TK-22

TK-22

தோழிமார் கதை 22

அன்று….

 திலி வேண்டுமென்றேதான் அர்ச்சனாவை மாட்டிவிட்டாள். “ஒன்னு ரெண்டு பிட்ட போட்டேன் “என இலக்கியாவிடம் கூறியது கூட ஒரு பேச்சுக்காகவே.  ஏனென்றால் அர்ச்சனா  அரவிந்த்  மேல் உயிரையே வைத்திருப்பதாகவும் அவனை உருகி உருகி காதலிப்பதாகவும் அவன் இல்லையென்றால் அவளது வாழ்வே இல்லை என்பன போன்ற பல கதைகளை கூறி இருந்தாள்.  உண்மை போலவே  திலி கூறியதை அரவிந்தும் நம்பி விட்டது போலத்தான் தெரிந்தது.  ஏனென்றால்  கதைக்கு ஏற்றவாறு அரவிந்தின் முகம் நொடிக்கொருமுறை மாறுவதை கண்ணாரக் கண்டாள்.

 “பாக்கலாம் இதுக்கு எப்படி தான் அர்ச்சனா தப்பிக்க போறான்னு. பொய்யா சொல்ற.. அவன் பார்க்கிறான் ….அவன் பார்க்கிறான்… அமெரிக்கால கூப்பிட்டாக…. ஆப்பிரிக்கால கூப்பிட்டாகன்னு…”  என நிஜமாகவே தி்லி ஆனந்தம்தான் கொண்டாள்.  இவற்றையெல்லாம் இலக்கியாவிடம் சொல்லவில்லை.

எங்கே இலக்கியா தன்னை தவறாக எண்ணிவிடுவாளோ என்று அச்சம் திலிக்கு நிறையவே இருந்தது.  தவறாக நினைத்து கொண்டதோடு மட்டுமன்றி தன்னை ஏசவும் கூடும். இன்னும் ஒருபடி மேலே சென்று அர்ச்சனாவிடம் இது பற்றி விலாவாரியாக விவாதிக்க கூடும்.  அதன் பின்னர் தான் எதிர்பார்த்த “அந்த” கைகலப்பு நிகழாமலே போய்விடக் கூடும். அதிலும் அர்ச்சனாவிற்கு ஒரு சிறு துரும்பு இதுபற்றி தெரிந்தால் கூட அதை புரிந்து கொள்வாள். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு திலி இலக்கியாவின் தன் முழு மனதையும் வெளிப்படையாக சொல்லாமல் தவிர்த்து விட்டாள்.

இதனால் பின்னாளிம் தனக்கும் அர்ச்சனாவிற்கும் பேச்சு வார்த்தை முறிந்து போகும் அளவு விஷயங்கள் நிகழும் என முன்னரே தெரிந்திருந்தால் திலி சொல்லியிருப்பாளோ என்னவோ.

 திலீபா  இலக்கியாவிடம்  அரவிந்த் பற்றி சொல்லிக் கொண்டிருந்த அதே நேரம்  கல்லூரி பேருந்தில் தனது இல்லம் நோக்கி சென்று கொண்டிருந்த கெளசியும் அர்ச்சனாவும் வேறு ஒரு முக்கிய நபரை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.  கௌசிக்கு ஆரம்பத்திலிருந்தே மதனைக் காணும் போதெல்லாம் ஒருவித படபடப்பு வந்து சேர்ந்து கொள்ளும்.

” அவனைப் பார்த்தாலே ஒரு மாதிரி பயமா இருக்குடி..ரொம்ப அரகெண்டா இருக்கான்…”  என அடிக்கடி தனது தோழிகளிடம் சொல்லி கொண்டே இருப்பாள்.   அதிலும் இன்றைய நிகழ்ச்சிக்கு பிறகு அவனைக் கண்டாலே 8 அடி தூரம் நகர்ந்து சென்று விட வேண்டும் என்று மனதிற்குள் முடிவெடுத்திருந்தாள்.

அவளால் மாடியில் தான் கண்ட காட்சியை மறக்க இயலவில்லை. “கிஸ் பண்ணிட்டு தான் இருந்தாங்களோ?..எங்களைப் பார்த்ததும் சட்டுன விலகின மாதிரி தானே இருந்துச்சு….ஒரு வேளை குற்ற உணர்ச்சியினால தான் இவ்வளவு தூரம் ஹெல்ப் பண்ணானோ?” என கெளசி நினைத்துக் கொண்டிருக்க, அர்ச்சனாவின் எண்ணமோ மதனின் வீரதீர சாகசத்திலேயே லயித்திருந்தது.

 கௌசியின் இந்த எண்ணத்திற்கு நேர்மாறாக தொணதொணவென்று மதன் பற்றியே பேசிக் கொண்டு வந்த அர்ச்சனாவை  எரிச்சலுடன் ஏறிட்டாள்.

” இப்ப சும்மா எதுக்கு நீ அவன பத்தி பேசிட்டு வர …”  என கௌசி  கோபமாக சொல்லும் அளவிற்கு அர்ச்சனா  பேருந்து ஏறியதில் இருந்தே மதனைத் தவிர வேறு எந்த விஷயத்தைப் பற்றியும் பேசவில்லை.

” ஏண்டி மாமி பேச வேணாம்னு சொல்ற.. இன்னைக்கு நடந்தது ஏதோ சினிமாவிலே பார்க்குற மாதிரி இருக்கு… உண்மையா இல்லையா நீயே சொல்லு…. நெஜமாவே செம  தில்லு டி அவனுக்கு… எனக்கு என்னமோ பரபரன்னு ஒரு விஜய் படம் பார்த்த மாதிரி இருந்துச்சு….அப்படி ஒரு ஆக்ஷன் சீக்வென்ஸ்…”  என அர்ச்சனா மதனை பற்றி சிலாகித்துக் கூறினாள்.

