TholilSaayaVaa24

TholilSaayaVaa24

சில நிமிடங்கள் கூட சேர்ந்தாற்போல் அமர்ந்து வேலை செய்ய முடியாமல் தவித்த மாயா, அவ்வப்போது எழுந்து காரிடரில் நடக்க, அவளுக்குப் பேச்சுத் துணையாகப் பத்மாவோ வினோத்தோ மாறி‌ மாறி உடன் நடந்தனர்.

“வினோத் எங்கடா அந்த வேதாவை காணோம்? கிட்டத்தட்ட ஒரு மாசமாச்சு அவளைப் பார்த்து” மூச்சுவாங்கத் தன் சீட்டில் அமர்ந்து நீரை பருகியபடி மாயா கேட்க,

பத்மா, “உனக்கு பைரவ் சார் சொல்லலையா?” என்று அவளைக் கேள்வியாகப் பார்த்தாள்.

“என்னன்னு?”

“நீ கர்ப்பமானதே இப்பதானே எல்லாருக்கும் தெரியும்! அவ பைரவ் சார் ரூம்க்கு போயி வம்பு பண்ணிருக்கா”

“என்னன்னு?”

“வேற என்ன மறுபடி ஏதோ ட்ரை பண்ணத்தான்” வினோத் சிரிக்க,

அதிர்ந்த மாயா அதிர்ச்சியை வெளிக்காட்டாது, “பாவம் ரொம்ப லவ் பண்றாளோ? சரி விடு நல்லதா போச்சு! அவர் தொல்லை என்னால சமாளிக்க முடியல, அவளையே வச்சுக்க சொல்லிடறேன்”

“லூசு ! முழுசா கேளு” வினோத் ஏனோ கோவமாகச் சொல்லவும் சிரிப்பை அடக்கிக்கொண்டவள்,

“சொல்லு “ என்றாள்.

“பைரவ் சார் அவமேல ரிப்போர்ட் ஃபைல் பண்ணி, அப்போவே துரத்திட்டார்! எனக்கே போன வாரம் கீர்த்தி சொல்லித்தான் தெரியும், உனக்கு சொல்லியிருப்பான்னு நெனச்சேன்” அவன் யோசிக்க,

“இந்த நேரத்துல டென்சன் கொடுக்க வேண்டாம்னு நினைச்சுருக்கலாம்” வெங்கட் வேலையைத் தொடர்ந்தபடி சொல்ல, உள்ளுக்குள்ளே பைரவ் மீது இதனால் கோவம் வந்தாலும் நண்பர்களிடத்தில் காட்டிக்கொள்ளாதவள்,

“அவரா அப்படி யோசிக்கிற ஆளு? டெலிவரி ஈஸியா இருக்கணும்னு என்னை வற்புறுத்தி ப்ரெக்னென்சி யோகா கிளாசுல சேர்த்துவிட்டு இம்சை பன்றார்.”

அவள் முதுகில் அடித்த பத்மா, “உன் நல்லதுக்குத்தான் பண்றார்”

“என்னமோ போ! வீட்டுக்கு போயி நிம்மதியா தூங்கலாம்னா விடாம யோகா பண்ணு இது பண்ணுன்னு தொல்லை, வாணிமாவை அனுப்பி… அவங்ககிட்ட முடியாதுன்னு சொல்லவும் முடியல!” அலுத்துக்கொண்டாள்.

***

அன்று அனைவரும் தங்கள் துணையுடன் கிளாஸிற்கு வர வேண்டும் என்று பயிற்சியாளர் சொல்லிவிட, வேலைகளைச் சீக்கிரம் முடித்துக்கொண்டு அவளுடன் சென்றான் பைரவ்.

