Thoda Thoda Thodarkathai–EPI 16

280654150_1081598149094185_3262610077133346742_n-10e1f615

அத்தியாயம் 16

ராமன் ராகவ் எனும் சீரியல் கில்லர் மும்பையை சேர்ந்தவன். நாற்பதுக்கும் மேற்பட்ட கொலைகளை செய்தவன் இவன். இரும்பு ராடினால் அடித்தே பலரைக் கொலை செய்திருக்கிறான். இத்தனைக்கும் இவன் கொலை செய்ததற்கு காரணங்கள் என எதுவும் இல்லை. மனநிலை சரியில்லாதவன் என இவனுக்கு ஆயூள் தண்டனை வழங்கியது நீதிமன்றம்.

 

“இண்ட்டிமெட்டா இருக்கனும்னா, உறவு வச்சிக்கப் போற பார்ட்னரப் பத்தி கொஞ்சமாச்சும் தெரியனும் இல்லையா! அப்படி தெரியாத ஒருத்தர் கூட பிண்ணிப் பிணைஞ்சா அது தொழில் செய்யறதுக்கு சமமில்லையா?”

கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு வித போதை உடலைத் தழுவ, அப்படியே பறப்பது போல ஒரு இருந்தது பெண்ணுக்கு. மிக ரிலேக்‌ஸாக உணர்ந்தாள் வினி. உடல் தன் பேச்சுக் கேட்காமல் போக, மூளை இன்னும் கொஞ்சம் விழிப்பு நிலையில் இருந்தது. பெண்ணின் கற்பு என்பது அவளது மனதில்தான் இருக்கிறது. காலங் காலமாய் நம்ப வைக்கப் பட்டிருக்கும் பெண்ணுருப்பில் உள்ள ஹைமென் எனும் திசுவில் இல்லை எனத் தனக்குள் உருப் போட்டுக் கொண்டாள். முடிந்த அளவு நடப்பதைத் தள்ளிப் போட முயலலாம்! அதற்கு மேல் ஆண்டவன் விட்ட வழி என மனதைத் தேற்றினாலும் கண்கள் குளம் கட்டிக் கொண்டது.

கையால் தலையைத் தாங்கியபடி அவளையேப் பார்த்தவாறு படுத்திருந்தவனுக்கு மெல்லியப் புன்னகை இதழ்களில் படர்ந்தது. கை நீட்டி அவளது கண்ணீரைத் துடைத்தவன்,

“நமக்குள்ள நடக்கப் போறத தள்ளிப் போட நினைக்கற! எவ்வளவு தள்ளிப் போட்டாலும், கடைசில எப்படியும் ஒன்னுக்குள்ள ஒன்னாகப் போறோம் பேபி! அப்புறம் ஏன் டைம் வேஸ்ட் பண்ணனும்?” என்றவாறே அவள் மேனியைப் பூவை வருடுவது போல மென்மையாய் வருடினான்.

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து’ அப்படின்னு வள்ளுவர் சொல்லிருக்காரு தெரியுமா சஞ்சுக்குட்டி. ஒரு நோய்க்கான மருந்து வேறு பொருளா இருக்குமாம். ஆனா ஒரு பெண் உண்டாக்கும் நோய்க்கு அவளேதான் மருந்தாக முடியுமாம்! உன்ன நெனச்சி, எத்தனை வருஷமா ஆசையாலும், அடக்கமாட்டாத விரகத்தாலும் துடிச்சிருப்பேன் தெரியுமா! என் நோய்க்கு மருந்தா என் கட்டிலில நீ கிடக்க, அத சாப்பிட தடைப் போடற உன்னை நான் என்ன செய்யட்டும்!” என்றவன், அவளது தலைமுடியைக் கொத்தாய் பிடித்துத் தன் பக்கம் இழுத்துக் கொடுத்த அதிரடி முத்ததில் உதடு கிழிந்து ரத்தம் வந்தது வினிக்கு.

