Thoda Thoda Thodarkathai–EPI 1

த்தியாயம் 1

 

சீரியல் கில்லிங் என்றால் என்ன? ஒருத்தர், இரண்டு அல்லது அதற்கும் மேலான கொலைகளை தொடர்ந்து செய்வதைதான் தொடர் கொலைகள் எனக் குறிப்பிடுகிறோம். ஒரே இடத்தில் பலரைக் கொல்வது இதில் சேர்த்தி இல்லை. ஒவ்வொரு கொலையும் தனித்தனியாக வேறு வேறு இடங்களில், நேரங்களில் செய்யப்படுவதே சீரியல் கில்லிங்.

 

“காலங்காத்தாலே இம்சை பண்ணாதே, கலங்க கலங்க என் கதி கலங்க!!!” எனப் பாடியபடியே, அந்த அறையின் ஒரு பக்கச் சுவரையே அடைத்து நிற்கும் வார்ட்ரோபை நாடிப் போனாள் சஞ்சீவினி.

அன்றுப் பெய்த மழையில் நனைந்த வெள்ளை ரோஜா ஒன்று கால் முளைத்து நடந்து வருவதைப் போல, நீராடி முடித்து பிங்க் வண்ண பாத்ரோபில் தேவதையாய் அன்ன நடையிட்டாள் பெண்ணவள். அலமாரியின் ஒரு பக்கக் கதவைத் திறந்து, என்ன அணிந்துக் கொள்ளலாம் என ஆராய்ந்தவள், நீல வண்ண டைட் ஜீன்சையும், கழுத்தைச் சுற்றிப் பூ வேலை செய்திருந்த மஞ்சள் வர்ண டாப்சையும் வெளியே எடுத்து கட்டிலில் போட்டாள். உள்ளாடைகளை அடுக்கி வைத்திருக்கும் ட்ராவரைத் திறந்து அவளுக்கு மிகப் பிடித்த இள மஞ்சள் நிற ஷிம்மியைத் தேடியவளுக்கு, எரிச்சலாய் வந்தது.

அழகாய் மடித்து வைத்திருக்கும் உள்ளாடைகளை உருட்டிப் புரட்டித் தேடிப் பார்த்தும் அது மட்டும் கண்களுக்கு சிக்கவில்லை.    

“தேடறப்போ மட்டும் கால் முளைச்சி எங்கயோ போய்டும்! காலங்காத்தாலேயே இம்சையைக் கூட்டுது” என முனகியவள்,

“கவிதாக்கா!” எனக் கத்தினாள்.

“வரேன் பாப்பா!” எனக் குரல் கொடுத்தவர், அரக்கப் பறக்க இவளறைக்கு ஓடி வந்தார்.

“என்ன பாப்பா? என்ன வேணும்?”

“வீட்டுக்குள்ள எலி நடமாட்டம் இருக்கா?”

“இல்லையே பாப்பா!”

“பின்ன ஏன் மடிச்சு அடுக்கி வச்சத் துணிலாம் மாயமா மறைஞ்சிப் போகுது! போன வாரம் ப்ளேக் கலர் பேண்டிசை காணோம்! இப்போ ஷிம்மியைக் காணோம்! என்ன நடக்குது இந்த வீட்டுல?” எனச் சத்தம் போட்டவள், வேறு ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஆடையணியலானாள்.

சின்ன வயதில் இருந்து இவளைத் தூக்கி வளர்த்தவர் கவிதா.  

“சாரிடாம்மா! லாண்டரி ரூம்ல பார்க்கறேன், அங்க விழுந்து கிடக்குதான்னு! இப்போ டென்ஷன் ஆகாம கிளம்புடா! தலை நான் வாரி விடவா?” என வாஞ்சையாகக் கேட்டார் இவளிடம்.

“நான் என்ன இன்னும் சின்னப் புள்ளையா? நானே வாரிப்பேன்! இன்னிக்கு ஹெவியா ஒன்னும் வேணா கவிதாக்கா! பட்டர் போட்டு ப்ரேட் டோஸ்ட் போதும் வித் ஹாட் ஹாட் ஹாட் டீ!”

“கொதிக்கக் கொதிக்கத் தொண்டையில சரிச்சுக்கனும்! அதானே?” எனக் கேட்டபடியே அறையை சுற்றி இவள் இறைத்து வைத்திருந்த துணிகளை ஒழுங்குப் படுத்த ஆரம்பித்தார் கவிதா.

