Thoda Thoda Thodarkathai–EPI 3

280654150_1081598149094185_3262610077133346742_n-ac1f2304

அத்தியாயம் 3

தொடர் கொலைகள் செய்பவர்கள் உடலுறவுக்காகதான் உந்தப்படுகிறார்கள் என்பது முழுக்க உண்வையில்லை. கோபம், த்ரில், பொருளாதார ஆதாயம், பகை, பிறர் கவனத்தை ஈர்ப்பது ஆகியவற்றுக்காகக் கூட தொடர் கொலை செய்கிறார்கள். சில சமயம் இப்படிப்பட்ட கொலைகளுக்கு காரணம்/ மோடிஃப் கூட இல்லாமல் போவதுண்டு.  

 

அன்றைய பொன்மாலைப் பொழுதில், சென்னையின் மிகப் பிரபலமான ஹோட்டலின் பால்ரூம் ஒன்று, மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பால்ரூமின் வெளியே வண்ணக் காகிதங்களால் ‘ஹேப்பி பேர்த்டே அஜய்தேவ்’ என அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன் பக்கத்திலேயே குட்டியைத் தூக்கிக் கொண்டு விஷ்ணு நிற்க, அவனை அணைத்தபடி அவன் மனைவி ஹஸ்வினி நிற்கும் ஆளுயர ப்ளெக்ஸ் பேனர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  பால்ரூமின் கதவைச் சுற்றி வண்ண பலூன்கள் கவிழ்த்துப் போட்ட ‘யூ’ ஷேப்பில் தொங்கிக் கொண்டிருந்தது.

காரை அதன் தரிப்பிடத்தில் நிறுத்திப் பூட்டிவிட்டு, கைப்பையை எடுத்துக் கொண்டு பேஸ்மெண்ட் லிப்டில் நுழைத்தாள் சஞ்சீவினி. அவளோடு இன்னொரு ஆணும் உள்ளே நுழைய, இவள் சம்பிரதாயமாகப் புன்னகைத்தாள். அவனும் பதில் புன்னகைத் தந்துவிட்டு, கைத்தொலைபேசியில் கவனத்தைத் திருப்பினான். சுற்றிக் கண்ணாடி இருக்க, இவள் தனது அலங்காரம் சரியாக இருக்கிறதா எனப் பார்வையிட ஆரம்பித்தாள். அவள் அணிந்திருந்த காக்டெயில் ட்ரெஸ், கையில்லாமல், கால் முட்டி வரை இருந்தது. சாம்பல் வர்ணத்தில் அழகாய் சிவப்புப் பூக்கள் எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருந்த உடையில் இவளும் பூப்போலவே மென்மையாய், நளினமாய் இருந்தாள். ஆளை அடிக்கும் சிவப்பு நிறத்தில் போட்டிருந்த உதட்டுச் சாயம் கொஞ்சமாய் காணாமல் போயிருக்க, நிமிர்ந்து கொஞ்சம் தள்ளி நின்றவனைப் பார்த்தாள். அவன் தன் போனில் கவனமாக இருக்க, கைப்பையில் இருந்து லிப்ஸ்டிக்கை எடுத்து உதட்டுக்கு டச் அப் கொடுத்தாள் வினி. பின் உதட்டைக் குமித்து, சுழித்து சரியாகப் போட்டிருக்கிறோமா எனப் பார்த்தவள், திருப்தியுடன் புன்னகைத்துக் கொண்டாள்.

டிங் என லிப்ட் சத்தம் போட்டு இறங்க வேண்டிய தளம் வந்துவிட்டது என அறிவித்தது. இவள் அவனைத் தாண்டி வெளியேற,

“கிஸ்ஸபில் கியூட் லிப்ஸ்!” என அவளுக்குக் கேட்கும்படி முணுமுணுத்தான் அவன்.

“வாட்!!!” என கோபத்துடன் இவள் திரும்ப, லிப்ட் கதவு படக்கென மூடிக் கொண்டது.

“பெர்வெர்ட்(பொறுக்கி)!” என அவனைத் திட்டியபடியே தன் செல்லக் குட்டியின் பிறந்தநாள் நடைபெறும் பால்ரூமைத் தேடிப் போனாள் வினி.

