tmazhagi2

tmazhagi2

தேன்மழை 2
“அல்லி!” ஸ்நானத்தை முடித்துவிட்டு வந்த வண்டார் குழலியின் குரல் கோபமாக
ஒலித்தது.
“சொல்லுங்கள் இளவரசி.” குழலியின் நெருங்கிய தோழிப் பெண் ஓடோடி வந்தாள்.
“என்ன இது?” இளவரசியின் கண்கள் பக்கத்தில் கிடந்த மஞ்சத்தை சுட்டிக் காட்டியது.
“தாங்கள் சயனிக்கும் நேரமாகிவிட்டது. அதனால் பஞ்சணையை அலங்கரித்து
வைத்தேன்.” பணிவாகச் சொன்ன தோழியை வெறுப்பாகப் பார்த்தாள் குழலி.
கூடாரத்தில் தங்கி இருந்தாலும் இளவரசிக்கு எந்தக் குறையும் வராமல் பார்த்துக்
கொண்டார்கள் சேடிப் பெண்கள்.
“யாருக்கு வேண்டும் இந்த டாம்பீக வாழ்க்கை. அத்தனையையும் தூக்கித் தூரப்
போடு.” சினமிகுதியில் இரைந்து பேசியவள் கூடாரத்தின் மையத்திலிருந்த
ஆதாரத்தைப் பிடித்துக் கொண்டாள்.
அல்லிக்குத் தன் தலைவியின் கோபம் நியாயமானது என்று புரிந்தாலும் தலைகுனிந்து
மௌனித்தாள்.
“கிளியை வளர்த்துப் பூனையின் கையில் கொடுத்த கதையாக அல்லவா இருக்கிறது.
என்ன நினைத்துக் கொண்டு இத்தனையும் பண்ணுகிறார் என் தந்தை?” தன்
தந்தையிடம் காட்ட முடியாத கோபம் அனைத்தையும் தன் தோழி மேல் காட்டினாள்
குழலி.
“இளவரசி! மனதைக் கொஞ்சம் நிதானப் படுத்திக் கொள்ளுங்கள். ராஜீய
விவாகங்களில் இது சகஜம் தானே?”
“அதற்காக? அந்த விஜய பாண்டியனையா என் தலையில் கட்டுவார்கள்? சித்ரா
பௌர்ணமி அன்று நடந்த விழாவில் அவன் வாளும் வேலும் பிடித்த அழகை நீ
காணவில்லையா? எந்தப் பெண்ணாவது அவனைத் திரும்பிப் பார்ப்பாளா?”
கொதித்துக் கொண்டிருந்தாள் வண்டார் குழலி.
நடந்தது என்னவென்றால்… நாட்டின் நலத்திற்காகத் தன் ஆசை மகளின்
வாழ்க்கையைப் பணயம் வைக்கத் திட்டமிட்டிருந்தார் சிற்றரசர் கழ்வராயன்.
தனது மகளுக்கு ஈடு சரியில்லை என்று தெரிந்திருந்தும் சோழர்களின் ஆக்கிரமிப்பிற்கு
வாய்ப்பிருந்ததால் நாட்டின் நலன் ஒன்று மட்டுமே முக்கியம் என்று எண்ணி இந்த
முடிவுக்கு வந்திருந்தார்.
பாண்டிய இளவரசன் விஜய பாண்டியனை தனது மகள் வண்டார் குழலிக்கு
மணமுடித்து வைக்க சகல வழிகளிலும் முயற்சித்துக் கொண்டிருந்தார்.
சிறு வயது முதலே வாளும் வேலும் இரு கண்கள் என்று வாழ்ந்து வந்திருந்த குழலிக்கு
தந்தையின் முடிவு வேப்பங்காய் ஆகிப்போனது. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்
கேட்க மறுத்தவரை எதிர்க்க முடியாமல் தன் சைனியத்தின் ஒரு சிறு பகுதியை
அழைத்துக் கொண்டு இங்கு வந்து விட்டாள்.
