Thoda Thoda Thodarkathai–EPI 17

280654150_1081598149094185_3262610077133346742_n-e29cc493

அத்தியாயம் 17

ஜெய்சங்கர் எனும் இந்த சீரியல் கில்லர் சைக்கோ சங்கர் எனவும் அழைக்கப்பட்டான். லாரி ஓட்டுனரான இவன் கற்பழிப்பு, கொலை, கொள்ளை என பல அட்டூழியங்களை செய்ததாக அறியப்படுகிறது. திருமணமாகி மூன்று பெண்களுக்கு தகப்பனான இவனை போலிஸ் கைது செய்து சிறையில் அடைத்துக் கூட, தப்பி ஓடி இருக்கிறான். மனநிலை சரியில்லாத இவன் தன் கழுத்தை ஷேவிங் ப்ளேடால் அறுத்துத் தற்கொலை செய்து கொண்டான்.

 

ரத்த வெள்ளத்தில் உடம்பில் ஒட்டுத் துணிக் கூட இல்லாமல் கிடந்த தன் உயிரை பார்த்த வீராவுக்கு சப்த நாடியும் ஒடுங்கிப் போனது. அவள் உடலில் ஜி.பி.எஸ் கருவிகளை இழைத்திருந்தவன், அவளுக்கு அணிவித்திருந்த தோட்டை மட்டும் கஸ்ட்டம் மேட்டாக(custom made) செய்யச் சொல்லி, அவளுக்கு மட்டும் அதை உபயோகிக்கும் வழியை ரகசியமாக சொல்லிக் கொடுத்திருந்தான். சாதாரணத் தோடு போலதான் இருக்கும். அதில் உள்ள சின்ன பட்டனை அழுத்தினால் மட்டுமே அதில் உள்ள ஜீபிஎஸ் ட்ராக்கர் வேலை செய்ய ஆரம்பிக்கும்! அது வரை அதிலிருந்து சிக்னல் எதுவும் வராத சாதாரண கம்மல் போலத்தான் இருக்கும். அதனால்தான் கவினின் டிவைஸால் அந்த தோட்டில் இருந்த ட்ராக்கரை கண்டுப்பிடிக்க முடியவில்லை.

புதரில் கண்டெடுத்த இவளது பொருட்களில் தோடு இல்லாமல் இருந்ததில் இவனுக்கு சற்றே நம்பிக்கையின் ஒளித் தெரிந்தது. ஆனாலும் அதில் உள்ள பட்டனை அழுத்தும் அளவுக்கு தன்னவள் உணர்வோடு இருக்கிறாளா எனும் எண்ணமே பீதியைக் கிளப்பியது! சற்று நேரத்துக்கு முன், சிக்னல் லைட் அவனது போனில் எரியத் தொடங்க, அதை தொடர்ந்து அடித்துப் பிடித்து ஓடி வந்திருந்தான் அவ்விடத்திற்கு. ஒதுக்குப் புறமான இடத்தில் இருந்தது ஒற்றை வீடு ஒன்று.

ராகவனுக்கு போன் செய்து, இடத்தைச் சொன்னவன், போலிஸ் படையோடு ஆம்புலன்சையும் அனுப்பி வைக்கச் சொல்லி விட்டு தனியாளாய் இங்கே வந்திருந்தான். போலிஸ் குவாட்டரஸில் வசிக்கும் கவினை சத்தியமாய் இங்கே எதிர்ப்பார்க்கவில்லை வீரா. அம்மணக்கட்டையாய் அவனைக் கண்ட வீராவுக்கு ரத்தம் கொதித்து விட்டது. எவ்வளவு பெரிய துரோகம்!!!!!!! கூடவே இருந்து குழிப் பறித்திருந்தவனை ஆக்ரோஷமாய் தாக்க ஆரம்பித்தான் வீரா.

அவன் எதிராளி கவின் மட்டும் சளைத்தவனா?  இவனைப் போல அவனும் ட்ரேய்னிங் எல்லாம் போய் வந்த ஒரு போலிஸ்காரன் அல்லவா! இருவருக்கும் படு பயங்கரமான மோதல் ஆரம்பித்தது.

“அதுக்குள்ள எப்படிடா வந்த!!!! யாராலயும் இந்த இடத்தக் கண்டுப் புடிக்க முடியாதுன்னு இறுமாப்பா இருந்தேனே! அதுவும் நல்லதா போச்சி! உன் ஆள, உன் முன்னாடியே வச்சி செய்யறேன்டா!” எனக் கர்ஜித்த கவின், வீராவின் கட்டுப் போட்டிருந்த கையையே இலக்காய் வைத்து அடிக்க ஆரம்பித்தான்.

ஒற்றைக் கையால் அவனோடு போராடிக் கொண்டிருந்த வீராவுக்கு, வெட்டுக் காயத்தில் இருந்து ரத்தம் பீய்ச்சிக் கொண்டு வந்தது. அவனால் வலியைத் தாங்கவே முடியவில்லை. வீரா கொஞ்சம் அசந்த நேரம் பார்த்து அவன் காலை தட்டிக் கீழே வீழ்த்திய கவின், கட்டிலில் கிடந்த பெட்ஷீட்டை சட்டென உருவினான் அவனைக் கட்டிப் போட. கவின், வீராவின் மேல் அமர்ந்து அவனது கையை உடம்போடு கட்ட முனைய, வேகமாய் முன்னோக்கித் தன் தலையை கொண்டு வந்து, ஆக்ரோஷமாக கவினின் தலையோடு மோதினான் வீரா. சித்தம் கலங்கிக் போக அப்படியே பின்னால் சரிந்தான் கவின். தட்டுத் தடுமாறி எழுந்த வீரா, சுருண்டுக் கிடந்தவனை மிதித்துத் தள்ளி விட்டு தன்னவள் அருகே ஓடினான்.

