TT14B

 
கோவிலில் பூஜைகள் முடிந்த பிறகு அனைவரும் அகிலனின் செங்கல்பட்டு வீட்டிற்கு வந்துசேர, செழியன் தனக்கு இன்டெர்வியூ இருப்பதாக சொல்லிவிட்டு காஞ்சிபுரம் கிளம்பிவிட்டான்.

அன்று முழுவதும் மனதில் ஓடிய ஒரே பெயர் இசைப்ரியா!

எதற்காக தன் மேல் அக்கறை காட்டவேண்டும்? இதற்கு முன் யாருமே தன்னை ஒரு பொருட்டாக மதித்ததில்லை. அப்பா அக்கா, இவர்கள் இருவரும் காட்டும் அக்கறை, அன்பு வேறு.

இந்துமதி கூட முதலில் நன்றாக படிப்பவன், பள்ளியில் முதல் மதிப்பெண் என்றெல்லாம் தெரிந்ததால் வந்து பேசினாள். இல்லையேல் பேசவுதற்கான தருணமே அமைந்திருக்காது. ஏதோ ஒரு வகையில் நன்றாக படிக்கவேண்டும் என்ற தேவை அவளுக்கு இருந்தது… அதனால் பேச ஆரம்பித்த பழக்கம், காலப்போக்கில் ஆழமான நட்பாக மாறியது. அவளே பலமுறை இதை கூறியிருக்கிறாள்.

ஆனால் எந்தவகையான ஆதாயமுமில்லாமல், நெருங்கிய பந்தமும் இல்லாமல்… ஒருவர் தன் மீது காட்டும் அன்பு, அக்கறை, இதுவே முதல் முறை. அதைப்பற்றி நினைக்க நினைக்க ப்ரியா அவனை ஆக்ரமித்துக்கொண்டே இருந்தாள்.

அவளை நினைக்கும்போதெல்லாம் மனம் கொஞ்சம் நெகிழ்ந்தாலும், அவள் மேல் ஏற்படும் இந்த சொல்லத்தெரியாத உணர்வு சரியா என்றும் யோசித்தான். யோசித்து யோசித்து இரவு தூக்கம் போனதுதான் மிச்சம்.

அடுத்த நாள் ரிஸப்ஷனுக்கு சென்னை வந்து சேர்ந்தான் செழியன்.

வந்ததும் அக்கவிடம் பேசிவிட்டு ஒரு ஓரத்தில் உட்கார, அந்த இடத்தை சுற்றிப்பார்த்தான். அது அகிலன் பிஸ்னஸ் வட்டாரத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு வந்திருந்த விருந்தினர்களில் பாதி பேர் சென்னையில் பெரிய ஆட்கள்… கட்டுமானத்துறையில். அதுவே காட்டியது அகிலனின் செல்வமதிப்பை.

அதை நினைக்கும்போது, ‘ப்ரியாவை பற்றி யோசிக்கும் தகுதியாவது இருக்கிறதா தன்னிடம்?’ என்ற தன்னிலை அலசல் ஆரம்பித்தது செழியனுக்கு.

‘சொல்லிக்கொள்ளும்படி குடும்பம் என்ற ஒரு அமைப்பு இல்லை. சொந்தமாக அப்பா வாங்கிய வீட்டை தவிர வேறு ஒன்றும் இல்லை. தன்னிடம், எதுவுமே இல்லை. எந்தவகையிலும் அவளுக்கு தகுதியானவன் தானில்லை’ என யோசிக்க, கண்கள் ப்ரியாவிடம் நின்றது.

அவனைப்பார்த்ததும் அழகாக புன்னகைத்தாள். இன்றும் அளவான மற்றும் நேர்த்தியான அழகு. அவனும் புன்னகைக்க முயல, ஏதோ ஒன்று அவனை தடுத்தது. சின்னதாக புன்னகைத்துவிட்டு திரும்பிக்கொண்டான்.

பல கட்ட யோசனைக்குப் பின், ‘ஏமாற்றம் புதிதா என்ன எனக்கு? ஏமாற்றம் மட்டுமே வாழ்க்கையாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். எதுவுமே எனக்கு நிரந்தரம் இல்லை. தேவையில்லாத எண்ணங்களை அவளிடம் வளர்த்துக்கொண்டு… பின்நாட்களில் கஷ்டப்பட வேண்டாம். முதலிலேயே இதை நிறுத்திக்கொள்வோம். அவளிடம் பேச நினைத்த… அக்கா குறித்த விஷயத்தை மட்டும் பேசுவோம்’ என்ற முடிவுக்கு வந்தாலும், மனது கொஞ்சம் வலித்தது.

