Thoda Thoda Thodarkathai–EPI 2

அத்தியாயம் 2

 

சீரியல் கில்லர்கள் பொதுவாகவே சிறு வயதில் கொடுமைகளை அனுபவித்தவர்களாக இருப்பார்கள். பாலியல் வன்முறை, மனதளவிலும் உடல் அளவிலும் துன்புறுத்தல், பெற்றவர்களின் கவனிப்பின்மை போன்றவற்றை கடந்து வந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் பார்க்க நம்மைப் போல மிக சாதாரண ஆட்களாகவும், பல சமயங்களில் கலகலப்பான சுபாவம் கொண்டவர்களாகவும் வலம் வருவார்கள்.

 

அடையாரில் அமைந்திருந்த அக்காவல் நிலையம் அந்த இரவு வேளையிலும் எப்பொழுதும் போல பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பைக் திருட்டு, வழிபறி, ஈவ் டீசிங், குடித்து விட்டு அடிதடி, வாகன விபத்து என அந்நேரத்திலும் பலர் புகாரளிக்க வந்திருந்தனர். காவலாளிகள் பலர் இருந்தும் வந்தவர்கள் எல்லோரையும் கவனிக்க முடியாத நிலை. அங்குப் போடப்பட்டிருந்த பெஞ்சுகளில் சிலர் தங்களது முறைக்காகக் காத்திருந்தனர்.

அங்கிருந்த தனியறை ஒன்றில், வீரமணிகண்டன், அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆஃப் போலிஸ், எனும் பெயர்ப்பலகை மேசையில் வீற்றிருந்தது.  நாற்காலியில் இருந்து எழுந்து நின்று கைகளை மேலே தூக்கி சோம்பல் முறித்த வீரா, மேசைக்கு மறுபுறம் நடந்துப் போய் படக்கென கீழே தலைக்குப்புறப் படுத்து விட்டான். பின் மெல்ல எழுந்து இரு கைகளையும் கீழே ஊன்றி, எண்ணிக் கொண்டே புஷ் அப் செய்ய ஆரம்பித்தான்.

“ஒன்னு, டூ, தீன், நலுகு, அன்ச்……….நூறு” என முடித்துக் கொண்டவன், கொஞ்சம் கூட மூச்சு வாங்காமல் எழுந்து நின்றுக் கொண்டான்.

“என்க்கவுன்டர் பண்ணலாம், பெரிய பெரிய கேசை சோல்வ் பண்ணலாம், ஸ்டாரா வாங்கிக் குத்திக்கலாம், கெத்தா திரியலாம், ஊரெல்லாம் சல்யூட் அடிக்கும், அப்படி நொப்படின்னு சின்னப் புள்ளையில இருந்தே மண்டைய நல்லா கழுவி, பாடாப்படுத்தி, நொய் நொய்ன்னு அட்வைஸ் பண்ணி, வேலையில சேரர வரைக்கும் மூச்சப் புடிச்சு வச்சிக்கிட்டு இருந்துட்டு, சேர்ந்த ரெண்டாவது மாசமே மண்டையைப் போட்டுட்ட கிழவா நீ! இப்போ மட்டும் நீ உசுரோட இருந்திருந்த, என் கிட்ட என்க்கவுண்ட்டர் ஆகப் போற மொதோ ஆளா நீதான் இருந்திருப்ப சீனியர் வீரமணிகண்டன் கெய்வா(கிழவா)!!!! மூச்சு முட்டிப் போற அளவுக்கு பேப்பர்வோர்க் குடுத்து சாகடிக்கறாங்கய்யா! எது செய்யனும்னாலும் மேலிடத்து அப்ரூவல் வேணும்! நான் நெனைச்சு வந்ததப் போல ஒன்னையும் புடுங்க முடியலை! போலிஸ் வேணான்னு மனசுக்குப் புடிச்ச மஞ்சக் குருவி கூட போடா ம(ஹேர் வருது இங்க)னு சொல்லிட்டா! கொடுமையா இருக்குய்யா தாத்தய்யா!” என செத்துப் போன தாத்தாவை நினைத்து வாய் விட்டேப் புலம்பியவன், விண்விண்ணென வலிக்கும் தலையை வலது கைக் கொண்டு அழுத்திக் கொண்டான்.

