Thoda Thoda Thodarkathai–EPI 5

280654150_1081598149094185_3262610077133346742_n-796cba82

அத்தியாயம் 5

 

வரலாற்றிலேயே பழைய மற்றும் மிகக் கொடூரமான தொடர் கொலையாளி, கடைசி வரை யாரென கண்டுப்பிடிக்கப்படாததால் ‘ஜாக் தெ ரிப்பர்’ என அழைக்கப்பட்டான். 1988ல் லண்டனில் ஐந்து விலை மாதுகளைக் கொன்று, உடலை சிதைத்த இவன், ஒரு டாக்டராக இருக்கலாம், கசாப்புக் கடைக்காரனாக இருக்கலாம் அல்லது ஸ்கால்பெல் என அழைக்கப்படும் அறுவை சிகிச்சை செய்யப் பயன்படும் கத்திகளின் பயன்பாட்டில் தேர்ந்தவனாக இருக்கலாம் என்பது மட்டுமே க்ளூவாக இருந்தது. இவன் செய்த செயல்களை(கொலைகளை) கடிதமாக எழுதி அனுப்பி அங்கு வாழ்ந்த மக்களையும், போலிஸ் இலாகாவையும் கிண்டல்/நக்கல் அடித்திருக்கிறான். கடைசி வரை யார் இவன் என உலகத்துக்குத் தெரிய வரவேயில்லை.

 

போலிஸ் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்த வீரா, கவின் மற்றும் ராகவனை திமு திமுவென ஊடகவியளாலர்கள் சூழ்ந்துக் கொண்டனர்.

“ஏ.சி.பி சார்! பார்சல்ல மூனு பெண்களோட மோதிர விரல் வந்துச்சாமே! இதப் பத்தி உங்க தரப்புல ஏன் எந்த நியூசும் வெளிய விடல?”

கேள்விக்கணைகள் நாலாபுறத்தில் இருந்தும் பறந்து வர கவினிடம் சின்னக் குரலில்,

“எப்படி கவின் விஷயம் கசிஞ்சது?” எனக் கோபமாகக் கேட்டான் வீரமணிகண்டன்.

“சார்! சார்! நான் வேணும்னே வெளிய சொல்லல சார்! பீடி குடிக்கக் பொட்டிக் கடைக்குப் போனப்போ என் வாயைப் புடிங்கிட்டாங்க சார்!” என எங்கப்பன் குதிருக்குள் இல்லை எனக் காட்டிக் கொண்டார் ராகவன்.

“மாமுல் வாங்கறதுப் போதாதுன்னு இப்படி இன்போர்மேஷன வித்து வேற சம்பாதிக்க ஆரம்பிச்சாச்சா? அக்கியூஸ்ட்டோட சேர்த்து உன்னையும் லாடம் கட்டனும்யா!” என ராகவனைப் பார்த்து சிடுசிடுத்தவன்,

“விசாரணை முழு மூச்சாப் போய்ட்டு இருக்கு! கூடிய சீக்கிரம் நாங்களே என்ன ஏதுன்னு ப்ரெஸ்சுக்கு சொல்லுவோம்” என பத்திரிக்கையாளர்களை நோக்கிச் சொன்னான்.

“விரலுக்கு சொந்தமான பெண்கள் உயிரோட இருக்காங்களா? இல்லை செத்ததும்தான் கண்டுப்புடிப்பீங்களா?” எனச் சத்தம் வந்த திசையை நோக்கினான் வீரா.

“நீங்க எந்த சேனலுல இருந்து வரீங்க சார்?” எனக் குரலுக்கு சொந்தமானவனையும் அவன் பக்கத்தில் கேம்கோர்டரோடு நின்றிருந்த இன்னொருவனையும் பார்த்துக் கேட்டான் வீரா.