“ஒரு வாரத்துக்கு வேண்டியத சமைச்சி ப்ரீஷர்ல வச்சிட்டேன் பாப்பா! சோம்பேறிப்படாம ஓவன்ல சூடுகாட்டி சாப்பிடு! என்னமோ போ கண்ணு, இப்படிலாம் ஜில்லுன்னு போனத சூடாக்கி சாப்பிடனும்னு உனக்கு தலை எழுத்தா என்னா? ராஜாத்தி மாதிரி உக்காந்த இடத்துலயே சாப்பாடு வேளா வேளைக்குத் தேடி வரும் சுகத்த விட்டுப்புட்டு இப்படி தன்னந்தனியா தங்கி இருக்கறது நல்லாவா இருக்கு? அங்கயே வந்திடேன் பாப்பா” என எப்பொழுதும் போல ஆரம்பித்தார் இவர்.

“மறுபடி இதே பாட்ட பாடறதா இருந்தா நீங்க இங்க வரவே வேணாம்!” என அதிகாரமாகக் கட்டளையிட்டாள் பெண்.

“சரி விடு, கோவிக்காத! அப்போ நானாச்சும் இங்க வந்து உன் கூடவே இருந்து சுடச் சுட சமைச்சிப் பரிமாறவா?”

கவிதாவை முறைத்துப் பார்த்தவள்,

“நான் காலையில போனா நைட்டுக்கு வரேன்! என் ஒருத்திக்காக மொட்டு மொட்டுன்னு மோட்டுவளையப் பார்த்துட்டு இங்க நீங்க உக்காந்துருக்கனுமா? ஒன்னும் வேணா! எப்போதும் போல வீக்லி ஓன்ஸ் வந்து சமைச்சிட்டு, வீட்ட க்ளின் பண்ணிட்டு, திரும்பிப் பார்க்காம கிளம்புங்க!” எனப் படபடத்தாள்.

கவிதா, வினியைப் பெற்றவர்களின் வீட்டில் வேலைப் பார்ப்பவர். ஆரம்பக் காலத்தில் சமயலறையில் வேலையைத் தொடங்கியவர், இப்பொழுதெல்லாம் வெறும் மேற்பார்வை மட்டுமே பார்க்கிறார். அந்த வீட்டின் கடைக்குட்டி சஞ்சீவினியின் மீது கொள்ளைப் பிரியம் அவருக்கு. கவிதா வேலையில் சேர்ந்த போது இவளுக்கு மூன்று வயது இருக்கும். கொழுக் மொழுக்கென வெண்ணெய்க் கட்டி போல் மிக அழகாக இருப்பாள் வினி.

சமையலறையில் மிக மும்முரமாக சமைத்துக் கொண்டிருந்த கவிதாவின் சேலை முந்தானையை இழுத்து,

“அச்சுக்கிரீம் குடுக்கா” எனச் சின்னவள் கேட்ட நொடி, இவர்களுக்குள் ஒரு பந்தம் உருவாகிப் போனது.

மற்ற வேலைக்காரர்கள் போல் எதுக் கேட்டாலும் இவளைப் பெற்றவரிடம் சம்மதம் கேட்கப் போய் நிற்காமல், சட்டென ஐஸ்க்ரீம் எடுத்துக் கொடுத்த கவிதாவை இவளுக்குப் பிடித்துப் போக, செப்பு வாய் திறந்து அக்காவென அழகாய் கூப்பிட்ட குட்டியைக் கவிதாவுக்கும் பிடித்துப் போனது.

கோபத்தில் சில பல சமயம் கவிதாவை எடுத்தெறிந்துப் பேசினாலும், மறுநாளே எதாவது வாங்கி வந்துக் கொடுத்து தாஜா செய்து விடுவாள் வினி. அதே போலதான் பெண்ணவள் எப்படி திட்டி ஊதாசினப்படுத்தினாலும், அவளது நலம் நாடி எல்லாம் செய்வார் கவிதா. வேலைக்காரிக்கும், பணக்கார வீட்டின் குட்டிச் சீமாட்டிக்கும் அன்பெனும் மாயவலைக் கொண்டு பின்னப்பட்ட அழகிய உறவிது.

