அத்தியாயம் – 44

நான்கு வருடங்களுக்கு பிறகு..

கீழ்வானம் சிவக்க தன்னறையில் அமர்ந்து கதையின் முடிவை எழுதிக் கொண்டிருந்தாள் ஜெயா. அன்று பிரபாவின் காதலை அறிந்த அதே அறையே அவளுக்கு என்று ஒதுக்கிவிட்டான் பிரபா. அவளைச் சுற்றிலும் புத்தகங்கள் அவனின் காதல் சுவடுகளை சுமந்த வண்ணம்.!

“அம்மா..” மகளின் குரல்கேட்டு, “பிரபு ப்ளீஸ்மா.. பாப்பாவை கொஞ்சம் சிணுங்காமல் பார்த்துகோங்க. நான் இதோ இந்த கதைக்கு முடிவை மட்டும் எழுதி முடித்துவிட்டு வருகிறேன்..” என்றாள்

அவளின் விரல்களில் பேனா விளையாட, “மலர் நீ பொறுமையாக எழுதுடா. நான் பாப்பாவை பார்த்துக் கொள்கிறேன்” சிணுங்கும் மகளின் தலையை வருடிக்கொடுத்துக் கொண்டே மகளின் அழகை ரசித்தான் பிரபா..

அவர்களின் காதல் வாழ்க்கைக்கு அழகு சேர்க்க வந்தாள் குட்டி தேவதை. உருவத்தில் பிரபாவையும், உள்ளத்தில் மலரையும் கொண்ட அந்த குட்டி தேவதை மழலை மொழியால் அந்த வீட்டையே தேவலோகமாக மாற்றினாள்.

தாய்மாமனாக இருந்தும் அப்பாவின் ஸ்தானத்தில் இருந்தும் வளர்த்த கோபிநாத்திற்கு அவள் மட்டும்தான் உலகம். அவளை தவிர வேறு எது பற்றியும் அவர் யோசிப்பத்தில்லை..

அவன் மனதில் நினைப்பதை நிறைவேற்ற மனைவியாக அவளும், சோகங்களை கண்ட மனதிற்கு மருந்து கொடுக்க மகளும் இருக்க அவனின் வாழ்க்கை வண்ணமயமாக மாறியது. பெங்களூரில் நம்பர் ஒன் என்ற இடத்தை அவன் தக்க வைத்துகொள்ள அது மட்டுமே காரணம். அந்த அளவிற்கு தன் குடும்பத்தை நேசித்தான் பிரபா..

“இன்னும் ஒரு பத்து நிமிஷம் முடிந்தது.” அவளின் குரல்கேட்டு பிரபாவின் முகம் புன்னகையில் மலர்ந்தது.. எந்த எழுத்துகளுக்கு மயங்கி தன் மனதை அவளிடம் பறிகொடுத்தானோ அந்த எழுத்துகளை அவள் மீண்டும் அவள் எழுத உறுதுணையாக நின்றான் பிரபா.

இந்த நான்கு ஆண்டுகளில் அவள் பெயர் சொல்லும் எழுத்தாளராக மாறிருக்க அவன் மட்டுமே காரணம். அவள் குழந்தையை சுமக்கும் பொழுது கூட சின்ன சின்ன கவிதைகள், குட்டி குட்டி காதல் கதைகள், சின்னஞ்சிறு நாவல்கள் என்று மனைவியை எழுத வைத்து மகிழ்ந்தான்.

அவள் எழுத்து சின்ன கூட்டிற்குள் அடங்கிவிட க்கூடாது என்ற உறுதியுடன் அவளுக்கு என்று தனியாக பப்ளிக்கேஷன் ஒன்றை தொடங்கி, அதன் நிர்வாகத்தை அவளிடமே ஒப்படைத்தான். எத்தனை தடைகள் வந்த பொழுது அவளின் எழுத்துகளை நிறுத்திவிடாமல் பார்த்துகொண்டான்..

