Thoda Thoda Thodarkathai–EPI 9

280654150_1081598149094185_3262610077133346742_n-f25d40ce

அத்தியாயம் 9

 

Pedro Lopez(பெட்ரோ லோபேஸ்)—இந்த கொடூரக் கொலைகாரன் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்து கொன்றிருக்கிறான். குற்றம் நிரூபணமாகி சிறைக்குச் சென்ற இவனை, நன்னடத்தைக் காரணமாக விடுதலை செய்து விட்டனர். அதன் பிறகு மாயமான இவன், எங்கு போனான், என்ன ஆனான் என்பது மர்மமாகவே இருக்கிறது.

 

“இப்போ கல்யாணத்துக்கு ட்ரீட் குடுக்கலன்னு யார் அடிச்சா இவன! அதுவும் அப்பாவா வேற ப்ரோமோட் ஆகப் போறான்! இன்னும் புது மாப்பிள்ளைன்னு நெனப்பு! டூட்டில ஜாய்ன் பண்ணி இன்னும் ஓன் வீக் கூட ஆகல! அதுக்குள்ள வாடா, வாடான்னு டார்ச்சர் செய்யறான். ஷப்பா!! இவன் சரக்கடிக்க நான் ஒரு சாக்கு! ராஸ்கல்” என முனகியபடியே அந்த பெரிய ஆபிஸ் கட்டிடத்தில் தனது புல்லட்டை நிறுத்திப் பூட்டினான் வீரமணிகண்டன்.

சின்ன வயதில் இருந்தே திருச்சியைத் தாண்டி ஒரு கிராமத்தில்தான் இவன் லிவிங்ஸ்டன். தாத்தா பாட்டி இருவருக்கும் இவன்தான் மூத்தப் பேரன். இவனுக்கு அடுத்தது தங்கையாகிப் போக, சித்தப்பாக்களும், அத்தைகளும் பெண்களையே வாரிசாய் பெற்றெடுக்க, அந்தக் குடும்பத்தின் மகராஜனாய் ஆகிப் போனான் வீரா. அதிலும் அவன் தாத்தாவிற்கு இவன் கண்ணின் மணிதான்.

பாரம்பரியமாய் நல்ல வளம் நிறைந்தக் குடும்பமாய் இருந்தாலும், அப்படியே முடங்கிக் கிடக்காமல் வீராவின் அப்பா வீரமணிதாசன் சென்னையில் நட் அண்ட் போல்ட் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார். அவரது மனைவி விமலாவும் அவருக்குத் துணைவியாக மட்டும் இல்லாமல் தொழிலில் துணையாகவும் இருந்தார். தாசன் வெளியூர் பயணங்களுக்குப் போகும் போது தைரியமாக நிறுவனத்தை மனைவியிடம் விட்டுச் செல்லும் அளவுக்குத் திறமையானவர் விமலா.

தாயில்லாத விமலா பிரசவத்துக்குத் தாய்க்குத் தாயான மாமியார் வீட்டுக்கு வர, திரும்பிச் சென்னைக்குப் போகும் போது நால்வராய்தான் போனார். பேரனைப் பிரிய முடியவில்லை என தாத்தா பாட்டி இருவரும் அவர்களுடனே சென்னைக்கு வந்துவிட்டார்கள். தாத்தா வீரமணிக்கு கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது போல, சென்னையையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, பேரனையும் விட்டுக் கொடுக்க முடியவில்லை. அடிக்கடி,

“நம்ம ஊர் கிணத்துத் தண்ணில குளிக்கற சுகம் இங்க ஹீட்டரு போட்டு சுடுதண்ணில குளிக்கறதுல வரதில்லடா” என்பதில் ஆரம்பித்து,

“என்ன சாப்பாடு இது? நம்ம ஊருல விளைஞ்ச காய்கறி போட்டு சமைச்சா அமிர்தம் மாதிரி இருக்கும்! இங்க ஒரு வாய் ஆசையா வைக்க முடியுதா!” என்பதில் முடியும்.

இத்தனைக்கும் ஊரில் இருந்து அனுப்பட்ட காய்கறிகளில்தான் அவர் மனைவி சமைத்துக் கொடுத்திருப்பார்.

