தீபன் சொன்ன செய்தி என்னவென்று புரியவே… சில நொடிகள் பிடித்தது…  மல்லிக்கு… “எ..ன்..ன..டா!!! தீ….பா!!! சொல்ற?” குரலே வெளிவரவில்லை… மூச்சு முட்டுவதுபோல் தோன்றியது அவளுக்கு…

“ஒண்ணும் இல்லைக்கா… பயப்படாதே… அன்று அந்த ஆள் உன்னிடம் சண்டை போட்டாரே… அப்பொழுது எனக்கு எவ்வளவு கோபம் வந்தது தெரியுமா?… ஆனாலும் அவர் இப்படி செத்துப் போகணும்னு நினைக்கல…கா…  அந்த பொண்ணு… ரொம்ப அழுதாக்கா… எனக்கு மிகவும் கஷ்டமா இருக்கு அக்கா…   எனக்கு இதை உடனே உன்னிடம் சொல்லணும்னு தோன்றியது… அதனாலதான் கால் பண்ணேன்… வீட்டுக்கு வா மற்றதை பேசிக்கலாம்…” என்றவனிடம்… “சரிடா… பை…” என்று காலை கட் செய்தாள் மல்லி…

அவளுடைய முகத்தில் தோன்றிய கலவரத்தையும்… அவள் குரலில் ஏற்பட்ட அதிர்ச்சியையும் கவனித்த தேவா… “என்ன மல்லி… இப்படி ஷாக் ஆகும் அளவுக்கு, உன் தம்பி என்ன சொன்னான்?” என்று கேட்க…

ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்தவள்… “அந்த வனிதாவோட அப்பா இறந்துட்டாராம்…” என்க…

“ஐயோ… எப்படி?” என்றான்… அவனுக்கும் இது புதிய செய்திதான்…

“ஆக்சிடெண்டாம்…” மல்லியின் பதிலில் அதிர்ந்தான் தேவா…

முதல் நாள் இரவுதான்…  அவனை நன்றாக… கவனித்திருந்தான்… அம்முவின் செயின் மட்டுமின்றி… ‘ஆ’ என்ற எழுத்தின்மேல் வைரம் பதித்த, அவளுடைய ஒரு மோதிரமும், ஒரு ஜோடி வளையல்களும் அவனிடம் இருந்தன… அவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு… தன்னுடைய ஆட்களை வைத்து… அடிப்   பின்னியெடுத்து விட்டான்… அவ்வளவே…

அப்பொழுதே அவனைக் கொன்று புதைக்கும் அளவிற்கு அவனுக்கு கோவம் வந்ததென்னவோ உண்மைதான்… ஆனால்… அந்த அளவிற்குச் செல்ல அவன் மனம் இடம் கொடுக்கவில்லை… அதனாலேயே அவனை விட்டுவிட்டான்…

உண்மையிலேயே விபத்துதானா? இல்லை???

அவனுடைய மரணம் தேவாவிற்குள்ளும்… பல கேள்விகளை எழுப்பியது…

அம்முவைப் பற்றி தெரிந்துகொள்ள முடியாமல் போனது நினைத்து…  சோர்ந்துதான் போனாள் மல்லி…

“ப்சு… இப்ப என்ன ஆச்சு… அவனுக்கு அம்மு இருக்கும் இடம்… தெரிந்திருக்க வாய்ப்பில்லை… அவன் அந்தச் செயினை அவளிடமிருந்து திருடிக் கூட வைத்திருக்கலாம்…” என்று தேவா சொல்ல… அவள் அதற்கும் தெளிவடையாமல் இருக்கவே…

“இதோ பாரு… அம்மு அம்முனு இப்படியே இருந்தால்… உன்னால் எந்த வேலையையும் முழுமையாய் செய்ய முடியாது… இதோ இந்த சில்க் சாரி டிசைன் செய்யற வேலை பாதியிலேயே நிற்பதைப் போல” என்று அவன் கடிந்து கொள்ள…

