Thoda Thoda Thodarkathai–EPI 11

280654150_1081598149094185_3262610077133346742_n-ad1548aa

அத்தியாயம் 11

Richard Ramirez—(ரிச்சர்ட் ரமிரேஷ் எனும் சீரியல் கில்லர் 1980களில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள வீடுகளில் புகுந்து கொடூரமாகப் பெண்களைக் கொன்றவன். இவன் கொன்ற பதின்மூன்று பெண்களும் இருபதில் இருந்து எழுபத்து ஒன்பது வயதுக்குட்பட்டவர்களாகும். மரணதண்டனை விதிக்கப்பட்ட இவன், தண்டனை நிறைவேறுவதற்கு முன்பே லிம்போமா(lymphoma) எனும் நோயால் இறந்துப் போனான்.

 

“முடியவே முடியாது டாடி!”

“அது ரொம்ப நல்ல காலேஜ்மா! அகடேமிக் அண்ட் ஸ்போர்ட்ஸ்னு எல்லா ஃபீல்ட்லயும் அந்த காலேஜ் அச்சீவ்மேண்ட் ரொம்ப இம்ப்ரெசிவா இருக்கு”

“எனக்கு வேண்டாம்!”

“ஏன் வேண்டாம்னு சொல்ற வினி! டாடி உனக்கு எல்லாமே பெஸ்ட்டா குடுக்கனும்னு நெனைக்கறது தப்பா?” எனச் சின்ன மகளிடம் மென்மையாக எடுத்துரைத்தார் இந்திராணி.

தாயின் மென்மையில் மயங்க இருந்தவளை, பள்ளியில் தோழிகளுக்குத் தான் கொடுத்த லெக்‌ஷர் அசரீரியாய் ஒலித்து தெளிய வைத்தது.

‘எங்க திரும்பனாலும் பொண்ணுங்க! வாத்தியார்லயாச்சும் ஆம்பள யாராவது இருக்காங்களா??? அதுவும் இல்ல! என்னடா வாழ்க்கை இது! சைட்டு, டேட்டுன்னு இருக்க வேண்டிய வயசுல ஒன்னுத்துக்கும் வழி இல்லாம கேர்ல்ஸ் ஸ்கூலுல மாட்டிக்கிட்டோம்! காலேஜாச்சும் ஆம்பளைங்க படிக்கற மாதிரி உள்ளதுலதான் சேரனும். காஞ்சுப் போன வாழ்க்கையை ஜொள்ளு ஊத்தி தளதளன்னு பூக்க வைக்கனும்!  ஒகேவா கேர்ள்ஸ்?” என இவள் கேட்க,

“ஓகே! ஓகே! ஒகே!” என நாலாப் பக்கமும் சம்மதக் குரல்கள் எழுப்பியவர்கள் ஆண்கள் சேர்ந்துப் படிக்கும் காலேஜூக்குத்தான் போவோம் என கையிலடித்து சத்தியம் வேறு செய்துக் கொண்டார்கள்.   

பதின்ம வயதில், கிடைக்காத ஒன்றுக்கு மனம் ஏங்கிப் போவது சகஜமான விஷயமல்லவா! இரு சாரார் படிக்கும் பள்ளியில் படித்திருந்தால், ஆண் பிள்ளைகள் பெண்களைப் பார்க்கும் போது தோழி என கடந்துப் போய்விடக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம்! பெண்களும் ஆண்களோடு, தோழன் என வரையறைக்குள் இருந்துக் கொள்ளக் கற்றுக் கொள்வார்கள். அதே, அவர்களோடு பழகிப் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்காத பெண்களுக்கோ/ஆண்களுக்கோ எதிர் பாலரின் நட்பென்பது எட்டாக்கனியாக இருக்கும். பலர் அதை அடைந்தே தீர வேண்டும் என நினைப்பார்கள், சிலர் வெட்கத்துடனோ, பயத்துடனோ சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என ஒதுங்கிப் போவார்கள். அடைந்தே ஆக வேண்டும் எனும் கேட்டகரியில் வருபவள்தான் நம் வினி. பள்ளி இடைவெளியில் எப்பொழுதுமே இவர்களின் முக்கிய டாபிக் ஆண்களைப் பற்றிதான்.

“டீ!! தெலுங்குல ஆர்யா 2 படம் பார்த்தேன் நேத்து! அதுல அல்லு அர்ஜூன் ரிங்கா ரிங்கா பாட்டுக்கு முதுகாலயே டான்ஸ் ஆடினான்டி! அவன் ஆட்டத்துல என் இதயம் ஆடிக்கிட்டே போய் அவன் காலுக்கடியில விழுந்துடுச்சுடி!”