மெல்ல அவளை விடுவித்தவன்,

“அச்சோ, ரத்தம் வந்துடுச்சே! மென்மையான என்னை ஏன்டி முரடனா மாத்தப் பார்க்கற! இப்போ என்ன!!!! என்னைப் பத்தித் தெரியனும், அவ்ளோதானே!!! சரி சொல்லறேன்! மருந்து இன்னும் வேலை செய்ய ஆரம்பிக்கலல! அதனாலத்தானே என்னை டைவர்ட் பண்ண வைக்குது உன் மூளை! அதுக்கு மயக்கம் வர வரைக்கும் என் சொந்தக் கதை சோகக் கதையச் சொல்றேன்! சரியா பேபி! அதுக்குப் பிறகு நீ என்னதான் தடுக்கனும்னு நெனைச்சாலும், உன் உடம்பே எனக்கு ஒத்துழைக்கும்டி” என்றவன் அவளை இழுத்துத் தன் மடியில் போட்டுக் கொண்டான்.

“ஓர் ஊர்ல சுப்ரமணி, சுப்ரமணின்னு ஓர் அழகன் இருந்தானாம். அந்த ஊர்ல கொஞ்சம் இருக்கப்பட்டக் குடும்பமாம் அவனோட குடும்பம்! அழகா இருந்தவனுக்கு நல்ல அறிவையும் ஆண்டவன் குடுத்துருந்தானாம். அத ஒழுங்கான வழில யூஸ் பண்ணானா அவன்???? இல்லையே!!! எப்படி பொண்ணுங்கள மயக்கலாம், எப்படி கட்டில்ல சரிக்கலாம்னுதான் ஓடுமாம் அவன் எண்ணமெல்லாம். வீட்டுல உள்ள சோனகிரிகளுக்கு மகன் படிச்சு பெரிய பருப்பா வருவான்னு அம்புட்டு நம்பிக்கையாம். ஆனா அந்தக் குள்ளநரி என்ன செஞ்சதாம், காலேஜ் போய்ட்டு இருந்த சமயத்துல, வீட்டு வேலைக்கு வரும் ஒரு சின்னப் பொண்ணுக் கையைப் புடிச்சு இழுத்துடுச்சாம். குட்டிப் பார்க்க அழகா இருக்கும்னு வச்சிக்கயேன்! அறிவாளிதானே அந்த மணி!!! தொட்டா ஒட்டிக்கும்னு தெரிய வேணா! என்னமோ போ!! அந்த வேலைக்காரி வயத்துல நான் ஒட்டிக்கிட்டேன்! பொண்ணோட சொந்தமெல்லாம் திரண்டு வந்து நியாயம் கேக்க, இவன் குடும்பத்து ஆளுங்க லம்ப்பா ஒரு அமவுண்ட குடுத்து செட்டில் பண்ணி விட்டுட்டாங்க! அதுக்குப் பிறகு மணிய அப்படியே அமுக்கிக் கொண்டு போய் சென்னைல குடி வச்சிட்டாங்க! ஒரு முறை இந்த மாதிரி மாட்டிக்கிட்ட மணி, அதுக்குப் பிறகு ரொம்ப கவனம் இந்த மேட்டர்ல எல்லாம்!” எனச் சொல்லி இடியென சிரித்தான்.

சிரித்து ஓய்ந்தவன், தன் மடியில் படுத்திருந்தவளின் உதட்டில் இருந்து இன்னும் ரத்தம் துளிர்ப்பதைப் பார்த்து,

“பிஞ்சு உதடுடி உன்னோட உதடு! இப்போ பார்க்கறப்போ எப்படி இருக்குத் தெரியுமா!!! ஆரஞ்சு சுளையில ஸ்ட்ராபெரி ஜாம் பூசுனது போல அவ்ளோ அழகா இருக்கு” என்றவன் ஆட்காட்டி விரலால் ரத்தத்தை வழித்து தன் வாயில் வைத்து சப்பினான்.

அவனது செயல்களினாலோ, அல்லது கொடுக்கப்பட்ட மருந்தின் விளைவுகளினாலே இவளுக்கு வார்த்தைகள் குழறின.

“அ…. அப்றோம்!” எனத் திக்கித் திணறினாள்.

தன்னை மடியேந்தி இருந்தவனின் உருவம் வேறு மங்கலாகத் தெரிய ஆரம்பித்தது. அவளது கைகள் மெல்ல உயர்ந்து அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டது.

அவளது செயலில் புன்னகை முகிழ்த்தது இவனுக்கு.

