Thithikuthey 15 & 16

Thithikuthey 15 & 16

பதினைந்து

யாருக்காகவும் நிற்காதது நேரம்… எதற்காகவும் காத்திருக்காதது காலம்… நேரமும் காலமும் கடமையை செய்ய… நாட்கள் உருண்டோடியது… தெய்வா அவளுக்கு வசதிப்படும் போதெல்லாம் கல்லூரி அலுவலக தொலைபேசியில் அழைப்பாள் அதுவும் இல்லாமல் ஏதாவது ஸ்பெஷல் உணவு செய்தால் வேன் தோழிகளிடம் கொடுத்து விடுவாள்.

பெற்றோரின் ஆதரவும் இல்லாமல் கணவனின் அருகாமையும் இல்லாத பெண்ணுக்கு இந்த ஆதரவாவது இருக்கட்டுமே என்ற அவளது எண்ணம் நந்தினிக்கு புரியவே செய்தது… இது போன்ற நல்ல மனிதர்களை சம்பாதித்து உள்ளான் தன் கணவன் என்ற பெருமையும் கொண்டது அவளது உள்ளம்.

சக்தி அவ்வப்போது கைபேசியில் அவளது நலம் விசாரிப்பான்… அவனது எண்ணமெல்லாம் படிக்கின்ற பெண்ணை தொந்தரவு செய்ய கூடாது என்றிருக்க… நந்தினிக்கோ புத்தகத்தை மூடி வைத்து விட்டால் சக்திவேலின் நினைவு படுத்தி எடுத்தது… நந்தினியின் உணர்வுகள் சக்திக்கு புரியவில்லை… சக்தியின் மனமோ நந்தினிக்கு தெரியவில்லை.

அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என சபரி மலைக்கு போகும் போதும் அவளை அழைக்காமல் சென்று விட… நந்தினிக்கு அது பெரும் அதிர்வாக இருந்தது… மலைக்கு செல்பவர்களது மனைவி பாத பூஜை செய்து அனுப்பி வைப்பது என்பது ஒரு உரிமையாக கருதப்பட்டு இருக்க… சக்தியோ அவளிடம் வெறும் செய்தியாக மட்டும் கூறி சென்றது நந்தினியின் மனதை வருத்தியது.

ஒரு விஷயத்தில் மட்டும் உறுதியாக இருந்தாள் நந்தினி… கண்டிப்பாக தன்னை தவிக்க விட்டுவிட மாட்டான் என்பதில்… மனைவியாக ஏற்று கொள்கிறானோ இல்லையோ… கண்டிப்பாக துணையாக இருப்பான் என்பதில் மட்டும் அவளுக்கு சந்தேகம் இருக்கவில்லை… எப்படியும் அவனை மாற்றி விட முடியும் என்பதிலும் உறுதியாகவே இருந்தாள்.

நடுவில் வளர்மதி அழைத்திருந்தாள்.

“என்னடி இப்படி பண்ணிட்ட?”

“ஏன் வளரு?”

“சக்தி அண்ணனை… சித்ரா லவ் பண்ணதுக்கே அவளுக்கு அவ்வளவு அட்வைஸ் பண்ண நீ? எப்படி டி?”

“வளரு… உனக்காவது நம்பிக்கை இருக்கா… நான் நல்லா இருப்பேன்னு?” குரல் நெகிழ நந்தினி கேட்க… வளர்மதியின் கண்கள் கலங்கி விட்டன.

“ஏன் டி அப்படி சொல்ற? நீ எப்படி இப்படி செய்தன்னு தான் எனக்கு கேள்வியே தவிர… அண்ணனை கொஞ்சம் கூட குறைவா சொல்ல முடியாதே நந்து… அவரோட நல்ல மனசுக்கு ரொம்ப நல்லா வருவார்டி… நீ எதுக்கும் கவலைப்படாத…” தோழி தேற்றிய விதத்தில் நந்தினியின் கண்கள் ஊற்றெடுக்க துவங்கின… கைகளில் வைத்திருந்த கைப்பேசியையும் மீறி அவளது கண்ணீர் வளர்மதிக்கு எட்டியது.

“ஏன் அழற நந்து?”

“வளரு… நம்ம சித்ரா என்னை ரொம்ப மோசமா நினைச்சுட்டு இருக்காடி… என்னால அவ கிட்ட பேசவே முடியல…” அழுது கொண்டே அவள் பேசியதை எல்லாம் வளர்மதியிடம் கூற.

“விடு நந்து… யாருக்கு எங்கன்னு கடவுள் தான் தீர்மானம் செய்யணும்… நம்ம கைல இல்ல… அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு நந்து… மாப்பிள்ளை சென்னைல ஐடில தான் இருக்காப்லயாம்…” அவளுக்கு தெரிந்த தகவலை நந்தினியிடம் கூறினாள் வளர்மதி.

“அவ கண்டிப்பா நல்லா இருக்கனும் வளரு…” பெருந்தன்மையாக நந்தினி கூறியதை கேட்ட வளர்மதிக்கு புன்னகை அரும்பியது.