அவளது தலையைத் தூக்கி தன் தொடை மேல் வைத்தவன்,

“வினிம்மா! கண்ணு! பேபி!” எனக் கலங்கிய குரலில் அழைத்தப்படியே, கன்னத்தைத் தட்டினான்.

அவளிடமிருந்து மெல்லிய முனகல் மட்டுமே வந்தது. இவனது தொடை அவளது ரத்தத்தில் நனைய, கலங்கிப் போனான் மன்னவன்.

அறையைப் பார்வையால் அலசியவனின் கண்ணில் வெள்ளைத் துண்டுப் பட, பூப்போல மெல்ல அவளை மீண்டும் தரையில் கிடத்தியவன், ஓடிப் போய் அதை எடுத்து வந்தான். ஒற்றைக் கையால் சிரமத்தோடே வினியின் தலையை அத்துண்டால் கட்டினான் வீரா. இந்த வேலையின் வீரா கவனமாய் இருக்க, எதிர்ப்பார்க்காத சமயத்தில் அடிப்பட்டக் கையிலேயே மீண்டும் சரமாரியான தாக்குதல் நடத்தினான் கவின்.

“சாவுடா நாயே! சஞ்சுக்குட்டிய என் கிட்ட இருந்து பிரிக்கவா பார்க்கற! விடமாட்டேன்டா! சாவு! சாவு!” எனக் கத்தியபடியே வீராவை எட்டி எட்டி உதைத்தான் கவின்.

ஒரு கையில் வினியைத் தாங்கி இருந்த வீரா, சட்டென அவளைத் தனக்குக் கீழே கொண்டு வந்து பொத்திப் பிடித்தப்படி, கவின் கொடுத்த எத்துக்களை முதுகிலும், உடம்பின் பக்கவாட்டிலும் வாங்கிக் கொண்டான்.

“மச்சான்! ஐ லவ் யூ!” என மெல்லியக் குரலில் முனகினாள் வினி.

அவளை மென்மையாய் கீழே கிடத்தியவன், புஷ் அப் செய்வது போல, ஒற்றைக் கையை மட்டும் கீழே ஊன்றி பலம் கொண்ட மட்டும் முயன்று பட்டென எழுந்துக் கொண்டான். மீண்டும் ஆரம்பித்தது இருவருக்கும் போராட்டம். இந்த முறை வீரா, வெறிக் கொண்டு தாக்கினான்.

“என் வினிய எப்படியும் காத்துக் கரம் பிடிப்பேன்டா சைக்கோ கவினே!!!” என எள்ளி நகையாடியபடியே தாக்கினான் வீரா.

அவனது எள்ளலில் இன்னும் ஆவேசமானான் கவின். அந்த அறையில் உள்ள சாமான்கள் எல்லாம் இவர்கள் சண்டையில் புயலடித்தது போல சிதறிப் போயின. அந்த நேரத்தில்தான் வெளியே, வாகனங்கள் வரும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. உஷாரான கவின், மேசை மறைவில் வைத்திருந்த துப்பாக்கியை பாய்ந்து எடுத்தான். இவ்வளவு நேர சண்டையில் இடுப்பின் பின்னால் சொறுகி இருந்த வீராவின் துப்பாக்கி, எங்கேயோ போய் விழுந்திருந்தது.

வீராவைச் சுட துப்பாக்கியைத் தூக்கிய கவின், படக்கென கீழே விழுந்துக் கிடந்தான். அவன் கையில் இருந்த துப்பாக்கி ஒரு மூலைக்கு பறந்து சென்றிருந்தது. வீரா அதிர்ச்சியாகப் பார்க்க, கவினின் காலை படுத்த வாக்கிலேயே தட்டி விட்டிருந்த வினி,

“சாவுடா!” என முணுமுணுத்தப்படியே கண்களை மீண்டும் மூடிக் கொண்டாள்.

வாய் விட்டு சிரித்த வீரா, விழுந்து கிடந்த கவினைத் தூக்கி, அவன் கழட்டிப் போட்டிருந்த ஜீன்சைக் கொண்டே நாற்காலியில் அவனைக் கட்டிப் போட்டான். விழுந்ததில் நெற்றிப் பிளந்து ரத்தம் வர, தலை ஒரு சைடாக சாய்ந்தது கவினுக்கு.

அதற்குள் அறை அருகே காலடி சத்தங்கள் கேட்க,

“அங்கேயே நில்லுங்க! உள்ள வர வேணாம்!” என ஓங்கிக் கத்தினான் வீரா.

காலடி சத்தங்கள் நின்றுப் போக, பெட்ஷிட் கொண்டு தன்னவளை சுற்றினான் வீரமணிகண்டன்.  