 “அப்புறம் என்னாகும்!!! அந்தப் பாவப்பட்ட பொண்ணுக்கு கருக்கலைப்பு செய்யலாம்னு போனா, நாள் ரொம்பத் தாண்டிப் போச்சு, அதெல்லாம் செய்ய முடியாதுன்னு கை விரிச்சிட்டாங்க! கைலக் கெடைச்சப் பணத்துல கொஞ்சத்த சொந்தக்கார பய புள்ள ஒருத்தனுக்குக் குடுத்து புள்ளய கட்டி வச்சிட்டாங்க! அந்த நாதாரி ஒரு குடிகார நாய். பத்தினியாடி நீன்னு பொண்டாட்டிய போட்டு அடிக்கறது பத்தாதுன்னு, பொறந்த குழந்தையையும் விட்டு வச்சது இல்ல” என்றவன் தன் கண்ணில் வழிந்த நீரை ஒரு கரத்தால் துடைத்துக் கொண்டான்.

குரலை செறுமி சரி செய்தவன், மீண்டும் சொல்ல ஆரம்பித்தான்.

“வளர வளர அடி உதையும் கூடவே வளந்துச்சு! அந்த குடிகார நாய்க்குப் புள்ள பொறக்கலனா நான் என்ன செய்வேன்! அதுக்கும் சேர்த்து என்னைப் பிச்சிப் பேன் பார்த்துடுவான் அந்த பண்ணாடை! எங்கம்மா நான் அடி வாங்கறத அழுதுட்டே பார்த்துட்டு நிக்கும்! கிட்ட வந்தா அதையும் துவைச்சு எடுத்துருவானே அந்தப் பாவி! அடி வாங்கி, வாங்கி உடம்பே மரத்துப் போச்சு எனக்கு! அதுக்கும் ஒரு முடிவு வந்தது! வர வச்சேன் ! எப்பவும் தூங்கி எழுந்ததும், குவாட்டர் போட்டாதான் அவனால எழுந்தே நிக்க முடியும்! அந்த குவாட்டர்ல எலி மருந்த கலந்து வச்சிட்டேன்! வாய்ல நொறைத் தள்ளி செத்துப் போய்ட்டான் அவன்! குடிச்ச சரக்கு கலப்படம்னு நெனைச்சு, அப்படியே பாடையக் கட்டிட்டானுங்க! அதான் நான் செஞ்ச மொத கொலை! அப்போ எனக்கு வயசு ஏழு! அவன் துடிதுடிச்சு செத்ததப் பார்க்க எவ்ளோ ஜாலியா இருந்தது தெரியுமா!! உடம்பே சிலிர்த்துக்கிச்சு!” எனச் சொன்னவனுக்கு இப்பொழுது கூட சிலிர்த்தடங்கியது உடல்.

“அடியும் மிதியும் வாங்கி எங்கம்மாவும் ரொம்ப நலிஞ்சுப் போய்தான் இருந்துச்சு! என்னை வேற வளர்த்து விட முடியுமான்னு அதுக்கே சந்தேகம்! அனாதை ஆசிரமம் ஒன்னுல என்னை சேர்த்து விட்டுட்டு கிளம்பிட்டா. ‘அம்மா என்னை விட்டுடுப் போகாதம்மான்னு’ கெஞ்சனேன், கதறனேன்! என்னைக் கட்டிக்கிட்டு கண்ணீர் வடிச்சாளே தவிர மனசு இறங்கல. நீலிக்கண்ணீர்! போகற முன்ன என் நெஜ அப்பன் யாருங்கன்ற உண்மைய சொல்லிட்டுப் போனா மகராசி! அப்பவே மனசுல சுப்ரமணின்ற பேர பச்சைக் குத்தி வச்சிக்கிட்டேன்! அந்த ஆசிரமத்துலதான் வளந்தேன்! ரெண்டு வேள சாப்பாடு, படிப்பு, ஓயாத வேலைன்னு போச்சு லைப்.  ப்ளஸ் டூ முடிச்சதும், மணியத் தேட ஆரம்பிச்சேன். எங்கம்மா வேலை செஞ்ச வீட்டக் கண்டுப்புடிச்சேன்! அதுக்குப் பிறகு சுலபமா எங்கப்பன கண்டுப்புடிச்சிட்டேன். சென்னைக்குத் தேடிப் போனேன் அந்தாள!”

