Thoda Thoda Thodarkathai–EPI 6

280654150_1081598149094185_3262610077133346742_n-af61ed55

அத்தியாயம் 6

 

Ted Bundy(டெட் பண்டி), நவம்பர் 1946ல் பிறந்த இவன்தான் மிக பாப்புலரான சீரியல் கில்லர். அழகாய், அறிவாய், கடவுள் பக்திக் கொண்டவனாய் இருந்த டெட்டை யாருமே கொலைகாரனாய் கற்பனைக் கூட செய்திருக்க மாட்டார்கள். நூற்றுக்கும் மேலான காலேஜ் போகும் அழகிய பெண்களை கொடூரமாய் கற்பழித்துக் கொன்றவன் என வழக்கு இருந்தாலும், தான் கொன்றது 28 பெண்களைதான் என கடைசியாய் ஒத்துக் கொண்டிருந்தான் இவன். வக்கீலுக்குப் படித்திருந்த இவனே, தனக்கு தானே வாதாடியதில் பெரிய செலிப்ரிட்டி போல அச்சமயத்தில் பார்க்கப்பட்டான். குற்றம் நிரூபணமாகி 1989ல் இலக்ட்ரிக் நாற்காலியில் வைத்துக் கொல்லப்பட்டான் டேட். (நெட்ப்லிக்ஸ்ல இவனோட டாகுமெண்டரி இருக்கு, The Ted Bundy Tapes, இன்னும் இன்ஃபோ வேணும்னா பாருங்க. நான் பார்த்தேன்!!! இதெல்லாம் ஏன் பார்க்கறன்னு வீட்டுல லுக் விடறாங்க! லாப்டாப்ல சீரியல் கில்லர் பத்தி நெறைய தேடுடறதுனால, என் மக, அம்மா உங்கள போலிஸ் புடிக்கப் போகுதுன்னு பயம் வேற காட்டி வைக்கறா!!! ஹாஹா 😊 )

 

“கவின் சார்! பொண்டாட்டி எப்போ வீட்டுக்கு வருவாங்க?” எனக் கேட்டார் ராகவன்.

“எப்படியும் ஆறு மாசம் ஆகிடும்யா! என் மாமியார் அவங்க மகளையும் பேரனையும் நல்லா சீராட்டி, பாராட்டி மொல்லதான் அனுப்புவாங்க!” எனச் சலித்துக் கொண்டான் இவன்.

“பச்சை உடம்புல்ல! பதமா பார்த்து தேத்திதான் அனுப்புவாங்க! என்ன, நீங்கதான் ஆறு மாசத்துக்கு அடி மடில ஈரத் துணிக் கட்டிக்கிட்டு இருக்கனும்” என்றவர் கிண்டலாகச் சிரித்து வைத்தார்.

“நீ வேற ஏன்யா, மனுஷன் அவஸ்த்தைப் புரியாம அதையே பேசிட்டு இருக்க!” என்றவனுக்கும் சிரிப்பு வந்தது.

“விடுங்க, விடுங்க! பொண்டாட்டி பிரசவத்துக்குப் போறதும், புருஷன் பின் வாசலத் திறந்து வைக்கறதும் காலங்காலமா நடக்கறதுதானே! ரெய்ட்ல ப்ரெஸ்சா பச்சைக் கிளிங்க சிலது சிக்கிருக்கு! பேசிப் பார்க்கறீங்களா?” எனப் பெஞ்சில் அமர்ந்திருந்த சில பெண்களைப் பார்த்தபடியே கவினிடம் கேட்டார் ராகவன்.

“யோவ்! என்னையும் உன்னைப் போல நினைச்சியா!” எனக் கடுப்பானான் கவின்.

“சரி, சரி! இதுக்கு ஏன் டென்ஷன் ஆகறீங்க! எதுக்குப் பொண்டாட்டி என்னைச் சுத்தி வைப்பாட்டின்னு பாடுவீங்கன்னு பார்த்தா, தேவையில்ல வைப்பாட்டின்னு சிம்பு போல பாடறீங்க!” எனச் சீண்டினார் அவர்.