கதவைத் திறந்து உள்ளே நுழைய, ஜில்லென முகத்தில் அடித்த ஏசி காற்று பெண்ணவளை ஆசுவாசப்படுத்தியது. உணவு, பூக்கள், வந்திருந்தவர்களின் வாசனைத் திரவியம், புது உடையின் மணம் என அவ்விடமே மணமணத்தது. நீண்ட மூச்சை இழுத்துத் தன்னை ஒரு நிலைப்படுத்தியவள்,

“சமாளிப்போம்! முடியலைனா தலைவலின்னு கெளம்பிடுவோம்!” எனத் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

பால்ரூமில் மேடைப் போல அமைக்கப்பட்டிருந்த இடத்தில் இரண்டு அடுக்கு கேக் வீற்றிருக்க, வினியின் மொத்தக் குடும்பமும் அங்குதான் நின்றிருந்தார்கள். அவர்களை நோக்கி இவள் நகர, அதற்குள் அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் என பலர் வந்து குசலம் விசாரித்தார்கள் இவளை. அனைவருக்கும் இன்முகமாகவே பதிலளித்தபடி முன்னேறினாள் சஞ்சீவினி.

இவளைப் பார்த்ததும் இந்திராணியின் முகம் மலர்ந்துப் போனது. அவளது அப்பா ஜெய்தேவின் முகமும் சட்டென்று மலர்ந்துப் பின் இறுகிப் போனது. கவிதாவோ, பிண்ணனியில் நின்றிருந்தாலும், இவளைப் பார்த்ததும் அவர் முகம் ஸ்வீட்ச் போட்டது போல ஒளிர்ந்தது. ரத்த பந்தம் உள்ள தமக்கை ஹஸ்வினியோ, வினியைப் பார்த்ததும் மறைக்காமல் பார்வையால் வெறுப்பை உமிழ்ந்தாள்.

‘கண்ணு ரெண்டையும் காக்காய்க்குப் பிச்சிப் போடனும்! மூஞ்சும் முகரையும்’ என தன் அக்காவை மனதுக்குள் திட்டியபடியே அவர்களை நெருங்கினாள் சஞ்சீவினி.

கோட்டும் சூட்டும் போட்டிருந்த குட்டி தேவ், தனது தந்தை விஷ்ணுவின் பிடியில் இருந்துத் திமிறிக் கொண்டு இவளிடம் ஓடி வந்தான்.

“தித்தி! தித்தி” என இவள் காலைக் கட்டிக் கொண்டவனை கைகளில் அள்ளிக் கொண்டாள் வினி.

“என் செல்ல புஜ்ஜி! கண்ணுக்குட்டி! அமுல் பேபி! ஸ்வீட் கப்கேக்! ஹேப்பி ஹேப்பி பேர்த்டே மை டார்லிங்!” என்றவள் அவனது கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு, உதட்டிலும் லேசாய் ஒற்றி எடுத்தாள்.

“தித்தி நோ கிஸ்! மீ பிக் பாய்” எனச் சிணுங்கியவனை மீண்டும் ஒரு முறை முத்தமிட்டவள், கீழே இறக்கி விட்டாள்.

இவள் இறக்கிய மறுநொடி, இவள் பின்னாடியே வந்திருந்த வீரா தூக்கிக் கொண்டான் சின்னவனை.

“என் செல்லக் கண்ணு! புஜ்ஜிக்குட்டி! அமுல் சைஸ்கிரீம்! கப்ல வைக்காத ஸ்வீட் கேக்! ஹேப்பி ஹேப்பி பொறந்தடே மை டியரு!” எனச் சொல்லி இவள் முத்தமிட்டு லிப்ஸ்டிக்கை ஒட்டி வைத்திருந்த சின்னவனின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான் திருட்டு இன்ஸ்பெக்டர்.

மீசை முடிக் குத்திவிட, ஓவென ஓலமிட்ட குட்டி தேவ்வை வீராவிடமிருந்து வலுக்கட்டாயமாகத் தூக்கிக் கொண்டான் விஷ்ணு!