காரில்,

“ஏன் வேதா பத்தி சொல்லலை?” நேராகத் தன்னை வருத்திக் கொண்டிருந்ததை மாயா கேட்க,

அதிர்ந்தவன், “யார் உன்கிட்ட சொன்னா? நான் சொல்லிவச்சேனே கீர்த்தி கிட்ட, அவள…“ கோவமாக அவளை அழைக்க முற்பட்டவனைத் தடுத்தவள்,

“அவ என்ன செய்வா? நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லு” என்று அவனை முறைக்க,

“எதுக்கு உனக்கு வேண்டாத ஸ்ட்ரெஸ்ன்னு தான், சும்மா இருக்க எனக்கே இதெல்லாம் கஷ்டமாயிருக்கு. அதான் நீ ஏதாவது கற்பனை பண்ணிக்கிட்டு வருத்தப்படவேண்டாமேன்னு…” காரைப் பார்க் செய்ய,

“அப்போ மறைக்க நினைக்கிற அதான?” கோவமாக இறங்கியவள்,

“நீ மாறவே மாட்டேன்னு நெனச்சேன்! போடா” அவனுக்காக நில்லாமல் வேகமாக நடக்க நினைத்தாலும், பெருத்திருந்த வயிறு அவள் வேகத்தைக் குறைந்திருந்தது.

அவளை நெருங்கி நடந்தவன், “பைத்தியம்! அல்ப விஷயத்துக்கெல்லாம் உனக்கு ஸ்ட்ரெஸ் கொடுக்க வேண்டாம்ன்னு யோசிச்சேன். மத்தபடி கண்டிப்பா மறைக்கணும்னு நினைக்கல” என்று சமாதானம் செய்ய அவளோ அதை ஏற்கவில்லை.

பயிற்சி அறைக்குள்ளே நுழைந்தவர்களை வரவேற்ற பயிற்சியாளர், மற்ற தம்பதிகளுடன் அமர வைத்தார்.

பெண்கள் பொதுவாக கர்ப்ப காலத்தில் சந்திக்கும், உணரும் பல விஷயங்களைக் கணவன்மார்களுக்கு எளிதாகப் புரியும்படி எடுத்துரைக்கத் துவங்கினார் பயிர்சியாளர்.

சிலர் ஆர்வமாகக் கேட்டிருக்க, சிலர் ஈடுபாடின்றி வந்திருப்பது அவர்கள் முகத்தில் தெளிவாய் தெரியக் கடனே என்று அமர்ந்திருந்தனர்.

தனது விளக்கங்களை முடித்த அந்தப் பெண் பயிற்சியாளர், “இந்த கேள்விக்கு தயவுசெய்து ஆண்கள் மட்டும் பதில் சொல்லுங்க, உங்கள்ல யாருக்காவது பிரசவத்தை நேரா பார்த்த அனுபவமோ இல்லை அது தொடர்பான அனுபவமோ இருக்கா?”

“அதிருந்தா இங்கே ஏன் வரோம்?” என்றொரு குரல் வர, புன்னகைத்த பயிற்சியாளர்,

“அதில்லை சார், சில பேருக்கு இது இரண்டாவது டெலிவரியா கூட இருக்கும், ஆண்கள் பார்வையில் அவங்க அனுபவத்தை நீங்க எல்லார் கூடவும் பகிர்ந்துக்கிட்டா நல்லா இருக்கும்னு தான் இந்த கேள்வி”

“நாங்களா பிரசவம் பார்க்கப்போறோம்? டாக்டர் தானே பாக்க போறாங்க” மறுபடியும் அதே ஆண் குதர்க்கமாகப் பதில் தர,

குறுக்கிட்ட பைரவ் கோவத்தை அடக்கிக்கொண்டு, “அவங்க சொல்லுறது ஒரு அவசரம்னா எப்படி சமாளிக்கணும்னு அடிப்படை அறிவு எல்லாருக்கும் வரத்துக்காக, உங்களுக்கு இதுல விருப்பம் இல்லாட்டி ப்ளீஸ்!” என்று வாயிலைக் காட்ட, சிலர் ஆமோதிக்க, இப்பொழுது அந்த விஷமி மௌனமாகக் குனிந்து கொண்டான்.

“பாவம் அவன் பொண்டாட்டி நானா இருந்தா மூக்குலயே பொக்குன்னு குத்தி இருப்பேன்” அருகில் அமர்ந்திருந்த பெண் தன கணவரை மறைமுகமாக மிரட்ட, சிரித்த பைரவ் மாயாவை பார்க்க அவளோ இப்பொழுதும் உர்ரென்று இருந்தாள்.

