tik 25

tik 25

மருத்துவமனையில்… ரோஜாப்பூ குவியலாய்… தொட்டிலில் இருந்த தங்கையைவிட்டு… எங்கேயும் நகரவில்லை ஆதி…

லட்சுமியின் பிறந்த வீடு ஐயங்கார்குளத்தில் இருக்கவே… பிரசவம் முடிந்து அவர் அங்கே சென்றுவிட… பள்ளி செல்லவேண்டியிருந்ததால்… பேரனை  பரமேஸ்வரிதான் கவனித்துக்கொண்டார்… என்னதான் பார்த்துப் பார்த்து அவர் செய்தாலும்… அன்னையை நீங்கி… தங்கையையும் பிரிந்திருந்த ஆதி… மிகவும் ஏங்கித்தான் போனான்…

அம்முவை தொட்டில் போடும் தினத்தன்று மகனின் உடல் மெலிவு… மனதை வருத்த… சில தினங்களிலேயே… சிறுவாக்கம் வந்துவிட்டார் லட்சுமி…

லட்சுமியின் அன்னை மற்றும் அண்ணன் மனைவி நந்தினியும் அவரை கவனித்துக் கொண்ட விதத்தில்… நன்கு உடல் தேறி வந்த லட்சுமி… அங்கே வந்த பிறகு… கைக்குழந்தையைக் கவனிப்பதுடன் வீட்டுவேலையும் சேர்ந்துகொள்ள… மிகவும் சோர்ந்துதான் போனார்…

அது புரிந்ததோ என்னவோ… ஆதி வீட்டில் இருக்கும் நேரங்களில் தங்கையின் பொறுப்பு மொத்தமும் எடுத்துக்கொண்டான்…

நாட்கள் செல்லச்செல்ல… அன்னையை விட அண்ணனைத்தான் அதிகம் தேடினாள் அம்மு…

ஆதிக்கு பதினைந்து வயது இருக்கும் சமயம்… பரமேஸ்வரி இறந்துவிட… ஏற்கனவே முதுமையின் பிடியில் இருந்த அருளாளன் மேலும் தளர்ந்து போனார்…

வரதன்… விவசாய வேலைகள்… கடை வேலைகள் என முழுவதும் தனியாக கவனிக்கும் நிலைக்கு ஆளானார்…

தந்தையின் சுமை அறிந்து… பதினோராம் வகுப்பில் அடியெடுத்து வைத்திருந்த ஆதி… அவருக்கு உதவியாக கடைக்குச் செல்லத் தொடங்கினான்…

ஒரு வருடத்திற்குள்ளேயே… கடை விற்பனைக்கான துணிகளை வரவழைப்பது…  நிதி நிர்வாகம்… கணக்குகளைக் கையாள்வது… மற்றும் விவசாயத்தையும் கவனிப்பது என அனைத்தையும் பழகிக்கொண்டான் ஆதி…

கணிசமான தொகை… செல்வா மற்றும் கயல் இருவருக்கும்… வங்கியில் வரவு வைக்கப் பட்டிருப்பதை பார்த்து… அதிர்ந்த ஆதி… அதுபற்றி தந்தையிடம் கேட்க…

“இது குடும்பத்திற்கு பொதுவான வருமானம்… மூன்று பேருக்குமே சமமாகப் போடப்பட்டிருக்கிறது… இது தாத்தாவின் விருப்பம்” என முடித்துக்கொண்டார் அவர்…

அதற்குமேல் எதுவும் கேட்கவில்லை ஆதி…

அவனுக்குக் கடை நிர்வாகத்தில் இருந்த ஆர்வத்தினால்… அதிலேயே அவன் மூழ்கியிருக்க…

படிப்பில்தான் கவனம் சிதறிப்போனது… பன்னிரண்டாம் வகுப்பில்… மிகவும் குறைவான மதிப்பெண்களே பெற்றிருந்தான்… அதே வருடம் கமலக்கண்ணன் பத்தாம் வகுப்பில்… அதிக மதிப்பெண்கள் பெற்று தேறியிருந்தான்…

சுலோச்சனா… கமலக்கண்ணனுடன் ஆதியை ஒப்பிட்டு… கிண்டலாகப் பேச…லட்சுமிதான் மிகவும் வருந்தினார்…

கணவரிடம்… “அவன் கடைக்கு வருவதால்தான்… மதிப்பெண் குறைந்து போனது… அவனை பொறியியல் படிக்க வைக்க முடியாமல் போய்விட்டது… அவன் வயதிற்கு மீறிய வேலைகளைப் பார்க்க வைத்தது தவறு!” எனப் புலம்ப…