அவளின் மீது வைத்திருக்கும் காதலை அவன் இன்று அளவும் வாய் மொழியாக வெளிபடுத்தவே இல்லை.. ஆனால் கூட தன் காதலை மறைமுகமாகவே காட்டிக் கொண்டிருந்தான்.. அவனின் மனதை முழுவதுமாக புரிந்து வைத்திருந்த அவனின் பனிமலரும் இன்றளவும் அது பற்றி ஒரு வார்த்தை கூட கேட்டதில்லை..

அவளுடன் சேர்த்து அவளின் எழுத்துகளையும் ஒரு வாசகனாகவும், காதலனாகவும், கணவனாகவும் நேசித்தான் பிரபா. அவனின் ஒத்துழைப்பில் இந்த நான்கு வருடத்தில், கவிதை புத்தகங்கள், நாவல்கள், சில பெண்ணியம் பற்றிய கட்டுரைகள் என்று எழுதிக் கொண்டிருக்கிறாள்..

அவன் மனம் இந்த நான்கு ஆண்டுகளின் ஏற்றபட்ட மாற்றங்களை பற்றிய சிந்தனையில் இருக்க, “பிரபு நான் கதையை முடித்துவிட்டேன்..” என்று அருகில் வந்த மனைவியின் கொலுசு ஓசை அவனின் கவனத்தை கலைத்தது..

“நல்ல தூங்கற..” என்று மகளின் தலையைக் கலைத்துவிட்டவளின் கையை பிடித்து சுண்டி இழுக்க பிரபாவின் மார்பில் வந்து விழுந்தாள் ஜெயா..

“என்னங்க பாப்பா பக்கத்தில் இருக்கிற..” சிணுங்கிய மனைவியின் உதட்டில் பட்டும்படாமல் முத்தமிட்டு நிமிர்ந்த பிரபா, “கதையின் முடிவு எப்படி இருக்கு” என்று கேட்டான்.

அவனின் உதடுகள் செய்த மாயத்தில் விழிமூடியிருந்த ஜெயாவோ, “அது எனக்கு எப்படி தெரியும்..” என்று முணுமுணுக்க, “என்னோட மலருக்கு வேறு என்ன தெரியும்?” குறும்புடன் கேட்க, பட்டென்று விழி திறந்து அவனை முறைத்த்தாள்.

“ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்.. உன் கையில் என்னைக் கொடுத்தேன்..

நீதானே புன்னகை மன்னன்.. உன் ராணி நானே..

பண்பாடும் பாடகன் நீயே உன் ராகம் நானே..” அவனின் மார்பில் சாய்த்து பாடினாள் அவனின் காதல் மனையாள்..

அவளின்  பாடலை விழிமூடி ரசித்த பிரபா அவளை அணைக்க நினைக்கும் பொழுது, “அம்மா..” என்று சினுங்கினாள் மகள்.. அவனைவிட்டு விலகி எழுந்த ஜெயா, “யாழி அம்மா இங்கேதான் இருக்கிறேன்..” மகளின் மார்பில் தட்டிகொடுத்துவிட்டு பிரபாவின் முகம் பார்க்க அவனின் விழிகளோ அவளின் மீது விஷயமத்துடன் பதிந்தது..

“பிரபா” என்றுஅவனின் கையில் கிள்ளி வைத்துவிட்டு, “சீக்கிரம் குளிச்சிட்டு கீழே வாங்க..” அவனின் கைகளுக்கு சிக்காமல் எழுந்து சென்றவளை பார்த்தவனோ, ‘தனியாக சிக்குவ இல்ல அப்போ இருக்கு..’ என்று நினைத்துகொண்டு குளிக்க சென்றான்..