கையை உயர்த்தியவன், “நான் ஷேர் பண்ணலாமா?” பைரவின் எதிர்பாரா செய்கையில் அரண்டவள் அவனை வியப்புடன் பார்க்க,

பயிற்சியாளர் புன்னகையுடன் “கண்டிப்பா! எங்க எப்போ எப்படின்னு விளக்கமா சொல்லுங்க, மத்தவங்களுக்கு யூஸ்புல்லா இருக்கும்”

தன்னை அறிமுக படுத்திக்கொண்டவன், மாயாவையும் அறிமுகப் படுத்தி வைத்துவிட்டு, “கரெக்டா சொல்லனும்னா மொதல்ல எல்லாமே செம்ம இருட்டா இருந்தது… ஒன்னுமே புரியலை… என்னமோ ஒரு அழுத்தம் என்மேல யாரோ எல்லா பக்கமும் என்னை அமுக்குறமாதிரி! வாய்விட்டு கத்த கூட முடியலைன்னா பாத்துக்கோங்க… திடீருன்னு ஒரே வெளிச்சம், என்னடான்னு பார்த்தா பச்சை டிரஸ் போட்டு ஒரு டாக்டர் என்னை கைல வச்சிருக்கார்!” என்று முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு அவன் அளந்து சொல்ல,

அந்த அறையில் சிரிப்பலைகள், பயிற்சியாளரும் சிரித்துவிட,

பைரவ், “சாரி ஜஸ்ட் இங்க இருக்க எல்லாரும் கொஞ்சம் ரிலேக்ஸ் ஆகா நானே பிறந்த கதையை சொல்லிருக்கேன்” என்று புன்னகைத்தான். மாயா மட்டும் அவனை வெட்டவா குத்தவா என்பதைப்போல் முறைத்து, அவன் மட்டும் கேட்கும் வகையில் “சிரிப்பே வரல” என்று முறைக்க,

அவள் காதில் ரகசியம் சொல்வதை போல குனிந்தவன் யாரும் கவனிக்கா வண்ணம் மின்னல் முத்தமொன்றை அவள் கன்னத்தில் பதித்து, “சாரி” என்று வசீகரமாய் புன்னகைக்க, அதற்குமேல் அவளால் கோவத்தைப் பிடித்துவைத்துக்கொள்ள முடியவில்லை.

அங்கு சற்று பதற்றம் குறைந்தது, பயிற்சியாளர் பிரசவத்தைப்பற்றி விளக்கம் தந்து, அவசரமென்றால் எப்படி கையாளுவதென்று ஓரளவிற்கு விளக்கம் தந்தார்.

***

பிரசவத்திற்கு மருத்துவர் குறித்துக் கொடுத்த நாளிற்கு இன்னும் இருவாரங்கள் இருக்க, அவள் வந்ததிலிருந்து அவளை விட்டு எங்குமே செல்லாத பெற்றோரைப் பேசிப் பேசி ஒரு வழியாகக் கோவிலுக்கு அனுப்பிவைத்தனர் மாயாவும் மாதவனும்.

“நான் என் ரூம்ல இருக்கேன் நீ தூங்கு, ஏதாவது வேணும்னா கூப்பிடு” என்ற மாதவன், சில நிமிடங்களிலேயே தான் ஏன் அப்படி சொன்னேனென்று நொந்துபோகுமளவுக்கு,

“டேய் தண்ணி வேணும்! அண்ணா கால் வலிக்குது கொஞ்சம் பிடி ப்ளீஸ்… மாதவா பசிக்குது தோசை வாத்து தரியா… டேய் சாக்கலேட் இருந்தா கொண்டுவா…” கெஞ்சி, கொஞ்சி, கோவமாகப் பலவித ஏவல்களை இடைவிடாது மாயா ஏவினாள்.

“அம்மா பரதேவதா சத்தியமா முடியல, என்ன வேணுமோ மொத்தமா சொல்லு செஞ்சுட்டு கொஞ்சம் படுத்துக்கறேன், முதுகு வலிக்குது” அவன் அலுத்துக்கொள்ள.