வீரா வளர வளர, தாத்தனின் புலம்பலும் வளர ஆரம்பிக்க, பொறுமையாய் இருந்த தாசன் ஒரு நாள் பொங்கியே விட்டார்.

“உங்க பேரனக் கூட்டிக்கிட்டு ஊருக்கே கிளம்புங்க! வாரா வாரம் நாங்க வந்துப் பார்த்துக்கறோம்”

மகன் மனம் மாறி விடுவதற்குள் பேரனை அலேக்காகத் தூக்கிக் கொண்டு அன்றே பெட்டியைக் கட்டி விட்டார் அன்புத் தாத்தா. காலையில் வெளியே போய் இரவு வீட்டுக்கு வரும் பெற்றவர்களை விட நாள் முழுக்க ராஜா, கண்ணு, சின்னு, மணிக்குட்டி எனத் தலையில் தூக்கி வைத்து ஆடும் தாத்தாவே குட்டி வீராவுக்கும் இஷ்டமாய் இருந்தார். இப்படிதான் திருச்சி, வீராவின் இருப்பிடமானது.

பள்ளி செல்லும் வயதில் சென்னைக்கு வரச் சொல்லி தாசன் கேட்க, தாத்தனை விட்டு விட்டு வர மாட்டேன் எனக் கறாராய் சொல்லி விட்டான் இவன்.  மகன் தன்னை விட்டு மனதாலும் உடலாலும் வெகு தூரம் போய் விட்டதில் விமலாவுக்கு மிகுந்த மனவருத்தம் இப்பொழுதும் உண்டு. மருமகளை மகளாய் எண்ணிப் பிரியமாய் இருக்கும் மாமனார், பேரனைப் பிரிய நேர்ந்தால் மனமுடைந்துப் போவார் என உணர்ந்தே தன் உரிமையை விட்டுக் கொடுத்தார் விமலா. 

திருச்சியில் நல்லப் பள்ளியாய் பார்த்து வீராவை சேர்த்து விட்டார்கள். ட்ரைவரோடு காலையில் போய் பேரனை விட்டு விட்டு, மறுபடியும் போய் கூட்டி வருவார் அவன் தாத்தா. அங்குதான் விஷ்ணு இவனுக்கு அறிமுகம். செகண்டரி படிக்கும் போது விஷ்ணுவின் குடும்பம் சென்னைக்கு மாற்றலாகிப் போக, நண்பர்கள் இருவரும் எப்பொழுதாவது தொலைபேசியில் பேசிக் கொள்வார்கள்.  

தாத்தனால் ஊட்டி வளர்க்கப்பட்டப் பாசத்தோடு, தேசபக்தியும் நெஞ்சில் உரமாய் ஏறி இருக்க, வெளியேப் பிடிக்காதது போலக் காட்டி தாத்தனின் பி.பியை ஏற்றினாலும் இஷ்டப்பட்டுத்தான் போலிஸ் வேலைக்கு ஆயத்தமானான் வீரா. டிகிரி முடித்து, கோச்சிங் போய், யூ.பி.எஸ்.சி பரீட்சை இரண்டு முறை எழுதி, ஐ.பி.எஸ் பயிற்சி முடித்து மும்பையில் பணியில் அமர்ந்தவனுக்கு தாத்தனின் இறப்பு பேரிடியாய் இருந்தது. பாட்டியும் அதற்கு முன்னமே இறந்துப் போயிருக்க, தனித்து விட்டது போல உணர்ந்தான் இவன்.

அதன் பிறகு அதிர்ஸ்டவசமாய் சென்னைக்கு மாற்றலாக, பெற்றவர்களோடு தங்கிக் கொண்டாலும், என்னவோ அவர்களோடு ஒட்டுதல் இல்லை இவனுக்கு. இத்தனைக்கும் விமலா இவனை அப்படிதான் பார்த்துக் கொள்வார். தங்கையோ அண்ணா, அண்ணாவென உயிரை விடுவாள். தாசன், தன் தந்தையின் மறுபதிப்பாய் இருக்கும் மகனின் மீது ஆதுரம் இருந்தாலும், ஒரு எட்டு மரியாதையாய் தள்ளிதான் நிற்பார்.

மகனின் ஒட்டாத்தன்மையை மாற்ற, திருமணம் எனப் பேச்செடுத்திருந்தார் தாசன்.