கெளசிக்கு எப்போதுமில்லாத அளவில் கோபம் சேர்ந்து கொண்டது. “அறிவுகெட்ட த்தனமா யோசிக்கறதே தான் உனக்கு வேலையே….இந்த பிரச்சனைக்கு காரணமே அவன் தான். அவன் மட்டும் முன்னாலையே நம்மளை விட்டிருந்தா நாம அப்போவே பஸ்ஸை பிடிச்சிருப்போம்.”

“ம்ம்ம்..அவன் மட்டுமா காரணம்….அவங்க என்னமோ பண்ணறாங்கன்னு டீசண்டா கண்டுக்காம விட்டிருக்கனும்….முதல்ல வாயை விட்டு மாட்டிக்கிட்டது நீ தானே”என்றாள் அர்ச்சனா தன் பங்கிற்கு.

“கரெக்ட் தான்டீ…நானா தான் ஆர்வக்கோளாரா கேட்டேன்….தப்பு தான் போதுமா…அதுக்காக சும்மா அவனைப் பத்தி ரொம்ப புகழாத. இன்னும் சொல்லப் போனா, அவனை விடவும் துணிஞ்சு நமக்காக நின்னது நம்ம திலி தான். அவளைப் பத்தி ஒரு வார்த்தை கூட பேச மாட்டேங்கற..”

திலிபாவின் பேச்சை எடுத்ததுமே அர்ச்சனாவின் முகம் சற்றே பிரகாசம் இழந்தது. மதனைப் பற்றி பேசிய போது இருந்த ஆர்வம் திலியைக் குறித்து சிறிதும் தோன்றவில்லை. கெளசி கூறிய உண்மை உரைக்கவும் செய்தது. அதன் பின்னரே அர்ச்சனா தன் வாயை மூடிக் கொண்டாள்.

வீடு வந்து சேர்ந்த அடுத்த பத்து நிமிடத்தில், அரவிந்தின் எண்ணில் இருந்து தன் கைப்பேசிக்கு அழைப்பு வந்திருந்தது. “பத்திரமா வீட்டுக்கு போயிட்டியா? ஒண்ணும் பிராப்ளம் இல்லையே…”என அக்கரையாக வினவியனிடம் என்ன பேசுவது என்று சரிவரத் தெரியாமல் போக ஏதோ உளறி வைத்தாள் அர்ச்சனா.

மனம் மதனைக் குறித்து எண்ணமிட, நிஜத்தில் பேசிய அர்விந்தின் பேச்சு அர்ச்சனாவிற்கு லயிக்கவில்லை. இது குறித்து யோசித்து முடிவெடுக்கும் பக்குவம் வாய்த்திருக்கவில்லை. முதல் கோணல் முற்றிலும் கோணலாக மாறிக் கொண்டிருப்பதை கொஞ்சம் உணராமலேயே போனாள் அர்ச்சனா.

அங்கே விடுதியிலும் இதே உளறல்கள் நிகழத் துவங்கியிருந்தன. எவரிடமோ கேட்டு, எங்கோ வினவி, மதன் திலிபாவின் கைப்பேசி எண்ணை வாங்கியிருந்தான். திலிக்கு அழைத்து பேசவும் செய்தான்.

“ஹாய்….”என மொழிந்த ஒரு வார்த்தையிலேயே மதனின் குரலை உணர்ந்து கொண்டாள் திலிபா.

“ஹாய் மதன்”என உரிமையுடன், நீண்ட நாட்கள் பழகிய தோழி போல் நட்புணர்விடன் பேச்சைத் துவங்கினாள்.

“நான்னு எப்படி கண்டுபிடிச்ச? என் நம்பர் உங்கிட்ட இருக்கா என்ன? எனக்கே தெரியாம நான் அவ்வளவு பாப்புலர் ஆயிட்டேனா என்ன?”

“அடடா ரொம்ப நினைப்புத்தான்…..கெஸ் பண்ணேன்…அவ்வளவு தான்..”

“ஒரு வேளை நானா இல்லைன்னா…”

“சாரி சொல்லிட்டு…என்ன வேணும்னு கேட்டிருப்பேன்…”என அலட்டிக் கொள்ளாமல் பதில் பேசிய திலியை மறுமுனையில் கைப்பேசிக்கு காதுகளைக் கொடுக்கத் துவங்கியிருந்த மதனிற்கு பிடித்துப் போனதில் வியப்பில்லை.

“ம்ம்ம்ம்…”

“என்ன விஷயம்?”

“ஒண்ணும் விஷயமெல்லாம் இல்ல….சும்மா பேசலாம்னு தான் கூப்பிட்டேன்…உனக்கு வேலை இருக்கா என்ன?”

“சே..நோ….8.30க்கு சாப்பிடப் போறவரைக்கும் ஃப்ரீதான்….பேசலாம்”

“ம்ம்….நீ எப்பவுமே இப்படித்தானா?”

“இப்படின்னா? எப்படி?”

“இப்படி, பரபரப்பா பட்டாசு மாதிரி….”

“தெர்ல….நான் எப்படி என்ன்னனு எனக்கும் அவ்வளவா தெரியாது….மனசில தோன்றதை செய்வேன்…”

“ம்ம்ம்ம்….”

“அப்பறம் ஒரு முக்கியமான விஷயம்…எங்கிட்ட பேசறதெல்லாம் ஒ.கே…ஒண்ணும் பிரச்சனையில்ல….பட், கொஞ்ச நாள் கழிச்சு காதல் கீதல்னுலாம் ஆரம்பிச்சரமாட்டீங்களே….”