நடந்து அறைக்கு வெளியே வந்தவன்,

“ராகவன், எனக்கொரு டீ சொல்லுங்க! அப்படியே கோல்ட் ஃப்ளேக் ஒரு பாக்கேட் வாங்கிட்டு வாங்க!” என்றான்.

“சார், பணம்!!!” எனச் சொல்லியவறே தலையைச் சொரிந்தார் ராகவன், அந்த ஸ்டேசனின் ஏட்டு.

“நேத்து குடுத்ததுல பாக்கி இருக்குமேய்யா!”

“நேத்து இருந்ததுய்யா! ஆனா இன்னிக்கு இல்ல!”

“யோவ் மாமூல் மன்னா! வெளிய அடிக்கறது பத்தலன்னு இப்போ என் கிட்டயுமாயா? அப்படி என்னய்யா உனக்கு மட்டும் தலைக்கு மேல செலவு வருது?”

“சார்! ஒத்தப் பொண்டாட்டி சார் எனக்கு”

“ஓஹோ! ஊரெல்லாம் பத்து பொண்டாட்டியாய்யா வச்சிருக்கான்!”

“எவன் எத்தனை வச்சிருந்தா நமக்கென்ன சார்! எனக்கு ஒத்தைப் பொண்டாட்டிதான்! அடிக்கடி அவ மேல பாசம் பொத்துக்கும் சார்”

“சோ?”

“அப்படி பொத்துக்கும் போதுலாம் அவ பெத்துக்குவா சார்!”

“யோவ்!!!!”

இவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. கலகலத்து சிரித்தவன்,

“சந்தோஷமய்யா சந்தோஷம்!” என்றான்.

“என்னத்த சந்தோஷம்! நாலும் பையன் சார் எனக்கு! பொண்ணு வேணும்னு இன்னொரு ரிலிஸ் போன மாசம்தான் விட்டேன். அதுவும் ஆணா போச்சு! இப்போ அஞ்சுப் பசங்க! அஞ்சுப் பொண்ண பெத்தா அரசனும் ஆண்டியாவான்னு எவனோ போக்கத்தவன் சொல்லி வச்சிருக்கான். இப்போ பையனைப் பெத்தாதான் அப்பன்காரன் ஆண்டி ஆகனும் சார். அவனுங்க ஹேர் ஸ்டைலுக்கு என்ன செலவு ஆகுது தெரியுமா சார்! அதுவும் மாசா மாசம் தெண்டம் அழுவனும். சட்டையில இருந்து உள்ள போடற ஜட்டி வரைக்கும் ப்ரேண்டேட்டா வேணுமாம்! இதுல அப்பன் காசுலயே கேர்ள்ப்ரேண்டுக்கு பிட்சா பர்கர்னு வேற வாங்கிக் குடுக்கறானுங்க! அந்த பொண்ணுங்க போனுக்கும் என் காசுலயே ரீசார்ஜ் பண்ணி விடறானுங்க! நான் இன்னும் பட்டன் வச்சப் போனுதான் யூஸ் பண்ணறேன்! அவனுங்களுக்கு ஐபோன் கேக்குது! ஐ வாட்ச், ஏர்போட்ஸ்னு அதுக்கு தோதா லொட்டு லொசுக்கு வேற!” எனப் பெருமூச்செறிந்தார்.

“விரலுக்குத் தக்க வீங்கனும்யா யோவ்”

“எனக்கு ஒத்தப் பொண்டாட்டி சார்!”

“மறுபடியும் முதல்ல இருந்தா!!!”

“அவளுக்குப் பசங்க மேல பாசம் சார்! எனக்கு அவ மேல பாசம் சார்”

“சர்தான்! போய் நான் கேட்டத வாங்கிட்டு வாய்யா!” என்றவன் தேவையான அளவு மட்டும் பணத்தை எடுத்துக் கொடுத்தான்.

ராகவன் ஏமாற்றமாய் பார்க்க,

“எனக்கும் ஒத்தப் பொண்டாட்டி வருவாய்யா! எனக்கும் பொத்துக்கிட்டு பாசம் வரும், அவளுக்கும் வயித்துல வீக்கம் வரும், பசங்களுக்கு செலவும் வரும்! அதுக்கு இப்போதிலிருந்தே சேர்த்து வைக்கனும்ல! போ, போய் வாங்கிட்டு வாய்யா” என்றவன் யார்க்கிட்ட என்பதைப் போல மிதப்பாய் பார்த்தான்.

