TMN25

TMN25

அத்தியாயம் 25
காதலியின் காதலுக்காக அவள் மீதான தன் காதலையே துறக்கத் துணிந்தான் வெற்றிவேல்…வரவழைத்துக் கொண்ட கடினத்துடன் நிச்சயதார்த்தத்தை நிறுத்தச் சொன்னான்.காரணம் கேட்ட பெரியோர்களிடம் விருப்பம் இல்லை என்றான்.மதுமதி இந்த நிச்சயத்தை மறுக்க வேண்டும் என்றால் அவள் தன்னை அறவே வெறுக்க வேண்டும்,தன் மீது தோன்றும் வெறுப்பு ராஜாவின் மீதான மறைந்து கிடக்கும் அவள் காதலை கிளர்ந்தெழச் செய்யும்.இந்நிலையில் அவளை ராஜாவைத் திருமணம் செய்து கொள்ளச் சொன்னால் நிச்சயம் ஏற்றுக் கொள்வாள்.
வெற்றிவேலுக்கும் விருப்பமில்லாததால் ராஜாவுடனான மதுவின் திருமணத்தைப் பெரியோர்களும் வரவேற்கவே செய்வார்கள் என்றே எண்ணினான். ஆனால் மதுமதி வெற்றிவேலைத் தான் காதலிக்கிறாள்,வெற்றிவேல் முகம் மறைந்ததும் ராஜாவின் முகம்  தெரிய அவள் மனம் ஒன்றும் கண்ணாடி இல்லை என்றும் அவள் வெற்றிவேலைத் தன் இதயத்தில் கல்மேல் எழுத்து போல் பொரித்துது வைத்துவிட்டாள் என்றும் பாவம் வெற்றிவேலுக்குத் தெரியவில்லை. வெற்றிவேல் நிச்சயதார்த்தத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்றதும் மதுமதி அகம்மகிழ்ந்து போவாள் என்று தான் எண்ணினான்.
ஆனால் அவள் அதைக் கேட்டு அதிர்ச்சியுற்றதோடு ராஜாவை மணக்க மறுக்கவும் செய்ததில் இன்னும் தன் மனதை மறைக்கிறாளே என்ற கோபத்துடன் வேறுவழியின்றி நால்வகை உபாயங்களில் இறுதியான தண்டத்தைக் கையில் எடுத்தான். தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு மதுமதியிடம் “என் பணத்தைப் பார்த்து மயங்கினாயா” என்றான்.ஆனால் அதனைக் கேட்டு மதுமதி பொங்கி எழுந்ததோடு மட்டுமல்லாமல் தன் மனதில் வெற்றிவேலுக்கான இடத்தை வெட்ட வெளிச்சமாக்கியது கல்லாகி இருந்த அவன் மனது கசிந்துருகத் தான் செய்தது. ஓடிச் சென்று அவளைக் கட்டி அணைத்து அவள் கண்ணீரை துடைத்து விடப் பரபரத்த கைகளை அரும்பாடுபட்டு அடக்கினான்.
பின்னே ராஜா எதற்கு அப்படிக் கூறினான் என்ற கேள்வி அவன் மண்டையைக் குடைந்து கொண்டிருக்க,அதற்குப் பதிலாய் வந்த ராஜா,மதுமதியைத் திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டதற்கு ‘தான் மதுமதியை அந்த எண்ணத்திலே பார்த்ததே இல்லை’ என்று போட்டானே ஒரு போடு…வெற்றிவேல் அலமலந்து போனான். சூழலின் விபரீதம் புரிய செய்வதறியாது திகைத்து ராஜாவை நோக்கிய வெற்றிவேலுக்கு அவன் உதடுகளில் நொடிக்கும் குறைவான காலத்தில் மின்னி மறைந்த குரூரமான விஷச் சிரிப்பில் அவன் வஞ்சக எண்ணம் புரிந்து போனது.காலம் தாழ்ந்த புரிதலால் என்ன நன்மை விளைந்து விடப் போகிறது.
