TK 35

TK 35

அத்தியாயம் – 35

அந்த சம்பவம் நடந்து முடிந்த ஒரு மாதத்திற்கு பிறகு..

காலையில் எப்பொழுதும் போல வேலைக்கு கிளம்பிய ருக்மணியுடன் வேலைக்கு கிளம்பினாள் ஜெயா. ஆடிட்டர் ஆபீஸிற்குள் நுழைந்தவளைப் பார்த்தவன், “வா ஜெயா இப்பொழுது உடம்பு எப்படி இருக்கு..” என்று விசாரித்தான் சீனிவாசன்..

“நான் நல்ல இருக்கிறேன் அண்ணா.. நான் வேலையை ரிஸைன் பண்றேன்..” என்றவள் தயக்கத்துடன் தன் விருப்பத்தை வெளியிட, “என்ன திடீர்ன்னு இப்படியொரு முடிவு.” என்று அதிர்ந்தான் சீனிவாசன்..

“இல்ல அண்ணா எனக்கு ருக்மணி நிறுவனத்தில் டிசைனர் வேலை கிடைச்சிருக்கு..” என்றதும், “ஓஹோ.. நீயும், அவளும் இணைபிரியாத தோழிகள் இல்ல.. அதன் இந்த திடீர் முடிவோ..” என்று புன்னகைத்துவிட்டு அவளிடம் இருந்து ரிஸைனிங் லெட்டரை வாங்கிக் கொண்டான்..

“சரின்னா அப்போ நான் கிளம்பறேன்..” என்றதும், “வேலையை விட்டாச்சு என்று இங்கே வராமல் இருக்காதே ஜெயா..” என்றவன் அவளுக்கு வந்த பார்சலை அவளிடம் கொடுத்தான்..

“இது என்னது..” என்று கையில் பார்சலை வாங்கிய ஜெயா, “ஐயோ இந்த ருக்மணிக்கு அடுத்த மாதம் பிறந்தநாள்.. அதுக்கு வாங்கிய புக்..” என்று நாக்கைக் கடித்துக் கொண்டாள்..

அவளின் செய்கைகளை பார்த்து சிரித்த சீனிவாசன், “இந்த இது என்னோட கிபிட் அவளிடம் கொடுத்துவிடு..” என்றவனை நிமிர்ந்து பார்த்த ஜெயா, “என்ன உங்களோட காதலுக்கு நான் தூது போகணுமா..” என்று குறுஞ்சிரிப்புடன் கேட்டாள்..

“அதெல்லாம் தோழி தூதாக போகலாம்.. தவறில்லை..” என்று புன்னகைத்தான் சீனிவாசன்..

“இந்த கதையெல்லாம் என்னிடம் வேண்டாம்.. நீங்களே வந்து அவளிடம் கொடுங்க.. இப்போ எனக்கு வேலைக்கு நேரம் ஆச்சு..” என்றவள் வேகமாக அங்கிருந்து கிளம்பிவிட, “அண்ணா பாவம் இல்லையா ஜெயா..” என்றவன் பாவமாகவே..

அவள் சிரித்துக்கொண்டே சென்றுவிட, ‘என்னை இப்படி புலம்ப வெச்சுட்டாளே..’ என்று நினைத்தவன் வேலையைத் தொடர்ந்தான்.. பிரபாவின் கம்பெனிக்குள் நுழைந்த ஜெயா ரிசப்ஷனில் விவரம் சொல்ல, “ஸாரி கிட்ட கேட்கிறேன்.. வெயிட் பண்ணுங்க..” என்றாள்..

அவள் போன் செய்துவிட்டு, “இங்கிருந்து லேபிட் சைடு சாரோட கேபின்..” என்றவள் புன்னகைக்க, “தேங்க்ஸ்..” என்ற ஜெயா நேராக பிரபாவின் கேபினுக்கு சென்றவள், “ஸார் மே ஐ கமின்..” கதவைத் தட்டி அனுமதி பெற்றுகொண்டு உள்ளே நுழைந்தாள்..

பிரபாவின் கவனம் கையிலிருந்த பைலில் இருக்க, “வெல்கம்.. டேக் யுவர் சீட்..” என்றதும், “தேங்க்ஸ்..” என்றவளின் குரல் கேட்டதும், ‘ஜெயாவின் குரல் மாதிரி இருக்கு..’ என்று அதிர்ந்து நிமிர்ந்தவனின் எதிரே புன்னகையுடன் அமர்ந்திருந்தாள் ஜெயா..