அவளை தனியாக பார்த்தபின், அவளிடம் அவள் அண்ணன் பற்றி பேச ஆரம்பித்தான்.

அவன் என்ன சொல்லிவருகிறான் என்று முழுதும் கேட்காத ப்ரியா, அவள் அண்ணனை பற்றி அவன் பேச ஆரம்பித்தவுடன் கோபப்பட, அவன் மனதில் சுருக்கென்றது.

அதிக உரிமை எடுத்துக்கொண்டது தவறு தான் என தன்னையே திட்டிக்கொண்டு அவன் திரும்பி செல்ல நினைக்க, ப்ரியா அவனை போகவிடாமல் நிறுத்தினாள்.

“நீங்க சொல்லலைனாலும் நான் அண்ணியை நல்லா பார்த்துப்பேன்” அவள் சொன்னதும், அவன் முகத்தில் சின்ன புன்னகை ‘எனக்கு தெரியும்’ என்பதைப்போல.

பின், “அக்காவை தொடர்பு கொள்ளமுடியவில்லை என்றால் உன்னை தொடர்புகொள்ளலாமா?” என்று அவன் கேட்டபோது “தேவையில்லாமல் மெசேஜ் அனுப்பக்கூடாது” என்று பெரிய லெக்ச்சர்’ரே எடுத்தபின் அவள் எண்ணை கொடுத்தாள் ப்ரியா.

அவள் பேச பேச, அந்த பேச்சு ஒரு புறம் பிடித்தாலும், சுற்றம், தன்னிலை என்ற பல எண்ணங்கள் அவனைத் தாக்க, எதுவும் பேசாமல் சென்றுவிட்டான்.

அடுத்து அவர்கள் அனைவரும் அகிலன் வீட்டிற்கு செல்ல, அகிலன் வீட்டை பார்த்ததும் மனதில் மறுபடியும் சுணக்கம்.

‘ஏணி வைத்தாலும் எட்டமுடியாத இடத்தில் அவர்கள் குடும்பம் இருக்கிறது. ப்ரியாவிற்கு கண்டிப்பாக பெரிய இடத்தில் தான் பார்ப்பார்கள். இப்படி இருக்க, தனக்கு என்ன தகுதி இருக்கிறது? இது வேண்டாம். சரிவராது’ என தனக்கு தானே புத்திமதி சொல்லிக்கொண்டு அவன் கிளம்பிவிட்டான்… அடுத்தநாள் இன்டெர்வியூ என்பதால்.

அடுத்தநாள் நேர்காணலுக்காக தயாரானான் செழியன். அவளை மறந்துவிட்டான் என்பதை விட, பிரயத்தனப்பட்டு அவளை மறக்க முயற்சி செய்துகொண்டே கவனத்தை படிப்பில் திருப்பினான்.

இது முக்கியமான இன்டெர்வியூ அவனுக்கு. தன் துறை சார்ந்த இன்டெர்வியூ. வெகுசிலருக்கே பங்குகொள்ள வாய்ப்பு வந்தது.

பெரிய நிறுவனமான அதானி குரூப்ஸ் எப்போதாவது நடத்தும் இதுபோல இன்டெர்வுயூ’க்களில் வெகு சிலரே கலந்துகொள்ளமுடியும். ஓரிருவர் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆனால் தேர்வாகிவிட்டால் நல்ல சம்பளம் கொடுத்து எடுத்துக்கொள்வார்கள். அவன் ப்ராஜக்ட் குறித்து நிறைய கேள்வி கேட்பார்கள்.

அவனுக்கு இருந்த பெரிய தடை, ப்ராஜக்ட் மதிப்பெண். அதில் வெறும் பாஸ் மார்க் மட்டுமே வந்திருந்தது. ஏன் என்று கேட்டால் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

அதைப் பற்றி நினைத்தவுடன் இந்துமதியின் நினைவுகள் சூழ்ந்தது.

இதையெல்லாம் யோசித்துக்கொண்டே அவன் இன்டெர்வியூ நடக்கும் இடத்திற்கு செல்ல, அப்போது தான் போனை பார்த்தான். ஒரு மெசேஜ் வந்திருந்தது.

அதை பார்த்தவுடன் முகம் மலர்ந்தது. ப்ரியா அவனுக்கு அனுப்பியது… அவன் நன்றாக இன்டெர்வியூ அட்டென்ட் செய்வதற்கு.

நேற்றிலிருந்து கட்டிப்போட்டிருந்த மனம் மறுபடியும் குதிக்க ஆரம்பித்து, சந்தோஷமானது. அந்த ஒரு வாழ்த்து அவனுக்கு பெரியதாகத் தெரிந்தது. ஏனெனில் தந்தையை தவிர யாருமே அவனிடம் இதுகுறித்தோ, வாழ்த்தோ சொல்லவில்லை.

