Thoda Thoda Thodarkathai–EPI 4

280654150_1081598149094185_3262610077133346742_n-49571a78

அத்தியாயம் 4

 

தொடர் கொலைகள் செய்வது ஆண்கள் மட்டுமே என்பது தப்பான கருத்து. இதில் பெண்களும் குழந்தைகளும் கூட ஈடுபட்டிருக்கிறார்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன. கார்ல் நியூட்டன் எனும் ஆறு வயது சிறுவன்தான் ஆகச் சிறிய தொடர் கொலை குற்றவாளியாகும். இந்தியாவில் அமர்ஜிட் எனும் பத்து வயது சிறுவன் இந்த கேட்டகரியில் வருகிறான்.

 

 

அஜய்தேவ் பிறந்த நாள் தினம்

ஹோட்டலின் கார் தரிப்பிடத்துக்கு நுழைந்த சஞ்சுக்குட்டியின் காரை இடைவெளிவிட்டு மெல்லத் தொடர்ந்தேன் நான். அவளைப் போலவே அவளது ஸ்வீப்டும் குட்டியாய் கியூட்டாய் இருந்தது. அவள் ஸ்டைலாக வளைத்து நெளித்து பார்க் செய்வதை ரசனையாகப் பார்த்தபடியே சற்றுத் தள்ளி பார்க் செய்தேன் எனது காரை.

காரை விட்டு இறங்கியவள், டக் டக்கென ஹை ஹீல்ஸ் தாளமிட இடுப்பை ஆட்டி ஆட்டி அழகிய தேர் போல அன்ன நடையிட்டதைக் கண்டு சொக்கிப் போய் நின்றேன் நான்.

‘பின்னழகைக் காட்டி

சின்னப் பையன்களை வாட்டி

மின்னலிடை ஆட்டி

செல்லும் மஞ்சள் நிலா

நெஞ்சைக் கிள்ளாதே’ எனக் கத்திப் பாடத் தோன்றியது எனக்கு. முயன்று அடக்கிக் கொண்டு, மெல்லிய விசிலோடு அவளைப் பின் தொடர்ந்தேன்.

அவள் லிப்டில் ஏறிப் போனதும், அடுத்த லிப்ட் எடுப்பதுதான் அறிவானவன் செய்யக் கூடிய செயல். நான் அறிவானவன்தான். ஆனாலும் அறிவை விட ஆர்வம் என்னை மென்று தின்றது.

அவள் இல்லாத போது, ட்ரான்ஸ்மிட்டர் காமிரா மாட்ட, திருட்டுத்தனமாக அவள் வீட்டுக்குள் நுழைந்தேன் ஒரு நாள். அவளது காரில் நான் செட் செய்திருந்த ஜி.பி.எஸ் கருவி வேலைக்குப் போனவள் மீண்டும் வீட்டுக்கு வருவதாய் காட்ட, ஆர அமர வீட்டைக் குடைந்துப் பார்க்க வந்தவன், ட்ராவரில் கைக்குக் கிடைத்த அவளது பேண்டிஸ் ஒன்றை எடுத்து பான்ட் பாக்கேட்டில் நுழைத்துக் கொண்டு வேகமாய் வீட்டை விட்டு வெளியேறினேன். அடுத்தொரு நாள் உள்ளே நுழைந்த போது, பாத்ரூம் வாளியில் இருந்த அவளது துவைக்காத துணியின் வாசமே பித்தனாக்கிப் போனது என்னை. அறிவு நோ நோ எனச் சொல்லியும் ஆசை அலையாய் மோத சஞ்சுக்குட்டிப் பயன்படுத்தி துவைக்கப் போட்டிருந்த ஷிம்மியை அழகாய் மடித்துப் பாண்ட் பாக்கெட்டில் சொறுகிக் கொண்டேன் நான்.

போதை ஏற்றும் அவளது வாசனையை நாசிக்குள் இழுத்து நுரையீரலுக்குள் அனுப்பியே ஆக வேண்டும் என ஒவ்வொரு செல்லும் சண்டையிட அவளைத் தொடர்ந்து லிப்டில் ஏறினேன். என்னை நிமிர்ந்துப் பார்த்தவள் மெல்ல புன்னகைக்க, கோடி ரோஜா இதழ்களை என் மேல் தூவியது போல மேனி சிலிர்த்தடங்கியது எனக்கு. அவளைக் கட்டிக் கொ(ல்ல)ள்ள வேண்டும் எனும் வெறி எனை ஆக்ரமிக்க,

‘பொறுடா பொறு! பொறுத்தவர் பூமி ஆள்வார்!’ என என்னை நானே பெருமுயற்சி செய்து சமாதானப்படுத்திக் கொண்டேன்.

