TholilSaayaVaa23

TholilSaayaVaa23

உணவகத்திற்கு நண்பர்களுடன் சென்ற மாயா பேசிக்கொண்டிருக்க பேச்சின் நடுவே பத்மா, “கேக்கறேன்னு தப்பா எடுத்துக்கமாட்டேல்ல?”

மாயா, “இல்ல கேளு.”

“கல்யாணம் ஆகி நாலைஞ்சு மாசம் கூட ஆகல அதுக்குள்ள ப்ரெக்னன்ட்… ஹனிமூன்க்கு கூட போகல, ரொமான்டிக் டைம மிஸ் பன்றேன்னு தோனலயா?”

“ஹே லூசு” வெங்கட் முறைக்க, வினோத், “உனக்கென்ன வந்தது அவங்க எப்போ பெத்துக்கிட்டா என்ன? மேன்னர்ஸ் இல்ல உனக்கு?” என்று கடுகடுத்தான்.

“சாரி” என்று பத்மா தலை குனிய, மாயா புன்னகையுடன், “ஹே பரவால்ல. எங்களுக்கு பெரிசா பிளான் எதுவுமே இல்லடா, எல்லாம் ஏதோ நன்மைக்கேன்னு நெனச்சுக்கறோம் அவ்வளவுதான். பிளஸ் நீ சொல்ற மாதிரி மிஸ் பண்ற பீல் எதுவும் இல்லடா” என்றவள் மெளனமாகச் சாப்பிடத் துவங்கினாள்.

ஆண்கள் இருவரின் முறைப்பினால் அமைதியான பத்மா அமைதியாக இருக்க மாயா, “கேக்கணும்னு நெனச்சேன், சினிமால கர்ப்பமானா மொதல்ல வாந்தி தான எடுப்பாங்க? எனக்கு அதெல்லாம் வரவே இல்லையே! தலை கூட சுத்தலை தெரியுமா! ஏன்?” என்று வாயில் ஸ்பூனை வைத்துக்கொண்டு கேட்டபடி யோசிக்க,

வினோத், “என்னமோ நாங்க எல்லாரும் நாலு புள்ள பெத்தமாதிரி கேக்குற? நான் இனிமேதான் கீர்த்துவ லவ்பண்றதை வீட்ல எப்படி சொல்லுறதுனு யோசிச்சுகிட்டு இருக்கேன், இதோ இவன் இனிமேதான் பல வருஷமா லவ் பண்ண பொண்ண கல்யாணம் பண்ணப்போறான்,

பத்மா என்னடான்னா லவ்வும் பண்ணமாட்டேங்குறா, வீட்ல பாக்குற எல்லாரையுமே வேண்டாமுன்னு சாதிச்சுக்கிட்டு இருக்கா…”

வெங்கட், “நீ தான் எங்க எல்லாருக்குமே சீனியர்” என்று சிரிக்க, பத்மா மட்டும் சாப்பிடாமல் சங்கடத்துடன் மௌனமாக இருந்தாள்.

அவள் கையைப் பற்றிய மாயா, “ஹேய்கூல்! ஃப்ரீயா விடு” என்றவள் பேசிப் பேசியே அவளைத் தேற்றிச் சாப்பிடவைத்தாள்.

***

மீட்டிங் அறையில் கம்பெனியை விரிவுபடுத்தும் பொருட்டு, ஆலோசனை கலந்தாய்வில் அமர்ந்திருந்த பைரவ், சில நிமிடங்களாகவே நெஞ்செரிச்சல் பிரட்டல் என்று கவனம் செலுத்தமுடியாமல் அவதிப்பட துவங்கினான். அவன் பேசவேண்டிய முறைவர பேசத்துவங்கியவன், பிரட்டல் அதிகரிக்க அறையைவிட்டு வேகமாக வெளியேறினான்.

முதலில் ஏதோ அஜீரணமென அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏனோ அடிக்கடி தலைச்சுற்றல், வாந்தியென விடாமல் தொடர, மாயாவை செக்கப்பிற்கு அழைத்துச்செல்லும்பொழுது, தானும் அதே மருத்துவமனையில் மருத்துவரை சந்தித்தான்.

அவனை சோதித்த மருத்துவர், “டெஸ்ட் ரிசல்ட் நார்மல்தான். எவளோ நாளா இதெல்லாம் இருக்குன்னு சொன்னீங்க?”