“இப்போதான் அவ அப்படி பேசுனா இப்படி பேசினான்னு அழுதுட்டு… இப்போ இப்படி ஒரு வசனமா? உனக்கெல்லாம் செண்டிமெண்டல் குயின்னு பட்டம் கொடுக்கலாம்டி…” வளர்மதி நந்தினியை ஓட்டினாள்.

“அவ நல்லா இருந்தாத்தான் என் புருஷனை பத்தி நினைக்க மாட்டா வளரு… அதை என்னால டைஜஸ்ட் பண்ண முடியாது… சக்திய பத்தி நான் மட்டும் தான் நினைக்கணும்…” தீர்மானமாக அவள் கூறியதை கேட்ட வளர்மதி திகைத்து சிரித்தாள்.

“ஓவர் பொசெசிவ்னஸ் உடம்புக்கு ஆகாது மச்சி…” கூறிவிட்டு அவள் சிரித்தாள்.

நாட்கள் உருண்டோட அவ்வப்போது அழைக்கும் சக்திவேலின் அழைப்பை ஆர்வமாக எதிர்பார்த்து இருப்பாள் நந்தினி… அதுவும் தினம் அழைப்பான் என்றெல்லாம் சொல்ல முடியாது… வாரம் ஒரு முறை அல்லது இருமுறை என்றிருக்கும்… தானாக அவனுக்கு அழைக்க கூடாது என்பதையும் அவ்வப்போது நினைவில் வைத்து கொள்வாள் நந்தினி.

சக்தி அழைக்கும் போதும் அவளது படிப்பை பற்றி மட்டுமே விசாரணை செய்வான்… கல்லூரி இறுதி தேர்வு மற்றும் சிவில் சர்விஸ் முதல் நிலை தேர்வு என இரு வகையான தேர்வுகளுக்கு படிக்க வேண்டி இருந்ததால் பெரும்பாலான நேரங்களில் புத்தகத்தை விட்டு அசையாமல் படித்து வந்தாள்… அதுவே அவளது குழப்பங்களுக்கும் வடிகாலாக இருந்து வந்தது… கல்லூரி இறுதி தேர்வு அவளை பொறுத்தவரை வெகு சுலபமாக தோன்றியது… ஆனால் பிரிலிமினரி தேர்வு அவளை பெரும் பீதியில் ஆழ்த்தி இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

அவளது தோழி வாயிலாக பிரின்சிபாலின் அனுமதியுடன் லேப்டாப் வந்து சேர்ந்தது நந்தினிக்கு சக்திவேலிடமிருந்து… அன்று இரவு அவன் அழைக்க.

“எதுக்குங்க லேப்டாப் எல்லாம்… அதான் கம்பியுட்டர் லேப் இருக்கே… அதை யூஸ் பண்ணிக்குவேனே…” அவனிடம் குறைபட்டாள் அவனது மனைவி.

“இல்லம்மா… உனக்கு சப்ஜக்ட் பிரவுஸ் பண்ண யூஸ் ஆகும்… அதோட கரன்ட் அபெர்ஸ்ல நிறைய விஷயம் கத்துக்கணும்… எல்லாத்துக்கும் புக்க டிபன்ட் பண்ண முடியாதுன்னு இங்க ஸ்டடி சர்கிள்ல சொன்னாங்க… எல்லா நேரத்துலயும் லேப நம்ப முடியாதே…” அவன் கூறியதிலிருந்து தனக்காக சிரத்தை எடுத்து ஒவ்வொன்றையும் விசாரித்து கொண்டிருக்கிறான் என்பது புரிந்தது… அவளது மனம் நன்றியில் நனைந்தது.

“ரொம்ப தேங்க்ஸ்ங்க…” மனம் நிறைய நன்றியுரைத்தாலும் இப்போது இந்த செலவு தேவையா என்று குடும்ப தலைவியாக யோசித்தாள்… சக்தியால் சமாளிக்க கூடியதா என்பதும் அவளுக்கு தெரியவில்லையே.

“இவ்வளவு பணம் போட்டு இதை இப்போ வாங்கனுமா?” என்று அவள் கேட்க.

“இது உனக்கு தேவை… அதான் வாங்கி தந்தேன்… நீ உன்னோட மண்டைல எதையும் போட்டு குழப்பிக்காம ஒழுங்கா படிக்கற வேலைய மட்டும் பார் நந்தினி… ஓகே வா?” கறாராக அவன் முடித்து விட அவளால் மேற்கொண்டு எதையும் கேட்க முடியவில்லை.

கல்லூரி இறுதி தேர்வு அடுத்த வாரத்தில் இருக்க… படிப்பதற்கான விடுமுறையிலும் அவளை அவன் அழைத்து கொள்ளவில்லை… அவளுக்கும் எங்கு சென்று தங்குவது என்பது புரியாத ஒன்றாக இருந்ததால் ஒரே முடிவாக கல்லூரியிலேயே இருந்து விட்டாள்… ஆனால் இறுதி தேர்வு முடிந்தவுடன் அப்படி இருக்க முடியாதே! எங்கு செல்வது? இந்த ஒற்றை கேள்வி அவளை அரட்டி கொண்டு இருந்தது.

“இன்னும் ஒரு வாரத்துல பைனல் எக்ஸாம் வருது…” தயங்கியபடியே அவள் கூற.

