TT17

அத்தியாயம்  – 17

ப்ரியாவுடன் கொஞ்சநேரம் இருந்த பின், அன்றே மும்பைக்கு கிளம்பினான்.

அடுத்து வந்த நாட்களில், ஆஃபீஸில் இருந்த சில வேலைகளை முடித்துக்கொடுத்துவிட்டு, கல்லூரியில் சேரும் பணியை தொடங்கினான்.

அதற்கான வேலைகளும் சரியாக நடந்தது. அதை சந்தோஷமாக ப்ரியாவிடம் பகிர்ந்துகொண்டான். ஆனால் இந்த சில நாட்களாக ப்ரியா அவனுடன் அதிகம் பேசாததாக சின்ன உணர்வு ஏற்பட்டது. ஏன் என்று புரியவில்லை.

அன்று சென்னையில் சந்தித்தபோது நன்றாகத்தானே பேசினாள்’ என யோசித்து, சில சமயம் செழியனே மெஸேஜ் அனுப்பினான் அவளுக்கு.

ஆஃபீஸ் வேலை அதிகமிருப்பதாக சொன்ன ப்ரியா, அவனுக்கு மெஸேஜ் அனுப்பதை குறைத்துக்கொண்டாள். அவனும் அவளை தொந்தரவு செய்யவில்லை. 

செழியன் இடத்தில் வேறொருவர் இருந்திருந்தால், இது போல பேசாமல் இருப்பதை பார்த்து, சந்தேகம் உருவெடுத்திருக்கும். கோபம் வந்திருக்கும். அது விரிசல் ஏற்படுத்தியிருக்கும். ஆனால் செழியன் அவளை நம்பினான். காரணமில்லாமல் அவள் இப்படி இருக்கமாட்டாள் என்ற நம்பிக்கை இருந்தது அவனுக்கு.

அவளைப் பற்றி ஞாபகம் வரும்போதெல்லாம், அந்த விளக்கை அவன் உபயோகிப்பான். அவளுக்கு புரியவேண்டும் என்று. 

அவளின் நினைப்புடன் நாட்களை நகர்த்த, அது மாதங்களாக நகர்ந்தது. ஒரு நாள் காலை அவன் கல்லூரிக்குள் நுழையும்போது ப்ரியா அழைத்திருந்தாள்.

அவனுக்கு ஒரே ஆச்சரியம். இத்தனை நாள் பேசாமல் இப்போது அழைத்திருக்கிறாளே என நினைத்து… அவன் எடுக்க, அடுத்து அவள் சொன்ன செய்தி கேட்டு திடுக்கிட்டான்.

அவள் ‘IIT லேக் சைட் கேட்’ பக்கம் நிற்பதாக சொன்னவுடன், அதிர்ந்து வெளியே வந்தான். அது வழியாக அப்போது தான் அவன் உள்ளே சென்றிருந்தான்.

சுற்றி முற்றி பார்த்துக்கொண்டிருந்த ப்ரியாவை பார்த்த செழியனுக்கு, இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

அதே அதிர்ச்சியுடன் அவள் அருகில் செல்ல, அவள் முகத்தில் புன்னகை. அவனுக்குத் தெரியும் அன்று முதுகலை பட்டபடிப்புக்கான தேர்வுகள் மற்றும் நேர்காணல் நடக்கப்போகிறது என.

‘அதற்காக வந்திருக்கிறாளா? இல்லை வேறேதேனுமா? கையில் பையெல்லாம் உள்ளதே…’ என்ற யோசனையுடன், அவளிடம் ‘இன்டெர்வியூ’விற்கு வந்திருக்கிறாளா’ என கேட்டான்.

அவள் ஆம் என்றதும், ஒரு நொடி இதயம் செயலற்று நின்றுவிட்டது அவனுக்கு.

‘இன்னும் என்னவெல்லாம் இவளால் செய்யமுடியும்? அவளுடனான காதலுக்காக தான் ஒரு படி எடுத்துவைத்தால், அவள் நான்கு படி எடுத்துவைக்கிறாளே!’ செயலற்றிருந்த அவன் இதயம், இப்போது படபடவென துடிக்க ஆரம்பித்தது.

