Thoda Thoda Thodarkathai–EPI 18(EPILOGUE)

280654150_1081598149094185_3262610077133346742_n-5280deb3

அத்தியாயம் 18(எபிலாக்)

 

“கண்ணே!”

“ஹ்ம்ம்”

“இன்று பௌர்ணமி!”

“சரி!”

“வானில் முழுமதியைக் காணவில்லையே!”

“உங்க ஸ்டேஷன்ல கம்ப்ளேயிண்ட் குடுக்கலாமா?”

“நிலவெங்கே எங்கே என ஊரே தேட!!!”

“தேட…..”

“அவள் இங்கே இங்கே என நானும் பாட!!!”

“தோடா!!!”

“வானுக்குத் தர மாட்டேன் என் நிலவை!”

“பார்டா!!!”

“இனி பூமியெங்கும் அமாவாசைதான்!”

“யோ இன்ஸு! தூங்கப் போனவள, கவிதை சொல்றேன்னு கைப்பிடிச்சு பால்கனிக்கு இழுத்துட்டு வந்து, மொக்கைப் போடற பார்த்தியா!”

“எதே!!! மொக்கையா!!!! என்னோட ஒரிஜினல் கவிதையப் பார்த்து, மொக்கைன்னு சொல்லிட்டியா!!!! வைரமுத்து கூட எனக்கு குடுத்துரு ராசான்னு கேட்டாரு இந்தக் கவிதைய! தரலியே!!! நான் தரலியே!”

“ஓஹோ! இதை நான் நம்பனுமா டூபாக்கூர் போலிஸ்?”

“சரி விடு! இன்னொரு கவிதை சொல்வேனாம்!!! நீ அந்த நிலவைப் பார்த்துட்டே ரசிச்சுக் கேப்பியாம்!”

“ஒன்னும் வேணா!”

“தேன் நிலவில் தன் தேனடைக்கு தேனான கவிதை சொல்ல ஏங்கும் இந்த தேவனைத் தடுக்காதே தேவி”

“சொல்லும்!!! சொல்லித் தொலையும்!” எனச் சலித்துக் கொண்டாள் பெண்.

‘வாலிபத்தைக் கிள்ளுதடி

உந்தன் அழகு

வாசனைகள் பூசுதடி

வண்ணக் கனவு

கண்ணுக்குள்ளே மிதந்தது ரெண்டு நிலவு

காணவில்லை இப்பொழுது எந்தன் மனது” என இவன் சொல்லி முடிப்பதற்குள் அவன் நெஞ்சிலும் வயிற்றிலும் படபடவென அடித்தாள் வினி.

“ஓ வந்தது பெண்ணா பாட்டுல இருந்து வரிகள சுட்டுட்டு சொந்த கவிதைன்னு ரீல் விடற! ஃப்ராடு!” எனச் சொல்லி சொல்லி அடித்தவளுக்கு அப்படி ஒரு சிரிப்பு.

முகம் மலர சிரித்திருக்கும் தன்னவளை இறுக்கி அணைத்துக் கொண்டான் வீரா. சின்னப் புன்னகைக்குக் கூட பஞ்சமாகிப் போயிருக்க, இப்படி அவள் சிரித்தது வீராவுக்கு நெகிழ்ச்சியாகிப் போனது.

அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளி வந்த சஞ்சீவினி கண் விழிக்கவே இரண்டு நாட்கள் ஆனது. தலைக்கு பல விதமான டெஸ்ட்கள் எடுத்து, பயப்பட ஒன்றுமில்லை எனச் சொல்லவும்தான் உயிர் வந்தது இவர்களுக்கு. அது மட்டுமல்லாமல் அவளுக்குக் கொடுக்கப் பட்டிருந்த போதைப் பொருளின் விளைவாலும், மருந்துகளின் தாக்கத்தாலும், மயக்கத்திலும் தூக்கத்திலுமே போனது அவளது பொழுது. கவின் வழக்கு சம்பந்தப்பட்ட வேலைகளை மட்டும் பார்த்த வீரா, மற்ற நேரமெல்லாம் மங்கையின் அருகிலேயே இருந்தான்.

அவள் தெளிவானதும்தான் வினியிடமும் விசாரணையைத் தொடங்கினான். எல்லாவற்றையும் அவனிடம் பகிர்ந்துக் கொண்டவள், கவின் இறந்த விஷயம் கேட்டு,

“பட்டுன்னு செத்துட்டானே!” என ஆதங்கமாக சொன்னாள்.

