TT-25B

அத்தியாயம் – 25B :

ப்ரியா மருத்துவரிடம் பேசிவிட்டு நேரம் ஆனதால் மருத்துவமனையிலேயே இருந்துவிட்டு, விடியற்காலையில் வீட்டிற்கு கிளம்பினாள், அவனுக்கு உணவு செய்துகொண்டு வர.

செழியன் மருந்தின் பிடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தெளிந்தான். ‘என்ன ஆயிற்று’ என்று சிரமப்பட்டு யோசிக்க, முந்தைய தினம் காலை ப்ரியா தன்னிடம் பேசியது… பின் மருத்துவரை சந்தித்தது… பேசியது… என்று ஒவ்வொன்றாக ஞாபகம் வந்தது.

ப்ரியா… அவளை பற்றி நினைக்கும்போது… ஒரு இனம் புரியாத வசந்தம் மனதில் வீசினாலும், ‘வேண்டாம் அவள் பாவம்’ என்ற எண்ணம் அதைவிட வலுப்பெற்றது.

பின், அவள் கருவுற்றது ஞாபகம் வர, இதழ்கள் அவனையும் அறியாமல் மெலிதாக புன்னகையில் விரிந்தது.

அடுத்து ‘என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறாளே. எப்படி இந்த குழந்தை வேண்டாம் என்று சொல்வது’ என யோசிக்க ஆரம்பிக்க… இந்த நிலையில் அவள் மனம் நோகும்படி பேசியது நினைவுக்கு வந்தது.

‘அவள் அண்ணன் என் அக்கா வெண்பாவை சுமந்தபோது எப்படி பார்த்துக்கொண்டான். ஆனால் நாள் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறேனே’ அவனையும் மீறி கண்கள் கலங்கியது.

இவ்வாறாக மீண்டும் மீண்டும் பல எண்ணங்கள் மாறி மாறி வந்துகொண்டே இருந்தது.

அப்போது சரியாக அங்கே ப்ரியா வந்தாள். அவனை பார்க்க, அவன் யோசனையில் இருந்தான். இந்த சில நாட்களில் அவன் முற்றிலுமாக தோற்றத்தில் மாறியது போல இருந்தது அவளுக்கு.

சில நொடிகள் கழித்து, ஒற்றை விரல் கொண்டு கலங்கிய கண்களை அவன் துடைப்பத்தை பார்த்த ப்ரியா, ‘ஐயோ மறுபடியும் என்ன யோசிக்கிறானோ!? மனம் விட்டு பேசினால் போதுமே’ என நினைத்துக்கொண்டே உள்ளே வந்தாள்.

அவளை அங்கு எதிர்பார்க்காத செழியன், அதிர்ந்து அவளை பார்க்க, அவன் நிலையை பார்த்து முதலில் அவள் வருத்தப்பட்டாலும், அதை காட்டிக் கொள்ளக்கூடாது என்று சாதாரணமாக இருந்தாள்.

‘அவளுக்கு தெரிந்து விட்டதோ’ என்ற பதட்டம் அவனுள்.

அவனிடம் பல் துலக்குவதற்கு பொருட்களை கொடுக்க, அவன் மனதில் அதே கேள்வி. ஆனால் அவளிடம் எப்படி கேட்பது என்று தெரியவில்லை.

“ஹ்ம்ம்” அழுத்தமாக சொன்னபடி அவள் நீட்ட, தன்னிலைக்கு வந்தவன் எதுவும் பேசாமல் வாங்கிச்சென்றான்.

‘இசை முகத்தில் பழைய பிரகாசம், சிரிப்பு எதுவுமே இல்லையே. தன்னுடன் வாழ்ந்தால் எப்படி வரும்… தன் வாழ்வில் ஒரு குழந்தை… எவ்வளவு அழகான விஷயம். அதை நினைத்து மனநிறைவு அடைய முடியவில்லையே’

இப்போல எண்ணங்களுடன் அவன் முடித்துவிட்டு வந்து உட்கார்ந்தான்.

அவனுக்கு குடிக்க டீ கொடுக்க அருகில் வந்து அவள் நின்றவுடன், அவள் வயிற்றுப் பகுதி அவன் முகத்தின் முன் தெரிய, ‘டாக்டர்’ட்ட செக் அப் போனாளானு தெரியலையே’ என அடுத்த கேள்விகள் மனதில் முளைத்தது.