“தோடா….மிஸ்.பீட்டர்…உங்களுக்கு நினைப்பு கொஞ்சம் டூ மச் தான் ஜுனியர்”

“கூல் கூல் சீனியர்….தெளிவு படுத்திக்கறேன்…அவ்வளோ தான்…முன்னாடியே டேட்ம்ஸ் அண்ட் நார்ம்ஸ் சொல்லிட்டா, அப்பறம் பின்னாடி சட்டச்சிக்கல் எதுவும் இருக்காதில்லையா….சோ…”

“அப்பா அறிவாளீ ஜீனியர்…நான் உங்கிட்ட மொதல்ல சொன்ன பதில் தான் இதுக்கும். உன்னை பார்க்க என்ன மாதிரி இருக்கு. என்னோட ஃபீமேல் வர்ஷன் மாதிரி. எனக்கு என்னை பிடிக்கும். அதே மாதிரி, உன்னையும் சட்டுன பிடிக்குது…அதுக்காக என்னை நானே லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்க முடியாதில்லையா? ஐ வாண்ட் டி பி யுவர் ஃப்ரெண்ட் ஆல்வேஸ்….உன்னை மிஸ் பண்ண மாட்டேன்…ஏன்ன, சில நட்புகள் காலேஜ் முடிஞ்சாலும் ரொம்ப நாள் நீடிக்கும். சிலர் கூட நாம கண்டிப்பா டச்ல இருப்போம். அவங்களை மிஸ் பண்ண மாட்டோம்…அந்த மாதிரி தான் நீயும் எனக்கு. அதனால தான் முதல்லையே சொன்னேன் நீ என்னை மாதிரி….க்ரியரா….?”

“கிரிஸ்டர் க்ளியர்….இப்படி முன்னாடியே பேசிடறது பெட்டர் இல்லையா சீனியர். அதான்….”என திலிபா மொழிந்தாள். இன்னது தான் பேச  வேண்டும் என்ற வரைமுறை இல்லை, தன்னை எடை போடுவார்களோ என்ற கவலையில்லை, தன்னை பிடிக்க வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லை. அவரவர் உள்ளது உள்ளபடிக்கே இருந்தால் போதும் என்ற அடிப்படையில், எந்த மாற்றத்தையோ, கருத்து திணிப்பையோ கொண்டிராத தோழமை அங்கே உருவாகியிருந்தது.

அன்றைக்கு மட்டும் அல்லாது, அடுத்து வந்த சில நாட்களிலேயே மதன், திலிபாவின் வாழ்வில் முக்கிய நபராகிப் போனான். அதே போன்று அரவிந்து அர்ச்சனாவின் வாழ்வின் முக்கிய நபராக வேண்டி தன்னால் முடிந்த அளவு முயற்சிகள் மேற்கொள்ளத் துவங்கியிருந்தான். அர்ச்சனாவிற்கு அரவிந்தின் இந்த திடீர் பாசமும், அடிக்கடி தன்னிடம் வந்து பேசும் பாங்கும் வெளியே பகட்டாக காட்டிக் கொள்ளப் பிடித்திருந்தாலும், உள்ளுக்குள் உருத்தலாக இருந்தது.

“இவன் என்ன திலியை லவ் பண்ணறேன்னு எங்கிட்ட சொன்னான். என்னை ஹெல்ப் பண்ண சொல்லி கேட்டான். இப்போ என்னடான்னா எங்கிட்ட இப்படி வம்படியா பேசறான். நாள் தவறாம போனும் மெசேஜும் பண்ணறான்…இதெல்லாம் எங்க போய் முடியப்போகுது..”என மனம் வருந்திய போதும், தோழிகளின் முன்னிலையில் பெருமையாகவே உணர்ந்தாள். ஒருபக்கம் தான் சொன்ன பொய் நிஜத்தில் நிகழ்வது போலத் தோன்றியது.

அதே நேரம், வகுப்பு இடைவெளி, மதிய உணவு நேரம் என தவறாமல், இவர்களது வகுப்பறையின் வாசலில் குடிகொள்ளும் மதனையும், அவனது ஹீரோயிஸத்தையும் அர்ச்சனாவால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. சில நேரம் தனிமையில் சிந்தித்துப் பார்த்தால், தன் மீதே அர்ச்சனாவிற்கு கோபம் எழும் தான்.

“மொதல்ல அரவிந்த் திலியை லவ் பண்ணறது பிடிக்காம போச்சு…அதுக்காக நாமளே கதையை கட்டி, அப்படி இப்படின்னு ஒப்பேத்தினேன். இப்போ அரவிந்தா வந்து பேசறான் தான். கொஞ்ச்ம உரிமையாவே பேசறா மாதியும் இருக்கு தான். ஆனா, இப்போ அரவிந்தை விடவும் மதன் மேல கவனம் போகுதே. அதுலையும் அவன் திலிபாட்ட சிரிச்சு பேசறதைப் பார்க்கவே பிடிக்கலை. எங்கிட்ட பேசாம அவகிட்ட அப்படி என்ன இருக்குன்னு வழிஞ்சு வழிஞ்சு பேசறானோ..”என சுய ஆராய்ச்சியில் ஈடுபட்டாள். இன்னும் சிறிது யோசித்திருந்தாளானால் இது மதனின் மீதோ, அதற்கு முன்னர் அரவிந்தின் மீதோ ஏற்பட்ட கோபமல்ல என்பதும், திலிபாவின் மேல் சிறுக சிறுக வளர்ந்துவிட்டிருந்த வெறுப்பினாலேயே அவளை விட தான் உயர்ந்தவள் என நிரூபிக்க நினைக்கிறோம் என்பதும் விளங்கியிருக்கும்.

ஆனால் அந்த பக்குவத்திற்கான வயதோ, மனதோ அப்போது அர்ச்சனாவிடம் இருக்கவில்லை.

அரவிந்த் அர்ச்சாவை நிழல் போல் மாறத் துவங்க, திலிபாவிற்கும் மதனிற்கும் ஒரு அழகான நட்பு உருவாகியிருக்க. நாட்கள் வேக வேகமாக நகரத் துவங்கின.