“வீரா!” என ஜெய்தேவின் குரல் தவிப்பாகக் கேட்க,

“நீங்க மட்டும் வாங்க மாமா” எனக் குரல் கொடுத்தான்.

குடுகுடுவென உள்ளே ஓடி வந்தார் அவர். பிறந்த போது, துணி சுற்றித் தன் கையில் கொடுக்கப்பட்ட குழந்தை, இப்பொழுதும் அதே போல கையில் கொடுக்கப்பட, கதறியபடியே தன் மகவை ஏந்திக் கொண்டார் அந்த தகப்பன்.

மகள் வழித் தவறியது தெரிந்ததில் இருந்து ஒரு தகப்பனாய் அவரால் முன்பு போல அவளைத் தொட்டுப் பேச முடியவில்லை. ஏதும் நடவாதது போல ஒட்டி உறவாடவும் முடியவில்லை. தன் வளர்ப்பில்தான் ஏதோ குறையோ எனத் தன்னை நிந்தித்துக் கொள்ளாத நாளில்லை.  வயது வந்ததும், தந்தைமார்கள் தன் பெண் பிள்ளைகளை ஓரடி தள்ளி வைக்க வேண்டுமென இதற்குதான் சொல்கிறார்களோ எனக் கலங்கிப் போனார் அவர். மணி உயிரோடு இருக்கும் வரை தன் மகளுக்கும், தன் மகளைப் போன்ற மற்ற இளவயது பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லையென கருதிதான் அவரைப் போட்டுத் தள்ளினார். மற்ற நான்கு பெண்கள் மீதும் இவருக்குக் கோபம்தான். ஆனாலும் பெண்ணைப் பெற்றத் தகப்பனாய் அவர்களை எதுவும் செய்ய மனம் ஒப்பவில்லை. தன் மகளைப் போல நடித்து, அவர்கள் மணிக்கு அனுப்பிய போட்டோக்கள், ஈமேயில் என எல்லாவற்றையும் அதற்கான ஆட்கள் கொண்டு சுவடில்லாமல் அழித்தார். மீண்டும் இது போன்ற விஷயங்களில் மகள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, அவளைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்தார். அப்படி அமைக்கவும்தான் வீராவும் மகளும் பழகுவதைக் கண்டுக் கொண்டார். மகளைத் தள்ளி நிறுத்தினாலும், அவள் மேல் ஒரு கண் வைப்பதை நிறுத்தவில்லை ஜெய்தேவ்.  அவளை நினைத்தே மைல்ட் அட்டாக் வந்திருக்க, தான் இல்லையென்றால் யார் அவளுக்குப் பாதுகாப்பு எனக் கருதியே திருமணைத்தையும் முடித்து வைக்க நினைத்தார், ஒரு முறை மகளை நம்பாமல் வாழ்க்கையில் தவறிப் போன அந்த தகப்பன்.

“மாமா! ஆம்புலன்ஸ் வந்துட்டா, இவள கொண்டு போய் அட்மிட் பண்ணிடுங்க! எனக்கு இன்னும் முடிக்க வேண்டிய வேலை பாக்கி இருக்கு!” என்றவன், பெண்ணவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.

அவள் கன்னியா இல்லையா எனத் தெரியாது இவனுக்கு! என்ன நடந்திருந்தாலும், இந்த வினிதான் வீரின் காதல் மனைவி! உயிர் மூச்சு உள்ள வரை அவளைப் போற்றிப் பாதுகாப்பான் இந்தக் காவலன்.

ஜெய்தேவ் வெளியேறியதும் ராகவனும் மற்ற போலீஸ் அதிகாரிகளும் உள்ளே வந்தனர். கவினைப் பார்த்தவர்களுக்கு அவ்வளவு அதிர்ச்சி!

“அடப்பாவி!” என நெஞ்சைப் பிடித்துக் கொண்டார் ராகவன்.

“எதாவது தடயம் கிடைக்குதான்னு வீட்ட சேர்ச் பண்ணுங்க! மத்த பொண்ணுங்கள இங்க எங்காவது அடைச்சி வச்சிருக்கானான்னு பாருங்க!” என கட்டளையிட்ட வீரா, கவினை நெருங்கினான்.

கவினின் தலை முடியைக் கொத்தாகப் பிடித்து ஆட்ட, அவனிடம் மெல்லிய முனகல் சத்தம் மட்டுமே வந்தது. பாக்கேட்டில் இருந்த குட்டிக் கத்தியைக் கொண்டு அவனது கையை ஓங்கிக் குத்தினான் வீரா.

“அம்மா!” எனக் கத்தினான் கவின்.

கண்கள் படக்கெனத் திறந்துக் கொண்டது அவனுக்கு.

“மத்த பொண்ணுங்க எல்லாம் எங்கடா?”

“நீ ஏ.சி.பி தானே! சொந்தமா கண்டுப்புடிடா என் வெண்ட்ரு”

மெல்லிய புன்னகையுடன், கையில் குத்தி இருந்த கத்தியை மாவாட்டுவது போல சுழற்றினான் வீரா.

“ஆ!!!!!!!!!!” வென கதறினான் கவின்.