“தம்பி! பொண்ணு சஞ்சீவினி, எனக்குத் தொழில்துறைல பழக்கமான இண்டஸ்ட்ரியலிஸ்ட் தேவோட ரெண்டாவது மக. நல்லா படிச்சிருக்கா, பார்க்க ரொம்ப லட்சணமா இருக்கா! மூத்தப் பொண்ணுக்கு கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி உன் திருச்சி ப்ரேண்ட் விஷ்ணுவோட கல்யாணமாச்சி. நீதான் வேலை பிசின்னு அதுல கலந்துக்கல! ரெண்டாவது பொண்ணுக்கும் சூட்டோட சூடா கல்யாணம் முடிச்சுடனும்னு நெனைக்கறேன்னு சொல்லிட்டு இருந்தார். உன்னைப் பத்தி சொன்னேன். போலிஸ்னா பொண்ணுக் குடுக்கவே தயங்குவாங்க! இவரோ போலிஸ்னதும், உன் போட்டோ பார்த்துட்டு உடனே சரின்னுட்டாரு. பொண்ணு போட்டா மேசேஜ்ல அனுப்பிருக்காரு. நீ பார்க்கறியா? உனக்கு அனுப்பட்டா?”

“வேண்டாம்பா! எனக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்ல! வேலைல காண்ட்செண்ட்ரேட் பண்ணனும்! அதோட எனக்கு ஏத்தது போல, என் ப்ரோபெஷன அணுசரிச்சுப் போகிற மாதிரி பொண்ணுதான் எனக்கு வேணும். பணக்காரப் பொண்ணெல்லாம் கட்டிக்கிட்டு என்னால அவள பேபிசிட் பண்ணிட்டு இருக்க முடியாது! கூடவே இருக்கனும், அங்கயும் இங்கயும் அழைச்சிட்டுப் போகனும், அதயும் இதயும் வாங்கிக் குடுக்கனும், ஐ லவ் யூ, யூ லவ் மீன்னு பேணாத்தற வேலைலாம் எனக்கு ஆகாது! சோ சில வருஷம் போனதும், நம்ம ஊர்லயே ஒரு பொண்ணப் பாருங்க! நான் கட்டிக்கறேன்! இப்போ ப்ளீஸ், என்னை விட்டுருங்க” என வெட்டு ஒன்று துண்டு இரண்டாக சொல்லிவிட்டான் வீரா.

“என்னங்க இப்படி சொல்லிட்டுப் போறான்! பணக்காரப் பொண்ணு மட்டும்தான் புருஷனோட அருகாமைய தேடுவாளா? ஏழைப் பொண்ணுன்னா இருக்கறத வச்சிக்கிட்டு திருப்தியா வாழ்ந்துடுவாளா? எந்தப் பொண்ணுக்குமே பணத்த விட தன் கூட நேரத்த செலவு பண்ணற புருஷனத்தானே புடிக்கும்!” எனப் பெருமூச்சு விட்டார் விமலா.

“எங்கம்மா, எங்கப்பா சொன்ன சொல்லுக்கெல்லாம் சரிங்க மச்சான்னு ஆடனத பார்த்து வளந்தவன்ல, தனக்கும் அப்படியே வேணும்னு நெனைக்கறான் போல. உன் மகன் பெருசா படிச்சு பெரிய வேலைப் பார்த்தாலும் மனசால எங்கப்பன் மாதிரி காட்டுப்பையதான்” எனச் சலித்துக் கொண்டே வேலையைப் பார்க்கப் போனார் தாசன்.

தகப்பன் தன்னைக் கேட்காமலே பெண்ணின் போட்டோ வரை வாங்கியிருந்ததை எண்ணியபடி கடுப்புடன், லிப்டில் நுழைந்தான் இவன். அதன் கதவு மூடும் நேரம் டொக் டொக்கென அவசர எட்டுகளும்,

“ஹோல்ட் ஆன்!” எனும் தேன் குரலும் கேட்க, பட்டென தனது காலை நடுவில் வைத்துக் கதவு மூடுவதைத் தடுத்திருந்தான் வீரா.