“அப்படியா… ஆல் தி பெஸ்ட் நந்தினி…” சக்தியோ அவளது உணர்வு புரியாமல் வாழ்த்து மட்டும் கூற.

“தேங்க்ஸ்… ஆனா எக்ஸாம் நாலு நாள் தான்… அதுவும் லீவே விடாம ஷெட்யூல் போட்டிருக்காங்க…”

“ஏன்மா… படிக்க நாள் பத்தாதா?” புரியாமல் சக்தி கேட்ட போது பற்களை கடித்து கொண்டு கோபத்தை அடக்கி கொள்ளத்தான் வேண்டியிருந்தது நந்தினிக்கு.

“ம்ம்ம்ம்… அதெல்லாம் நாங்க நல்லாத்தான் படிச்சிருக்கோம்…” கடுப்பாக அவள் கூற.

“அப்புறம் என்ன?”

“எக்ஸாம் முடிஞ்சுட்டா லீவ் விட்டுடுவாங்க சக்தி…” கோபமாக ஆரம்பித்து பரிதாபமாக முடித்தாள் நந்தினி.

“ம்ம்ம்… ஒஹ்… அப்படியா…” என்று சிந்தனையில் ஆழ்ந்தான்.

“ம்ம்ம்ம்”

“நீ எம்எஸ்சி ஜாயின் பண்ணனும் தானே…” சந்தேகமாக அவன் கேட்க.

“அதுக்காக இப்போவே மெட்ராஸ் யுனிவர்சிட்டி வாசல்ல போய் உட்கார்ந்துக்க சொல்றீங்களா?”

அவள் கோபமாக கேட்க நினைத்தாலும் அவளால் கோபப்பட முடியவில்லை… ஒரு வீட்டை பார்க்க முடியாதா? ஒரு சிறிய வீடாக இருந்தாலும் போதுமே… அவனை பார்த்து கொண்டு அவன் துணையாக இருந்தால் ஏழு கடலையும் தாண்டிவிட முடியுமே… லேப்டாப் வாங்கி தருகிறான் ஆனால் வீடு பார்க்க முடியாது என்ற நிலை அவளுக்கு கோபத்தை வரவழைத்தது.

“ஓகே நந்தினி… என்ன செய்யலாம்ன்னு யோசிக்கறேன்… இதை பத்தியே நினைச்சுட்டு படிப்பை விட்டுடாதம்மா… இதையெல்லாம் நான் பார்த்துக்குவேன்… சரியா? என்று அவன் கேட்டபோது மனதிற்கு நிறைவாகத்தான் இருந்தது… ஆனால் என்ன செய்வானோ என்ற எண்ணம் தோன்றாமலும் இல்லை.

அடுத்த நாளே தெய்வா அழைத்தாள்.

“நந்து… உனக்கு எக்ஸாம் முடியுதாமே…”

“ஆமா அண்ணி…” சற்று சோர்வாக அவள் பதில் கூற.

“ஹை… அப்படீன்னா எக்ஸாம் முடிஞ்சதும் இங்க வாடா…” ஆசையாக அவள் அழைக்க… அழைத்து செல்ல வேண்டியவனோ ஒன்றும் கூறாமல் இருந்ததில் அவளது மனது சோர்வடைந்தது… ஆனால் அண்ணியாவது அழைத்தாரே என்ற எண்ணமும் மனதில் ஓடாமலில்லை.

“அவங்க என்ன சொன்னாங்க அண்ணி?” கனகாரியமாக அவன் என்ன சொல்லியிருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள முயல.

“அவன் கிடக்கிறான் விடு நந்து… உன்னை பார்க்கனும்ன்னு பசங்க ரெண்டும் ரொம்ப பிரியப்படறாங்க… இன்னும் ஒன் வீக்ல அவங்களுக்கும் லீவ் வந்துடும்… இங்க வாயேன…”

அவரது பாசத்தில் நெக்குருகி போனாள் நந்தினி… பிள்ளைகள் இருவரும் ஊட்டியில் படித்து கொண்டிருந்தனர்… அதனால் திருமணம் நடக்கும் சமயத்தில் அவர்கள் இருவரும் அங்கு இல்லையென்பதை முன்பே தெய்வா கூறியிருந்தாள்.

“அவங்க என்ன சொல்றாங்களோ அப்படி செய்துக்கறேன் அண்ணி… அவங்க அழைச்சுட்டு வந்தா கண்டிப்பா வந்துடறேன்…” என்று கூறி முடிக்க.

“ஹய்யோ என்ன நந்து இது? என் தம்பியா இருந்தாலும் உனக்கு ஒன்னு சொல்லி தரேன்… நினைப்புல வெச்சுக்கோ… நாம சொல்றதை தான் நம்ம வீட்டுகாரங்க கேக்கணும்… அவங்க சொல்றதை நாம கேக்கற மாதிரி ஆக்ட் கொடுத்துக்கனுமே தவிர இப்படி பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டிட கூடாது… புரியுதா?” நகைச்சுவையாக தெய்வா கூறி முடிக்க… நந்தினி வாய் விட்டு சிரித்தாள்.