“ஒரு கிளாஸ் தண்ணி போதும். கொடுத்துட்டு நீ தூங்கு” பெருந்தன்மையாகச் சொன்ன தங்கையை,

“மவளே கொழந்த பொறக்கட்டும் கவனிச்சுக்கறேன் உன்ன” மிரட்டியவன், தண்ணீர் கிளாஸை கொடுத்துவிட்டு, “நான் டிவி பாக்க போறேன் எதுனாலும் கூப்பிடு” என்று சென்றுவிட்டான்.

விடுப்பில் இருந்தாலும் பொழுதுபோகாமல் இருக்கும் நேரங்களில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பவள், இன்று யாருடனும் பேச மனமின்றி கண்களை மூடி அமைதியாகச் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.

தன்னுள்ளே ஏதோ நடப்பதை உணர்ந்தவள், சில நொடிகளில் தன் கால்கள் நனைவதை உணர்ந்து என்னவென்று யோசித்திருக்க, யோகா பயிற்சியாளர் சொன்னது நினைவிற்கு வர, மாதவனுக்குக் குரல் கொடுக்க, அவன் காதிலோ எதுவும் விழவில்லை.

வேறுவழியின்றி மாதவனுக்குக் கால் செய்தவள், “உடைஞ்சுடுச்சுடா!” என்று பதற,

“இதோ வரேன்” என்றவன் சமயலறைக்கு சென்று வேறொரு டம்பளரில் நீரை எடுத்துக்கொண்டு அவள் அறைக்குச் சென்று அவள் முன் நீட்டி,

“உடைஞ்சுதுனு சொன்ன?” என்றபடி மேஜையிலிருந்த கிளாஸை பார்த்து, “அப்படியே இருக்கு?” என்று கேட்க,

அவனை முடிந்ததுமட்டும் முறைத்த மாயா, “தண்ணிடா!” என்று பதற,

“அதான் குடுத்துருக்கேன்ல குடி டி!”

“மடையா! தண்ணி… பாப்பா டா !”

“…”

“பாப்பா வரப் போகுது, ஹாஸ்பிடல்! “ என்று கத்த,

“என்னடி இப்போவே?”

“எனக்கென்னடா தெரியும்?”

இது போன்ற சூழல் ஏற்பட்டால் என்ன செய்யவேண்டுமென்று பைரவ் மாதவனுக்கு சொல்லியிருந்தது நினைவுக்கு வர, தேவையானதை எடுத்துகொண்டுவன், மாயாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.

காரை ஓட்டி கொண்டிருந்த மாதவன், அவள் முணகியபடி இருக்க, “வலி வந்துருச்சா?” பதறி கேட்க,

“இல்ல, தண்ணி குடம்தான் ஒடஞ்சுருக்கு”

“அது தண்ணி குடமில்ல, பனிக்குடம்”

“கடிச்சு கொதறிடுவேன்”

புன்னகைத்தவன், “சரி வலி எவ்ளோ இருக்கு?”

“ரொம்ப கம்மியா தான், அப்ப போண்டா சாப்பிட்டு வலிச்சத்தை விட கம்மிதான்” என்று சொல்ல, சற்று ஆஸ்வாசனமானவன், விரைவாகவே அவளை மருத்துவமனையில் சேர்த்தான்.

அனைவரும் விரைவாகவே வந்துவிட, பைரவ் வர சற்று தாமதமாகியது.

வலியெடுத்தால் கத்தாமல் ஆழ்த்த மூச்சுக்களை விட்டபடி இருந்தால் பிரசவத்தின் பொழுது எனெர்ஜி இருக்கும் என்று பயிற்சியாளர் சொன்னது நினைவிற்குவர,
முடிந்தவரை வலியைப் பொறுத்துக்கொண்டவள், கண்களை மூடிக்கொண்டிருக்க,
மாதவன், “வலிக்குதா இல்லையா? ஒருவேளை வந்தது பனிக்குடத்து தண்ணிஇல்லையோ?” என்று கேட்க, அவள் மண்டையில் கொட்டிய கொட்டில் அவள் வலியை உணர்ந்துகொண்டான்.