“நீங்க ரெண்டு பேரும் ரொமான்ஸ் பண்ணி விளையாட என் மவன்தான் பலிகடாவா! வாடா கண்ணா” என மகனை கேக் அருகே தூக்கிச் செல்ல முயல, விஷ்ணுவின் கைப்பிடித்து நிறுத்தினான் வீரா.

“நில்லு சகல! என் ஆளு போட்ட மார்க்க இந்தக் கையால நானே தொடச்சி விடறேன்!“ என்றவன், தனது கைக்குட்டையால் சின்னவன் கன்னத்தில் இருந்த லிப்ஸ்டிக் கறையைத்  துடைத்து விட்டான்.

முறைத்தபடி நின்றிருந்த வினியை,

“கிஸ்ஸுக்குக் கூட மிடிள் பெர்சன் வச்சது நாம ரெண்டு பேராதான் இருப்போம்! ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்வீட் கிஸ்” என வம்பிழுத்தான் வீரா.

“ஷட் அப்!”

“வினி! இந்த குட்டி ட்ரெஸ்ல நீ கும்தலக்கடி கும்மாவ இருக்கத் தெரியுமா?”

பல்லைக் கடித்தவள்,

“ஒரு போலிஸ் போலவா பேசற நீ?” எனத் திட்டினாள்.

“உன் கிட்ட ரொம்ப டீசண்டா பேசறேன்! ஸ்டேசன்ல இன்னும் காவியமா கவித்துவமா பேசுவேன்!“

“வாட் எவர்!” எனச் சிலிப்பியவள், தனது அம்மாவின் அருகே போய் நின்றுக் கொண்டாள்.

“என்னடி! இன்னிக்காச்சும் கொஞ்சம் க்ராண்டா சாரி உடுத்தி, டைமண்ட் செட் போட்டுட்டு வந்திருக்கக் கூடாதா?” எனச் சின்னக் குரலில் மகளைக் கடிந்துக் கொண்டார் இந்திராணி.

“ஆமாம்மா! நான் எது உடுத்தனாலும் குத்தம், எது பேசுனாலும் குத்தம், எது செஞ்சாலும் குத்தம்! நான் போறேன்மா!” என முறுக்கிக் கொண்டவளைக் கைப்பிடித்து நிறுத்தினார் அவர்.

“சரி! சரி! ஒன்னும் சொல்லல நான்! ப்ளிஸ்டி போய்டாதே!” என இறங்கி வந்தார் இந்திராணி.

ஜெய்தேவோ வீராவை வாஞ்சையாக அணைத்துக் கொண்டார்.

“அம்மா, அப்பா வரலியா மாப்பிள்ளை?”

“ஐயோ மாமா! ப்ளிஸ்! வீரான்னே கூப்புடுங்க! மாப்பிள்ளைன்னு கூப்டிங்கன்னா வேற வீட்டுல போய் தங்கிருக்கறவ, வேற நாட்டுக்குப் போயிடப் போறா!” என்றவனின் குரலில் வலி நிறைந்திருந்தது.

“தங்கம் எது தகரம் எதுன்னு புரிஞ்சிக்காம இருக்காளே இவ. நல்லா பட்டாத்தான் புத்தி வரும் வீரா” என மகளைப் பார்த்தப்படியே வருத்தமாக முடித்தார் ஜெய்தேவ்.

“என்ன மாமா நீங்க! சாபம் குடுக்கற மாதிரி பேசறீங்க! நிச்சயதார்த்தம் முடிச்சப் பின்ன கல்யாணம் வேணாம்னு அவளே நிறுத்திட்டாலும், எப்பவும் அவள நான் வெறுத்தது இல்ல. இப்படிலாம் சொல்லாதீங்க மாமா” என்றவன்,

“அம்மாவும் அப்பாவும் கல்யாணம் ஒன்னு அட்டேண்ட் பண்ண போயிருக்காங்க! அதான் நான் மட்டும் இங்க வந்தேன்” என அவர் கேட்டக் கேள்விக்கு பதிலையும் சொன்னான்.