இளம் வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் அவளை அடித்துக் கொள்ள யாருமில்லை
என்பதால் இது அவ்வப்போது நடப்பது வழமைதான்.
அல்லிக்கும் தனது எஜமானியின் மனது புரிந்தது. வேகத்துக்கும் விவேகத்துக்கும்
பெயர் போன தங்கள் இளவரசி அந்த மூடப் பாண்டியனை எக்காலத்துக்கும் விரும்பப்
போவதில்லை. இருந்தாலும், அவளால் என்ன பண்ண முடியும்?
பஞ்சணையில் சாய்ந்து கொண்ட குழலி கண்களை மூடிக்கொண்டாள். மூடிய
கண்களுக்குள் அந்தப் பெரு வணிகனின் முகம் ஜாலம் காட்டியது.

எங்கேயோ எதுவோ முரண்பட்டது போல தோன்றியது அந்த மெல்லிடையாளுக்கு.
திருட்டுத்தனமாக கழ்வராயன் எல்லைக்குள் கால் வைத்திருந்தாலும் கண்ணிமைக்கும்
நேரத்திற்குள் தன்னிடமிருந்த வாளை இடம் மாற்றிக்கொண்ட அவன் லாவகம்
அவளை வியக்க வைத்தது.
பெயரைக் கூடக் கேட்கவில்லை என்று அப்போதுதான் தோன்றியது பெண்ணுக்கு.
அவன் வாள் பிடித்த விதமும், அவன் புருவத் தழும்பும் அவனுக்குப் போர்க்களங்கள்
புதிதல்ல என்று சொல்லாமற்ச் சொல்லின.
இருந்தாலும், தன் அடையாளத்தை மறைத்துக் கொள்ள அவன் பெருவணிகன் என்று
சொன்ன போது அவன் போக்கிலேயே விட்டுப் பிடித்தாள் குழலி. நாளை இரவு
வரட்டும். முகத்தில் புன்னகை உறைய துயில் கொள்ளும் தன் தலைவியை
ஆச்சரியமாகப் பார்த்தாள் அல்லி.
***************************
சுந்தரச் சோழரின் மந்திராலோசனை அறையில் அனைவரும் கூடி இருந்தார்கள்.
அவசர கதியில் ரகசியமாக நடைபெற்றது இந்தச் சந்திப்பு.
சுந்தரச் சோழன், திருச்சிற்றம்பலமுடையான் பல்லவராயன், அண்ணன் பல்லவராயன்,
ஆதித்த கரிகாலன் என்று நான்கு பேர் மட்டுமே அந்த அறையில் வீற்றிருந்தார்கள்.
பட்டால் சிறு கட்டில்கள் அலங்கரிக்கப்பட்டிருக்க அதிலிருந்த திண்டில் சாய்ந்திருந்தார்
சுந்தரச் சோழர். முகத்தில் சுணக்கம் தெரிந்தது. இடை தழுவியிருந்த பீதாம்பரத்தை
அவர் கை வருடியபடி இருந்தது.
மந்திரிகள் இருவரும் எதுவும் பேசவில்லை. இந்த அவசரச் சந்திப்பு எதற்கென்று
ஓரளவு புரிந்திருந்தாலும் எப்போதும் போல மன்னரின் ஆணைக்காகக்
காத்திருந்தார்கள்.
“கரிகாலா… நீ எடுத்திருக்கும் முடிவு சரிதானா?” தந்தையின் விழி மகனை ஏறெடுத்துப்
பார்த்தது.
“தந்தையே! சோழ எல்லையின் விஸ்தரிப்பு காலம் காலமாக நடப்பதுதானே? அதை
இன்னும் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறேன். அவ்வளவுதான்.”
“அவ்வளவுதானா?” நிதானமாக வந்தது சுந்தரச் சோழரின் கேள்வி. மந்திரிகள்
இருவரும் மன்னரின் அந்தக் கிடுக்கிப்பிடியில் வந்த சிரிப்பை அடக்கிக்
கொண்டார்கள்.