தந்தையைச் சந்தித்த தினம் காட்சியாய் மனதில் தோன்ற முகம் மலர்ந்துப் போனது இவனுக்கு.

“நம்பலயே என்னை! டி.என்.ஏ டெஸ்ட் எடுத்துப் பார்த்துதான் ஒத்துக்கிட்டான் நான் அவன் ரத்தம்னு! ஏத்துக்க மாட்டான், பெரிய சீன் போடுவான்னு நெனைச்சேன்! ஆனா ரிசால்ட் வந்ததும் என்னைக் கட்டிப் புடிச்சுக்கிட்டான் மணி! சிங்கிளா சுத்தறது, கிடச்சப் பொண்ண எல்லாம் அனுபவிச்சுப் பார்க்கறதுன்னு எத்தனை நாளைக்கு ஒருத்தன் சந்தோசமா இருந்துடுவான்! நடுத்தர வயசு வந்தா குடும்பம், குழந்தைன்னு மனசு ஏங்கத்தானே செய்யும்! வித விதமா ரசிக்க, ருசிக்க கல்யாணம் ஒரு தடைன்னு ஒண்டிக்கட்டையா இருந்த மணிக்கு, வாழ்க்கை வெறுக்க ஆரம்பிச்ச சமயம் அது! என்னை ஊரு உலகத்துக்குக் காட்டாம, ரகசியமா ஏத்துக்கிட்டான். இத்தனை நாளா சேர்த்து வச்ச பேரும் புகழும், இத்தாதண்டிப் புள்ள இருக்கான்னு தெரிஞ்சா புட்டுக்கிட்டுப் போயிடுமே! அதுக்குத்தான் மகன்னு நான் இருக்கறத ரகசியமாவே வச்சிக்கிட்டான். அதுக்குப் பிறகு மறைமுகமா பணம் கட்டி என்னைப் படிக்க வச்சது எல்லாம் மணிதான். மணி எனக்கு அப்பனா நடந்துக்கலடி. ஒரு தோஸ்த்தா நடந்துகிட்டான்! சிற்றின்பம்னா என்ன பேரின்பம்னா என்னன்னு எனக்குப் பாடம் எடுத்தவனே மணிதான். என் கிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்ணிப்பான்.  எல்லாத்தையும்னா என்னன்னு நெனைக்கறியா? அவனோட தம்மு, தண்ணிய மட்டும் இல்ல, அவனோட மாணவிகளையும் எனக்குப் பரிசா குடுத்துருக்கான். உன்னைக் கூட அவன் முடிச்சதும், எனக்குக் குடுக்கறேன்னு சொல்லிருந்தான்டி! உன் மேல அவ்ளோ ஆசை அவனுக்கு! போன் செய்யறப்பல்லாம் உன்னப் பத்திதான் வாய் ஓயாம பேசுவான்! நீ சேலைக் கட்டியிருந்த போட்டோவ எனக்கு அனுப்பி வச்சிருந்தான். அதப் பார்த்து எத்தனை நாள் ஏங்கி இருப்பேன் தெரியுமா, எப்போ நீ எனக்கு கிடைப்பன்னு! சின்ன வயசுல இருந்து நரகத்த மட்டும் அனுபவிச்ச எனக்கு சொர்க்கத்த காட்டனான்டி என் மணி! என் பணக் கஸ்டம், மனக் கஸ்டம் எல்லாத்தையும் தீர்த்து வச்சான்! அப்பனா, ஆசானா இருந்தான்! அவன அநியாயமா சுட்டுக் கொன்னுட்டானே உன் அப்பன்! அப்படி என்னடி நீ பெரிய இவ!!!! என் மேல அன்ப பொழிஞ்ச என் மணி உயிர எடுக்கற அளவுக்கு நீ என்னடி பெரிய இவ!! எனக்கு என் மணி வேணும்டி!! வேணும்! வேணும்!” என்றவன் கோபத்தில் தன் மடியில் இருந்த வினியைக் கீழே தள்ளி விட்டான்.

பட்டென கீழே விழுந்தவளின் தலை, பலமாய் தரையில் மோதியது.

