TholilSaayaVaa22A
TholilSaayaVaa22A
காலை கண்விழிக்கும் பொழுது இன்னும் தான் பைரவின் அரவணைப்பிலேயே இருப்பதை உணர்ந்து மெல்ல எழுத்து குளித்துவிட்டு கீழ்தளத்திற்கு சென்றவள்,
“குட் மார்னிங் வாணிமா!” என்றபடி பேப்பர் படித்துக்கொண்டிருந்த வாணியின் கழுத்தை கட்டிக்கொண்டாள்.
“குட் மார்னிங்! என்ன காலங்கார்த்தால எழுந்துட்டே?” புன்னையுடன் கேட்டவர் அருகில் சென்று அமர்ந்தவள் அவர் தோளில் சாய்ந்துகொண்டு,
“ஹேப்பியா இருக்கு வாணிமா! ரொம்ப புதுசா டிஃபரெண்டா இருக்கு, சொல்லவே தெரியல” முகத்தில் பொங்கிவந்த புன்னகையை அடக்க முடியாமல் கனவுலகில் மிதந்து கொண்டிருந்த மருமகளின் செய்கையே நடந்தை வாணிக்கு உணர்த்த, அவள் உச்சியை வருடி கொடுத்தவர்,
“எப்போவும் இப்படியே சந்தோஷமா சிரிச்சுகிட்டே இரு கண்ணா! ஸ்டே ப்ளேஸ்ட்!” அவளை வாழ்த்தியதோடு நில்லாமல், பெரிய சாக்கலேட் பார் ஒன்றை அவளுக்கு தர,
“ஹை வாணிமா தேங்க்ஸ்! சோ ஸ்வீட்!” வாணியின் கன்னத்தில் முத்தமிட்டவள், “எனக்கு மட்டும்தானா அவனுக்கும் உண்டா?” ஆர்வமாக கேட்க,
“இனிமே தனி தனி கிப்ட் எல்லாம் கிடையாது. ஒழுங்கா ஷேர் பண்ணிக்கோங்க” சொன்னவர் முகத்திலும் ஆனந்தம்.
சாக்லேட் கவருடன் தங்கள் அறைக்கு ஓடியவள் அப்பொழுதுதான் கண்விழித்து, எழுந்து நின்ற பைரவை கண்டு பிரேக் அடித்து நின்றாள்.
ஏனோ முதல் முறை அவனை பார்க்க தைரியமின்றி வேறுபுறம் பார்வையை ஓடவிட்டவள், மௌனமாக நின்றுவிட, அவளை கூர்ந்து கவனித்தவன் சிலநொடிகள் கழிந்த பின்னரே அவள் முகத்தில் புதிதாய் குடியேறிய சிவப்பை கண்டுகொண்டான்.
ஒரே பாய்ச்சலில் அவளை நெருங்கி வேண்டுமென்றே அவள் முகத்தை பார்க்க இங்கும் அங்கும் நகர்ந்தவன் சிரிப்புடன்,
“ஹே வெட்க படுறியா என்ன?” தன் கண்களை நம்பமுடியாமல் வியப்புடன் அவளை பார்த்தான்.
“இ…இதானா?” திக்கி திக்கி அவள் திரும்பிக்கொள்ள, ஏனோ உரக்க சிரித்தவன்,
“அப்படிதான் போல இருக்கே! ஓஹ் மை காட்! நீ பொண்ணுதான்னு கன்ஃபார்ம் ஆகிப்போச்சு!” அவளை அணைத்துக்கொள்ள,
கடுப்பானவள், “அடேய்! அது நேத்து தெரியலையா?” அவனை முறைத்தபடி விலகினாள்.
“கொஞ்சூண்டு டவுட் இருந்துது… இப்போ இல்ல” வேண்டுமென்றே அவளை சீண்ட,
“போடா! வாணிமா சாக்கலேட் கொடுத்தாங்க, உன்கூட ஷேர் பண்ண வந்தேன். என்னையே கிண்டல் பண்றல? உனக்கு ஒரு குட்டி பீஸ் கூட தரமாட்டேன்!” அவனை முடிந்தமட்டும் முறைத்தவள் அறையை விட்டு வெளியேற எத்தனிக்க,
அவளை நகரவிடாமல் பின்னாலிருந்து அனைத்துக்கொண்டவன், “சும்மா!” அவள் தோளில் நாடியை வைத்து,
“என்னமோ நல்லா இருக்குல்ல இந்த ஃபீல்? தேங்க்ஸ் டா” அவள் தலையை முட்ட,
“உன் தேங்க்ஸ் எனக்கு வேண்டாம்”
“அப்போ என்ன வேணும்?”
