TT-12

அத்தியாயம் – 12:

இரவு முழுவதும் மதியை எழுப்பி சோர்ந்துபோய், அவரின் பக்கத்திலேயே உறங்கிவிட்டான் செழியன்.

கவிதா துளியும் உரங்கமால், யாருடனும் பேசாமல், சாப்பிடாமல் மூலையிலே உட்கார்ந்திருந்தாள் அம்மாவை பார்த்தவண்ணம் இரவு முழுவதும். கண்களில் கண்ணீர் வடிந்துகொண்டே இருந்தது.

அடுத்த நாள் செழியனின் பிறந்தநாள். அதிகாலை வேலையில், மதியின் உடல் தகனம் செய்ய எடுத்துச்செல்லப்பட்டது.

செழியன் ஒரே மகன் என்பதால், ஸ்வாமிநாதனுடன் அவனையும் அழைத்துச்சென்றனர். செழியனுக்கு ஒன்றும் புரியவில்லை.

உடல் மேல் தகனம் செய்வதற்கு பொருட்களை வைக்க, பதறி ஓடிச்சென்று முதலில் தட்டிவிட்டான். அவனை வலுக்கட்டாயமாக அவன் சித்தப்பா விஷ்வநாதன் பற்றிக்கொண்டார்.

அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை தாயின் உடலில் தீமூட்டப்பட்டபோது. கத்தி அழுதான் வேண்டாம் என. திமிறிச்சென்றான் எரியும் உடல் பக்கத்தில்.

அனைத்து சடங்குகளும் முடிந்து வீடு திரும்ப, இப்போது செழியனும் கவிதவைப்போல செயலற்றிருந்தான். யாருடனும் பேசவில்லை.

இருவருக்கும் உணவு கொடுக்க மிகவும் சிரமப்பட்டார் மங்களம்.

ஓரிரு நாட்கள் சென்றபின், ‘இப்படித்தான் இனி வாழவேண்டும்… எதுவும் மாறப்போவதில்லை. அம்மா வரப்போவதே இல்லை’ என்று செழியன் புரிந்துகொண்டான்.

காரியம் அனைத்தும் முடிந்த பின், செழியனும் கவிதாவும் பள்ளிக்குப் போக ஆரம்பித்தனர்.

ஒருநாள் மாலை பள்ளியில் இருந்து திரும்பிய இருவரும், சித்தியின் வீட்டிற்கு சென்று மாலை உணவை சாப்பிட்டுவிட்டு, படிக்க உட்கார்ந்தனர்.

கவிதா ஏதோ யோசனையுடனே இருக்க… “என்னக்கா ஆச்சு?” என கேட்டான் செழியன்.

“செழியா… நமக்கு புது சித்தி வந்துடுவாங்களா டா? என் ஃபிரண்ட்ஸ் சொல்றாங்க, அப்பா புது சித்தி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுவாங்களாம். அவங்க அம்மா போட்டோ’வ தூக்கி மேல போட்டுவாங்களாம். நம்மள திட்டுவாங்களாம்… அடிப்பாங்களாம். ஹாஸ்டல் கூட அனுப்பிடுவாங்களாம்” என்றாள் கவலையுடன்.

“அப்படியெல்லாம் இருக்காது கா. நம்ம நைட் அப்பாட்ட பேசலாம்” என்றான் செழியன்.

அன்றைய இரவு… செழியன் அவன் எழுதிய டைரியை அப்பாவிடம் காட்டிவிட்டு, அவரின் ஒருபக்கம் கவிதாவும், இன்னொரு பக்கம் அவனும் படுத்திருக்க…  கவிதா ‘கேள்’ என்பதுபோல தம்பியிடம் சைகையில் சொன்னாள். அவனும் ஆரம்பித்தான்.

“அப்பா… நம்ம வீட்டுக்கு புது சித்தி வந்துடுவாங்களா பா?” என்றதும் அதிர்ந்து ஸ்வாமிநாதன் அவனைப்பார்த்தார்.

“அக்கா ஃபிரண்ட்ஸ்’லாம் சொன்னாங்களாம்… புது சித்தி அம்மா போட்டோவை எடுத்துடுவாங்கன்னு. அவங்ககிட்ட அத மட்டும் எடுக்க வேணாம்னு சொல்றீங்களா? அக்கா பாவம் பா. ரொம்ப பயப்படறா. என்னை அடிச்சா கூட பரவால்ல. நான் வாங்கிக்கறேன்” என்றான் தந்தையை பார்த்து.