லிப்ட் கதவு மீண்டும் திறந்துக் கொள்ள, புயலாய் உள்ளே நுழைந்தாள் பெண்ணொருத்தி. கோல்ட் பிங்க் கலரில் அணிந்திருந்த சன் கிளாசஸ்சை ஸ்டைலாகக் கழட்டி கையில் வைத்து சுழற்றியவாறே, எதிரில் இருந்தவனைப் பார்த்து,

“தேங்க்ஸ்!” என மொழிந்தவள், முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

அந்த சில நொடி நேரத்தில், அவள் பார்வையில் தெரிந்த அலட்சியம், உடல் மொழியில் தெரிந்த தெனாவெட்டு, ஆகிருதியான உருவம் கொண்ட ஆணொருவன் பக்கத்தில் நிற்கிறான் எனும் பிரக்ஞை என்பது சிறிதுமின்றி மெல்லியக் குரலில் ஏதோ பாடலை ஹம்மிங் செய்த விதம், முகத்தில் வந்து விழுந்த முடிக்கற்றைகளை ம்ப்ச் என சலித்தவாறே காதின் ஓரம் சொருகிய அழகு என எல்லாவற்றையும் கண் இமைக்காமல் பார்த்து, மயங்கித்தான் போனான் வீரமணிகண்டன்.   

‘என்ன அழகுடா சாமி! நம்ம கனவுல, தளைய தளைய சேலைக்கட்டி, மல்லிப்பூ சூடி, கொலுசு சத்தம் இசைக்க, மச்சான்னு எழுப்பி விடற கனவுக் காதலி போல இவ இல்லைனாலும், என்னமோ ஒன்னு இவ பக்கம் என்னைச் சுண்டி இழுக்குதே!’ என நினைத்தவாறே அவளையேப் பார்த்திருந்தான் இவன்.

இவன் இறங்க வேண்டிய தளத்தில்தான் அவளும் இறங்கினாள்.

“எக்ஸ்கியூஸ்மீ” என லேசாய் ஜொள்ளினான் வீரா.

“யெஸ்!” என மிடுக்காகக் கேட்டாள் இவள்.

“இங்க விஷ்ணுவோட கேபின்?”

“ரைட்ல போய் லெப்ட் கட் பண்ணுங்க! கதவுல நேம் போர்ட் இருக்கும்”

“தேங்க்ஸ்” என்றவனுக்கு அலட்சிய தலைச்சிலுப்பல் ஒன்றைக் கொடுத்து விட்டு தனது இடத்துக்கு நடந்தாள் இவள்.

“மேம்!” என இவன் அழைக்க, கடுப்புடன் திரும்பிப் பார்த்தாள் பெண்.

“நீங்க அவ்ளோ ஒன்னும் அழகா இல்ல! ஆனா அம்சமா ஆவ்சமா இருக்கீங்க”

முறைப்புடன் அவனைப் பார்த்தவள்,

“நீயும் அவ்ளோ ஒன்னும் அழகா இல்ல! ஆனா அசிங்கமா அய்யேன்னு இருக்க” என்றவள் விடுவிடுவென நடந்து விட்டாள்.

அவளது கூற்றில் கோபம் வராமல், பக்கென சிரிப்பு வந்தது இவனுக்கு.

“திமிரழகி!” என முனகியவாறே நண்பனைத் தேடிப் போனான் வீரா.

“டேய் வாடா இவனே! போலிஸ்னா பெரிய பருப்பா நீ! கல்யாணத்துக்கும் வரல, இப்போ வாடான்னு கூப்டாலும் சலிச்சுக்கறே!” எனக் கத்தியபடியே நண்பனை அணைத்துக் கொண்டான் விஷ்ணு.

“என்னடா அழகா! கல்யாணமாகி ஒரு சுத்துப் பெருத்துப் போயிட்ட! வயித்துல டயர் தெரியுது” எனச் சிரித்தபடியே நண்பனை வாரினான் இவன்.

“என் அழகுல பொறாமைடா உனக்கு! ஸ்கூல்ல இருந்து எல்லாப் பொண்ணும் உன்னை விட்டுட்டு என் கிட்ட ப்ரோபஸ் பண்ண காண்டு இன்னும் போகல போல!” எனச் சொல்லி சிரித்தான் விஷ்ணு.

கதவு தட்டும் ஓசை கேட்க,

“கம்மின்!” என்ற விஷ்ணு,

“நீ உட்காருடா! இன்னும் டென் மினிட்ஸ்ல நாம கிளம்பிடலாம்” என நண்பனை உபசரித்தான்.