தேர்வுக்கு செல்வதற்கு முன்பு வாழ்த்துவதற்காக சக்தி அழைக்க… அவனிடம் தெய்வா வீட்டிற்கு அழைத்ததை பகிர்ந்து கொண்டாள்… பதில் பேசாமல் கேட்டு கொண்டு கடைசியில் பார்க்கலாம் என்று சக்தி முடித்து விட… சிறு மன தாங்கலுடனே தேர்வறைக்கு சென்றாள்… அங்கு சென்றதும் அனைத்தும் மறந்துவிட தேர்வில் மொத்தமாக ஆழ்ந்தாள்.

திருப்தியாக தேர்வுகளை முடித்து விட்டு வந்தவளை அணைத்து கொண்டனர் அவளது தோழிகள்.

பிரிவுத்துயரம்!

மூன்று வருடங்களாக ஒன்றாக படித்து ஒன்றாக உணவருந்தி ஒரே அறையை பகிர்ந்து கொண்டு ஒரு கூட்டு கிளிகளாக இருந்தவர்கள் அவரவர் ஊரை தேடி போகும் சோகம்… வெற்றிகரமாக கல்லூரியின் ஒரு நிலையை கடந்துவிட்டோம் என்ற சந்தோஷம் இருந்தாலும்… தோழிகளை பிரிந்து செல்லும் துக்கம்… இனி எங்கு காண்போமோ என்ற ஏக்கம் அனைவரின் கண்களிலும் தெரிந்தது… அந்த ஏக்கம் கண்ணீரை வரவழைக்க… தன்னை அணைத்த தோழிகளை அணைத்து கொண்டு அழுதாள்… கண்ணீர் வற்றும் வரை!

எத்தனையோ சண்டைகள்… எத்தனையோ சந்தோஷங்கள்… எத்தனையோ தோழமைகள்! அத்தனையும் இன்றோடு முடிவுக்கு வருவது கொடுமையாக தோன்றியது… எவ்வளவு துக்கங்கள் மனதில் இருந்தாலும் வருத்தங்கள் இருந்தாலும் தோழிகளை பார்க்கும் போது அத்தனையும் காணாமல் போய்விடும்.

அந்த கல்லூரி சுவர்கள் தான் எத்தனை எத்தனை அனுபவங்களை கண்டிருக்கும்…? நட்புகள், விரோதங்கள், ஏக்கங்கள், வெற்றிகள், தோல்விகள் எவ்வளவோ இருக்கலாம்… ஆனால் முற்று புள்ளியா காற் புள்ளியா என்று தெரியாத நிலையில்?

அணைத்து கொண்டு அழுத தோழிகளுக்கு வீட்டிற்கு செல்கிறோமே என்ற துக்கம்… ஆனால் நந்தினிக்கோ எங்கு செல்வது என்ற துக்கம்! அவளிடமிருந்த கைபேசியில் சக்தியின் அழைப்பு வருகிறதா என்று பார்த்து சலித்து போனாள்… ஒவ்வொருவராக கண்ணீருடன் விடை பெற்று போகும் போது உள்ளுக்குள் பயப்பந்து உருண்டது.

சக்தியிடமிருந்து வராத அழைப்பு அவளது பயத்தை அதிகப்படுத்த… என்ன செய்வது என்று புரியாமல் தன்னுடைய பொருட்களை கட்டிவைக்க துவங்கினாள்… அதிகமாக எதுவும் இல்லாததால் விரைவில் வேலை முடிந்து விட அவனுடைய அழைப்புக்காக காத்திருக்க துவங்கினாள்.

பதினாறு

கனமான மனதோடு விடுதி வராண்டாவை அளந்து கொண்டிருந்தவள் வெளியே காற்று வாங்க வர… பெரும்பாலான மாணவிகள் கிளம்பியிருந்தனர்… அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலர் சுற்றிகொண்டிருக்க… வாசலுக்கு வந்தாள்.

சக்திவேல் அமர்ந்திருந்தான்… நந்தினியின் முகம் தவுசன்ட் வாட்ஸ் பல்பாக மாற… ஆர்வமாக அருகே சென்றாள்… அப்ளிகேஷனை கொடுத்தபோது வந்தது… இப்போதுதான் பார்க்கிறாள்… சற்று சோர்வாக, உறக்கத்திற்கு கெஞ்சும் விழிகளுடன் அமர்ந்திருந்தவனை பார்க்கும் போதே அவளது பெண்ணுள்ளம் தவித்தது.

“சக்தி…” இத்தனை நாட்கள் கழித்து சந்திப்பதால் மனம் அவனில் லயிக்க… நேசத்தில் குழைந்து அழைத்தாள்… நிமிர்ந்து பார்த்தவன்… மெலிதாக புன்னகைத்தான்… அது அவனுக்கு மிக சிறப்பான அழகை தந்தது போல தோன்றியது நந்தினிக்கு.

“எக்ஸாம் நல்லா பண்ணியா நந்தினி?” அவன்கண்களில் அவள் கண்டது என்ன?

“ம்ம்ம்… நல்லா பண்ணிருக்கேன்… நீங்க ஏன் இவ்வளவு லேட்?”

“வேலையெல்லாம் முடிச்சுட்டு தானே வரணும்? நீ பேக் பண்ணிட்டியா?”