அவளை முதலில் எதிர்பார்க்காத பிரபாவிற்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தது.. அது மட்டும் இல்லாமல் யாரை சந்திக்கவே கூடாது என்று நினைத்தானோ அவள் இப்பொழுது அவனின் எதிரில் நின்றிருந்தாள்.. நினைப்பதெல்லாம் நடந்தால் தெய்வத்திற்கு இங்கே மதிப்பில்லையே..

‘இவளை எதற்கு மாமா வேலைக்கு சேர்த்தார்..’ என்ற கேள்வியுடன் அவளின் பைலை எடுத்து விவரங்களை படித்தான்.. அவள் படித்த டிகிரிக்கும் மேல் இந்த மாதிரி டிசைனிங் டிப்ளமோ கோர்ஸ் மாதிரி சில கம்ப்யூட்டர் கோர்ஸ் அண்ட் டைப்ரைட்டிங் கிளாஸ் எல்லாம் முடித்து வைத்திருந்தாள் ஜெயா..

அவளின் பயோடேட்டா பார்த்துவிட்டு, “உங்களோட கேபின் ருக்மணி கேபின்னு அடுத்த கேபின் ஜெயா.. நீங்க போய் வேலையைக் கவனிங்க.. மற்ற டிட்டைஸ் இதில் இருக்கு..” அவளின் கையில் பைலைக் கொடுத்துவிட்டு தன்னுடைய வேலையைக் கவனித்தான்..

அவன் தன்னுடைய உணர்வுகளை வெளிக்காட்டாத வண்ணம் முகத்தை வைத்திருக்க, ‘இவன் என்ன நினைக்கிறான்னு தெரியல..’ மனதிற்குள் சலித்துக்கொண்டு அறையைவிட்டு வெளியே சென்றாள்..

அவள் சென்ற பின்னர் நிமிர்ந்த பிரபா, “நான் உன்னை நெருங்கும் பொழுது நீ விலகி போனாய்.. இப்போ நான் விலகி போகிறேன்.. நீ நெருங்கி வருகிறாய்..” என்றவனின் மனமோ, ‘விதி வலியது..’ என்றது.

“ஹாய் ருக்மணி..” என்றவளின் குரல்கேட்டு நிமிர்ந்தவள், “ஜெயா நீ எங்கே இங்கே..” என்று அதிர்ச்சி மாறாமல் கேட்க, “இனிமேல் இங்கேதான்..” என்று புன்னகைத்தாள் ஜெயா..

“ஹே நிஜமாவா சொல்ற..” ஜெயாவின் கையில் கிள்ளி வைத்துவிட, “ஏய் எருமை வலிக்குது..” என்று ருக்மணியைத் திட்டிட, “மினி அக்கா இல்லன்னுரொம்ப கவலைபட்டேன்.. நீ வந்துட்ட..” என்றவள் சந்தோஷத்தில் உண்மையை உளறிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள்..

அவள் ருக்மணியைக் கேள்வியாக பார்க்க, “நீ வேலையை பாரு.. நான் மதியம் சொல்றேன்..” என்றவள் வேலையைக் கவனிக்க ஜெயாவும் அவளின் வேலையைக் கவனிக்க மதியம் உணவு இடைவெளியில் இருவரும் அரட்டை அடிக்க தொடங்கினார்..

“ஆமா மினி அக்கா வேலைக்கு வருவதில்லையா..?” என்று சந்தேகமாகவே கேட்டாள் ஜெயா..

“இல்ல பிரபா அண்ணா, மதன் அண்ணா, மினி அக்கா மூவரும் டெல்லிக்கு ஒரு முக்கியமான மீட்டிங் போனாங்க.. ஆனால் வரும் பொழுது பிரபா அண்ணா மட்டும்தான் வந்திருக்காங்க..” என்றதும் ஜெயாவின் புருவங்கள் சுருங்கியது..