அவளது புன்னகைக்கு சின்னதாய் பதில் புன்னகைக் கொடுத்த நான், போனில்தான் என் உலகமே இயங்குவது போல பாவ்லா காட்ட ஆரம்பித்தேன். அதற்கு மேல் சஞ்சு என்னைக் கண்டுக் கொள்ளவில்லை. அதுதானே எனக்கும் வசதி. அவளது வாசனை என்னைப் புத்துணர்வாக்க, திருட்டுத்தனமாய் பெண்ணவளை அங்குலம் அங்குலமாக ரசிக்க ஆரம்பித்தேன்.

‘ப்பா!!! என்ன அழகுடா இவ! இவளைப் படைக்கும் போது பிரம்மன் கண்டிப்பா செம்ம மூட்ல இருந்துருப்பான்! இவளோட பிறை நெற்றியில முத்தம் வச்சிக்கிட்டே இருக்கனும். காந்தமா இழுக்கற அந்தக் கண் ரெண்டையும் பார்த்துட்டே இருக்கனும், மாசு மரு இல்லாத கன்னம் ரெண்டையும் தடவிக்கிட்டே இருக்கனும்.’ என என் மனது அவளை ஆராதித்துக் கொண்டிருந்த சமயம்!!!!

‘அடியே!!! பாதகத்தி! என்னடி செய்யிற????’

ஓரக்கண்ணால் என்னைப் பார்த்து விட்டு, உதட்டுச் சாயத்தை சரி செய்தவள், அப்படியும் இப்படியும் உதட்டைச் சுழித்ததைப் பார்த்து ஓலமிட்டது என் இதயம்.

 ‘உதடு!!!!

உதட்டைப் பார்த்தே

உன்மத்தமாகிறேன்

அதைக் கொண்டு எனை உரசிடாதே

உடைந்துப் போவேன்

சில்லு சில்லாய் சிதறிப் போவேன்!’

அந்த நேரம் லிப்ட் திறந்து சஞ்சு வெளியேற என்னை மீறி,

“கிஸ்ஸபில் கியூட் லிப்ஸ்!” என அவளுக்குக் கேட்கும்படி முணுமுணுத்தேன்.

லிப்ட் மூடும் சில நொடி நேரத்தில் மின்னல் தெறித்தது போல அவளது முறைப்பும், தேன் குரலில் ‘பெர்வெர்ட்’ எனும் திட்டும் எனை மிக மிக உற்சாகமாக்கியது.

சஞ்சுவை தொடர்வது போக, வேறு வேலை ஒன்று எனக்கிருந்தாலும் அவள் பின்னாலேயே போகச் சொல்லி மனம் உந்தியது. அடுத்த ப்ளோரில் லிப்டில் இருந்து வெளியேறி, முடிந்த அளவுக்குத் தலையைக் குனிந்தபடியே டாய்லட்டுக்குப் போய், தாடி மற்றும் மீசையை ஒட்டி வைத்துக் கொண்டு, கூலர்சையும் மாட்டிக் கொண்டேன். வீட்டில் இருந்து வரும் போதே உள்ளே ஒரு ஷேர்ட் அணிந்து அதன் மேலே இன்னொரு ஷேர்ட் அணிந்து வந்திருந்தேன். மேலிருந்த ஷேர்ட்டைக் கழட்டி, சின்னதாய் சுருட்டி மேலே சிலிங்கை ஆராய்ந்தேன்.

இது போல சில கழிப்பறைகளில் ஓரிடத்தில் கண்ணுக்குத் தெரியாதது போல சதுரமாய் சிலிங்கை வெட்டி மேலே செல்வதற்கு வழி செய்திருப்பார்கள். அதன் வழிதான் பைப்பிங் பிரச்சனை இருந்தால் மேலே ஏறிப் போய் சரிப்படுத்துவார்கள். கையை வைத்து அழுத்தித் தள்ளினால் அவ்விடம் திறந்துக் கொள்ளும்.