அதைக் கேட்டுக்கொண்டிருந்த எட்டு வயதே ஆகியிருந்த அம்மு… “ராஜா அண்ணாதான்… எல்லா வேலையும் பார்க்கறாங்க… கமல் அண்ணா ஸ்கூலுக்கு போயிட்டு வந்த பிறகு… டியூஷனெல்லாம் போனாங்க… அதனாலதான் நிறைய மார்க் வங்கியிருக்காங்க… அதனால ராஜா அண்ணாவை நீங்க ஒண்ணும் சொல்லாதீங்க…” என நேரடியாக சுலோச்சனாவை சொல்லிவிட…

பரமேஸ்வரி இருந்த வரை… எதைப் பற்றியும் கவலை இன்றி… சின்ன மருமகளைக் கண்டிப்பார்… ஆனால் அவர் இறந்த பின் தங்கையின் மகளுடைய குணம் தெரிந்து… அருள் அவளை எதுவும் சொல்வதில்லை…

குடும்பத்தினரிடம் பாசமும் அக்கறையும் இருந்த போதிலும்… எதாவது சொன்னால்… பிறந்த வீட்டிற்குப் போய் உட்கார்ந்துகொண்டு… பிரச்சினையை இழுக்கும் மனைவியிடம்… பிள்ளைகளுக்காகவேணும்  பணிந்து போகவேண்டிய நிலையில் இருந்ததால்… செல்வமும் அவளை ஏதும் கேட்பதில்லை..

லட்சுமி… அவளிடம் அதிகம் பேசுவதையே தவிர்த்துவிடுவார்… வரதன் தனது எல்லைக்குள்ளேயே இருந்துக்கொள்வார்…

மேலும் “எதாவது பேசினால்… அது பிரிவினையில் கொண்டு போய் விட்டுவிடும்… குடும்பம் உடைவதைத் தாத்தாவால் தாங்க முடியாது… சித்தப்பாவும் மிகவும் துன்பப் படுவான்…” எனச் சொல்லி ஆதியையும் ஏதும் பேச விடாமல் தடுத்துவிடுவார் அவர்…

அனைவரிடமும் அன்பை மட்டுமே காட்டும் தாத்தாவையும்… சூழ்நிலை கைதியாக இருக்கும் சித்தப்பாவையும் எண்ணி… மேலும் கமல்… விமல் இருவருமே குடும்பத்தில் அனைவருடனும் பற்றுதலுடன் இருக்கவும்… ஆதியும் அவர் விஷயத்தில் தலையிடுவதில்லை…

மொத்தத்தில் அனைவருமே… ‘துஷ்டரைக் கண்டால் தூர விலகு’ என்ற நிலையிலேயே இருந்தனர்…

அப்படிப்பட்ட சூழ்நிலையில்… அம்மு இவ்வாறு பேசவும்… கொதி நிலைக்குப் போன சுலோச்சனா… “இந்த வயசுல உனக்கு… இவ்வளவு வாய் ஆகாது…” என்று தொடங்கி… திட்டித் தீர்த்தாள்…

அத்துடன் நிற்காமல்… காயலிடம்… சொல்லிப் புலம்பவும் செய்தாள்…

“எல்லாம்… உன்னைத்தான் சொல்லணும்… ஆதி கடைக்கு போக ஆரம்பிக்கும் போதே உன்னிடம் சொன்னேன்… நீதான் கண்டுக்கல… கடையை அவன் பெயரில் அப்பா எழுதிவைத்து விட்டால்… என்ன செய்வது?” என அவர் பங்கிற்கு எரியும் கொள்ளியில் எண்ணை வார்த்தார் கயல்… அவர் ஆதங்கம் அவருக்கு…

எப்பொழுதும்… பெருமைக்காகவாவது… தனது தோழி என யாரையாவது அழைத்துக்கொண்டு கடைக்கு போய்… தள்ளுபடி என்ற பெயரில்… பெரியத் தொகையை குறைத்து வாங்க வைப்பார் கயல்… இது அடிக்கடி தொடரவும்…

ஒருநாள்… “அத்தை… உங்களுக்கு வேண்டுமானால்… என்ன தேவையோ… வாங்கிக்கோங்க… வேறு யாருக்கும் அதிக டிஸ்கவுண்ட்லாம் கொடுக்க முடியாது” என ஆதி கறாராக சொல்லிவிட…

அதில் அவனிடம் கோபம் இருந்தாலும்… அவனது திறமையைப் பார்த்து… தனது மகளை அவனுக்குக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததால்… அதைக் கண்டுகொள்ளவில்லை கயல்…