உள்ளே வந்தப் பெண்ணைப் பார்த்ததும் வீராவின் முகம் மலர்ந்தது.

“மாம்ஸ்! ஒரு ப்ளடி ராஸ்கலால எனக்குத் தலையை வலிக்குது! காபி குடுங்க” என்றபடி ஒய்யாரமாய் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துக் கொண்டாள்.

“ஓன் மினிட்!” எனச் சொல்லி அவள் சொன்னதை செய்யப் போனான் விஷ்ணு.

“வீரா! உனக்கும் ஒரு கப் தரவா?” எனக் கேட்டான் அவன்.

“காபி குடிச்சா தலை வலி நிக்குமாமே! அதே போல தலை சுத்திக் கிறங்கிப் போச்சுன்னா எது குடிச்சா சரியாகும்?” என பெண்ணைப் பார்த்தபடி கேட்டான் வீரா.

“எலி பாய்சன்தான் சரியா இருக்கும் அதுக்கு” எனச் சொன்னவள், தனது காபி மக்கை விஷ்ணுவிடம் வாங்கிக் கொண்டு வெளியேற முற்பட்டாள்.

இவர்கள் இருவரையும் சுவாரசியமாகப் பார்த்த விஷ்ணு,

“வினிம்மா, இவன் என் ஸ்கூல் ப்ரேன்ட் வீரமணிகண்டன். வீரா, இது என் சிஸ்டர் இன் லா சஞ்சீவினி” என அறிமுகப்படுத்தினான்.

குடித்த காபி புரை ஏற,

“கம் அகேய்ன்!” என இருமல்களுக்கு நடுவே கேட்டான் வீரா.

“சஞ்சீவினி! மை சிஸ்டர் இன் லா”

‘ஓ மை காட்! இந்த காரமான டோ(தோ)ழியா இந்த வீராவுக்கு நேந்து விட்ட வெடக்கோழி? இவளயா பார்க்காமலே ரிஜேக்ட் பண்ணோம்!’ என நொந்துப் போனான் வீரமணிகண்டன்.

கிடைத்த தனிமையில் தகப்பனுக்கு போன் போட்டு, வினியைப் பிடித்திருப்பதாய் சொல்ல, அவரோ பெரிய குண்டைத் தூக்கி இவன் தலையில் போட்டார்.

“சாரிப்பா! உனக்குப் பிடிக்கலன்னு சொல்ல போன் செஞ்சேன். என்னை முந்திக்கிட்டு தேவ் மன்னிப்புக் கேட்டுட்டாரு!”

“ஏன்?”

“அவர் பொண்ணு, பையன் யார் எவருன்னு கூட கேட்கலியாம். எடுத்ததும் நோ சொல்லிட்டாளாம்! அதையும் மீறி ஏற்பாடு செஞ்சா எங்கயாவது போய்டுவேன்னு மிரட்டறாளாம். விடு! யாருக்கு எங்க அமையுமே அங்கதான் அமையும்”

“ஓஹோ!” எனப் பேச்சை முடித்துக் கொண்டாலும், வினியின் மேல் முளைத்திருந்த ஆசையை வெட்டி விட முடியவில்லை இவனால்.

என்னவோ அவளது அழகை விட, அவளது ஆர்ப்பாட்டமும், அடங்காத்தனமும் இவனை மிகவுமே கவர்ந்திருந்தது.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளைப் போய் பார்த்தான், பேசினான், கேக்கில் இருந்து பொக்கே வரை அனுப்பி வைத்தான். எதற்குமே அவள் அசரவில்லை. ஒரு நாள் திடுதிப்பென இவனைப் பிடித்திருக்கிறது என மேசேஜ் போட்டாள் வினி.

கோடு அவள் போட, ரோடு போட இவனுக்குச் சொல்லியாத் தர வேண்டும்! இருவரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சந்தித்தார்கள். மனைவிக்கு நேரம் ஒதுக்க முடியாது என பந்தா செய்தவன், கிடைத்த துளி ஓய்வு நேரத்தில் கூடத் தூங்காமல் வினியுடன் செலவளித்தான். அவள் ஆசைப்பட்டு பார்த்ததைக் கூட வாங்கிக் கொடுத்தான். மகராணியாய் அவளை உணர வைத்தான். ஆரம்பத்தில் ஏனோ தானோவென பழக ஆரம்பித்தவள், போகப் போக இவனோடு ஒன்றிப் போனாள்.   