“அதும் நல்லதுக்குத்தான் வினி! அவன கைது பண்ணினா என்னாகும்? கோர்ட், கேஸ்னு ரொம்ப நாள் இழுத்தடிப்பாங்க! இவன் ரொம்ப கெட்டிக்காரன் வேற! எப்படியும் கேசைத் திசைத் திருப்ப என்னா வேணா செய்வான். பல அரசியல்வாதிங்களோட டீலிங் வச்சிருக்கான். அவனுங்க அந்தரங்கம்லாம் இவனுக்குத் தெரியும்! அதுக்காகவே அவனுங்க இவனுக்கு நெறைய ஹெல்ப் மறைமுகமா பண்ணுவானுங்க! கவினோட பேச்ச வச்சிப் பார்த்தா, உன்னை கொன்னு முடிச்சதும் அடங்கிப் போறது இல்ல அவனோட கொலை வெறின்னு நல்லாப் புரியுது! எப்படியாச்சும் ஜாமின் கிடைச்சி வெளிய வந்தா, அவன் இன்னும் கொலைகள் செய்ய வாய்ப்பிருக்குடா! இந்த மாதிரி சைக்கோங்கள சரியான சாட்சிகள் இல்லாம, கோர்ட்ல விடுவிச்சதுனால மறுபடி மறுபடி எத்தனை கொலைகள் செஞ்சிருக்காங்க தெரியுமா! இவங்களுக்கு எல்லாம் ஆன் தி ஸ்போட் தண்டனைதான் கரேக்டு”   

ஓவென தலையை ஆட்டிக் கேட்டுக் கொண்டவள், அதற்கு மேல் குடும்பத்தினரிடமும் சரி, வீராவிடமும் சரி தேவைக்கு மட்டுமே பேசினாள். மற்ற நேரமெல்லாம் ஆழ்ந்த அமைதி.

அவளது அமைதி இவனுக்கு அச்சத்தைக் கொடுத்தது. எங்கே மீண்டும் தன்னை விட்டுப் போய் விடுவாளோ எனத் தவிப்பாக இருந்தது. தொட்டு ஆறுதல் படுத்தவோ, கட்டிப் பிடித்துத் தோள் சாய்க்கவோ உரிமையில்லாமல், மூன்றாவது மனிதனைப் போல அவளை வந்துப் பார்த்துப் போவது கொடுமையாக இருந்தது வீராவுக்கு. எந்நேரமும் அவள் தந்தையோ, தாயோ, சகோதரியோ அவளுடன் இருக்க, இவனாலும் நெருங்க முடியவில்லை வினியை. சாவின் விளிம்பைத் தொட்டு விட்டு வந்தவளை, மொத்தக் குடும்பமும் தாங்கியது. தள்ளி நின்று அதைப் பார்த்தவனின் இதயமோ ஏங்கியது.

இது வேலைக்கு ஆகாது என நினைத்தவன், சூட்டோடு சூடாக திருமணப் பேச்சை எடுத்தான். அவன் எதிர்ப்பார்த்தது போலவே, திடமாக முடியாது எனும் பதிலே வந்தது வினியிடம் இருந்து. இரண்டாவது முறையாக ரிஜேக்டானவனுக்கு, கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“ஏன்?”

“எனக்கு இந்தக் காதல், கல்யாணம் எல்லாம் வேணா வீர்! எதுவுமே பிடிக்கல!”

“காதலப் பிடிக்கல, சரி! கல்யாணம் பிடிக்கல, ஓகே! என்னைப் பிடிச்சிருக்கா இல்லையா?”

“பிடிச்சா என்ன பிடிக்கலனா என்ன? உனக்கு நான் வேணா!”

“ஏன்?”

அமைதி மட்டுமே அவளது பதிலாக இருந்தது.

“சரி விடு! நாம காதல பத்தியோ, கல்யாணத்தப் பத்தியோ பேச வேணா! நான் ரெண்டு கேள்வி கேட்கறேன்! அதுக்கு மட்டும் ஹோனஸ்டா பதில் சொல்லு”

“ஹ்ம்ம்”

“ஒரு கல்யாணம் ஆகாத பொண்ணு, நெஞ்சு வலிக்குதுன்னு டாக்டர் கிட்ட போறா! அது ஒரு ஆம்பள டாக்டர்! சட்டையெல்லாம் கழட்டி, மிசின்லாம் பூட்டி அவளுக்கு அந்த டாக்டர் ஈ.சி.ஜி டெஸ்ட் எடுக்கறாரு. ஐயோ, டாக்டர் தன்னை சட்டையில்லாம பார்த்துட்டாரேன்னு அவ கூசிப் போய் கல்யாணத்தையே வெறுத்துடனுமா?”