அங்கிருந்து லத்திப் பறந்து வர, கீழே குனிந்து தப்பித்தவர் பேச்சை மாற்ற வேண்டி,

“ஊருக்குப் போய்ட்டு வந்தீங்களே, பையன் படம் இருக்கா போனுல?” எனக் கேட்டார்.

சட்டென முகம் மலர்ந்துப் போக, போனை கையிலெடுத்தவன், மகனின் படங்களை பெருமையாகக் காட்ட ஆரம்பித்தான்.

“அப்படியே என்னைப் போலவே இருக்கான்ல?”

“ஆமா சார்! உங்களையே உரிச்சு வச்சிருக்கான்!”

அதற்குள் கவினுக்குப் போன் வர, தனது மேசைக்குப் போய் ரிசிவரை எடுத்துக் காதுக்குக் கொடுத்தான். அந்தப் பக்கம் சொன்னதை முழுமையாகக் கேட்டவன், குடுகுடுவென வீரமணிகண்டன் அறைக்கு ஓடினான்.

“சார்! சார்!”

“என்ன?” என ஃபைலில் இருந்த பார்வையை கவினின் மேல் திருப்பினான் வீரா.

“நீங்க, கனிகாவ தூக்கன கார் நம்பரையும், மினிஸ்டர் பொண்ண தூக்கன கார் நம்பரையும் ட்ரேஸ் பண்ண சொன்னீங்கல்ல! ரெண்டு ஓனர் அட்ரஸ்சும் கிடைச்சிருச்சு சார்”

“கமான் குவீக்! கெளம்புங்க! “ என எழுந்துக் கொண்டான் வீரா.

கிடைத்த மூன்று விரல்களில் ஒன்றில் கிரீடம் போல டாட்டூ சின்னதாய் போடப்பட்டிருப்பதைப் பார்த்துதான் கனிகாவின் அம்மா, அது தன் மகள் என அடையாளம் காட்டி இருந்தார்.

“என்னோட பிரின்சஸ்னு கூப்பிடுவேன் சார் அவள! இருபத்தி ஒரு வயசு பேர்த்டேக்கு என் கிட்ட சொல்லாமலே இந்த டாட்டூவ போய் குத்திட்டு வந்தா! வலிச்சிருக்குமேடின்னு கோவிச்சுக்கிட்ட என்னைப் பார்த்து, இனி நான் பிரின்சஸ் இல்லம்மா, இந்தக் குடும்பத்து குவீன்! நான் சம்பாரிச்சு உங்கள சூப்பரா பார்த்துப்பேன்! அதைக் காட்டதான் இந்த க்ரவுன் டாட்டூன்னு தாடையைப் புடிச்சு கன்னத்துல முத்தம் குடுத்தா என் பொண்ணு! டாட்டூ போட்டதுக்கே, வலிச்சிருக்குமே என் பொண்ணுக்குன்னு துடியா துடிச்சது என் மனசு! இப்போ அவ விரலய வெட்டி அனுப்பிருக்கானே எவனோ படுபாவி! எப்படி துடிச்சாளோ என் தங்கம்! ஐயோ, ஐயோ! என்னாலத் தாங்க முடியலையே! கடவுளே!” என மயக்கம் தெளிந்துக் கதறிய கனிகாவின் அம்மாவை இவர்களால் சமாதானம் செய்யவே முடியவில்லை.  

அன்றிரவும் வீராவுக்குத் தூக்கம் தொலைந்துப் போனது. காவல்துறையில் வேலைக்கு வந்ததில் இருந்து பலதையும் பார்த்திருக்கிறான். ஆனாலும் எதுவும் இன்னும் பழகிப் போகவில்லை. உணர்வுகளும் மரத்துப் போகவில்லை. பல சமயங்களில் இந்தத் தொழில் தனக்கு சரியானது இல்லையோ எனக் கூட தோன்றும் அவனுக்கு!

“போலிஸ்னா உணர்ச்சிகளத் தொடச்சிப் போட்டாதான் பொழைக்க முடியும்னு சொல்லறாங்க! ஆனா பேராண்டி, அவனுக்குள்ளயும் பாசம், நேசம் இருக்கனும்யா! அப்போதானே மத்தவங்க கஸ்ட நஸ்டத்தப் புரிஞ்சு, அநீதிய கண்டுப் பொங்கி எழ முடியும்!” எனப் பாசத்தோடு பண்பையும்  ஊட்டி வளர்த்த தாத்தனின் வார்த்தைகள் நெஞ்சில் அப்படியே பசுமரத்தாணி போல பதிந்துப் போய் கிடந்தது.