இவருக்கு நன்றாகவேப் புரிந்தது. திருமண ஏற்பாடு நின்றுப் போனதில் அவர்களுக்கு இன்னும் மனத்தாங்கல் இருந்தது. பொதுவாக சந்திக்கும் போது ஹாய், பாய் எனப் பேசிக் கொண்டாலும், முன்பிருந்த அந்நியோன்யம் விட்டுப் போயிருந்தது.

“மாமா! கேக் வெட்டலாம் மாமா” என வந்து நின்றான் விஷ்ணு.

இந்த நிகழ்வுக்கென நியமித்திருந்த பிரபல தொலைக்காட்சி டீ.ஜேவைப் பார்த்து ஜெய்தேவ் சிக்னல் செய்ய, அவன் பாடல்களை நிறுத்த சொல்லி கைக்காட்டினான்.

“வணக்கம், வந்தனம்! நம் குட்டிச் செல்லம், இனிப்பான வெல்லம் அஜய்தேவின் பிறந்தநாளைச் சிறப்பிக்க வந்திருக்கும் உங்களை திரு ஜெய்தேவின் சார்பில் வருக வருக என வரவேற்கிறோம்! இப்பொழுது கேக் வெட்டும் நிகழ்வு நடக்கப் போகிறது. எல்லோரும் கைத்தட்டி, பிறந்தநாள் பாடல் பாடி நமது அஜய்தேவ் சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துவோம் வாருங்கள்” என ஆங்கிலத்திலும் தமிழிலும் அறிவிப்பு செய்தான்.

பிண்ணனியில் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் ஒலிக்க, எல்லோரும் ஒன்றாய் சேர்ந்துப் பாடினார்கள். மேடையில் தன் தந்தை தாயின் அணைப்பில் நின்றிருந்த குட்டி தேவ், மெழுகுவர்த்தியை ஊதி அணைத்து கேக்கை வெட்டினான்.

இசை படபடவென முழங்க, ஜிகினா காகிதங்கள் மேலிருந்து கொட்ட, மேடையில் இரு புறமும் பல வண்ண பலூன்கள் பறக்க விடப்பட பிறந்த நாள் விழா கோலாகலமாக ஆரம்பமானது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறுவர்கள் ஓடிப் போய் பலூனைப் பிடிக்க, பெரியவர்கள் அவர்கள் பின்னே ஓட என ஒரே ஆரவாரமாக இருந்தது அவ்விடம்.

அதன் பின்னே பாடல்கள் ஒலிக்க, பஃபே முறையில் வைக்கப்பட்டிருந்த உணவு வகைகள் திறந்து வைக்கப்பட்டன.

கவிதா கேக்கை சின்னத் துண்டங்களாக வெட்டி ஒவ்வொரு மேசைக்கும் விநியோகிக்க, தனது பங்கு கேக்கை மேடையில் அவனுக்காகப் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தான் அஜய்தேவ். ஹஸ்வினி மகன் அருகே அமர்ந்து கிரீம் ஒட்டியக் கன்னத்தையும் வாயையும் துடைத்து விட்டப்படி இருக்க, அவர்கள் அருகேப் போனாள் வினி. தனது கைப்பையைத் திறந்து, மொத்தமான தங்கச் சங்கிலி ஒன்றை எடுத்தவள், குட்டியின் கழுத்தில் போட்டுவிட்டாள்.

முகத்தைத் திருப்பிக் கொண்ட ஹஸ்வினி,

“கடைத் தேங்காய எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைச்சாங்களாம்” என மெல்லியக் குரலில் நக்கலடித்தாள்.

சின்னவளுக்கு பொசுபொசுவென கோபம் ஏறியது.

“என்னவாம்!!!”

“என் புருஷன் கிட்டயே சம்பளம் வாங்கி, அதுல என் புள்ளைக்கு செய்யறியான்னு கேட்டேன்”

“உன் புருஷன் கம்பேனிதான்! இப்போ யாரு இல்லைன்னு சொன்னா! ஆனா வச்சுக் குடுத்தது எங்கப்பா! லிட்டரெலி எங்கப்பா கிட்ட சம்பளம் வாங்கறேன்னு வேணும்னா சொல்லு!” எனப் பொரிந்துக் கொட்டினாள் வினி.