“இதென்னா பிரமாதம்!! அத விட ஸ்பெஷல் ஸ்டேப் ஒன்னு என் ஆளு சிம்பு போடுவான் பாரு டண்டனக்கா, டணக்கு நக்கான்னு! எங்கப்பன் சொத்தையே அவனுக்கு எழுதி வைப்பேன்டி”

“அதெல்லாம் விடுங்கடி! சந்திரமுகில அந்த வில்லன் சோனு ஃபைட்டிங் சீன்ல சட்டையக் கழட்டனான் பாத்தீங்களா? செம்மக் கட்டைல்ல”

இப்படியாகத்தான் போகும் இவர்களின் வெட்டிப் பொழுதுகள்.  

‘கெத்தா பேசிட்டு, நானே ஜகா வாங்கனா எப்படி! காரி துப்பிடுவாளுங்க நம்மாளுங்க! டேக்டிக்க மாத்துடி வினி!’ என மனதில் நினைத்தவள் வெளியே,

“ஐ எம் அ க்ரௌன் அப் நவ்! காலேஜ் போற வயசு வந்திருச்சு! இன்னும் குழந்தை மாதிரி என்னை ட்ரீட் பண்ணாதீங்க! அறியாத வயசுல கேர்ள்ஸ் ஸ்கூலுல கொண்டுப் போய் சேர்த்தீங்க! ஃபைன்! இப்போவும், என்னமோ நான் பாதுகாக்கப்பட வேண்டிய மியூசியம் பீஸ் மாதிரி கேர்ள்ஸ் காலேஜ்ல கொண்டுப் போய் சேர்க்கப் பார்க்கறீங்க! எனக்குப் புடிக்கலப்பா. என்னமோ உங்க மக ஏஞ்சலினா ஜோலி மாதிரியும் ஊர்ல உள்ள பயலுங்க எல்லாம் எனக்காக ஏங்கி ஏங்கி சாகற மாதிரியும் நீங்களாம் குடுக்கற பில்ட் அப் ரொம்ப ஓவரா இருக்குது! பதினெட்டுல ஓட்டுப் போடற அளவுக்கு எங்களுக்கு எல்லாம் புத்தி இருக்குன்னு கவர்மெண்ட் சொல்லுது! ஆனா பதினெட்ட இன்னும் பல மாசத்துல தொடப் போற எனக்குப் புடிச்ச காலேஜ தேர்ந்தெடுக்கக் கூட உரிமை இல்ல இந்த வீட்டுல!” எனக் கோபமாய் கத்தியவள், இரு சொட்டுக் கண்ணீரையும் கண்ணில் இருந்து இறக்கினாள்.

மகளின் அழகிய வதனம் கோபத்தில் செவ செவவென சிவந்துக் கிடக்க, கண்கள் வேறு கண்ணீரால் குளம் கட்டி இருக்க, அப்படியே உருகி விட்டது ஜெய்தேவுக்கு.

“சரிடாம்மா! இப்படி டென்ஷன் ஆகாதே! நீ அழுதா அப்பாக்குப் பிடிக்காதுன்னு தெரியும்ல! நல்ல காலேஜா இருக்கேன்னு அங்க சேர்க்க நெனைச்சேன். உனக்குப் பிடிக்கலனா அப்பா ஃபோர்ஸ் பண்ணுவேனா! நீ நல்லா படிக்கற புள்ள, எங்கனாலும் ஜெயிச்சுடுவ! அப்பா உடனே நீ கேட்ட காலேஜ்ல சேர எல்லா ஏற்பாடும் பண்ணறேன்” என இறங்கி வந்தார்.

இவளையே முறைத்துக் கொண்டிருந்த ஹஸ்வினியைப் பார்த்து,

“எப்புடி கவுத்தேன் பார்த்தல்ல!” என வாயசைத்தவள், ஓடிப் போய் தந்தையைக் கட்டிக் கொண்டாள்.

“தேங்க்ஸ்பா! ரொம்ப, ரொம்ப தேங்க்ஸ்”

தங்கையின் ஆர்ப்பாட்டத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்த ஹஸ்வினிக்கு காதில் புகை வராத குறைதான்.