கடைசி கழிப்பறையில் அதைக் கண்டுக் கொண்டேன் நான். உள்ளே நுழைந்து டாய்லட் சீட் மேலே ஏறி, அச்சதுர சிலிங்கை திறந்து சட்டையை அதன் உள்ளே வீசி விட்டு, அழகாய் மூடி வைத்து விட்டு வெளியேறினேன்.  உள்ளே வந்தது போலவே எந்த சி.சி.டி.வி காமிராவிலும் முகம் தெரியாத அளவுக்கு தலையைக் குனிந்தபடி வெளியேறி நேரே பார்ட்டி நடக்கும் இடத்துக்குப் போனேன். ஒர் மூலையில் கையில் பழரசத்தோடு நின்று அணுஅணுவாய் என் உலகழகியை ரசிக்க ஆரம்பித்தேன்.

ஏற்கனவே அவளைப் பற்றி ஆதி முதல் அந்தம் வரை ஃபிங்கர் டிப்ஸில் வைத்திருந்த நான், சஞ்சுவின் குடும்பம் அவளுக்குக் கொடுத்த ட்ரீன்மெண்டை கவனித்தப்படியே நின்றிருந்தேன். அப்பொழுதுதான் சைத்தான் சைக்கிள் கேப்பில் வந்து சேர்ந்தான்.

‘பரதேசி! அவதான் வேணான்னு வெட்டி விட்டுட்டால்ல, இன்னும் ஏன்டா நாய் போல நாக்கத் தொங்கப் போட்டுட்டு அவ பின்னாலே வர!’

கோபமாய் வந்தது எனக்கு. கோபம் என்னைப் போன்ற காரியவாதிக்கு பெரிய சத்ரு! அதனால் அடக்கிக் கொண்டேன்!

போனை எடுத்து நான் தேடி வந்த இன்னொருத்தி எங்கிருக்கிறாள் என ஆராய ஆரம்பித்தேன். அவளது காரில் பொருத்தி இருந்த ஜி.பி.எஸ். டிவைஸ் பட்சி ஹோட்டலுக்கு வந்து விட்டாள் எனக் காட்டியது.

‘சஞ்சும்மா! இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கம்மா! மாமா சீக்கிரமா உன்னைத் தூக்கிடறேன்! இன்னிக்கு உன்னோட ப்ரேண்டோட டர்ன்! சரியாடாம்மா!!!’ என மனசுக்குள்ளேயே சஞ்சுவைக் கொஞ்சிக் கொண்டேன்.

சற்று நேரம் அமைதியாக அந்த இன்ஸ் சஞ்சுவுக்கு உணவுக் கொடுப்பதையும், இருவரும் இன்னிசையாய் இசைந்து உணவருந்துவதையும் கையாலாகாதனத்துடன் பார்த்திருந்தேன். விடும் மூச்செல்லாம் அனல் மூச்சாய் இருந்தது எனக்கு. என்னவோ மற்றவர்கள் மேல் இல்லாத அளவுக்கு இவள் மேல் மட்டும் உரிமை உணர்வுப் பிய்த்துக் கொள்கிறது. இவளை ஆசையாய், அருமையாய் அட் லிஸ்ட் ஒரு வாரமாவது மனைவி போல கொண்டாட வேண்டும்! பின்பே துண்டாட வேண்டும்!

சற்று நேரத்தில் சஞ்சு வெளியேப் போக, அவள் பின்னாலேயே அந்த இன்ஸ்சும் போக, நான் தூரமாய் நின்று யார் கவனத்தையும் கவரா வண்ணம் நடப்பதைக் கவனித்தேன். அடுத்து என்ன செய்வது என முடிவெடுத்துக் கொண்டு லிப்டுக்காக காத்திருந்தேன். எல்லாமே மேலேயே போக கீழே இறங்கவேயில்லை லிப்ட். வேறு வழியில்லாமல் மேலே போவதில் ஏறிக் கொண்டேன். ஒவ்வொரு தளமாக ஆள் இறக்கி விட்டு, பின் ஏற்றிக் கொண்டு அது கீழே இறங்க, அந்த இன்ஸும் என் ஆளும் கூட உள்ளே ஏறினார்கள் பின்னிப் பிணைந்துக் கொண்டு! நன்றாக தலையைக் குனிந்துக் கொண்டு ஓரக்கண்ணால் அவர்களையே கவனித்துக் கொண்டிருந்தேன் நான்.