அவனுக்கு என்ன குறை வைத்தான் வெற்றிவேல்…சிறுவயதிலிருந்து ‘தம்பி தம்பி’ என்று தன் கைப் பொருள்களை எல்லாம் அவனுக்கு விட்டு கொடுத்தானே… அதற்காகவா இன்று தன் வாழ்க்கையில் இவ்வளவு மோசமாக விளையாடியிருக்கிறான் என்று வெற்றிவேலால் வருந்தாமல் இருக்க முடியவில்லை.
அதோடு என்றோ கமலத்திடம் அவன் கூறிய வார்த்தைகள் வேறு அவனுக்கு எதிராகத் திரும்பியிருந்தன.இறுதியில் சூழ்நிலை அவனைக் குற்றவாளி ஆகிவிட்டது.அந்தப் பழியிலிருந்து அவனால் மீண்டு வர முடியுமா…அவனது பூனைக் குட்டியோடு அவனால் சேர்ந்து விட முடியுமா… இதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்லவேண்டும்!
அத்தனை நேரமும் தன் மனதை அழுத்தியிருந்த பாரத்தை இறக்கி வைத்திருந்தான் வெற்றிவேல்.
“ இப்படி என்னமாவது காரணம் இருக்குமுண்டு எனக்குத் தெரியும்யா…” மயிலம்மையின் குரல் கேட்டுத் திரும்பினர் வெற்றிவேலும் கதிரும்…
“எனக்குத் தெரிய வேண்டியது எல்லாம் ஒண்ணுதேன்…எதுக்கு வெற்றி சுந்தரத்தை அடிக்கப் போன…அது எம்புட்டு பெரிய தப்பு தெரியுமா…”என்ற மயிலம்மையிடம்
“நான் சுந்தரம் மாமாவை அடிக்கப் போகல அப்பத்தா…மதுவத் தரக்குறைவா பேசின ராஜாவத் தான் அடிக்கப் போனேன்…
அவன் விலகிக்கிட்டதால அது மாமாவ அடிக்கப் போன மாதிரி ஆயிருச்சு…”
“அப்புறம் மது உன்னைய பிடிக்கலைன்னு சொல்லுச்சுன்னு சொன்னியே இது எப்படா நடந்துச்சு…” என்றான் கதிர்.
“அன்னைக்கு ஒருநாள் மில்லுல இருந்து சீக்கிரம் வந்துட்டேன்டா…தோட்டத்தில மது இருக்கிறதப் பாத்துட்டு அவ கிட்ட பேசப் போனேன்…அவ ராஜா கூடப் பேசிகிட்டு இருந்தா…கிட்டக்கப் போனப்ப அவங்க பேசுனது தெளிவாக் கேட்டுச்சு.அப்பத்தான் மது ,”இதுல எனக்கு விருப்பமில்லை பெரியவர்களுக்காகத் தான் சம்மதிக்கிறேன்”ன்னு சொன்னாள்.அப்ப எனக்கு ஒரு முக்கியமான போன் வந்துட்டதால அவசரமா போயிட்டேன்… அப்புறமா அதைச் சுத்தமா மறந்து கூடப் போயிட்டேன்…
ராஜா வாழைத்தோப்பில் பேசுனதைக் கேட்டதும் ஒருவேளை மது என்னைக் கல்யாணம் பண்றதுக்குத் தான் பிடிக்கலன்னு சொல்லியிருப்பாளோன்னு நெனச்சேண்டா…”
“உன் தல… உங்க கல்யாணம் முடிவானதும் மது எவ்வளவு சந்தோஷப்பட்டுச்சுனு தெரியுமாடா…இதுலயும் அந்த ராஜா ஏதாவது திருகல் பண்ணியிருப்பான்டா… அவன் சொன்னத நம்பிக்கிட்டு அத்தனையும் இப்படிக் கெடுத்து வச்சிருக்கியேடா…”
என்று வெற்றிவேலைக் கடிந்து கொண்டவன்,ஏற்கனவே நொந்து போயிருந்த வெற்றிவேலை மீண்டும் நோகடிக்க விரும்பாதவனாய்,”சரி விடுடா… ஆனது ஆச்சு…நீ மதுரைக்குப் போடா… மதுகிட்ட பேசு…நடந்ததை எடுத்துச் சொல்லு…நிச்சயம் மது புரிஞ்சுக்கும்டா…” என்றான் கதிர்.அவன் சொற்படி மதுரைக்குக் கிளம்பினான் வெற்றிவேல்.