“’உரக்க சொல்வோம் உலகுக்கு’ன்னு யூடியூப் சென்னல் வச்சிருக்கோம் நாங்க” எனத் தெனாவெட்டாக மொழிந்தான் கேள்விக் கேட்டவன்.

“ஓஹோ! சமூகம் பெரிய இடத்துல இருந்துதான் வந்துருக்கீங்க! வியூஸ்க்காகவும், யூ.எஸ்காரன் குடுக்கற பணத்துக்காகவும் உண்மையா நடந்தது என்னன்னு கூட சரி வர தெரிஞ்சுக்காம உங்க இஸ்ட மயிருக்கு வாயில வந்தத எல்லாம் உளறி வச்சு விக்டிமையும் அவங்க குடும்பத்தையும் சந்தி சிரிக்க வைக்கற உங்களப் போல சில யூடியூப் சேனல்காரனுங்கள உள்ளப் புடிச்சுப் போட்டு காட்டு காட்டுன்னு காட்டனும்! ரோட்டுல அடிப்பட்டுக் கிடக்கறவன ஓடிப் போய் காப்பாத்தாம, அத வீடியோ எடுத்து பரபரப்பா துட்டு பார்க்கற நீங்க, எங்க வேலையைப் பத்தி நக்கல் அடிக்கறீங்களா? சென்னைல மட்டும் ஒரு நாளைக்கு எத்தனை க்ரைம் நடக்குதுன்னு தெரியுமா உங்களுக்கு? நாங்களும் மனுஷங்கதான்யா! ஒரு நாளைக்கு பன்னிரெண்டு மணி நேரத்துக்கும் மேல உழைக்கிறோம்! யாருக்காக? எல்லாம் நிம்மதியா நீங்களாம் தூங்கனும்ங்கறதுக்காகதான்! தொந்தரவு கொடுக்காக எங்க கடமையை செய்ய விடுங்க! துப்புத் துலக்கனதும் நீயூஸ்ச துப்பறோம்! வந்து அள்ளிட்டுப் போங்க” எனக் கடுப்பாக மொழிந்தவன், விறு விறுவென நடந்துப் போய் ஜீப்பில் ஏறிக் கொண்டான்.

அவன் பின்னாலேயே ஓடி வந்தார்கள் கவினும் ராகவனும்! அவர்கள் அமர்ந்தார்களா இல்லையா எனக் கூட கவனிக்காமல் வேகமாகத் தானே ஜீப்பைக் கிளப்பினான் வீரா.

“சார்! சார்! என்னை மன்னிச்சுடுங்க சார்”

“கொலை காண்டுல இருக்கேன்! வாய மூடிட்டு வரல வயசுக்குக் கூட மரியாதைக் குடுக்க மாட்டேன்!“ எனக் கத்தினான் வீரா.

“அவரு கூல் ஆகற வரைக்கும் சும்மா இருய்யா கொஞ்ச நேரம்” என நடுவில் புகுந்தான் கவின்.

வேகமாகத் தலையாட்டிய ராகவன், கப்பென வாயை மூடிக் கொண்டார்.

அதற்குள் வீராவுக்குப் போன் வர, எடுத்துப் பேசியவன்,

“கவின்! பேஸ்புக்ல விரல் நியூஸ் வைரல் ஆகியிருக்காம் போட்டோவோட! என்னன்னு பாரு!” என்றான்.

“ஐயோ சார்! சார், சார்! நான் நியூஸ் மட்டும்தான் சொன்னேன். போட்டோலாம் குடுக்கல சார்! நம்புங்க என்னை! என் பொண்டாட்டி புள்ளைங்க மேல சத்தியமா போட்டோலாம் குடுக்கல சார்” எனப் பதறினார் ராகவன்.