“நான் உன்மேல கோவமா இருக்கேன்”
“நான் பாவம் மன்னிச்சுடுவியாம்”
“முடியாது டைம் வேணும்” ஒருவழியாக அவன் பிடியிலிருந்து விலகி நின்றாள்.
“தாராளமா டைம் எடுத்துக்கோ, 60 செகண்ட்ஸ் லிருந்து 1 மினிட் வரை எவ்ளோ வேணுமோ எடுத்துக்கோ நான்வெயிட் பண்றேன்” கையை கட்டிக்கொண்டு நின்றான்.
“ஆஹா தாராளம்! இன்னிக்கி ஃபுல்லா உன்கூட பேசமாட்டேன், ராத்திரி வாணிரூம்ல போயி தூங்க போறேன்! “ அவள் மிரட்ட,
அவனோ சிரிப்புடன், “போ போ நீ நைட் கைய போடு கால போடுன்னு அவங்களை இம்சை பண்ணுவ அவங்க உன்ன என்கிட்டே அனுப்பிடுவாங்க” கண்ணடித்தவன், “இனி நீயா நெனச்சாலும் என்னைவிட்டு இம்மியும் நகற முடியாது” அவள் உச்சியில் குட்டினான்.
“சுடச்சுட காபி ரெடி பண்ணு, நான் குளிச்சுட்டு வந்துடறேன்” அவள் உணரும் முன்னரே அவள் கன்னத்தில் முத்தமிட்டு கண்சிமிட்டியவன் மின்னல் வேகத்தில் குளியறையில் புகுந்து கொண்டான்.
***
வெங்கட் தன் திருமணவேலைக்காக விடுமுறையில் இருக்க பத்மாவின் பொறுப்பில் வேலைகள் வெகு தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. அன்று மாயா டெமோ கொடுக்கவேண்டிய நாளென்பதால் பதட்டத்துடன் காணப்பட்டாள்.
எப்பொழுதும் போல, அலட்டிக்கொள்ளாத வினோத், “ஃபர்ஸ்ட் டெமோ மாதிரி எதுக்கு இந்த பில்டப்? அசால்ட்டா மீட்டிங்க முடிச்சோமா, ஓகே பண்ணோமான்னு இல்லாம?”
அவனை முறைத்த மாயா, “ஏண்டா கொஞ்சம்கூட பயமே இல்லையா? என்னால உன்னமாதிரி இருக்க முடியாதுப்பா, உதறுது!”
“நீ சுத்த வேஸ்ட்! மாயா கிருஷ்ணனா இருந்தப்போ பயந்த பரவால்ல, இப்போ நீ மாயா பைரவ் விஸ்வநாத்! இந்த கம்பெனி சிஇஓ பொண்டாட்டி, ஓனரோட மருமக, ஆனாலும் வெட்டி பீசு மாதிரி சுத்துற! நானெல்லாம் உன் பொசிஷன்ல இருந்தா என்ன கெத்து காட்டிருப்பேன் தெரியுமா?” தலையை மறுப்பாக அசைக்க,
“என் வேலைல நான் ஜெயிச்சாதான்டா எனக்கு…” வாணியின் அழைப்பு வர பேச்சை நிறுத்தியவள்,
“சொல்லுங்க வாணிமா” என்றவள், மறுபுறம் வேறொருவர் குரல் கேட்க, “யார் பேசறீங்க?” புருவம் சுருக்க, அவள் கேட்ட விஷயத்தில் பதறியவள், நான் அவங்க மருமக தான், இதோ வந்துடறேன்” படபடவென அழைப்பை துண்டித்தவள்,
நொடியும் தாமதிக்காமல், கிளம்பியவள், “வாணிமா ஹாஸ்பிடல்ல இருக்காங்க நான் கிளம்பறேன்” வினோத்திடம், “நீ டெமோவ பாத்துக்கோ முடியாட்டி கேன்சல் பண்ணிடு” என்று படபடக்க,
தாங்கள் சமாளித்துக்கொள்வதாகவும், வாணியை கவனித்துக்கொள்ளும்படியும் தைரியம் சொல்லி மாயாவை நண்பர்கள் இருவரும் அனுப்பிவைத்தனர்.