“ப்சு… உங்களுக்குச் சொன்னால் புரியாது தேவா?” என்றாள் மல்லி விரக்தியுடன்…

அம்முவின் நினைவிலேயே உழன்றுகொண்டு தன்னைச் சுற்றி நடக்கும் வேறு எதையும் கவனிக்காமல் இருக்கும் அவள் நிலை  அவனுக்கு…அச்சத்தைக் கொடுக்க… “என்ன புரியாது? நீதான் கொஞ்சம் ஓவரா ரியாக்ட் செய்யற… அப்படி என்ன அவள் ஊருல.. உலகத்துல இல்லாத பெரிய ப்ரென்ட்… மறக்க முடியாத அளவிற்கு? ஆயாசமாக வந்தது வார்த்தைகள்.

கண்களில் நீர்த் திரள… “நானே மறக்கணும்னு நினைத்தால் கூட… அவள் என்னை மறக்க விடமாட்டாள்…” என்ற மல்லித் தனக்கு… அடிக்கடி வரும் கனவுகளைப் பற்றி சொன்னாள்.

“நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே அம்முவைப் பிரிந்தது உங்களுக்குத் தெறியும்தானே?” என்றுவிட்டு…

“ஆனால் +2 முடித்து… எனக்கு ரிசல்ட் வந்த, இரு தினங்கள் கழித்து… குலதெய்வம் கோவிலில், வழிபட…  நாங்கள் பூவரசன்தாங்கல் சென்றிருந்தோம்… அங்கிருந்து திரும்பிய அன்றுதான் எனக்கு முதல்முறை அம்மு பற்றி ஒரு கனவு வந்தது…” 

“அவள் கைகளால் என்னைப் பிடித்திருக்க… யாரோ அவளை என்னிடமிருந்து பிரித்து… எங்கோ இழுத்துச் செல்வதுபோல்… ஒரு பயங்கரமான கனவு அது… அன்றிலிருந்து தொடர்ந்து இதுபோல் கனவுகள் வந்துகொண்டே இருக்கிறது… சிலது நினைவில் இருக்கும்… பல கனவுகள் மறந்துவிடும்…” என மல்லி முடிக்க…

அவளையே இறுகிய முகத்துடன், மௌனமாகப்  பார்த்துக் கொண்டிருந்தான் தேவா…

அவன் பேசாமல் இருக்கவே… “ப்ளீஸ்… நம்புங்க தேவா… மெடிக்கல் ட்ரீட்மெண்டெல்லாம்… நான் இருக்கும் சூழ்நிலையில் என்னால் போக முடியாது… அப்பாவிற்காக மருந்துகள் வாங்கவே அதிகம் செலவாகிறது… அதனால்   ஒரே ஒரு முறை அம்முவை நேரில் பார்த்தால்… இந்தக் கனவுகள் வருவது நிற்கலாம்… அதற்காகவாவது நான் அவளைப் பார்க்க வேண்டும்…” என்று முடித்தாள் மல்லி…

எதோ நினைவு வந்தவனாக… “கடைசியாக உனக்கு எப்பொழுது கனவு வந்தது… என்று தேவா  கேட்க…

 “ம்… ஐயோ!! ஞாபகம் இல்லையே!!! கொஞ்ச நாட்களாக எனக்கு அந்தக் கனவுகள் வரவில்லை… என்று நினைக்கிறேன்…” அதையுமே… சந்தேகமாகத்தான்… சொன்னாள் மல்லி ஆச்சரியக் குரலில்…

அவள்… அவனிடம் காண்பிக்கக் கொண்டுவந்திருந்த அந்த டிசைன்கள் அடங்கிய காகிதத்தை மேசையிலிருந்து எடுக்க… அதில் வைக்கப்பட்டிருந்த, காகிதத்தால் ஆன ஒரு கவர் கீழே விழவும்… அதிலிருந்த ஒரு மோதிரம் தனியாக வந்து விழுந்தது… அவசரமாக அந்தக் கவரை… தேவா எடுக்க… அந்த மோதிரத்தை எடுத்த மல்லி… அதில் இருந்த ‘ஆ’ என்ற எழுத்தைப் பார்த்தவள்… அதிசயித்து… ” “அழகா இருக்கு… ஆ என்று போட்டிருக்கே… இது யாருடைய மோதிரம்?” என்று கேட்க…