“அல்மோஸ்ட் மூனு நாலு வாரமா இருக்கு, டயட் நார்மலா தான் மெயின்டெயின் பண்ணறேன். அப்படியும் இந்த பிரட்டல் வலியெல்லாம் எதுனாலன்னு புரியலை” பைரவ் குழப்பத்துடன் சொல்ல,

மருத்துவர் பேசத் துவங்கும் முன்னே பேசத் துவங்கிய மாயா, “அதுமட்டும் இல்ல இவருக்கு என்னைவிட மோசமா என்னென்னமோ தோணுது, நானாவது மசக்கை இத சப்படணும் அத சாப்பிடணும்னு ஆசைப்பட்டு கேட்டா பரவால்ல,

இவர் என்னைவிட ஓவர் க்ரேவிங்ல மோசமா இருக்கார், போன வாரம் ஒரு குறிப்பிட்ட ஹோட்டல் ஊறுகாய்தான் வேணும்னு அந்த ஹோட்டல்காரன்கிட்ட சண்டைக்கு நின்னு என் பொண்டாட்டிக்கு மசக்கை இந்த ஊறுகாய்தான் வேணும்னு சொல்றார்னு புருடா வேற விட்டு 2 பாட்டில் வாங்கிட்டு வந்தார், இப்போவே பதி பாட்டில் காலி!” இதாவது பரவால்ல…” அவள் கையைப் பிடித்து அழுத்தியவன், அவளை ஓரக்கண்ணால் முறைக்க, அவனைக் கண்டுகொள்ளாதவள்,

“சாப்பாடு மட்டுமில்ல டாக்டர், போனவாரம் கார்ட்டூன் பார்த்து அழுதுகிட்டு இருக்கார், கேட்டா க்ளைமேக்ஸ் ஸீன்ல வந்த நாய்க்குட்டி கியூட்டா இருந்ததுன்னு அழுதுகிட்டு இருந்தார்.

இதுல பாவமே என் மாமியார்தான் இவர் பண்ணுற இம்சை போதாத குறைக்கு என் படுத்தல்னு அவங்க தான் மண்டை காயுறாங்க. நான் கர்ப்பமா இவர் கர்ப்பமானே புரியலை” என்று சிரித்தவள், “ஸ்ஸ்” என்று கையை இழுத்துக்கொண்டு,

“உங்ககிட்ட சொல்லுறேன்னு கிள்ளுறார்” மருத்துவரிடம் புகார் சொல்ல, பைரவிற்கு தலையில் அடித்துக்கொள்ளலாம் போல இருந்தது.

புன்னகையுடன் அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட மருத்துவர், “நீங்க இதெல்லாம் தானே மொதல்ல சொல்லிருக்கணும்? கவலைப்பட ஒண்ணுமில்ல, இத நாங்க ‘கோவேட் சின்ரோம் (Couvade Syndrome)ன்னு சொல்லுவோம்”

“ஐயோ இதென்ன புது வியாதியா?” என்று பதற,

புன்னகையுடன் மறுப்பாகத் தலையசைத்த மருத்துவர், “ இது வியாதி இல்ல , இது ஒரு மனசு சம்மந்தபட்ட விஷயம்னு சொல்லாம், மனைவி கர்ப்பமா இருக்கும் பொழுது சில ஆண்களுக்கு ஜாஸ்தி எமோஷனல் ஆகும் போது ஹார்மோனல் மாற்றங்கள் வரும், அது கிட்டத்தட்டக் கர்ப்பமான பெண்களுக்கு இருக்க மசக்கை, சென்சிடிவ் எமோஷன் எல்லாம் இருக்கும். பரிவு மசக்கைன்னு சொல்லலாம். குழந்தை பிறந்தா இவருக்கும் சரியாகிடும்! நான் கொஞ்ச டேப்ளெட்ஸ் தரேன், கண்ட்ரோல் ஆகும்” என்றவர், மேலும் அவர்களுக்குச் சில அறிவுரைகளைச் சொல்லி அனுப்பிவைத்தார்.

காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தவள் மனம் முழுதும் மருத்துவர் சொன்னதிலேயே இருந்தது. கருவைத் தான் சுமந்தாலும் மனதளவில் பைரவும் அனைத்தையும் உணர்வது அவளுக்குப் புதுவிதமான உணர்வைத் தந்தது. தன்னை போலவே போட்டி போட்டுக்கொண்டு அவதிப்படும் தன் கணவனை இன்னும் இன்னும் பிடித்துப்போனது.