“இந்த திமிர் பிடிச்சவள வேலைக்கு எடுக்காதீங்கன்னு தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன். கேட்டாரா இவரு! இப்போ தீட்டன மரத்துலயே கூர் பாக்கறா! நன்றி கெட்டவ”

“எங்க வந்துடி சண்டைப் புடிக்கறீங்க! வந்திருக்கவங்க கண்ணெல்லாம் நம்ம மேலதான் இருக்கும்னு கொஞ்சம் கூட யோசிக்கறது இல்லையா?” என முகத்தை மலர்ச்சியாக வைத்துக் கொண்டு, தான் பெற்ற பெண்கள் இருவரையும் கடிந்துக் கொண்டார் இந்திராணி.

“அத அவ கிட்ட சொல்லுங்க” என இரண்டு பேரும் கோரஸாக சொன்னார்கள்.

“இங்க என்ன பிரச்சனை?” என வந்து நின்றார் ஜெய்தேவ்.

“புள்ளைங்கள பெக்காம கீரியையும் பாம்பையும் பெத்து வச்சிருக்கோம்” என வருத்தமாகச் சொன்னார் இந்திராணி.

“அவதான்மா பாம்பு!” எனச் சொன்னாள் ஹஸ்வினி.

“நான் பாம்பாவே இருந்துட்டுப் போறேன்! உன்னைப் போல எல்லாருக்கும் சொம்புத் தூக்கறதுக்கு பதில் விஷப்பாம்பாவே இருந்துட்டுப் போறேன்!”

வாய்ப்பேச்சுத் தமக்கையிடம் இருந்தாலும், முறைப்பெல்லாம் தந்தையின் பால் இருந்தது.

“வந்தமா, சாப்பிட்டம்மா, கெளம்பிப் போனமான்னு இரு! தேவையில்லாம வார்த்தைகள விட வேணாம்!” என இரண்டாவது மகளை நோக்கி சொன்ன ஜெய்தேவ்,

“நீ வந்து சாப்பிடுமா! மருந்து போட டைமாச்சு” என மனைவியைக் கையோடு அழைத்துச் சென்றார்.

“நீ வாடா மகனே! நாமளும் சாப்பிடப் போவோம்! யூ ஆர் தெ பெஸ்ட் மாமான்னு சொல்லிட்டு, சைக்கிள் கேப்ல அவங்க அப்பாவுக்கு வேலைக்காரன்னு சொல்லிக் காட்டுற தித்திலாம் நமக்கு வேணாம்டா!” என்றபடி மகனைத் தூக்கிக் கொண்ட விஷ்ணு,

“ஹனி! சாப்பிட வா!” என மனைவியையும் அழைத்துச் சென்று விட்டான்.

தன்னந்தனியே விடப்பட்ட வினிக்கு கண்கள் கலங்கும் போல இருந்தது.

“போங்களேன்! எனக்கு யாரும் வேணா!” என முணுமுணுத்தவள் கிளம்பிக் போக நினைத்தாள். ஆனால் பகல் உணவு சாப்பிடாமல், க்ளையண்ட் மீட்டிங் ஒன்றில் மாட்டி இருந்தவளுக்குப் பசித்துத் தொலைத்தது. 

“நோ டென்ஷன் நோ பிபி, தட்டுல சோத்தப் போட்டு எடுப்போம் செல்பி! நோ டென்ஷன் நோ பிபி, எடுத்த செல்பிய வைப்போம் டி.பி” என முணுமுணுத்துக் கொண்டே மேடையில் இருந்து இறங்கி உணவு இருக்கும் இடத்தை நோக்கி நடந்தாள்.

பட்டென அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய், சாப்பிடும் மேசையில் அமர வைத்தான் வீரா.

“வாட் தே ஹெல்!” என இவள் கடுப்படிக்க,

“சாப்பிடு! பசிக் களைப்பு ரெண்டு கோட் பவுடரையும் மீறி முகத்துல தெரியுது!” என மேசை மேல் இவளுக்காக எடுத்து வைத்திருந்த உணவைக் காட்டினான் வீரா.