“ஆமாம் மல்லி… இப்பொழுதெல்லாம் உன் கனவில் அம்மு வருவதில்லை என்றாயே” என்றபடி… அவளைப் பார்த்து கண் சிமிட்டியவாறே…  அவளிடமிருந்து அந்த மோதிரத்தை … அவளே கவனிக்காதவாறு வாங்கியவன்… “அவளுக்குப்  பதில் இப்பொழுதெல்லாம் உன் கனவில் நான் வருகிறேனா என்ன?” என்று கேட்க…

அவளைத் திசை  திருப்பும்… அவனது  நோக்கம்… நன்றாகவே வேலை செய்தது…

அவனிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்காத பெண்ணவள்… வெட்கத்தில் முகம் சிவந்துத் தடுமாறிப் போனாள்… பின் தன்னை சமாளித்தவாறு… “என்ன தேவா சார்… நேரில் பார்த்து என்னை மிரட்டுவது போராதுன்னு… கனவில் வேறு வந்து மிரட்டணும்னு… உங்களுக்கு ஆசையா?” என்று கேட்க…

அவளது வெட்கத்தை ரசித்தவாறே… “உண்மையிலேயே நான் உனக்கு பாஸா இல்ல நீ எனக்கு பாசான்னே எனக்கு… சந்தேகம் வர அளவுக்கு… நீத்தானே என்னை மிரட்டுற!!!  இதில் கனவுல வேறு நான் உன்னை… மிரட்டுவதா” என்று சிரித்துக்கொண்டே சொன்னவன்…  மணியைப் பார்க்க… நான்கு நாற்பது ஆகியிருந்தது…

அந்த நேரம் அவள்… அந்த மோதிரத்தைப் பற்றி மறந்திருந்தாலும்… மறுபடி எதாவது கேட்டுவைத்தால்… அதுவும்  அந்தச் செயின் தன்னிடம் இருப்பது அவளுக்குத் தெரிந்தால் வீண் சிக்கல்தான் வந்து சேரும்…  என்று எண்ணிய… தேவா…

“மல்லி… இந்த டிசைன்களை கம்பியூட்டரில் போட்டு ஒரு பென்ட்ரைவில் காபி செய்துவை…நான் பிறகு பார்க்கிறேன்… இப்பொழுது கொஞ்சம் வெளியில் செல்லவேண்டும் என்று அவளை… அங்கிருந்து அனுப்பினான்… பிறகுதான் அவனால் நிமிமதியாக மூச்சு விடவே முடிந்தது…

அடுத்த நொடியே அங்கிருந்து கிளம்பிச்சென்றான் தேவா…

அதன் பிறகு வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவள்… தீபனைத் தேட… அவன் சுமாயாவின் கணவர் விஜித்திடம்… பாடத்தில் சந்தேகம் கேட்கச் சென்றிருந்தான்… அவர்கள் அங்கே குடிவந்த பிறகு, அவருடன், தீபன் நெருக்கமாகியிருந்தான்.

ஜெகன் ஏதோ புத்தகத்தில் மூழ்கியிருக்க… விஜயா… இரவு உணவு தயாரித்துக்கொண்டிருந்தார்… ரெப்பிரேஷ் செய்து… உடைமாற்றி வந்த மல்லி… அம்மாவுக்கு உதவியவாறே… தீபன் சொன்னச் செய்தியை சொல்ல… அதற்கு அவர்… “தீபன் கூட சொன்னன்மா… என்ன செய்வது… எதோ அவருடைய நேரம் சரியில்லை போல இருக்கு…பாவம்” என்று முடித்துக்கொண்டார்… தீபனும் வந்துவிட…  அவனும் அந்தச்  சம்பவத்தைப்  பற்றி அதிகம் பேசவில்லை… அவன் பேச விரும்பவில்லை என்பதுதான் உண்மை.