“க்கும்! பணக்கார வீட்டு பையன் பேசற பேச்சா இது! நம்மள மாதிரி உழைச்சிதான் சாப்பிடனும்னு தலையெழுத்தா என்ன?” என முனகியவாறே நடையைக் கட்டினார்.

மீண்டும் அறைக்குள் செல்லத் திரும்பியவனின் பார்வை பெஞ்சில் கண்ணைத் துடைத்தபடி அமர்ந்திருந்த ஒரு பெண்மணியின் மேல் நிலைத்தது.

“திலகா மேடம்! லேடிஸ ஏன் இவ்வளவு நேரம் காக்க வைக்கறீங்க? சீக்கிரம் என்னன்னு கேட்டு அனுப்பி விடுங்க” என அந்த ஸ்டேசன் ரைட்டர் திலகாவிடம் கட்டளையிட்டான் வீரமணிகண்டன்.

“இது மிஸ்ஸிங் கேஸ் சார்! ஏற்கனவே ரிப்போர்ட் பண்ணிருந்தாங்க. நம்ம இன்ஸ்பெக்டர் கவின் கேஸ் அது. அவர் எமெர்ஜென்சி லீவ்ல போய்ருக்காரு. நாளைக்கு வாங்கன்னு சொன்னாலும் கேக்காம இங்கயே அடமா உக்காந்துருக்காங்க சார்”

அவரைப் பற்றிதான் பேசுகிறார்கள் எனக் கண்டுக் கொண்ட அந்தப் பெண்மணி, வேகமாக எழுந்து அவர்கள் அருகே வந்தார்.

“சார், சார்! என் பொண்ணக் காணோம்னு கம்ப்ளேன் குடுத்து ரெண்டு நாளாச்சு சார்! வயசுப் பொண்ணு சார்! வயத்துல நெருப்பைக் கட்டிக்கிட்ட போல பொசுங்குது சார்! தயவு செஞ்சு கண்டுப்புடிச்சுக் குடுங்க சார்! ப்ளிஸ் சார், ப்ளிஸ்” எனக் கதறி விட்டார்.

“அழாதீங்கம்மா! உள்ள வாங்க! என்னன்னு பார்க்கறேன்” என்றவன் தனது அறைக்குள் நுழைந்தான்.

அவன் பின்னோடு இவரும் உள்ளே வந்தார்.

“உக்காருங்க”

கண்ணைத் துடைத்துக் கொண்டே, அவன் காட்டிய இருக்கையில் அமர்ந்தார் அந்தப் பெண். இவனது கண்ணசைவில் கேஸ் ஃபைலை எடுத்து வந்து தந்தார் திலகா. அதைப் புரட்டிப் பார்த்த வீரா,

“பொண்ணு பேரு கனிகா! முந்தா நாள் வேலைக்குப் போனவ இன்னும் வீட்டுக்கு வரல! சரியா?” எனக் கேட்டான்.

“ஆமா சார்! ஒத்தைப் புள்ள சார் எனக்கு! என் புருஷன் அவ பொறந்த பத்து மாசத்துல ஆக்சிடெண்டுல இறந்துட்டாரு. இவதான் என் உலகம்னு வாழ்ந்துட்டு இருக்கேன் சார்! என் சக்திக்கும் மீறி நல்ல படிப்பு, நல்ல உடுப்புன்னு கண்ணுக்குள்ள வச்சி வளத்தேன் சார்! காணோமே சார்! என் கண்மணிய காணோமே சார்!” என்றவருக்கு கண்ணீர் மாலை மாலையாக வழிந்தது.

“அழாதீங்கம்மா! என்னன்னு பார்க்கறேன்”

அதற்குள் ஏட்டு ராகவன் தேநீருடன் வந்திருந்தார். அந்தப் பெண்மணியை கண்களால் காட்டியவன், சிகரேட் பாக்கேட்டை மட்டும் எடுத்துக் கொண்டான்.

அவனது கண்ணசைவைப் புரிந்துக் கொண்ட ராகவன், தேநீர் கிளாசை அப்பெண்மணியின் பக்கம் வைத்தார்.

“குடிங்கம்மா!”

“இல்ல சார் வேணாம்!”