“ஏன் அவங்க இருவரும் எங்கே..” அவள் விளக்கம் கேட்க, “மதன் அண்ணாவிற்கு அங்கேயே நிறுவனம் தொடங்கி கொடுத்துட்டாங்க.. ஆனால் மினி அக்கா ஏன் வேலையைவிட்டாங்க என்று தெரியல..” என்றவள் சாப்பாட்டில் கவனம் செலுத்தினாள்..

அவள் சொன்ன விஷயம் மனதை நெருட, ‘பிரபாதான் அன்பரசு.. மதனுக்கு அங்கே வேலை தொடங்கிய பின்னாடி மினி ஏன் இங்கே வேலைக்கு வராமல் இருக்கணும்..’ என்ற சிந்தனையில் ஆழ்ந்தாள்..

அன்பரசு சொன்ன விசயங்களும், இப்பொழுது ருக்மணி சொன்ன விஷயங்களும் ஒன்றோடொன்று ஒத்துப்போகவே, ‘தன்னிடம் அன்பரசு என்ற பெயரில் பேசியது பிரபாதான்..’ என்ற உண்மையை உணர்ந்தாள் ஜெயா..    

ஆனால் அது உண்மைதான் என்று உறுதியாக நம்ப முடியாமல் குழப்பத்துடனே வேலை செய்ய தொடங்கினாள்.. நாட்கள் மாதமாக ஓடி மறைந்தது.. ஆனால் அவளின் குழப்பம் மட்டும் தீராமல் இருந்தது..

பிரபாவின் புன்னகை ஜெயாவிற்கு ரொம்ப பிடிக்கும்.. ஆனால் இப்பொழுதெல்லாம் அவன் சிரிப்பதே இல்லை என்று உணர்ந்தவளின் சந்தேகம் மட்டும் தீராமல் இருந்தது..  அவனுக்கும், அவளுக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லாவிட்டாலும் அவனின் முகத்தை வைத்தே அவனின் மனநிலை உணர்ந்து அதற்கு ஏற்றார்போல வேலை செய்ய தொடங்கினாள்..   

அதேநேரத்தில் ஆனந்த் தெளிவாக சிந்தனை செய்து மகளுக்கு ஏற்ற வரன் பிரபாகரன் தான் என்று முடிவெடுத்தார்.. அவரின் முடிவை சுகந்தியும் ஏற்றுகொண்டார்..

அப்பொழுது அவர்களுக்கு போன் செய்த கோபிநாத், “நீங்க என்ன முடிவு பண்ணியிருக்கீங்க..” என்று கேட்க, “எங்களுக்கு இந்த திருமணத்தில் பரிபூரண சம்மதம்..”என்று விருப்பத்தை சொல்லிவிட்டார் ஆனந்த்..

அதன்பிறகு பிரபாவின் அனுமதி இல்லாமல் அவர் மற்ற வேலைகளைக் கவனித்தார்.. விஜி அவருக்கு உதவியாக இருந்தாள்.. ஏற்கனவே பிரபா திருமணம் வேண்டாம் என்று மறுத்த காரணத்தால் அவனிடம் இந்த திருமணம் பற்றி எதுவும் அவர் சொல்லவில்லை..

அவர் அடுத்தடுத்து வேலைகளை மும்பரமாக கவனிக்க பிரபா கம்பெனி வேலையில் பிஸியாக இருக்க அவரின் நடவடிக்கைகளை கவனிக்க தவறினான்.. நாட்கள் மின்னல் வேகத்தில் சொல்ல திருமணத்திற்கு இன்னும் ஒருவாரம் என்ற நிலைக்கு கொண்டுவந்து நிறுத்திவிட்டார் கோபிநாத்..

இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பிரபா வீட்டின் முன்னாடி வாழைமரம் கட்டியிருப்பதை கவனித்தான்.. அவனின் மனதில் ஏதோ தவறாக தோன்றவே, “மாமா.. மாமா..” என்ற அழைப்புடன் வீட்டிற்குள் நுழைந்தான்..

அங்கே சொந்தம்பந்தங்கள் எல்லாம் நிறைந்திருக்க ஹாலில் நடுவே அமர்ந்து அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார் கோபிநாத்.. விஜியின் தோழிகள் எல்லாம் வந்திருக்க அவளும் ரூமில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள்..