மல்லிக்குத்தான் அன்று இரவு உறக்கம் பறிபோனது… 

தேவாவின்… ஆளைத் துளைக்கும் பார்வையும்… அவனது புன்னகை முகமுமே அவள் கண் முன் வந்து… அவளை இம்சித்துக் கொண்டிருந்தது…  அவளுக்கே அவளை நினைத்து பயமாய் இருந்தது… இந்த உணர்வுக்குப் பெயர்தான் என்ன?

அவனை விட்டு விலகத்தான் நினைக்கிறாள்… ஆனால் அவனை நேரில் பார்க்கும் பொழுது அவளது எண்ணமெல்லாம் மாறிப்போய் விடுகிறது… அவளுக்கு யாரிடமும் கிடைக்காத ஒரு பாதுகாப்பை… அவனிடம் உணர்கிறாளே… அதனால்தானோ???

தூக்கமின்றி புரண்டு புரண்டு படுத்திருந்தவளின் கைப்பேசி… தகவல் வந்ததற்கான ஒலியை எழுப்ப… அதை எடுத்துப் பார்த்தவள்…  குழம்பிப்  போனாள்!!! தேவா அனுப்பியிருந்த  ஒரே ஒரு ஸ்மைலியில்…

அதை அவள் பார்த்துவிட்டதை அறிந்துகொண்டான் போலும்… அடுத்த நொடி   “என்ன கனவில் நான் வந்துவிடுவேனோ என்று பயந்து தூங்காமல் இருக்கிறாயா?” என்று அடுத்த மெசேஜ் வர…

“கோப முகத்தை’ பதிலாக அனுப்பியவள்…  கைப்பேசியை சைலன்ட் மோடில் போட்டுவிட்டு அவள்தான்… பய மோடிற்கு மாறிப்போனாள்…

அடுத்த நாள் அலுவலகம் வந்தவள்… அந்தப் புடவையின் டிசைன்களை கணினியில் பதிவேற்றி… அவன் சொன்னதுபோல் அதை பென்ட்ரைவில் காப்பி செய்து முடித்தாள்… ஆனால் தேவாதான் அன்று அலுவலகம் வரவில்லை…மதியம் அவளை நோக்கி வந்த சுமாயா… “தேவா நம்ம இரண்டுபேரையும் கிளப்பி… ‘ராயல் அமிர்தாஸ்’ வரச்சொல்லிவிட்டார்… உன்னிடம் ஒரு பென்ட்ரைவ் கேட்டிருந்தாராமே… அதை எடுத்து வரச்சொன்னார்…” என்க…

“நான் ஏன் அங்கே வரணும்… ஹோட்டலுக்கெல்லாம் என்னால் வர … எனக்கு இங்குத்தானே வேலை?” என்று அவள் சுமையாவிடம் சொல்லிவிட… அடுத்த சில நிமிடங்களில் அவளது கைப்பேசி ஒலித்தது…

தேவா அழைத்திருந்தான்…

“என்ன மல்லி இப்படி செய்யற…” குரலில் கொஞ்சம் கோபமும் தெரிந்தது….

இரவு முதலே அந்த வருடத்திற்கான கணக்குகளை தணிக்கை செய்யும் வேலையில் மூழ்கி இருந்தான்… அப்பொழுதுதான் அது முடிந்திருந்தது…

வெகு விரைவிலேயே அந்தப் புடவையை வடிவமைக்கத் திட்டமிட்டிருந்தான்… “அவள் ஏன் புரிந்துகொள்ளாமல்… படுத்துகிறாள்?”