“ஏன்டா கவினே! போலிஸ் டார்ச்சர் எப்படி இருக்கும்னு தெரிஞ்ச நீயே, உடம்பப் புண்ணாக்கிக்கலாமா? உன்னைக் கண்டுப்புடிச்சா, கொன்னுப் போட சொல்லி மினிஸ்டரே பர்மிஷன் குடுத்துருக்காருடா! சோ உன்னைக் கொன்னா கூட நான் எந்த பேப்பர்வொர்க்கும் செய்யத் தேவையில்ல! எவனுக்கும் பதில் சொல்லத் தேவையில்ல! கொல்லவா?”

“கொல்லுடா கொல்லு! என் பொண்டாட்டி, புள்ளைக்கு இந்த விஷயம் தெரியறப்போ நான் உசுரோட இருக்கக் கூடாது! கொல்லுடா வீரா! என்னைக் கொல்லு”

“பொண்ணுங்கள கடத்தனப்ப, பொறந்த குழந்தையை யோசிக்கல! அவளுங்கள கண்டம் பண்ணப்ப, கட்டிக்கிட்டவள யோசிக்கல! இப்ப மாட்டனதும் மட்டும் மானம் மரியாதையப் பத்தி யோசிக்கறியா?” எனக் கேட்டவன், ஓங்கி ஓர் அறை விட்டான். (கவின் நிஜமாலுமே குடும்பஸ்தனானு கேட்டிருந்தீங்க! குடும்பஸ்தன் தப்பு பண்ண மாட்டானா டியர்ஸ்? நான் ஹெடிங்ல குடுத்த சீரியல் கில்லர் முக்கா வாசி பேரு குடும்பம், குட்டின்னு உள்ளவங்கதான். இவங்களா கொலையாளின்னு அவங்கள சார்ந்தவங்கள அதிர்ச்சி அடைய வச்சவங்கதான். இவன் ரொம்ப நல்லவங்கன்னு பழகனவங்க எல்லாராலும் புகழப் பட்டவங்கதான்! உள்ளுக்குள்ள இருந்த கொடூரத்தை மறைச்சி சமூகத்தோட சகஜமா பழகனவங்கதான்)

ராகவன் இவன் அருகே வந்து நின்றார்.

“சார்! இந்தப் பெட்டி முழுக்க விதவிதமான போதை பொருளுங்க இருக்கு சார்”

“சீஸ் பண்ணதுல சொந்த யூஸ்க்கு சார் கொஞ்சம் எடுத்து வச்சிக்கிட்டாரு போல!” எனச் சொன்னவன், அதில் இருந்த ஒரு போதை வஸ்துவை எடுத்து திருப்பித் திருப்பிப் பார்த்தான். பின் ஊசியால் அதை கவினுக்கு ஏற்றினான்.

“சார், சார்! என்ன சார் செய்யறீங்க” எனப் பதறினார் ராகவன்.

“நம்மாளுய்யா இவன்! வாயில இருந்து ஒரு மயிரையும் புடுங்க முடியாது! இன்னும் பத்து நிமிஷத்துல எல்லாத்தையும் அவனாவே கக்குவான் பாரேன்”

அந்த நேரம் போன் வந்தது ஜெய்தேவிடம் இருந்து!

“வீரா! வினிய பக்கத்துல உள்ள ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டேன். அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு போய்ருக்காங்க!” எனப் பகிர்ந்துக் கொண்டார்.

“சரி மாமா!” என அழைப்பைத் துண்டித்தவன், ஓங்கி இன்னொரு அறை விட்டான் கவினுக்கு.

“பூப்போல மென்மையானவடா என் வினி! அவள என்ன நிலைக்குக் கொண்டு வந்துட்டடா பாவி” என மீண்டும் அடிக்கப் போனவனை ராகவன் பிடித்துக் கொண்டார்.

“சார்! நமக்கு தேவையான இன்பர்மேஷன் வர வரைக்கும் உசுர விட்டு வைங்க சார்”

சில பல நிமிடங்கள் கடந்து, மீண்டும் கவினை உலுக்கினான் வீரா.

“எங்கடா அந்தப் பொண்ணுங்க!”

“ரேப் பன்ணி, அசிட் ஊத்திப் பொசுக்கனது போக, மீதி உடம்ப வீட்டுப் பின்னால எங்கெங்கயோ புதைச்சி வச்சிருக்கேன்!” எனப் போதையாக சொன்னான்.

கேட்ட இருவருக்கும் குலை நடுங்கிப் போனது. பெண்கள் உயிரோடு இருப்பதென்பது சந்தேகம்தான் எனத் தெரிந்திருந்தாலும், இவ்வளவு கொடூரமா இந்த அழகான கவின் உள்ளே என அதிர்ந்துப் போனார்கள்.

“ராகவன்! டாக் ஸ்குவாட்க்கு இன்பார்ம் பண்ணுங்க! அதுங்க கண்டுப் புடிக்கற இடத்த தோண்ட சொல்லுங்க! கமான் குவிக்!”

அவர் அலைப்பேசியோடு வெளியேற, வீட்டின் உள்ளே தேடிய மற்ற போலிஸ் அதிகாரிகள் இப்பொழுது வெளியே தேட ஆரம்பித்தார்கள். மிக விஸ்தாரமான இடம் அது! வீடு சின்னதாக இருந்தாலும், சுற்றி இருந்த நிலம் பரந்து விரிந்துக் கிடந்தது.