“ம்ம்ம் ஆச்சு எப்போவே…” என்று கூறிவிட்டு அவனையே பார்த்து கொண்டிருக்க

“சரி திங்க்ஸ் எல்லாத்தையும் கொண்டு வர்றியா? கிளம்பிடலாம்… எட்டுமணிக்கு ட்ரைன்… சாப்பிட்டுட்டு கிளம்ப சரியா இருக்கும்… லக்கேஜ லாரில போட்டு விட்டுடலாம்… ஓகே வா…” அவன் நிறுத்தாமல் சொல்லி கொண்டே போக.

“நாம இப்போ எங்க போறோம்?” தெரியாத ஒன்றை கேட்டு தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவள் கேட்க… அவளை நிமிர்ந்து பார்த்து முறைத்தான்.

“நான் சொன்னா சொன்னதை மட்டும் செய் நந்தினி… கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு இருக்காத… எனக்கு பொறுமை சுத்தமா இல்ல…”

இப்போதெல்லாம் அவனது கடினத்தன்மைக்கு ஓரளவு பழகி விட்டாள்… அவனோடு வாக்குவாதம் புரிந்து கொண்டிருக்க அவளிடமும் நேரமிருக்கவில்லை… வார்டனிடம் கூறிவிட்டு அவளது பொருட்களை விடுதி உதவியாளரோடு எடுத்து வர… சக்தி பிரின்சிபாலிடம் பேசிக்கொண்டிருந்தான்.

“உங்களுக்கு எவ்வளவு தேங்க் பண்ணாலும் பத்தாது மேடம்… நந்தினி படிப்பை இங்க முடிச்சிருக்கான்னா அதுக்கு நீங்க மிக பெரிய காரணம்…” சக்தி அவனது மனதை திறந்து உணர்ந்து நன்றி கூற அதற்கு அவரோ.

“நான் தான் உங்களுக்கு தேங்க் பண்ணனும் சக்தி… நல்லா படிக்கற பொண்ணு… இப்படி திடீர்ன்னு சிக்கல்ல மாட்டிகிச்சேன்னு நினைச்சேன்… நல்ல வேளையா நீங்க பொறுப்பெடுத்துகிட்டீங்க…” அவரும் அவனிடம் நன்றி உரைக்க… இருவரும் மாற்றி மாற்றி நன்றி உரைத்து கொண்டிருப்பதை கண்ட நந்தினிக்கு சிரிப்பாக இருந்தது.

“நந்தினி என்னோட ஒய்ப் மேடம்… எனக்கு போய் தேங்க் பண்ணிட்டு இருக்காதீங்க…” என்று அவன் சிரிக்க

“எப்படியோ எங்க காலேஜுக்கு ஒரு ரேன்க் கன்பர்ம் பண்ணி கொடுத்துட்டீங்க சக்தி…” என்று அவரும் சிரித்தார்… சற்று தள்ளி நின்று கொண்டு அவர்களை பார்த்து கொண்டிருந்த நந்தினியை பார்த்து.

“என்ன நந்தினி… கோல்ட் மெடல் வாங்கிடுவ தானே…” சிரித்து கொண்டே கேட்க.

“கண்டிப்பா மேம்…” என்று வேகமாக தலையாட்டினாள்… அவளை புன்னகை பொங்க பார்த்து கொண்டிருந்தான் அவளது கணவன்.

அவரிடம் விடைபெற்று வெற்றியின் வீட்டை அடைந்த போது மணி ஆறாகியிருந்தது… தெய்வாவும் வெற்றியும் சந்தோஷம் பொங்க வரவேற்க… அவர்களுடன் ஆழ்ந்து போனாள் நந்தினி.

“மொத்தமா எல்லாத்தையும் மாத்திகிட்டு அங்க போறது நல்லாவா இருக்கு சக்தி? பழகின இடம், மனுஷங்க எல்லாத்தையும் விட்டுட்டு எப்படி சக்தி? இப்போ நீ செய்துட்ட இருக்க மாதிரியே செய்யேன்… தெய்வா இருக்கா நந்தினிக்கு துணையா…” பெண்களை விட்டு தனியே வந்து தனிப்பட்ட முறையில் சக்தியை கேட்டார் வெற்றி… அவரால் சக்தியின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“எதையுமே நாம பழகிகிட்டா பழக்கமாகிற போகுதுண்ணா… இதுவரைக்கும் யாருக்காகவும் நான் யோசிச்சு முடிவெடுத்ததில்லை… இப்போ நந்தினிக்காக செய்யறோம்ன்னு நினைக்கும் போது கொஞ்சம் சந்தோஷமாத்தான் இருக்கு…” மென்புன்னகையோடு அவன் கூற வெற்றி அவனை தோளோடு அணைத்துக்கொண்டார்.