“இல்லை தேவா… இப்படி ஹோட்டலுக்கெல்லாம் வருவது… எனக்குப் பிடிக்கவில்லை…” என்று அவள் சொல்ல…

“ப்சு… அது நம்ம ஹோட்டல்தான் மல்லி…  சுமாவுடன்தானே வரப்போகிறாய். வா… இல்லை என்றால் உன் வேலை கான்போர்ம் ஆகாது…” என்று அவன் மிரட்டுவது போல் சொல்ல… அவள் அங்கே சென்றாள் சுமாயாவுடன்…

நேரே அவர்கள் சென்றது அந்த நட்சத்திர ஹோட்டலின்… கான்பரன்ஸ் ஹாலிற்கு… தேவா… அங்கே இருந்த பெரிய திரையில் ஒளிர்ந்த  விவரங்களை… கையில் வைத்திருந்த காகிதங்களுடன் சரிபார்த்துக்கொண்டிருந்தான்… அவர்கள் உள்ளே நுழையவும்… மல்லியைத் திரும்பியும் பார்க்காது… “சுமா மல்லி இங்கே இருக்கட்டும்… நம்ம ஆடிட்டர்ஸ்… சில கொய்ரிஸ் போட்ருக்காங்க… நீங்க அதற்குப் பதில் சொல்லிவிட்டு வாங்க” என்க… அவளும் அங்கிருந்து சென்றாள்.

தேவா…  மல்லியிடம் அந்த பென்ட்ரைவை கேட்கவும் அதை அவனிடம் கொடுத்தவள்… “நீங்க மறுபடியும்… என் வேலையை காரணம் காட்டி என்னை மிரட்டினால்… எனக்கு இந்த வேலையே வேண்டாம் என்று போய் விடுவேன்…” என்ற அவளது கோபமான வார்த்தையில் அவனுக்குப்  புன்னகையே அரும்பியது…  அவளது நிமிர்வைப் பார்த்து…

“சரி வேலையைப் பார்” என்று…  அங்கே இருந்தப் பெரிய திரையில் ஒளிர்ந்து கொண்டிருந்த அவளது அந்த டிசைன்களை காட்டிச் சொன்னான்…

அதைப் பார்த்ததும் அவளது கோபம் மறைந்துவிட…  அவள்… தேவாவிடம்… அந்தப் புடவையை  வடிவமைப்பதைப் பற்றி   விளக்கத் தொடங்கினாள்… அவள் பேசும் வார்த்தைக்கேற்ப அவளது கண்களும் நடனமாடிக்கொண்டிருக்க… கொஞ்சம் கொஞ்சமாக அதில் தொலைந்து கொண்டிருந்தான் தேவா…

அவனது மடிக்கணினியை அவள் இயக்கிக் கொண்டிருக்க… அவனது மூச்சுக்காற்று அவளது கன்னத்தில் உரசக் குனிந்து அவளருகில் நின்றிருந்தவனை…   வேலையில் இருந்த ஈடுபாட்டினால் முதலில்… கவனிக்காதவள், பின்பு அதை உணர… அவசரமாக அங்கிருந்து எழுந்துகொண்டாள்… அதை உணர்ந்தவன்… பிறகு அவள் மொத்தமும் விளக்கி முடிக்கும் வரை… கொஞ்சம் தள்ளியே நின்றிருந்தான்…

அவள் மொத்தமும் விளக்கி முடித்து  அங்கிருந்து கிளம்பவுமே… “மல்லி! ஒரு முக்கியமான விஷயம் உன்னிடம் பேசவேண்டும்” என்று தேவா தீவிரக் குரலில் சொல்ல…

அவன் என்ன பேசுவானோ என அஞ்சியவள்… “இல்லை… நான் கிளம்பணும்” என்க…

“இல்லை! இன்று பேசியே ஆகவேண்டும்” என்று தேவா பிடிவாதமாய் சொல்லவும்…

“என்ன” என்று அவனைக் கேள்வியாக நோக்கியவளிடம்…

“இங்கே வேண்டாம் என்னுடன் வா…” என்று அவளது கையை இறுகப் பற்றியவாறு… அழைத்துவந்திருந்தான்… சுற்றிலும் பார்த்தவள் அதிர்ந்தாள்…