முகநூலில் மூன்று விரல்களின் போட்டோவுடன், ‘விரல் இங்கே விசாரணை எங்கே?’, ‘விரல் நீட்டிக் கேட்க ஆளில்லாமல், போலிஸ் உறக்கமா?’, ‘ஒன்னு இங்கிருக்கு? ஒன்பது எங்கிருக்கு?’ எனப் பல வகையான கேப்ஷன்களில் மீமும் செய்திகளும் வைரல் ஆகியிருந்தன. முகநூல் போராளிகள் போலிஸைக் கிழித்துத் தொங்க விட்டுக் கொண்டிருந்தார்கள்.

எல்லாவற்றையும் கவின் படித்துச் சொல்ல,

“ட்ரேய்னிங் போகாமலே எல்லாரும் போலிஸ் கணக்காப் பேசறத பாரேன்! உள்ளுக்குள்ளேயே உளவாளி வச்சிருந்தா எந்தக் கேசையும் நாம முடிச்சு கிழிச்ச மாதிரி தான்!” என ரியர் வியூ கண்ணாடி வழி ராகவனை முறைத்தப்படியே சொன்னான் வீரா.

“கவின், இண்டஸ்ட்ரிலிஸ்ட் ஜெய்தேவோட மருமகன் விஷ்ணு நம்பர் சொல்றேன்! அவருக்கு போன் போட்டு, இன்னும் ரெண்டு மணி நேரத்துல நம்ம ஸ்டேஷனுக்கு வர சொல்லுங்க! என்ன, ஏதுன்னு கேட்டா வீரா சார் பேசனும்னு சொன்னாருன்னு மட்டும் சொல்லுங்க” எனக் கட்டளையிட்டான் கவினுக்கு.

கவின் போன் பேசி முடிக்கவும் இவர்கள் அஜய்தேவின் பிறந்தநாள் நடந்து முடிந்திருந்த ஹோட்டலுக்கு வந்து சேரவும் சரியாக இருந்தது. அங்குதான் காணாமல் போயிருந்த மினிஸ்டர் மகளின் கார் இன்னும் பார்க்கிங்கில் இருந்தது.

இவர்களைப் பார்த்ததும் ஹோட்டலின் மேனேஜர் ஓடோடி வந்தார். அவரோடு மினிஸ்டரின் பீ.ஏவும் இருந்தார்.

“கார் இங்கயே இருந்திருக்கே! உங்களுக்கு சந்தேகம் ஏதும் வரலயா?” எனக் கேட்டான் கவின்.

பேசியபடியே கார் பார்க் செய்திருந்த பேஸ்மேண்டுக்கு விரைந்தார்கள்.

“சார்! ஹோட்டலுக்குத் தங்க வர கெஸ்ட் சில சமயம் ஒரு வாரம் கூட ஸ்டே பண்ணுவாங்க சார்! கார்லாம் உள்ளுக்கேத்தான் பார்க்கிங்ல நிக்கும்! அதனால எந்த சந்தேகமும் வரல. கடைசியா மினிஸ்டர் பி.ஏ வந்து கேக்கவும்தான் செக் பண்ணோம் சார்! அப்போதான் தெரியும் கார் இங்கயே நிக்கிதுன்னு.” என்றவர் லேசாக குரலைத் தாழ்த்திக் கொண்டு,

“அடிக்கடி அவங்க எங்க ஹோட்டலுக்கு வருவாங்க சார்! போதை அளவுக்கு மீறி போயிடுச்சுன்னா ரூம் போட்டுருவாங்க! சில சமயம் தனியா, சில சமயம் கம்பேனியன் கூட! அதனால கார் பார்க்கிங்ல நின்னது பெரிய விஷயமா தெரியல சார் எங்களுக்கு” என்றார்.