அந்த வருடத்தின் ஐ.வி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இண்டஸ்டியல் விசிட்டிற்காக பெங்களூர் செல்வதாக ஏற்பாடானது. ஐ.வி எதிர்பார்பில் நாட்கள் ஜெட் வேகத்தில் பறந்துவிட்டிருந்தன. கல்லூரியில் இருந்து சொகுசு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, அனல் பறக்கும் பாட்டுகளுடனும், அதற்கேற்ற நடனங்களுடனும் பெங்களூரைக் காணச் சென்றது தோழிகள் குழு.

“நீயும் என் இயரா இருந்திருந்தா எங்கூட ஐ.வி வந்திருபல்ல சீனியர்…”என திலி முந்தினம் தான் மதனிடம் மொழிந்திருந்தாள். “ஐய்ய….இதுக்கெல்லாம ஃபீல் பண்ணுவீங்க ஜூனியர்….உங்கூட பஸ்ல வேணா ஒண்ணா வரமுடியாது..ஆனா பெங்களுர் வரலாம்ல…ஃபீல் பண்ணாதீங்க என்ன” என சமாதானப்படுத்திய மதன், சொன்ன வாக்கு போலவே, இவர்கள் பெங்களூர் சென்றே அதே தினம் அவனது தோழர்கள் இருவரை உடன் அழைத்துக் கொண்டு பெங்களூர் வந்து சேர்ந்திருந்தான். திலிபாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போயிற்று. என்ன இவளது வகுப்பு மாணவர்கள் இதை வினோதமாக பார்த்ததோடு இல்லாமல், கண்காது மூக்கு வைத்து திரித்து பொருள் கொள்ள ஆரம்பித்தனர்.

திலிபாவிற்கு மதனின் மேல் துளி காதல் கூட த் தோன்றவில்லை. எப்படி இலக்கியாவை தன் மனதிற்கு நெருக்கமானவளாக எண்ணுகிறாளோ அதே போன்றே மதங்குமாரையும் எண்ணினாள். இலக்கியா ஐ.விக்கு வராவிட்டிருந்தாள் திலிபா வேதனைப்பட்டிருப்பாள் தானே. அதே போன்று தானே மதன் இல்லாத போதும் தோன்றுகிறது என்று நட்பு ரீதியிலே தான் திலிபா கவலை கொண்டாள்.

ஆனால் நல்ல விஷயத்தைக் கூட நான்காக திரித்துக் கூறும் நபர்களுக்கா பஞ்சம் நம்மிடம். அதிலும் அர்ச்சனா ஏற்கனவே புகைச்சலில் இருக்க, மதன் திலிபாவைக் காண்பதற்காக, அவள் வருந்துகிறாளே என்பதற்காக பெங்களூர் வரை வந்ததை அர்ச்சனாவால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. திலிபாவும், தோழிகளிடம் மதன் வருவது குறித்து மறைக்க நினைக்கவில்லை.

“மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயம்…”என்ற எண்ணத்தில் இருந்தாள். அன்று பெங்களூரில் கழிக்கப் போகும் கடைசி தினம். கபன் பார்க் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு, அப்படியே ஷாப்பிங் முடித்துக் கொண்டு பேருந்து ஏறிவிட வேண்டும் என்று உடன் வந்திருந்த விரிவுரையாளர்கள் கூறியிருந்தனர்.

ஏக்கர் கனக்கில் பரந்து விரிந்திருந்த கபன் பார்க் செல்கையிலேயே மாணவர்கள் குழு குழுவாக பிரிந்து போகத் துவங்கியிருந்தனர். “நான் மிகவும் நல்லவள்…உங்களைத் தவிர வேறு யாருடனும் செல்லமாட்டோம்” என்று விரிவுரையாளர்களுடன் சென்றது ஒரு கூட்டம். அவர்கள் சென்று விட, தோழிகள் நால்வரும் பேசியபடிக்கே வேறு பக்கம் சென்று விட்டனர்.

ஐ.வி முழுவதுமே அர்ச்சனாவின் நிழல் போல தொடர்ந்து வந்துகொண்டிருந்த அரவிந்தின் கவனிப்பு சற்று அதிகபடியாகவே இருந்தது.

முன்னர் அவன் தன்னிடம் மட்டும் பேசுவதையும், சிரிப்பதையும் ரசித்த மனம், பெருமை கொண்ட இதயம், இன்று இந்த நொடி அப்படி நினைக்கவில்லை. “இவன் என்ன…என் ஃப்ரெண்ட்ஸ் கூட நான் எஞ்சாய் பண்ணறதை இவ்வளோ தடுக்கறான். பஸ்ல டான்ஸ் ஆடுனா “எல்லாரும் பார்க்கறாங்க அர்ச்சனா…”ன்னு ஃபோனுக்கு மேசேஜ் அனுப்பறான். எல்லாரும் பார்கறதுக்குத் தான ஆடறது…யாரும் பார்க்க கூடாதுன்னா, தனியா ரூம்ல ஆடமாட்டேனா…இம்சை… இப்ப கூடப் பாரு இவளுக எல்லாம் சேர்ந்து சிரிச்சுட்டு ஜாலியா நடக்கறாங்க…இவன் என்னடான்னா அவனோட ஃப்ரெண்ட்ஸ் கூடப் போகாம, என் பின்னால வர்றான். இவனுக்காக மெதுவா நடக்கப் போய் இப்போ இவளுக முன்னால போயிட்டாளுக…நாங்க ஏதோ லவ்வர்ஸ் மாதிரி மெதுவா பேசிட்டு பின்னாடி நடக்கற மாதிரி இருக்கு…”என நினைத்தவள், சட்டென தன் மனதை தானே ஆராய்ந்தாள்.

