“கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்
உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு”
என்ற பாடல் ஒலிப்பெருக்கியில் வீடு முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்க பூக்களை சாமிப் படங்களுக்கு வைத்துக் கொண்டிருந்தார் அன்னபுரணி.ஆதிகேசவனின் மனைவி.
பூக்களை வைத்து முடித்து சாமி படங்களை ஒரு முறை ஆசைத்தீரப் பார்த்தவர் விளக்கேற்றினார்.பின்பு கண்ணை மூடிக் கொண்டு கடவுளிடம் தன் கோரிக்கைகளை வைக்க ஆரம்பித்தார்.மனு சற்று பெரியதோ?பத்து நிமிடங்கள் ஆகியும் அவர் கண்ணைத் திறக்கக் காணோம்.
அவருக்கு எல்லாம் கடவுள் தான்.பிடித்த விஷயங்கள் நடந்தாலும் சரி பிடிக்காத விஷயங்கள் நடந்தாலும் சரி அவர் நாடுவது கடவுளின் துணையை மட்டுமே!எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு பொறுத்துக்கொண்டு வாழும் இல்லத்தரசி!
பூஜை அறையில் இருந்து அவர் வெளி வருவதற்கும் வேலையாள் சுந்தரி பின்கட்டு வழியாக வீட்டிற்குள் நுழையவும் சரியாக இருந்தது.”சுத்தி கூட்டி வாசல் தெளிச்சாச்சா?”
என்றவர் பாலைக் காய்ச்ச அடுப்பில் வைக்க பாத்திரத்தைக் கழுவிக் கொண்டிருந்த சுந்தரி “ஆச்சுங்க அம்மா” என்றாள்.
“சரி நான் போய் கோலம் போட்டுட்டு வர்ற.நீ இந்தப் பால பார்த்துக்கோ” என்றவர் கோலம் போட முன் வாசலிற்கு சென்றார்.அந்தப் பெரிய வாசலிற்கு தகுந்தாற்போல் வளைத்து நெளித்து பெரிய ரங்கோலி போட்டவர் பத்து நிமிடங்கள் கழித்து நிமிர்ந்தார்.
சற்று வேக வேகமாக உள்ளே சென்றவர் சுந்தரி போட்டு வைத்திருந்த காப்பியை அவருக்கு எடுத்துச் சென்றார்.அவர் துரைசாமி!
அந்த வீட்டின் தலைவர்.எழுபது வயது ஆயினும் அவ்வீட்டைத் தன் கட்டுப்பாட்டில் இன்னமும் வைத்திருப்பவர்.
அவர் துணையாள் தமயந்தி இறந்து முப்பது வருடங்கள் ஆகிற்று.தமயந்தி இறந்ததும் சற்று ஒடுங்கியவர் பின்பு சில வருடங்களில் தன்னை திடப்படித்துக் கொண்டார்.
துரைசாமிக்கு நான்கு பிள்ளைகள்.மூத்தவர் வெங்கடாசலம்.பின்பு அருணாச்சலம்,ஆதிகேசவன்.நான்காவதாக கண்மணி.அவ்வீட்டின் ஒரே பெண் வாரிசு!
மாமனாரிடம் காபியைக் கொடுத்துவிட்டு வரும்பொழுது மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது.
சுந்த “என்னமா சமைக்கட்டும்?” என்று கேட்க “இரு அவங்க வரட்டும்.அதுக்குள்ள நீ வெங்காயம் உருச்சுறு” என்று சொல்லிவிட்டு அவர் வருகிறாரா என்று மேலே பார்த்தார்.
பின்பு சமையலறைக்குள் வந்தவர் பிள்ளைகள் கொண்டு போவதற்கு தண்ணீரை பாட்டிலில் நிரப்பி கழுவி வைத்திருந்த பாத்திரங்களை எல்லாம் உரிய இடத்தில அடுக்கினார்.
மணி ஆறு பத்து ஆகிவிட இன்னும் அவர் வந்த பாட்டைக் காணோம்.இனி விட்டாள் நேரமாகிவிடும் என்று உணர்ந்தவர் “நீ இட்லி ஊத்தி வெங்காய சாம்பார் வெச்சுரு சுந்தரி”என்றுவிட்டு பிள்ளைகளை எழுப்பச் சென்றார்.
அவர் மேலே செல்ல படி ஏறவும் நளினி கீழே வரவும் சரியாக இருந்தது.நளினி –வெங்கடாசலத்தின் மனைவி,அவ்வீட்டின் மூத்த மருமகள்.