வீடு முழுவதும் ஆட்கள் நிறைந்திருக்க, “வாம்மா கல்யாண மாப்பிள்ளை.. நீ இன்னும் உன்னோட வேலைகளை முடிக்கவில்லையா..?”  என்று அவனுடன் வம்பு வளர்த்தார் தூரத்து உறவினர் ஒருவர்.. அவன் அவரைப் பார்த்து புன்னகைத்துவிட்டு மாடியேறி சென்றுவிட்டான் பிரபாகரன்..  

அவனின் அறைக்குள் நுழைந்த பிரபாவிற்கு பைத்தியமே பிடித்துவிடும் போல இருந்தது.. மனதார விரும்பிய பெண்ணோடு திருமணம்.. ஆனால் மனமறிந்து அவளுக்கு துரோகம் செய்ய அவன் தயாராக இல்லை..

அதுமட்டும் இல்லாமல் அவன் செய்த தவறை அவனால் வெளிப்படையாக யாரிடமும் சொல்ல முடியாமல் உள்ளுக்குள் போட்டு புழுங்கியே கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்தான் பிரபா..

ஒரே ஒரு நண்பனுக்கு அவன் செய்த துரோகம் அவன் கண்முன்னே வந்து நிற்க தன்னுடைய இன்றைய நிலையை நினைத்து அவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.. தன்னால் இரண்டு பெண்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாக மாறிவிட கூடாது என்ற ஒரே காரணத்திற்காக இதுவரை பொறுமையாக இருந்தான்..

தன்னுடைய காதலைத் தூக்கி எறிந்த பிரபாவால் ஜெயாவின் வாழ்க்கை தன்னால் கேள்விகுறியாகிவிட கூடாது என்று திருமணமே வேண்டாம் என்ற முடிவில் திருமணப்பேச்சை எடுக்கும் பொழுதெல்லாம் திருமணம் வேண்டாம் என்று மறுத்தான்..

ஆனால் இன்று எல்லாமே தலைகீழாக மாறியிருக்க, ‘அடுத்து என்ன செய்வது..’ என்று சிந்திக்க முடியாமல் பைத்தியம் பிடித்தவன் போல படுக்கையறையில் தலையை கைகளால் தாங்கியபடி அமர்ந்திருந்தான்..

“பிரபா இனிமேல் நீ வேண்டாம் என்று சொல்லவே முடியாது..” என்றவரின் குரல்கேட்டு நிமிர்ந்தவன், “மாமா ப்ளீஸ் எனக்கு திருமணம் வேண்டாம்..” என்று பிடிவாதமாக மறுக்க, “இன்னும் ஒருவாரத்தில் திருமணம்.. என்னோட முடிவில் மாற்றம் இல்ல..” என்றவர் பேச்சை முடித்துவிட்டார்..

பிறகு, “நான் மதனுக்கு பத்திரிகை அனுப்பிவிட்டேன்.. அநேகமாக மின்மினி மதனோட நிறுவனத்தில் வேலை செய்வாள் என்று நினைக்கிறேன்.. எப்படியும் பத்திரிகை பார்த்ததும் இருவரும் திருமணத்திற்கு வந்துவிடுவார்கள்..” என்றவர் அவனிடம் விஷயத்தை பகிர்ந்தார்..

அதுவரை திருமணத்தை நிறுத்த முடியாமல் தவித்த பிரபாவிற்கு வழி தென்பட, ‘மினி வந்துவிட்டால் திருமணம் நின்றுவிடும்..’ என்ற காரணத்தை மனதில் வைத்து மெளனமாக இருந்தான்.. அவனின் முகத்தைப் பார்த்துவிட்டு அமைதியாக அறையைவிட்டு வெளியே சென்றார் கோபிநாத்..  

அவர் சென்றபிறகு தன்னுடைய லேப்டாப்பை எடுத்த பிரபா மினிக்கு மெயில் செய்தான்.. அதன்பிறகுதான் அவனின் மனம் நிம்மதியடைய அடுத்து என்ன செய்வது என்று தீவிரமாக யோசித்தான்..

அதே நேரத்தில் டெல்லியில்..

ஆபீசில் தன்னுடைய வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு மெயில் பார்த்த மினியின் முகம் மலர்ந்துவிட்டது.. அவள் ஆவலுடன் எதிர்பார்த்த பிரபாவின் திருமண பத்திரிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்..