கட்டில் அருகே இருந்த மேசை மேல் இவன் வைத்திருந்த சிரித்த முகமாய் இருந்த வினியின் போட்டோ கூட வீராவை அமைதிப் படுத்த முடியாமல் தோற்றது. பெண்களின் விரல்களும் அந்தத் தாயின் கதறலுமே மனதில் வந்து நின்று தூக்கத்தைக் கெடுத்தது.

பெருமூச்சோடு எழுந்து நின்றவன், அறையின் ஒரு மூலையில் வீற்றிருந்த தனது ஸ்டடி டேபிளுக்கு நடந்தான். டேபிளுக்குப் பின்னால் ஒரு வைட் போர்ட் மாட்டி வைத்திருந்தான் வீரா. வீட்டுக்கு எடுத்து வந்திருந்த ஃபைலில் இருந்து மூவிரல் போட்டோவை அதில் மேக்னெட் கொண்டு ஒட்ட வைத்தவன், அதற்கு கீழ் மூன்று கோடு இழுத்தான். ஒரு கோட்டில் கனிகாவின் படத்தை ஒட்டியவன், அடுத்த இரண்டு கோடுகளுக்கு மேல் கேள்விக் குறி போட்டு வைத்தான்.

“கனிகாவ கூட்டிட்டுப் போனவன போலவே, மினிஸ்டர் மகள கூட்டிட்டுப் போனவனும் கூலர்ஸ், மீசை, தாடின்னு அடையாளத்த மறைச்சிருந்தான். அவன போலவே காமிராவப் பார்த்து சல்யூட் வச்சிருக்கான்! மேய்பீ இத செஞ்சது ஒரே ஆளாக் கூட இருக்கலாம். அப்படி ஒரே ஆளா இருந்தா, மத்த ரெண்டு விரல்கள்ல ஒன்னு மினிஸ்டர் பொண்ணோடதா இருக்க ஹை சான்ஸ் இருக்கு! அந்த மூனாவது பொண்ணு யாரு? நம்ம ஸ்டேஷன்ல இவங்க ஏஜ் ரேஞ்ல மிஸ்ஸிங் கேஸ் வேற ஏதும் ஃபைலாகல! இப்போ நான் என்ன செய்யனும்?” எனத் தாடையைத் தட்டி யோசிக்க ஆரம்பித்தான்.

மெல்ல நடந்து போய், தனது குட்டி குளிர்சாதன பெட்டியில் இருந்து பீர் கேன் ஒன்றை எடுத்தவன், அதன் கேப்பைத் திறந்து தொண்டையில் சரித்துக் கொண்டான். வைட் போர்டைப் பார்த்தபடி, செல் போனை எடுத்தவன், இரவு பணியில் இருக்கும் ராகவனை அழைத்தான்.

“சார்! சார்! சொல்லுங்க சார்”

“இப்போ நீங்க என்ன செய்றீங்கனா, உடனே கிளம்பி மினிஸ்டர் வீட்டுக்குப் போங்க!”

“இதோ சார், கிளம்பிட்டேன்!”

“அவங்க மக யூஸ் பண்ண தூத்பிரஷ் எவிடன்ஸ்கு வேணும்னு பத்திரமா கவர்ல போட்டு வாங்கிட்டு வாங்க!”

“சரி சார்”

“காலைல வேலை முடிஞ்சு அப்படியே வீட்டுக்குப் போயிடாம, லேபுக்கு போய் அதக் குடுத்துடுங்க! மத்தது எல்லாம் நான் அங்க உள்ளவங்க கிட்ட நேரா பேசிடறேன்!”

“ஓகே சார்” என்ற ராகவன், மெல்லிய குரலில்,

“சார்!!!” என இழுத்தார்.

“என்ன?”

“என் மேல இன்னும் கோபமா சார்?”

