TT-FINAL-2

அத்தியாயம்  – இறுதி 2:

‘உடனே அறுவை சிகிச்சை செய்து குழந்தைகளை எடுக்க வேண்டும், இல்லையேல் மூவருக்குமே ஆபத்து’ என்றார் மருத்துவர். செழியன் சம்மதித்தான்.

அதற்குள் ஸ்வாமிநாதன் சென்னைக்கு தகவல் தந்தார். அனைவரும், அடுத்து மும்பைக்கு வரும் விமானத்தில் புறப்பட்டனர்.

ப்ரியா மிகுந்த பயத்தில் இருக்க, செழியன் அதைவிட பயத்தில் இருந்தான்.

“இளா… என்கூடவே இரு இளா” அவள் பயத்துடன் கேட்க, அவன் மறுப்பானா…? ‘சரி’ என்று தியேட்டர்’ருள் அவனும் சென்றான்.

ப்ரியாவிற்கு ஒவ்வொன்றாக மருத்துவர்கள் செய்ய, செழியனால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. மயக்க ஊசி… பின், இரண்டு குழந்தைகளை வெளியில் எடுக்க அவள் உடம்பில் கத்தி வைக்கப்பட்டது. அவன் உயிர் கிட்டத்தட்ட நின்றுவிட்டது. 

ப்ரியா மயக்கத்திலேயே இருந்தாள்.

சில நிமிடங்கள் கழித்து ‘பெண்’ என்றபடி முதல் குழந்தையை வெளியில் எடுத்தனர். நர்ஸ் செழியனிடம் காட்ட, அவன் கண்களில் கட்டுக்கடங்காத கண்ணீர்.

அடுத்த சில நிடங்களில் ‘ஆண்’ என்றபடி ஒன்னொரு குழந்தையை காட்டினர். அவனை தொடவிடவில்லை. உடனே NICU எடுத்துச்சென்றார்கள்… குழந்தைகள் முப்பது வாரத்தில் பிறந்ததால்.

பிரசவத்தின் போது ஒரு சில பிரச்சனைகள் ஏற்பட, அதையும் கவனமாக கையாண்டார்கள் மருத்துவர்கள். ப்ரியா மயக்கத்திலேயே இருந்தாள். ‘இன்னமும் ஒரு நாள் ஆகும்’ அவள் கண்விழிக்க என்றனர்.

துவண்டு போயிருந்த அவள் முகத்தை பார்த்தபடி வெளியே வந்தான் செழியன். அவனை தேற்றினார் ஸ்வாமிநாதன்.

அப்போது அவனை அழைத்த மருத்துவர், ‘ப்ரியாவிற்கும், குழந்தைகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. கொஞ்சம் கவனத்தோடு பார்த்துக்கொண்டால் போதும். குழந்தைகள் இன்னமும் குறைந்தபட்சம் மூன்றிலிருந்து நான்கு வாரங்கள் NICU இருக்கவேண்டும்’ என்றார்.

‘ப்ரியாவிற்கு கர்பப்பை வலுவற்று உள்ளது… இந்த கர்ப்பமே எதிர்பாராதவிதமாக நடந்ததால் குடும்பக்கட்டுப்பாடு செய்வது நல்லது ‘ என்றார். 

செழியன் சம்மதம் சொல்லிவிட்டு வந்தான்.

சில மணிநேரங்களில் சென்னையில் இருந்து அனைவரும் வந்தனர். குழந்தைகளை வெளியில் இருந்து பார்த்தனர். லட்சுமிக்கு ஆனந்தத்தில் கண்கள் கலங்கியது.

‘சீமந்தம் செய்யுமுன் பிரசவம் முடிந்ததே’ என்ற ஒரு சின்ன வருத்தம் மட்டுமே.

செழியன் அவர்களிடம் மருத்துவரும், அவனும் பேசியதை சொன்னான். ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஒவ்வொரு உணர்வு… அது வெளிப்படையாக அவர்கள் முகத்தில் தெரிந்தது.

ஆனால் அதெல்லாம் பார்க்கும் நிலையில் செழியன் இல்லை. அவனுக்கு ப்ரியாவை கண்விழித்தவுடன் பார்க்கவேண்டும்… அவ்வளவே!