பதில் சொல்லாமல் அவனை ஆழ்ந்துப் பார்த்தாள் பெண்.

“இன்னொரு பொண்ணு, கல்யாணமானவ! அவளுக்குப் பிரசவம் பார்க்கற டாக்டர் ஆம்பள டாக்டர்! ஐயோ, டாக்டர் அந்த இடத்தப் பார்த்துட்டாரேன்னு அவ புருஷன டைவோர்ஸ் பண்ணிடனுமா?”

அவளது பதிலை எதிர்ப்பார்க்காமல்,

“ஒரு பொண்ணு, டாக்டர் கிட்டயும், தான் நம்பறவன் கிட்டயும் மட்டும்தான் தன் உடம்ப காட்டுவா! அப்படி அவளே காட்டாம, அவ விருப்பத்துக்கு மாறா, அல்லது அவளுக்கேத் தெரியாம ஒருத்தன் அவ உடம்ப பார்த்துட்டாலோ இல்ல தொட்டுட்டாலோ அங்க கெட்டுப் போனது அந்த ஆம்பளையோட கண்ணியமே தவிர அந்தப் பொண்ணோடது இல்ல! அப்பனும் மகனும் உன்னை சீரழிக்கப் பார்த்தானுங்க! போராடித் தப்பிச்சு வந்திருக்கடி நீ! தைரியசாலி வினி நீ! தைரியமான உன்னை அவனுங்க செத்தும் கூட தோற்கடிக்கனுமா வினிம்மா? உன் சந்தோஷம் நான்தான்னு தெரிஞ்சும் என்னை வேணாம்னு தள்ளி வச்சு, அவனுங்கள ஜெய்க்க வைக்கப் போறியா? சொல்லு வினி!” எனக் கோபமாகக் கேட்டவனைக் கட்டிக் கொண்டு கதறினாள் சஞ்சீவினி.

“அன்றைக்கு ஒன்னும் நடந்திருக்கலனாலும், என்னை அந்த மாதிரி ஒரு நிலையில இன்னொருத்தன் கூட பார்த்த உனக்கு எப்படி இருந்திருக்கும்! இப்போ காதல் கண்ணைக் கட்ட, என்னை நீ கல்யாணம் செஞ்சிக்கிட்டாலும், நாளப் பின்ன ஏதோ ஒரு கோபத்துல சீ போடின்னு ஒரு வார்த்தை நீ சொல்லிட்டனா, என்னாலத் தாங்க முடியுமா வீர்! வேணா வீர்! நான் உனக்கு வேணா”

“பைத்தியமாடி நீ! நான் உன்னைப் போய் அப்படிலாம் சொல்லுவேனா வினிம்மா! அதெல்லாம் சொல்ல மாட்டேன்டி! அப்படி சொல்லிட்டேன்னா, உனக்கும் வாய் இருக்குல்ல! உன் முகரைக்கட்டைக்கெல்லாம் நான் கிடைச்சதே ஜாஸ்திடான்னு செருப்பக் கழட்டி அடி! அத விட்டுட்டு, வேணா வீர் வேணா வீர்னு சொல்லி என் உசுரக் கொறைச்சிடாதே வினி”

கோபமாய் ஆரம்பித்தவன், கடைசியில் குரல் கரகரக்க இரண்டு சொட்டுக் கண்ணீரோடு முடித்தான். அவன் கண்ணீரைப் பார்த்தவளுக்கு இன்னும் கண்ணீர் பெருகியது.

பேசிப் பேசியே அவளைக் கரைத்தவன், உடல் நிலை சற்றுத் தேறியதுமே திருமணத்தையும் முடித்து விட்டான். திருமணத்துக்குப் பிறகும் கலகலப்பில்லாமல் நடமாடிக் கொண்டிருந்தவளை, ஹனிமூன் எனச் சொல்லி வயநாட்டில் இருந்த ஒரு ரிசார்ட்டுக்குத் தள்ளிக் கொண்டு வந்திருந்தான் வீரமணிகண்டன்.