“இவ புள்ள பெத்துக்கறதுக்குள்ள நான் ஒரு வழி ஆகிடுவேன்” வாய்விட்டுப் புலம்பியவன், “நான் அப்பாகூட வெளியில இருக்கேன் நீயே உன் பொண்ண சமாளி” கீதாவிடம் சொல்லிவிட்டு தலையைத் தடவியபடி சென்றுவிட்டான்.

மெல்ல மெல்ல வலி அதிகமாக அதற்குமேல் கட்டுப்படுத்த முடியாமல் அவள் முனகத் துவங்க, செவிலியர் அவளைப் பிரசவ அறைக்கு அழைத்துச் சென்றனர், அவர்கள் செல்லவும் பைரவ் வரவும் சரியாக இருந்தது.

மாயாவைப் பார்க்கக் கெஞ்சிக் கூத்தாடி உள்ளே சென்றவன் அவளை மென்மையாக வருடிக் கொடுத்தபடி, “ரிலேக்ஸ்… இன்னும் கொஞ்ச நேரம் தான் அப்புறம் ஜூனியர் வந்துரும்னு சொல்றாங்க… ப்ளீஸ் பொறுத்துக்கோ”

“எனக்கு நீ வேணாம் போயிடு” மாயா கத்த அதிர்ந்தவன், “என்னடா?” அவளைப் பயத்துடன் பார்க்க,

“ஐ லவ் ய! ஆனா எனக்கு நீ வேணாம் போ!” அவன் அழத் துவங்க, ஒன்றும் புரியாமல் விழித்தவன்,

“சரி சரி நான் போறேன் நீ ரெஸ்ட் எடு” என்று சற்று விலக,

“மவனே நகந்த தொலைச்சுடுவேன் மரியாதையா இங்கயே இரு” மாயா கத்த,

“இங்க இருக்க கூடாதுடா, நான் வெளில வெயிட் பண்றேன், நீ பயப்படாத…”

“நீ இருக்கமாட்டேனா நானும் இருக்கமாட்டேன்” அவள் விடாமல் ஆர்ப்பாட்டம் செய்யச் செவிலியர் சொல்லியும் அவள் அடங்கவில்லை.

வேறுவழியின்றி அவர்கள் மருத்துவரை அழைக்க, “நாங்க எல்லாரும் இருக்கோம் நல்ல பொண்ணுல,” அவர் பரிவுடன் சொல்ல, காதில் போட்டுக்கொள்ளாதவள்,

“பைரவ் கூடவே இருந்தா இப்போ பெத்துக்கறேன், இல்லனா வேணாம்!” என்றவள்,

“வாடா நாம போலாம்” என்று எழ முயற்சித்து வலியில் மீதும் துவண்டு படுத்துக்கொண்டாள்.

மருத்துவரிடம் பேசிப்பார்க்க, அவரோ அவனைத் தலைமை மருத்துவரிடம், “ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கினா தான் அலோ பண்ணுவோம்” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட, அவன் போராடி மாயாவுடன் பிரசவ அறைக்குள் செல்வதற்குள்ளே நொந்தே விட்டான்.

“டாக்டர் நான் ரெடி” மாயா சொல்லவும், ஏற்கனவே அவள் செய்திருந்த ரகளையில் பதறி இருந்த பைரவ், “அவங்களுக்கு தெரியும், நீ யோசிக்காம டீப் பிரீத் பன்ணு” என்று சொல்ல,

“எனக்கு தெரியுது பா” என்றவள், மூச்சுவாங்கியபடி “டாக்டர் நான் புஷ் பண்ணவா?” என்று கேட்க,

“இன்னும் கொஞ்சம் டைம் ஆகும் மா”

“இல்ல டாக்டர் பாப்பா வருது!”

“அப்படிதான் இருக்கும், நான் சொல்றேன்ல!”

மாயாவோ விடாமல் அடம்பிடிக்க, மருத்துவர், “சார் உங்க வைஃப் கிட்ட சொல்லுங்க”

“நான் சொன்னா அப்படியே கேட்டுட்ட போறா” முணுமுணுத்தவன், மாயாவிடம் வாய்திறக்கும் முன்பே, வலி அதிகமாகக் கத்தியவள், அவனை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள்.