அவளின் அருகில் அமர்ந்திருந்த சுமதி, “ஹே என்ன இந்த மெயில் பார்த்தும் உன்னோட முகம் அப்படியே பளிச்சென்று மலர்ந்துவிட்டது. என்ன விஷயம்..” என்று அவளை கேலி செய்தாள்..

“பெங்களூரில் என்னோட தோழிக்கு திருமணம் என்று பத்திரிக்கை அனுப்பியிருக்கா.. ஐ எம் சோ ஹாப்பி..” என்றவள் உடனே அங்கிருந்து கிளம்பிட, “இந்த மாதிரி நேரத்தில் ஊருக்கு போக வேண்டாம் மினி.. என்னோட பேச்சை கொஞ்சம் கேளுடி..” என்றாள் சுமதி..

“நான் அந்த திருமணத்திற்கு போகணும்..” என்ற பிடிவாதத்துடன் ஆபீசில் இருந்து கிளம்பினாள் மின்மினி.. அவளின் முடிவில் மாற்றம் இல்லை என்று உணர்ந்த சுமதி, “இவளை என்னதான் செய்வதோ தெரியல..” என்று புலம்பியபடி வீட்டிற்கு கிளம்பினாள்..

அதற்கு மறுநாள் சண்டே வேலை இல்லாத காரணத்தால் வெளியே சென்ற தோழிகள் இருவரும் கோவிலுக்கு சென்றனர்.. அதன்பிறகு இருவரும் ஹோட்டலுக்கு செல்ல ருக்மணிதான் எப்பொழுதும் போல சாப்பாடு ஆர்டர் கொடுத்தாள்..

ஜெயா முகநூலைப் பார்க்க அன்பரசு ஆன்லைனில் இருப்பதைக் கவனித்துவிட்டு, “ஹாய் பாஸ்.. ஹொவ் ஆர் யூ.. உங்க மேரேஜ் எல்லாம் முடிந்ததா..?” என்று அவனுக்கு மெசேஜ் அனுப்பினாள்.

அவளின் மெசேஜ் பார்த்தவனிடமிருந்து மீண்டும் மெசேஜ் வர சில நொடிகள் ஆகவே, “ஜெயா சாப்பிடு.. நம்ம ஹாஸ்டல் போலாம்..” என்றாள் ருக்மணி..

“ம்ம் இதோ..” என்றவள் சாப்பிட்டுக்கொண்டே அவன் அனுப்பிய குறுஞ்செய்தியைப் படித்தாள்..

“இல்ல மலர்.. திருமணத்தை நிறுத்த போகிறேன்.” என்றவன் சொல்ல, “ஏன்..” என்றவள் கேள்வி கேட்துவிட்டு, “பொண்ணு பிடிக்கவில்லையா..?” என்று சந்தேகமாகவே கேட்டாள்..

ஏனோ அவனிடம் பேசும் பொழுது அவளின் மனதில், ‘இவன் பிரபாவாக இருப்பானோ..’ என்ற சந்தேகம் எழுந்தது.. அது ஏன் என்று அவளுக்கு புரியவில்லை.. அதுமட்டும் இல்லாமல் அந்த கவிதை புத்தகத்தில் இருக்கும் பெயரை சுத்தமாக மறந்துவிட்டாள்..

“மலர் பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு. அதுதான் மனசு கேட்காமல் திருமணத்தை நிறுத்த போகிறேன்.. நான் தாலிகட்டும் நேரத்தில் மினி வந்துவிட்டால் அவ்வளவுதான்..” என்று அவனையும் அறியாமல் அவன் மினியின் பெயரை குறிப்பிட்டுவிட அதிர்ந்தாள் ஜெயா..

அவன், ‘மினி..’ என்றதும், ‘அன்பரசு நேம்ல தன்னிடம் பேசுவது பிரபா..’ என்ற உண்மையை உணர்ந்ததும் அவளின் இதயத்துடிப்பு நின்றுபோனது.. அதன்பிறகு அவனிடமிருந்து மெசேஜ் வரவில்லை.. இவளும் அவனுக்கு மெசேஜ் அனுப்பவில்லை..