அந்த வயிற்றையே சில நொடிகள் பார்த்து, பின் கண்ணை அங்கிருந்து பிரித்து… அவள் கொடுத்த டீயை வாங்கியவன்… “உனக்கு” என்று கேட்க, அவள் சின்ன புன்னகையுடன் ‘முடிந்தது’ என்பதுபோல தலையசைத்தாள்.

அந்த வெகு சிறிய புன்னகையை கூட பார்த்து எவ்வளவு நாள் ஆகிவிட்டது என்ற எண்ணம் எழாமல் இல்லை அவனுக்கு. அமைதியாக இருந்தான்.

மருத்துவர் வந்தார்.

அவரை பார்த்ததும்… ப்ரியாவை பார்த்தவண்ணம்… “டாக்டர் உங்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்” என்றான். ப்ரியா கண்களில் கோபம் கொப்பளித்தது. அவனை பார்த்து முறைத்தவாறே வெளியே சென்றாள்.

“எல்லாத்தையும் அவகிட்ட சொல்லிடீங்களா? நான் அவ என்ன விட்டுட்டு போகணும்னு சொன்னேன்ல டாக்டர்” ஆற்றாமையுடன் மருத்துவரை பார்த்தான்.

“லுக் இளன். அவங்க என் புருஷனுக்கு என்ன ஆச்சுன்னு கேட்கறப்ப என்னால சொல்லாம எப்படி இருக்க முடியும்? அவங்கள தவிர உங்க ப்ளட் ரிலேட்டிவ்னு வேற யாரு வந்திருந்தாலும் சொல்லியிருப்பேன்” என்றவுடன்…

“ப்ச். இனி அவ போகவே மாட்டா டாக்டர். நீங்க அவகிட்ட எப்படியாச்சும் பேசி, இந்த வியாதி ஹெரிடிட்ரி… குழந்தைகளுக்கும் கண்டிப்பா வரும். அதுனால இது வேணாம், இளா அவளுக்கு வேணாம்னு சொல்றீங்களா ப்ளீஸ்” கிட்டத்தட்ட கெஞ்சி கேட்டான்.

“இங்க பாருங்க இளன். அது உங்க பர்சனல் விஷயம். நீங்க தான் பேசி முடிவு பண்ணணும். மோர் ஓவர் இது கண்டிப்பா குழந்தைக்கு வரும்னு என்னால பொய் சொல்ல முடியாது” என்றார் பொறுமையாக.

அவனுக்கு எல்லாப்பக்கமும் அடைக்கப்பட்டது போல் உணர… அவர், “உங்கள அட்மிட் பண்ணி ட்ரீட் பண்ணலாம்னு யோசிச்சிருக்கேன்” என்றார்.

“என்னது அட்மிட்’டா? அதெல்லாம் வேணாம் டாக்டர். நான் வீட்டுக்கு போறேன். ஐ ஃபீல் பெட்டெர் நொவ். அதுவுமில்லாம இசை தனியா இருப்பா” என்றான்.

அவர் முகத்தில் புன்னகை. “அவங்கள தான் எப்படியும் அனுப்ப போறீங்களே… அவங்க ஹாஸ்டல்’லயே இருக்கட்டும். யு நீட் ட்ரீட்மெண்…” அவர் முடிக்கவில்லை…

“என்ன டாக்டர் பேசுறீங்க? அவ ப்ரெக்னன்ட். ஹாஸ்டல் சாப்பாடு எப்படி ஒத்துப்போகும்? அவ இங்க வந்ததுல இருந்து, காலைல மதியம் நான் தான் செய்து எடுத்துட்டு போனேன். அதுவும் இப்போ உள்ள இன்னொரு உயிர் இருக்கு. நல்ல சாப்பாடு முக்கியம்” ‘ஏதோ இனி அவளை அவன் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்பதுபோல வாதாடினான்.

