் அமைதியாக நடந்தாள்.

“ஜெயசாரதி தான்னு காரணமுன்னா சொல்லுங்க. அந்த மனுஷனை கிழிகிழின்னு கிழிச்சிருவோம்” அவள் கூற, ‘எனக்கும் ஜெயசாரதியை கிழிகிழின்னு கிழிக்கணும்னு தான் ஆசை. ஆனால், இது சரியான சமயம் இல்லை. ஜெயசாரதி, இப்ப பிரச்சனையை என் பக்கம் திசை திருப்பிருவார். என் சினிமா தயாரிப்பு நிறுவனம் பெயர் கெட்டு போயிரும்’ அவன் தன் சிந்தனையோட்டத்தை நிறுத்தி, “உனக்கு உங்க அப்பாவை சுத்தமா பிடிக்காதா?” அவன் கேட்க, “அவர் என் அப்பாவே கிடையாது.” அவள் அழுத்தமாக கூற, அவள் குரல் சற்று இறுகி ஒலிக்க… அவன் தன் பேச்சை அங்கு நிறுத்திக் கொண்டான்.

“ஷூட்டிங் ஆரம்பிக்க ஒரு வாரம் கூட ஆகலாம். நான் சென்னை போயிட்டு வரலாமுன்னு இருக்கேன்.” அவன் கூற, அவள் சந்தோஷமாக தலையசைத்தாள். அவன் அவளோடு இருப்பதை அவள் இடைஞ்சலாக கருதுவதை அவள் செய்கை அப்பட்டமாக காட்டியது. அவன் அதை மனதில் குறித்துக் கொண்டான்.

“நீயும் என் கூட சென்னை வர” அவன் கூற, “ஏன்? என்னால் முடியாது” அவள் படபடத்தாள். ‘நானே கஷ்டப்பட்டு அந்த வீட்டிலிருந்து தப்பித்து வந்திருக்கிறேன். லூசா இவன்?’ என்பது போல் இருந்தது அவள் செய்கை.

“உன்னை இங்க தனியா விட்டுட்டு போக முடியாது” அவன் கூற, “நான் உங்க கூட வர மாட்டேன். இங்க தான் இருப்பேன். ஷூட்டிங் முடிந்து தான் கிளம்புவேன்” அவள் அழுத்தமாக கூறிவிட்டு முன்னே நடக்க, “நீ வந்து தான் ஆகணும்” அவன் அவள் கைகளை பிடித்திருந்தான்.

அவள் பார்வை அவன் கைகளைத் தீண்டியது. அவன் பிடிமானம் சற்று தளர்ந்தது. அவன் அவள் கைகளை விடவில்லை. ‘இந்த உரிமையை இவனுக்கு யார் கொடுத்தது?’ அவள் சிந்தை கோபம் கொண்டது. ஆனால், அந்த சினத்தை வெளிப்படுத்த விரும்பாமல் ஏதோ ஒன்று அவளைத் தடுத்தது. அந்த தீண்டலில் எந்த தவறான எண்ணமுமில்லை. அவள் அவன் தீண்டலை உள்வாங்கி கொண்டாள். “ஹீரோ…” அவள் சற்று கோபமாகவே அழைத்தாள்.

“நீ என் கூட வர்ற” அவன் கூற, “நான் வேலையா இங்கு வந்தேன். எல்லாரும் கிளம்பலை நான் மட்டும் கிளம்பணுமா? நான் கிளம்ப மாட்டேன்” அவள் பிடிவாதம் பிடிக்க, அவள் கேள்வியில் உள்ள நியாயத்தில், அவன் புன்னகைத்தான்.