ஒரு முறை வீட்டு விசேஷத்தில்… தன் எண்ணத்தை அவர் சொல்லவும்…

“எனக்கு… அம்மு எப்படியோ… வேலுவும்… அப்படியே! இனிமேல் இதுபோல் பேசாதீங்க அத்தை” என்றுவிட்டான் ஆதி…

வேல்விழி… அவனது அத்தை போன்று இல்லாமல்… மாமா ராமலிங்கத்தைப் போன்று பொறுமைசாலிதான்… ஆனாலும் அத்தையின் குணத்தைப் பார்த்து… அவன் அந்தப் பேச்சை விரும்பவில்லை…

அவனிடம் இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் தகர்ந்துவிட… நேரத்தை எதிர்பார்த்திருந்தார் கயல்…

சமயம் பார்த்து சுலோச்சனாவை… தூண்டியும் விட்டுவிட்டார்…

அதன் பிறகு… பிறந்த வீட்டில் போய் இருந்துகொண்டு… சுலோச்சனா பிரச்சினையைத் தொடங்க… அவளது அண்ணன்களும் அவளுக்குத் துணை நிற்க… வேறு வழியில்லாமல் செல்வம்…

“அண்ணா! ஆதியின் படிப்பு பாதிக்க வேண்டாம்… நான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் கடைக்கு வரேன்…” என வரதனிடம் சொல்லவும்…  அவருக்கு நிலைமை புரிந்துபோனது…

மேலும் சுலோச்சனா… கடையை ஆதியின் பெயரில் மாற்றிக்கொள்ள அவர்கள் முயல்வதாய் குற்றம் சாட்டவும்…  வரதனும்… அருளாளனும் மனம் உடைந்து போனார்கள்…

 “எனக்கு… இந்தக் கடையே வேண்டாம்… இந்த ஜவுளி வியாபாரமும் வேண்டாம்… இனி கடை நிர்வாகத்தில் நான் தலையிட மாட்டேன்…  நான் கேட்டரிங் படிக்கப் போகிறேன்…” எனத் தந்தைக்கு பிரச்சினை வராதவாறு ஒதுங்கிக் கொண்டான் ஆதி…

மேலும் பொறியியல் படிப்பிற்கு… வரதன் ஏற்பாடு செய்து வைத்திருந்த போதிலும்… அதை மறுத்து…BSC கேட்டரிங் படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கத் தொடங்கினான் ஆதி…

பத்தாம் வகுப்புவரை… ஆதி… சசிகுமார்… வினோத் மூவரும் ஒன்றாகப் படித்தவர்கள்…

வினோத் மருத்துவப் படிப்பிற்கான… பிரத்தியேகப் பிரிவைத் தேர்ந்தெடுத்து… வேறு பள்ளியில் சேர்ந்துவிட…

பதினொன்றாம் வகுப்பை அதே பள்ளியில் தொடர்ந்தனர் மற்ற இருவரும்…

சசிகுமார் பொறியியல் சேர்ந்துவிட… அதே கல்லூரியில் இருந்த கேட்டரிங் இன்ஸ்டிடூடில்தான் ஆதி சேர்ந்திருந்தான்…

*********************

முதலில் தம்பியை இணைத்துக்கொண்டு கடையை நிர்வகித்த வரதன்… சுலோச்சனாவின் அண்ணனின்  தேவையில்லாத தலையீட்டினால்… ஒரு கட்டத்தில்… முழுவதுமாக செல்வத்திடம் ஒப்படைத்துவிட்டு… ஒதுங்கிக்கொண்டு… விவசாயத்தை மட்டுமே கவனிக்கத் தொடங்கினார்…

அம்முவைப் பொறுத்த மட்டும் ஆதிதான் அவளது ஹீரோ… அவனது செயல்கள் அனைத்தையும் அவளும் பின்பற்றுவாள்…

அவன் படிக்கும் புத்தகங்கள் அனைத்தையும் படிப்பாள்… அனைத்தும் தன்னம்பிக்கையை வளர்க்கும் புத்தகங்கள்…

அவன் புதிது புதிதாகச் செய்து கொடுக்கும் உணவு வகைகளைப் பற்றி… பள்ளித் தோழர்களிடம் பெருமையடித்துக்கொள்வாள் அம்மு…

அவன் ஓய்வாக உட்கார்ந்திருக்கும் நேரம்… சத்தமில்லாமல் வந்து… இருக் கைகளாலும்… அவன் கண்களை மூடி… அவனது தோளில் நாடியைப் பதித்து… அவனுடன் இழைவது அவளுக்கு பிடித்தமான விளையாட்டு… ஆதியுமே அதை ரசிப்பான்…