“ஐயாவோட பொண்ணு கொஞ்சம் அப்படி இப்படிதான்! ஆனாலும் எங்க போனாலும் ரெண்டு நாளுல அவங்க அம்மாவுக்கு போன் போட்டுருவாங்க! இந்த முறை போனும் வரல, இவங்களே அழைச்சாலும் லைன் போகல! அதான் ஐயா பயந்துட்டாரு. எங்க ஆளுங்கள வச்சி தேடிப் பார்த்தோம். அவங்க வழக்கமா போற மத்த இடங்கள்ல எங்கயும் இல்ல. இங்கதான் காரைக் கண்டுப்புடிச்சோம். ரூம் ஏதும் அவங்க எடுக்கலன்னு தெரிஞ்சதும், ஐயா சைலண்டா போலிஸ் உதவிய நாடலாம்னு முடிவெடுத்துட்டாரு. வயசு புள்ள விஷயம். வெளிய யாருக்கும் தெரியாம கண்டுப்புடிச்சு குடுங்க சார்”

அவருக்கு பதில் ஏதும் சொல்லாமல், பார்க் செய்திருந்த காரை சுற்றி வந்தான் வீரா. கார் அருகே, சிசிடிவி காமிரா இல்லை. ஆனால் சற்றுத் தள்ளி ஒன்று இருந்தது.

தாடையை சொறிந்தபடி சுற்றும் முற்றும் பார்த்தபடி நின்றான் வீரா.

‘அன்னைக்கு அந்தப் பொண்ணு ஹேமா, விஷ்ணு கூட பேசிட்டு இருந்தப்போ நைட் மணி பத்து இருக்கும். அதுக்கு மேலதான் மாயமா மறைஞ்சிருக்கா!’

தேதியையும், குத்துமதிப்பாக நேரத்தையும் சொல்லி,

“பார்ட்டி ஹால் இருக்கற ப்ளோர்ல இருக்கற எல்லா சி.சி.டி.வி ஃபுட்டேஜீம் வேணும் எனக்கு. அன்னைய தினத்துல வேலைப் பார்த்த வொர்க்கர் லிஸ்டும் வேணும். குடிக்க வருவாங்கன்னு சொன்னீங்கல்ல! பாருக்கு வந்திருந்தாங்களா, அப்படி வந்திருந்தா எத்தனை மணிக்கு வெளியானாங்கன்னு எல்லாம் விசாரிக்கனும்.” எனப் பொதுவாக சொன்னவன்,

“கவின்! பாருக்குப் போய் நான் கேட்ட டீட்டேயில் எல்லாம் செக் பண்ணுங்க!” எனக் கட்டளையிட்டான்.

“ராகவன்! நீங்க பார்ட்டி ஹால் ஃப்ளார்ல வேலைப் பார்த்தவங்க யாராச்சும் அந்தப் பொண்ணைப் பார்த்தாங்களா? சந்தேகப்படும்படி எதாச்சும் நடந்துச்சான்னு விசாரிங்க”

மேனேஜரை நோக்கி,

“நீங்க வாங்க! நாம கண்ட்ரோல் ரூமுக்கு போவோம்!” எனச் சொல்லி, முன்னே போகும்படி கையைக் காட்டினான் வீரா.

அவர்கள் இருவரோடு, மினிஸ்டரின் பி,ஏவும் உடன் வந்தார். பல மானிட்டர்கள் புடை சூழ செக்கியூரிட்டி ஒருவர் அமர்ந்திருந்தார் அவ்வறையில். தனக்குத் தேவையான விபரங்கள் சொல்ல, அன்றைய தினத்தில் ஒளிப்பதிவு ஆகியிருந்ததை வீராவுக்கு காட்டினார் அவர். மூன்று வழியாக பார்ட்டி ஹாலுக்கு உள்ளே வரவும், வெளியே போகவும் முடியும் என்பதால், அந்த மூவழியைக் காட்டும் ஃபுட்டேஜை பொறுமையாக ஒவ்வொன்றாகப் பார்க்க ஆரம்பித்தான் இவன்.

மேய்ன் லிப்ட் வழியாக 10 மணியளவில் ஹேமா பார்ட்டி ஹால் இருக்கும் ஃப்ளோருக்கு நுழைந்தது பதிவாகியிருந்தது. அங்கிருந்து அவள் இன்னொரு லிப்டுக்குள் நுழைந்தது பத்தரை மணியளவில் பதிவாகியிருந்தது.