“அழறதுக்காச்சும் தெம்பு வேணாமா! குடிங்க!” என்றவர் தனது வேலையைப் பார்க்கப் போய் விட்டார்.

அவர் தேநீரைப் பருகும் வரை கேஸ் ஃபைலை அக்கு வேர் ஆணி வேராக அலசினான். இன்ஸ்பெக்டர் கவின் அந்தப் பெண் கனிகா வேலையிடத்தில் இருந்து, அக்கம் பக்க வீட்டினர், நண்பர்கள் குழாம் என எல்லாரையும் விசாரித்திருந்தான். யாருக்கும் அவள் போன இடம் தெரியவில்லை. எந்தத் தடையமும் இல்லாமல் மாயமாய் மறைந்திருந்தாள் கனிகா.

அவளது புகைப்படத்தை எடுத்து உற்றுப் பார்த்தான் வீரா. சிரித்த முகத்துடன் கருப்பாய் கலையாய் இருந்தாள் பெண்.

“ஏம்மா, உங்கப் பொண்ணுக்கு பாய்ப்ரேண்ட் யாராச்சும் இருக்காங்களா?” எனக் கேட்டான் வீரா.

ரிப்போர்ட்டில் அப்படி யாரும் இல்லையென இருந்தாலும், மீண்டும் தெளிவுப்படுத்திக் கொள்ள கேட்டான்.

“அந்த இன்ஸ்பெக்டர் மாதிரியே கேக்கறீங்களே சார்! என்னமோ என் பொண்ணு எவன் கூடவோ ஓடிப் போய்ட்ட மாதிரியே பேசனாரு அவரு. பெத்த மனசு எப்படி துடிக்கும்னு தெரிய மாட்டுது உங்களுக்கெல்லாம்!” என்றவர் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

“ஆணு பொண்ணுன்னு எல்லாரும் கலந்துப் பழகுவாங்க சார்! ஸ்பெஷலா யாரும் இல்லைன்னு நான் கேக்கறப்பலாம் சிரிச்சிட்டே சொல்லுவா! இப்போ என் பொண்ணு எங்க, எப்படி இருக்காளோ! நெஞ்சே வெடிக்குது சார்”

“சரிம்மா! நீங்க கெளம்புங்க! ஏற்கனவே தேவையான ஆக்‌ஷன் எடுத்துருக்காங்க! நான் இன்னும் எதாச்சும் செய்ய முடியுமான்னு பார்க்கறேன்!”

“சார், சார்! உங்களத்தான் மலை போல நம்பி இருக்கேன்! என் உசுர கண்டுப்புடிச்சு என் கிட்ட திருப்பிக் குடுத்துடுங்க சார்” எனக் கையெடுத்துக் கும்பிட்டார் அவர்.

“ராகவன்!!!”

“சார்!!” என ஓடி வந்தார் அவர்.

“இவங்கள ஆட்டோ புடிச்சு பத்திரமா அனுப்பிடுங்க!” என்றவன்,

“சீக்கிரமா உங்கள நாங்களே கூப்பிடறோம்மா” என அனுப்பி வைத்தான்.

அவர் கிளம்பியதும், இஸ்பெக்டர் கவினுக்கு போன் போட்டான் வீரா.

“சார்! சொல்லுங்க சார்”

“எமெர்ஜென்சி லீவ்னு சொன்னாங்க! என்ன விஷயம்?”

“எனக்கு மகன் பொறந்துருக்கான் சார். டீயூ டேட்டுக்கு ரெண்டு வாரம் முன்னமே பொறந்துட்டான் சார்! அதான் எமெர்ஜென்சி லீவ் போக வேண்டியதா போச்சு!”

“காங்கிராட்ஸ் கவின்” எனச் சொன்னவன்,

‘ஊருல உள்ளவனுக்கெல்லாம் கல்யாணம் ஆகுது, புள்ள பொறக்குது! எனக்கு இதெல்லாம் கனவாவே போய்டும் போல இருக்கே! அய்த்தான்னு கூப்பிட ஒரு அன்னக்கிளியும், அப்பான்னு கூப்பிட ஒரு அறந்தவாலும் அமையாமலே வாழ்க்கையை விட்டு அப்பீட்டாயிருவேனோ!’ என மனதிற்குள்ளேயே புலம்பிக் கொண்டான்.