போதையின் பிடியில் இப்பொழுது கவின் எது சொன்னாலும், சாட்சிக்காக அது எடுத்துக் கொள்ளப்படாது எனத் தெரியும் வீராவுக்கு. தெளிவான மனநிலையில் விசாரிக்கும் போது, போலிஸ் புத்தி தன்னைக் காத்துக் கொள்ள பொய் சொல்லக் கூடிய வாய்ப்பு அதிகம் இருந்ததால், நடந்தது என்ன எனக் கண்டுக் கொள்ள விழைந்தான் வீரமணிகண்டன்.

“மணி உனக்கு யாரு?”

கவின் சொன்ன விவரங்களை கேட்டுக் கொண்டவன்,

“நல்ல அப்பன், நல்ல மவன்! நீ சின்ன வயசுல கஸ்டப்பட்டத்துக்கு காரணமே அந்த நாதாரிதானேடா! அவன் பாம்ப படம் எடுத்தாட்டாம விட்டிருந்தா நீ பொறந்துருக்கவே மாட்டியேடா என் சிப்ஸு! அவனுக்காகவா இவ்ளோ வெறி கொண்டு போராடன??? உன் அப்பன் பாசத்தக் கண்டுப் புல்லரிக்குதுடா!” எனக் கடுப்பானான்.

“டிபார்ட்மெண்ட்குள்ள சீக்ரட்டா இருக்க வேண்டிய விரல் விஷயத்த வைரலாக்கினது, கனிகா எவன் கூடவோ ஓடிப் போய்ட்டான்னு கேசைத் திசைத் திருப்பி விட்டது, என்னை ஃபாலோ பண்ணி டி.என்.ஏ விஷயத்த தெரிஞ்சுகிட்டு மினிஸ்டருக்கு ப்ரைவட் நம்பர்ல இருந்துப் போட்டுக் குடுத்தது, ஹோட்டல் சி.சி.டி.வி கேமரால ஹேமாவும் விஷ்ணுவும் இருந்தத வெளிய விட்டு அவன் மேல சந்தேகத்த வரவச்சது, என்னை சமுராய் கத்தியால வெட்டனது எல்லாம் நீ தானே?”

அலட்சியமாகப் புன்னகைத்தான் கவின்.

“இதுல தெனாவெட்டா சி.சி.டி.வி ஃபுட்டேஜ்ல எனக்கு சல்யூட் வேற வச்சிருக்க! நான் ஒத்துக்கறேன்டா ஜகஜாலக் கில்லாடிதான் நீ! என் கண்ணு முன்னுக்கு இருந்து என் கண்ணுலயே விரல விட்டு ஆட்டிருக்கியே! ஜித்தன்தான்டா! ஆனாலும் உங்கப்பன கொலை பண்ணவன் கிட்ட உன் கெத்த காட்டாம, உடலால நம்மள விட பலவீனமானப் பெண்கள் கிட்ட உன் ஆம்பளத் திமிரக் காட்டிருக்கியேடா பரதேசி!”

“அவளுங்க ரொம்ப நல்லவளுங்க மாதிரி பேசாதடா! என் மணிய ட்ரீகர் பண்ணதே அவளுங்கதான். எங்கம்மா விஷயத்துல மாட்டுனதுல இருந்து, தன்னைத் தேடி வந்த பொண்ணுங்க, அவனால எக்ஸ்ப்லோய்ட் பண்ண முடிஞ்ச பொண்ணுங்க மேலதான் கை வச்சான் மணி! அவளுங்கதான் அமைதியா போய்டுவாளுங்க! விஷயமும் வெளிய வராது! ஏன்னா மானம் மரியாதை முக்கியம் பிகிலு!!!வினி மேல ஆசை இருந்தாலும், அவ பணக்காரன் வீட்டுப் பொண்ணுன்னு, கிளாஸ் டைம்ல சும்ம தொடறது, தடவுறதுன்னு அப்படியே போய்ருப்பான் மணி. அவனுக்கு இப்படிலாம் ஈமெயில் அனுப்பி வினி மேல பைத்தியமா அலைய விட்டது இவளுங்க நாலு பேருதான்! அந்த பைத்தியம்தான் அவ அப்பாவோட மல்லுக்கட்டற அளவுக்கு கொண்டு வந்து மணி உசுர எடுத்துருச்சு! அதுக்கு தண்டனை வேணா!!!! பொம்பளைனதும் பாவம் பாக்கனுமா? கூட இருந்த தோழிக்கும் அவளுங்க உண்மையா இல்ல, கத்துக்குடுத்த குருவுக்கும் அவளுங்க உண்மையா இல்ல. மணி கிட்ட என்ன வேணும்னு ஆசைப் பட்டாளுங்களோ அதைத்தான் நான் நிறைவேத்தி வச்சேன்!  சஞ்சுக் குட்டியையும் வச்சி செஞ்சிட்டா ஆசை அடங்காம செத்துப் போன என் மணி ஹேப்பியாகிடுவான்”