அன்றிரவு வாணியிடம் அனைத்தையும் சொல்லி இருவரும் சிரிக்க, அவரோ, “இதென்ன புதுசா இருக்கு இதெல்லாம் நான் கேள்விப்பட்டதே இல்ல, என்னென்னமோ சொல்றீங்க. நல்லபடியா இருந்தா சரி” என்றுவிட்டு, “டின்னர் ரெடியாகிடும் டிரஸ் மாத்திட்டு வாங்க” என்று உணவை எடுத்துவைக்கத் துவங்கினார்.

இரவு உணவிற்குப் பின், வாணியுடன் பைரவ் வீடியோ கேம் ஆடிக்கொண்டிருக்க, அவர்களது விளையாட்டைப் பார்த்தபடி சுடச்சுட வெங்காய பக்கோடாவை மொசுக்கி கொண்டிருந்தவள்,

“வாணிமா”

“ம்ம்”

“இன்னும் கொஞ்சம் பக்கோடா செஞ்சு தரீங்களா?” ஆசையாகக் கேட்க,

பைரவ், “போதும் ஆல்ரெடி 2 கப் பக்கோடா சாப்பிட்ருக்கே, இதுக்குமேல பசிச்சா பழத்தை சாப்பிடு”

“முடியாது! எனக்கு பக்கோடா தான் வேணும்” அவள் அவனை முறைக்க,

“கண்டதையும் தின்னுட்டு, ஆசைக்கு கொஞ்சம் சாப்டா பரவால்ல” என்று கடுகடுதான்.

கேம் கண்ட்ரோலரை கீழே வைத்த வாணி, “பாவம் ஆசையா கேட்குறா” மகனை விரட்டியவர், “நான் செஞ்சுதாறேன்டாமா” என்று எழ, அவர் கையைப் பிடித்து நிறுத்திய பைரவ் கோவமாக,

“என்னமா அவதான் புரியாம கண்டதையும் தின்னுறான்னா நீயுமா? ஏதாவது ஏடாகூடமா தின்னுட்டு அப்புறம் தலைவலி வாந்தின்னு படுத்தவேண்டியது,

ஒழுங்கா ஹெல்தியா எதையான தின்னச்சொல்லு இல்லனா தண்ணிய குடிச்சுட்டு போயி தூங்க சொல்லு, பக்கோடாவே டூமச்! இதுல ராத்திரி பத்துமணிக்கு மூணாவது கப்புவேணுமாம்” படபடவெனப் பொரிந்தவன், மாயாவிடம்,

“நான் தூங்கபோறேன், மரியாதையா வந்து சேறு, நான் போனப்புறம் நீயும் அம்மாவும் எதாவது உள்கை செஞ்சீங்க தொலைச்சுடுவேன்” என்று மிரட்ட,

“போதும்டா ஓவரா பாவம்…” பேச எத்தனித்தவரை, கையைக் காட்டி நிறுத்தியவன், “புரிஞ்சுக்கோ ப்ளீஸ்” என்று கண்களால் அவன் ஆதங்கத்தை வெளிப்படுத்த, சரியென்று கண்ணசைத்து மகனை அனுப்பிவைத்தவர், மாயாவை சமாதானம் செய்து அறைக்கு அனுப்ப முயற்சிக்க,

அவளோ கோவம் சற்றும் குறையாது, “முடியாது அவன் எப்போப்பாத்தாலும் இப்படியே படுத்துறான், நான் இங்கேயே உங்க கூட தூங்கறேன், ரூம்க்கு போகமாட்டேன்” அடம்பிடித்தவள் வாணியின் அறையிலேயே படுத்துக்கொண்டாள்.

அறையில் மனைவியின் வருகைக்காக, அவளைச் சமாதானம் செய்யத் திட்டம் தீட்டிக்கொண்டு அமர்ந்திருந்தவன், நேரம் பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருக்க, அவளைத் தேடி கீழ்த்தளத்திற்குச் செல்ல, அவளோ வாணியின் அருகில் உறங்கிக்கொண்டிருந்தாள்.

‘அடிப்பாவி உனக்காக தூக்கத்தை கெடுத்துகிட்டு நான் முழிச்சுகிட்டு கெடக்கேன் நீ என்னடான்னா…’ முகம் சுருங்கியவன், அவளை எழுப்ப மனமின்றி, வாணியின் அறையிலேயே தரையில் பாயை விரித்துப் படுத்துக்கொண்டான்.