“ஆ!!!!” எனக் கத்தியவளின் குரல் அவளுக்கே கூடக் கேட்கவில்லை.

தரை மெல்ல இவளது குருதியால் நனைய ஆரம்பித்தது.

“அன்னிக்கு என் மணியப் பார்க்க வந்திருந்தேன்டி! முதல் நாள் நைட்ல அவ்ளோ டிப்ரேஸ்டா இருந்தான் மணி. உன்னை தொட்டும், தொடர முடியாமப் போனதைதான் மறுபடி மறுபடி சொல்லிட்டே இருந்தான். உன் தோழிங்க பண்ண தகிடுதத்தத்தையும் வாய் ஓயாம புலம்பனான்! அதனாலத்தான் மணிய சியர் அப் பண்ணலாம்னு கிளம்பி வந்தேன். உங்கப்பன் வந்தப்ப நான் பாத்ரூம் போயிருந்தேன்! மணி எப்பவும் தனியாத்தான் இருப்பான்ற நெனைப்புல வந்திருந்தான் போல உங்கப்பன். ‘என் பொண்ண பலாத்காரம் பண்ண துணிஞ்சதும் இல்லாம, என் கண்ணு முன்னாடியே அவள பார்வையாலே துகிலுரியறியாடான்னு’ ஒரே வாக்குவாதம்! இவனாச்சும் சும்மா இருந்துருக்கலாம். ‘என்னைக்கு இருந்தாலும் உன் மக எனக்குத்தான்டா’ன்னு தெனாவெட்டாப் பேசனான் மணி. நான் வெளிய வரதுக்குள்ள, படார்னு ஒரு சத்தம். அவசரமா வெளிய வந்துப் பார்த்தா, என்..என் மணி மூளைச் சிதறிப் போய் கிடக்கான். செம்ம அதிர்ச்சி எனக்கு! கீழ கிடந்தது சைலன்சர் வச்சத் துப்பாக்கின்னு புரிஞ்சிக்கிட்டேன்! அங்கயே இருந்தா நீ யாரு, உனக்கு இதுல என்ன சம்பந்தம்னு என்னையே குற்றவாளியாக்க சான்ஸ் இருக்குன்னு புரிஞ்சது! அவனோட போன்ல செத்த உடம்ப வீடியோ எடுத்து, போனையும் கையில எடுத்துக்கிட்டு, நான் வந்தத் தடயத்த எல்லாம் அழிச்சிட்டுக் கிளம்பி வந்துட்டேன்! எனக்கு இருந்த கோபத்துல யோசிக்காம முட்டாள்த்தனமா உனக்கு வீடியோவையும், மேசேஜையும் அனுப்பி வச்சேன்! எங்கப்பன் சாவுக்குக் காரணமான உன்னை பயங்காட்டி நிம்மதி இல்லாம பண்ணனும்னுதான் அப்படி செஞ்சேன். உடனே, எங்க போனை ட்ரேஸ் பண்ணி வந்துடுவீங்களோன்னு பயந்து போய் அதத் தூக்கிக் கூவத்துல கடாசிட்டு ஊர் போய் சேர்ந்தேன். உங்கப்பன் அவனோட செல்வாக்க வச்சி, என் மணியோட கொலையத் தற்கொலையா மாத்துனத கையாலாகாத்தனத்தோடப் பார்த்துட்டு இருந்தேன்டி நான்! படிச்சு முடிக்கனும், வேலையில சேரனும், சமூகத்துல ஒரு அந்தஸ்த்துல உக்காரனும்னு பழி வாங்கற உணர்ச்சிய பொத்தி எனக்குள்ளயே இத்தனை வருஷமா வச்சிருந்தேன்டி!!!! ஆனா அந்த கனிகாவ கொன்னதுல, ஏழு வயசுல முதல் கொலைப் பண்ணிட்டு தூங்கிட்டு இருந்த ராட்சசன் பட்டுன்னு முழிச்சிக்கிட்டான்டி!! தெனம் ரத்தம் பார்க்கனும்னு அவன் துடிக்கற துடிப்ப அடக்க முடியலடி என்னால! உங்க அஞ்சு பேரோட எல்லாம் முடிஞ்சுடும். குடும்பம் குட்டின்னு வாழ்க்கைய ஓட்டிடலாம்னு நெனைச்சேன். ஆனா இப்போ இந்த ராட்சசன் என்னை விட்டுப் போக மாட்டானோன்னு சந்தேகமா இருக்குடி!!!” என்றவனுக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது.