சிரிப்புடன் கணவனது நெஞ்சில் சாய்ந்திருந்த வினி, மெல்ல அவனை நிமிர்ந்துப் பார்த்தாள். அவன் கண்ணில் கண்ட காதலில், மெல்லியப் புன்னகைப் பூத்தது இவளுக்கு.

“என்ன பார்வை?”

“நீயே என் பாவை!”

“என்ன லுக்கு?”

“உன்னைப் பார்த்தாலே கிக்கு!”  

“கண்ணை நோண்டிடுவேன்”

“உனக்காக ஏழு கடல் ஏழு மலை தாண்டிடுவேன்!”

“ஷப்பா!”

“நீயே என் புஸ்பா”

“யோவ் போலிசு!!!”

“நீதாண்டி என் பிரியாணியின் லெக் பீசு!”

“மிடிலேடா”

“கிட்ட வாடி என் ஸ்வீட் பீடா”

கெக்கெபெக்கெவென சிரித்தவள்,

“ஐ லவ் யூ வீர்!” எனச் சொல்லி அவனது நெஞ்சில் முத்தமிட்டாள்.

அவள் மனதளவில் சிதைந்திருந்தாலும், சிரிக்க வைத்து, சிலிர்க்க வைத்து, தன்னவளை சிறந்த சிற்பமாக்குவான். அவள் தயங்கி தடுமாறி நின்றாலும், தளிர் கைகள் பற்றி தடைகளை எல்லாம் தகர்க்க வைப்பான். மீண்டும் அவள் மீண்டு வர, தோள் கொடுப்பான், தோள் சாய்ப்பான், தோழனாய் தன் வினியைத் தாங்கி நிற்பான் வீரா.

கூடிய விரைவில்,

“விளக்க அணைச்சா விவரம் என்ன

ஒத்திகைப் பார்த்தா தப்பு இல்ல” என அவன் பாட,

“காக்கிச் சட்டைப் போட்ட மச்சான்

களவு செய்ய கன்னம் வச்சான்” என இவள் பாட, அவர்கள் வாழ்வும் கண்டிப்பாக மலர்ந்து மணம் பரப்பும். (இந்தக் கதைக்கு இதுக்கு மேல ரோமென்ஸ் எழுதனா, வலிய திணிச்சது போல இருக்கும்! சோ நோ கஜகஜா!!!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்)

பதினாறு வருடங்களுக்குப் பிறகு..

“அப்பா!”

“என்னடாம்மா?”

“இந்த யெல்லோ ஸ்கர்ட் நல்லா இருக்கா இல்ல, ப்ளூவா?” எனத் தன் தந்தை வீரமணிகண்டனிடம் கேட்டாள் உதயதாரா.

“யெல்லோ உனக்கு ரொம்ப அழகா இருக்கும்டா கண்ணு”

தன் பதினான்கு வயது அழகிய மகளுக்குப் புன்னகையுடன் உடையெடுக்க உதவினான் அந்த போலிஸ்காரன்.

அவன் மனைவி சஞ்சீவினியோ, அவர்களது ஆறு வயது மகன் பின்னால் ஓடிக் கொண்டிருந்தாள். ஓரிடத்தில் நிற்காமல் தன் அம்மாவுக்கு போக்குக் காட்டிக் கொண்டிருந்தான் அவர்கள் செல்வன் ஹரிகிருஷ்ணன்!

“மச்சான்! இவனோட முடியல எனக்கு! இப்போ நீங்க அவன் பின்னால ஓடுங்க! தாராவ நான் கவனிச்சிக்கிறேன்!” என மூச்சு வாங்க வந்து நின்ற மனைவியைச் சிரிப்புடன் பார்த்தான் வீரா.

“பகலெல்லாம் இவன் பின்னால ஓடி களைச்சுப் போய், நைட்டு கச்சேரிக்கு முன்னமே தூங்கிடற இப்போலாம்!” என மெல்லியக் குரலில் அவளை வம்பிழுத்தான் வீரா.

“ஹ்க்கும்! என்னமோ பாஞ்சு பாஞ்சு பர்பார்மென்ஸ் பண்ணிடற மாதிரி பில்டப்ப பாரு! வயசாச்சு இன்ஸு உனக்கு” என இவளும் முணுமுணுத்தாள்.