“நீ என் முறைப் பொண்ணு பாரு! இன்னும் முறைச்சிக்கிட்டே இருக்க! போனை வைய்யா!” எனக் கடுப்புடன் அழைப்பை நிறுத்தினான் வீரா.

“தூத் பிரஷ்ல கிடைக்கற டி.என்.ஏ விரலோட ஒத்துப் போகுதான்னு தெரிய வெய்ட் பண்ணனும்!”

லாப்டாப்டை ஆன் செய்து நாற்காலியில் அமர்ந்த வீரா, மீண்டும் இரண்டு சி.சி.டிவி ஃபுட்டேஜையும் ஓட விட்டுப் பார்த்தான். இரண்டுமே வேறு மாடல் கார்கள்! ப்ளெராகதான்(blur) இருந்தது நம்பர் ப்ளேட். சைபர் க்ரைமில் கொடுத்தால் ஓரளவு என்ன நம்பர் எனக் கண்டுப்பிடித்துக் கொடுப்பார்கள். ஆனால் அதற்கு நாட்கள் எடுக்கும். அவர்களின் வேலைப்பளு அப்படி. அதனால் இதைப் போன்ற வேலைகளை வீராவே செய்து விடுவான்.

லாப்டாப்பில் இதற்கென இன்ஸ்டால் செய்து வைத்திருந்த சாப்ட்வேரை திறந்தவன், தனது வேலையை ஆரம்பித்தான். பல நிமிட போராட்டத்திற்குப் பிறகு கார் நம்பர் ப்ளேட்டை கண்டுப்பிடித்தான் இவன். உடனே கவினுக்கு அழைப்பு விடுத்தான் வீரமணிகண்டன்.

“சார்!” எனத் தூக்கக் கலக்கத்தோடு பேசினான் அவன்.

“நல்ல தூக்கமோ!”

“வைப் வீடியோ கால் போட்டு ரொம்ப நேரம் பேசனாங்க சார்! இப்பத்தான் படுத்தேன்! என்ன விஷயம் சார்? நான் என்ன செய்யனும்?” எனச் சட்டென அலர்ட்டானவனை மனதில் மெச்சிக் கொண்டான் வீரா.

“ரெண்டு கார் நம்பர் வாட்சப் பண்ணறேன்! எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் காரோட ஓனர் டீட்டேயில் வேணும்”

“டன் சார்!”

“குட் நைட் கவின்”

“சேம் டூ யூ சார்!”

மீண்டும் வைட் போர்ட்டைப் பார்த்தவன்,

“உங்க மூனு பேருக்கும் என்ன கனேக்‌ஷன்? எந்த பாயிண்ட்ல நீங்க கனேக்ட் ஆகறீங்க! நீங்க மூனு பேருதானா? இன்னும் வேற யாரும் இருக்காங்களா?” எனத் தனக்குத் தானே பேசிக் கொண்டான்.

மினிஸ்டர் மகளின் ரிசல்ட் வராத வரை இவனால் எதையும் தெள்ளத் தெளிவாக வரையறுக்க முடியாது என உணர்ந்தவன், காத்திருக்கும் கொடுமையை எண்ணி நொந்தவாறே படுக்கையில் விழுந்தான்.

சில நாட்களாய் சரியாய் தூங்காமல் காபியின் சக்தியிலேயே இயங்கிக் கொண்டிருந்தவனைதான் கவின் முகவரி கிடைத்து விட்டதென கூவி அழைத்தான்.

முதலில் அடையாறில் இருந்த முகவரிக்கு சென்றார்கள். அவர்கள் தேடி வந்த கார் அங்குதான் பார்க் செய்யப்பட்டிருந்தது. வீட்டு காலிங் பெல்லை அழுத்தி விட்டுக் காத்திருந்தார்கள் இருவரும். நடுத்தர வயதுடைய ஆண் ஒருவர் வெளியே வந்தார். இவர்களைப் பார்த்ததும்,

“யார் சார் வேணும்! என்ன விஷயம்?” எனப் படபடத்தார்.

காக்கிச் சட்டையைப் பார்த்தால் பயமும் தன்னாலேயே வந்து விடுகிறதே!

“இந்த கார் ஓனர் யாரு?”

“நான்தான் சார்”

“அப்போ நீங்கதான் வேணும்” எனக் கவின் சொல்ல, வியர்த்து விட்டது அவருக்கு.