இவ்வளவு நாளும், கிட்ட தட்ட கடந்த ஒன்னரை மாதங்களாகவே அரவிந்த் இப்படி நடந்து கொள்கிறான் தான். தோழிகளிடம் தான் சொன்ன பொய்க்கு ஏற்றார் போல் இவனாக வந்து பேசுவது நல்லது தானே என்ற ரீதியில் அர்ச்சனாவும் அரவிந்துடன் பேசுவதை தவிர்த்ததில்லை. அவனும் இப்போதெல்லாம் திலிபாவைப் பற்றி அதிகம் கேட்பதில்லை என்பதையும் லேசாக அவ்வப்போது உணர்ந்தாள் தான். கல்லூரியில் இருந்த வரையில் அதிகமாக இந்த வித்தியாசம் தோன்றவில்லை. ஆனால் இந்த 4 தின பெங்களூர் ஐ.வியில் அரவிந்த் தன்னுடன் இல்லாத நேரம் என்பது, இரவு அவரவர் அறைக்குச் செல்லும் போது மட்டுமே.

அதிலும், வெளியூர் என்பதால் பெண்களின் பாதுகாப்பிற்காக ஒவ்வொரு குழுவிலும் சில மாணவர்கள் தாங்களாகவே இணைந்து கொண்டனர். அது போன்றே, இடங்களை சுற்றிப் பார்க்கும் போது தோழிகள் குழுவில் அரவிந்தும் அவனது நண்பர்கள் இருவரும் சேர்ந்து கொண்டது இயல்பாகவே இருந்தது.

ஆனால் இப்போது கபன் பார்க்கில், வேண்டுமெண்றே தோழிகள் முன்னால் செல்ல, மெதுவாக மிக மெதுவாக நடக்கும் அரவிந்தின் நடத்தையை விசித்திரமாக உணர்ந்தாள் அர்ச்சனா.

“வேகமா நடக்கலாமா அரவிந்த்…அவங்கள்ளாம் தூரம் போயிட்டாங்க..” என மெதுவாக எடுத்துரைக்க, “அர்ச்சு…. உங்கிட்ட கொஞ்சம் நான் பேசணும்…அவங்க போறதுன்னா போட்டும்…வா நாம இப்படி உட்காரலாம்…” என அர்ச்சனாவிடம் ஏதும் கேளாமல் அவளது கைகளை பற்றி அருகில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டான்.

“இதென்னடா புது வம்பு”என அர்ச்சனா யோசிக்கும் முன்னர், நல்ல வேளையாக அரவிந்தே பேச்சைத் துவங்கியிருந்தான். எங்கே அன்றைக்குப் போல் தலையை சுற்றி முக்கு வரை பேசுவானோ என அர்ச்கனா பயந்தது போல் அல்லாமல் நேரே விஷயத்திற்கு வந்திருந்தான்.

“திலி எங்கிட்ட எல்லாமே சொன்னா…மொதல்ல என்னால நம்பவே முடியலை….ஏன்னா…நான்….ஏன்னா…அப்படி நாம எதும் பேசிகிட்டதில்லை….அதுவுமில்லாம….நீ அப்படி நினைப்பன்னு நான் சத்தியமா நினைக்கவேயில்லை. அதான் உண்மை.”

“அது வந்து அரவிந்த்….”என அன்றைய நிலையை அர்ச்சனா சொல்லத் துவங்க, “ப்ளீஸ்…நான் சொல்ல வந்ததை  முழுசா சொல்லிடறேன். “என்று அவனே மீண்டும் தொடர்ந்தான்.

“உனக்கு எவ்வளோ சங்கடமான நிலைமை நான் உருவாக்கியிருக்கேன். உங்கிட்டையே வந்து எனக்கு ஹெல்ப் பண்ண சொல்லி கேட்டிருக்கேன். தப்பு தான்..இல்லையா…”

“ஆனா அரவிந்த்…”

“அர்ச்சனா நீ எதுவுமே சொல்லவேணாம். எனக்கு புரியாம இல்லை. இன்னமும் தெளிவா சொல்லனும்னா, திலிபா அன்னைக்கு எங்கிட்ட பேசினப்போவே நான் தெளிவாயிட்டேன். அவளுக்கு நான் செட்டாக மாட்டேன். அதே மாதிரி தான் அவளும் எனக்கு. ரெண்டு பேர்த்து லைஃப் ஸ்டைலும் வேற வேறன்னு தெளிவா புரிஞ்சது. அதே நேரம், என் மேல நீ இவ்வளோ…இப்படின்னு தெரிஞ்சப்போ…எனக்கு எப்படி சொல்லன்னு தெரியலை….நாம விரும்பற பொண்ணை விட நம்மளை விரும்பற பொண்ணு தானே எப்பவும் பெட்டர்….”என ஏதேதோ உளறத் துவங்க, அர்ச்சனா சுதாரித்தாள்.

“அரவிந்த் …அரவிந்த்…ஒரு நிமிஷம்…நீ தப்பா புரிஞ்சுகிட்டிருக்க…உங்கிட்ட திலிபா என்ன சொன்னான்னு எனக்குத் தெரியலை….ஆனா நீ பேசறதை வச்சு பார்க்கறப்போ ஏதோ என்னைப் பத்தி தவறா சொல்லியிருக்கான்னு தோணுது…மொதல்ல எனக்கு திலிபா என்ன சொன்னான்னு சொல்லறியா ப்ளீஸ்…” என அரவிந்த் பேசுவதற்கு இடம் கொடுக்காமல் அர்ச்சனா பேசிமுடிக்க, அவனது முகம் பல குழப்பங்களுக்கு ஆளானது.

“நீ என்னை…ஐ மீன்…திலிபா சொன்னா, நீ என்னை ரொம்ப விரும்பறன்னு….அப்போ அது உண்மையில்லையா?”

“அது அதுவந்து….”