பைரவுக்கு கால் செய்ய அவனோ அழைப்பை ஏற்காது மீண்டும் மீண்டும் அழைப்பை துண்டிக்க, கீர்த்திக்கு கால் செய்தவள் விஷயத்தை சொல்லி தான் கிளம்புவதாக சொல்லிவிட்டு புறப்பட்டாள்.
மருத்துவமனையை அவள் அடைந்த நேரம், எமெர்ஜென்சி அறை ஒன்றில் மயங்கிய நிலையில் வாணி படுக்கவைக்கபட்டிருக்க, மெல்ல அவரை நெருங்கி “வாணிமா… மா…” மெல்ல அவர் கையை தொட,
“நீங்கதான் அவங்க மருமகளா?” என்றபடி வந்த சற்று வயது முதிர்ந்த செவிலியர்,
“என்னமா வீட்ல ஒரு மனுஷிக்கு உடம்புக்கு முடியுதா இல்லையான்னு கூடவா பாக்க மாடீங்க? அவங்க வந்து டாக்டருக்கு வெயிட் பண்ணும்போதே மயங்கிட்டாங்க, கார்டியன் இல்லாம என்னனு ட்ரீட்மெண்ட் கொடுக்கறது? அதான் படுக்கவச்சுட்டு லாஸ்ட் டைல்ட் நம்பர் பாத்து கால் பண்ணோம்! நீ அவங்கள எழுப்பாத, இப்போதான் தூங்கறாங்க, நீ போய் டாக்டர் பார்த்துட்டுவா!”
“ஐயோ என்னக்கு தெரியாதே! என்னாச்சு? என்ன அவங்களுக்கு?” என்று பதற,
“நான் இதெல்லாம் சொல்ல கூடாது, டாக்டர் பாருங்க, அங்க இருக்காங்க” என்றபடி ஒரு அறையை காட்டியவர், “பெரியவங்கள கவனிக்க யாருக்கும் நேரமில்ல என்ன புள்ளைங்களோ!” முணுமுணுத்தபடி நடந்து செல்ல, டாக்டரை பார்க்க அவர் அறைக்கு விரைந்தாள்.
வாணியின் ரத்த அழுத்தம் மிகவும் உயர்ந்திருப்பதாக கூறிய மருத்துவர், அவரை பரிசோதிக்க கார்டியன் என்றமுறையில் சில பார்ம்களை கொடுத்துவிட்டு, காத்திருக்கும்படி சொல்ல,
அவர்கள் கொடுத்த படிவங்களில் கையெழுத்திட்டு வாணியை அட்மிட் செய்தாள். அறைக்கு மாற்றப்பட்டவர் ஒருமணிநேரம் கழித்தே கண்திறந்தார்.
“என்னாச்சு வாணிமா? எனக்காவது போன் பண்ணிருக்கலாம்ல? என்ன பண்ணுது?” விடாமல் கேட்க,
“ஒண்ணுமில்லடா…” பலவீனமாகவே பதிலளித்தவர், “ஒருவாரமா ரொம்ப வயத்தவலிக்குது அதான் டாக்டர் பாக்கலாம்னு வந்தேன், எப்போ மயங்கினனேனு தெரியல, இவங்க தேவையில்லாம சீன் கிரியேட் பண்ணிட்டாங்க. நீ ஆஃபீஸ் போடா நான் பாத்துக்கறேன். அவன் கிட்ட எதுவும் சொல்லாத ஆல்ரெடி ஸ்ட்ரெஸ்ல இருக்கான்” திக்கி திக்கி அவர் சொல்ல, கோவமான மாயா,
“ஒருவாரமா வலினா சொல்லியிருக்கலாம்ல? நான் எங்கயும் போகல, கொஞ்ச நேரத்துல ஸ்கேன் எடுக்க வருவாங்க, அப்புறம் பைரவ் வந்துகிட்டு இருக்கான் இப்போதான் கால் பண்ணான்.”