அவள் அதிர்ச்சியில் சிலையாகிவிட, “ஜெயா சீக்கிரம் சாப்பிடு..” என்று ருக்மணியை முறைத்துவிட்டு, “சரிடி..” என்றவள் வேகமாக சாப்பிட்டு முடிக்க இருவரும் ஹாஸ்டலுக்கு கிளப்பினர்..

ருக்மணி  வேடிக்கை பார்த்துகொண்டு அமைதியாக வர ஜெயாவோ ‘என்னிடமே வந்து உண்மையை சொல்லி சொல்யூசன் கேட்கிறான்.. இவன் வேண்டும் என்றே பண்றானோ..’ பிரபாவைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனையுடன் வந்தாள்..

ஆனால் அவளின் மனம் அதை ஏற்க மறுத்திட, ‘அடுத்து என்ன செய்வது..’ என்றவளின் சிந்தனையைக் கலைத்தது அவளின் அலைப்பேசி..

“ஹலோ அப்பா..” என்றவளின் குரல்கேட்டதும், “ஜெயா நீ உடனே கிளம்பி ஊருக்கு வாம்மா.. உனக்கு திருமண ஏற்பாடு எல்லாமே பண்ணிட்டேன்.. நீ வந்தால் மட்டும் போதும்..” என்றவரின் குரலில் பழைய உற்சாகம் திரும்பியிருக்க அதிர்ச்சியில் உறைந்தாள் ஜெயா.

திடீரென்று போன் செய்து திருமணம் என்றதும் அவளுக்கு என்ன சொல்வது என்றார் தெரியாமல், “அப்பா..” என்றவள் ஏதோ சொல்ல வர, “நீ ரயிலில் வரவேண்டாம்.. நம்ம கண்ணன் காரில் பெங்களூர் வந்துவிட்டான்.. நீயும் ருக்மணியும் அவனோடு சேர்ந்து ஊருக்கு வாங்க..” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்..

அவர் போனை வைத்த பிறகு, “யார் போன் செய்தது அப்பாவா..” என்றவளிடம் கேட்டாள் ருக்மணி..

“ம்ம் ஆமா.. அடுத்தவாரம் திருமணம் உடனே புறப்பட்டுவான்னு சொல்றாரு..” என்றவளின் குரல் சுருதியே இல்லாமல் ஒலித்தது..

“ஜெயா.. நீ என்ன சொல்ற.. அடுத்தவாரம் திருமணமா.. இந்த மூன்று மாசமாக அப்பா எதுவுமே சொல்லவில்லை.. திடீரென்று போன் செய்து இப்படி சொன்னால் என்ன அர்த்தம்..” என்றவளின் புருவங்கள் கேள்வியாக சுருங்கியது..

ஆனாலும் தோழிக்கு திருமணம் என்றதும், “சரி அதையெல்லாம் விடு.. வா நம்ம சீக்கிரம் ஹாஸ்டல் போலாம்.. இந்த வருடம் என்னோட பிறந்தநாளுக்கு அண்ணாவும், நீயும் சேர்ந்து வந்து வாழ்த்து சொல்ல போறீங்க..” என்று குஷியாக ஹாஸ்டலுக்குள் நுழைந்தாள் ருக்மணி..

அதன்பிறகு யோசிக்க நேரம் இல்லாமல் வேகமாக கிளம்பிய இருவரையும் அழைத்துச் செல்ல வந்தான் கண்ணன்.. அவன் ஹாஸ்டலில் இருந்த ஜெயாவின் பொருட்களை எடுத்து வைத்தான்..

ஜெயாவிற்கு சீனிவாசனின் நினைவு வர, “ருக்மணி.. சீனு அண்ணா உன்னிடம் பேசணும் என்று சொல்லிட்டு இருந்தான்..” என்று அவளுக்கு நினைவுப்படுத்தினாள்..

“அவனோட நான் வந்து பேசிக்கொள்கிறேன்.. நீ வா கிளம்பு..” என்று தோழியை இழுத்துக்கொண்டு காரில் ஏறினாள்.. அதன்பிறகு யோசிக்கவே நேரம் இல்லாமல் நாட்கள் நகர்ந்தது.. திருமணநாளும் அழகாக விடிந்தது..

ஜெயாவுடன் பிரபாவின் திருமணம் நடக்குமா..? இல்லை திருமணத்தைத் தடுக்க மினி திருமணத்திற்கு வருவாளா..?

error: Content is protected !!