“பரவாயில்ல….ஃப்ராங்கா சொல்லு…”

“சீ…எனக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் இப்போ வரை இல்ல…சும்மா ஏதோ ஃப்ரெண்ட்ஸ்கிட்ட அப்போ அப்போ விளையாட்டுக்கு பேசுவேன். அவங்க அதை வச்சு, ஐ மீன், நான் உங்கிட்ட பேசறதை வச்சு உன்னையும் என்னையும் சேர்த்து ஓட்டுவாங்க…அவ்வளோ தான். அந்த மாதிரி தான் திலிபா உங்கிட்ட ஏதோ என்னைப் பத்தி சொல்லியிருக்கான்னு நினைக்கறேன்…நீயும் அதை நம்பிட்டு ஏதோ தப்பா நினைச்சுகிட்டிருக்க..” என அர்ச்சனா ஒருவாறு விஷயத்தை சொல்லி முடித்தாள். ஆனால் அவளது கெட்ட நேரமோ என்னவோ, தோழிகள் படை இவளை நொடு நேரமாகக் காணாது, அர்ச்சனா அமர்ந்திருந்த இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. அவர்களிடன் வகுப்பின் பிற மாணவிகள் சிலரும் இருந்தனர்.

அரவிந்தின் முகம் நொடிக்கு நொடி மாறிக் கொண்டே இருக்க, அத்தோடு நில்லாமல், சட்டென கோபமும், ஏமாற்றப்பட்டு விட்டோமோ என்ற ஆத்திரமும் என சகல பாவனைகளையும் பிரதிபலித்துக் கொண்டிருக்க, அர்ச்சனா அவளது தோழிகள் அருகே வருவதை அப்போதே கண்டாள்.

“ஐய்யோ இந்த நேரம் பார்த்து தான். இவளுக கரெக்டா வரணுமா? இவன் முகம் வேற டக் டக்குன்னு சேனல் மாத்துதே…ஒருவேளை திலிபாவை கூப்பிட்டு நேராவே கேட்ருவானோ?” என அர்ச்சனா உள்ளுக்குள் அஞ்சிக் கொண்டிருக்க,

அரவிந்த அர்ச்சனாவின் எண்ணம் போலவே, பத்தடி தூரத்தில் நின்றிருந்தவர்களை கைஅசைத்து அருகே அழைத்திருந்தான். திலிபாவின் முகத்தில் மட்டுமே சின்ன சிரிப்பு ஒட்டிக் கொண்டிருக்க, இலக்கியாவும், கெளசியும் திலிபாவிடமிருந்து 4 அடி தூரத்தில் பிந்தொடந்தனர்.

“கூப்பிட்டியா அரவிந்த்?”என்று வினவிக் கொண்டே அருகில் வந்த திலிபாவை எரித்தே விடுபவள் போல் நோட்டமிட்ட அர்ச்சனா, திலிபா முதலில் பேசத் துவங்கும் முன்னர், தானே ஆரம்பித்தாள்.

“வாங்க மேடம்…வாங்க…என்னை பத்தி ரொம்ப நல்ல விதமா எல்லாத்துகிட்டையும் சொல்லியிருக்கீங்களாம்? அதை எங்கிட்டையே சொல்லலாம்ல…”

“ஹலோ ஹலோ…கத்தி கத்தி பேசறதுனால நீ பேசறதும், உன் கோபமும் நியாமாகிடாது மேடம்…மொதல்ல என்ன விஷயம்னு சொல்லு…தலையும் புரியாம, வாலும் புரியாம பேசிணா எனக்கு எப்படி தெரியும்…”என்ற திலிபா, அர்ச்சனாவை விடுத்து, அரவிந்திடம் திரும்பினாள்.

“என்னாச்சு அரவிந்த்…நான் என்ன பண்ண? மேடம் ஏன் சம்பந்தமில்லாம என்னை குத்தம் சொல்லிட்டு இருக்காங்க…”

“திலிபா…அன்னைக்கு சிம்போசியத்துக்கு முன்னத்தை நாள் நான் உங்கிட்ட பேசினப்போ நீ…”என அவன் முடிக்கும் முன்பே,

“ஆமா, அர்ச்சனா உன்னை லவ் பண்ணறான்னு உங்கிட்ட நான் சொன்னேன் தான். அதுதானே?”

“ஆமா, ஆனா அர்ச்சனா அப்படியெல்லாம் இல்ல, நீ ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு பேசறன்னு சொல்லறாளே…”

“எது…நான் தப்பா புரிஞ்சுகிட்டனா…சரிதான்….சரிதான். ஒ.கே அரவிந்த் நான் தப்பா புரிஞ்சுகிட்டேன்னே வச்சுக்கலாம். நான் மக்கு மண்டைன்னு ஒத்துக்கறேன். ஆனா ஒரே விஷயத்தை மூனு பேருமே தப்பா புரிஞ்சுக்குவோமா? ஏ, இல்லு, கெளசி நீங்க சொல்லுங்க, அர்ச்சனா அரவிந்தை லவ் பண்ணறாளா இல்லையா?” என மற்ற இருவரையும் துணைக்கு அழைத்து நிறுத்த, அர்ச்சனா ஆடித்தான் போனாள். இதில் பற்றாகுறைக்கு, வகுப்பின் மற்ற சில மாணவிகள் வேறு ஆர்வமாக காதை தீட்டிக் கொண்டு அருகிலேயே நின்றிருந்தனர்.

அர்ச்சனாவின் நெஞ்சம் படபடவென அடித்துக் கொள்வது, அருகில் நின்றிருப்பவருக்கே கேட்டிருக்கும். அரவிந்த் திலிபாவையும், அர்ச்சனாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான். அவனால் ஒரு முடிவிற்கு வரமுடியவில்லை.

“சொல்லு இல்லு. அன்னைக்கு அர்ச்சு அப்படித்தானே சொன்னா?” என வம்படியாக திலி வினவ, இலக்கிய பொதுவாக தலையை அசைத்து வைத்தாள். கெளசி மட்டும் அர்ச்சனாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “என்னோட இ.எம் எக்ஸாம் அன்னைக்கு நீ அர்ச்சனாகிட்ட ப்ரபோஸ் பண்ணதா அவ சொன்னா…”என குடைத்தை டமால் எனப் போட்டு உடைத்திருந்தாள்.