அவளது பிஞ்சுக் கைகளின் தீண்டலில்… தன்னை மறந்துபோவான் ஆதி…

ஆனால் வீட்டில் மட்டுமே அவன் அப்படி… அங்கே நடக்கும் பிரச்சினைகளிருந்து தப்பிக்கவே… தற்காப்புக் கலைகளை பழகத் தொடங்கினான்… கோபமும் வேகமும்… அவனிடம் எப்போதுமே குடியிருக்கும்…

கல்லூரியில்… முதன்மையாகத் திகழ்ந்தான்…

கல்லூரிப் படிப்பின் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கவும்… தனது செலவுகளுக்கு தந்தையை எதிர்பார்த்திருக்கப் பிடிக்காமல்… சசிகுமாரையும் சேர்த்துக்கொண்டு… சிறிய அளவில்… “அமிர்தம் புட்ஸ்” என்ற பெயரில்… வணிக நிறுவங்களுக்கு… பாக்கட் உணவுகள் செய்து கொடுக்கத் தொடங்கினான்…

மறுபடியும் படிப்பு வேலை என அவன் மூழ்கவும்… வீட்டில் நடக்கும் குளறுபடிகளின் பாதிப்பினால் அம்முவின் மதிப்பெண்கள் திருப்தி அளிக்கும் விதமாக இல்லாமல் போகவே…

முதல் முறை பட்ட சூட்டினால்… வரதன் அம்முவை, விடுதியில் சேர்த்து படிக்க வைக்க முடிவு செய்தார்…

ஆதி அதை விரும்பாமல்… எதிர்த்து நிற்க… “இல்ல ராஜா! அம்மு இங்கே இருந்தால் அவள் மனநிலை ரொம்பவே பாதிக்கும்… சுலோவுடைய தங்கையின் பெண், ஜோதி… வேறு… அடிக்கடி இங்க வந்து அம்முவை வம்புக்கு இழுக்காறா… என்னாலயும் ஒண்ணும் சொல்ல முடியல…” என லட்சுமி சொல்லவும்… வேறு வழியில்லாமல் அந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக்கொண்டான் ஆதி…

“உனக்கு எப்பொழுது என்ன பிரச்சினைனாலும் என்னிடம் சொல்லணும் அம்மு! எப்பொழுதுமே அண்ணா உன்னுடன் இருப்பேன்… அதனால எதுக்கும் பயப்படாதே!” என அவன் கொடுத்த துணிவில்… எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையுடன்… முல்லையில் சேர்ந்தாள் அம்மு…

நேர்த்தியும்… முழுமையான ஈடுபாடும்… கடுமையான உழைப்பும் சேர்ந்து ஆதியின் தொழில்… வேகமாக வளரத் தொடங்கியது…

அம்மு ஒவ்வொரு விடுமுறைக்கு அங்கே வரும்பொழுது… முழுமையாகத் தனது நேரத்தை அவனுடன் செலவிடுவான் ஆதி…

மறுபடி திரும்பச் செல்லும்பொழுது… அவளுக்கான பரிசுகள் இருக்கும்…

ஒரு சில சமயங்களில்… மல்லியைப் பற்றி ஆதியின் காதில் ஓட்டை விழும் அளவிற்குப் பேசி அவனை ஓட வைப்பாள் அம்மு…

ஆனால் அங்கே அவள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எதையுமே அவனிடம் சொன்னதில்லை அம்மு… வீட்டை விட அந்த விடுதி ஒன்றும் அவளுக்கு துன்பத்தைக் கொடுக்கவில்லை போலும்…

ஆதி… படிப்பை முடித்து முழு நேரமாகத் தொழிலை நடத்தத் தொடங்கினான்… அதனால் அவனது வருமானமும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது…

ஆதியின் வளர்ச்சியைப் பார்த்த கயல்விழிக்கு… மகளை ஆதிக்கு மணமுடிக்க வேண்டும் என்ற ஆசையும் அதிகரிக்கவே செய்தது…

அவன் முன்பு பேசியவை… அறியாத வயதில் அவன் பேசிய பேச்சு என்றே நினைத்தார் அவர்… அவன் அப்பொழுதிலிருந்தே… தெளிந்த சிந்தனை உடையவன் என்பதை அறியாமல் போனது அவரது தவறு!!

