அத்தியாயம் 23
கணத்த மனதுடன் வீட்டிற்குள் நுழைந்தான் வெற்றிவேல்.நிச்சயதார்த்த வேலைகள் படு மும்முரமாக நடந்து கொண்டிருந்தன.புதிதாக ஒட்டிக்கொண்டிருந்த விசேஷ வீட்டிற்கான களை அந்தச் சூழலை அழகாக்கி இருந்தது.
வீட்டை நிறைத்த சொந்த பந்தங்களின் பேச்சும் சிரிப்பும் அங்கே கலகலப்பை உண்டு பண்ணியிருந்தது.’இத்தகைய இனிமையான சூழலைக் கெடுக்கத்தான் வேண்டுமா…’என்ற கேள்வி எழுந்தது அவனுள்.
கலைந்த தலையும் சிவந்த விழிகளும் சோர்ந்த முகமுமாய் சிந்தித்தபடியே வாசற்படியில் நின்று கொண்டிருந்த வெற்றிவேலை நெருங்கினான் கதிர்.
”டேய் வெற்றி…எங்கடா போயிட்ட…”.
“வாழைத் தோப்புக்கு லோடு ஏத்த போயிருந்தேன்டா…”
“என்கிட்ட சொல்லியிருந்தா நான் போயருக்க மாட்டேனா…சரி நீ போய் கெளம்பு…நல்ல நேரம் முடியிறதுக்குள்ள நிச்சயம் பண்ணனுமாம்…இப்பவே லேட் ஆயிருச்சு…”
தான் இவ்வளவு பேசியும் அசையாமல் நின்று கொண்டிருந்தவனை நிமிர்ந்து பார்த்தான் கதிர்.
”என்னடா வெற்றி…”
“கதிரு…எனக்கு இந்த நிச்சயதார்த்தத்தில விருப்பம் இல்லடா…இதை நிறுத்தனும்” என்ற வெற்றிவேலை ஏற இறங்க பார்த்த கதிர்,கடகடவென சிரித்து விட்டான்.
“டேய்…ஏப்ரல் 1ஆம் தேதி எல்லாம் எப்பவோ முடிஞ்சு போச்சு…இப்போ வந்து ஏமாத்திக்கிட்டு…போடா…போய்க் கிளம்பு…இவன் நிச்சயத்த நிறுத்தப் போறானாம்” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டான்.
அவன் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்த வெற்றிவேலை கண்ட அஞ்சுகம்,
”வெற்றி…எங்கய்யா போயிருந்த… இன்னைக்கும் வேல வேலண்டு திரியணுமா…வீடு முழுக்க வேலை ஆளுக இருக்காக…அவுக பாத்துக்கிருவாக… வேர்த்துப் பூத்துப் போய் வந்திருக்கியே ராசா…மோரு கலக்கவா…”
“அம்மா…எனக்கு இந்த நிச்சய…”
“தெரியும் ராசா…நீ சொல்லாமலே உம்மனசு எனக்கு தெரியும்…மது நல்ல பொண்ணு…உனக்கு ஏத்த பொண்டாட்டியா இந்த வீட்டுக் கேத்த மருமகளா இருப்பா…உம்மனசுக்கு அந்தப் பெரிய கருப்பு உனக்கு எந்த குறையும் இல்லாம சந்தோசமாக வாழ வக்கும்” என்று கூறினார். அதற்குள் அவரை யாரோ அழைக்கவே,”இந்த வாரேன் மதினி…” என்று சென்றுவிட்டார்.
கடுப்பாகிப் போன வெற்றிவேல் குலசேகரனை நெருங்கி,”அ…அப்பா எனக்கு இந்த நிச்சயத்தில விருப்பம் இல்லை…இ.இத நிறுத்திருங்க…” என்றான்.
“நம்மாளுகள்ல நிச்சயத்துக்கு பொண்ணு வீட்டு செலவு தான்பா பொண்ணு விட்டு செலவு தான்யா…அதுதேன் சுந்தரம் நான் தான் எல்லாஞ் செய்வேன்னு சொல்லிட்டான்…சரி…அவனுக்கும் ஒத்தப் புள்ள…அவன் ஆசய ஏங் கெடுக்கணும்னு நானும் விட்டுட்டேன்…கல்யாணத்துக்கு அம்புட்டு செலவும் நம்மளுதுதேன்…சும்மா சமாய்ச்சுப்புடுவோம்…”
என்று மீசையை நீவியவாறே அவர் போக்கில் இவன் பேசியதையே காதில் வாங்காமல் பேசியபடியே போய் விட்டார்.அவனுக்கு வெறுத்துப் போய்விட்டான்.