ஸ்வாமிநாதனுக்கு கண்கள் கலங்கிவிட்டது.

விட்டதைப் பார்த்தவாறு… “நம்ம வீட்டுக்கு யாரும் வரமாட்டாங்க டா செழியா. கவி… நீ பயப்படாத டா. அப்பா யாரையும் கூட்டிட்டு வரமாட்டேன். எனக்கு நீங்க போதும். உங்களை நல்லா படிக்கவைக்கணும் அது தான் அப்பாக்கு இப்போ முக்கியம். இதெல்லாம் யோசிச்சு நீங்க படிப்பை விட்டுடாதீங்க. அம்மா என்ன சொல்லிருக்கா… படிச்சு நல்ல வேலைக்கு போகணும்னு இல்லையா. அத மறந்துடாதீங்க” என்றார் இருவரின் தலையை கோதியவண்ணம்.

இப்போதுதான் இருவருக்கும் நிம்மதி வந்தது. ‘புது சித்தி வரமாட்டார் என்று அப்பாவே சொல்லிவிட்டார்’ என.

இப்படியாக ஒரு சில நாட்கள் நகர்ந்தது. மாலை நேரம் சித்தப்பா வீட்டிற்கு இருவரும் சென்றுவிடுவார்கள். ஸ்வாமிநாதன் வேலை முடித்து இரவு வந்து அழைத்துச்செல்வார்.

அப்படி ஒருநாள் அழைக்க வந்தபோது அங்கே ‘மதி முன்னமே சொன்ன வேலு’ அவர்கள் வீட்டில் இருந்தான். கவிதாவுடன் அவன் பேசிக்கொண்டிருக்க, செழியன் படித்துக்கொண்டிருந்தான்.

அதைப்பார்த்ததும் மதி சொன்ன அறிவுரை நினைவிற்கு வர, தம்பியிடம் இதுகுறித்து பேசலாமா என யோசித்தார். பின் இது அவர்கள் வீட்டில் பிரச்சனையை உருவாக்கிவிடும் என நினைத்து அதை தவிர்த்தார்.

பெண்ணை வீட்டில் வைத்திருப்பது… அதுவும் தாயில்லாமல், துணைக்கு யாருமில்லால் வைத்திருப்பது மிகவும் ஆபத்துக்குரியது என நினைத்து அவளை விடுதியில் சேர்க்க முடிவு செய்தார்.

அதற்கு பணம் தேவைப்பட்டது. இரவு பகல், வார இறுதி என பாராமல் வேலைப்பார்த்து, தேவையான பணத்தை சேர்த்து கவிதாவை விடுதியில் சேர்க்க ஆயத்தமானார்.

கவிதாவிடம் அதுகுறித்து சொன்னபோது… “என்னை ஹாஸ்டல் அனுப்பிட்டு புது சித்தியை கூட்டிட்டு வரப்போறீங்களாப்பா?” என்றாள் வெடுக்கென.

அந்த பேச்சில் கோபமுற்ற ஸ்வாமிநாதன், “என்ன பேச்சு இதெல்லாம் கவி?” என கத்த, அவள் சித்தப்பா… “அண்ணா நாங்க தான் இருக்கோமே பார்த்துக்கமாட்டோமா? எதுக்கு இப்போ ஹாஸ்டலெல்லாம்” என்று உதவிக்கரம் நீட்டினார்.

“இல்ல விச்சு. விருந்தும் மருந்தும் நாலு நாளைக்கு நல்லது. நாள் ஆக ஆக அது தொல்லையா மாறிடும். அந்த சங்கடத்தை நான் தர விரும்பல. மதி ஒருநாளைக்கும் இதை ஒதுக்கமாட்டா. அவளுக்கு உதவின்னு யார்கிட்டயும் கேட்கறது பிடிக்காதுடா. இப்படி பேசறேனேன்னு தப்பா எடுத்துக்காத. என்ன மன்னிச்சுடு” என அப்படியே முடித்தார் அந்தப் பேச்சை.

கவிதாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கத்தி அழுதாள். அடம் பிடித்தாள். ஸ்வாமிநாதன் அவளை சமாதானம் செய்தாரே தவிர, அவர் முடிவில் திடமாக இருந்தார்.  