அவர் வருவதைப் பார்த்து அங்கேயே நின்ற அன்னபுரணி ”டைம் ஆயிருச்சுன்னு இட்லி சாம்பார் செய்ய சொல்லி சொல்லிட்டேன்” என்று சொல்ல “மணி இப்ப தான ஆறு?எல்லாரும் எட்டு மணிக்குத் தான சாப்பிட வருவாங்க?” என்றவர்
சுந்தரியிடம் சென்று “பூரி மசால் செஞ்சிரு” என்றுவிட்டுத் தன் கணவனுக்கும் பெண்ணிற்கும் காபி கலக்கினார்.அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த அன்னபுரணி ஒன்றும் பேசாமல் மேலே சென்றார்.
வெங்கடாசலம்-நளினி தம்பதியருக்கு இரண்டு பெண் பிள்ளைகள்.மூத்தவள் ராகினி.நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துவிட்டனர்.
அடுத்து ராகவி,இருபத்தி நான்கு வயது மங்கை.படித்துவிட்டு இப்பொழுது வீட்டில் இருக்கிறாள்.அவளுக்குப் பெண் பார்க்கும் படலம் இப்பொழுது தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.
அன்னபுரணி பிள்ளைகளை எழுப்பிவிட்டு கீழே வந்தபொழுது பொன்மணி காப்பி கலக்கிக் கொண்டிருந்தார்.
பொன்மணி அருணாச்சலத்தின் மனைவி.அவர்களுக்கு ஒரு பெண் பிரகதி,இருபத்தி மூன்று வயது.அவளும் படித்து முடித்துவிட்டு வீட்டில் தான் இருக்கிறாள்.
பொன்மணி காப்பி கலக்கிக் கொண்டு சென்றதும் “இவங்க பூரியோட பொங்கல் சட்னி சாம்பார் செய்ய சொன்னாங்க ம்மா” என்ற சுந்தரி வேலைகளை செய்ய ஆரம்பித்தார்.
சுந்தரிக்கு ஒரு தலையசைப்பை பதிலாகக் கொடுத்தவர் “அபிக்கு இன்னைக்கு ஏழரை மணிக்கு பஸ் வந்துரும்.இது எல்லாம் செய்ய நேரம் ஆகிரும்.அதனால நான் அவளுக்கு மட்டும் இட்லி ஊத்துற” என்றவர் மாவை குளிர்சாதனப்பெட்டியில் இருந்து எடுத்தார்.
நளினிக்குத் தெரியும் இன்று அபி ஏழரை மணிக்கு கல்லூரி செல்ல வேண்டும் என்பது.இருந்தாலும் வேண்டும் என்றே தான் அவர் தாமதமாக எழுந்து வந்ததே.அவர் வேண்டுமென்றே செய்கிறார் என்று அன்னபுரணிக்கும் தெரியும்.
தெரிந்தும் கூட அவர் ஒன்றும் சொல்ல மாட்டார்.அதுதான் அவர்!சகிப்புத்தன்மையின் இமயம்!பொறுமையின் சிகரம்!ஆனால் அவரின் தவப்புதல்வி அபியோ அதற்கு நேர்எதிர்!
அபி என்கிற அபிஸ்ரீ!பத்தொன்பது வயது அரிவை(பெண்).பொறுமை அவள் பெயரைக் கேட்டதும் பத்தடி தூரம் தள்ளி நிற்கும்!அவ்வளவு பொறுமைசாலி!வயதுக்கேற்ற துடுக்குத்தனமும் குறும்புத்தனமும் உடையவள்.
இன்று தான் கல்லூரியில் காலடி
எடுத்து வைக்கப் போகிறாள்.கோவை பி.எஸ்.ஜியில் டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் எடுத்திருந்தாள்.அவள் தந்தை பி.எஸ்.ஜியில் தான் படித்தாக வேண்டும் என்று சொல்லிவிட இவள் மதிப்பெண்ணிற்கு அந்த டிப்பார்ட்மென்ட் தான் கிடைத்தது.
கல்லூரி செல்ல அறையில் தயாராகிக் கொண்டிருந்தவள் பேபி பிங்க் நிற குர்தாவில் ஆங்கங்கே தங்க நிற மணிகள் தொங்க அதே தங்க நிறத்தில் துப்பட்டா அணிந்திருந்தாள்.வாயில்
“ஹம்மா…ஹம்மா…ஹம்ம…ஹம்ம.. ஹம்மா”என்ற பாடலை முணுமுணுத்துக்கொண்டே கூந்தலை அலட்சியமாக பின்னளிட்டவள் நெற்றியில் போட்டு வைத்துக் கொண்டு தான் போச்சில் வாட்சை எடுத்துக் கையில் கட்டினாள்.