ப்ரியா கண்விழிக்க அடுத்த நாள் ஆனது. லட்சுமி அவளுடன் இருக்க, முழித்ததும் அவள் தேடியது செழியனைத்தான். அவன் அங்கு இல்லை.

‘எங்கே’ என்று கேட்டதற்கு ‘இப்போது தான் சென்றான். வந்துவிடுவான்’ என்றார் லட்சுமி.

பின் குழந்தைகளை பற்றி கேட்டாள். கொஞ்சம் மயக்கத்திலேயே இருந்ததால் அவ்வப்போது முழிப்பதும் மயங்குவதும் என்று இருந்தாள்.

அடுத்தநாள் காலை மருத்துவர் அவளை பரிசோதித்தார். அப்போது விழித்த ப்ரியா, குழந்தைகளை பற்றி முதலில் கேட்டாள். பின், “டாக்டர். நீங்க முன்னாடியே ஃபேமிலி ப்ளானிங் பத்தி சொன்னீங்கல்ல. இப்போவே அதை முடிச்சிடலாமே. ஒரே வலியோட போய்டும்” என்றாள் வலுவற்ற குரலில்.

அவர் புன்னகைத்து “அது தான் முடிஞ்சதே” என்றார். அதற்கு ப்ரியா, “ஓ! Csec  பண்ணும்போதே, இதையும் பண்ணிடீ…” என்று முடிக்கும் முன் அவர் மறுப்பாக தலையசைத்தார்.

ப்ரியா புருவங்கள் முடிச்சிட்டு பார்க்க, அவள் வயிற்றை காட்டி, “ஆல்ரெடி உங்களுக்கு நிறைய கஷ்டம் குடுத்தாச்சாம். போதுமாம்… இதுக்குமேல உங்களை கஷ்டப்படுத்தி பார்க்கமுடியதாம்… அதுனால நேத்தே உங்க கணவன் வெசக்டமி பண்ணிட்டாரு” என்றார் அவளை பரிசோதித்துக்கொண்டே.

வெசக்டமி (Vasectomy) என்பது ஆண்கள் செய்துகொள்ளும் குடும்பக்கட்டுபாடு.

ப்ரியா மனதில் ஒரு சின்ன அழுத்தம் அவனின் இந்த செயலை நினைத்து. பின் வலியில் கூட சின்ன புன்னகை. அந்த புன்னகையில் கூட கண்கள் கலங்கியது.

“எங்க டாக்டர் அவன்?” அதே கலங்கிய கண்களுடன் கேட்க, சரியாக உள்ளே வந்தான் செழியன் மெதுவாக.

“இதோ” என்றவர், அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு வெளியே சென்றுவிட… “இசை. இப்போ எப்படி இருக்க… பரவால்லயா?” என்றபடி அவள் வயிற்றை மிருதுவாக வருடினான்.

“என்கிட்ட கூட சொல்லாம ஏன்’டா’ இப்படி பண்ண?” அவள் கண்களில் கண்ணீருடன் முறைத்துக்கொண்டே கேட்க… அவன் புரியாமல் பார்த்தான்.

பின் அதன் பொருள் புரிந்து… புன்னகையுடன்… அவள் முகத்தின் அருகே சென்று, “போதும் நீ பட்டபாடு. என்னால தங்கிக்கமுடியால இசை. யார் பண்ணிட்டா என்ன” சற்று நிறுத்தி “டி” என்றான் அவள் நெற்றியில் நெற்றிமுட்டி கலங்கிய கண்களுடன்.

அவள் ‘டா’ என்று அழைத்ததற்கு ‘டி’ என்றான் எப்பொழுதும்போல் இடைவெளி விட்டு. இப்போது இருவர் கண்களிலும் கண்ணீர்! இதழ்களில் புன்னகை!

“பசங்கள பார்த்தயா இளா” அவள் ஆசையுடன் கேட்க, “வெளிய எடுத்தவுடனே என்கிட்ட தான் காட்டினாங்க… தேங்க்ஸ் இசை” நன்றியுடன் கூடிய பெருமிதத்துடன் சொன்னான்.