 

அதன்பிறகு அவள் சமையல் வேலைகளை கவனிக்க பிரபா குளித்துவிட்டு ஆபீஸ் கிளம்ப மெல்ல எழுந்த மகளின் கன்னத்தில் முத்தமிட்டு, “குட்டிம்மா..” என்றழைக்க, “அப்பா தாதா கிட்ட போலாம்..” என்றாள் அவனின் செல்லசீமாட்டி..

அவளை அழைத்துக்கொண்டு பிரபா கீழே செல்ல டைனிங் ஹாலில் அமர்ந்திருந்த தாத்தாவைப் பார்த்தும் தகப்பனை மறந்துவிட்டு யாழினி, “தாதா..” என்று அழைக்க, “குட்டிம்மா.. வாங்க வாங்க..” பேத்தியை தூக்கிக்கொண்டு தோட்டத்திற்கு சென்றார்..

யாழினிக்கு குட்டி குட்டி குருவிகளின் இசை ரொம்ப பிடிக்கும்.. அதனாலோ என்னவோ அவளை தோட்டத்திற்கு அழைத்து சென்று அங்கிருக்கும் சிட்டுக்குருவி, தேன் சிட்டு, குயில் இவற்றை அடையாளம் கட்டுவதே அவரின் வேலை!

அவர்கள் இருவரும் சென்ற பின்னாடி சமையலறைக்கு நுழைந்த பிரபா, “மலர்..” என்றவனின் கரங்கள் அவளின் இடையில் விளையாட, “போடா.. நான் என்ன சொன்னாலும் கேட்கும் நீ, அந்த ஒரு விஷயத்தை மட்டும் கேட்கவே மாட்டேங்கிறீங்க..” அவனுக்கு இசைந்து கொடுத்தாள்..

அவள் எதுபற்றி பேசுகிறாள் என்று புரிந்து கொண்ட பிரபாவோ, “இங்கே பாரு மலர். நான் என்ன சூழ்நிலையில் திரும்பி வந்தேன் என்று எனக்கு மட்டும் தான் தெரியும். எனக்கு தான் உண்மை தெரியாது அவனாவது ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் இல்ல..” அவனின் குரலில் கோபம் இல்லை. வருத்தம் மட்டுமே..

அவனின் மனதில் அந்த ஒரு கேள்விக்கு மட்டும் இன்னும் விடை கிடைக்காமல் இருந்தது.. தான் எந்த தவறும் செய்யவில்லை என்று தெரிந்த பிறகும் மதன் பேசாமல் இருந்தது அவனின் மனதிற்கும் வருத்தத்தையே கொடுத்தது..

என்றேனும்  ஒருநாள் தன் நண்பன் தன்னை தேடி வருவான் என்ற நம்பிக்கையுடன் இருந்தான். அவனின் வருத்தம் ஜெயாவிற்கு பிரிந்தாலும் அவள் மீண்டும் மீண்டும் அவர்கள் நட்பில் இணைய வேண்டும் என்று நினைத்தாள்.

“ஸாரி பிரபா..” என்றவளைவிட்டு மெல்ல விலகினான் பிரபா.

அவர்கள் இருவரும் சமையலறையில் இருக்க, “அப்பா” என்ற அழைப்பு கேட்டவுடன், “குட்டிம்மா..” என்ற அழைப்புடன் டைனிங் ஹாலுக்கு வர அங்கே நின்றிருந்த பெண்ணைப் பார்த்ததும், ‘இந்த பொண்ணு யாரு?’ என்ற கேள்வி அவனின் மனதில் எழுந்தது..

பிக் கலர் கவுன் போட்டு கொண்டு தன்னை முறைக்கும் அந்த குட்டி பாப்பாவை பார்த்தும் அவன் சிலையென நிற்க, “யாழினி..” என்ற அழைப்புடன் சமையலறைலிருந்து வெளிப்பட்டவள் அவன் சிலையே நிற்பதை கண்டு, “என்னங்க..” என்று கேட்டாள்..