செழியனுக்கோ அதற்கு மேல் வருத்தம்… கோபம். அம்மா சென்றபின் அக்கா தான் என்று இருந்தான். இப்போது அவளை… அதுவும் வெகு தூரம் தள்ளி இருக்கும் ஹாஸ்டலுக்கு அப்பா அனுப்ப முடிவு செய்தது அழுகையாக வந்தது.

அவனும் கெஞ்சினான். ஆனால் பயனில்லை.

இறுதி தேர்வுகள் முடிந்த பின், கவிதாவை தயார் செய்தார் விடுதிக்கு அனுப்ப.

செழியன் யாரிடமும் பேசவில்லை. அழுகவில்லை. கவிதா கெஞ்சியும் அவளுடன் பேசவில்லை. கவிதாவை விட்டுவிட்டு வர அவனையும் அழைத்தார் ஸ்வாமிநாதன். ஆனால் அவன் மறுத்துவிட்டான்.

கவிதாவும் சென்றுவிட்டாள். தனிமரமாக நின்றான் செழியன். அவன் துணை அவன் எழுதும் டைரி மட்டுமே. வருத்தம், அழுகை, கோபம், ஆதங்கம் என அனைத்தையும் அதில் கொட்டித் தீர்த்தான்.

முன்பெல்லாம் எழுதியது சரியாக உள்ளதா என தந்தையிடம் கேட்பான். கவிதாவை அவர் அனுப்ப முடிவு செய்தபின், நிறுத்துக்கொண்டான். அவருக்கு இருந்த வேலை பளு, அவரையும் மறக்கச்செய்தது.

இரண்டு வேலை எடுத்துப் பார்த்தார் ஸ்வாமிநாதன். கூடவே கல்லூரியில் வேலை கிடைப்பதற்கு தேவையான தேர்வுகளையும் எழுத ஆயத்தமானார்.

காலை அவனை பள்ளிக்கு அனுப்பியபின், இரவு படுக்கும் போதுதான் மறுபடியும் பார்ப்பது.

செழியனுக்கு காலை, மதியம், மாலை உணவு என மங்களம் செய்துகொடுத்தார். அதுவும் மிகவும் வற்புறுத்தி ஸ்வாமிநாதனிடம் சம்மதம் பெற்றார். அவரும் சில நாட்கள் மட்டுமே என சொல்லியிருந்தார்.

செழியன் இருந்த மனநிலையில் யாரிடமும் அதிகம் பேசவேயில்லை. அமைதியாக இருந்தான்.

மங்களம் மகன் விவேக்கும் அதிகம் செழியனுடன் பேசவில்லை. விவேக் செழியனை விட இரண்டு வயது பெரியவன். கவிதாவை விட இரண்டு வயது இளையவன்.

ஒரு நாள் வேலு விவேக் வீட்டிற்கு வந்தபோது, செழியனுக்கு அவன் சித்தி வற்புறுத்தி உணவு கொடுத்துக்கொண்டிருக்க, விவேக் அவனே சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

அதைப் பார்த்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வேலு, மதியின் மேல் இருந்த காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, தேவையில்லாமல் விவேக்கை ஏவிவிட்டான்.

அதன் விளைவு… சில நாட்களுக்குப் பின்…

செழியன் படித்துக்கொண்டிருக்கும் போது, விவேக் அவனிடம்… “நீ உன் வீட்ல இருக்கவே மாட்டயா? இங்கயே தான் இருப்பயா?” என கேட்க… செழியன் சட்டென அவனை பார்த்தான். கண்கள் கலங்கிவிட்டது. இருந்தும் எதுவும் பேசாமல் தலைகுனிந்து கொள்ள, அதில் இன்னமும் கோபமுற்ற விவேக்…

“என் அம்மா எனக்கு மட்டும் தான். உனக்கு இல்ல. என் அம்மாக்கு என் மேல தான் பாசம், உன் மேல இல்ல. சும்மா பாவமேன்னு உன்ன பார்த்துக்கறாங்க” என்றான். செழியன் நிமிரவேயில்லை. கண்களை மட்டும் துடைத்துக்கொண்டான்.

ஏனோ அவன் கைகளில் நடுக்கம். கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாக இருந்தான்.