“செஞ்சது எல்லாம் மொள்ளமாரித்தனம், அதுக்கு நியாயம் வேற கற்பிக்கிறியாடா? கூடப் பிறந்த தம்பி மாதிரி உன் மேல எவ்ளோ நம்பிக்கை வச்சிருந்தேன்! எள்ளுன்னா எண்ணெயா வந்து நிக்கறானேன்னு எவ்ளோ பெருமைப் பட்டிருக்கேன்! அடுத்த ப்ரோமோஷனுக்கு உன்னை சஜேஸ்ட் பண்ணனும்னு நெனைச்சிருந்தேனேடா! இனி ஒரு தடவை சொந்த நிழலக் கூட நம்பக் கூடாதுன்னு எனக்கு தலைல தட்டிப் பாடம் கத்துக் குடுத்துட்டடா கவினே!”(ஹீரோவ ஏத்திக் காட்ட, அவன் கவின ஏற்கனவே கண்டுப்புடிச்சிட்டான்ற மாதிரி காட்டல நான்! போலிஸ விட கிரிமினல் ரொம்பவே புத்திசாலித்தனமா மூவ் பண்ணுவான்! அந்த கிரிமினலே போலிஸா இருந்தா!!!! அப்போ எப்படி யோசிப்பான் அவன்!!! அதைத்தான் இந்தக் கதையில குடுத்துருக்கேன்! வீரா பெஸ்ட்டுன்னா கவின் கிரேட்டு(அடிக்க வர வேணா! கேப்மாரித்தனத்த சொல்லல, புத்திசாலித்தனத்த சொன்னேன்! கவின் அத நல்ல வழியில யூஸ் பண்ணிருக்கலாம்!!! அப்படி யூஸ் பண்ணி இருந்தா, இந்தக் கதையே வந்திருக்காதே!!! ஹிஹிஹி)

“இப்போ சொல்லு! எப்படி கடத்தன நாலு பேரையும்?”

கண்கள் சொருகிப் போய் கிடந்தவனை, மீண்டும் ஓர் அறை விட்டு எழுப்பி விட்டான் வீரா.

“சொல்லுடா!”

“அந்த கனிகா இருக்காளே! அவளுக்கு தான் நிறம் கம்மின்னு ஒரு காம்ப்ளேக்ஸ்! மால்ல ஒரு தடவை தெரியாத மாதிரி போய் மோதினேன். அப்படியே ஆழ்ந்து பார்க்கற மாதிரி ஒரு லுக் விட்டுட்டு, சாரிங்கன்னு சொல்லிட்டுக் கிளம்பிட்டேன். என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்துட்டே போனா! இன்னொரு தடவை ஐஸ்கிரீம் பார்லர்ல அவளப் பார்க்கற மாதிரி உட்கார்ந்து என்னையும் மீறி கண்ணு அவப் பக்கம் போகிற மாதிரி ஆக்ட் விட்டேன். அடுத்த முறை ஏதேச்சையா பார்க்கற மாதிரி புன்னகைச்சேன். அவளே வந்து என் கிட்ட பேசினா! அவ பேசனதே பரவசம் போல காட்டிக்கிட்டேன். போன் நம்பர் மாத்திக்கிட்டோம். என்னோடது திருட்டு நம்பர். அடுத்த நாளே, போன் பண்ணி மால் பார்க்கிங் வா! ஒரு லாங் ட்ரைவ் போவோம்னு சொன்னேன். வந்துட்டா!” என்றவன், பிறகு அவளை என்னெவெல்லாம் செய்தான் என்பதையும் சொன்னான்.

அழகை மட்டுமே பார்த்து புதைகுழியில் சிக்கிக் கொள்ளும் பெண்கள் எத்தனை எத்தனை பேர்!!

“சரண்யாவோட பேக்க புடிங்கிட்டு ஓடற போல ஆள நானே செட் பண்ணி, அவளுக்கு உதவுறத போல ஆக்ட் குடுத்தேன். நல்லவன்னு நம்பிட்டா! ஒதுக்குப்புறமான காபி ஷாப்ல ரெண்டு நாள் சந்திப்பு. பீச்ல சுண்டல் வாங்கித் தின்னதுன்னு கொஞ்சம்தான் எஃபேர்ட் போட்டேன்! பட்சி சிக்கிக்கிச்சு! தி.நகர்ல ஷாப்பிங் போறேன் சொல்லிருந்தா! நான் ட்ராப் பண்ணிடறேன் வீட்டுலன்னு சொல்லி, என் வீட்டுக்கு அதாவது இந்த வீட்டுக்கு அள்ளிட்டு வந்துட்டேன்! போலிஸ் குவார்ட்டர்ஸ்ல இருக்கறவனுக்கு எப்படி இங்க ஒரு வீடுன்னு பார்க்கறியா!! ஹஹஹ! பெரிய அரசியல்வாதி ஒருத்தனுக்கு, அவன் கொடவுனுக்கு நாம ரெய்ட் வரோம்னு ஒரே ஒரு இன்பர்மேஷந்தான் குடுத்தேன்! பினாமி பேருல இருக்கற வீட்ட எனக்குத் தூக்கிக் குடுத்துட்டான்! பேரு அவனது, வீடு என்னது”

அவன் சொன்னது எல்லாம் குளறலாக இருந்தாலும் வீராவுக்கு நன்றாகவே விளங்கியது.