அப்பொழுதுதான் அந்த குட்டி பெண்ணைக் கவனித்தவளின் புருவங்கள் ஏறி இறங்கியது. அவளை எங்கோ பார்த்த மாதிரி ஒரு உணர்வு அவளின் மனதில் எழுந்தது..

மெல்ல குழந்தையின் அருகில் சென்று, “பாப்பா உன்னோட அப்பா யாரும்மா?” என்று கேட்க, “இவருதான்..” என்று பிரபாவை கைகாட்டினாள் அந்த குட்டிப்பெண்..

“என்னது நானா?” என்றவன் அதிர, “நீங்க இல்லாமல் வேறு யாரு” வாசலில் இருந்து குரல் வரவே நிமிர்ந்துப் பார்க்க சுடிதாரில் தன்னுடைய வழக்கமான நடையுடன் வீட்டிற்குள் நுழைந்த மின்மினியை பார்த்தும் ஜெயாவின் முகம் மலர்ந்தது..

பிரபா அவளை முறைக்க, “நீங்கதானே இந்த குழந்தைக்கு அப்பா..” அவனின் பிரஷரை ஏற்ற, “மினி என்ன இது விளையாட்டு..” அவளை அதட்டினான் பிரபா..

“அப்பா அம்மாவை மிரட்டாதீங்க..” என்றாள் மினியின் செல்ல மகள்.. அவளின் பேச்சு ஜெயாவின் மனத்தைக் கவர்ந்தது. அதற்குள் தன் முகபாவனையை மாற்றிக்கொண்ட மின்மினி, “ஜெயா ப்ளீஸ் இந்த வாழ்க்கையை எனக்காக விட்டு கொடு..” என்று கேட்டு பிரபாவை அதிர வைத்தாள் மினி.  

அவன் அதிர்ச்சியுடன் மனைவியின் முகம் பார்க்க, “அப்பா என்று சொல்லும் அளவிற்கு பிள்ளையை வளர்த்து வெச்சு இருக்கீங்க..” கணவனை முறைத்துவிட்டு, “உங்களுக்கு வாழ்க்கையை விட்டு கொடுக்கிறேன்..” என்றவளை முறைத்தான்..

இரு பெண்களுக்கு நடுவே மாட்டிகொண்ட பிரபாவின் நிலையோ அதைவிட பரிதாபம்,  “ஏய் உனக்கு என்ன பைத்தியமா? இது உன்னோட வாழ்க்கை.. அவள் கேட்பது பொம்மை இல்ல. உயிரும் உணர்வும் உள்ள உன்னோட கணவனைக் கேட்கிறாள் மலர்..” என்றான் மினியை முறைத்த வண்ணம்..

அவளோ அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நின்றிருக்க, “மினி வந்தும் உன்னோட விளையாட்டை ஆரம்பித்துவிட்டாயா?” என்று கணவனின் குரல்கேட்டு நாக்கைக் கடித்துக்கொண்டு, “சும்மா விளையாட்டுக்கு..”என்று வாசலை நோக்கி திரும்பினாள்..

அவனைப் பார்த்தும், “வாங்க அண்ணா..” என்று அழைத்தாள் ஜெயா..

அவனின் தோளில் பிரபாவின் மகள் சாய்ந்து கொண்டு, “சித்தப்பா..” என்று அழைக்க, “வாடா மதன்..” என்று அழைத்தான். அனைவருக்கும் காபி எடுத்துவர சமையலறைகுள் சென்றாள்..

பிரபாவின் கோபம் எல்லாம் சென்ற இடம் தெரியாமல் சென்று மறைய, “டேய் என்னை பார்க்க வர உனக்கு இத்தனை வருடம் ஆச்சா?” என்று அவனின் முதுகில் ஒரு அடி போட்டான் பிரபா..