அக்கம் பக்கம் உள்ளவர்கள், தலை நீட்டிப் பார்க்க,

“சார்! உள்ள வந்துப் பேசுங்க!“ என இவர்களை வீட்டின் உள்ளே விட்டார் அவர்.

கவின் அவரோடு நாற்காலியில் அமர, வீராவோ சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்தப் படங்களை நோட்டம் விட்டவாறே, வீட்டையும் தன் லேசர் கண்களால் ஓர் அலசு அலசினான்.

இப்படி கார் நம்பர் ப்ளேட் தெரியும்படி கடத்தல் செய்துவிட்டு, தைரியமாக அந்தக் காரை வீட்டு வாசலில் நிறுத்தி வைக்க மாட்டார்கள். இதற்குப் பின்னால் வேறெதுவோ இருப்பது போலத் தோன்றியது வீராவுக்கு.

எப்பொழுதும் கேட்பது போல தனது குறுக்கு விசாரணையை ஆரம்பித்தான் கவின். ஏற்கனவே அவரைப் பற்றி ஆதி முதல் அந்தம் வரை விசாரித்துத் தெரிந்துக் கொண்டுதான் வந்திருந்தார்கள். கவின் கேட்ட கேள்விகளுக்கு அவர் சொன்ன பதில் எல்லாம் திருப்திகரமாகதான் இருந்தது. அதில் தலையிடாமல், நின்றபடியே அவ்வீட்டுத் தலைவரை கூர்மையாய் பார்த்தபடி இருந்தான் வீரா. காமிராவுக்குத் திமிராய் சல்யூட் வைத்தவன் சராசரி உயரத்தில், திடகாத்திரமாய் இருக்க, இவர் குடும்பத் தலைவர்களுக்கான சர்வ லட்சணமும் பொருந்திப் போய் இருந்தார். அதாவது சரிந்து விழும் தொப்பை, லேசான வழுக்கை எனக் காட்சியளித்தார். பெண்கள் போலிசைப் பார்த்ததும் அடுப்படியில் ஒதுங்கி கொண்டார்கள்.

“உங்களத் தவிர கார யாராச்சும் ஓட்டுவாங்களா? தம்பி, மச்சான், இப்படி யாராவது?” எனக் கேட்டான்.

“சார்! இந்தக் காரு எனக்கு வரதட்சணையா வந்தது! என் பொண்டாட்டியப் பார்த்துக்கறது போல அதையும் கண்ணும் கருத்துமா பார்த்துக்கறேன் சார்! ‘கண்டவங்க எடுத்தாக் கெட்டுப் போயிடும், அக்கு அக்கா அழகு விட்டுப் போயிடும்’னு கமலஹாசன் சொன்னதை ஸ்ட்ரீக்டா ஃபோலோ பண்ணுறேன் சார்! ஆபத்து அவசரம்னு கேட்டா கூட யாருக்கும் குடுக்க மாட்டேன் சார்” எனத் பதட்டத்தில் உளறிக் கொண்டிருந்தவரைப் பார்த்து வீராவுக்கு மெலிதாய் சிரிப்பு வந்தது.

“க்கும்!” என வீரா தொண்டையைச் செறும,

தேதியைச் சொன்ன கவின்,

“இந்த டேட்ல கார யாருக்குக் கொடுத்தீங்க! உண்மைய சொன்னா விட்டுருவோம்! இல்லைனா, ஸ்டேஷனுக்குக் கூட்டிப் போறத தவிர வேற வழி இல்லை!” எனக் குரலை உயர்த்தினான்.

வீட்டுத் தலைவருக்கு பயத்தில் வார்த்தை வெளி வராமல் சதி செய்ய, இந்த மாதிரி நேரங்களில் கைக் கொடுக்கும் தெய்வமாம் குடும்பத்தின் தூண் வெளியே வந்தார்.

“சார்! நீங்க சொன்ன டேட்ல கார சர்விஸ்க்கு விட்டுருந்தோம் சார்! இந்தாங்க கடை ரசீது” என நீட்டினர் பெண்ணரசி.