கரிகாலன் கொஞ்சம் திணறிப் போனான். தந்தையின் காதுக்கு விஷயம்
வந்திருக்குமோ என்ற சந்தேகம் அந்தக் க்ஷணம் அவனுக்குத் தோன்றியது.
உன் வயதைக் கடந்துதான் நானும் வந்திருக்கிறேன் என்பது போல அமர்ந்திருந்தார்
மன்னர் பெருமான்.
“தங்கள் அபிப்பிராயம் என்ன பல்லவராயர்களே?” மன்னனின் கேள்வியில் லேசாகப்
புன்னகைத்தார் அண்ணன் பல்லவராயன்.
“எல்லை விஸ்தரிப்பு நல்ல விஷயம் தான். இளவரசருக்கு எப்போதும் எங்கள் துணை
இருக்கும் மன்னவா?” அண்ணன் பல்லவராயரின் குரலில் சின்னப் பல்லவராயர்
‘களுக்’ கென்று சிரித்தார். மன்னர் பெருமானின் முகத்திலும் லேசாகப் புன்னகை
அரும்பியது.
அத்தனை பேரின் கேலி நகையையும் பார்த்த போது இனியும் மறைப்பதில்
அர்த்தமில்லை என்றே தோன்றியது கரிகாலனுக்கு. தொண்டையை லேசாகச் செருமிக்
கொண்டு ஆரம்பித்தான்.

“நேற்று மதியம் ஒற்றன் கொண்டு வந்த செய்தி கொஞ்சம் விந்தையாக இருக்கவும்
கழ்வராயன் எல்லை வரை போயிருந்தேன்.”
“தனியாகவா?” கரிசனமிக்க தந்தையின் குரலாக வந்தது மன்னனின் கேள்வி.
“முத்தழகன் கூட வந்திருந்தான்.”
“சேதி என்ன இளவரசே?” இது சின்னப் பல்லவராயர்.
“சிறு படைப்பிரிவொன்று எல்லையில் முகாமிட்டிருப்பதாகச் சேதி சொல்லிற்று.”
“ஓ… சேதி உண்மைதானா?”
“ஆமாம் பல்லவராயரே.”
“யார் தலைமையில் படை வந்திருக்கிறது? நோக்கம் என்ன?” கேள்விக்கணை
தொடுத்தார் அண்ணன் பல்லவராயன்.
“நோக்கம் எதுவென்று புரியவில்லை. ஆனால் படையை நடத்தி வந்திருப்பது
கழ்வராயனின் புதல்வி… வண்டார் குழலி.”
‘அட! இதுதான் சங்கதியா?’ என்பது போல பல்லவராயர்கள் இருவரும் புன்னகைத்துக்
கொண்டார்கள். கரிகாலன் முகம் லேசாகச் சிவந்து போனது.
“பாதகமில்லை இளவரசே! கழ்வராயனின் மகள் போர்க்களங்களைக் கூடச்
சந்தித்திருக்கிறாள்.”
“அப்படியா!” அலமலந்து போனான் சோழ இளவல். வாள் பிடிக்கும் அந்தக் கரங்கள்
போர் முனை கண்டிருக்கிறதா? ஆச்சரியத்தின் எல்லைக்கே போனான் கரிகாலன்.
“தந்தையே! கழ்வராயனின் கோட்டையை நான் முற்றுகை இடவேண்டும். அனுமதி
கொடுங்கள்.”
“கரிகாலா! அவசரப்படாதே. ராஜிய விஸ்தரிப்பில் வீணான உயிர்ப்பலி நடப்பதை
நான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன். தூதனுப்பிப் பார்க்கலாம்.”
“கழ்வராயன் மசிவாரென்று எனக்குத் தோன்றவில்லை தந்தையே. அவர் பாண்டிய
விசுவாசி.”
“பாதகமில்லை. பேசிப் பார்க்கலாம். பல்லவராயர்களே! உங்களில் ஒருவர் கழ்வராயன்
கோட்டைக்குத் தூதுவராகச் செல்லுங்கள். பணி சுலபமாக முடிந்தால் இளவரசன்
திருமணம். இல்லையென்றால்… கழ்வராயன் கோட்டை முற்றுகை நிச்சயம்.”