அவன் பேசியதை பார்த்து, ‘அவனை எப்படியும் சீக்கிரம் மாற்றிவிடலாம்’ என்ற நம்பிக்கையுடன் மருத்துவர்…

“இங்க பாருங்க உங்க இசை வாழ்க்கை நல்லா இருக்கணும்னா, நீங்க எந்த தப்பான முடிவையும் திரும்ப எடுக்கக்கூடாதுன்னா, நீங்க ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு தான் ஆகணும். ஆல்ரெடி உங்ககிட்ட ஐ சி ஸம் இம்ப்ரூவ்மென்ட்ஸ். கொஞ்ச நாள் தான்” எதை சொன்னால் அவன் மறுக்க மாட்டான் என்பது தெரிந்து அதையே சொன்னார்.

அவன் மனமில்லாமல் தலையசைக்க, அதை புரிந்து கொண்டது போல… “உங்க இசைக்கு வீட்டு சாப்பாடு தான் பிரச்சனைன்னா, அத நான் அரேன்ஞ் பண்றேன் ஒகே வா” அவர் கேட்டதும், செழியன் கண்கள் பல நாட்களுக்கு பிறகு நன்றி உணர்வுடன் கலங்கியது கூடவே சின்ன புன்னகையும். 

அதற்குப்பின், ப்ரியா அவனிடம் பேசவில்லை. அவனும் பேசவில்லை.

‘நான் இருந்தால் பேசமாட்டானாம்… நான் மட்டும் அவனிடம் பேசவேண்டுமா? உன்னை பேச வைக்கிறேன் பார்’ என்ற எண்ணம் அவளுள். அவள் பேசவில்லையே என்ற வருத்தம் அவனுள்.

அவனை மருத்துவர் மனநல மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சையை தொடங்கினார்.

முதலில் mood stabilizer அன்ட் antidepressants மருந்தில் தொடங்கி, தேவையான மருந்துகள் கொடுக்கப்பட்டது. 

Mood stabilizers என்பது மூளையில் ஏற்படும் அசாதாரண செயல்பாடுகளை குறைக்க உதவும். அது மனநிலை மாற்றங்களை (mood swings) குறைக்கும். 

Antidepressants என்பது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களை சீரமைக்கும். இது  நல்ல, தடையில்லா உறக்கத்தை தருவதற்கும் பயன்படும்.

இந்த முக்கிய மருந்துகளுடன், antipsychotics என்ற சில மருந்துகள் சேர்த்து தரப்பட்டது.

Antipsychotics என்பது முக்கியமாக ஹலூஸினேஷன், டெலூஷன்’னிற்கு தரப்படும் மருந்து. 

ஒரு வாரம் இதே நிலை நீடிக்க, செழியனிடம் கொஞ்சம் முன்னேற்றம் தெரிய ஆரம்பித்தது. 

அவன் மனதில் எப்போதும் இருப்பது இசை மட்டுமே. மருத்துவரை அங்கு பார்க்கும் போதெல்லாம், அவளை பற்றி கேட்டு தெரிந்துகொண்டான்.

அங்கு ப்ரியா… மருத்துவரை தினமும் கல்லூரியில் சந்தித்து, செழியனின் சிகிச்சை, அவனின் முன்னேற்றம் குறித்து கேட்டுக்கொண்டாள்.

அவன் அவளுக்கு வீட்டு உணவு கொடுக்கும்படி சொன்னதையும், தனியாக இருக்கவேண்டாம் என்று சொன்னதையும் அவர் சொன்னார்.

அவள் புன்னகையுடன், தனியாக இருப்பது பெரிய விஷயம் இல்லை. அவன் நல்ல படியாக திரும்ப வேண்டும் என்பதே அவளின் எண்ணம் முழுவதும் உள்ளதாக சொன்னாள்.

அவனை எப்படி தன்னிடம் மனம்விட்டு பேச வைப்பது என்று யோசிக்க, காயத்ரியிடம் அன்று பேசியபோது… அவள் சொன்ன ஒன்று நினைவுக்கு வந்தது.

அதை பற்றி மருத்துவரிடம் கேட்டாள். அவள் கேட்டதை முதலில் மறுத்தவர், பின் அதன் குறை நிறைகளை பற்றி சொன்னார்.