ஒரு நொடி அவள் முகம் பாராமல் தன்னை சமநிலை படித்துக்கொண்டு… மனதில் சொல்லத்தெரியாத பல உணர்வுகளுடன் அவளை அழைத்துச்சென்றான்.

அவள் ஏதோ பேச, அவளை பார்த்த செழியன் மனதில் சுருக்கென்றது.

உடல் மெலிந்து, கண்களை சுற்றி கருவளையமென இருந்தாள். அவனுக்கு புரிந்தது, இந்த குறுகியகாலத்தில், எவ்வளவு படித்திருந்தால், இங்கு நேர்காணலுக்கு வந்திருக்கமுடியம் என.

‘தன்னுடன் சரியாக பேசாதது, இவ்வளவு சிரமப்பட்டது… தன்னுடன் படிப்பதற்காகவா?!’ என நினைக்கையில், இதயத்தில் ஒரு வலி.

அவள் முகத்தில் தெரிந்த சோர்வு அவள் எதுவும் சாப்பிடவில்லை என்பதை காட்ட, அவளை உணவு உண்ண அழைத்துச்சென்றான் முதலில்.

‘காதலை வார்த்தையால் சொல்லாமல், இவ்வளவு அழுத்தத்துடன் இருக்கிறாளே… நான் சொல்லாததற்கு காரணம், என் நிலை… அதை உயர்த்தியபின் சொல்லவேண்டும் என நினைத்தேன். ஆனால் இவளோ… அதை சொல்லாமலேயே ஒவ்வொன்றிலும் உணர்த்துகிறாளே? இவள் வீட்டில் என்ன சொல்லியிருப்பாள்? கண்டிப்பாக மெட்ராஸ்’ஸில் கிடைக்கவில்லையா என கேட்டிருக்கமாட்டார்களா?’ என்று யோசித்துக்கொண்டே அவளுக்கு உணவு வாங்கித்தந்தான்.

அவள் அவனை பார்க்காமல் சாப்பாட்டிலேயே குறியாக இருக்க, அவளை கொஞ்சம் சீண்ட தோன்றியது. ‘உனக்காகத்தான் வந்தேன்’ என்று எப்படியாவது ப்ரியாவை சொல்லவைக்கவேண்டுமென நினைத்து, அவளிடம் சில கேள்விகள் கேட்டுவிட்டு, “ஏன் மெட்ராஸ் கிடைக்கவில்லையா?” என வேண்டுமென்றே ‘எதற்கு மும்பை’ என மறைமுகமாக கேட்டான்.

அதற்கு துளியும் அலட்டிக்கொள்ளாமல், “மெட்ராஸில் கிடைக்கவில்லை” என்று சொல்லிவிட்டு, அவன் முகம் பாராமல் அங்கிருந்து அவசரமாக கைகழுவ சென்றவளை பார்த்து… நன்றாக சிரித்தான் செழியன்.

அவளுடன் கண்டிப்பாக அன்று முழுவதும் இருக்க வேண்டுமென எண்ணி அவன் ப்ரோஃபஸர்’ரிடம் அன்று விடுப்பு கேட்டுக்கொண்டான்.

அவளும் முதல் சுற்று எழுத சென்றுவிட்டாள். அவளுக்கு இருந்த படபடப்புக்கு ஈடாக இவனுக்கும் அதே படபடப்பு இருந்தது. குட்டிப்போட்ட பூனை போல வாயிலில் அங்கும் இங்குமென நடந்துகொண்டிருந்தான்.

முதல் சுற்று முடிந்து அவள் வந்து, நன்றாக செய்துள்ளதாக சொன்னாள். கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அவளை உணவு உண்ண அழைத்துச்சென்றான்.