“சார்! சார்” என மறுமுனை படபடக்கவும்தான் தன்னைத் தேற்றிக் கொண்டான் வீரா.

“நீங்க பார்த்துட்டு இருந்த கனிகான்னு ஒரு மிஸ்ஸிங் கேஸ் பத்தி கொஞ்சம் டீடேய்ல் கேக்கலாம்னு கூப்டேன் கவின்.”

“கேளுங்க சார்”

“போன் சிக்னல் ட்ரேக் பண்ணீங்களா?”

“க்ரைம் ப்ராஞ்ச் கிட்ட டீட்டேயில் குடுத்தேன் சார். ஆனா திருப்பி இன்பர்மேஷன் வாங்கறதுக்குள்ள சொந்த விஷயம் முன்ன வந்திடுச்சு! சாரி சார்”

“ஸ்கூட்டிய ட்ரேஸ் பண்ண முடிஞ்சதா?”

“இல்ல சார்! அதையும் ட்ரேஸ் பண்ண சொல்லிக் கேட்டிருக்கேன் சார்! அங்கிருந்தும் தகவல் வரல”

தினப்படி அதிக எண்ணிக்கையிலான கேஸ்கள் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன. இருக்கும் காவலாளிகளை வைத்து எத்தனை வழக்குகளைதான் முடிப்பார்கள் இவர்களும். க்ரைம் பிராஞ்சின் வேலைப் பளுவும் மிக அதிகம்தான். படத்தில் காட்டுவது போல அடுத்த நிமிடமே சிக்னலை ட்ரேஸ் செய்வது, வாகன எண்ணைக் கண்டுப்பிடித்து விடுவது எல்லாம் நிஜ வாழ்க்கையில் எதிர்ப்பார்க்க முடியுமா! இதனாலேயே பல வழக்குகள் காலதாமதமாகி பல இன்னல்களை ஏற்படுத்தி விடுகின்றன.

“சரி! ப்ரேண்ட்ஸ் சர்கிள் என்ன சொல்லுறாங்க?”

“சார் அந்தப் பொண்ணு எல்லார்கிட்டயும் கலகலன்னு பழகுமாம்! காணாப் போன தினத்தப்போ கூட அவளோட பெஸ்ட் ப்ரேண்ட்கு ஹாய் பாய் மேசேஜ் போட்டுருக்கா! வேலையிடத்திலும் எல்லார்க்கிட்டயும் நல்லாதான் பழகிருக்கா! பெண்டிங் வர்க் இருக்குன்னு அன்னிக்கு இருந்து முடிச்சுக் குடுத்துட்டு எட்டு மணிவாக்குல அவளோட ஸ்கூட்டர்ல கிளம்பிப் போயிருக்கா! அவளோட க்ளோக் இன் க்ளோக் அவுட்லாம் பக்காவா இருக்கு சார்! வேலையிடத்துல இருந்து வெளியானதுக்கு அப்புறம்தான் காணாப் போயிருக்கா!”

“உங்களுக்கு எதாச்சும் தோணுதா கவின்?”

“அவ பெஸ்டி சொன்னதுபடி பார்த்தா அவங்க அம்மா இவ மேல ரொம்ப பொசெசிவ் சார்! அவங்க தொல்லைப் பொறுக்காம சீக்ரெட்டா வச்சிருந்த பாய்ப்ரேண்ட் எவன் கூடவாச்சும் ஓடிப் போயிருக்கலாம்! இல்ல, யாராச்சும் கடத்திருக்கலாம்”

ஆள் கடத்தல் இரண்டு வகைப்படும். ஒன்றில் பணம் கேட்டு மிரட்டல் வரும். மற்றொன்று விபச்சாரம், உடல் உறுப்பு, பிச்சைத் தொழில், முன்பகை என பல வகை காரணங்களுக்காக கடத்தப்படுவது. கனிகாவின் விசயத்தில் மிரட்டல் ஏதும் வராமல் போக, இரண்டாவது காரணமாக இருக்கக் கூடும் என நம்பினான் வீரா. விருப்பத்தின் பேரில் வீட்டை விட்டுப் போயிருக்கக் கூடும் என இவனால் நம்ப முடியவில்லை. அப்படிப் போவது என்றால் சொந்தக்காலில் நிற்கத் தொடங்கியதுமே போயிருப்பாளே என அவனது உள்ளுணர்வு சொன்னது.