“பெரியப்பா..” மதனின் செல்ல மகள் கத்த, “சும்மா..” என்று சைகை செய்ய, “நிஜமா?” என்று கேட்க, “ஆமாண்டா செல்ல குட்டி..” என்று மதனின் மகளைத் தூக்கி சுத்து கீழிறக்கி விட்டான்..

“ஸாரிடா. நான் வந்திருக்கணும்..” மனைவியை முறைத்துவிட்டு, “மினி அவனோட கோபம் தெரிந்தும் நீ விளையாடுவது சரியில்ல..” என்று மிரட்டிட தலை குனிந்து நின்றாள் மினி..

அவளின் முகம் பார்த்து குழந்தை என்ன நினைத்தோ, “தித்தி..” மதனிடமிருந்து மினியிடம் தாவிட, “குட்டிம்மா..” என்று அவளின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்..

அவளின் தோளில் சாய்ந்து கொண்டு, “அப்பா தித்தி..” என்று சிரிக்க, “மினி சித்திடா குட்டிம்மா..” என்று பிரபா சிரிக்க, “அம்மா பாப்பாவை என்னிடம் கொடும்மா..” என்றாள் கமலினி..

கமலினியிடம் யாழினியை கொடுக்க, “வா நம்ம விளையாடலாம்..” என்று அவளை கரம்பிடித்து அழைத்துச் சென்றாள்..

“இவங்க இருவரையும் சமாளிக்கவே எனக்கு நேரம் சரியாக போகிறது பிரபா.. அம்மாவும், மகளும் சேர்ந்த அங்கே ஒரு கலகமே நடக்கும்..” குடும்பத்தைப் பற்றி அவன் பேச பிரபாவின் மனம் நிறைந்து போனது..

அவன் எந்த குடும்பத்துடன் வாழ வேண்டும் அவன் நினைத்தானோ அதே மாதிரி மதனை அவனின் குடும்பத்துடன் பார்த்ததும் நிம்மதியானது..

அவளின் அருகில் மண்டியிட்டு அமர்ந்த பிரபா, “குட்டிம்மா உன்னோட அம்மாதானே என்னை அப்பான்னு கூப்பிட சொன்னா” என்று கேட்டதும், “மினிதான் சொல்லி கொடுத்தா..” தாயை போட்டுகொடுத்தாள் கமலினி.

“அடிப்பாவி..” என்று மினி அதிர, “உங்களோட மகள் இல்ல. அப்போ உங்களை மாதிரிதான் இருப்பாள்..” என்று எல்லோருக்கும் காபி எடுத்து வந்தாள் ஜெயா..

“அப்படி சொல்லு மலர்..”நால்வரும் ஹாலில் சோபாவில் அமர்ந்து, “வீட்டிற்குள் நுழைந்த சில நொடியில் பூகம்பத்தையே கிளப்பிட்ட..” என்றதும் வாய்விட்டு சிரித்தாள் மின்மினி..

கோபிநாத் பிரபாவின் மகளையும், மதனின் மகளையும் தூக்கி வைத்துகொண்டு ஏதோ பேசிக்கொண்டிக்க, அங்கே குழந்தைகளின் மழலை மொழி தவிர வேறு எதுவும் இல்லாமல் இருக்க, “அப்பா உங்களுக்கு முடியல என்று சொன்னாங்க..” என்று கோபிநாத்திடம் பேச்சு கொடுத்தான் மதன்..

“யாருப்பா உனக்கு சொன்னது..” என்று கேட்க, “விஜிப்பா..” என்றான் மதன்.. அவர்களிடம் பொய் சொல்லி வரவழைத்து இருந்தாள் விஜி..

“அப்போ மாமாவிற்கு உடம்பு சரியில்லாமல் போனால்தான் இங்கே வருவ? தன் நண்பனிடம் கோபத்தைக் காட்டினான் பிரபா..

“டேய் பதில் பேசுடா..” அவனின் குரல் உயர, “ஸாரிடா..” என்றான் மதன்..