“மொதல்ல இனியா” அவன் ஆரம்பிக்க… “அடுத்து இன்பா” புன்னகையுடன் அவள் முடித்தாள். 

அதேநேரம் ப்ரியா கண்விழித்தது தெரிந்து அனைவரும் உள்ளே வந்தனர். அங்கு அழகிய உணர்வுகள் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

அடுத்த மூன்று வாரங்களில் ப்ரியாவின் உடல்  நிலை ஓரளவு தேறி இருக்க, குழந்தைகள் NICU ‘வில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

ப்ரியா பக்கத்தில் குழந்தகைகள், குழந்தைகளின் பாதம் பக்கத்தில் செழியன் மூவரையும் பார்த்தவண்ணம்!

“என் மேல கோபம் இருக்காதில்லை இசை… பசங்களுக்கு” கண்கள் கலங்கி அவன் கேட்டான். அவன் மனதில் ‘கலைத்துவிடு’ என்று சொன்னது நெருடிக்கொண்டே இருந்தது.

“லூசு மாதிரி பேசா…” என்று அவள் முடிக்கும்முன், இன்பா செழியனின் ஒரு கன்னத்தில் காலால் உதைக்க, இனியா மற்றொரு கன்னத்தில் உதைத்தாள். தற்செயலாக நடந்தாலும், அது இருவரையும் அசைத்தது.

“ரொம்ப பேசினா, உனக்கு இந்த ட்ரீட்மெண்ட் தான்” நெகிழ்ச்சியுடன் ப்ரியா சொல்ல, கலங்கிய கண்களுடன், குழந்தைகளின் பாதத்தில் முகம் புதைத்தான் செழியன்!

இளா’வின் இன்னிசையாக அவள்…! இசை’யின் இளந்தென்றலாக அவன்…! 

அவர்கள் வாழ்வின் அடுத்த அத்தியாயம் இன்பத்துடனும், இனிமையுடனும் ஆரம்பித்தது!!!

<<<நன்றி…சுபம்>>>

பின் குறிப்பு :

இந்தியா, தென் கிழக்கு ஆசிய அளவில் எதில் முன்னிலையில் இருக்கிறதோ, இல்லையோ தற்போது தற்கொலை பட்டியலில் முன்னிடம் வகிக்கிறது (சமீபத்திய WHO கருத்துக்கணிப்பு).

இந்திய மக்கள் தொகையில் 6.5%  தீவிர மன உளைச்சலில்  பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதன் வெளிப்பட்டால் எடுக்கப்படும் அதீத முடிவு  தற்கொலை. 

ஒரு தினத்தில் இந்தியாவில்  381 பேர் தற்கொலை முடிவு (அதில் மனஅழுத்தமும்  அடக்கம்) எடுக்கிறார்கள் என்று WHO கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. 

மனஅழுத்தம்  கூடவே தனித்து வாழ்பவர்களின் நிலை ரொம்ப ரிஸ்கி. அதுபோல  நம்மிடையே இருப்பவர்களிடம், நம்மால் முடிந்தவரை, அவர்கள் பேசாவிட்டாலும்  நாமே  முன்வந்து பேசுவோம்.!  மாற்றத்தை உருவாக்குவோம்!

மன அழுத்தம் (அதில் முக்கியமாக பைபோலார்), அதன் விளைவுகள், அதிலிருந்து எப்படி வெளிவருவது, என்ற பல தகவல்கள் கீழுள்ள தளங்களில் இருந்து அறிந்துகொள்ளலாம்.

https://www.who.int/india/health-topics/mental-health
https://www.nimh.nih.gov
https://www.ncbi.nlm.nih.gov
https://www.healthline.com
https://www.webmd.com
https://www.medscape.com
https://ibpf.org
https://www.bphope.com
https://bipolarindia.com
https://www.helpguide.org
https://www.yourhealthinmind.org

Tamil Nadu Helpline numbers:
Sneha – 044- 24640050
State’s health helpline – 104
Fortis Stress Helpline: +918376804102