“அவனுங்க மறுபடியும் உன்கிட்ட வாலட்டலையா சக்தி?” யோசனையாக அவர் கேட்க

“எங்கயாவது பார்க்கும் போதெல்லாம் அந்த ஊர்காரனுங்க முறைப்பானுங்க… போலீஸ் கிட்ட எழுதி கொடுத்திருக்கானுங்கல்ல… அதனால இதுவரைக்கும் வாலாட்டல… ஆனா அப்படியே இருப்பானுங்கன்னு சொல்ல முடியாதேங்ண்ணா… ஆற விட்டு என்னை அடிக்கலாம்ன்னு அவனுங்க நினைச்சா நந்தினி படிப்பு தானே ஸ்பாயிலாகும்… அதான் கொஞ்ச நாள் படிப்பு முடியற வரைக்கும் டிஸ்டர்பன்ஸ் வேணாம்ன்னு தான்ணா போறதே…”

வெளியே தோட்டத்தை வேடிக்கை பார்த்தபடியே கூறியவனை ஆச்சரியமாக பார்த்தார் வெற்றி… மனைவிக்காக எந்தளவு யோசித்து செயல்படுத்துகிறான் என்பதை பார்க்கும் போது வெற்றியால் சக்தியை மெச்சாமலிருக்க முடியவில்லை.

வெற்றி அறிந்தவரை சக்தி நந்தினியை ஆசையாக மணமுடிக்கவில்லைதான் ஆனால் அவன் ஏற்று கொண்ட கடமைக்காக என்றில்லாமல் நந்தினிக்காக ஒவ்வொன்றையும் யோசித்து செய்யும் போது வெற்றி மிகவும் நம்பினார்… தன் சிஷ்யனின் வாழ்க்கை நன்றாகவே இருக்குமென்று!

இரவு உணவை முடித்து விட்டு தேவசேனாவிடமும் வெற்றியிடமும் விடைபெற்று ட்ரைனில் அமர்ந்த போது நந்தினியின் மனம் பரபரப்பாகவே இருந்தது… தெய்வா ஆயிரம் அறிவுரை கூறித்தான் அனுப்பியிருந்தாள்… வழியனுப்பும் போது அவளது கண்ணில் கண்ட கண்ணீர் நந்தினியின் மனதை என்னவோ செய்தது… உறவே இல்லாமல் சக்திக்காக உருக உள்ளங்கள் இருக்க தன்னுடைய ரத்த உறவுகளின் நிலையும் சாதி வெறியும் அவளது மனதை கனக்க செய்தது.

அன்றைக்கென்று இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் பெட்டி வெறிச்சோடி இருக்க… இருவர் மட்டுமாக அவர்கள் பகுதியில் இருக்க… முதன் முதலாக அவனோடு கழிக்க போகும் அந்த இரவு அவளுக்குள் சிறு மகிழ்ச்சியை பூக்க வைத்தது… சக்தியோ ரயிலில் ஏறியவுடன் லுங்கிக்கு மாறி புத்தகத்தோடு அமர்ந்தவன் தான்… நிமிர்ந்து அவளை பார்ப்பேனா என்று அதில் ஆழ்ந்து போயிருந்தான்.

குனிந்து புத்தகத்தின் தலைப்பை பார்த்தாள்… சிவகாமியின் சபதம்! அவள் அதுவரை பாடப்புத்தகத்தை தவிர வேறு எதையும் படித்தது கிடையாது… லைப்ரரி சென்றாலும் பாடப்புத்தகம் மட்டுமே அவளது தேர்வாக இருக்கும்.

“நீங்க நாவல் படிப்பீங்களா?” நந்தினியே பேச்சை ஆரம்பிக்க… புத்தகத்தில் புதைத்த தலை நிமிராமல்.

“ம்ம்ம் படிப்பேன்…”

“வேறென்ன படிப்பீங்க?” அவனை அறிந்துகொள்ளும் பொருட்டு ஆர்வமாக அவள் கேட்க.

“எதுவா இருந்தாலும் படிப்பேன்… படிக்கறது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்…” இன்னமும் தலைநிமிராமல் பதில் கூறிக்கொண்டிருக்க.

“அதுல என்னத்தான் இருக்கு? இப்படி சீரியசா படிக்கறீங்க?” அவள் சற்று கடுப்பாக கேட்க… தலை நிமிர்ந்தவன்.

“இது கல்கி எழுதுன ஒரு லவ் ஸ்டோரி… எத்தனை தடவை படிச்சாலும் அலுக்கவே அலுக்காது… ஒரு பொண்ணால ஒரு சாம்ராஜ்யமே எப்படி காலியாச்சுன்னு அழகா சொல்லியிருப்பார்…” என்று கூறி நிறுத்தி.

“எப்போவுமே அதுதானே நந்தினி நடக்குது… முன்ன பின்ன யோசிக்காம மடத்தனமா இந்த பொண்ணுங்க பண்ற காரியம் என்ன விளைவை எல்லாம் கொண்டு வருதுன்னு அதுங்களுக்கே தெரிய மாட்டேங்குது…” பொதுவாக கூறுவது போல் அவளை இடித்துரைக்க… பேந்த பேந்த விழித்தாள் நந்தினி.

திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போன்ற அவளது பார்வை அவனுக்குள் மென்மையான உணர்வை ஏற்படுத்த.

“என்ன இப்படி முழிக்கற?”

“ஒன்னும் இல்ல…” குரலே வெளிவராமல் அவள் கூற

“ஏம்மா… நான் ஒன்னு கேட்கலாமா?” கேள்வியாக அவளை பார்த்தான் சக்தி… நந்தினி என்னவென்று பார்வையால் அவனை கேட்க.