“சார்! இந்த லிப்ட் வழியா பேஸ்மெண்ட் போக முடியாது. இது லாபி வரைக்கும்தான் போகும்” என்றார் மேனேஜர்.

“அப்போ லாபில இறங்கி, ரெஸ்டொராண்ட் இல்ல பாருக்குப் போயிருக்கனும்!” என யூகித்தவன், கவினுக்குப் போன் செய்ய முனைய, ராகவனின் அழைப்பு வந்தது.

“சொல்லுய்யா”

“சார்! செம்ம மேட்டர் ஒன்னு”

“என்ன?”

“அந்தப் பொண்ணு யாரோ ஒரு பையன் கூட பார்ட்டி ஹால் பக்கமா, மறைவான இடத்துல காச்சுமூச்சுன்னு சண்டைப் போட்டுட்டு இருந்துச்சாம்! நைட் கிளினர் விஷயத்த கக்கிட்டான்!”

“அவ்ளோதானா! ஓகே!” என அசுவாரசியமாக வீரா சொல்ல, சப்பெனப் போய் விட்டது ராகவனுக்கு.

அதன் பிறகு கவினை அழைத்தவன்,

“எனி இன்ஃபார்மேஷன்?” எனக் கேட்க,

“சார்! இங்க வெய்ட்டருக்கு எல்லாம் ரொம்ப பரிச்சயம் போல அவங்க! அன்னைக்கு நைட் சுமார் பத்தரைல இருந்து பதினொன்றரை வரைக்கும் இங்கதான் இருந்திருக்காங்க! ரொம்ப கோபமா இருந்தாங்களாம். எப்போதும் ஜாலியா சிரிச்சுப் போசறவங்க, அன்னிக்கு குடிச்ச கிளாச உடைச்சது, துடைக்க வந்த வெய்ட்டர கெட்ட வார்த்தைல திட்டனதுன்னு அதகளம் பண்ணிட்டாங்களாம். எப்படா கிளம்பிப் போவாங்கன்னு இருந்துச்சாம் இவங்களுக்கு எல்லாம்” எனக் கேட்டறிந்ததை  சொன்னான்.

“ஓகே கவின்! நீங்க மேல கண்ட்ரோல் ரூமுக்கு வந்திடுங்க!” என்ற வீரா, மேனேஜரிடம்,

“லாபில இருந்து வெளிய போக என்னென்ன வழி இருக்கு?” எனக் கேட்டான்.

“சார்! மேய்ன் எண்ட்ரேன்ஸ் வழியா போகலாம். ஸ்டாப் வெளியாகி போக பின்னாலே ஒரு வழி இருக்கு! அதோட பேஸ்மேண்ட்டுக்கு போய் அங்கிருந்தும் வெளிய போகலாம்” என்றார்.

அவர் சொன்ன இடங்களில் வேலை செய்பவர்கள் வெளியேறும் இடத்தில் காமிரா இல்லாததால், பேஸ்மேண்டுக்கு செல்ல லிப்ட் எடுக்கும் இடத்தில் மற்றும் மேய்ன் எண்ட்ரன்ஸில் இருந்த சிசிடிவி காமிரா பதிவுகளை, அதுவும் பதினொன்று முப்பதுக்கு மேல் எடுக்கப்பட்ட பதிவுகளைப் பார்வையிட ஆரம்பித்தான் வீரா.

பேஸ்மேண்டுகு போகும் லிப்டைத்தான் எடுத்திருந்தாள் ஹேமா!

“பேஸ்மெண்டுக்குப் போயிருக்கா! ஆனா காருல ஏறல! சம்திங் ஃபிஸ்சி”

பேஸ்மெண்டில் வெவ்வேறு இடத்தில் இருந்த மூன்று சி.சி,டிவி பதிவுகளையும் பார்க்க வேண்டும் என இவன் சொல்ல, செக்கியூரிட்டி அதை ரிட்ரீவ் செய்ய ஆரம்பித்தார்.