“நீ என் கூட வேலைக்கு மட்டும் தான் வந்தியா?” அவன் மெல்லிய நக்கல் தொனிக்கும் குரலில் கேட்க, “ஆமா, நான் என் வேலைக்கு தான் வந்தேன்” மீரா பிடிவாதக்கார குழந்தையாக மாறி இருந்தாள். அவன் முகத்தில் இருந்த புன்னகை அரை சென்டிமீட்டர் கூடியது. அவளிடம் அவன் அந்த பேச்சை தொடரவில்லை. தொடர்ந்தாலும் பதில் வராது என்று அவனுக்கு தெரியும். இந்த சில நாட்களில் அவளிடம் எந்த பேச்சை வளர்க்க வேண்டும் என்பதில் அவன் தெளிவாக இருந்தான்.

“நான் உன் நல்லதுக்கு தானே சொல்லுவேன்.” அவன் ஆழமாக கூற, அவளிடம் அது வேலை செய்ய, “நீங்க ஏன் எனக்கு நல்லதை சொல்லணும்” அவள் கேட்க, “நான் உன் நண்பன் இல்லையா?” அவள் கைகள் அவன் பிடியில் இருந்தபடி கேட்க, அவன் குரலில் ஏதொன்று அவளைக் கட்டுப்படுத்தியது. அவள் அவனை ஆழமாக பார்த்தாள். அவள் அவன் முன் தன் மற்றோரு கரத்தை நீட்டினாள். “உண்மையா?” அவள் விழிகள் சந்தேகத்தில் மிளிர, அவன் நெஞ்சம் நடுங்கியது.

“நான் எங்க வீட்டுக்கு போனால், நீங்க என்னை திரும்ப இங்க கூட்டிகிட்டு வந்திருவீங்களா?” அவள் ஏக்கமாக… ஆம், அவள் கோபம், பிடிவாதம் அனைத்தயும் விட்டு ஏக்கமாக தான் கேட்டாள். அவனுக்கு அவள் குரலின் பாவனை புரிந்தது.

அவள் பார்வையும் பேச்சும் அவனை ஏதேதோ செய்ய, அவன் அவளுடைய மற்றோரு கைகளை பற்றினான். எதற்காக பற்றினான்? எந்த நோக்கத்தில் பற்றினான் அவனுக்கு தெரியவில்லை. அவளுக்கும் தெரியவில்லை. “கூட்டிகிட்டு வரேன்.” என்றான் உறுதியாக.

“ம்…” தலை அசைத்தாள் அவள். “இங்க உனக்கு பாதுகாப்பு இருக்குமான்னு தெரியலை. அதனால் தான்.”அவன் கூற, “எனக்கு அதை பத்தி கவலை இல்லை. நான் இங்க திரும்ப வரணும். என் அம்மாவுக்காக” அவன் பிடிமானத்தில் அவள் சற்று மனம் திறக்க, அவன் மூளை விழித்துக் கொண்டது

‘இவளை இங்கிருந்து அனுப்புமுன் எனக்கு ஏதாவது துருப்பு சீட்டு கிடைக்குமா?’ அவன் அவள் மேலும் பேசுவாள் என்று எதிர்பார்த்து மௌனித்தான்.

அவள் பேசவில்லை. அவன் பிடியை விலக்கி கொண்டு விலகி நின்றாள்.

அவள் பின்னோடு நடந்தாள். அவள் பார்வை அவன் மீதே இருந்தது. “நான் ஹீரோவை நம்புறேன்” அவள் கூற, அவன் இதயம் திக் என்று நின்று துடித்தது.

“நம்பலாமா?” அவள் நடப்பதை நிறுத்தி தலை சரித்து அவனை பார்த்து கேட்டாள்.

அவன் கைவிரல்கள் அவன் பாக்கெட்டுக்குள் இருத்தது. முறுவலோடு அவளைப் பார்த்தான். ஆமோதிப்பாக தலையசைத்தான்.

அவன் அலைப்பேசி ஒலிக்க, “நான் ஹீரோவை நம்புறேன்” அவள் சிரித்துக்கொண்டே அந்த கடற்கரை பங்களாவுக்குள் நுழைந்து கொண்டாள்.