அங்கே அவனுடைய பிரிவில் வேலைபார்க்கும் குமாரை எதிர்பார்க்கவில்லை. குமாரிடம் மட்டும் கொஞ்சம் நன்றாக பேசுவான் செழியன். நன்றாக என்றால் ‘ஹாய் ஹலோ. எப்படி இருக்க. சாப்பிட்டயா’ என்ற பரஸ்பர கேள்விகள் மட்டுமே. அதுபோக சில துறை சார்ந்த கேள்விகள்.

செழியனிடம் குமார் எப்போதும் கேட்பது… ‘ஏன் இப்படி தனியாக இருக்கிறாய்? நன்றாக எல்லோரிடமும் பழகலாமே’ என்பதுதான். வெறுமனே புன்னகைத்துவிட்டு டாபிக்’கை மாற்றிவிடுவான் செழியன்.

குமாரை பார்த்ததும் ‘ஐயோ இவர் எங்கே இங்கே. அதுவும் இசை இருக்கும்போது. யார் என்று கேட்டால் என்ன சொல்வது’ என மனதில் நினைக்க… சரியாக குமாரும் அதையே கேட்க, செழியன் கொஞ்சம் மழுப்பி ‘சொந்தம். இன்டெர்வியூ’விற்கு’ என்றான்.

குமாரும் வாழ்த்து சொல்லி சென்றுவிட, இருவரும் சாப்பிட்டு அடுத்த கட்ட நேர்காணலுக்கு சென்றனர்.

ப்ரியா கொஞ்சம் பதட்டத்துடன் இருப்பதை பார்த்த செழியன், ‘இதேபோல பதட்டத்துடன் இருந்தால், அவள் சரியாக செய்ய முடியாது’ என நினைத்து அவளை கொஞ்சம் தேற்றினான்.

அவள் சரி என்றாலும் அவள் கையில் சின்ன நடுக்கம் தெரிந்தது அவனுக்கு.

அவளை எப்படி சகஜநிலைக்கு கொண்டுவருவது என யோசித்து, அவள் கைகளை ஆதரவாக பற்றிக்கொண்டான்.

‘எதற்கும் கவலை வேண்டாம். எல்லாம் சரியாக நடக்கும். தைரியமாக இரு அதுதான் இப்போது அவசியம்’ என்பதை குறித்தது அந்த பற்றுதல்.

இருவரும் வாய்மொழியால் அதிகம் பேசாமல், மனதளவில் பேசிக்கொள்ளும்போது, அவன் செய்கை அவளுக்கு புரியாதா?! அவளும் கொஞ்சம் தெளிந்தாள். அவள் நடுக்கம் குறைந்தது.

ப்ரியா பெயரை அழைத்தவுடன் அவள் உள்ளே சென்ற அடுத்த நொடி, அந்த பிளாக் பக்கத்தில் இருந்த சின்ன கோவிலுக்கு சென்றான்.

‘இதுவரை உன்கிட்ட நான் எதுவும் எனக்காக வேண்டிட்டதில்ல. என்கிட்ட இருந்த நிறைய விஷயத்தை நீ பறிச்சிட்டப்க்கூட நான் எதுவும் கேட்டதில்லை. முதல் முறை எனக்காக கேட்கறேன். என் இசை என் கூடவே இருக்கணும். இப்போ ஆரம்பிச்சு என் ஆயுள் முடியறவரை’ மனதார கண்கள் கலங்கி பிராத்தனை செய்தான்.

பின், தேர்வு நடக்கும் இடத்திற்கு வந்து அவள் சென்ற அறையின் வாயிலயே பார்த்திருந்தான் அவள் வெளிவருவதற்காக.

அவளும் வந்தாள். முகத்தில் புன்னகையுடன். அவன் கொஞ்சம் நிம்மதியடைய… அந்த நிம்மதி போன இடம் தெரியாமல் சென்றது அவள் “நல்லா பண்ணிருக்கேன். தெரியல பாப்போம். டூ டேஸ் ஆகும்ல. கிடைக்கலனா அடுத்த ஆப்ஷன்… என்னன்னு பார்க்கணும்” என்று சொன்னவுடன்.