எப்பொழுதும்போல மசக்கையின் புண்ணியத்தால் விடியும் முன்பே உறக்கம் கலைந்து, எழுந்தவள் தரையில் சுருண்டு படுத்திருந்தவனை அங்கு எதிர்பார்த்திருக்கவில்லை, இருட்டில் அவன் காலை மிதித்தவள் என்னவோ என்று பயந்து அலற, வலியில் எழுந்த பைரவோ “ஐயோ!” என்று கத்த, வாணியும் பதறி எழுந்து விளக்கைப் போட, மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சிலநொடிகள் கழித்துச் சிரித்துவிட்டனர்.

“எது இங்க வந்து இப்படி மரவட்டையாட்டும் சுருண்டு?” மாயா சிரிக்க, குமட்டல் எடுக்கக் குளியலறைக்கு ஓடிவிட்டாள்.

வாணி, “டேய் ஒருநாள் இங்க படுத்துக்கறா, நீ ஒழுங்கா ரூம்ல தூங்கினா என்ன?” சிரிப்பைக் கட்டுப்படுத்த திணற,

“பின்ன நீங்க ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்துட்டு என்ன கழட்டிவிட்டா நான் பாவமில்லையா?”

முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு கண்களைக் கசக்கியபடி சொன்ன மகனை ஆதங்கத்துடன் பார்த்தவருக்கு,
இன்னும் சிலவாரங்களில் பிரசவத்திற்காகச் சீமந்தம் முடிந்து செல்லப்போகும் மாயாவின் சிலமாத பிரிவை எப்படி கையாளுவானென்ற கவலை தொற்றிக்கொண்டது.

***

ஏழாம் மாதம் சீமந்தம் செய்வதாகத் தேதி பார்த்தவர்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய துவங்கினர். பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு செல்லவேண்டி இருக்க, மாயா சொல்லச் சொல்ல அவளுக்குத் தேவையான துணிகளைச் சூட்கேசில் வைத்துக் கொண்டிருந்த பைரவ் முகம் வாடியே இருக்க,

“டேய் என்னடா ஆச்சு? ஏன் இப்படி இருக்க?” அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்து கேட்டாள்.

“போடி உனக்கு ஒரு ஃபீலிங்கும் இல்ல! என்னமோ டூர் போகுற மாதிரி ஜாலியா இருக்க! எனக்கு எவளோ போர் அடிக்கும் நான் என்ன செய்வேன்? இதெல்லாம் உனக்குக் கவலையே இல்ல, இந்த குர்தா வேணுமா?” கேட்டபடி உடையைக் காட்டியவன்,

“இதுல பாதிக்குமேல உனக்கு பத்தவே பத்தாது போல இருக்கே, குண்டு பூசணிமாதிரி ஆகிட்டே வர சொல்லிட்டேன்” அவளை வம்பிழுத்தபடியே துணியை மடிக்க, அவனைக் கொலைவெறியோடு மாயா முறைத்ததைக் கண்டுகொண்டவன், அவள் முகத்தைப் பாராது தவிர்த்தான்.

அவள் கோவமாக ஏதாவது சொல்லுவாளென்று எதிர்பார்த்தவன், அவள் மௌனமாக இருக்கவும் அவளை நிமிர்ந்து பார்க்க, அவளோ, கண்கள்‌ கலங்க அவனையே பார்த்திருந்தாள்.

பதறியவன், “சாரிடா சும்மா விளையாட்டுக்கு… ஐ லவ் யு! மிஸ் பண்ணுவேன் அதான் பயமாயிருக்கு” அவளை அணைத்துக் கொண்டான்.

மூக்கை உரிந்தவள், “ஐஸ் க்ரீம்” என்று சொல்ல.

“என்னமா?” அவள் முகத்தைப் பார்க்க,

“ஐஸ் கிரீம் வேணும்!”

“…”

“இப்போவே!” அவள் அடம்பிடித்து கத்தியதில், “சரி சரி” என்றவன்,

“ஒருத்தன் பீல் பண்ணுறனே, பாசமா நாலு வார்த்தை பேசுவோம்… ஹம் அதெல்லாம் இல்ல ஐஸ் க்ரீம் வேணுமாம் ஐஸ் க்ரீம்” முணகியபடி அவள் கேட்டதைக் கொடுத்தான்.