ராஜாஜி பூங்காவில் மரத்தில் சாய்ந்தபடி தரையில் அமர்ந்து இருந்தாள் மதுமதி. கண்கள் அதன் போக்கில் கண்ணீர் சொரிந்து கொண்டிருக்கக் கண் முன்னே தெரிந்த முருகன் கோவில் கோபுரத்தை வெறித்தபடி இருந்தாள்.’ஏன் இவ்வாறெல்லாம் நடந்தது…அவன் காதல் சொன்னதெல்லாம் நாடகமா…அத்தனையும் தன்னைப் பழி வாங்க மட்டுமேவா…’ அவளால் அந்நிகழ்வில் இருந்து இன்னமும் வெளிவரவே முடியவில்லை…
”மறந்துவிடு” என்று கமலம் கூறியது நினைவில் வந்தது…மறக்கலாம் தான்… ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது அவன் நினைவு இல்லாவிடில் அவனை மறந்து விடலாம் தான்…ஆனால் கண்களை மூடினால் கனவிலும் திறந்திருந்தால் நினைவிலும் வந்து துன்புறுத்திக் கொண்டே இருக்கிறானே அந்த இரக்கமற்ற அரக்கன்…
“மது…” அவனது குரல் கேட்டது.சரிதான் எனக்குப் பைத்தியம்தான் பிடித்துவிட்டது. அவன் அழைப்பது போன்று உள்ளதே என்று நினைத்தவாறு திரும்பியவள் அவன் எதிரே நிற்பதைக் கண்டாள்.’போய்த் தொலையேண்டா…ஏன் அங்குமிங்கும் நிழலாடி என் உயிர எடுக்குற… என் மனப்பிரமைகளில் கூட இனி உன்னை அனுமதிக்கப் போவதில்லை…’
என்று எண்ணி கண்களை இறுக மூடிக் கொண்டாள்.மீண்டும் அவனது குரல் கேட்டது.”ம…மது என்னைப் பாருடா…” இல்லை இது பிரமை இல்லை…அவள் கண்களைத் திறந்தாள்.உண்மையாகவே அவன் வந்திருப்பதைக் கண்டு அதிர்ந்தாள். வேதனை எல்லாம் கோபமாகக் கிளம்பியது. சட்டென்று கிளம்ப எத்தனித்த போது தடுத்தவனைக் கோபமாகப் பார்த்தாள்.
“ஏன் வந்தீங்க…செத்துட்டேனா இருக்கேனான்னு பாக்க வந்தீங்களா…”
“ம…து”
“ச்சீ…உங்க நினைவுகளைச் சுமக்குறது கூடப் பாவம்…நான் உங்க நிழல கூடப் பாக்க விரும்பல…”
“மது நான் என்ன சொல்ல வர்றேன்னு…”
“இனி ஒரு தடவை இப்படி வந்து நிக்காதீங்க…மீறி வந்தீங்கன்னா அடுத்து நீங்க என் பிணத்தொட தான் பேச வேண்டியிருக்கும்…இது சத்தியம்…வழியை விடுங்க…” என்று அவனை மேலே பேச விடாமல் நகரப் போனாள்.அதற்குள் அங்கிருந்த காவலாளி,” என்னம்மா..
என்ன இங்க பிரச்சனை…யார் இவர்… உனக்குத் தெரிஞ்சவரா…” என்றார் வெற்றிவேலை ஏற இறங்கப் பார்த்தவாறே
“இல்லங்க..எனக்கு யாரையும் தெரியாது…” என்று கூறி விட்டு விடுவிடுவென்று சென்றுவிட்டாள் மதுமதி.