சஞ்சீவினி பிறந்ததில் இருந்து தான் இரண்டாம் இடத்துக்குப் போய் விட்டது போல ஹஸ்வினிக்குத் தோன்றும். அம்மா வயிற்றில் பாப்பா இருக்கிறது, மேலே ஏறி விளையாடாதே என அறிவுறுத்தப் பட்டதிலிருந்தே உள்ளுக்குள் பொறாமைத் தீ எரிய ஆரம்பித்து விட்டது இவளுக்கு. போதாதற்கு சஞ்சீவினி மெழுகு பொம்மைப் போல அவ்வளவு அழகு. பெரியவள் ஹஸ்வினியோ சுமாரான அழகிதான்.

சஞ்சீவினி பிறந்ததும், கையில் ஏந்திய ஜெய்தேவுக்கு அப்படி ஒரு உவகை.

“ராணிம்மா! குழந்தை என்னடி இவ்வளவு அழகா இருக்கா!” என அதிசயித்துப் போனார்.

“எங்க குடும்பத்துல, எனக்குக் கொள்ளுப் பாட்டி முறை வரும் ஒருத்தங்க இருந்தாங்க தேவ்! பேரழகியாம்! அவங்கள போட்டோலதான் நான் பார்த்திருக்கேன்! கருப்பு வெள்ளை படத்துலயே மூக்கும் முழியுமா அவ்ளோ லட்சணமா இருப்பாங்க! அந்தக் காலத்துல நான் நீன்னு போட்டிப் போட்டுட்டு அவங்கள கட்டுறதுக்கு கியூல நின்னாங்களாம்! அதுக்குப் பிறகு, இப்போ நம்ம பொண்ணுதான் அப்படி பொறந்துருக்கா” எனப் பூரித்துப் போனார் இந்திராணி.

வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட அழகுத் தங்கையை வந்தவர்களெல்லாம் புகழ்ந்தது ஏற்கனவே குமைச்சலில் இருந்த குட்டி ஹஸ்வினிக்கு அறவேப் பிடிக்கவில்லை. தன்னைக் கண்ணே, மணியே எனக் கொஞ்சிய தந்தையும் தாயும் அதே வார்த்தைகளைக் கொண்டு சின்னவளையும் கொஞ்சியதை இவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  தேவும் இந்திராணியும் இரு மகள்களையும் ஒன்றாகப் பார்த்தாலும், சஞ்சீவினியிடம் பாசமும் நேசமும் கொஞ்சமே கொஞ்சம் அதிகமாக வெளிப்பட்டுவிடும். கடைசிக் குழந்தைக்கு எப்பொழுதும் கிடைக்கும் சலுகையல்லவா இது.

தான் ஒதுக்கப்பட்டதைப் போல உணர்ந்தவள் கோபத்தில், உறங்கிக் கொண்டிருந்த வினியின் காதைப் பிடித்துத் திருகி விட்டாள். இதைப் பார்த்து விட்ட இந்திராணி மீண்டும் அவள் அப்படி செய்யக் கூடாது என்பதற்காகப் பட்டென கையில் ஒரு அடி வைத்து விட, அப்பிஞ்சு மனதில் ஆறாத ரணமாய் விழுந்து விட்டது அச்சம்பவம். தேம்பித் தேம்பி அழுத பெரிய மகளை தேவ் சமாதானப்படுத்தி விட்டாலும், தங்கையால்தான் தாம் அந்நியப்பட்டுப் போனோம் என்பது மனதில் பதிந்துப் போய் விட்டது அவளுக்கு.

வளர வளர, பெற்றவர்கள் அறியாமல் தங்கையைக் கீழே பிடித்துத் தள்ளி விடுவது, வலிக்கக் கிள்ளி வைப்பது, அவளது விளையாட்டுப் பொருட்களை உடைத்துப் போடுவது எனத் தன் கோபத்தைக் காட்டுவாள் ஹஸ்வினி. ஆசையாய், விளையாட்டுத் தோழியாய் எண்ணி ஹஸ்வினியை நெருங்கும் குட்டி வினிக்கு, கிடைத்ததெல்லாம் முகத் திருப்பலும், இருட்டடியும்தான்(யாருக்கும் தெரியாமல் கொடுக்கும் அடி எனப் பொருள்படும்).