“இந்த மூவ்லாம் சட்டு சட்டுன்னுப் பண்ணிடனும். இல்லைனா இவன்தான் என் பாய்ப்ரேண்டுன்னு ஊரெல்லாம் டமாரம் அடிச்சிருவாளுங்க! நாமளும் பட்டுன்னு மாட்டிப்போம்! ஆனா இதுங்க க்ரூப்லயே அந்த ஹேமாவுக்கும், மதுமிதாவுக்கும்தான் ஆணவம் ஜாஸ்தி. ஒருத்திக்கு பணமும் அரசியல் பின்புலமும் இருக்குன்ற திமிரு. இன்னொருத்திக்கு பெரிய அழகின்னு நெனைப்பு! இவளுங்கள ஸ்கேட்ச் போட்டு வளைக்கறதுதான் கஸ்டமாச்சுடா வீரா”

“ஓஹோ! அப்போ என்ன செஞ்ச?”

“சரக்கடிச்சுட்டு வந்த ஹேமாவ, கார் பார்க்கிங்ல மயக்க மருந்து கர்ச்சீப் வச்சுத் தூக்கனேன். மாடல் அழகியா இருந்த மதுமிதா காரை கொஞ்சம் ப்ராப்ளமாக்கி, நடு ரோட்டுல அது நின்னதும், உதவற மாதிரி போய் அலேக்கா தூக்கனேன்! ரிஸ்க்குத்தான் ஆனா அவளுங்க குடுத்த  அனுபவம் நான் எடுத்த ரிஸ்க்குக்கு ரொம்பவே வொர்த்துதான்”

எப்படி திட்டம் தீட்டினான், எப்படி கட்டம் கட்டினான் எனக் கேட்ட வீராவுக்கு மலைப்பாய் இருந்தது.

“சார் டாக் ஸ்குவாட் வந்துட்டாங்க!” எனும் குரலில்,

“ராகவன்! இவனுக்கு ட்ரேஸ் எடுத்துட்டு வாங்க! அரெஸ்ட் பண்ணி ஹாஸ்பிட்டல் அனுப்பனும்! மண்டை ரொம்ப வீங்கிடுச்சு! கை காலுலாம் ரத்தம் வேற!“ எனச் சொல்லியவன், தனது போன் எடுத்து ஹையர் அஃபிசியலுக்கு விஷயத்தைத் தெரிவித்தான்.

“சார், உங்களுக்கும் கையில ரத்தம் வந்து கிட்டே இருக்கு! வெளிய மெடிக்கல் ஆளுங்க நிக்கறாங்க! வந்து முதலுதவி செஞ்சிக்கோங்க!” என ராகவன் அழைக்க,

“லேட்டர்” எனச் சொன்னவன் கவினை விலங்கிட்டு உரிய பாதுக்காப்போடு மருத்துவமனைக்கு அனுப்பினான்.  

நாய்கள் அங்கும் இங்கும் மோப்பம் பிடித்து இடங்களைக் காட்டிக் கொடுக்க, நான்கு பெண்களின் அழுகிப் போன உடலும் தோண்டி எடுக்கப்பட்டது! அவ்விடமே பிண வாடையும், கெமிக்கல் வாடையும் அடிக்க எல்லோரும் முகத்துக்கு மாஸ்க் அணிந்துக் கொண்டார்கள். சிதைந்துப் போயிருந்த உடல்களைப் பார்த்த வீராவுக்கு, என்ன தப்பு செய்திருந்தாலும் இந்த தண்டனை மிகக் கொடூரமானது எனத் தோன்றியது. ராகவன் ஓடிப் போய் இரண்டு முறை வாந்தி எடுத்து விட்டு வந்தார்.

“இவனுக்குள்ள இப்படி ஒரு சைக்கோத்தனம் இருக்கும்னு நான் நெனைச்சே பாக்கலியே சார்! என்னால இன்னும் நம்ப முடியலையே” எனச் சொல்லி சொல்லி மாய்ந்துப் போனார் ராகவன்.

“இனி என்ன சார் ஆகும்?”

“மெண்டலி ஸ்டாபிலா இருக்கானான்னு டெஸ்ட்லாம் எடுப்பாங்க! அதை பொறுத்துதான் தூக்கா, ஆயுளான்னு முடிவாகும்!”

“இவனத் தூக்குல போட்டு பட்டுன்னு சாகடிச்சிடக் கூடாது சார்! ஆயுள் தண்டனைக் குடுத்து நொந்து, வெந்து சாக விடனும்” என்றார் ராகவன்.

“மனுஷனுக்கு மரணம் என்னைக்குன்னு தெரியாத வரைக்கும்தான் நிம்மதி நிலைக்கும்! மரண நாள் இதுதான்னு தெரிவிச்சிட்டா, ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் அதை நெனைச்சே பாதி செத்துடுவான். தூக்குல தொங்கப் போறது அவனோட உடம்பு மட்டும்தான். அவனோட ஆன்மா எப்பவோ செத்துப் போயிருக்கும் ராகவன்! உலகத்துலயே கொடுமையான தண்டனை தூக்கு தண்டனைதான்”

அதற்குள் விஷயம் கசிந்து, மீடியா ஆட்கள் அவ்விடத்தை சூழ்ந்துக் கொண்டனர். முதலுதவி செய்துக் கொண்ட வீராவுக்கு அதற்கு மேல் நிற்க நேரமில்லாமல் போனது! வீட்டில் கிடைக்கப் பெற்ற பெண்களின் உடைகள், அவர்களது உடமைகள் எல்லாவற்றையும் கைப்பற்றினார்கள். ஒரு பெரிய கண்ணாடி பாட்டிலில் கெமிக்கல் நீரில் பெயரை லேபில் செய்து வைக்கப்பட்டிருந்த இன்னொரு செட் மோதிர விரல்களையும் கையோடு லேபுக்கு எடுத்துக் கொண்டனர். விக்டிமின் எதாவது ஒரு உடல் அங்கத்தை அல்லது உடமையை ஞாபகமாக வைத்துக் கொள்வது இது போல சில சீரியல் கில்லர்களின் வழக்கமாகும்.