“இப்போ என்ன சொல்லற?”என்ற ரீதியில் திலிபா அர்ச்சனாவைப் பார்க்க, அவளோ நிலைமை கை மீறிவிட்டதை உணர்ந்து, அரவிந்திடமிருந்த கோபத்தை அப்படியே திலிபாவின் பக்கம் திருப்பினாள்.

“ஆமாடீ,….அப்படித்தான் சொன்னேன். அதுக்கு என்ன இப்போ…அவன் சொன்னது அப்போ எனக்கு அப்படித்தான் கேட்டுச்சு…போதுமா”என கீழே இறங்குகிறோம் என்று உணர்ந்தே, இன்னும் இன்னும் தன் தரத்தை தானே தாழ்த்திக் கொள்ளத் துவங்கினாள். அத்தோடு வார்த்தையை நிறுத்தியிருந்தாள் பரவாயில்லை.

“நீ பெரிய யோகியமாட்டம்…என்னை பேசவந்துட்ட…காலேஜ்ல இருக்க அத்தனை பசங்க கூடவும் ஜெள்ளு விடவேண்டியது….பார்க், சினிமான்னு ஊர் சுத்த வேண்டியது, சீனியர் ஜீனியர்னு வரைமுறையே இல்லாம கடலை போட வேண்டியது…கேட்டா, வெறும் ஃப்ரெண்ட் தான், ஃப்ரெண்டு தான்னு சீன் போடறது. உன்னை பத்தி தெரியாதா எனக்கு?””என ஏக வசனத்தில் இறங்கினாள்.

திலிபாவிடமிருந்த இதற்கு பதிலாக ஒரு நக்கலான புன்னகை மட்டுமே வெளிப்பட்டது. அந்த உதட்டின் நெளிவு அர்ச்சனாவை இன்னமும் எரிச்சலாக்கியது.

“என்ன …என்ன சிரிக்கற…”

“இல்லை…நீ என்னைப் பத்தி பேசறதா நினைச்சுட்டு, உன்னைப் பத்தி எல்லார்கிட்டையும் சொல்லிட்டு இருக்க….அதை நினைச்சேன் சிரிச்சேன்…”

“என்னடீ திமிறா…நான் என்ன உன்னை மாதிரி எவன் பேசுவான்ன்னு நாக்கை தொங்க போட்டுட்டா இருக்கேன்…”என்றவள், கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்வீசுகிறோம் என்பதை மறந்திருந்தாள். அதிலும் வீசிய கல்லை பிடித்து லாவகமாக திருப்பி அடிக்கும் நபரிடம் பேசுகிறோம் என்பதையும் அவள் உணரவில்லை. அப்போதைக்கு திலிபாவை மட்டம் தட்ட வேண்டும், திலிபாவின் குணத்தை கேவலப்படுத்த வேண்டும் என்பதே ஒரே நோக்கமாக இருந்தது.

“ஹ ஹ…யாரு தொங்க போட்டுட்டு திரியறான்னு நான் ப்ரூஃப் பண்ணட்டா?”என்றவள், அத்தோட நில்லாமல், சுற்றி நின்றிருந்த கூட்ட த்தில் இருந்து சற்றே ஒதுங்கி, ஓரமாக நின்றிருந்த மதனிடம் சென்றாள்.

“உன் ஃபோன் குடு….”என்றாள்.

“ஏ….விடு ஜூனியர்..ஏதோ பேசுதுன்னு விட்டுட்டுப் போவியா…ஏன் வீனா அசிங்கப்படுத்தற…”

“ஃபோன் குடுக்கறையா இல்லையா இப்ப…”என கராராக வினவ, மதன் மறுபேச்சில்லாமல் தன் கைப்பேசியை திலிபாவிட்ம ஒப்படைத்தான். போன அதே வேகத்தில் திரும்பியவள், இன்பாக்ஸை எடுத்து, சில தினங்களுக்கு முன்னர் வந்திருந்த மெசேஜினை அரவிந்திடம் காண்பித்தாள்.

“ஹாய்…”

“ஹாய்…ஐம் அர்ச்சனா.”

“ஹாய்..வேண்ட் யூ ரிப்ளை? ஆர் யு தேர்?”

“ஐ வாண்டு டு சே தேங்கஸ்…” என்ற ரீதியில் ஒரு பத்து குறுஞ்செய்திகள் இருந்தன. அனைத்தும் அர்ச்சனாவின் எண்ணில் இருந்து மதனிற்கு அனுப்ப பட்டிருந்தன. அரவிந்த அந்த குறுஞ்செய்திகளை படிக்கப் படிக்க, அர்ச்சனாவின் முகம் சுண்டிக் கொண்டே வந்தது.முடிந்த வரையில் தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு அழாமல் தாக்கு பிடித்தாள்.

“இதெல்லாம்…” என அரவிந்த் துவங்க,

“ம்ம்ம், இதெல்லாம், உங்க உத்தமி அர்ச்சனா, மதனுக்கு அனுப்பின மெசேஜ். அவன் ஒண்ணுக்கு கூட ரிப்ளை பண்ணலை..இதுக்கு பேர் என்னவாம், அலையறதில்லையா? லவ் பண்ணாத ஒருத்தனை, என்னைத் தான் லவ் பண்ணறான், என்னைத் தான் லவ் பண்ணறான்னு எங்க எல்லார்கிட்டையுமே சொல்லறதும், எங்க போனாலும், இவன் பார்க்கறான், அவன் பார்க்கறான்னு பில்டப் தர்றதும்னு இதுக்கெல்லாம் ஒரு எண்ட் கார்டே இல்லாமத் தான போயிட்டிருக்கு…நாங்க ஏதோ கொஞ்சம் மெச்சூர்டா இருக்கப் போக, இவளைப் பத்தி நாலு பேர்த்துகிட்ட சொல்லாம இருக்கோம்…இல்லைன்னா, இதெல்லாம் சொல்ல எனக்கு எவ்வளோ நேரமாகும்…ம்ம்ம்..” என திலிபா நிதானமான குரலிலேயே பேசினாள்.