“எப்படி ஒரு நிமிஷத்துல முடிவு செய்த? உனக்கே அது சரின்னு படுதா? இதே என் இடத்துல வேற யாராவது இருந்து உன்னை ஏமாத்தி இருந்தா என்ன பண்ணியிருப்ப நந்தினி?”

வெகு நாட்களாக அவளே எதிர்பார்த்து கொண்டிருந்த கேள்விதான்… அவளை அவளே கேட்டு கொண்டிருந்ததும் தான்… ஆனால் அவளுக்கு விடை தான் தெரியவில்லை… அதை எப்படி அவனிடம் கூறுவது… ஒன்றும் கூறாமல் அவனையே பார்த்து கொண்டிருக்க.

“சொல்லும்மா… ஏதாவது பதில் பேசு…”

“உங்க இடத்துல இன்னொருத்தனை எல்லாம் வெச்சு பார்க்க முடியாது…” கடுப்பாக கூறிவிட்டு… சற்று மௌனித்தவள்…”அதென்ன அம்மா அம்மான்னு… எப்போ பார்த்தாலும்… என் பேர் நந்தினி… அதை உங்க கிட்ட சொல்லிட்டே இருக்கனுமா?” கோபத்தில் பொரிய ஆரம்பிக்க.

“ஏன்… அம்மான்னு சொல்றது தப்பா? மரியாதையா சொல்றதும்மா…” மறுபடியும் அம்மாவென விளிக்க… நந்தினிக்கு கடுப்பு தலைக்கேறியது.

“அப்படியாடா மகனே… சரிடா மகனே… வேறென்னடா மகனே…” வார்த்தைக்கு வார்த்தை டாவும் மகனேவும் போட்டு பேச… சக்தியின் முகம் சிரிப்பில் மலர்ந்து இருந்தது.

“அட இது கூட நல்லா இருக்கே… இனிமே இப்படியே கூப்பிடும்மா…” மறுபடியும் அவளை விட்டேனா பார் என வம்பிழுக்க… கடுப்பான முகத்தோடு எழுந்த நந்தினி கழுத்தை நெரிக்க வந்தாள்.

“வேணாம்… இப்படியே பேசிட்டு இருந்த கண்டிப்பா கொலை பண்ணிடுவேன்… உனக்கு நான் பொண்டாட்டின்னு ஞாபகமே வராதா?”

கடுப்பில் அவள் சக்தியை அடிக்க ஆரம்பிக்க… அவளது கோபத்தை ரசித்து கொண்டிருந்தவன் அவளது கடைசி கேள்வியில்… அவள் கேட்ட தோரணையில்… மயங்கித்தான் போனான்.

மயக்கம் காதலின் மூலக்கூறாக இருக்கலாம் ஆனால் அஸ்திவாரமாக அமையக்கூடாதே என்பது அவனது நினைவுக்கு வந்தது… ஆனால் அவன் மறந்தது ஒன்று உண்டு… அது என்னவென்றால் அந்த மயக்கம் தான் காதலின் முதல் நிலை என்பதும்… தான் அந்த நிலையை கடந்து கொண்டிருக்கிறோம் என்பதையும் மறந்து விட்டான்.

வார்த்தைக்கு வார்த்தை அவளுடன் பேசிக்கொண்டிருந்தவன் திடீரென மௌனமாகி விட… நிமிர்ந்து அவனை பார்த்தவள் உறைந்தாள்… என்ன பார்வை இது? உயிரை ஊடுருவி உள்ளத்தை கிள்ளும் பார்வை… கைகள் நடுங்க அவள் பின்வாங்க… சட்டென சுதாரித்து விட்டசக்தி உணர்வுகளை துடைத்து கொண்டு எழுந்து விட… நந்தினி தலை குனிந்தவாறு அமர்ந்திருந்தாள்.

“நீ தூங்கு நந்தினி… நான் கொஞ்சம் காத்து வாங்கிட்டு வரேன்…” என்று கூறிவிட்டு கதவுக்கு அருகில் நின்று கொண்டான்.

அவளை பார்த்து கொண்டிருப்பது சற்றும் சரியல்ல என்று எண்ணிக்கொண்டிருந்தான்… அவன் தப்பிக்க நினைத்து போக… நந்தினி அவன் பார்வையின் அர்த்தம் புரியாமல் குழம்பிக்கொண்டிருந்தாள்.

ரயில் அதிகாலையில் சென்னையை அடைந்தது.

அவளது கிராமத்தையும் கல்லூரியையும் தவிர வேறு ஊரை பெரிதாக அறியாத நந்தினிக்கு சென்னையின் டாம்பீகம் அரட்டியது… ஷார்ட்ஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ், காதில் ஹேண்ட்ஸ்ப்ரீ அணிந்து கொண்டு ரயிலேற வந்த யுவதிகளை பார்த்து மிரண்டு… பட்டிகாட்டான் மிட்டாய் கடையை முறைத்தது போல என்ற பழமொழிக்கு உதாரணமாகினாள் நந்தினி.