அதன்பிறகு அங்கே மௌனம் நிலவ, “ஜெயா..” என்ற அழைப்பில் நிமிர்ந்தவளின் முன்னே புத்தகத்தை நீட்டினாள் மின்மினி.

“இந்த கதையை எழுதிய கதிரழகி நீயா ஜெயா..” புரியாமல் கேட்க, “ஆமா..” என்றாள் ஜெயா புன்னகையுடன்..

“நீ எந்தளவிற்கு இந்த உண்மையை ஏற்றுகொள்ள போகிறாய் என்று தெரியல.. இது பற்றி பிரபா உன்னிடம் உண்மையைச் சொன்னானா? எனக்கும் அவனுக்கும் இடையே எல்லாம் நடந்து முடித்துவிட்டது..” என்று அவள் சொல்லி முடிக்க வாய்விட்டுச் சிரித்தாள் ஜெயா..

அவளுடன் சேர்ந்து பிரபாவும் விழுந்து விழுந்து சிரிக்க, “ஜெயா பிரபா உன்னிடம் பொய் சொல்லி வெச்சி இருக்கிறான். அன்னைக்கு ஹோட்டலில் வைத்து எங்க இருவருக்கும் இடையே எல்லாம்..” அவள் சொல்லிகொண்டிருக்க, “ஹா ஹா ஹா அக்கா முடியல காமெடி பண்ணாதீங்க..” என்றாள் ஜெயா சிரித்தவண்ணம்..

அவளுக்கு அனைத்து உண்மையும் தெரியும் என்று தெரியாமல் அவளிடம் உண்மையைச் சொல்லிக் கொண்டிருந்தாள் மின்மினி. பிரபா – ஜெயா இருவருக்கும் இடையே நடந்த அனைத்து விஷயமும் அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும்..

பிரபா உண்மையைச் சொன்ன அளவிற்கு கூட ஜெயா அவளின் மனதை அவனிடம் சொல்லவில்லை.. அதனால் அவளின் இன்னொருப்பக்கம் பிரபா உட்பட யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை..

“எங்கள் இருவருக்குள் அதெல்லாம் நடந்து முடிந்துவிட்டது என்று நான் இப்பொழுது சொன்னால் என்ன ஜெயா பண்ணுவ..” அவள் விளையாட்டாக கேட்டுவிட்டு அவளின் முகம் பார்த்தாள்..

“என்னோட வாழ்க்கையை உங்களுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு சென்றிருப்பேன் மினி..” என்றாள் ஜெயா அமைதியாகவே..

“மலர் இன்னொரு முறை..” மனைவியைத் திட்ட தொடங்க, “ஜெயா அப்படி பேசாதே. அவன் எந்தளவிற்கு உன்னை விரும்பினான் என்று எனக்கு தெரியும்மா..” என்றான் மதன்..

“நான் எந்தளவிற்கு அவரை விரும்பினேன் என்று உங்க யாருக்கும் தெரியாது அண்ணா..” அவளின் கண்கள் அவளையும் மீறி கலங்கிட, “மலர்” அவளை இழுத்து மார்புடன் அணைத்துக்கொண்டான். அவளின் காதல் மனம் பற்றி இன்றுவரை பிரபாவிற்கு கூட தெரியாது..

“நான் அன்னைக்கு வந்து கல்யாணத்தையே நிறுத்தியிருந்தால் உன்னோட நிலை?” என்று மினி விடாமல் அவளிடம் கேள்வி கேட்க,  “நீங்க வருவீங்க என்று தெரிந்தே நான் மணமேடை ஏறியிருந்தால் உங்களோட நிலை என்ன அக்கா..” என்று கேட்டு அங்கிருந்த அனைவரையும் அதிர வைத்தாள் ஜெயா..