சஞ்சீவினி தன்னைப் பெற்றவர்களிடம் சண்டையிட்டு திருமணம் எனும் ஒன்று ஆகாமலே தனிக்குடித்தனம் வந்து விட்டாலும், கவிதா வாரம் ஒரு முறை வந்து இவளுக்காக எல்லாமும் செய்து வைத்து விட்டுப் போவார்.  

கெண்டை மீன் விழிகளுக்கு மையிட்டுக் கொண்டே,

“மேடம் கவிதா…” என இழுத்தாள் வினி.

மெல்லியப் புன்னகை உதட்டில் நெளிய,

“என்ன பாப்பா?” எனத் தெரிந்தும் தெரியாதது போலக் கேட்டார் கவிதா.

“எப்டி இருக்காங்க உங்க முதலாளி அய்யா?”

“எங்க முதலாளி, தங்க முதலாளி!” என ராகமாய் இவர் இழுக்க,

“அவர தங்கம்னு சொல்லாதே கவிதாக்கா! அப்புறம் உலகத்துல உள்ள தங்கமெல்லாம் எங்க அம்மாவுக்குதான்னு சொல்லி ராக்கி பாய் தூக்கிடப் போறான்! அப்புறம் உங்க முதலாளியம்மா தந்தானத்தானே தந்தானத்தானேன்னு சோக கீதம்தான் வாசிக்கனும்” எனக் கிண்டலடித்தாள் வினி.

இவள் என்னவோ பெரிய நகைச்சுவையைச் சொல்லி விட்டது போல கலகலத்துச் சிரித்தார் கவிதா.

அவர் சிரித்து முடிக்கும் வரைக் காத்திருந்தவள், ஒற்றைப் புருவத்தைத் தூக்கினாள். இவ்வளவு வருடங்கள் அவளோடு பழகி இருந்தவருக்கு, அவளின் புருவத் தூக்கலுக்கு அர்த்தம் புரியாமல் போய்விடுமா!

“அய்யாவும் அம்மாவும் ரொம்ப நல்லா இருக்காங்க பாப்பா! தேவ் குட்டிதான் உன் போட்டாவப் பாத்து தித்தி தித்தின்னு கேட்டுட்டே இருப்பான்! வீட்டுக்கு வந்திடேன்டா”

ப்ரவுன் வர்ணத்தில் டை அடித்து முதுகு வரை வெட்டி விட்டிருந்த முடியை சீவி நிஜ வைர கற்கள் பதித்த ஹேர் பேண்டை போட்டுக் கொண்டவள், கடைசியாக கைகளுக்கு லோஷன் போட்டுத் தனது அலங்காரத்தை முடித்தாள்.

“மாட்டேன்! மிஸ்டர் ஜெய்தேவுக்கும் அவரோட ஜிங்குச்சா, மேடம் இந்திராணிக்கும் அவங்க பெரிய மகதானே எல்லாம்! நான் ஆரோதானே! வரமாட்டேன்! இங்க நான் தனியா, சுதந்திரமா, சந்தோசமா இருக்கேன் கவிதாக்கா! வா வான்னு கூப்பிடறதா இருந்தா இனி நீ வராதே!” எனக் கத்தினாள் வினி.

“சரி, சரி! டென்ஷன் ஆகாதே பாப்பா! தப்புதான்! இனி கூப்புடல!” என சட்டென சரணடைந்தார் கவிதா.

அவர் முன்னே வந்து நின்று ஒரு சுற்று சுழன்றவள்,

“எப்படி இருக்கேன்?” எனப் புன்னகையுடன் கேட்டாள்.

சட்டென மாறும் வானிலைப் போல சட்டென மாறும் அவள் மனநிலையை எப்பொழுதும் போல அதிசயித்தவாறே,

“ரதிதேவிய கதைகள்ல தான் கேட்டிருக்கோம்! நேருல பார்த்தா எப்படி இருப்பான்னு தெரியனும்னா உன்னை வந்துப் பார்த்துக்கலாம் பாப்பா!” எனச் சொன்னவர், அவள் கன்னம் வழித்து நெட்டி முறித்தார்.

“உருட்டிட்டாடா, உருட்டிட்டா!” எனச் சொல்லி நகைத்தவள், கவிதாவின் பின்னாலேயே சமையலறைக்குப் போனாள்.