“நீங்க டெலிவரிக்கு அப்ளை பண்ண லீவ இப்போ எடுத்துக்கோங்க கவின். நான் இந்த கேச பார்த்துக்கறேன்!” என்றான் வீரமணிகண்டன்.

“சார்! நெஜமாவா? தேங்க்ஸ் சார்!” என மகிழ்ச்சியுடன் படபடத்தான் கவின்.

“வேற ஏதும் டீட்டேயில் வேணும்னா அப்புறம் காண்டாக்ட் பண்ணறேன் கவின். பாய்!”

ஆபிசில் அமர்ந்து பேப்பர்வொர்க் பார்ப்பதில் மக்கிப் போய் கொண்டிருக்கும் மூளையின் செல்களைத் தட்டி எழுப்பலாம் என முடிவெடுத்த வீரா அடுத்து என்ன செய்யலாம் எனத் திட்டமிடலானான்.    

க்ரைம் ப்ராஞ்சுக்கு போன் செய்து கவின் கேட்டிருந்த விஷயங்களைப் பெற்றுக் கொண்டவன், தாடையைத் தடவி யோசிக்க ஆரம்பித்தான்.

கனிகாவின் போன் கடைசியாக சிக்னல் காட்டிய இடம் அவள் வேலை செய்யும் இடத்தில் இருந்து பல கிலோமீட்டர் தூரத்தில் இருந்த ஒரு ஷாப்பிங் காம்ப்ளேக்ஸ் ஆகும். அவ்வளவு ஆள் நடமாட்டமிருக்கும் இடத்தில் இருந்து மாயமாய் மறைந்திருந்தாள் கனிகா.  

ட்ராபிக் டிபார்ட்மெண்டுக்கு தொடர்பு கொண்டு ஸ்கூட்டியைப் பற்றி விசாரிக்க, அவர்கள் இவனுக்குப் பயன்படக் கூடிய தகவலொன்றைத் தெரிவித்தார்கள்.

“சார்! அந்த ஸ்கூட்டி ஷாப்பிங் காம்ப்ளேக்ஸ் பார்க்கிங்லயே ரெண்டு நாளா நிக்குதாம். யாரும் வந்து எடுக்கலன்னு செக்குரிட்டி கம்ப்லேண்ட் பண்ணிருக்காங்க சார்”

நன்றி சொல்லிப் பட்டென எழுந்துக் கொண்டவன்,

“ராகவன்! ஜீப்ப எடுக்க சொல்லுங்க!” எனக் கட்டளையிட்டான்.

“சார், ட்ரைவர் வேற விஷயமா வெளிய போய்ருக்காரு! நான் எடுக்கவா?”

“ஓகே ராகவன்”

அரை மணி நேரத்தில் ஸ்கூட்டி நிறுத்தப்பட்டிருந்த ஷாப்பிங் காம்ப்ளேக்சை அடைந்தார்கள் இவர்கள். பார்க்கிங் இடத்தை சுற்றி வந்த வீரா, மறைவாக வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவைக் கண்டுக் கொண்டான். உடனே காம்ப்ளேக்ஸ் மேனேஜ்மெண்டுடன் பேசி, அவர்கள் அறையிலேயே அமர்ந்து சம்பவம் நடந்த தினத்தின் ஒளிப்பதிவை பார்வையிடத் தொடங்கினான். கனிகா வேலை முடித்து அங்கு வந்திருக்கக் கூடிய நேரத்தைக் கணக்கிட்டு, பார்வர்ட் செய்து பார்க்க ஆரம்பித்தான் இவன்.

ஒளிப்பதிவான காட்சிகள் அவ்வளவு தெளிவாக இருக்கவில்லை. கனிகா ஸ்கூட்டியைப் பார்க் செய்ய, கார் ஒன்று அவள் அருகே வந்து நின்றது. இவளும் அதன் உள்ளே ஏறி அமர்ந்துக் கொண்டாள். கண்காணிப்பு காமிராவை தாண்டும் போது உள்ளிருந்த கருப்புக் கண்ணாடி போட்டிருந்த ஆண் ஒருவன், தன் பக்கக் கார் ஜன்னலை லேசாக இறக்கி இரு விரலால் காமிராவைப் பார்த்து சல்யூட் வைத்தான். அதைப் அப்படியே ப்ரீஸ் செய்துப் பார்த்தான் வீரா.