“என்னைய்யா…பாக்க வெள்ளயும் சொள்ளயுமாத் தெரியுற…வேலையெல்லாம் வேற மாதிரியா இருக்கு…போ…இங்கெல்லாம் நிக்கக் கூடாது…”என்று தன் கையில் பிடித்திருந்த கம்பை ஆட்டி அவனை விரட்டினார்.அந்தக் காவலாளி.தேவனூரின் முடிசூடா மன்னன் வெற்றிவேல் மதுரையில் தன் காதலிக்காக அவமானப்பட்டான்.
மதுமதியின் சொல்லுக்கிணங்க அதற்குப் பிறகு அவளைச் சந்திக்க அவன் முனயவே இல்லை…அப்படியே இரண்டு வருடங்கள் உருண்டோடி விட்டன…
மனக்கண்களில் படமாக விரிந்த தனது கடந்த காலத்தைக் கண்டு அவளின் முகக் கண்கள் நீரைச் சொரிந்தன.வெற்றிவேல் தன்னைப் பழி வாங்கவே நிச்சயத்தை நிறுத்தினான் என்றே இன்று வரை நினைத்துக் கொண்டிருக்கிறாள் மதுமதி… கடந்த காலத்தின் காயத்தால் நிகழ் காலத்தை எதிர்கொள்ளத் தடுமாறிக் கொண்டிருக்கும் மதுமதி தன் மன்னவனைப் புரிந்து கொள்ளும் நாள் எந்நாளோ!
அன்று ஒரு புதிய செய்தியோடு வந்தார் குலசேகரன்.அவரது பால்ய நண்பரான ராஜன் தன் மகனுக்குக் கயலைப் பெண் கேட்டு நாளை மறுநாள் வரப் போவதாகத் தெரிவித்தார்.மாப்பிள்ளை துறையூரில் வசிப்பதாகவும் சொந்தமாக க்ரானைட் கம்பெனி வைத்திருப்பதாகவும் செல்வத்திற்கு ஒரு குறைவும் இல்லை என்றும் விளக்கினார்.இந்த செய்தியைக் கேட்டு அதிர்ந்து போனாள் கயல்.
சட்டென்று கதிரின் முகத்தைப் பார்த்தாள் அது எந்தச் சலனமும் இல்லாமல் அமைதியாக இருந்தது.இன்று இவனிடம் பேசி ஒரு முடிவுக்கு வந்தே தீர வேண்டும் என்று அவனைப் பின்தொடர்ந்தாள்.
“ அப்பா சொன்னதைக் கேட்டீகளா…”
“ம்ம்ம்…”
“அப்ப உங்களுக்கு முன்னாடியே இந்த விஷயம் தெரியுமா…”
“அந்த மாப்பிள்ளையைப் பத்தி விசாரிச்சுட்டு வந்ததே நான்தான்… கண்டதையும் நினைக்காம போய் அந்த மாப்பிள்ளையைக் கட்டிக்கிட்டு வாழற வழியைப் பாரு…”
அதைக் கேட்டுக் கொதித்துப் போனாள் கயல்.
“இதச் சொல்ல உங்களுக்கு வெக்கமா இல்ல…உங்க மனசுல என்னைய வச்சுக்கிட்டு எனக்கே மாப்பிள்ளை பாத்தீங்களா…இங்க பாருங்க மாமா… இந்தக் கயல லேசில நினைச்சிப்புடாதீங்க…நான் செத்தாலும் சாவேனே தவிர வேறு
ஒருத்தனுக்குக் கழுத்தை நீட்ட மாட்டேன்…”
“இதப் போயி அப்படியே உங்க அப்பாகிட்டயும் உன் அண்ணன்கிட்டயும் சொல்லு…” அவனின் இந்தப் பேச்சில் வாயடைத்துப் போனாள் கயல்.