விவேக் விடாமல்… “பார்க்கறயா… என் அம்மாக்கு என் மேல தான் பாசம்னு?” என்றவன் சில நிமிடங்கள் கழித்து திடீரென சத்தமாக அலறினான்.

செழியன் பதறிக்கொண்டு ‘என்ன ஆயிற்று’ என்று அவன் அருகே சென்றவுடன், விவேக் கீழே விழுந்து… “வேணாம் செழியா” என கத்தினான்.

அதற்குள் மங்களம் அங்கு வந்துவிட்டார்.

தன் மகன் கீழே விழுந்து, வலியால் துடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து, பதட்டத்துடன் என்ன ஆயிற்று என அவனை தூக்கிக்கொண்டே கேட்க, விவேக் நிற்கவே முடியாதது போல நடித்து…

“இவன் கிட்ட கலர் பென்சில் கேட்டேன் மா. தரமாட்டேன்னு ஃபோர்ஸ்’ஸா தள்ளி விட்டுட்டுட்டான். ஐயோ கால் ரொம்ப வலிக்குதே” என்று கத்தி அழுதான்.

இதைக் கேட்டவுடன் செழியனுக்கு அதிர்ச்சி. முன்னமே கலங்கியிருந்த கண்களில் இப்போது அழுகை. விவேக்கையும் மங்களத்தையும் மாறி மாறிப் பார்த்தான். ‘நான் ஒன்றும் செய்யவில்லை’ என்று சொல்ல கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

‘சித்தி நம்புவார்களா?’ என அந்த சின்ன மனம் படபடப்புடன் அவர் முகம் பார்த்திருந்தது.

மங்களமும் விவேக்கை சமாதனப்படுத்தி, ‘எங்கு வலி’ என கேட்டுக்கொண்டே… செழியனைப் பார்த்து… “என்ன செழியா… உன் அண்ணா தானே. அவன் கேட்டா குடுக்க மாட்டயா? இனிமே இப்படி தள்ளி விடக் கூடாது. பாரு வலில அழறான்” என்றவர் மகனை கைத்தாங்கலாக அழைத்துச்சென்றுவிட்டார்.

ஆனால் செழியன்?! அதே இடத்தில் சலனமின்றி நின்றான். அழுகை மட்டும் நிற்கவில்லை. ‘தன் அம்மாவோ அக்காவோ இருந்திருந்தால் இந்த நிலைமை தனக்கு வந்திருக்குமா?’ என நினைத்து அந்த பிஞ்சு நெஞ்சம் வலியால் துடித்தது.

வீட்டில் இப்படி என்றால், பள்ளியில் வேறு விதம். இத்தனை நாட்கள் அவனுக்கு இருந்த மனநிலையில், யாருடனும் பேசாமல், தன்னை சுற்றி என்ன நடக்கிறது என சரியாக கவனிக்காமல் இருந்தான்.

ஆனால் அன்று வகுப்பில் மற்ற மாணவர்களை பார்த்தான். முந்தைய வருடம் அவனுடன் படித்தவர்கள் தான். நன்றாக பேசியவர்கள் தான். ஆனால் தற்போது யாரும் அவனுடன் பேசவில்லை. அவனாக சென்று பேசினாலும், அவனை தவிர்த்தார்கள்.

உணவு சாப்பிடும்போது கூட தனியாகவே சாப்பிட்டான். ‘ஏன் தன்னை தவிக்கிறார்கள்’ என்று தன் கடந்த வருட நண்பனிடம் கேட்ட போது… “உன்கூட பேசினா உன்னப்போலவே எங்களுக்கும் அம்மா இல்லாம போய்டுவாங்கன்னு விபின் சொன்னான். அதுனால நாங்க யாரும் உன்கிட்ட பேசமாட்டோம் பா” என்றுவிட்டு அந்த சிறுவன் சென்றுவிட்டான்.

சொல்லத்தெரியாத ரணம் மனதில் உருவானாலும்… எதிர்த்து வாதிட, போராட சக்தியில்லை என நினைத்து, செழியனும் யாரிடமும் பேசாமல் ஒதுங்கிவிட்டான்.

ஓரிரு நாட்களுக்குப்பின், “அப்பா. நான் ஸ்கூல் முடிஞ்சு வந்து, இனி நம்ம வீட்லயே இருக்கட்டா பா?” தந்தையின் பக்கத்தில் படுத்திருந்த செழியன் கேட்டான்.