அக்காவின் செயல் இவளுள் கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பையும், திமிர்த்தனத்தையும் விதைக்க ஆரம்பித்தது. அவள் அடித்தால், இவளும் திருப்பி அடிக்க ஆரம்பித்தாள். தங்கை எதிர்க்க ஆரம்பிக்க, ஹஸ்வினி அடிப்பதையும் கிள்ளுவதையும் விட்டு விட்டாலும், வினி விடவில்லை. வேண்டுமென்றே ஹஸ்வினியின் முடியைப் பிடித்து இழுப்பாள். அவளது பள்ளி புத்தகங்களில் கிறுக்கி வைப்பாள். தந்தை இருவருக்கும் சமமாக எதாவது வாங்கிக் கொடுத்தால், தனக்கு வேறு எதாவது வேண்டும் எனக் கேட்டு அடம் பிடித்து அழுவாள். அழகு மகள் அழுவதுப் பொறுக்காமல் அவள் கேட்டதை உடனே வாங்கித் தந்து விடுவார் ஜெய்தேவ். ‘ஹெல்த் ஃரீக்’(health freak) ஆன இந்திராணி, உணவு விஷயத்தில் கண்டிப்பாய் இருப்பாரே  தவிர பிள்ளைகள் இருவரும் கேட்ட மற்ற எதையுமே மறுத்ததில்லை.

தங்கை இப்படியெல்லாம் செய்கிறாள் எனப் பெற்றவர்களிடம் சொன்னால்,

“தங்கச்சிதானேம்மா! சின்னப் புள்ளைனா இப்படிதான் இருப்பாங்க! நீதான் பொறுத்துப் போகனும்!” என அறிவுரைக் கிடைத்தது.

பெரிய மகளுக்காகச் சில சமயம் வினியைக் கண்டிக்கவும் செய்வார் இந்திராணி. அடுத்த நாள் செத்துப் போன தவளை கிடக்கும் ஹஸ்வினியின் புத்தகப்பையில். கதறிக் கொண்டு இவள் ஓடி வந்தால், சின்னவள் விரலில் பென்சில் கத்தி கீறி ரத்தம் வந்துக் கொண்டிருக்கும். வினியின் ரத்தத்தைப் பார்க்கும் பெற்றவர்களுக்கு, செத்தத் தவளை விஷயம் பின்னால் போய் விடும். தங்கையிடம் மோதி ஜெய்க்க முடியாது எனக் கண்டுக் கொண்ட ஹஸ்வினி, அதற்கு மேல் அவளது வழிக்குப் போவதை விட்டுவிட்டாள். வளர வளர வெறுப்பு மட்டும் வளர்ந்ததே தவிர, இருவரிடையேயும் ஒட்டுதல் வரவேயில்லை. இருவரையும் இணைத்து வைக்கப் பெற்றவர்கள் செய்த எதுவும் பலனளிக்கவில்லை. ஐந்தில் வளையாதது ஐம்பதில் மட்டும் வளைந்து விடுமா என்ன!

கல்லூரி பஞ்சாயத்து முடிந்ததும் பெற்றவர்கள் வேலையைப் பார்க்கப் போக ஹஸ்வினியிடம்,

“ஹச்! ஹச்! ஹச்வினி மேடம்! என்னை என்ன உன்னைப் போல தயிர்சாதம்னு நெனைச்சிட்டாங்களா? வாழ்க்கையில எஞ்சாய்மெண்ட்னு ஒன்னு இல்லாம, உன்னப் போல செக்கு மாடு மாதிரி காலேஜ்கு போய்ட்டு வீட்டுக்கு வரதுல என்ன த்ரீல் இருக்கு! அதுவும் லேடிஸ் காலேஜ்! சுத்த வேஸ்ட். நான் போக போற காலேஜ்ல கலர் கலர, ரகம் ரகமா பசங்க இருக்கானுங்களாம். பத்து பேர பார்க்கறேன், அஞ்சு பேர செலெக்ட் பண்ணறேன், மூனு பேர ஃபைனலைஸ் செய்யறேன்! கடைசியா ஒருத்தன தட்டித் தூக்கறேன்! ஜாலி ஜாலி! ஹெண்ட்சமா, மேன்லியா, இந்த அழகிக்கேத்த ஆணழகனா புடிச்சுக் காட்டறேன்! உன் அழ…..குக்கு ஏத்தது போல ஒரு அசிங்கம் புடிச்சவன டாடி தேடிப் புடிச்சுக் கட்டி வைப்பாரு! நல்லா இருடிம்மா ராசாத்தி!” என நக்கல் அடித்த வினி, ஏதோ ஒரு பாடலை ஹம்மிங் செய்தபடியே சமையலறைக்குப் போனாள்.

“போடி இவளே! சைட்டடிச்சு நாசமாப் போ” எனக் கறுவினாள் ஹஸ்வினி.  

“ஏன்டாம்மா கண்ணு அக்காவ இப்படி காயப்படுத்தற?” எனக் கவலையாய் கேட்டார் கவிதா.