“யாருக்குடி வயசாச்சு! அடுத்த ஒன்பது மாசத்துல இன்னொரு ரிலிஸ் விடறேன் பார்க்கறியா” என அவன் சிலிர்த்துக் கொள்ள,

“பார்க்கலாம் பார்க்கலாம்” என இவள் புன்னகைத்தாள்.

“அம்மா” எனச் சின்னவன் கத்தி அழைக்க, ட்ரையல் அறையின் முன்னே மனைவியை விட்டு விட்டு, மகனைப் பார்க்கப் போனான் வீரா.

ட்ரையல் அறையில் பாவாடையை அணிந்த தாரா, அது கொஞ்சம் டைட்டாக இருக்க வெளியே அப்படியே வந்து,

“ம்மா! ஓன் சைஸ் பிகரா வேணும்மா” என்றாள்.

“இருடாம்மா! நான் பார்த்து எடுத்துட்டு வரேன்” என மகளை விட்டு விட்டுப் பாவாடையை எடுக்க நகர்ந்தாள் வினி.

தாராவின் பின்னே வந்த ஓர் உருவம், பட்டென அவளைப் பின்னிருந்து அணைத்து பின்புறத்தை அழுத்தித் தடவி விட்டு ஓடிப் போனது.

அதிர்ச்சியில்,

“அப்பா!” எனக் கத்தினாள் பெண்.

அவள் பதட்டமானக் குரலைக் கேட்டு, வினியும் வீராவும் ஓடி வர, தன்னைத் தானே அணைத்தபடி கண்கள் கலங்க நின்றிருந்தாள் சின்னவள்.

“என்னம்மா! என்னாச்சு?” எனப் பதறிப் போனார்கள் பெற்றவர்கள்.

எப்பொழுதும் தந்தையை நாடும் பெண், இந்த முறைத் தாயைக் கட்டிக் கொண்டாள். வினியின் காதில்,

“யாரோ பின்னால இருந்து கட்டிப் புடிச்சு தடவிட்டாட்டாங்கம்மா” என்றப் பெண்ணுக்கு அழுகைப் பொத்துக் கொண்டு வந்தது.

இவள் மகளை அணைத்துக் கொள்ள, தன் குழந்தையைத் தொட்டவனைக் கொல்லும் வெறியுடன் தேடினான் வீரா.

இவர்களின் தவிப்பை ஒளிந்துப் பார்த்துக் கொண்டிருந்த அந்த அழகன்(?),

“வரேன்டி தாரா! இதை நெனைச்சு, நெனைச்சு பயந்துட்டே வளருவியாம்! வளந்த பெண்ணானதும் அலேக்கா உன்னைத் தட்டித் தூக்குவேனாம்! உங்கப்பனையும் ஆத்தாவையும் கதற விடுவேனாம்!” என முணுமுணுத்தவன், விசிலடித்தபடியே கிளம்பிப் போனான்.

 

 

(தொடத் தொடத் தொடர்கதையாகும்!!!!!!!)

(வணக்கம் டியர்ஸ்! இதான் நான் சொன்ன எபிலாக்!!! மோஸ்ட்லி இந்த மாதிரி கதைகளுக்கு ஒரு முடிவ குடுக்க மாட்டாங்க! தொடரும் போலத்தான் முடிப்பாங்க! அதத்தான் நானும் செஞ்சிருக்கேன்.. இவன் யாரு இந்த புது அழகன்னு நீங்க யோசிக்கற கேப்ல நான் விடைப் பெற்றுக்கறேன் இந்தக் கதையில இருந்து. மோஸ்ட்லி இதுக்கு ரெண்டாம் பாகம்னு ஒன்னு நான் எழுத போறது இல்லன்னு நெனைக்கறேன்! பார்ப்போம்! கடவுள் சித்தம் எப்படின்னு! இது வரை என் கூட பயணிச்ச உங்கள் எல்லோருக்கும் எனது நன்றி! அடுத்த கதை கிண்டிலுக்கு எழுதனும். பார்ப்போம் டைம் அமையுதான்னு. சைட்டுக்கு கதை இனிமே செப்டம்பர் எண்ட்லதான் கொடுப்பேன்னு நெனைக்கறேன். அது வரைக்கும் என்னை மறந்திடாதீங்க! முடிஞ்சா இந்தக் கதைக்கு உங்க ரிவ்யூவ குடுங்க! கவின் பேர மென்சன் பண்ணாம குடுங்க 😊 நன்றி டியர்ஸ். பாய்!!! லவ் யூ ஆல்!!!!)