“எனக்கே எடுத்து சாப்பிடத் தெரியும்” எனப் படபடத்தாள் இவள்.

“இப்ப இத நீ சாப்பிடலன்னா, வேஸ்ட் பின்னுக்குதான் போகும்! எனக்குத் தெரிஞ்ச சஞ்சீவினி சாப்பாட்ட வீணடிக்க மாட்டாளே”

வாய்க்குள் அவனைத் திட்டினாலும், அவன் எடுத்து வைத்திருந்த இவளுக்குப் பிடித்த உணவு வகைகளைச் சாப்பிட ஆரம்பித்தாள் வினி. இவனும் அவள் பக்கத்தில் அமர்ந்துதான் உணவருந்தினான்.

“கல்யாணம் நின்னுடுச்சுன்னு சொன்னாங்க! ஒன்னா உக்காந்து சாப்பிடறாங்க!”

“இந்தக் காலத்துப் புள்ளைங்கள புரிஞ்சுக்கவே முடியல”

இப்படி பல விமர்சனங்கள் இவர்களை நோக்கி வீசப்பட்டாலும், இருவரும் எதையும் கண்டுக் கொள்ளாமல் சாப்பிடும் வேலையை மட்டும் பார்த்தார்கள். அவளது தட்டில் குறைவதை, தனது தட்டில் இருந்து எடுத்து வைத்தான் இவன். ப்ரூட் சாலட்டில் இருந்த இவளுக்குப் பிடிக்காத அன்னாசி துண்டுகளை அவனது தட்டுக்கு மாற்றினாள் இவள்.  இருவரும் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை. தன்னிச்சையாக நடந்தது அது. அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்த இவர்கள் இருவரையும் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார் ஜெய்தேவ்.

உணவை முடித்துக் கொண்டவள், கிளம்புவதற்குள் கோபித்துக் கொண்ட விஷ்ணுவிடம் மன்னிப்பு கேட்டு விட வேண்டும் என நினைத்தாள். சுற்றும் முற்றும் அவனைத் தேடியவள், அவன் போன் பேசியபடியே பால்ரூமை விட்டு வெளியேற, இவளும் அவனைப் பின் தொடர்ந்தாள். அவனது அப்பாவின் பால்ய சிநேகிதர் ஒருவர் இவனை நிறுத்தி வைத்துப் பேச, வீராவால் முகத்தை முறித்துக் கொண்டு வினியைப் பின்தொடர முடியவில்லை.

 பால்ரூமின் இன்னொரு பக்கம் ரெஸ்ட்ரூம் போகும் வழிக்குப் பக்கத்தில் கொஞ்சம் இருட்டான இடத்தை நோக்கி விஷ்ணு போக, அவனைப் பின் தொடர்ந்துப் போனாள் வினி. மாமா என கூப்பிட வாய் திறந்தவள் பட்டென வாயை மூடிக் கொண்டாள்.

அங்கே இன்னொரு பெண் வந்து சேர, இருவருக்கும் காரசாரமாக ஏதோ விவாதம் நடந்தது. சத்தம் செய்யாமல் இன்னும் கொஞ்சம் நகர்ந்துப் போய் யாரென பார்த்தவளுக்கு, வேப்பெண்ணையைக் குடித்தது போல உள்ளுக்குள் கசந்து வழிந்தது.

“இவளா?” என முணுமுணுத்தவள், பழைய ஞாபகங்கள் மனத்திரையில் ஓட அப்படியேத் தள்ளாடினாள்.

எங்கே விழுந்து விடுவோமோ எனப் பயந்து சுவரைப் பிடித்துக் கொண்டு நின்றவளைப் பின்னிருந்துப் பற்றிக் கொண்டது ஒரு கரம். உடம்புப் தூக்கிப் போட,

“விடு! விடு!” என கத்த ஆரம்பித்தாள் வினி.

“ஷ்!!!! வினிம்மா! நான்தான்! தடுமாறி சுவரைப் புடிச்சிக்கிட்டியா, எங்க விழுந்துடுவியோன்னு தாங்கிக்கிட்டேன்!” என வீரா குரல் கொடுத்தான்.