“முடியாதுல்ல…அப்புறம் எதுக்கு இந்த வெட்டி ஆசை…இதைப் பாரு கயல்…அந்த மாப்பிள்ளை தங்கமானவரு…ஒரு உன்னைய நல்லபடியாகக் கண்ணுக்குள்ள வெச்சு பார்த்துக்குவாரு…அவரு தான் உனக்குப் பொருத்தமா இருப்பாரு…என் கிட்ட என்ன இருக்கு…உன்னக் கட்டிக்கிட்டா உன்னக் குடி வக்கக் காணி நிலம்கூட இல்ல…இந்தக் காதல் ஊதல் எல்லாம் பேச்சுக்குத் தான் நல்லாயிருக்கும்… நாளப்பின்ன கஷ்டம்னு ஒண்ணு வந்துட்டா காத்துல பறக்குற காகிதமா காணாமப் போயிரும்… நீ என் மேல உண்மையிலேயே பிரியம் வெச்சிருந்தா நான் சொல்றதைக் கேளு… நாளைக்கே நிச்சயம் பண்றதாத் தான் பேச்சு…அதுக்குத் தயாரா இரு…” சொல்லிவிட்டுக் கடமை முடிந்ததெனப் போய் விட்டான் கதிர்…மொத்தமாக உடைந்து போய்விட்டாள் கயல்…
‘அவ்வளவுதானா…எவ்வளவு எளிதாகச் சொல்லி விட்டு போய்விட்டான்…இவன் இல்லாத வாழ்க்கையை எப்படி வாழ முடியும் ஒரு நாளும் முடியாது…’ இப்படி நினைத்த கயல் தான் நாளை கதிரே அவளைத் திருமணம் செய்ய முன்வந்த போதிலும் அவனை மறுக்கப் போகிறாள் என்பதை அறியாதவளாய் சூளுரைத்தாள்.
பலவாறாகச் சிந்தித்தபடியே தன் மனபாரத்தை இறக்கி வைக்கக் கோவிலுக்குச் சென்ற கயல் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவே இல்லை…செய்தியறிந்து வெற்றி,கதிர்,குலசேகரன் என மூவரும் ஆளுக்கொரு புறமாகத் தேடிக் கொண்டிருந்தனர்…அவளோ சாவதானமாகக் குளியலறையிலிருந்து வெளிப்பட்டாள்…
“ஏபுள்ள கயலு…இம்புட்டு நேரமா எங்க போயிருந்த உன் அண்ணனும் அப்பாவும் ஊரு பூராமும் உன்னைய தேடி அலஞ்சுகிட்டு இருக்காக..ஏழு கழுத வயசாகியும் ஒரு பொறுப்பும் இல்ல…கூறும் இல்ல…”
மகளைக் கடிந்து கொண்டே கணவருக்கும்
மகனுக்கும் கயல் வந்துவிட்டதைக் கூறினார்..அனைவரும் வந்து விசாரித்த போது தன் தோழி வீட்டில் இருந்ததாகக் கூறினாள்..ஆனால் மதுமதிக்கு மட்டும் ஏதோ சரியில்லை என்று புரிந்தது…நாளை கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் என்று நினைத்தபடியே உறங்கப் போனாள்…
ஆனால் நடுநிசியில் “அடிப்பாவி மகளே…எங்களையெல்லாம் தவிக்க விட்டுட்டேயிடி…” என்ற அஞ்சுகத்தின் ஓலத்தைக் கேட்டு கீழே விரைந்து அங்கு வாயில் நுரை பொங்க மயங்கிக் கிடந்த கயலைப் பார்த்ததும் தான் கயலிடம் விசாரிப்பதை ஒத்திப் போட்டது மாபெரும் தவறு என்று மதுமதி உணர்ந்தாள்…
—- தொடரும்.
நாளை மதுரையம்பதியின் பாண்டிமாதேவி  மீனாட்சியின் திருக்கல்யாண வைபவம்…எல்லோருக்கும் இன்புற்றிருக்க ,துன்பமில்லாப் பெருவாழ்வு கிட்ட அங்கையற்கண்ணியை வணங்குகிறேன்…சென்ற அத்தியாயத்திற்கு ஆதரவு அளித்த அனைத்து நட்புக்களுக்கும் நன்றிகள்…உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்கும் பிரியா குமார்…
error: Content is protected !!