அவ்வப்பொழுது வினியைப் பற்றி விசாரித்துக் கொண்டே, தனது வேலைகளையும் பார்த்தான் வீரா. அவள் இன்னும் அவசரப் பிரிவில் இருந்து வெளி வரவில்லை என்பது கலக்கமாகத்தான் இருந்தது.

கவின் இருந்த மருத்துவமனைக்கு இவன் விரைய, அங்கே ஒரே களேபரமாக இருந்தது.

“என்னாச்சு?” என இவன் பதட்டமாகக் கேட்க,

“சார்! அவ்ளோ பாதுகாப்பா வச்சிருந்தும் நர்ஸ் மாதிரி வந்த ஒரு லேடி, கத்தியால கவின குத்திக் கிழிச்சிட்டாங்க சார். விஷம் தடவன கத்தியாம்! துடிதுடிச்சு செத்தான் சார்”

“ஓ மை காட்! என்னய்யா வேலைப் பார்க்கறீங்க நீங்களாம்!” எனக் கத்தியவன்,

“யாரு?” எனக் கேட்டான்.

அங்கொரு மூலையில் கைது செய்யப்பட்டு அமர்த்தி வைக்கப்பட்டிருந்த பெண்ணைக் காட்டினார்கள். கண்ணீரும் கம்பலையுமாக இருந்த அவரை இவனுக்கு நன்றாகவே அடையாளம் தெரிந்தது.

“கண்ணுக்குக் கண்ணா வளத்தேனே என் கண்மணிய! ஒத்தப் பொண்ணுன்னு கேட்டதெல்லாம் செஞ்சேனே! நான் எவ்ளோ கஸ்டப்பட்டாலும் அவள மகராணியா வச்சிருந்தேனே! நான் இந்த பூமியில உயிர் வாழ்றதே அவளுக்காகத்தானே!  என் குலசாமியாச்சே அவ! கொன்னுட்டானே! படுபாவி கொன்னுட்டானே! கனிகா! நான் பெத்த மகளே! உனக்கு இந்த மாதிரி சாவு வரவாடி பொத்திப் பொத்தி வளத்தேன். ஆண்டவா, என் மகள எப்படியாவது என் கிட்ட சேர்த்திடுன்னு உனக்கு பாலபிஷேகமா செஞ்சேனே! உனக்கு கண்ணில்லையா???? இப்படி என்னை ஏமாத்திட்டியே! மகளே! என் கண்ணே” எனக் கண்ணீர் வழியக் கதறிக் கொண்டிருந்தார்.

விஷயம் லைவ்வாக பல சேனல்களில் ஒளிபரப்பாகி வைரலாகி இருக்க, கொலைகாரன் எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறான் என்பது வரை விஷயம் வெளியாகி இருந்தது. டெக்னாலஜி யுகத்தில், ஒரு செல்போன் போதுமே, கதையைக் கந்தலாக்க!

கனிகாவின் அம்மா அணிந்திருந்த நர்ஸ் சேலையெல்லாம் ரத்தம் தெறித்துக் கிடந்தது. நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுத அவரது அழுகையில் உள்ளம் கசிந்தது இவனுக்கு! தாயை விட பெரிய சக்தி வேறெது இந்த பூமியில்! பெற்றப் பிள்ளை நல்லவனோ கெட்டவனோ, தாங்கித் தோள் கொடுப்பவள்தானே தாய்! ‘அம்மான்னா சும்மா இல்லடா’ எனச் சும்மாவாப் பாடி வைத்தார்கள்!

பெருமூச்சுடன் அடுத்தது என்ன எனக் கடமையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான் வீரமணிகண்டன்.

 

(தொட மாட்டான் இனி…..)

(வணக்கம் டியர்ஸ்! இந்த புது முயற்சில என்னால முடிஞ்ச அளவுக்கு லாஜிக் மிஸ்டேக் வராம, அங்கிங்கே விடுப்பட்டிருந்த புதிர எல்லாம் டை அப் பண்ண முயற்சி செஞ்சிருக்கேன்! ஹீரோயிசத்துக்கு முக்கியத்துவம் குடுக்காம கதைக்கு முக்கியத்துவம் குடுத்துருக்கேன். எதாவது தப்பா எழுதிருந்தாலோ, லாஜிக் எரர் இருந்தாலோ உங்க வீட்டுப் புள்ளயா நெனைச்சி மன்னிச்சி விட்ருங்க! இந்த கதைக்கு எபிலாக் இருக்கு! ஆனா நீங்க நினைக்கற மாதிரியான எபிலாக்கா இருக்குமான்னு தெரில! அடுத்து எபிலாக்ல சந்திக்கலாம் டியர்ஸ்! லவ் யூ ஆல்)