‘கொஞ்சம் நிம்மதி வரக்கூடாது நமக்கு’ என நினைத்து, “அதெல்லாம் ஒன்னும் இல்ல. பி பாசிட்டிவ்” என்றான். இருந்தும் மனம் படபடத்தது.

அவளை சென்னைக்கு அனுப்பி வைக்க, ஏர்போர்ட் இருவரும் சென்றபோது, அவள் கிளம்பும் தருணம், அவனிடம்… ‘சாப்பாடு செய்ய கற்றுக்கொள், எனக்கு இங்கு ஹாஸ்டல் சாப்பாடு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை’ என்று சொல்லிவிட்டு செல்ல, அவனிருந்த மனநிலையில், முதலில் எதுவும் காதில் செல்லவில்லை. வெறும் தலையை மட்டும் ஆட்டினான்.

அவள் சிறிதுதூரம் சென்றபின் தான்… அதற்கான அர்த்தம் புரிந்தது. ‘தேர்வாகிவிடுவேன்’ என்பதை மறைமுகமாக சொல்லியிருக்கிறாள் என்று.

கண்கள் மின்ன அவளை மொபைலில் அழைத்தான். அவள் சென்னை சென்றதும் அழைக்கிறேன் என்று மெசேஜ் அனுப்பினாள். பதிலுக்கு ‘சீ யூ ஸூன்’ என்ற மெஸேஜை மட்டும் அனுப்பினான் புன்னகை குறையாமல்.

அவள் மறைமுகமாக தேர்வாகிவிட்டதாக சொன்னாலும், உறுதியாக தெரிந்துகொள்ள யோசித்து, குமாரை அழைத்தான்.

ப்ரியா இன்டெர்வியூ பேனலில் இருந்த தமிழ்செல்வன் என்பவருடன் குமாருக்கு நல்ல பழக்கம். ஆகையால், அவரிடம் கேட்டு முடிவு என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம் என குமாரை அழைத்தான்.

குமாரும், ‘அடுத்தநாள் கேட்டுப்பார்க்கிறேன், தமிழ் சொல்வாரா என்று தெரியவில்லை’ என்றான். அன்றைய இரவு தூங்கா இரவானது செழியனுக்கு.

அடுத்தநாள், பரபரப்புடன் இருந்தான்… குமார் என்ன சொல்வான் என தெரிந்து கொள்வதற்கு.

குமாரை பார்த்தவுடன், செழியன் அவன் முன்னே சென்று நிற்க… “கேட்டேன் இளா. அதிருக்கட்டும். நீ என்ன இவ்ளோ ஈகர்’ரா இருக்க?!” என்று செழியனை கிண்டல் செய்ய… “தெரிஞ்ச பொண்ணுண்ணா” என்றான் முகத்தில் டின் கணக்கில் அசடு வழிந்துகொண்டு.

“ஓ. வெறும் தெரிஞ்ச பொண்ணு தான் இன்டெர்வியூ பேனல்’ல என் பாய் ஃபிரென்ட் கூட படிக்கணும்னு சொல்லியிருக்கா?!” என்றதும் கண்கள் அகல அதிர்ந்தான் செழியன்.

“அண்ணா” செழியன் அதிர்ச்சியுடன் அழைக்க… “அட ஆமாம்ப்பா. அந்த பொண்ணு இத தான் சொல்லியிருக்கு. பட் தமிழ் அவருக்கு ரிசல்ட் பத்தி தெரியாது. அத வெளிய சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டாரு. சோ பாப்போம்” என்று நிறுத்திய குமார்… “ஹாப்பி ஃபோர் யூ இளா. இனி நீ தனியா சுத்த மாட்ட பாரு” கண்ணடித்துவிட்டு சென்றான்.

செழியன் முகத்தில் புன்னகை. ‘அடிப்பாவி. என்னம்மா பேசியிருக்க. என்கிட்ட மட்டும் வாயைத்திறந்து எதுவும் சொல்லிடாத’ என எண்ணிக்கொண்டான்.