மைலாப்பூரில் இருந்தது இப்பொழுது இவள் வாழ்ந்துக் கொண்டிருக்கும் மூவறைகள் கொண்ட அபார்ட்மேண்ட். பெற்றவர்களிடம்தான் கோபமே தவிர அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்தின் மேல் எந்த வித கோபமும் இல்லை இவளுக்கு. இந்த அபார்ட்மேண்டை இவளின் பதினெட்டாவது பிறந்தநாளுக்கு பரிசாய் வாங்கித் தந்திருந்தார் வினியின் அம்மா! எப்பொழுதுமே பெண்களின் பிறந்தநாளுக்கு சொத்தாகவோ, நகையாகவோ வாங்கிச் சேர்ப்பது அவரது பழக்கம்.   

சஞ்சீவினி கேட்ட ப்ரேட் டோஸ்டை செய்துக் கொடுத்த கவிதா, சூடாய் தேநீரையும் வார்த்துக் கொடுத்தார்.

“வீட்டுல விட்டுட்டுப் போகவா? இல்ல ஓலா புக் பண்ணவா கவிதாக்கா?”

“ஓலாவே புக் பண்ணு பாப்பா! உனக்கு வேலைக்கு நேரமாகுதுல! அதோட என்னமோ இன்னிக்கு முக்கியமான மீட் இருக்குன்னு வேற சொன்ன!”

“ஆமா! ஈவ்னிங் நான் ஒரு ப்ளைண்ட் டேட்டுக்கு போறேன்”

“அப்படின்னா?”

“நமக்கு முன்னப் பின்னத் தெரியாத ஒருத்தர பார்த்து அறிமுகமாகிப், பழகிப் பார்க்கறது”

“அச்சோ! இதெல்லாம் என்ன பாப்பா? தெரியாத ஆள் கூட எதுக்கு சந்திப்பு எல்லாம்?” எனப் பயந்தார் கவிதா.

“எப்படி, எப்படி! தெரியாதவனப் பார்க்கக் கூடாது, பழகக் கூடாது! ஆனா உங்க முதலாளி பார்த்து வைக்கற தெரியாத ஆள மட்டும் நான் கல்யாணம் பண்ணிக்கனும், குடும்பம் நடத்தனும், புள்ளப் பெத்துக்கனும்! நல்ல நியாயம்யா உங்க நியாயம்!” எனப் பொரிந்துக் கொட்டினாள் வினி.

“அப்பா உன் நல்லதுக்குத்தானே..” என ஆரம்பித்தவரைக் கைத் தூக்கி இடைவெட்டினாள் இவள்.

“ஓலா வந்திடுச்சு! கெளம்புங்க”

“கோச்சிக்கிட்டியாடாம்மா?”

“யாரோ எவரோ கிட்டல்லாம் நான் கோச்சிக்கறது இல்ல!”

“பாப்பா!”

“உடனே பாவ மூஞ்சி காட்டாம கிளம்புங்க கவிதாக்கா!” என்றவள் புன்னகை செய்யவும்தான் சந்தோஷமாகக் கிளம்பினார் கவிதா.

அவர் கிளம்பியவுடன், இவளும் தனது சுஷூக்கி ஸ்விப்டைக் கிளப்பினாள். ப்ளேயரில் ஆங்கில பாடலை ஒலிக்க விட்டவள், தானும் சேர்ந்து முணுமுணுத்துக் கொண்டே, லாவகமாகக் காரைச் செலுத்தினாள்.

சிக்னலில் காத்திருக்கும் போது எதேச்சையாய் வலது புறம் திரும்பிப் பார்த்தவளுக்குக் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது. அங்கே போலிஸ் ஜீப் அருகே, காக்கி பேண்ட், கருப்பு போலோ டீ ஷேர்ட்டில் நெடுமாறனாய், ஸ்டைலாக நின்றிருந்தான் அவள் வீட்டை விட்டுச் செல்லக் காரணமாய் இருந்தவன். அவன் முன்னே நின்றிருந்த காக்கி யூனிபார்ம் அணிந்திருந்த ஒருத்தன் ஏதோ சொல்லிக் கொண்டிருக்க, தாடையைத் தடவியபடி கேட்டுக் கொண்டிருந்தான் இவன்.

“வீரமணிகண்டன்! பேரப் பாரு பேர! கன் வச்சி குற்றவாளிய டண்டனக்கா டன் பண்ணுவான்னு கணிச்சிதான் வீரமணிகண்டன்னு பேரு வச்சாங்க போல! மூஞ்சியும் முகரையும்!” என வாய் விட்டேத் தாளித்தாள் அவனை.