அளவாக கடைபிடித்தால், அவள் நினைத்தது நடக்கலாம். அளவுக்கு மீறி போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அளவுக்கு மீறினால் செழியன் இருக்கும் நிலையில் ஆபத்தாக கூட அமையலாம் என்றார். அவர் சொன்னதை நன்றாக மனதில் குறித்துக்கொண்டாள்.

அவன் எப்போது திரும்பி வருவான் என்று காத்திருந்தாள்.

செழியனுக்கு மருந்துகள் குறைக்கப்பட்டது. இரவு தூக்கம் கிட்டத்தட்ட மருந்தின் உதவியுடன் சீராக்கப்பட்டது.

வாழ்க்கை முடிந்துவிடவில்லை என்ற எண்ணம் ஒரு சின்ன துளி அளவு அவனுள் எழுந்தது. அவனிடம் பழைய எண்ணங்கள் குறைந்த போல தெரிந்தது.

அடுத்து வந்த தினங்களில் சைக்கோதெரபிஸ்ட்’டிடம் தெரபி (talk therapy) மற்றும் கீழுள்ள செஷன்ஸ் ஆரம்பித்தது. மனதை ஒருநிலைப்படுத்த பல முறைகளை அவனுக்கு கற்றுத்தந்தார்கள். 

Cognitive behavioral therapy – மனதை எப்படி எதிர்மறை எண்ணங்களில் இருந்து மாற்றுவது, மற்றும் mood shifts குறைப்பதற்கான சிகிச்சை அளிக்கப்படும்.

Interpersonal and Social Rhythm Therapy – ஸ்ட்ரெஸ் மற்றும் ஒழுங்கான, சீரான வாழ்க்கை முறைக்கு சிகிச்சை அளிக்கப்படும். இதனால் முக்கியமாக தூக்கம் சீராகும். தூக்கமின்மையை குறைக்கும்.  

இதை தவிர இன்னும் சில சிகிச்சைகள் வழங்கப்பட்டது. இரண்டு வாரம் என்று ஆரம்பித்த சிகிச்சை, அதிகமானது. 

ப்ரியாவை பற்றி மருத்துவரிடம் தினமும் கேட்டு தெரிந்து கொண்டான் செழியன்.

‘அவள் ஒழுங்காக சாப்பிடுகிறாளா? தன்னை பற்றி கேட்டாளா? எங்கே இருக்கிறாள்? ஏன் அவள் வீட்டில் தனியாக இருக்கிறாள்? செக் அப் சென்றாளா? அவளை செக் அப் தானே அழைத்துச் செல்ல வேண்டும்… அவளிடம் பேச வேண்டும் என்று ஆசையாக உள்ளது’ என்று மனதில் தோன்றியதை பேசினான். 

இதுவே பெரிய முன்னேற்றமாக தெரிந்தது. ப்ரியா தன்னை விட்டு செல்ல வேண்டும் என்று நினைத்தவன் இப்போது அவளுடன் பேச வேண்டும், அவளுடன் சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும் என்று விரும்புகிறான். 

பலகட்ட சிகிச்சைக்குப் பின், பல சோதனைகளுக்கு பின், இறுதியாக முதல் கட்ட சிகிச்சை (inpatient treatment) முடிந்து, அவனை மருத்துவரே அழைத்துவந்தார் அவர்கள் வீட்டிற்கு.

ப்ரியா அவனின் வருகைக்காக காத்திருந்தாள். முன்பொருமுறை கவிதாவின் வளைகாப்பின் போது அவன் வருகைக்காக காத்திருந்தது போல, அவனை பார்க்க காத்திருந்தாள். அப்போது போலவே இப்போதும் மனது கொஞ்சம் படபடப்புடன் இருந்தது.

அவனும் பல நாள் கழித்து… அவளின் முகத்தை, அவளின் கண்களை, அவளின் உணர்வுகளை பார்க்க ஆவலுடன், ஆசையுடன், ஆர்வத்துடன் சென்றான்!!!

பின் குறிப்பு: இதில் உள்ள மருத்துவ குறிப்பேடுகள் அங்கீகரிக்கப்பட்ட  மருத்துவத்துறை சார்ந்த இணையதளங்களின் உதவியுடன் எடுக்கப்பட்டது. இது நோயாளிக்கு நோயாளி அவர்களின் பாதிப்பு  அளவை பொறுத்து மாறுபடும்.