“நீ என்ன சொல்ற..” என்று பிரபா புரியாமல் அதிர்வுடன் கேட்க, “நான் ஜெயா. என்னை உங்கள் யாராலுமே என்னை ஏமாற்ற முடியாது மினி அக்கா. அன்பரசு என்ற பெயரில் இவர் என்னிடம் அனைத்து உண்மையும் சொன்ன பொழுதே அந்த மினி நீங்க என்றும், அந்த மணமேடை ஏற போகும் பெண் நான் என்றும் எனக்கு தெரிந்துவிட்டது..” என்றாள்..

இந்த விஷயம் பிரபாவிற்குமே அதிர்ச்சியாக இருக்க, “ஒரு கதையில் ஒருவரின் கதாபாத்திரத்திற்கு நான்கு பக்கமும் நின்று ஆயிரம் வழிகளில் யோசிப்பவள் நான். ஒரு கதாபாத்திரத்திற்கே நான் அந்தளவிற்கு யோசிக்கும் பொழுது வாழ்க்கை என்று வரும் பொழுது எந்தளவிற்கு யோசிப்பேன்..” என்றதும்  பிரபா, மதன், மினி மூவரும் அமைதியாக இருக்க பேத்திகள் இருவரையும் அழைத்துக்கொண்டு வெளியே சென்றார் கோபிநாத்.

கணவனின் பார்வை தன் மீது படிவதை உணர்ந்து, “நான் எழுதிய கவிதை புத்தகத்தில் அவரோட கையெழுத்து பார்த்து காதலிக்க தொடங்கினேன். முகநூலில் என்னிடம் அன்புவாக பழகியது பிரபாவை நான் கண்டு பிடித்துவிட்டேன்.” என்றவள் நிறுத்தி கணவனின் முகம் பார்த்துவிட்டு,

“ஆனால் திருமணத்திற்கு பிறகு அவர் என்னிடம் உண்மையை மறைப்பாரோ என்று நினைத்தேன்” அவனோ நிதானமாக அவளின் முகம் பார்க்க, “ஜெயா நீ மற்ற பெண்கள் போல யோசிக்கவே இல்லையே.. அதுதான் எனக்கு அதிசயமாக இருக்கிறது.. உன்னோட இடத்தில் வேற எந்த பெண் இருந்தாலும் நடப்பதே வேறு..” என்றாள் மினி..

மினி பார்த்த அவளின் விழிகள் பளிச்சிட, “இந்த இடத்தில் நான் சாதாரண ஜெயாவாக யோசித்தேன் என்று யார் சொன்னது?” என்று கேள்வியாக புருவம் உயர்த்தினாள்..

“அந்த இடத்தில் நான் எழுத்தாளர் தமிழரசியாக யோசித்தேன்.. அப்பொழுதுதான் எனக்கு சில விஷயங்கள் புரிந்தது..” என்றவளை இமைக்காமல் பார்த்தான் பிரபா..  இருவருக்குள் இருந்த புரிதல் அவர்களின் வாழ்க்கையை வசந்தமாக மாற்றியது.. ஆனால் இன்றோ மனதிலிருந்து அருவி போல அவள் மட்டும் பேசிக்கொண்டிருந்தாள்..

“உனக்கு கோபமே வரவில்லையா?” மினி நம்பாமல் அவளிடம் கேட்க, “இதில் கோபபட்டு நான் என்ன செய்வது மினிக்கா. அன்றைய நிலையில் இவரால் பாதிக்கபட்ட பெண் நீங்கதானே தவிர நான் இல்ல. அப்படி இருக்கும் பொழுது இவர்மேல் கோபப்பட நான் யார்..” என்று தெளிவாக கேட்டவளை பார்த்து பிரம்மிப்புடன் அமர்ந்திருந்தான் மதன்..

இதுவரை அவன் சந்தித்த பெண்களில் மினி மட்டுமே வித்தியாசமான பெண் என்று நினைத்திருக்க அவளுக்கு நிகராக நின்ற ஜெயாவைப் பார்த்து அவனின் விழிகள் வியப்பில் ஆழ்ந்தது..