“ஏய் லூசு… வேடிக்கை பார்க்காம முன்னாடி கண்ணை வெச்சு வா…” சக்தியின் மிரட்டல் வேலை செய்ய… நல்ல பிள்ளையாக அவனை ஒட்டி கொண்டே வர… ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தனர் இருவரும்.

அமைதியாக அழகாக இருந்தது அந்த அப்பார்ட்மென்ட்… விடுமுறை விட்டுவிட்டதால் குழந்தைகள் ஆரவாரமாக விளையாடி கொண்டிருக்க… நந்தினி புன்னகையோடு அவர்களை பார்த்தபடி சக்தியை தொடர்ந்தாள்.

அவளுக்கு அனைத்தும் புதியது… பழக்கமில்லாதது… வியப்பை தருவதாக இருக்க… கண்களை விரித்து பார்த்து கொண்டு வந்தாள்… ஓரக்கண்ணால் அவளை பார்வையிட்டபடி வந்தவனுக்கு உள்ளுக்குள் சிரிப்பு பொங்கியது… அநியாயத்திற்கு அப்பாவியாக இருக்கிறாளே!

“ஏய்… வாயை கொஞ்சம் மூடிக்கிட்டு வா நந்தினி… இல்லைன்னா கொசு ஈ எல்லாத்துக்கும் உன் வாய் தான் அட்ரெஸ்ஸா இருக்கும்…” புன்னகையோடு அவளை ஓட்டி கொண்டு வர… அவளுக்கு இருந்த மலைப்பில் எதையும் கவனிக்கவில்லை.

“இந்த அப்பார்ட்மென்ட்ல தான் நாம இருக்க போறோமா?” வியப்பாக சுற்றி பார்த்தபடி அவள் கேட்க… சக்தி புன்னகையோடு.

“இந்த அப்பார்ட்மென்ட்ல ஒரு பிளாட்ல…” என்று கூற… அவனை பார்த்து சந்தோஷமாக சிரித்தாள்.

“தேங்க்ஸ்…” புன்னகையோடு உள்ளே நுழைந்தாள்… வலது காலை எடுத்து வைத்து.

பிளாட் துடைத்து வைத்தது போல இருக்க… ஒன்றும் புரியாமல் சக்தியை பார்க்க… அவளது பார்வையை புரிந்து கொண்டவன்.

“இப்போதானே வந்திருக்கோம்… இனிமே ஒவ்வொன்னா வாங்கிக்கலாம்…” என்று ஆதரவாக கூற… அவள் ஒவ்வொரு அறையாக பார்க்க ஆரம்பித்தாள்… அது ஒற்றை படுக்கையறை பிளாட்… இருவருக்கும் இதுவே போதுமென்று தான் சக்தி இதை தேர்ந்தெடுத்து இருந்தான்.

சமயலறையில் நுழைந்தவள்… ஒரே ஒரு கேஸ் அடுப்பை தவிர வேறு ஒன்றும் இல்லாமல் இருக்க… எதை வைத்து சமைப்பது என்று குழப்பம் வர… சக்தியே அதற்கு பதில் கூறினான்.

“இப்போதைக்கு வெளிய வாங்கிக்கலாம்… ஈவினிங் போய் என்ன தேவையோ வாங்கிட்டு வரலாம்…” என்று அவன் கூறவும் மகிழ்ச்சி பொங்க அவனை பார்த்தாள்.

“ஹை கடைவீதிக்கு கூட்டிகிட்டு போறீங்களா?” சிறு பிள்ளையாக சந்தோஷிக்க… அவளது ஒவ்வொரு செய்கையையும் அவனறியாமல் ரசித்து கொண்டிருந்தான்.

“ஏங்க…” நந்தினி அவனை அழைக்க.

“என்னங்க…” அவளை போலவே குறும்பாக அவனும் அழைக்க… திரும்பி பார்த்து முறைத்தாள்.

“இந்த வீட்டுக்கு வாடகை எவ்வளவு?” அவளுக்கு தேவையான மிக முக்கியமான கேள்வியை அவள் கேட்க… முறைத்தான் சக்தி!

“எவ்வளவா இருந்தா என்ன? என்கிட்டே இருக்குமான்னு சந்தேகமா நந்தனி?” கோபமாக அவன் கேட்க… அவனது கோபப்பார்வை அவளுக்குள் நடுக்கத்தை கொடுத்தது.

“அப்படியெல்லாம் நினைக்கல மாமா…” தலைகுனிந்தவாறு கூற… கோபத்தை குறைத்து கொண்டு.

“அதெல்லாம் கவலைப்படாத… நான் பார்த்துக்குவேன்… உன்னோட வேலை படிக்கறது ஒண்ணுதான்… ஓகே வா…” என்று அவளுக்கு ஞாபகப்படுத்த… வேகமாக தலையாட்டினாள்.

“பார்த்து கழுத்து சுளுக்க போகுது…” என்று சிரித்தபடிதலையில் தட்டிவிட்டுபோக… நந்தினிக்கு மகிழ்ச்சி ஊற்றெடுத்தது… மனதில் வேண்டிகொண்டாள்.

“கடவுளே… இந்த சந்தோஷம் எப்போவுமே நிலைச்சு இருக்கணும்…”

கடவுள் சிரித்து கொண்டார்.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை!

error: Content is protected !!