மீசைத் தாடியுடன் இருந்தான் அவன். பாதி முகத்தை மறைப்பது போல கண்களில் கூலர்ஸ் இருக்க, முக வடிவமே தெரியவில்லை.

“பொறுக்கி நாய்! திமிரப் பாரேன்! எழவெடுத்ததுங்க! அவளும் விருப்பத்தோடதான் போயிருக்கா! போனதுதான் போனாங்களே, ஒரு லெட்டரோ, மேசேஜோ, இப்படி இப்படி நான் ஓடிப்போய்ட்டேன்னு போட்டுட்டு போயிருக்கலாம்ல! இப்ப இவ அம்மா வந்து நம்ம தாலிய அறுக்கறாங்க! போலிஸ்லாம் சும்மா காலாட்டிட்டு உட்கார்ந்துருக்காங்கன்னு நெனப்புப் போல!” எனப் பொறுமியவன் அந்த ஒளிப்பதிவின் நகலை வாங்கிக் கொண்டு வெளியே வந்தான்.

“என் டைம வேஸ்ட் பண்றாங்க ராகவன். வீட்டுக்குப் போயிருந்தா இந்நேரம் என் கானாங்குருவிக் கூட கனவுலயாச்சும் கானாப் பாட்டுப் பாடிருப்பேன்! சைக்”

“சார், சார்!”

“என்ன?”

“முன்ன வாங்கிக் குடுத்த டீ கூட நீங்க குடிக்கல சார்”

“ஓஹோ! பக்கத்து இலைக்குப் பாயாசம்!!!! சரி வந்து தொலைங்க, வாங்கித் தரேன்”

இருவரும் அதே வளாகத்தில் இருந்த கபே ஒன்றுக்குள் நுழைந்தார்கள். இவன் காக்கி பேண்ட், வெள்ளை டீ ஷர்ட்டில் இருக்க, ராகவனோ காக்கி பேண்ட் கருப்பு டீஷர்டில் இருந்தார். காபியும் கேக்கும் வாங்கியபடி ஓர் ஓரமாக அமர்ந்தவன், அப்பொழுதுதான் அவளைக் கவனித்தான்.

இன்னொரு மேசையில் ஒருவனோடு சிரித்து, சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள் பெண்.

“சஞ்சீவினி!”

அவள் பெயர் அரைப்பட்டது அவன் வாயில். போய் தொலைகிறாள் என நினைத்தாலும் கண்கள் அவளையே சுற்றி வந்தது. புலன்கள் எல்லாம் அவளையே மொய்த்தது.

அவள் முன்னே அமர்ந்திருந்தவன் அழகாய் இருந்தான். டிப்டாப்பாக தெரிந்தான். ஆங்கிலம் அவன் நாக்கில் புகுந்து விளையாடியது.

“யாரு சார் அது? மிஸ் ஆன மிஸ்ஸஸா?”

“வாங்கிக் குடுத்துட்டேன்ல! குடிக்கற வேலையை மட்டும் பாருங்க” என்றவனின் குரலில் கடுப்புக் கொட்டிக் கிடந்தது.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவன், தனது சூடான காபியைக் கையில் எடுத்துக் கொண்டு அவர்கள் அருகேப் போனான். அருகில் நெருங்கியதும் தடுமாறுவது போல மொத்தக் காபியையும் ஆணவன் மேலே கொட்டி வைத்தான்.

பதறியடித்து எழுந்த அழகன்,

“ஏ யூ! ப்ளடி ஃபூல்! கண்ண எங்க முதுகுலயா வச்சிருக்க?” எனக் கத்த ஆரம்பித்தான்.

“உக்காருங்க லோகேஷ்! இவர் கண்ண முதுகுலயும், கன்ன இடுப்புலயும் வச்சிருப்பாரு! எதுக்கு தேவையில்லாம இவங்க கிட்டலாம் பிரச்சனை. இந்தாங்க டிஷூ! துடைச்சுப் போட்டுட்டு போகலாம் வாங்க”

“ஆமா சார், துடைச்சுப் போட்டுட்டுப் போங்க! எப்படின்னு தெரியலன்னா, தோ நிக்கறாங்களே, அவங்க கிட்ட கேளுங்க! அழகா சொல்லிக் குடுப்பாங்க! துடைச்சிப் போட்டுட்டுப் போறதுல இவங்க எக்ஸ்பெர்ட்” என நக்கலடித்தான் வீரா.