அவள் காதுப்படவே மீண்டும், “குண்டு பூசணி” என்று முணுமுணுக்க,

ஐஸ்க்ரீம் கப்பை கோவமாகக் கீழே வைத்தவள், “போடா! உனக்கு நான் வேண்டாம்… யாராவது ஒல்லியான பொண்ணா பாத்து கட்டிக்கோ!” என்று கடுகடுத்தாள்.

“இனிமே என்னை யாரு கல்யாணம் செஞ்சுப்பா?” என்று அவன் அலுத்துக்கொள்ள,

“நானே பொண்ணு பாத்து தரவா?” என்று இவள் முறைத்து கேட்க,

“சூப்பர்!” என்றவனைத் தோளில் அடித்தவள், அழத் துவங்கி விட்டாள்.

“ஹே சீ! சும்மா விளையாடினேன்” அவளைச் சமாதானம் செய்ய,

“போடா! நான் எங்கம்மா வீட்டுக்கு கிளம்புறேன்” கண்களைத் துடைத்துக்கொண்டு முறைக்க,

முகம் வாடியவன், “எப்படியும் அடுத்தவாரம் அம்மா வீட்டுக்கு போகனும்தான?” என்று மீண்டும் முகம் வாடினான்.

“இல்ல இப்போவே கோவமா போறேன்!” என்று அவள் நாற்காலியிலிருந்து எழ,

அவள் டீஷர்ட்டின் நுனியைப் பிடித்தவன், “இதுக்கெல்லாமா கோவ படுவ? குழந்தையைப் பத்தி யோசிடா!”

“என்ன குழந்த?”

“நம்ம குழந்தடா… நீ கர்ப்பமா தான இருக்க?”

“இதுல என்ன டவுட்டு? நீதான் தொப்பையை தொட்டு பாக்குறல?” கடுகடுத்தபடி அவள்விலகி நிற்க,

“நீ தானேடா என்ன குழந்தைனு கேட்ட?” என்றவன், அவளை மென்மையாக அணைத்துக்கொண்டு, “சும்மா சும்மா இப்படி கோவ படக் கூடாது!”

“முடியாது!”

“நீ செல்லமாம் கோவப்படாம இருப்பியாம்!”

“ம்ஹும் முடியாது!”

“என்ன நீ இப்படி… இரு நீ கேட்ட அதே சாக்கலேட் வாங்கிட்டேன்… சொல்ல மறந்துட்டேன்” என்று பேச்சை மாற்றினான்.

“எங்க?” அவள் கோவம் மறந்து கேட்க,

“கார்ல, இதோ வரேன்”

“உருகி போயிருக்கும், சீக்கிரம் போ” அவனை அனுப்பி வைத்தவள் சோர்வாக, கட்டிலில் படுத்துக்கொண்டாள்.

காரை நோக்கி நடந்தவனோ, ‘அப்பாடா மசக்கையால பொழைச்சேன்! இவ்வளோ நாளா மசக்கை இருக்கும்! விடு இருக்கிறவரை நல்லதுதான். இல்லனா இவளை எப்படி சமாளிப்பேன்’ யோசித்தபடியே சென்றான்.

பெற்றோரும், உறவினரும் நெருங்கிய நண்பர்களென எளிமையாகவே மாயா சீமந்தம் நடந்தது. அதுவரை எதையும் உணராதவளும், பெற்றோர் வீட்டில் அவளை விட்டுவிட்டு பைரவும் வாணியும் கிளம்பும் நேரம் அழத் துவங்கிவிட, அவளைச் சமாதானம் செய்ய முடியாமல் போகவே, அன்றிரவு பைரவை அங்கேயே தங்கும்படி சொல்லிவிட்டு வாணி மட்டும் வீடு திரும்பினார்.

சில நாட்களாக மாயா தூக்கத்தில் புலம்பத் துவங்கி இருக்க, பைரவிற்கும் தூக்கம் சற்று தூரமாகத்தான் இருந்தது. அன்றும் வழக்கம்போல உறக்கத்தில்,

“நாய் குட்டி… நாய் குட்டி பொறக்கப்போகுது” என்று முனகியபடி உறக்கம் கலைந்தவளை பார்த்து மென்மையாகச் சிரித்தபடி,

“விடுடா! அடுத்த வாட்டி நாம பூனை குட்டி பெத்துக்கலாம்… நீ நிம்மதியா தூங்குவியாம்” தட்டி தட்டி மாயாவை மீண்டும் தூங்கவைத்தான்.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!