தன் மகளை முதல் முறை கையில் ஏந்தும் வரை எக்கித்தள்ளிய பைரவ், குழந்தையைப் குடும்பத்தினரிடத்தில் காட்ட செவிலியர் செல்லும் நேரம் கிட்டத்தட்ட மயங்கியே விட்டான்.

பிரசவத்தில் பிறப்பது குழந்தை மட்டுமல்ல, அக்குழந்தையின் தாயும் தான் என்பார்கள், இங்கு மீண்டும் பிறந்தது பைரவும் தான்!

வலியைப் பொறுத்துக்கொண்டாலும், மாயா குழந்தையை ஈன்றெடுக்கும் வரை பட்ட அவஸ்தையைக் கண்கூடாகப் பார்த்தவன், மாயாவை அணைத்துக்கொள்ள,

“தேங்க்ஸ் டா” மாயா அசதியில் முணுமுணுக்க, “நான் தான் தேங்க்ஸ் சொல்லணும். லவ் யூ டா” அவளை விட்டு இம்மியும் நகர மனமின்றி அவளை மென்மையாக அணைத்துக்கொண்டான்.

***

காலம் அதன் வேகத்தில் சுழல, பால்கனியில் நிலவை வெறித்திருந்தவனுக்கு மூன்றாண்டுகள் சென்றதே தெரியவில்லை.

“உன் பொண்ணு வாணிமா கூடத்தான் தூங்குவாளாம்” என்றபடி கையில் மடித்த துணிகளுடன் வந்த மனைவியை,

“என்ன நக்கலா? அவ இல்லாம நான் என்னிக்கி தூங்கி இருக்கேன்?” என்று முறைத்தான்.

“போடா நான் கெஞ்சிக் கூத்தாடி என்னன்னவோ பண்ணிட்டேன், வாணிமா கிட்டத்தட்ட அழுதுடுவாங்க போல இருக்கு. அவ நகர்ற மாதிரி தெரியல” துணிகளை கபோர்டில் அடுக்கியபடி சொன்னவள் திரும்புவதற்குள் பைரவ் அறையை விட்டு சென்றிருந்தான்.

“அப்பனும் லூசு! பொண்ணும் லூசு!” முணுமுணுத்தவள், வாணியின் அறைக்குச் செல்ல, பைரவோ தன் மூன்று வயது மக்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான், “நீ பட்டுக்குட்டில்ல? அப்பாகிட்ட வந்து தூங்குவியாம் நான் நெறய சாக்கி தருவேனாம்”

“ம்ம் போ!” என்ற வாண்டோ வாணியை இறுக்கமாகக் கட்டிக்கொள்ள,

“இன்னிக்கிதான் இங்க தூங்கட்டுமே” வாணி பேத்திக்குப் பரிந்துகொண்டு வர,

“போ மா” என்றவன் “அவ இல்லாம என்னால தூங்க முடியாது!”

“என் செல்லக்குட்டி அப்பாவோட பெஸ்ட் பிரெண்டாம் என்கூட வந்தா நெறய கதை சொல்லுவேனாம்” அவன் கெஞ்ச, வாண்டோ மதிக்கவில்லை!

“இதுக்குதான் வீரன் மாதிரி ஓடி வந்தியா? கம்பெனியை சமாளிக்கிறதை விட, உன் பொண்ண சமாளிக்கிறதுக்கு நாக்கு தள்ளுதுல்ல?

நல்லா வேணும், இன்னிக்கி மீட்டிங்குல ப்ரொஜெக்ட் டிலே ஆகுதுன்னு என்னை திட்டின்ல, உனக்கு இன்னும் நல்லா வேணும்” என்றவள் வாணியை பார்த்துக் கண்ணடித்து சென்றுவிட்டாள்.

ஆறடிக்கு வளர்ந்தவன் அரையடி வாண்டிடம் கெஞ்சித் தோற்று சோகமாக அமர்ந்துவிட, ஓடிச்சென்று அவன் கழுத்தை கட்டிக்கொண்ட வாண்டு, “சாக்கி தா” என்று அவன் கன்னத்தில் முத்தம் தர, “அப்பா கூட வந்தா தருவேன்” பேரம் பேசினான்.