“அந்த அறையை தன்னுடைய கற்பனையில் கொண்டு வந்து தெளிவாக யோசிக்கும் பொழுது நீங்க என்னிடம் சொன்ன விஷயம் மனதை உறுத்தியது. அப்புறம் மதன் அண்ணா, உங்களோட நிலை, பிரபாவின் தவிப்பு என்று கணக்கு போடும் பொழுது விஷயம் வேறாக இருந்தது..” என்றவளைப் பார்த்து மினியே வாயடைத்து போனாள்..

அங்கே பலத்த அமைதி நிலவ, “பிரபா மேல் தப்பு இருக்காது என்று நான் உறுதியாக நம்பினேன்..” கலங்கிய விழிகளுடன் கணவனின் தோளில் சாய்ந்துகொள்ள, “என்னோட நம்பிக்கை பொய்யாகவே இல்ல..” என்றவளை அதே அன்புடன் அரவணைத்து கொண்டான் பிரபா..

இருவரும் எத்தகைய வாழ்க்கை வாழ்கின்றனர் என்று தன் விழிகளால் பார்த்த மதனின் உள்ளம் நிறைந்துவிட அதுவரை அவனின் உள்ளத்தில் இருந்த தவிப்பு அவனிடமிருந்து விடைபெற்றுச் சென்றது..

அவளின் ஒவ்வொரு வார்த்தையிலும் வெளிப்பட்ட காதலில் மௌனமானான் பிரபா. அவளின் மனம் மாறும் என்று அவன் காத்திருந்த நாட்கள் எல்லாம் அவனின் கண்முன்னே வந்து நின்று சிரித்தது..

“என்மேல் உனக்கு சந்தேகம் இல்லையா ஜெயா..” என்று பிரபா அவளிடம் கேட்க நிமிர்ந்து கணவனின் முகம் பார்த்தவளோ, “கண்ணு பொய் சொல்லும் உள்ளுணர்வு பொய் சொல்லாது பிரபா..” நேருக்கு நேராக அவளின் விழியைப் பார்த்துக் கூறினாள்

“நீ விவாகரத்து பற்றி யோசித்து விடுவாயோ என்றுதான் நான் அப்படி சொன்னேன்..” தன் வாயால் அவள் மாட்டிக்கொள்ள, “அக்கா அன்னைக்கு என்ன நடந்தது. நீங்களாக சொல்றீங்களா?” என்று கேட்டாள்..

“அதான் முன்னாடியே சொன்னேனே.. பிரபாவிற்கும் எனக்கும் இடையே எல்லாம் நடந்து முடிந்துவிட்டது..” என்றாள் மினி குறும்புடன்..

“நீங்களாக உண்மையைச் சொல்லவில்லை என்றால் நான் சொல்ல வேண்டி வரும்..” என்று பிரபாவைவிட்டு விலகி எழுந்தவள் அறைக்குள் சென்று அந்த பைலை எடுத்து வந்து அவளின் முன்னே நீட்டிவிட்டு, “உண்மையை நீங்க ஏன் மறைச்சீங்க சொல்லு..?” என்று மிரட்டினாள் ஜெயா..

மினி மதனைப் பாவமாக பார்க்க, “எனக்கு தெரியாது நீயே உண்மை சொல்லு..” என்று சொல்லிவிட்டு நகர்ந்து அமர, “மதன் சூப்பர்டா..” என்று நண்பனின் தோளில் கைப்போட்டு அமர்ந்தான் பிரபா

ஜெயா அவளை குற்றவாளி போல பார்க்க, “என்னடா மினிக்கு வந்த சோதனை?” என்று கேட்டு அன்று நடந்த விஷயத்தை அவர்களிடம் சொல்ல தொடங்கினாள்..

error: Content is protected !!