“வினிக்குட்டி!”

“என்ன?”

“எப்படிலாம் உன்னைக் கொஞ்சறேன் நான்!”

“அதுக்கு!!!”

“ஒரே ஒரு தடவை என்னை ஆசையா மச்சான்னு கூப்பிடக் கூடாதா?”

“இதென்ன மச்சான் தச்சான்னு மஞ்சமாக்கான் கணக்கா கூப்ட சொல்லற நீ! ஆளுதான் கிராமத்தான் போல ரஃப் அண்ட் டஃபா இருக்கன்னு பார்த்தா, உன் ஆசையும் அப்படிதான் இருக்கு! நோ! ஐ காண்ட் டூ இட்!”

“ப்ளிஸ்டி!”

“நோ வே!”

“சரி விடு!”

“என்ன இப்போ? எதுக்கு முகம் ஏழு இன்ச்சுக்குப் போகுது?” எனக் கடுப்பானாள் இவள்.

அவன் எதுவும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.

“வீர்!”

அதற்கும் அமைதி அவனிடம்.

“வீரா!!!!!”

அமைதியோ அமைதி!

கடுப்பாகிப் போனாள் வினி. அவனது அமைதி உள்ளே என்னவோ செய்தது. தொண்டையைக் கணைத்தவள்,

“ம..ம..ஹ்ம்ம்… மச்சான்!” என அழைத்தாள்.

புன்னகையுடன் கண் விழித்தான் வீரமணிகண்டன். அவன் வாழ்க்கையில் நடந்ததெல்லாம் கனவாய் வந்ததற்கு, கடைசியாய் மயங்கும் முன்னே தன் காதலியின் மச்சான் எனும் அழைப்புதான் காரணமாய் இருக்கும் எனத் தோன்றியது. கண்ணைத் திறந்ததுதான் தாமதம், கை விண்ணென வலிக்க ஆரம்பித்தது. முகச் சுழிப்புடன், தன்னைச் சுற்றிப் பார்த்தவனுக்கு, கட்டிலின் அருகே அமர்ந்திருந்த வினி கண்ணில் பட்டாள்.

“பேபி!”என இவன் அழைக்கப் பாய்ந்து வந்து அவனைக் கட்டிக் கொண்டவள்,

“நான் பயந்துட்டேன் வீர்! கத்தியோட அவன் உன் பக்கம் வந்ததும், என் உசுரே போச்சுத் தெரியுமா! ரத்த வெள்ளத்துல மயங்கிக் கிடந்த உன்னை இங்க கொண்டு வந்து சேர்த்து, டாக்டர் ஒன்னும் சீரியஸ் இல்லைன்னு சொல்ற வரை துடிதுடிச்சிட்டேன்டா! வீர்! வீர்!” எனக் கண்ணீர் சொரிந்தவளை இன்னொரு கையால் அணைத்துக் கொண்டான் வீரமணிகண்டன்.

“ஒன்னும் இல்லடாம்மா! அதுக்குள்ள உன்னை விட்டுப் போய்டுவேனா! எவ்ளோ ஆசை, கனவெல்லாம் வச்சிருக்கேன்! அதெல்லாம் நிறைவேறாமா போய்டுவேனா என்ன!” என மெல்லியக் குரலில், தனது வலியையும் பொருட்படுத்தாமல் சமாதானப்படுத்தினான் வினியை.

அந்நேரம் இவர்கள் இருந்த மருத்துவமனை அறைக் கதவுப் படக்கென திறக்கப்பட, நான்கு பாடிகார்ட் சூழ உள்ளே நுழைந்தார் மினிஸ்டர்.

வீராவின் நெஞ்சில் சாய்ந்திருந்த வினி எழுந்துக் கொள்ள முயல, நக்கலாய் இவர்களைப் பார்த்த அவர்,

“என்ன இன்ஸு!!! பொண்ணப் பெத்தவங்க நெஞ்சுத் துடிதுடிக்க தவிச்சிட்டு இருக்கறப்போ, உனக்கு நெஞ்சுல ஒருத்திய சாய்ச்சுக்கிட்டு ரோமான்ஸா?” எனக் கத்தினார்.