 அவள் பேசப் பேசப், அர்ச்சனாவின் கோபம் பன்மடங்கு அதிமானதே ஒழிய குறையவில்லை.

“இப்போ என்ன, சரி நான் மெசேஜ் அனுப்பினேன் தான். அன்னைக்கு ஹெல்ப் பண்ணதுக்கு தேங்க்ஸ் பண்ண அனுப்பினேன். அது தப்பா…”

“ஓ, தேங்க் பண்ண….சரி சரி சரி….சூப்பர் சூப்பர்…அவ்வளோ தூரம் உனக்காக துணிஞ்சு கூட வந்த எனக்கு விழுந்து விழுந்து தேங்க் பண்ணியே அந்த மாதிரி தேங்க பண்ணனும்னு நினைச்சிருக்க….இது தெரியாம போச்சே…ஏ..சீனியர் தேங்க் பண்ண தான் மெசேஜ் பண்ணூச்சாம் பா…சரியா…நீ எதும் தப்பா நினைச்சுக்காத…”என சிறிதளவு கூட நக்கல் மாறாமல் மொழிந்தாள் திலிபா. எனக்கு ஒரு கண்ணு போனா, எதிரிக்கு ரெண்டு கண்ணும் போகணும் என்ற ரகம் அல்லவா அர்ச்சனா. அத்தோ நிறுத்தியிருக்கலாம்.

“ரொம்ப ஓவரா நக்கல் பண்ணாத….என்ன, அவன் அன்னைக்கு ஹெல்ப் பண்ணது புடிச்சிருந்துச்சு…பேசணும்னு தோணுச்சு..மெசேஜ் பண்ணேன்.. ஏன், நீ மட்டும் ஃப்ரெண்ட் ஃப்ரெண்ட்ன்னு சொல்லிட்டு ஊர் முழுக்க ஜோடி போட்டு சுத்தற…அதெல்லாம் தப்பில்லை, நான் மெசேஜ் பண்ணது மட்டும் தப்பா?” என ஒருவாரு அங்கு இங்கு என சுற்றி ஏதோ பேசினாள் அர்ச்சனா.

“ஏ அர்ச்சு…என்ன பேசற…”என இடையிட்ட இலக்கியாவிடம், “என்ன ஃப்ரெண்ஷிப்பா… அவ மட்டும் தானே எப்பவும் உனக்கு உசத்தி…நான்லாம் யாரு உனக்கு…ம்ம்ம்..ஏதோ கூட ஒரே பென்சில உட்க்கார்ர ஒருத்தி..அவ்வளோ தானே…எப்படியும் நீ திலிபாவுக்குத் தான ஜால்ரா கொட்டுவ….”

“அர்ச்சனா…ப்ளீஸ்…கொஞ்சம் அமைதியா இரேன்…”என கெளசியும் ஏதோ முனுமுனுக்க, அர்ச்சனாவிற்கு தன் பங்கிற்குப் பேச ஆளில்லையே என்ற கோபம் வேறு சூழ்ந்து கொண்டது.

“ஓ…செட் சேர்ந்துட்டீங்க…ம்ம்ம்….நான் மட்டும் எப்பவுமே தனி தானே…” என்றவளின் கண்கள் தானாவே நீர் கோர்த்துக் கொண்டன. “அமைதியா இரு திலி..”என மதனும் திலிபாவை அடக்கினான். அதுவரையில் நக்கலாக பேசிக் கொண்டிருந்த திலிபாவுமே அர்ச்சனாவின் கண்ணீரைக் கண்டு சற்றே தடுமாறினாள்.

ஆனால் அர்ச்சனாவிற்கு அந்த நொடி அப்படியே பூமி பிளந்து தன்னை உள்வாங்கிக் கொள்ளாதா என்ற அளவு ஆத்திரமாக எழுந்தது. அனைவர் முன்னிலையிலும் எவ்வளவு அவமானம். அதிலும் இவர்கள் நான்கு பேருடன் முடிந்து விட்டிருக்க வேண்டிய விஷயம், இப்போது வகுப்பு முழுக்க தெரியப் போகிறது. இனி அனைவருமே அர்ச்சனாவை ஏளனமாகவேக் காண்பர் என்ற எண்ணம் தோன்றத் தோன்ற அழுகை இன்னமும் அதிகமானது.

அர்ச்சனாவின் கண்ணீரைக் கண்ட திலிபா தான் பேசியது தவறோ என குற்ற உணர்வு  கொண்டாள்.

“அர்ச்சு… நீ பேசினதுக்கு தான் நான் திரும்ப பதில் பேசினேன். நீ அழுகறதால நீ பேசினது நியாயம்னு ஆகிடாது. என்னையும் இதே வார்த்தைகள் சொல்லி, ஏன் இதை விடவும் கொச்சையா பேசி அசிங்கப்படுத்தின தானே. என்னை, என் ஃப்ரெண்ஷிப்பை எல்லாமே நீ அசிங்கமா பேசவும் தான் எனக்கும் கோவம் வந்திருச்சு..…”

அர்ச்சனா பதில் பேசவில்லை. “அர்ச்சு…”என திலிபா சொல்லிக் கொண்டே இரண்டடி எடுத்து வைக்க, “எதுவுமே பேசாத திலிபா. இன்னையோட நீ யாரோ. நான் யாரோ. உன்னை மாதிரி ஒருத்தி எனக்கு ஃப்ரெண்டா இருந்தாங்கறதே அருவருப்பா இருக்கு. நம்பிக்கை துரோகி நீ. நீ நல்லவளாகனும்னு என்னை பலி கொடுத்துட்டல்ல….கெட் லாஸ்ட்…கெட் லாஸ்ட் ஃப்ரம் மி…இனி உன் பக்கமே நான் வரமாட்டேன்”என அழுகையினூடே ஏதோ திக்கித் திணறிவிட்டு, விடுவிடுவென பார்க்கின் வாயில் நோக்கி நடக்கத் துவங்கினாள்.

error: Content is protected !!