மன்னரின் ஆணையில் பல்லவராயர்கள் இருவரும் தலைதாழ்த்தி வணங்க, ஆதித்த
கரிகாலன் தன் தந்தையின் பாதம் தொட்டு வணங்கினான்.
******************************
இருள் லேசாகப் பரவ ஆரம்பிக்கும் போதே அந்த இடத்திற்கு வத்துவிட்டான்
கரிகாலன். இன்று முத்தழகனை சாமர்த்தியமாக புரவிக்குக் காவல் வைத்துவிட்டு
தனியே வந்திருந்தான்.
வாய்க்காலின் சிறு பகுதி மெல்லிய இழையாகப் பிரிந்து சலசலவென அங்கு ஓடிக்
கொண்டிருந்தது. பொந்துகளில் ஒதுங்கியிருந்த பறவைகள் தனியே இங்கொருவன்
என்ன செய்கின்றான் என ஆராயத் தலையை நீட்டிப் பார்த்தன.
மாலை நேரத்து மயக்கம் கரிகாலனை மட்டுமல்ல அந்த இடத்தையே ஆக்கிரமித்து
இருந்தது. அல்லிகள் ஒன்றிரண்டு ஆங்காங்கே தலைகாட்டி நின்றிருந்தன.
“தனிமைதான் சொர்க்கமோ?” எண்ணங்களையெல்லாம் கொள்ளை கொள்ளும் அந்தக்
காந்தக் குரலில் அலறிப் புடைத்துக்கொண்டு திரும்பிப் பார்த்தான் கரிகாலன்.
பாண்டிய நெசவாளர்களின் கைத்திறனைக் காண்பிக்கும் வகையில் லேசான சரிகை
வேலைப்பாடமைந்த மெல்லிய பட்டுடுத்தி மானிடப் பெண்ணை மிஞ்சும் தேஜஸோடு
நின்றிருந்தாள் குழலி.

அப்போதுதான் மாலை நேரத்து ஸ்நானத்தை முடித்திருப்பாள் போலும். இழுத்துக்
கட்டிய கூந்தலிலிருந்து ஒன்றிரண்டு மயிரிழைகள் அவள் முகத்தை லேசாகத் தடவின.
மேனியின் வாசனையே போதுமென்று நினைத்தாளோ என்னவோ? மல்லிகையைத்
தவிர்த்து விட்டு ஒற்றை செங்கழுநீர்ப் புஷ்பத்தை காதோரமாகச் சொருகி இருந்தாள்.
அவள் நின்ற தோரணையே சொன்னது, அந்த அரச குல மங்கை ஆளப் பிறந்தவள்
என்று.
“என்ன பெருவணிகரே? பேசா மடந்தை ஆகிவிட்டீர் போல் தெரிகிறது?” அந்தக்
குரலில் சுயநினைவுக்கு வந்த கரிகாலன் லேசாகப் புன்னகைத்தான்.
“இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது?”
“தேவியின் கேள்வியால் சிரிக்கவில்லை. என் நிலையை எண்ணிச் சிரித்தேன்.”
“அப்படி உமது நிலைமைக்கு என்ன பங்கம் வந்துவிட்டது?”
“வணிகத்தை மறந்து விட்டு வாள் பிடிக்க வந்திருக்கிறேனே, அதைச் சொன்னேன்.”
“இப்போதும் ஒன்றும் குறைந்து விடவில்லை. வாள் மேல் ஆசை தீர்ந்து போயிருந்தால்
நடையைக் கட்டலாம்.” அந்த அஞ்சன விழிகள் அவனைச் சோதித்துப் பார்த்தன.
“ஆஹா! அது மட்டும் நடக்காது தேவி. இன்று வாளை ஒரு கை பார்த்து விடுவதென்று
ஒரு முடிவோடு தான் வந்திருக்கிறேன்.”