“என்ன ஆச்சு செழியா? யாராச்சும் ஏதாவது சொன்னாங்களா?” பதட்டத்துடன் அவர் கேட்க…

“இல்ல இல்லப்பா. எனக்கு நம்ம வீட்லயே இருந்து பழகிடுச்சு. நான் சமத்தா இங்கயே இருக்கேன். ஒகே வா ப்பா” என்று தன்மையாக பேசினான்.

“சரிடா. ஆனா யாரு சாயந்தரம் உனக்கு பால் பிஸ்கட் தருவா?” ஸ்வாமிநாதன் யோசித்துக்கொண்டே கேட்டவுடன், “நீங்க சொல்லிக்குடுங்க பா. நானே பார்த்துக்கறேன்” என்றான்.

‘ஏதோ நடந்துள்ளது ஆனால் மகன் தன்னிடம் சொல்லாமல் தவிர்க்கிறேன்’ என்று புரிந்தது அவருக்கு. அவரும், தம்பி வீட்டில் ‘உதவி செய்கிறோம்’ என்று சொன்னபோது மனமில்லாமல் தான் சம்மதித்திருந்தார்.

அடுத்த நாள் காலை, மகனை அழைத்து எப்படி பால் சூடு செய்து குடிக்க வேண்டும் என சொல்லிக்கொடுத்து, அவனுக்கு உணவு செய்து தந்து பள்ளிக்கு அனுப்பினார்.

விஷயத்தை விஷ்வநாதனிடமும் மங்களத்திடம் சொன்னார். அவர்களுக்கு மனவருத்தம். விவேக் முகத்தில் வெற்றிப்புன்னகை.

செழியன் அன்று மாலை, பள்ளியில் இருந்து வந்தவுடன், தண்ணீரில் வைக்கப்பட்டிருந்த பாலை… மண்ணெண்ணெய் அடுப்பில் வைத்து காய்ச்ச, திடீரென பால் பொங்கி வழிந்தவுடன், என்ன செய்வதென்று தெரியவில்லை.

அவசரமாக பாத்திரத்தை அடுப்பில் இருந்து எடுக்க கை வைத்தவுடன்… கையை சுட்டுக்கொண்டான். பால் முற்றிலும் பொங்கிவிட்டது. கையில் ஏற்பட்ட எரிச்சலை விட, ‘தந்தை திட்டுவாரோ’ என்ற பயம் தான் உள்ளுக்குள்.

கண்களில் கண்ணீருடன் கையைக் கூட கவனிக்காமல் உட்கார்ந்திருந்தான். அன்று கொஞ்சம் சீக்கிரமே வந்துவிட்டார் ஸ்வாமிநாதன்.

“செழியா. இந்த பூட்டை இனி போட்டுட்டு உள்ள இருடா. அப்பா வந்து சாவி கேட்டா மட்டும் தரணும் சரியா” என்று சொல்லிக்கொண்டே அவர் உள்ளே வர, முகத்தில் பயத்துடன், கண்களில் கண்ணீருடன் இருந்த மகனை பார்த்தவர், பதட்டத்துடன் என்ன ஆயிற்று என கேட்க, அழுதுகொண்டே நடந்ததை சொன்னான் செழியன்.

“ரொம்ப சாரி பா. பால் வேஸ்ட் பண்ணிட்டேன்” அவன் அழுக, பதறிக்கொண்டு ஸ்வாமிநாதன் அவன் கையை பார்த்தார். அந்த சின்ன கையில் கொப்புளம் ஆகியிருந்தது. அவர் கண்களும் கலங்கிவிட்டது. மனதில் சொல்லமுடியாத வலி. மனைவியின் போட்டோவை தான் பார்த்தார்.

பின் அவசரமாக அவனை அழைத்துக்கொண்டு மருந்து வாங்கி போட்டுவிட்டவர், உடனே ஒரு flask மற்றும் ஹார்லிக்ஸ் வாங்கிக்கொண்டார்.

அவற்றை வாங்க அவரிடம் இருந்த அனைத்து பணத்தையும் கொடுத்து, அது பத்தாமல் போக, கடன் வைத்ததையும் பார்த்தான் செழியன்.