மனநிறைவுடன் ‘நன்றி’ என பதிலனுப்பினான்.

இன்டெர்வியூ ஆரம்பிக்க, போனை டெபாசிட் செய்துவிட்டு உள்ளே செல்ல சொன்னார்கள். அவன் மொபைலை அணைக்க நினைத்தபோது, மறுபடியும் ஒரு மெசேஜ்.

அவள் கையில் திருநீறுடன் ‘விர்ச்சுவல் ப்ளெஸ்ஸிங்ஸ்’ என்ற வாக்கியத்துடன் வந்தது. அதைப்பார்த்ததும் நெஞ்சம் நெகிழ்ந்து கண்கள் கலங்கியது செழியனுக்கு.

செயலற்ற நிலைக்கு அவன் செல்ல, அங்கிருந்தவர் மொபைலை கேட்டார். உடனே புன்னகைத்துபோல ஒரு ஸ்மைலி அனுப்பிவிட்டு, உள்ளே சென்றுவிட்டான்.

‘எப்படியாவது இந்த இன்டெர்வியூ நல்லபடியாக முடிந்தால், நல்ல வேலை நிச்சயம். பின், தன்னிலையை உயர்த்திக்கொள்ளவேண்டும்’ என முடிவெடுத்து எப்படி பேசவேண்டும் என்று யோசித்து தன்னை தயார்செய்துகொண்டான்.

மொத்தம் ஐந்து சுற்றுகள். ஒவ்வொன்றும் முடித்து அடுத்தநிலைக்கு செல்ல, மிகவும் கடினமாக இருந்தது. எப்படியாவது தேர்வாகிவிட வேண்டும் என தனக்கு தானே சொல்லிக்கொண்டான்.

இறுதியாக HR ரவுண்ட். அவன் அழைக்கப்பட்டவுடன் உள்ளே சென்றான்.

அவனுடைய rough மதிப்பெண் பட்டியலை பார்த்துவிட்டு, அவன் நினைத்துபோலவே ஆங்கிலத்தில் கேட்ட முதல் கேள்வி “எதனால் ப்ராஜக்ட்’டில் மட்டும் மதிப்பெண் குறைவு?” என்பதே.

கொஞ்சம் தெளிவுடன் அவன், “ப்ராஜக்ட் டே… என் வாழ்க்கைல, திடீர்னு ஒரு இழப்பு. எதிர்பாராத இழப்பு. அதை ஜீரணிக்க முடியல. ரொம்ப ஸ்ட்ரெஸ்ட்’டா இருந்தேன்” என்ற பதில் அவன் தர…

உடனே “இதுபோல நிறைய சிட்டுவேஷன்ஸ் வேலை பார்க்கும்போது வரும். அதையெல்லாம் எப்படி உங்களால் சமாளிக்க முடியும்? அப்போது வேலையில் தான் அதை காட்டுவீர்களா?” என்று இன்னொருவர் கேட்க, செழியன் முகத்தில் புன்னகை.

மறுப்பாக தலையசைத்தான். “இப்போ இந்த வேலை என்னோட வாழ்க்கைல ரொம்ப முக்கியம். நான் சீக்கிரம் செட்டில் ஆகணும். இந்த வாய்ப்பை யூஸ் பண்ணிட்டு, என்னோட கெரியர்’ல நான் வளரணும். என்னோட தரத்தை உயர்த்திட்டு தான், ஐ வாண்ட் டு ப்ரொபோஸ் மை கேர்ள். சோ, இதுக்கு எந்த தடை வந்தாலும், என்னுடைய குறிக்கோள் என்னை கண்டிப்பாக சரியான பாதைல எடுத்துச்செல்லும்” என்றான்.

அவர்கள் எதுவும் பேசவில்லை அதற்குப்பின். அவனை காத்திருக்கும்படி சொன்னார்கள்.

வெளியே வந்த அவனுக்கு அதிர்ச்சி. எப்படி இப்படி பேசினோம் என்று.

அதிகமாக பேசிவிட்டோமோ? வேலை தரமாட்டார்களோ? ஏன் அப்படி பேசினேன்? மனதில் இருந்தது எப்படி இப்படி வார்த்தைகளாக வந்தது? என்று அவன் யோசிக்க, சில நிமிடங்களில் தேர்வானவர்கள் என்று சொன்ன மூன்று பெயர்களில் அவன் பெயரும் இருந்தது.

அவனால் நம்பவே முடியவில்லை. இப்படி பதில் சொல்லிக் கூட தேர்வாகிவிட்டோமே என்று.