“அப்படியென்றால் சரிதான். அதுசரி, உமது வாளைக் கொஞ்சம் இங்கே
காண்பியுங்கள்.” குழலியின் குரலில் கரிகாலனுக்குத் தூக்கி வாரிப்போட்டது.
“ஏன்? எதற்காக தேவி?”
“ஏனிந்தப் பதட்டம் பெரு வணிகரே? சாதாரணமாகத்தான் கேட்டேன்.”
“இந்த மாணவனின் வாளில் எந்தச் சிறப்பும் இல்லை குருவே. நாம் பயிற்சியை
ஆரம்பிக்கலாமா?” பேச்சை திசை மாற்றினான் கரிகாலன். வாளில் சோழ நாட்டு அரச
குல முத்திரையும் ஆதித்த கரிகாலன் பெயரும் பொறிக்கப் பட்டிருந்தன.
“சரி, வாளைப் பிடியுங்கள்.” எதிரிலிருப்பவனை முழுச் சந்தேகத்தோடு ஏவினாள்
இளவரசி. அங்கு நடந்த நாடகத்தை சுற்றி வர இருந்த மரப் பறவைகள் அனைத்தும்
கவனித்த வண்ணம் இருந்தன.

அவன் வாளைப் பிடித்த அழகிலேயே குழலிக்குப் புரிந்தது, வாள் வீச்சில்
எதிரிலிருப்பவன் கை தேர்ந்தவன் என்று. இறுக்கிக் கட்டப்பட்டிருந்த சேலைக்கட்டு
அவளுக்கு வசதியாகப் போக எடுத்த எடுப்பிலேயே கரிகாலனைத் தாக்க
ஆரம்பித்தாள் மங்கை.
இதுவரை போட்ட வேஷம் மறந்து போக, தன்னை நோக்கி வந்த வாளை லாவகமாக
எதிர்த்தான் கரிகாலன். வண்டார் குழலியின் முகத்தில் ஓர் வெற்றிப் புன்னகை
தோன்றியது. அவள் வதனத்தில் புன்னகையைக் கண்டவன் தானும் பதிலுக்குப்
புன்முறுவல் பூத்தான்.
“வீரரே! நீர் யாரென்று இப்போதாவது கூறும்.” அவளை நோக்கி வந்த வாளை
நெட்டித் தள்ளியவள், வாள்வீச்சினூடே சொல் வீச்சிலும் இறங்கினாள்.
“பெயர் ஆதி.” சட்டென்று குனிந்த படி சொன்னான் கரிகாலன். மயிரிழையில் அவன்
தலைக்கு மேலாக அவள் வீசிய வாள் சென்றது.
“முழுப்பெயரே அதுதானா?” பாய்ந்து குதித்தவளின் காலுக்குக் கீழாக கரிகாலனின்
வாள் நிலத்தை முத்தமிட்டது.
‘க்ளிங்’ என்ற வாட்கள் மோதும் ஒலி மட்டுமே அடுத்து வந்த கொஞ்ச நிமிடங்களுக்கு
அங்கே நிலைத்து நிற்க, இறுதியில் குழலியின் கை வாள் கரிகாலனின் வாளால் வீசி
அடிக்கப்பட்டது. அந்த மோகினியும் அவன் கை வளைவிற்குள் வந்திருந்தாள்.

அத்தனை அருகாமையில் அந்த வீர குலப் பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில்
கரிகாலன் தலை சுற்றிப் போனான். தனக்கு முதுகு காட்டியபடி நின்ற அவள் செழித்த
பிரதேசங்கள் ஆழ்ந்த மூச்சில் விம்மித் தணிந்த போது இளவரசன் உன்மத்தம்
கொண்டான்.
பாலில் மஞ்சள் கலந்து அதில் வெண்ணையைக் குழைத்தாற் போல இருந்த அவள்
கழுத்துப் பகுதி அவனை கண்ணியம் தவறச் செய்தது.
அவளைச் சுற்றித் தன் வலக்கரத்தில் இருந்த வாளை இடைக் கச்சையில் போட்டுக்
கொண்டவன், இன்னும் அவளைத் தன்னோடு சேர்த்தணைத்தான்.