இவள் கர்ண கொடூரமாக பாடுவதைக் கேட்க சகிக்காமல் அறையில் தூங்கிக் கொண்டிருந்த அபிநவ் “எரும மாடே!காலங்காத்தால ஏன் டி இப்படி கத்தித் தொலையுற?மனுஷன நிம்மதியா தூங்க விடமாட்டியா?” என்று போர்வையை விலகிக் கொண்டு கேட்க
“அப்படித்தான் பாடுவேன்.என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ…”என்றுவிட்டு மீண்டும் “ஹம்மா…ஹம்மா”என்று கத்த “அம்மாஆஆஆஆஆ” என்று கத்தினான் அபிநவ்.
ஆதிகேசவன் அன்னபுரணியின் இரண்டாவது மகன் அபிநவ்.அபிஸ்ரீயைவிட ஒரு வயது இளையவன்.அக்காவும் தம்பியும் எப்பொழுதும் எலியும் பூனையும் தான்.இருவரும் சண்டைப் போடாமல் ஒரு மணி நேரம் ஒன்றாக இருந்தாலே உலக அதிசயம் தான்!
அபிநவ் கத்தியவுடன் நளினி “ச்ச…இந்த பையனுக்கு இதே வேலையா போச்சு.எப்பப் பார்த்தாலும் கத்திக்கிட்டு.கொஞ்சமாச்சு பையனையும்,பொண்ணையும் பொறுப்பா வளர்த்திருந்தா தான.எப்பப் பார்த்தாலும் சண்டை போட்டுட்டு அம்மா…அம்மான்னு கத்திக்கிட்டு” என்று சொல்ல அன்னபுரணி ஒன்றும் பேசாமல் மாடி ஏறினார்.
அறைக்குள் சென்றவர் “என்ன ஆச்சு?” என்று கேட்க அபிநவ் “இந்த எரும நான் தூங்கிட்டு இருக்கப்ப கர்ண கொடூரமா பாடி டார்சர் பண்ணற” என்று சொல்ல
“எருமைன்னு சொல்லாத தம்பி.அவள் உன் அக்கா.ஸ்கூலுக்கு டைம் ஆச்சுல எந்திருச்சு கிளம்பு” என்றவர் “நீ கீழே சாப்பிட வா” என்று ஸ்ரீயிடம் சொல்லிவிட்டுச் சென்றார்.
அன்னபுரணி வெளியே சென்றவுடன் ஸ்ரீயின் முதுகில் ஓங்கி ஒரு அடிவைத்தவன் ஓடிச் சென்று குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.ஸ்ரீ பின்னாலேயே ஓடிச் சென்று குளியலறை கதவை டோம் டோம் என்று தட்டி “இன்னைக்கு ஈவ்னிங் அப்பா வரட்டும் சொல்லற.அப்ப இருக்கு” என்றுவிட்டு தன் பையை எடுத்தாள்.
ஐந்தரை அடி உயரத்தில் மாநிறமாக இருந்தவள் படிகளில் குதித்து இறங்கிக் கொண்டிருந்தாள்.அவள் குதித்து குதித்து வந்ததில் தொடை வரை நீண்டிருந்த கூந்தல் முன்னால் வருவதும் பின்னால் போவதுமாக இருந்தது.
பொன்மணியும் நளினியும் கண்மணியிடம் மேலே என்ன நடந்தது என்று கேட்டுக் கொண்டிருக்க ஸ்ரீயைப் பார்த்ததும் வாயை மூடிக்கொண்டனர்.காரணம் ஸ்ரீயிடம் வாயைக் கொடுத்தாள்
அவள் இவர்களின் மூக்கை உடைத்துவிடுவாள்.அதற்கு பயந்துகொண்டே இவள் இருக்கும் பொழுது அன்னபுரனியிடம் வம்பு வளர்க்க மாட்டார்கள்.
காலை உணவை உண்டவள் சென்னை சென்றிருந்த தன் தந்தைக்கு அழைத்து “ம்ம்ம் சாப்டேன் ப்பா…ரெடி ஆயிட்ட.காலேஜ் போனதும் எனக்கு தனி ரூம் தரேன்னு சொன்னிங்க.அந்த தடி மாடு வேற எப்பப் பாத்தாலும் என்கூட சண்டை போடுறான்.எனக்கு தனி ரூம் வேணும்” என்று தந்தையிடம் சிணுங்க அவர் சொன்ன பதிலில் காலை கீழே உதைத்தவள் “அது எல்லாம் தெரியாது எனக்கு வேணும்” என்று பேசிக் கொண்டிருக்க பஸ்ஸின் ஹாரன் வீட்டின் முன்பு கேட்கவே போனை வைத்தவள் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு வெளியே சென்றாள்.