“என்னமா நீ? அவனை ஏன்…”
“உங்களைவிட என்ன பெரிய கம்பெனி? நீங்க பேசாம ரெஸ்ட் எடுங்க” அவர்கள் பேசி கொண்டிருக்கும் பொழுதே, வீல் சேருடன் வந்த செவிலியர், வாணியை ஸ்கேனிங் செய்ய அழைத்து சென்றார்.
மாதவனுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னவள், “நான் அப்டேட் பண்றேன்…” சொல்லிக்கொண்டிருக்க,
“மாயா அம்மா எங்க?” புயலென அறைக்குள் நுழைந்தான் பைரவ்.
விஷயத்தை சொன்னவள், “நீ உட்காரு, இந்தா தண்ணி குடி. அவங்க கிளம்பி கொஞ்ச நேரமாச்சு வந்துருவாங்க” அவனை ஆசுவாச படுத்தினாள்.
“நீ என்னதான் பண்ற? ஒருவாரமா முடியலைன்னு இருந்துருக்காங்க, இப்படியா பொறுப்பில்லாம இருப்ப?” அவளை கடிந்துகொள்ள,
“டேய்! நீயும்தானே அதே வீட்ல இருக்க? உனக்கு எவ்ளோ தெரியுமோ அவ்ளோதான் எனக்கும்! சும்மா உன் டென்ஷனை என்மேல காட்டாத. ரெண்டு பேருமே அவங்களை கொஞ்சநாளா வேலைவேலைன்னு கண்டுக்கல, ஒழுங்கா உட்காரு வந்துரு…” அவள் முடிக்கும் முன்பே,
“நான் போயி பாக்கறேன்” என்றவன் அறையை விட்டு வெளியேற, “என்னவோ பண்ணிக்கோ!” கோவமாக நாற்காலியில் அமர்ந்துகொண்டவள் கண்களைமூடி, வாணிக்காக கடவுளை பிரார்த்திக்க துவங்கினாள்.
ஸ்னேனிங் அறையின் வாயிலில் இங்குமங்கும் நடந்துகொண்டிருந்தான் பைரவ்.
ஸ்கேன் முடிந்து வெளியே வீல் சேரில் வந்த வாணியை கண்டவன் கண்கள் கலங்க, “அம்மா!” என்றபடி வாணியை நெருங்கியவன், “ஒருவார்த்தை சொல்லாம என்ன நீ? இப்போ எப்படி இருக்கு? என்ன சொல்றாங்க? என்ன பண்ணுது?” விடாமல் கேட்க,
வாணி சமாதானம் சொல்லும் முன்னரே செவிலியர், “சார் இங்க கத்த கூடாது, ரூம்குள்ள போயி பேசிக்கோங்க” அவனை எச்சரித்தப்படி வாணியை அறைக்கு அழைத்து சென்று விட்டவர், பைரவிடம் “சார் அரைமணிநேரத்துல உங்க காப்பி ரிப்போர்ட் வந்து வாங்கிக்கோங்க, டாக்டருக்கு நாங்க ஒரு காப்பி அனுப்பிடுவோம். அவர் கூப்பிடும்போது நீங்க போயி பாருங்க” என்று சென்றுவிட, தலையை சரி என்று அசைத்தவன், வாணியின் அருகே நாற்காலியை போட்டு அமர்ந்துகொண்டு பேச, மாயாவும் மறுபுறம் நின்று பேச துவங்கினாள்.
சிறிதுநேரத்தில் மீண்டும் வாணி உறங்கிவிட, நாற்காலியில் அமர்ந்திருந்த பைரவிடம் சென்றவள், “ஒன்னும் இருக்காது! அவங்க சரி ஆனதும் குலதெய்வம் கோயிலுக்கு போயிட்டு ஊர்ல கொஞ்சநாள் இருந்துட்டு வருவோம் சரியா?” அவன் சிகையை வருடி கொடுக்க, “எனக்கு பயமா இருக்கு டா” கண்கள் கலங்கியவனை தன்னோடு சேர்த்துக்கொண்டவள் மெள்ள அவன் முதுகை வருடி கொடுத்தபடி இருந்தாள்.
ஸ்கேன் ரிப்போர்ட் தயாரென போன் வர, அதை பெற்றுக்கொள்ள சென்றான் பைரவ்.