“பேரழகே! இன்றைக்கே கழ்வராயன் கோட்டைக்குத் திரும்பிவிடு.” அவன் குரலில்
ஆணையிருந்தது. அவள் எதுவும் பேசாமல் மௌனித்திருந்தாள். அவளைத்
தன்புறமாகத் திருப்பியவன் அந்த மயிலை பாய்ந்த விழிகளை உற்று நோக்கினான்.
அந்தத் தீட்சண்ணியத்தைத் தாங்க அவளால் முடியவில்லை.
“பொய் பேசினேன் என்று கோபமா பேரழகே?”
“இல்லை… இதுவரையில் தாங்கள் யாரென்று என்னிடம் சொல்லவில்லை. தவிர…”
“தவிர?”
“இந்த நெருக்கத்தின் அர்த்தமும் புரியவில்லை.”
“என் கண்களைப் பார்த்துச் சொல் குழலி. இன்னுமா உனக்குப் புரியவில்லை?” அவன்
கேள்வியில் விம்மியவள் அவன் மார்பையே தஞ்சமடைந்தாள்.
“இந்த அன்புக்கு ஆயுளில்லை வீரரே!”
“யார் சொன்னது?” அவன் குரலில் கடுமை இருந்தது.
“என் தந்தை.”
“ஹா… ஹா… அந்தப் பனங்காட்டு நரியை உனக்கு மணம் பேசுகிறாரே… அதைச்
சொல்கிறாயா?”
“ம்…” அந்த ஹூங்காரத்தில் சித்தத்தைப் பறிகொடுத்தான் கரிகாலன். அவன்
அணைப்பு இன்னும் இறுகியது. அந்த முரட்டுத்தனம் அவளுக்கும் அப்போது
தேவைப்பட்டது.
“கவலை வேண்டாம் இளவரசி. இன்னும் சரியாக ஏழு நாட்களில் உன்
வாழ்க்கையையே மாற்றிக் காட்டுகிறேன். மகிழ்ச்சியோடு கோட்டைக்குப் புறப்படு.”
அதற்கு மேலும் அங்கு நின்று அந்தப் பத்மினியைக் களங்கப்படுத்த விரும்பாதவன்
அவளை விட்டு விலகினான்.
“சென்று வரட்டுமா?”
“அத்தனை அவசரமா என்னை விட்டுப் பிரிய?”
“காரியங்கள் தலைக்கு மேல் நிற்கின்றன தேவி. விடை கொடு.” இறைஞ்சும் அவள்
விழிகளை பார்க்க மறுத்தவன் சட்டென்று நகர்ந்தான்.
“இப்போது கூடத் தாங்கள் யாரென்று என்னிடம் சொல்லக் கூடாதா?” அவள்
ஆதங்கத்தில் நடந்து போனவன் அங்கிருந்தே திரும்பிப் பார்த்தான். அவன் கம்பீரத்தில்
உருக்குலைந்து போனாள் வண்டார் குழலி.
“ஆதி என் பெயர்… கரி மேல் ஏறினால் காலனுக்கே சவால் விடுபவன்.” சொன்னவன்
மர்மமாகச் சிரித்தான்.
“அது தெரிகிறது அன்பரே! நான் கேட்டது அதுவல்ல.”
“நான் சொன்னதைத் திரும்பச் சொல் பேரழகே! உன் கேள்விக்குப் பதில் கிடைக்கும்.”
சிரித்தபடியே போய்விட்டான் சோழ இளவல். குழம்பிப் போனாள் இளவரசி. 

‘அப்படி என்ன சொன்னார்?’ சிந்தித்த படியே அவன் வார்த்தைகளை மீட்டிப்
பார்த்தாள்.
“ஆதி… கரி மேல்… காலனுக்கு…”
“ஆதி… கரி… காலன்…”
“ஆதித்த… கரிகாலன்…” மூச்சு விட மறந்து போனாள் வண்டார் குழலி. கண்கள்
நிலைகுத்த சிலையென சமைந்து போனாள்.

error: Content is protected !!