அடுத்த ஓரிரு நாட்களில் ப்ரியா அவனை அழைத்து தேர்வாகிவிட்டதாகச்சொல்ல, செழியனை கையில் பிடிக்க முடியவில்லை.

அவளுடன் இருக்கப்போகும் நாட்களை எண்ணி கனவிலேயே மிதந்தான்.

நாட்கள் வேகமாக நகர, அகிலன் ப்ரியாவை வந்து விட்டுவிட்டு சென்றான். வந்தபோது செழியனை அழைத்து வேறு பேசினான்.

‘இத்தனை நாட்கள்… ஏன் வருடங்கள் இதுபோலவெல்லாம் பேசாமல் இதென்ன இப்போது. ஒருவேளை தெரிந்திருக்குமோ?’ கொஞ்சம் குழப்பத்தில் யோசித்தான் செழியன்.

‘தெரிந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்’ என அதை புறம் தள்ளிவிட்டு, அடுத்தநாள் ப்ரியாவை பார்க்க, இரவு முழுவதும் தூங்காமல் காத்திருந்தான் பொழுது விடிவதற்கு.

அதேபோல அடுத்த நாள், காலை அவளிடம் இருந்து மெஸேஜ் வந்தது. கல்லூரிக்கு தயார் ஆகிக்கொண்டிருப்பதாக.

அவள் சொன்னவுடன், ஹாஸ்டல் பக்கம் சென்றான். அவன் தான் காலை ஆறரை மணிக்கெல்லாம் வந்துவிட்டானே கல்லூரிக்கு.

‘இதுவரை பார்த்தது வேறு. ஆனால் இப்போது… கூடவே இருக்கப்போகிறாள். தினம் தினம் பார்க்கப்போகிறோம்’ என எண்ணி மனது றெக்கை கட்டிக்கொண்டு பறக்க, அவன் முன்னே வந்து நின்றாள் ப்ரியா.

அவளை பார்த்து புன்னகைத்தான் செழியன். அவனுக்கு இருந்த சந்தோஷத்தில் அவளை அப்படியே தூக்கி சுற்ற வேண்டும் என்பதுபோல இருந்தது. ஆனால் செய்துவிட்டால் அது செழியன் இல்லையே!

மனதில் ஆயிரம் ஆசைகள் தடம்புரண்டோட, அனைத்தையும் பிடித்து கட்டுக்குள் கொண்டு வந்த பின் சாதாரணமாக பேச ஆரம்பித்தான்.

ஆனால் அவளோ சரியாக பேசாமல், தயங்கி தயங்கி பேச, ‘இசைக்கு தயக்கமா? நம்ப முடியலையே’ மனதுக்குள் அவளை ரசித்தபடி, அவளுடன் பேசினான்.

அவளை ட்ரைனிங் நடக்கும் ஹாலில் விட்டுவிட்டு, அவன் டிபார்ட்மென்ட்’டுக்கு சென்றவுடன், குமார் பிடித்துக்கொண்டான்.

“என்ன இளா. செம்ம குஷியா இருக்க. வந்தாச்சா கேர்ள் ஃபிரண்ட்” என்றவுடன்… “ஐயோ அண்ணா. நீங்கவேற. அவ முன்னாடி ஏதாச்சும் சொல்லிடாதீங்க.  அவ பாய் ஃபிரண்ட்’ன்னு சொன்ன விஷயம் எனக்கு தெரியும்னு காட்டிக்காதீங்க” என்றான் செழியன்.

ஏன் என்று புரியாமல் குமார் பார்க்க, “நாங்க ரெண்டு பேரும் லவ் அப்படி இப்படின்னெல்லாம் எதுவும் சொல்லிக்கல. ஆனா எனக்கு அவளதான் பிடிக்கும்னு அவளுக்கு தெரியும். அவளுக்கு என்ன தான் பிடிக்கும்னு எனக்கு தெரியும். அவளோ தான். ஒரு flow’ல அப்படியே போயிட்டிருக்கோம்” என்றதும் குமார் முகத்தில் குழப்பம்.