“ஆமா எக்ஸ்பெர்ட்தான்! இப்போ அதுக்கென்ன? அதான் வேணாம்னு தூக்கிப் போட்டாச்சுல்ல! அப்புறம் இங்கென்ன பேச்சு வேண்டிக் கிடக்குன்னு கேளுங்க லோகேஷ்!”

“தோ பாரு லோகேஷூ! ஏற்கனவே சூப் வாங்கனவன் சொல்றேன் கேட்டுக்கோ! இந்த மேடமே கழட்டி விடறதுக்குள்ள, நீயாவே கழண்டுக்க! இல்லைனா நைட்டெல்லாம் உன்னத் தூங்க விடாம பேய் மாதிரி கனவுல வருவா, பகலெல்லாம் உன்னைத் திங்கக் கூடா விடாம பிசாசு மாதிரி கழுத்தைப் புடிச்சிட்டு நிப்பா! தோள் மேல உக்காந்துட்டு மோகினியாட்டம் வேற எந்தப் பொண்ணையும் சைட்டடிக்க கூட விடாம டார்ச்சர் பண்ணுவா! சூதனமா இருந்தா தப்பிச்சிடலாம்! புரியுதா?”

முகத்தைத் திருப்பிக் கொண்ட வினி, இரு ஆண்களையும் கண்டுக் கொள்ளாமல் தனது கைப்பையை எடுத்துக் கொண்டுக் கிளம்ப ஆயத்தமானாள். வீராவைக் கடந்துப் போக எத்தனிக்கையில்,

“ரொம்ப இளைச்சிட்டடி! நான் ரசிச்ச பழம் ரெண்டும் ஒட்டிப் போய் கிடக்கு! கொஞ்சம் நல்லாதான் சாப்பிடேன்” என முணுமுணுத்தான்.

“போடா பொறுக்கி!”

“ஓஹோ! தப்பா புரிஞ்சுக்கிட்டியா! ஆப்பிள் பழம் போன்ற கன்னம் ரெண்டும் ஒட்டிப் போச்சுன்னு சொன்னேன்! என்னைக்குத்தான் என்னை சரியா புரிஞ்சிருக்க நீ! டேர்ட்டி மைண்டட் பேபி!”

“கெட் லாஸ்ட்!” என முணுமுணுத்தவள் விடுவிடுவென நடந்துப் போய் விட்டாள்.

விழித்தபடி நின்ற லோகேஷைப் பார்த்த வீரா,

“உன்னைத்தான் கெட் லாஸ்ட் சொல்றா! போ போ!” எனச் சொல்லிவிட்டு தனக்கு இன்னொரு காபி ஆர்டர் செய்துக் கொண்டான்.

அன்றிலிருந்து ஐந்தாவது நாளில், ஜன சந்தடி நிறைந்த தி.நகரின் ஒரு குறுக்கு சாலையில் தனது காரில் காத்திருந்தான் ஒருவன். பெண்ணவள் அவனைத் தேடி வந்து காரில் அமர, போன் ஜாம்மரை(ஜாம்மர் என்பது ஒரு வகை டிவைஸ். இது இருக்கும் போது நமது மோபைலில் சிக்னல் கிடைக்காது! மற்றவர்களாலும் நம்மை தொடர்புக் கொள்ள முடியாது! நம்மாலும் மற்றவர்களைத் தொடர்புக் கொள்ள முடியாது) ஆன் செய்தான் இவன். இனி அவளது போனை எடுத்து இவன் ஆஃப் செய்து போடும் வரை அவளது செல்போன் வேலை செய்யாது.

“ஹாய்!” என இவன் வசீகரமாய் புன்னகைக்க,

“ஹாய்!” எனச் சொல்லி மெலிதாய் புன்னகைத்தாள் பெண்ணவள்.

சிலந்தியின் வலையில் சிக்கியது இன்னொரு சில்வண்டு!

(தொடுவான்….)

(வணக்கம் டியர்ஸ்..போன எபிக்கு லைக், கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி. இனி அடுத்த எபியில் சந்திக்கலாம். லவ் யூ ஆல் 😊 )