இரவு வீட்டில் உணவு செய்து செழியனுக்கு ஊட்டிவிட்டபடியே, “நாளைக்கு அப்பா சூடு தண்ணி போட்டு flask’ல வச்சுடறேன். நீ ஸ்கூல்ல இருந்து வந்தவுடனே தண்ணில ஹார்லிக்ஸ் கலந்து குடி. கட்டி ஆகறதுக்குள்ள கலக்கிடணும். அப்பா சீக்கிரம் வந்துடறேன்” என்றார் கலங்கிய கண்களுடன்.

செழியனும் சரி என்றான்.

இரவு ஸ்வாமிநாதன் அவருக்கு டீ போட்டுக்கொண்டிருக்கும்போது, சமையலறைக்குள் சென்று பார்த்த செழியன், பாலில்லாமல் அவர் போடும் செய்முறையை மனதில் குறித்துக்கொண்டான்.

அடிக்கடி ஹார்லிக்ஸ் வாங்க தந்தை கஷ்டப்படுவார். அந்த கஷ்டம் தரக்கூடாது என மனதில் நினைத்துக்கொண்டான்.

நாட்கள் மாதங்களாக, மாதங்கள் வருடங்களாக நகர்ந்தது.

ஸ்வாமிநாதனுக்கு கல்லூரியில் வேலை கிடைத்துவிட்டாலும், இரண்டாவதாக இன்னொரு வேலையையும் எடுத்து செய்தார்… மதி சொன்ன வீட்டை வாங்குவதற்கு.

ஹாஸ்டல் சென்றபின், வருடத்திற்கு ஒரு முறை கவிதா வந்தாள். அவள் வந்தபோதெல்லாம், அவளிடம் நிறைய மாற்றத்தை கண்டான் செழியன்.

எப்போதும் துறுதுறுவென இருப்பவள், தற்போது அமைதியாக… ஏதோ இழந்ததைப்போலவே இருந்தாள். அடிக்கடி கைலாசநாதர் கோவிலுக்கு சென்றுவிடுவாள்.

முதலில் அதற்கான காரணம் புரியவில்லை. நாட்கள் செல்ல செல்ல தான் அவனுக்கு புரிந்தது.

தனக்காவது தந்தை உடன் இருக்கிறார்… ஆனால் அவள், வீட்டிலுள்ளவர்களை விட்டு பிரிந்து எங்கோ தனியாக இருக்கிறாள் என்று புரிந்தது அவனுக்கு. கஷ்டமாகவும் இருந்தது. இருந்தும் எதுவும் செய்யமுடியாத நிலை.

கேலண்டரில் வருடங்கள் மாறியதே தவிர, செழியன் வாழ்க்கை மாறாமல் அப்படியே தான் இருந்தது. மனதில் ஒரு அழுத்தம் எப்போதும் இருந்தாலும், அதனுடன் வாழக் கற்றுக்கொண்டான்.

ஆரம்பத்தில், பள்ளியில் அவனை ஒதுக்கியே வைத்தனர் உடன் படிப்பவர்கள். அவர்கள் பேச்சில் எப்போதும் ஒரு ஏளனத்தை கண்டான்.

வெகு சிலரே அவனிடம் பேசினார்கள். தோழமை என்ற உணர்வில் பேசினார்களா என்று தெரியவில்லை செழியனுக்கு. 

ஸ்வாமிநாதன் அவருக்கு தெரிந்த உணவை சமைத்துக்கொடுப்பார். அதைப்பார்த்து கேலி செய்தனர்.

பள்ளி சீருடை, அவனுடைய புத்தகப்பை, என்று அனைத்தையும் பார்த்து கிண்டல் செய்தனர். முதலில் அழுகை வந்தாலும், போக போக எதையும் காதில் வாங்காமல் இருக்க கற்றுக்கொண்டான்.

எதற்காக அனைவரும் தன்னை இப்படி ஒதுக்குகிறார்கள் என்று முதலில் புரியவில்லை. பின் நாட்கள் செல்ல செல்ல, அதற்கு காரணமானவன் அந்த வேலு… அவன் தம்பியின் மூலம் இப்படி செய்கிறான் என புரிந்துகொண்டான்.

காரணம் என்ன என்று தெரியவில்லை தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை. சுற்றியிருப்பவர்களை வெறுத்தான். தனிமையையே விரும்பினான்.

படிப்பில் எப்போதுமே முதலிடம்.