ஜெயசாரதி தான் அழைத்திருந்தார். அவன் அலைபேசியைப் பார்த்துக் கொண்டே நின்றான்.

‘ஆயிரக்கணக்கான தொழிலாளிகளின் உயிர், மீரா அவன் மீது வைக்கும் நம்பிக்கை, அவள் மேல் அவனுக்கு துளிர்த்து கொண்டிருக்கும்… அதற்கு என்ன பெயர் என்று அவனுக்கு தெரியவில்லை. அன்பு, பாசம், நட்பு இதை எல்லாம் தாண்டி… அவனுக்கு தெரியவில்லை.’ எல்லாம் முட்டி மோதியது. அவன் ஜெயசாரதியின் அழைப்பை எடுக்கவில்லை.

அலைபேசி அமைதி அடைந்து மீண்டும் ஒலித்தது. “மீரா கிளம்பியாச்சா?”அவர் கேட்க, “இங்க இருந்து உடனே கிளம்ப முடியாது. நாளைக்கு காலையில் ஃபிளைட். நாளைக்கு உங்க பொண்ணு வந்துருவாங்க. அந்த ஃபோட்டோ வெளிய வராது. ” அவன் மனம் தன் தொழிலாளிகளை முன் நிறுத்தி யோசித்து பதில் கூறியது.

“ஹா… ஹா…” ஜெயசாரதி வெற்றி களிப்பில் எக்களித்தார். “இனி, ஒரு நாளும் என் பொண்ணு உன் கூட வரணுமுன்னு யோசிக்க கூடாது. உன் அரசியல் விளையாட்டுக்கு என் பொண்ணு பகடை காய் கிடையாது. அவள் மூலமா நீ ஒரு மண்ணும் கிழிக்க முடியாது. இதை மாதிரி எத்தனை பேர் அவளுக்கு வலை விரிச்சிருப்பாங்க. அத்தனை போரையும் துவசம் பண்ணிட்டு நான் இந்த இடத்தில் இருக்கேன். நீ எல்லாம் என் கால் தூசிக்கு சமம்” ஜெயசாரதி ஆர்ப்பரிக்க, முகிலன் மௌனமாக நின்றான்.

‘நாளை காலை வரை நேரம் இருக்கிறது. இவரை வீழ்த்த. மீரா தான் என் துருப்பு சீட்டு. அவ கிட்ட இருந்து எப்படியாவது அவ அம்மாவை பத்தி தெரிஞ்சிக்கணும். அந்த விஷயம் மூலம் எனக்கு ஏதாவது லாபம் கிடைக்கலாம்.’ முகிலன் ஜெயசாரதியின் திட்டத்தை முறியடிக்க வழி யோசித்து கொண்டிருந்தான்.

நேரம் மாலையைக் கடந்து இரவை அடைந்திருந்தது.

ஜெயசாரதி முகிலனை வீழ்த்தியதில் சந்தோஷமாக நித்திரைக்கு செல்ல, கிடைத்த வாய்ப்பை தவறவிட்டு விட கூடாது என்று முகிலன் தன் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான்.

அப்பொழுது அவன் அறைக்கதவு பலமாக தட்டப்பட்டது. “மீரா சாப்பிடவும் வரலை. பால் கொடுக்க ரூமுக்கு போனா, அங்க மீரா இல்லை” கதவுக்கு வெளியே நின்று கொண்டிருந்த நபர் கூற, முகிலன் நடுங்கிவிட்டான்.

‘உனக்கும் பப்பே… என் அப்பனுக்கும் பப்ப்பே’ என்று கிளம்பிவிட்டாளா? இல்லை அவளுக்கு எதுவும் ஆபத்தா?’ முகிலன் ஸ்தம்பித்து நின்றான்.

 தித்திப்புகள் தொடரும்…

error: Content is protected !!