“நீ தா” விடாப்பிடியாய் கையை நீட்டிய மகளின் கையில் கடலை மிட்டாயை வைத்தவன், குழந்தை மனம் மாறும் முன்பே அறைக்குத் தூக்கிக்கொண்டு ஓடிவிட்டான்.

அதன் பிறகு வெகுநேரம் போராடி மகளை உறங்க வைத்தவன், லேப்டாப்பில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்த மாயாவிடம் சென்றான்.

“கோவமா? இன்னிக்கி ஆபீஸ்ல திட்டிட்டேன்னு?” அவள் அருகில் அமர்ந்துகொள்ள,

“ஓடிடு ! நீயாச்சு உன்பொண்ணாச்சு, அவளை மட்டும் திட்டுறதே இல்ல, என்னை எப்போ பாத்தாலும் திட்டு” முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“வேறேதோ இருக்கு! என்னாச்சு இப்போ? புதுசா திட்டுற மாதிரி எதுக்கு இப்போ முகத்தைத் தூக்கி வச்சுக்கிட்டு இருக்க?” அவன் கடுகடுக்க,

“போயிடு! உனக்கு அவதானே பெஸ்ட் பிரெண்டு? போயிடு” எறிந்துவிழ,

சிரித்துவிட்டவன், “அவளை பெஸ்ட் பிரெண்ட்னு சொன்னது தப்பா போச்சு அதான?” விஷயத்தைப் புரிந்துகொண்டவன்,

மாயாவை விடாப்பிடியாகத் தன் புறம் திருப்பி, “இங்க பாரு என் லைஃப் ல எனக்கு எப்போவுமே ஒரே ஒரு பெஸ்ட் பிரென்ட் தான் அது நீ தான்!”

“புழுகு மூட்டை” அவன் கன்னத்தில் குத்தியவள். “கடுப்படிக்காத” என்று மறுபடி திரும்பிக் கொண்டாள்.

“சரி விடு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு நெனச்சேன்… வேணாம் போல இருக்கு” விலக, அவன் கையைப் பற்றி இழுத்தவள்,

“என்ன சர்ப்ரைஸ்?” ஆர்வமாகக் கேட்க,

“என்னடா கல்யாணம் ஆகி இவளோ வருஷமாச்சு இன்னும் ஹனிமூன் போகலையேன்னு டிக்கெட் வாங்கினேன்… விடு!” அவன் போலியாக அலுத்துக்கொள்ள,

“ஹை! போலாம் போலாம்” என்றவள், மறுநொடியே, “குழந்தை?”

“தெரியும் மேடம்! கும்பலாதான் போறோம்! நாம நாலுபேரு உங்கப்பா அம்மா அண்ணி மாதவன் எல்லாரும்”

“ஹை நீ சூப்பர் டா” என்று அவனை அணைத்துக்கொண்டவள் காதில் பைரவ், ‘கூட்டமா திருவிழா மாதிரி போகுறதுக்கு பேரு ஹனிமூனா?’ என்று புலம்பியது நல்லவேளை கேட்கவில்லை.

“ஐ லவ்யூ டா” அவனை இறுக அணைத்துக் கொள்ள,

“லவ் யு…” என்று ஆழ்ந்து சொன்னான் அவனும்.

“எனக்கொரு ஆசை”

“சொல்லுடா”

“அடுத்த ஜென்மத்துலயும் நீயே எனக்கு பிரெண்டாவும் புருஷனாவும் இருக்கியா?” மாயா ஆசையாகக் கேட்க,

“இவ்ளோ அட்வான்ஸ் புக்கிங்கா?” என்று சிரித்தவன், “நான் அடுத்த ஜென்மத்துலயாவது நல்ல செம்ம ஹாட்டான பொண்ணா பாத்து கட்டிக்கணும்னு நினைச்சேன்…“ என்று இழுத்தான்.

மாயாவின் முறைப்பில், விளையாட்டைக் கைவிட்டு “நம்ம கையில என்ன இருக்கு? கடவுள் கிட்ட அப்பிளிக்கேஷன் போட்டு வைப்போம்’ என்றபடி கண்ணடித்து அவளை தன்னோடு சேர்த்து இறுக்கமாக அணைத்து கொண்டான்.

—சுபம்—

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!