சிலர் மனப்பாடம் செய்து படித்து முதல் மதிப்பெண் எடுப்பார்கள். இன்னும் சிலர், மதிப்பெண் பற்றியெல்லாம் கவலைப்படாமல் படிப்பதை புரிந்து படிப்பார்கள். ஆனால் செழியன், கலவையாக இருந்தான்.

புரிந்து படித்து… மூளையில் ஏற்றி… கடினமாக படித்து… முதலிடம் வருவான்.

பல தருணங்களில் மனதின் அழுத்தம் அதிகமாகும்போதெல்லாம், எதற்கு இந்த வாழ்க்கை என நினைக்கும்போதெல்லாம், இப்படி ஒரு வாழ்க்கை வேண்டுமா என யோசிக்கும்போதெல்லாம்… கவனத்தை படிப்பில் திருப்பினான்.

அவனின் மன அழுத்தத்துக்கு, ஒரே ஆறுதல்… படிப்பு மட்டுமே என்று இருந்தான்.

சில வருடங்களில், மதி ஆசைப்பட்ட வீட்டை லோன் எடுத்து வாங்கினார் ஸ்வாமிநாதன்.

செழியன் தனக்கு மொட்டைமாடியில் உள்ள தனி அறை தான் வேண்டும் என கேட்டு வாங்கிக்கொண்டான். அது அவனை இன்னமும் தனிமை படுத்தியது. அதை விரும்பவும் செய்தான் அவன்.

ஸ்வாமிநாதன் கிட்டத்தட்ட, ஒரு இயந்திரம் போல சுற்றிக்கொண்டிருந்தார். மகள் கவிதா பாலிடெக்னிக்’கில் படிப்பதற்கு, செழியன் படிப்பிற்கு, வீட்டுக்கடன் என நிறைய செலவுகள் இருக்க, வேலையிலேயே தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொண்டார்.

செழியன் நன்றாக படித்து, பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்தான்.

யாருடனும் ஒட்டாமல் தனிமை மட்டுமே என்று இருக்க, அவன் வாழ்க்கையில் அழகாக நுழைந்தாள் இந்துமதி.

பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது அவன் பள்ளியில் சேர்ந்தாள்.

செழியன் தான் பள்ளியில் முதலிடம் என தெரிந்து, அவனிடம் பேச வந்தாள். அவனை முதலில் கவர்ந்தது அவள் பெயர். இந்துமதி. மதி… தன் அம்மாவின் பெயர்.

அதிகம் பேசாத செழியன் அவளிடம் மட்டும் ஓரிரு வார்த்தைகள் பேசினான். அவளும் அவனுடைய கடந்தகால வாழ்க்கையை பற்றியெல்லாம் யோசிக்காமல், நன்றாக பேசினாள்.

நாட்கள் செல்ல செல்ல, அவளுடன் கொஞ்சம் அதிகமாகவே பேச ஆரம்பித்தான். அவளுக்கு படிப்பில் உதவினான். அவளும் அவனுக்காக வீட்டு உணவு, சின்ன சின்ன பரிசுகள் என கொடுப்பாள்.

முதலில் வேண்டாம் என மறுத்தான். பின், அவள் வற்புறுத்தலின் பேரில் ஏற்றுக்கொண்டான். இருவருக்குள்ளும் அழகான நட்பு வளர்ந்தது.

இதுவரை தன் வாழ்வில் தோழமை என்று யாரும் இல்லாமல் இருக்க, இந்துமதியை மிகவும் பெரிதாக நினைத்தான். அவள் நட்பை பொக்கிஷமாக காத்தான். அவளுடன் இருக்கும் தருணங்களில், அவன் மனம் லேசாக இருப்பதாக உணர்ந்தான்.

மனதளவில் ஏற்பட்ட பல கசப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைவதாக அவன் நினைக்க, தன் வாழ்வில் அடுத்த ஏமாற்றம்… அடுத்த இழப்பு… இந்துவதி வடிவில் காத்திருக்கிறது என்று தெரியாமல் பள்ளிப்படிப்பை முடிக்க தயாரானான்!

PS::::: அடுத்த பதிவுல நம்ம பொண்னு இசைப்ரியா வந்துடுவாங்க 🙂  அப்புறம் கதை கொஞ்சம் ஸ்மூத்’தா போகும் அவங்க கல்யாணம் வரை 🙂