அன்று அவளைக் கவர்ந்த அந்த நீச்சல் குளத்தருகில் நின்றிருந்தனர் இருவரும்… தனிமையில்…

தனது கையை விடுவிக்க அவள் போராட… அவளது விரலில் ஒரு மோதிரத்தை அணிவித்து… அதன் பிறகே அவளை விட்டான் தேவா…

மிரட்சியுடன் அவள் அந்த மோதிரத்தைப் பார்க்க… அன்றைக்கு முதல் நாள் அவள் பார்த்த அந்த “ஆ” என்ற எழுத்தைத் தங்கியிருந்த அதே மோதிரம்தான் அது…

“இது என் அம்மாவின் மோதிரம்… அவர்களுடைய பெயர் ஆதிலட்சுமி… இதை அம்மா உனக்குக் கொடுக்கச் சொல்லிவிட்டார்கள்” என்று அவன் சொல்ல…

“என்ன… எனக்கா? எனக்கு எதற்கு?” என்று அவள் கேள்விகளாய்க்  கேட்க…

“அவங்க மருமகளுக்குக் கொடுக்காமல் வேறு யாருக்குக் கொடுப்பார்கள்?” என்று அவன் பதிலையும் கேள்வியாக்க… திகைத்தாள் பெண்ணவள்…

“இல்லை… அது ஒரு நாளும் நடக்காது” என்று அவள் தீர்மானமாய் மறுக்க…

“கண்டிப்பாக நடக்கும்…” என்று அவன் அதில் உறுதியாய் நிற்க…

“எனக்கு நிறையப் பொறுப்புகள் இருக்கிறது… இப்பொழுது என்னால் காதலிக்கவும் முடியாது… கல்யாணம் செய்துகொள்ளவும் முடியாது” என்றாள் அவள் தெளிவுடன்…

 “நீ சொல்வது பொய்… எனக்குத் தெரியும் நீ என்னை விரும்பத் தொடங்கிவிட்டாய்… உன் பொறுப்புகளை நான் எடுத்துக் கொள்கிறேன்… நீ சரி என்று ஒரு வார்த்தை மட்டும் சொல்லு” என்றவனின் வார்த்தைகளில் உடைந்தவள்…

“என்னால் முடியாது” என்று மறுபடியும் மறுக்கவும்… 

அதில் பொறுமை இழந்தவனது கோபமான “ஏன்???”  என்ற வார்த்தையில்…

“ஏனென்றால்… நான் அம்முவிற்குச் சத்தியம் செய்து விட்டேன்… அவள்  யாரைச் சொல்லுகிறாளோ… அவரைத்தான் நான் கல்யாணம் செய்துகொள்வேன்…” என்றுவிட்டு அங்கிருந்து செல்ல அவள் எத்தனிக்க…

 “என்ன???” என்று ஒரு நொடி திகைத்தவன்… பிறகு…

“முட்டாளா நீ… ஒரு வேளை அம்முவை நீ சந்திக்க முடியாமலேயே போனால்… கல்யாணம் செய்து கொள்ளாமலேயே இருந்து விடுவாயா??? என்று கேட்க…

“நிச்சயமா” என்றுவிட்டு…  ஒரு நொடியும் நிற்காமல் அந்த ஹோட்டலை விட்டு வெளியில் வந்த மல்லி… பதட்டத்துடன் அங்கிருந்த சாலையை கடக்க முயல… தன் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று அவள் மீத மோதிவிட்டு நிற்காமல் பறந்தது…

அவளைத் தொடர்ந்து ஓடி வந்திருந்த தேவாவின் கைகளுக்குள்… செங்குருதி பெறுக மயங்கியிருந்தாள் மல்லி…

Written by

Ardent reader, kirukkufying something, want to travel with characters around me.

error: Content is protected !!