கல்லூரி வாழ்க்கையைப்பற்றி பல கனவுகள் வைத்திருந்தவள் மிகவும் பரவசமாக உணர்ந்தாள்.பின்னால் இருந்த ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தவள் “காலேஜ் போறோம்…மாஸ் காட்றோம்.இனி கண்டிப்பா வார வாரம் பிரிண்ட்ஸ் கூட அவுட்ங் தான்” என்று பலவித யோசனைகளுடன் பயணம் செய்து கொண்டிருந்தாள்.இனிது இனிது படத்தின் கட்சிகள் எல்லாம் மனதில் ஓடிக்கொண்டிருந்தன.
கல்லூரிக்குள் பேருந்து நுழைந்ததும் தன் வகுப்பைத் தேடி உள்ளே நுழைந்தவள் நடு இருக்கையில் ஒரு பெண் அமர்ந்திருக்க அவளுடன் சென்று அமர்ந்து கொண்டாள்.
இருவரும் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டு பின்பு பொதுவாக பேச ஆரம்பித்து விட்டனர்.
மணி அடித்தவுடன் சொட்டை தலையுடன் தொந்தியைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தவர் “குட் மார்னிங் எங் பிபிள்!நைஸ் டூ சீ யூ ஆல் ஹியர்”என்று ஒரு மணி நேரம் மொக்கை போட கேட்டுக் கொண்டிருந்தவர்கள் ‘போதும் விட்டிரு டா சாமி’ என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தனர்.
அவர் சென்றவுடன் பாதி பேர் பெஞ்சில் தலை வைத்து படுத்துக்கொள்ள சிலர் “வை பிளட் சேம் பிளட்” என்ற ரீதியில் அமர்ந்து கொண்டிருந்தனர்.அடுத்ததாக வந்த ப்ரோபசர் முதல் நாளே பாடத்தை நடத்த ஆரம்பித்து விட அதுவும் மிகவும் போரிங்காக இருந்துவிட எல்லோரும் தூங்கி வழிந்து கொண்டிருந்தனர்.
இடைவேளை விட்டதும் தன் நண்பர்களுடன் வகுப்பை விட்டு வெளியே வந்தாள் ஸ்ரீ.இந்த இரண்டு மணி நேரத்தில் பிரியா,சிந்து,திவ்யா,ஸ்ரீ நால்வரும் நன்றாக ப்ரொபசரை ஓட்டி பிரிண்ட்ஸ் ஆகி விட்டனர்.
“அப்பா சாமி இந்த ஆப்பக் கல் மண்டையன் கிளாஸ்ல உட்காறதுக்கு ஸ்கூல்ல எங்க பிசிக்ஸ் மேம் கிளாஸ்ஸே பரவாயில்லை டி” என்று திவ்யா சொல்ல “காலேஜ் எப்படி எப்படியோ இருக்குமுன்னு கனவோட வந்தேன் டி.பட் முதல் நாளே இப்படியா?” என்ற ஸ்ரீ உதட்டை பிதுக்க அதற்குள் கேண்டீன் வந்திருந்தது.
உள்ளே சென்று மில்க்ஷேக் ஆர்டர் செய்தவர்கள் ஓரமான இருக்கையில் அமர்ந்து கொண்டு கதை பேசத் தொடங்கினார்கள்.இவர்கள் கதை பேசுவதைப் பார்த்த இரு ஜோடி கண்கள் ஸ்ரீயிடம் பார்வையை நிலைக்கச் செய்தது.
அன்றைய நாள் அப்படியே ஓட வகுப்புகள் முடிவடைந்தன.
வகுப்புகள் முடிந்து அரை மணி நேரம் கழித்துத் தான் பஸ் எடுக்கப்படும் என்பதால் ஸ்ரீ திவ்யாவுடன் மரத்தடியில் நின்று பேசிக்கொண்டிருந்தாள்.திவ்யா வேறு பேருந்தில் செல்பவள்.சிந்துவும்,ப்ரியாவும் வண்டியில் கல்லூரிக்கு வருவதால் அவர்கள் சென்று விட்டனர்.