“ஆமா சார்! ஆமா சார்” எனத் தலையை ஆட்டினார் வீட்டுத் தலைவர்.

“நாங்க செக் பண்ணிப் பார்ப்போம்! நீங்க சொன்னதுல எதாச்சும் கோக்குமாக்கு இருந்துச்சு, ஜெயில் களிதான்!” என அவர் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டு வெளியேறினான் கவின்.

ஜீப்புக்குப் போனதும்,

“ஏன்யா ஏன்? அந்த ஆளப் பார்த்தாலே தெரியுது அப்பாவின்னு! கடைசில அந்த பஞ்ச் தேவையா?” எனச் சிரித்தபடி கேட்டான் வீரா.

“அப்புறம் என்னா சார்! விசாரிக்க வந்தவங்க கிட்ட ராஜா கைய வச்சா பாட்டுப் பாடிக் காட்டறான்! இப்போ எல்லாம் ராங்க பூடுச்சுல்ல!” என இவனும் சிரித்தப்படியே சொன்னான்.

அடுத்த இடமாக மந்தைவெளிக்குப் போனார்கள். அங்கேயும் அதே மெக்கானிக் ஷெட்டுக்கு கார் ரிப்பேர் வேலைக்கு சென்றிருந்ததாக தகவல் கிடைத்தது.

மெக்கானிக் ஷாப் ஓனரை அள்ளிப் பொட்டுக் கொண்டுப் போய் ஸ்டேஷனில் வைத்து மிதித்ததில்,

“சார்! ப்ரைவட்டு நம்பருல இருந்து போன் போட்டு இந்த மாதிரி மூனு ஹவருக்கு மட்டும் கார் வேணும்னு கேட்டாங்க சார்! அமவுண்டு பெருசா சொல்லவும், சரின்னு ஒத்துக்கிட்டேன் சார்! ஒரு ஆள் தாடி மீசைன்னு மூஞ்சு கூட அடையாளம் தெரியாத அளவுக்கு வந்தான் சார்! கத்தையாப் பணத்த நீட்டனதும், நானும் சர்விஸ்க்கு வந்த காரத் தூக்கிக் குடுத்துட்டேன் சார்! கரீக்டா எந்த டேமேஜிம் இல்லாம காரத் திருப்பிக் குடுத்துட்டாரு சார்!  அதே போல நாலு தடவை நடந்துச்சு சார்! நானும் துட்டுக்கு ஆசைப் பட்டுக் குடுத்துட்டேன் சார்” என எல்லாவற்றையும் கக்கினான் அவன்.

“நாலு தடவையா?”  

“ஆமா சார்! நேத்து நாலாவது தடவை சார்”

“ஓ மை காட்!” என அதிர்ந்தான் வீரா.

“சார்! சார்! உங்களுக்குப் பார்சல் வந்திருக்கு!” என்ற ராகவனின் குரலில் பகீரென இருந்தது வீராவுக்கு.

பார்சலை வாங்கிப் பிரிக்க, அங்கே சமர்த்தாய் அமர்ந்திருந்தது ஒற்றை மோதிர விரல்.

“டேய் நாயே! புடிக்கறேன்டா உன்னை! இதே போல அங்கம் அங்கமா உன்னையும் வெட்டி அறுத்துப் போடறேன்டா!” எனக் கர்ஜித்தான் வீரமணிகண்டன்.

“சார்! பார்சல் கவர் பின்னால என்னமோ டைப் பண்ண மேசேஜ் இருக்கு!” எனச் சுட்டிக் காட்டினான் கவின்.

அதில் விடுகதையாய் ஒரு கவிதை இருந்தது!

“கதை கேளு கதை கேளு

கடவுளின் அவதாரம் அவன்

உடன்பிறந்தவனைக் காக்கத் தவித்த போது

இவள்தான் உயிர் மீட்டுக் கொடுத்தாள்

உயிர் கொடுத்தவளின் இன்னுயிரை

துடிக்க வைத்து எடுக்கப் போகிறேன்!

பெயரில் உள்ள வீரம் உடலில் இருந்தால்

வாடா என்னை வென்று போடா!!!!!!!”

(தொடுவான்….)

(போன எபிக்கு லைக் கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி! லவ் யூ ஆல் டியர்ஸ்)