வஞ்சிக்கொடி ஒருத்தி தன்னை வைதுக் கொண்டிருப்பதை உணர்ந்துக் கொண்டானோ என்னவோ, அவன் பார்வை சிக்னலுக்குத் தாவி பின் திரும்பி இவளது காரைக் கண்டுக் கொண்டது. காவலனும் நோக்க, காரிகையும் நோக்க இங்கே இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தவில்லை. மாறி மாறி வெறுப்பை கண்களால் கக்கினர்.  இவள் அலட்சியமாக நோக்க, அவனோ படு அலட்சியமாகத் திருப்பிப் பார்த்தான். இவள் வாய்க்குள்ளேயே அவனைத் திட்ட, நக்கலாய் பார்த்தபடி இரு விரலை நெற்றியில் வைத்து சல்யூட் வைத்தான் அவன்.

“போடா!” என இவள் முணுமுணுக்க,

“போடி போடி!” என அவன் முணுமுணுத்தான்.

பச்சை விளக்கு எரிய, இவள் பின்னால் உள்ள கார் ஹாரனைத் தெறிக்க விட ஆரம்பிக்கவும்தான் அவனை முறைத்தபடியே காரைக் கிளப்பினாள் வினி.

அலுவலக பார்க்கிங் இடத்தில் காரை நிறுத்தியவள், விடு விடுவென உள்ளே நுழைந்தாள். தனது தளத்துக்கு வந்து, லாப்டாப்பை ஆன் செய்யவும் மேசையில் இருந்த தொலைப்பேசி தொல்லைப்பேசியாய் மாறவும் சரியாக இருந்தது. பாஸ்வர்ட்டை ஒரு கையால் தட்டிக் கொண்டே மறு கையால் ரிசிவரை எடுத்துக் காதுக்கு கொடுத்தாள் சஞ்சீவினி.

“கம் டு மை காபின்”

இவள் திருப்பிப் பேசுவதற்குள் அழைப்புத் துண்டிக்கப்பட்டிருந்தது.

பெருமூச்சுடன் லாப்டாப்பை மூடி விட்டு, அந்த ஐடி நிறுவனத்தின் சி.இ.ஓவைத் தேடிப் போனாள் இவள். பெரிய அறையின் பக்கவாட்டில் அழகாய் போடப்பட்டிருந்த மேசையில் அமர்ந்திருந்த சி.இ.ஓவின் காரியதரிசி இவளைப் பார்த்ததும் புன்னகைக்க, இவளும் புன்னகைத்து வைத்தாள். கதவை ஒரு முறைத் தட்டி விட்டு இவள் உள்ளே நுழைய, லாப்டாப்பில் இருந்தப் பார்வையை விலக்கி இவளை நிமிர்ந்துப் பார்த்தான் விஷ்ணுவர்தன்.

“காபி?” என அவன் கேட்க,

“யெஸ், ப்ளிஸ்” என பதிலளித்தாள் இவள்.

அமர சொல்லி நாற்காலியைக் காட்டியவன், தானே எழுந்து போய் அறையின் ஒரு மூலையில் வைத்திருக்கும் காபி மெசினில் இவளுக்கான காபியைத் தயாரித்துக் கொண்டு வந்துக் கொடுத்தான்.

ருசித்துக் குடித்தவள்,

“பெர்பெக்ட் மாமா!” எனப் பாராட்டினாள்.

“தேங்க் யூ மை மச்சினி” எனப் புன்னகைத்தான் இவள் அக்காவின் கணவன்.

“அக்கா கால் பண்ணாளா?”

“இல்ல மாமா! ஏன்? என்ன விஷயம்?”

“தேவோட ரெண்டு வயசு பேர்த்டே வருது சஞ்சு! பார்ட்டில கலந்துக்குவியா இல்ல மத்தவங்க மேல உள்ள கோபத்த என் மகன் கிட்ட காட்டுவியா?”

“என் செல்லத்தோட பேர்த்டே, நான் வராம நடந்திடுமா! கண்டிப்பா வருவேன்! அவனுக்காக உங்க பொண்டாட்டியையும், உங்க அத்த மாமாவையும் கொஞ்ச நேரம் சகிச்சுக்குவேன்!”