‘நான் சொல்றது யாருக்குமே புரியலையா…நானும் எவ்வளவு நேரம் தான் மனசக் கல்லாக்கிட்டு நிச்சயத்தை நிறுத்துங்க…நிச்சயத்தை நிறுத்துங்கன்னு திரும்பத் திரும்ப சொல்லுவேன்…ச்சே’
இறுதி முயற்சியாக மயிலம்மையிடம் சென்றான் வெற்றிவேல்.
“அப்பத்தா…”
“என்னய்யா…” தன் வயதை ஒத்த பெண்மணிகள் சூழ பழங்கதை பேசி கொண்டிருந்தார் மயிலம்மை…
“இங்கே வா…”
“அட…சும்மா சொல்லுய்யா…என்னமோ கொமரிப் பிள்ள தயங்குற மாதிரி தயங்குகிறவன்…”மயிலம்மையின் தங்கை முறையில் இருந்தவர் குரல் கொடுத்தார்…
அவர் பேச்சில் பல்லைக் கடித்த வெற்றி, “இந்த நிச்சயத்த நிறுத்து…இதெல்லாம் வேணாம்…” என்றான்.
“ஐயா வெற்றி…கலியாணம் வக்கணும்னா மெதல்ல நிச்சயம் பண்ணனும்…அப்புறம் பரிசம் போடணும்…கடைசியாத் தான்யா கலியாணம் முடிக்கணும்…இங்க பாருடி என் பேரன அவனுக்கு நிச்சயம் பண்ண வேணாமாம்…நேரா கல்யாணத்தை முதல்ல வைய்யினு வந்து நிற்கிறான்…அம்புட்டு ஆசை என் பேத்தி மேல…அப்படியே அவன் தாத்தனைப் போல” மயிலம்மை அவனிடம் துவங்கி தன் தங்கையிடம் முடித்தார்.
அவனது கோபம் எல்லையைக் கடந்தது.
அவன் நிச்சயம் வேண்டாம் என்று சொன்னால் அதற்கு கல்யாணம் உடனே வேண்டும் என்று அர்த்தமாகிவிடுமா… இவர்களுக்கு எப்படி புரியவைப்பது அவனை தனக்குள்ளேயே போராடிக் கொண்டிருக்கிறான்.இதில் இவர்கள் வேறு தன்னை கேலி பொருளாக்குவது அவனுக்கு அவனுடைய ஆற்றாமையை கோபமாக வெடித்துச் சிதற வைத்தது.
“அப்பத்தா…நான் என்ன சொல்றேன்…நீ என்ன பேசுற…எனக்கு இந்த நிச்சயதார்த்தத்தில் விருப்பம் இல்லை…இதை உடனே நிறுத்து…”என்று ஆத்திரத்தில் கத்தியே விட்டான்.
அவனுடைய காட்டுக் கத்தலில் அனைவரும் கூடத்திற்கு வந்து விட்டனர்.
“என்னய்யா சொல்ற?” மயிலம்மையின் குரல் நடுங்கியது.
“வெற்றி என்னப்பா சொல்ற…எதுக்கு நிச்சயம் வேணாங்குற…” என்று கேட்டபடியே வெற்றிவேலை நெருங்கினார் குலசேகரன்.
“எனக்கு இந்த ஏற்பாட்டுல விருப்பம் இல்லப்பா…”
“விருப்பம் இல்லாமப் போனது இந்த ஏற்பாட்டுலயா…இல்லை என் மக மது மேலயா…” வெற்றிவேல் கத்திய சத்தம் கேட்டதுமே கூடத்திற்கு வந்துவிட்ட சுந்தரம் கூர்மையான பார்வையோடு இந்த கேள்வியை வெற்றிவேலைப் பார்த்துக் கேட்டார்.அவருக்கு பதில் ஏதும் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான் வெற்றிவேல்.
“பொறுமையாய் இரு சுந்தரம்… என்னாண்டு நான் விசாரிக்கிறேன்…”என்ற குலசேகரன்,
“விருப்பமில்லைன்னா முதலிலேயே சொல்லியிருக்க வேண்டியது தான… இவ்வளவு தூரம் ஏற்பாட்டக் கொண்டு வந்துட்டு இப்ப வந்து சொல்றது பெருங்கொண்ட குடும்பத்தில் பெறந்தவன் பேசுற பேச்சு மாதிரி தெரியலையே… இவ்வளவு நாளும் நீ ஏன் சொல்லல…” என்றார்.
இன்று இரண்டு யுடிக்கள் நட்புகளே…த.ம.நெ 23(2)படித்து விடுங்கள்