கண்ணீர் கண்களோடு திரும்பியவள், மெல்லிய கேவலுடன் தன் முகத்தை அவன் பரந்த மார்பில் புதைத்துக் கொண்டாள்.

“நான் எந்தப் தப்பும் பண்ணல வீர்! நீயாச்சும் என்னை நம்பறியா?” எனக் கதற ஆரம்பித்தாள் சஞ்சீவினி.

வினியின் சத்தத்தில், அந்தப் பெண்ணை அவசரமாக அப்புறப்படுத்திய விஷ்ணு இவர்களிடம் ஓடி வந்தான்.

“என்னாச்சு?”

ஒரு பெண்ணுடன் விஷ்ணு பேசிக் கொண்டிருந்ததை இவனும் கவனித்துதான் இருந்தான்.

“உன்னையும், இன்னொரு பொண்ணையும் நெருக்கமா பார்த்ததுல அப்சேட் ஆகிட்டாடா!” எனச் சொல்லித் தன் நண்பனை முறைத்தான் வீரா.

வீராவை இன்னும் இறுக்கிக் கொண்ட வினி,

“வீர்! போகனும்! வீட்டுக்குப் போகனும்” என கண்ணீர்க் குரலில் இறைஞ்சினாள்.

“போய்டலாம்டா” என்றவன்,

“விஷ்ணு உள்ள இவ அம்மா அப்பா கிட்ட கிளம்பிட்டான்னு சொல்லிடு! அப்படியே கவிதாக்காவ ஹோட்டல் லாபில கார் ஏறும் இடத்துக்கு வர சொல்லு! பேஸ்மெண்ட்ல கார் எடுத்துட்டு வந்து நான் அவங்கள ஏத்திக்கறேன். இன்னிக்கு நைட் இவ கூட தங்கிக்கட்டும்”

“வேணா!” என இவள் மறுக்க,

“ஷட் அப் வினி!” என இவளை அடக்கியவன்,

“போடா சீக்கிரம்!” என விஷ்ணுவை விரட்டினான்.

வினியுடன் வீரா லிப்டுக்குள் நுழைய, உள்ளே ஒரே கூட்டமாக இருந்தது. வினியின் தோளில் கைப் போட்டு அவளை அணைத்தபடி வீரா நின்றிருக்க, கேப் அணிந்த, முகம் முழுக்க புதர் போல மீசை தாடி வைத்திருந்த ஓர் உருவம் இவர்களையே உக்கிரத்துடன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது.

அவ்வுக்கிரத்தின் வெளிப்பாடாக, மறுநாள் ஸ்டேசனுக்கு ஏ.சி.பி வீரமணிகண்டனுக்கு ஒரு பார்சல் வந்தது. அதைப் பிரித்துப் பார்த்தவன், அதிர்ந்துப் போய் நின்றான்.

தனித் தனி மூன்று ஜிப்லாக் ப்ளாஸ்டிக்கில் வைத்து அனுப்பப்பட்டிருந்த மூன்று மோதிர விரல்களைப் பார்த்தவனுக்கு குப்பென வியர்த்துப் போனது. (நம்மக் கணக்குபடி பார்த்தா ரெண்டு விரல்தானே இருக்கனும்! எப்படி மூனு? எதாச்சும் கெஸ் பண்ண முடியுதா டியர்ஸ்?)

“பாஸ்டர்ட்!!!!!!” என ஸ்டேசனே அதிரும்படிக் கோபத்தில் கத்தினான் வீரமணிகண்டன்.

 

(தொடுவான்…)   

 

(போன எபிக்கு லைக், கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி. கம்மியாதான் ரெஸ்பான்ஸ் இருக்கு! ஆனாலும் இந்தக் கதைய நான் கண்டிப்பா எழுதி முடிப்பேன்! ஐ மீன் தலைகீழாதான் குதிப்பேன் 😊 கால வச்சிட்டோம், செஞ்சிடுவோம்!!!!!!! ஹஹஹ. அடுத்த எபில சந்திக்கும் வரை லவ் யூ ஆல்!!!)