“சகிச்சுக்கற அளவுக்கெல்லாம் என் பொண்டாட்டி ரொம்ப மோசமில்ல! உன்ன விட பேரழகி அவ!” என இவன் ரசித்துச் சொல்ல,

“போதும்! போதும்! கார்ப்பேட் நனையுது உங்க ஜொள்ளால! உங்க பொண்டாட்டிய எனக்குப் புடிக்கலைனாலும், உங்கள காதலிச்சு கல்யாணம் பண்ணி எனக்கு மாமாவா ஆக்கினதுக்காக மன்னிச்சு விடறேன்! யூ ஆர் தெ பெஸ்ட் திங் ஹேப்பன் இன் மை லைப் மிஸ்டர் மாமா” என்றவளைத் தோளோடு அணைத்துக் கொண்டான் விஷ்ணு.

“இப்படிலாம் ஐஸ் வச்சி சும்மா வந்து பெஞ்ச தேச்சிட்டுப் போகாத! போ, போய் வேலையப் பாரு” என்றவனுக்கு நாக்கைத் துருத்திக் காட்டிவிட்டு வேலையைக் கவனிக்கப் போனாள் வினி.

“வாலு பொண்ணு!” எனச் சிரித்தப்படியே தனது வேலைகளில் மூழ்கிப் போனான் விஷ்ணு.

அன்றிரவு தனது கல்லூரி தோழி அறிமுகப்படுத்தி இருந்த ஒருத்தனைச் சந்திக்க சென்றிருந்தாள் சஞ்சீவினி. ஆணழகனாய் இருந்தவனைப் பார்த்ததும் இவளுக்கும் பிடித்துப் போனது. நேரம் போவது தெரியாமல் இருவரும் உணவருந்திக் கொண்டே பேசிக் கொண்டிருந்தனர். மறுபடியும் சந்திக்கலாம் என பேசி முடிவெடுத்து கிளம்பி இவள் வீட்டிற்கு வர மணி பதினொன்றுக்கும் மேலாகி இருந்தது.

குளித்து, நைட்டியை அணிந்துக் கொண்டு அக்கடாவென படுத்து விட்டாள் வினி. கொஞ்ச நாட்களாய் இந்தத் தனிமை பழகிப் போயிருக்க, போனை எடுத்து சற்று நேரம் நோண்டினாள். பின் மேசையில் வைத்திருக்கும் ஆங்கில புத்தகத்தை கையில் எடுத்தவள், புக் மார்க்கை எடுத்து கட்டிலில் வைத்து விட்டு, விட்ட இடத்திலிருந்து வாசிக்க ஆரம்பித்தாள். ஆங்கிலம் அவள் உணர்வில், உயிரில் கலந்திருந்தது. அம்மொழியை ரசிக்கக் கற்றுக் கொடுத்தவரின் நினைவு வர புத்தகத்தை மூடி வைத்தவள், சுருண்டுப் படுத்துக் கொண்டாள்.  கண்களில் கண்ணீர் வழிய அப்படியே உறங்கிப் போனாள் சஞ்சீவினி.

தனது மடிக்கணிணி வழி, சஞ்சீவினித் தூங்குவதை ரசித்துப் பார்த்திருந்தான் அந்த ஆணழகன். அவன் கையில் அன்று காலையில் அவள் காணோமென தேடிய மஞ்சள் வர்ண ஷிம்மி பாடாய் பட்டது.  ஏறி இறங்கும் அவள் உடல் அழகையும், சாந்தமாய் இருந்த அவள் முக அழகையும் கண் சிமிட்டாமல் பார்த்திருந்தான் ஆணவன்.

“நீ தூங்கும் நேரத்தில்

என் கண்கள் தூங்காது

கண்மணியே!!!” எனப் பாடியபடியே திரையில் தெரிந்த அவள் பிம்பத்தை வருடினான் அவன்.

 

(தொடுவான்….)

 

(போன எபிக்கு லைக், கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி டியர்ஸ். அடுத்த எபியில் சந்திக்கும் வரை லவ் யூ ஆல்

பி.கு.. எபி கொஞ்சம் மெதுவாதான் வரும். இது சம்பந்தமா நிறைய படிக்கறேன், விஷயம் தெரிஞ்சுக்கறேன்! அதனால கொஞ்சம் டைம் எடுக்குது! )