“சார்!!!” என இவனும் குரலை உயர்த்த,

“நீ எக்கேடோ கெட்டுப் போ! எனக்கு என் பொண்ணு கிடைக்கனும்! என்ன வேணா பண்ணு! ஷூட்டிங் ஆர்டர் வேணுமா, வாங்கித் தரேன். எக்ஸ்ட்ரா ஆபிசர் வேணுமா, அரேஞ் பண்ணுறேன். எவன வேணா சுடு, எவனா வேணா அடி! எதுக்கும் உன் மேல கேஸ் ஆகாமப் பார்த்துக்கறேன்! எனக்கு என் பொண்ணு வேணும். அவ விரல வெட்டுனா நாய், துடிதுடிச்சு சாகனும்!” என கோபமாய் ஆரம்பித்தர்வ, முடிக்கும் போது தளர்ந்து விட்டார்.

அவர் பேசப் பேச அதிர்ந்து நின்ற வினி, மேசையில் இருந்த வாட்டர் பாட்டிலை அவர் புறம் நீட்டினார். அவளைக் கூர்ந்துப் பார்த்தவர்,

“உன்னை..எங்கயோ!!!” என யோசிக்க ஆரம்பிக்க, அவரது போன் சத்தம் போட ஆரம்பித்தது.

அவசரமாய் போனை அட்டேன்ட் செய்தவர்,

“என்ன?” எனக் கேட்டார்.

அங்கு சொல்லப்பட்டப் பதிலில்,

“ஒழுங்கா பொண்ண வளக்கத் துப்பில்ல! இப்போ காணோம்னு மயங்கி மயங்கி விழுந்தா ஆச்சா! ஹாஸ்பிட்டல்ல சேருங்க! நான் வரேன்!” எனக் கத்தினார்.

பின் வீராவைப் பார்த்து,

“எனக்கு ரெண்டே நாளுல என் பொண்ணு வேணும்யா! உசுரா கிடைச்சா சந்தோஷம்” எனச் சொல்லிக் கண்ணைத் துடைத்துக் கொண்டவர்,

“இல்ல அவ உடம்பையாச்சும் கண்டுப் புடிச்சுக் குடுய்யா! இருக்காளா இல்லையான்னு தெரியாம முனுமுனுன்னு நெஞ்சை அரிக்கற இந்த வேதனை இருக்கே! தகப்பனா இருந்தாதான்யா உனக்குப் புரியும்!” என்றவர், விடுவிடுவென வெளியேறி இருந்தார்.

அவர் போனதும் பேரமைதி அங்கே! வெட வெடவென உடல் நடுங்க, நிற்க தெம்பில்லாமல் நாற்காலியில் படக்கென அமர்ந்துக் கொண்டாள் வினி.

அந்த நேரம், வீராவுக்கு கவினிடம் இருந்து அழைப்பு வந்தது.

“சொல்லு கவின்!”

“சார் நீங்க சொன்ன பைக் நம்பர தேடிப் பார்த்திட்டோம். அது ஃபேக் நம்பர் சார்”

“ஓ!!”

“நீங்க கேட்டிருந்த மிஸ்ஸிங் கேஸ் டீட்டேயில் இன்னிக்கு வந்திருக்கு சார்”

“சொல்லு”

“அதுல நம்ம பொண்ணுங்களோட ஏஜ் மேட்ச் ஆகற போல ரெண்டு பேர் இருக்காங்க சார்”

“அவங்க பேரு என்ன கவின்?”

“ஒருத்தவங்க பேரு மதுமிதா சார்”

“மதுமிதா!! ஓகே!”

“இன்னொருத்தவங்க பேரு சரண்யா”

“சரண்யா! ஓகே காட் இட்!” என்றவன் தொப்பெனக் கேட்ட சத்தத்தில் அவசரமாகத் திரும்பிப் பார்க்க, அங்கே நாற்காலியில் இருந்து கீழே விழுந்துக் கிடந்தாள் சஞ்சீவினி.

“வினி!!!!!!!!!!!!!”

 

(தொடுவான்…)

 

(போன எபிக்கு லைக், கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி டியர்ஸ். அடுத்த எபியில் சந்திக்கும் வரை லவ் யூ ஆல்!!!)