நினைத்தபடி பேஸ்மெண்ட் இறங்காமல், கூட்டமாய் மற்றவர்களோடு லாபியில் இறங்கிக் கொண்டேன். சற்று நேரம் அங்கேயே சுற்றி விட்டு பேஸ்மேண்ட் இறங்கி என் காரில் காத்திருந்தேன். பல மணி நேரம் கடந்து நம்மாள், பாருக்கு சென்று கோபம் தீர நன்றாகக் குடித்து விட்டுத் தள்ளாடியபடி அவள் காரை நோக்கி நடந்துக் கொண்டிருந்தாள்.

காரை விட்டு இறங்கி அவளை நெருங்கினேன்.

“ஹாய் பேப்!”

“ஹூ ஆர் யூ?”

“எமன்டி!”

“வாட்???” என்றவளின் முகத்தில் கர்ச்சிப்பை வைத்து அழுத்தினேன். ஏற்கனவே போதையில் இருந்தவள், பட்டென மயங்கி என் மேல் சரிந்தாள்.

அவளை அணைத்துப் பிடித்தபடி என் காருக்கு அழைத்து சென்று அமர வைத்து சீட் பெல்ட் போட்டு விட்டேன். பின் மெல்ல நிமிர்ந்து எனக்கு நேராய் இருந்த சிசிடிவி காமிராவைப் பார்த்து நக்கலாய் ஒரு சல்யூட் வைத்து விட்டுக் காரைக் கிளப்பினேன்.

காரில், என் மூடுக்கு ஏற்ற போல ஒரு பாடலை ஒலிக்க விட்டு பாடியபடியே பெண்ணவளை எனது சொர்க்கபுரிக்கு அழைத்துப் போனேன்.

“வோவ்!!!!

ஐ ஃபீல் குட்

ஐ நியூ தட் ஐ வுட்

ஐ ஃபீல் குட்

ஐ நியூ தட் ஐ வுட்

சோ குட் சோ குட்

ஐ காட் யு!!!”

இரண்டு நாட்களுக்குப் பிறகு,

“வீரா சார்” என அழைத்தான் இன்ஸ்பெக்டர் கவின்.

“யெஸ்!”

“லேப்ல இருந்து ரிப்போர்ட் வந்துடுச்சு”

“குடு!” எனப் பரபரத்த வீரா, ரிப்போர்ட்டை வாங்கிப் புரட்டினான்.

ரிப்போர்ட்டைப் படித்து,

“என்ன இழவுய்யா இது!” என நெற்றியில் அறைந்துக் கொண்டான் வீரமணிகண்டன்.

“ஆமா சார்! மூனு விரலும் வேற வேற மூனு பொண்ணுங்களோடதுன்னு டி.என்.ஏ ரிசால்ட் சொல்லுது!”

“சைக்கோ நாய்!” என முணுமுணுத்தவனை போன் க்ரீங் க்ரீங் என சத்தமிட்டு அழைத்தது.

“ஹலோ ஏ.சி.பி வீரமணிகண்டன்!”

அங்கிருந்து வந்த சேதியை செவிமடுத்தவன்,

“என்ன ஏதுன்னு குவிக்கா பார்க்கறேன் சார்” எனக் கூறி அழைப்பைத் துண்டித்தான்.

“இருக்கிற தலை வலிப் பத்தாதுன்னு, மினிஸ்டர் பொண்ண ரெண்டு நாளா காணோமாம்யா! அவங்க ஆள் வச்சித் தேடிப் பார்த்தும் சிக்கலயாம்! நம்மள காதும் காதும் வச்சது போல உடனே ஆக்‌ஷன் எடுக்க சொல்லி ப்ரஷர்! கிளம்பு போகலாம்!”

“யெஸ் சார்”

அதற்குள் வீராவின் போனுக்கு மேலிடத்தில் இருந்து ஒரு போட்டோ வர,

“அட இந்தப் பொண்ணா!!!!” என அதிர்ச்சியானான் இவன்.

 

(தொடுவான்…)

(போன எபிக்கு லைக் கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி! இந்த எபி சின்ன எபியாதான் எழுதனேன்! அந்த சைக்கோ கில்லரோட மனநிலையப் புரிஞ்சுக்கனும்னா, மத்த கேரெக்டர உள்ள நுழைக்கக் கூடாதுனு தோணுச்சு! இதோட அடுத்த எபில சந்திக்கும் வரை, லவ் யூ ஆல்)