சுலோச்சனாவோ!! அவனது வளர்ச்சியில்… உள்ளுக்குள்ளே புகைந்து கொண்டிருந்தார்… தன் மக்களை விட அவன் அதிகமாக முன்னேறுவது பொறுக்காமல்…

அவர்கள் குடும்பத்திற்கென… பொதுவான உபயோகத்திற்காக… ஸ்கார்பியோ ஒன்று இருந்தது அவர்களுக்கு…

அதை உபயோகிக்க விரும்பாமல்… இரண்டாம் ஆண்டு படிப்பு முடித்தவுடனேயே… பைக் ஒன்றை வாங்கியிருந்தான் ஆதி…

ஆனால்… தனிப்பட்ட உபயோகத்திற்கென கார் ஒன்றை வாங்கும் எண்ணம் தோன்றவே… அம்மு விடுமுறையில் வரும்…வரையும்வரை பொறுத்திருந்து… அவளது விருப்பப்படி ‘ஸ்விப்ட்’ ஒன்றை வாங்கினான் அவளது ராஜா அண்ணா…

அப்பொழுதுதான் அம்முவை அழைத்துச்சென்று… டாலரில்… அ என்று பொறித்த அந்த செயினை… பிரத்தியேகமாக… செய்து… அவளுக்கு வாங்கிக் கொடுத்தான் அவன்…

அடுத்த விடுமுறையில் அவள் வரும்பொழுது… அவர்கள் பள்ளியில் எடுத்த க்ரூப் போட்டோவை அவனிடம் காண்பித்த அம்மு… அதில் இருந்த மல்லியை அவனுக்குச் சுட்டிக்காட்டவும் தவறவில்லை…

அம்முவிற்காக அதைப் பார்த்தானே தவிர… மல்லியின்… முகம் அவன் மனதில் கொஞ்சம் கூடப் பதியவில்லை…

விடுமுறை முடிந்து… விடுதிக்கு அம்மு திரும்பிய இரண்டாம் நாளே… அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் வரவும்… ஆதி… தானே நேரில் சென்று அம்முவைப் பார்க்க… கிளினிக் ரூம் என்று… வெறும் பெயரளவில்… அவர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த அறையில்… தனியாகப் படுக்கவைக்கப்பட்டிருந்தாள் மல்லி…

கடுமையான ஜுரத்தில் இருந்தவள் உடல் வேறு… அதிகமாக நடுங்கிக்கொண்டிருந்தது… எதுவுமே பேசும் நிலையில் அவளும் இல்லை…

பெயருக்கு எதோ… மருத்துவம் செய்திருந்தார்களே தவிர… முறையான மருத்துவம் அவளுக்கு அளிக்கப்படவில்லை என்பது ஆதிக்குப் புரிந்துபோனது… ஏனோ அதற்குமேல் அவளை அந்த விடுதியில் விட அவனுக்கு மனம் இடம் கொடுக்கவில்லை…

தொலைப்பேசி மூலமாக… அவன் கான்டீன் நடத்திக்கொண்டிருந்த ஒரு மிகப்பெரிய… பள்ளியிலேயே அவளுக்கு இடம் வாங்கியவன்… பள்ளியில் TC க்கு விண்ணப்பித்து விட்டு… விடுதி அறையை காலி செய்துகொண்டு… அம்முவுடன் அங்கிருந்து கிளம்பினான் ஆதி… தந்தையிடம் கூட அனுமதி கேட்கவில்லை… அந்த அளவிற்குக் கோபத்தில் இருந்தான் அவன்… தங்கையின் நிலைமையால்…

அவன் காரை கிளப்பிக்கொண்டு அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க… அவனை நோக்கி ஓடிவந்தார் அந்த முதிய பெண்மணி… கங்கம்மா…

அவனது புறமாக இருந்த… காரின் கண்ணாடியை அவன் இறக்க… ஒரு நோட் புக்கை அவனிடம் கொடுத்து… “பாப்பாவோடது…” எண்றுவிட்டு… “தம்பி! மறுபடியும் பாப்பாவை இங்கே அழைத்து வராதீங்க!” எனப் பயத்துடன் சொன்னவர்…

அக்கறையுடன்… “அம்மு பாப்பா! பார்த்து… பத்திரமா இருந்துக்கோ!!!” என்றார்… அளவிற்கதிகமான எச்சரிக்கை இருந்தது அவரது குரலில்… பதிலுக்குத் தலையை மட்டும் ஆட்டிவைத்தாள் அம்மு… அவ்வளவே!!!

அம்முவின் உடல்நிலையை குறித்துத்தான், அந்த முதியவர் சொல்கிறார் என நினைத்தான் ஆதி…

அதில் மறைமுகப் பொருள் அடங்கியிருப்பதை அவன் புரிந்துகொண்டிருந்தால்… பின்னாளில் நடக்கவிருக்கும் பயங்கரங்களை தடுத்திருக்கலாமோ அந்த தேவாதிராஜன்!!!

error: Content is protected !!