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க அருகில் வந்த பெண் “இதுல யாரு அபிஸ்ரீ?” என்று கேட்க “நாந்தான்” என்றாள் ஸ்ரீ.”அங்கே இருக்க பைக் ஸ்டாண்ட்கிட்ட வா” என்று சொல்லிச் செல்ல ஸ்ரீ திவ்யாவுடன் அங்கு சென்றாள்.
அங்கே கூட்டமாக சிலர் நின்றிருக்க நடுவில் நின்றிருந்தவனைப் பார்த்தவுடன் புன்னகையுடன் “ஹாய் சீனியர்” என்று ஸ்ரீ சொல்ல மெல்ல தன் முத்துப் பற்கள் தெரிய சிரித்தான் அவன்!அவன் கைலாஷ்!
ஆறு அடி உயரம்!நல்ல வெண்மையான தேகம்!அகன்ற தோள்பட்டை!நல்ல பிட்டனா(fit) உடல்!பார்ப்பவர்களை வசீகரிக்கும் தோற்றம்!ஆக மொத்தம் அவனொரு ஆணழகன்!
“ஹலோ ஸ்ரீ!வெல்கம் டூ அவர் காலேஜ்” என்று கைகுலுக்க “உங்களை நான் இங்க பார்பேன்னு எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை” என்றாள்.திரும்பவும் தன் வசீகரிக்கும் சிரிப்பு ஒன்றை உதிர்த்தவன் ”உன்னை மார்னிங் கேன்டின்ல பார்த்தேன்.அங்கே பேச முடியலை.அப்புறம் என்ன டிப்பார்ட்மண்ட்?” என்று கேட்க
“டெக்ஸ்டைல் இன்ஜினியரிங்” என்றாள்.
“நான் போர்த் இயர் சிவில்” என்றவன் திவ்யாவை கேள்வியாக பார்க்க
“இவள் என்னோட பிரின்ட் திவ்யா” என்று அவனுக்கு அறிமுகப்படுத்தியவள் “இவங்க என்னோட ஸ்கூல் சீனியர்.பேரு கைலாஷ்” என்றாள் திவ்யாவிடம்.
“காலேஜ் பஸ்லையா வர?” என்று கைலாஷ் கேட்க “ம்ம்ம்…ஆமா” என்றாள்.பின்பு அங்கிருந்த நண்பர்கள் பட்டாளத்தை அவளுக்கு அறிமுகப்படுத்தினான்.
“உனக்கு ஏதாச்சும் டவுட்ஸ் இல்லை வேற ஏதாச்சும் வேணும்னா என்கிட்ட தயங்காம கேளு” என்றவன் சொல்ல தலையசைத்தவள் அவர்களிடமிருந்து விடை பெற்றாள்.
சற்று தூரம் சென்றதும் திவ்யா “கைலாஷ் பாக்க செம்மையா இருக்கான்ல” என்று ஸ்ரீயிடம் சொல்ல “ம்ம்ம்…எங்க ஸ்கூல்ல கூட நிறைய பேர் அவங்கள சைட் அடிப்பாங்க” என்றாள்.
“பார்டா அப்ப நீ அடிச்சது இல்லை?” என்று திவ்யா புருவம் உயர்த்தி கேட்க “இல்லை” என்று தலையசைத்தவள் “ஸ்கூல்ல என்னோட ஹவுஸ் கேப்டன் இவங்க.சோ பேசிருக்கேன்.அப்ப அவங்க டவல்த் படிச்சுட்டு இருந்தாங்க.அப்புறம் அவங்கள நான் பார்க்கவே இல்லை இப்ப தான் பார்க்குற” என்றவள் சொல்ல,
“செம்ம ஹன்ட்சம்மா இருக்கான்டி” என்ற திவ்யாவை பார்த்து சிரித்த ஸ்ரீ “நாளைக்கு வேணும்னா நான் போய் அவங்ககிட்ட என் பிரின்ட்க்கு உங்க மேல இண்ட்ரஸ்ட்னு சொல்லட்டுமா” என்று ஸ்ரீ கண்ணடித்துக் கேட்க கையெடுத்து கும்பிட்டவள்
“நீ ஆணியே புடுங்க வேண்டாம்.நம்பர் மட்டும் வாங்கிக் கொடு போதும்” என்று சொல்ல தலையாட்டியவள் திவ்யாவிடம் விடைபெற்று தன் பேருந்திற்குச் சென்றாள்.செல்லும் அவளையே சற்றுத் தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்தான் கைலாஷ்!
தொடரும்….