“அவ எனக்கு அக்கா இல்ல! நீதான் எனக்கு அக்கா! அன்பு குடுத்தாத்தான் திரும்ப கிடைக்கும் கவிதாக்கா! வம்ப விதைச்சவ, வம்பைத்தான் அறுவடைப் பண்ணுவா! அவளுக்காக நீ பரிஞ்சுப் பேசாதே!” எனக் கத்தியவள் முன்பு, சாக்லேட் ஐஸ்க்ரீமை எடுத்து வைத்தார் கவிதா.

“அம்மா வராம நான் பார்த்துக்கறேன்! இதச் சாப்பிட்டு கொஞ்சம் கூல் ஆகு நீ”

“என்னை எப்படி கவர் பண்ணனும்னு நல்லாக் கத்து வச்சிருக்க நீ!” என முணுமுணுத்தப்படியே ஐஸ்க்ரீமை ரசித்து உண்ண ஆரம்பித்தாள் வினி.

அன்று கல்லூரியின் முதல் தினம். சீருடை இல்லாமல் வண்ண உடைகளில் அழகழகாய் சுற்றித் திரிந்தனர் மாணவ மணிகள். சலசலவென பேச்சும் கும்மாளமுமாய் இருந்தது அந்தக் கல்லூரி வளாகம். சீனியர்கள் கெத்து காட்ட, ஜூனியர்கள் பணிந்துப் போக அவ்விடமே கலகலத்தது.

சஞ்சீவினியை இறக்கி விட்டுவிட்டு,

“குட் லக் பேபி” என வாழ்த்தி விட்டுக் கிளம்பினார் ஜெய்தேவ்.

தோழியைக் கண்டதும், அவளுடன் வந்து சேர்ந்துக் கொண்டார்கள் மற்றவர்கள்.

“செம்மையா இருக்குடி இந்தக் காலேஜ்” என்றாள் ஒருத்தி.

“அது எப்படியோ இருந்துட்டுப் போகட்டும்! காண்டீன்ல பிரியாணி கிடைக்குமான்னு விசாரிச்சியா?” எனக் கேட்டாள் இன்னொருத்தி.

“சாப்பாட்டு ராமி, திங்கறதுலயே இருடி! கண்ண நல்லாத் தொறந்து சுத்தி முத்திப் பாரு! எத்த……..னை பாய்ஸ்! பரவசம், பரவசம், உன்னைப் பார்த்தால் பரவசம்னு கத்திப் பாடத் தோணுது எனக்கு!” எனச் சொன்னவாறே நடந்தவள், முன்னாள் வந்த ஒருத்தரைக் கவனிக்காமல் மோதித் தடுமாறி நின்றாள்.

அவர் கையில் இருந்த புத்தகங்கள் கீழே விழ, முகத்தைக் கூட கவனிக்காமல்,

“சாரி! சாரி! பேசிட்டே வந்ததுல உங்கள கவனிக்கல! சாரி” என்றவாறே புத்தகங்களை அள்ளிச் சேகரித்தாள் சஞ்சீவினி.

அதில் ஒரு புத்தகம் கருத்தைக் கவர,

“ஜேன் ஓஸ்ட்டன்(Jane Austen—Pride and Prejudice) ப்ரைட் அண்ட் ப்ரஜூடிஸ்! வாவ்! என்னோட பேவரேட் புக் இது!” எனச் சொல்லியபடியே நிமிர்ந்து அந்த ஆண்மகனைப் பார்த்தவளுக்கு மூச்சடைத்துப் போனது.

சிவந்த நிறத்தில், சால்ட் அண்ட் பெப்பர் தலை முடியில், ரிம்லெஸ் மூக்குக் கண்ணாடி அணிந்து, திடகாத்திரமாய், லட்சணமாய், ஆணழகனாய் அவள் முன்னே சிரித்த முகத்துடன் நின்றிருந்தார் அவர்.

“ஹாய்! மை நேம் இஸ் சுப்ரமணியம்! உன்னோட பேர் என்னம்மா?”

 

(தொடுவான்..)

(போன எபிக்கு லைக் அண்ட் கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி! இந்த எபில அக்கா தங்கையோட பிணக்கு எதனாலன்னு சொல்லிருக்கேன். இதோட சேர்த்து சம்பவத்தையும் குடுத்தா, சரியா வராது! சோ சம்பவம் அடுத்த எபிலதான். தோ வந்துட்டாருய்யா மிஸ்டர் பெல்!! அவர் யாரு??? எவரு??? இவளுக்கு என்ன சம்பந்தம்!!! மத்த நாலு பேரும் எங்க வராங்கன்னுலாம் அடுத்த எபில தெரிஞ்சுக்கலாம். அண்ட்டில் தென் லவ் யூ ஆல் டியர்ஸ்)