“என்னை ஏன்டி எல்லோரும் சேர்ந்து ராட்சசனா மாத்துனீங்க!!! ஏன்? ஏன்? ஏன்? நான் மட்டும் என்ன தப்பு பண்ணேன்?? இல்லீகல் சைல்ட்டா பொறந்தது என் குத்தமா? குழந்தைன்னு கூடப் பார்க்காம என்னைப் போட்டு அடிச்சுத் துவைச்சாங்களே, அதுவும் என் குத்தமா? என்னைத் தாங்கிப் பிடிப்பான்னு நெனைச்ச அம்மாக்காரி, நான் ரத்தக்காயம் வாங்கனப்பலாம் பார்த்துட்டு மட்டும் நின்னாலே, அது யார் குத்தம்??? செத்து ஒழிஞ்சான் சித்தப்பன்னு சந்தோசமா இருந்தப்போ, அனாதை ஆசிரமத்துல கொண்டு தள்ளுனாங்களே அது யார் குத்தம்?? அங்க சோத்துக்கு அலையா அலைஞ்சு கால் வயிறு அரை வயிறுன்னு வாடிப் போய் கிடந்தேனே அது யார் குத்தம்??? மணி ரூபத்துல எனக்கு அன்பையும் ஆதரவையும் குடுத்து, வாழ்க்கையில சந்தோஷம்னா என்னன்னு காட்டிட்டு பட்டுன்னு பறிச்சுட்டாங்களே, அது யாரோட குத்தம்??? இதுல என் தப்பு எங்கன்னு சொல்லுடி! எனக்கு ஒரு நியாயத்த சொல்லு! சொல்லு! சொல்லு!” என ரத்த வெள்ளத்தில் கிடந்தவளைப் போட்டு உலுக்கினான் இவன்.

அவ்வளவு கோபத்திலும், ஆக்ரோஷத்திலும் இருந்தவனின் புலன்கள் சட்டென கூர்மைப் பெற்றது. சைட் டேபிளின் மேல் மறைவாக வைத்திருந்த கைத்துப்பாக்கியைப் பாய்ந்து எடுப்பதற்குள், தள்ளிப் போய் விழுந்துக் கிடந்தான்.

இரு கால்களையும் லேசாய் பரப்பி, முகத்தில் ரௌத்திரம் துலங்க அவன் முன்னே சிங்கமென நின்றிருந்தான் வீரமணிகண்டன்.

“என்னடா பேய் முழி முழிக்கற என் கவினே!!!!”(டியர் ஆல், தயவு செஞ்சு கமேண்ட்லயோ, ரீவியூ போடறப்பவோ இவன்தான் அந்த சைக்கோ கில்லர்ங்கறத ஷேர் பண்ணிடாதீங்க ப்ளிஸ்! இது தெரிய வந்துட்டா, இனிமேதான் படிக்கப் போறவங்களுக்கு சப்புன்னு போய்டும்! ப்ளிஸ்! ப்ளிஸ்! ப்ளிஸ்)

 

(தொட மாட்டான் இனி….)

 

(அப்பாடா!!!!! நிம்மதியா இருக்குடா சாமி எனக்கு! உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும்னு நம்பறேன்! சிலர் கவின் தான் சைக்கோன்னு கண்டுப் புடிச்சிட்டீங்க! இதுக்கும் மேல இத சஸ்பென்ஸா வைக்கவும் முடியாது! ஏனா கதை முடியப் போகுது! இத்தனை நாளா, உங்கள குழப்பி விட்டு, பார்க்கறவன எல்லாம் ஆணழகன்னு சொல்லி திசைத் திருப்பி விட்டு, ஷப்பா!!!! எவ்ளோ டகால்ட்டி வேலைலாம் பார்க்க வேண்டியதாப் போச்சு!!! ஹஹஹ!!! கதை இன்னும் முடியல! தோடு பத்தி, எப்படி நாலு பேரையும் கடத்தனான்னுலாம் அடுத்த எபில பார்க்கலாம் டியர்ஸ். லவ் யூ ஆல்!!!)