உடனே, ப்ரியா கையில் திருநீறுடன் இருந்த போட்டோ நினைவிற்கு வர, மனதில் ஆயிரம் ஆசையுடன், பல கனவுகளுடன்… தேர்வாகிவிட்டதாக அவளுக்கு மெசேஜ் அனுப்பினான்.

அதேநேரம் சரியாக அவளும் அதையே கேட்டு மெசேஜ் அனுப்பி இருந்தாள். மனதில் மட்டற்ற மகிழ்ச்சி.

நாட்கள் இப்படியே செல்ல… அவளிடம் இருந்து அடிக்கடி மெசேஜ் வந்தது. கைகள் பரபரத்தது செழியனுக்கும்… பதில் அனுப்ப.

ஆனால் மனதிலோ… ‘முதலில் இந்த வேலையில் நிலைத்து… பின், தேவையென்றால் மேலும் படித்து… நல்ல நிலையில் தன்னை நிறுத்திக்கொண்டு, அவளிடம் தன் ஆசையை சொல்ல வேண்டும், நன்றாக பேசவேண்டும்’ என முடிவெடுத்தான்.

கவிதாவை பற்றி மட்டும் அவ்வப்போது அவளிடம் கேட்டுக்கொள்வான்.

ப்ரியா முழுவதுமாக அவனை ஆக்ரமித்துக்கொள்ள, அவள் நினைவுகளுடனே, வேலைக்கு மகாராஷ்டிரா செல்ல தயாரானான்.

அப்படி ஒருநாள் திடீரென அவளிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்தது. ‘ஐ வோண்ட் மெசேஜ் யு எனிமோர்’ என்று.

‘என்னை ஆயிற்று?’ என்று நெஞ்சம் படபடத்தது. ‘ஏதாவது பிரச்சனையா அவளுக்கு… அவள் வீட்டில்?’ என நினைத்து கொஞ்சம் பதட்டத்துடன்… அவளைப் பற்றி நேராக கேட்காமல்…

‘என்ன ஆச்சு. அக்காக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே’ என்று வேறுவிதமாக கேட்பதாய் நினைத்து, முட்டாள் தனமாக அனுப்பி வைக்க, நல்ல திட்டு அவளிடமிருந்து கிடைத்தது. ‘அவன் ரிசல்ட் பற்றி சொல்லவில்லை’ என்று கோபப்பட்டாள்.

அவன் ‘மறக்க வேண்டும்’ என நினைக்கும் ஒரு விஷயம் ப்ராஜக்ட் மதிப்பெண். அதுவும் போக, ‘அன்று மட்டும் நன்றாக செய்திருந்தால், யூனிவர்சிட்டி முதல் மூன்று ரேங்க்’கிற்குள் வந்திருக்க வாய்ப்பு இருந்தது’ என்று அவன் ஆசிரியர்கள் சொன்னது வேறு மனவருத்தம் தந்ததால், அதை மறக்க நினைத்தான்.

அதனால் ரிசல்ட் பற்றியும், யூனிவர்சிட்டி ஏழாம் இடம் பற்றியும், யாரிடமும் சொல்லவில்லை. தந்தைக்கு மட்டும் தெரியும். அவ்வளவே.

ப்ரியாவை இப்போது எப்படி சமாளிப்பது என்று புரியாமல்… அவளை சமாதானப் படுத்த மெசேஜ் அனுப்பினான். பதிலில்லை. பின், அவன் ‘ஏன் சொல்லவில்லை’ என்பதையும் சொன்னான். பதில் வரவில்லை.

பின் கடைசியாக அவளை அழைத்துப்பார்த்தான். மொபைல் சுவிச்ட் ஆப் என்று வந்தது.

இதுபோல ஒருவர் தன்னிடம் உரிமை எடுத்துக்கொள்வதல்லாம் புதிது அவனுக்கு. இரவு தூக்கம் வராமல், ப்ரியாவை எப்படி சமாதானப்படுத்துவது என்ற யோசனையிலேயே இருக்க, நடு இரவு மெசேஜ் வந்தது.

கண்டிப்பாக அவள் தான் என்று தெரியும். வேறு யார் அனுப்புவார்கள் அவனுக்கு?

‘இன்னும் கோபம் இருக்குமோ?’ என அவசரமாக பார்க்க, அவள் அவனுக்கு ஆறுதல் கூறி மெசேஜ் அனுப்பியிருந்தாள்.

அவளை சமாதானப்படுத்த அவன் நினைத்திருக்க, அவளின் இந்த ஆறுதல் அவனை நெகிழச்செய்தது. இவளுக்காக எதுவும் செய்யலாம் என்று தோன்றியது!