அதற்குள் இவர்களுக்கு காபி வரவைத்திருந்தார் மேனேஜர்.

“சார்! மினிஸ்டர் கால் மேல கால் போடுறார் சார்! என்ன சொல்லட்டும்?” எனக் கேட்டார் பி.ஏ.

காபியை மிடறு மிடறாகப் பருகியவன்,

“அடுத்த தடவைப் பொண்ணைத் தனியா பாருக்கு அனுப்பாம பூனைப் படை, யானைப் படைலாம் வச்சு அனுப்ப சொல்லு!” எனப் படு நக்கலாக மொழிந்தான்.

“சார்!!!!” எனக் கோபமாக அவர் சத்தமிட, அதற்குள் அங்கே வந்திருந்த கவின்,

“வாங்க பி,ஏ சார்! நாம வெளிய போய் பேசுவோம்” எனச் சொல்லி அவரை வெளியே நகர்த்திக் கொண்டுப் போய் விட்டான்.

மீண்டும் பொறுமையாக ஃபுட்டேஜ்களைப் பார்வையிட ஆரம்பித்தான் வீரா. முதல் காமிராவில் பேஸ்மெண்ட் லிப்டில் இருந்து அவள் வெளியேறி நடப்பது பதிவாகி இருந்தது. இன்னொரு காமிராவில் யாரோ ஒருவன் தோளில் ஒயிலாக சாய்ந்தவாறு நடந்துப் போவது போல பதிவாகி இருந்தது.

இந்த முறை வீராவுக்கு ஏதோ பொறிதட்டியது. அவள் தானாக நடக்கவில்லை, அவளை அந்த ஆண் இழுத்துச் செல்வது போல தோன்றியது இவனுக்கு. மீண்டும் அதையே ஓட விட்டுப் பார்த்தான். அதை ப்ரீஸ் செய்து, உள்ளே வந்த கவினை நோக்க,

“நிக்க முடியாத மப்பு சார்! அதான் இழுத்துட்டுப் போறான் போல அவளோட பாய்ப்ரேண்ட்” என்றான் அவன்.

“ஓஹோ!!!!” என மட்டும் சொல்லிய வீரா, இன்னும் ஓடவிட்டுப் பார்க்க, அன்றைய கனிகா வீடியோவில் பார்த்தது போல அவ்வாண்மகன் திமிராக தெனாவெட்டாக இவனைப் பார்த்து சல்யூட் வைத்ததைக் கண்டு அதிர்ந்துப் போய் எழுந்து நின்றான்.

“வாட் தெ ஃ……..க்!!!!!”

இந்த அதிர்ச்சி எல்லாம் சாம்பிள்தான் என்பது போல, இவர்கள் ஸ்டேஷனுக்கு திரும்பிய நேரம், வீராவை நோக்கி ஓடி வந்தார் கனிகாவின் அம்மா.

“படுபாவிங்களா! என் பொண்ண கண்டுப்புடிச்சுக் குடுங்கன்னு சொன்னதுக்கு, அவ எவன் கூடவோ ஓடிட்டான்னு அபாண்டமா பழிப் போட்டு கேசை மூடிட்டீங்களே! இன்னைக்கு பேஸ்புக்ல வந்த மூனு விரல்ல ஒரு விரல் என் பொண்ணோடதுடா! என் பொண்ணோடது!” எனக் கதறியபடி வீராவின் காலடியில் மயங்கி சரிந்தார் அவர்.

 

(தொடுவான்…)

(போன எபிக்கு லைக் கமேண்ட் போட்ட அனைவருக்கும் அன்பு முத்தங்கள்! இதோடு அடுத்த எபியில் சந்திக்கலாம்! லவ் யூ ஆல் 😊)