“என்னடா சொல்ற? லவ் சொல்லிக்கவே இல்லையா?” என்று கேட்டவுடன், “முன்னாடிலாம்…  நான் படிச்சிமுடிச்சப்புறம் காதல் கல்யாணம் பத்தி பேசணும்னு இருந்தேன். ஆனா இப்போ, அவளும் நல்லா படிக்கணும். ஏன்ண்ணா…  ஐ லவ் யு’ன்னு சொல்லிட்டு பேசிட்டா தான் லவ்’வா என்ன? சொல்லாமலே அது புரியறப்ப எதுக்கு சொல்லணும்” செழியன் சொன்னதும், ஒருமுறை தலையை நன்றாக குலுக்கினான் குமார்.

“முடியலப்பா தம்பி. நீ மட்டும் தான் ஒரு டைப்’னு நினைச்சேன். அந்த பொண்ணும் அப்படி தானா. ஜாடிக்கேத்த மூடி. என்னமோ பண்ணுங்க. நல்லா இருந்தா சரிதான்” குமார் சலித்துக்கொண்டு சொன்னதும் புன்னகைத்தான் செழியன்.

அன்று மதியம் ப்ரியாவுடன் உணவு சாப்பிட கேன்டீன் சென்றபோது, ப்ரியா அவனிடம், ‘இன்னும் எவ்வளவு நாட்கள் வெளி சாப்பாடு சாப்பிடுவாய்’ என்று கேட்டதும், அந்த அக்கறை மனதிற்கு இதமாக இருந்தது.

திருமணத்திற்கு முன் கவிதா அவ்வப்போது கேட்பாள் அவனிடம். அதற்கு பின் இதுகுறித்து யாரும் பெரிதாக யோசிக்கவில்லை.

ப்ரியா எடுத்துக்கொள்ளும் உரிமையை நினைத்து சந்தோஷப்பட, “இனி மெஸ் சாப்பாடு கிடையாது. சமைத்து எடுத்து வா. உனக்கு மட்டுமல்ல எனக்கும்” என்று அவள் சொன்னதும், சந்தோஷம் மறைந்து அதிர்ந்தான்.

‘எனக்கு தான் வராது என்று முன்னமே சொன்னேனே. இதென்ன கட்டளையிடுவது போல’ என மூளை முறுக்கிக்கொள்ள, “அதெல்லாம் வராது. கஷ்டம். என்னால முடியாது” என்றான்.

அதற்கு அவள் தந்த கவுண்டர்… “ஏன் முடியாது? என்ன கஷ்டம்? Thermal and fluid dynamics’ஏஹ் படிக்கமுடியுது. யூனிவர்சிட்டி செகண்ட் வரமுடியுது… சமைக்க முடியாதா? ஒழுங்கா செய்து எடுத்துட்டு வரலைன்னா, நான் மதியம் எங்கயும் சாப்பிட மாட்டேன்” என்றதும், அவன் முறைத்தான்.

இருவரும் சாப்பிட்டு முடித்து ட்ரைனிங் இடத்திற்கு நடக்க… அவன் வெளியில் முறைத்தாலும், மூளை முறுக்கிக்கொண்டாலும், ‘உனக்காக அவள் எதையெல்லாமோ செய்கிறாள்.  உன் நலத்திற்கு தானே சொல்கிறாள். உன்னால் சமைக்க முடியாதா’ என்றது அவன் மனம்.

புன்னகையுடன் திரும்பி அவளை பார்த்தான். அவளும் பார்த்து புன்னகைத்தாள். ‘மாலை சந்திக்கலாம்’ என்று சொல்லிவிட்டு இருவரும் அவரவர் வேலையில் மூழ்கினர்.

மாலை அவள் ஹாஸ்டல் வரை சென்றான். போகும் வழியில் டீ வாங்கிக்கொள்ள, அவள் ‘ப்ளாக் டீ’ குறித்து கேட்டாள்.

சின்ன வயதிலிருந்து குடித்து பழகிவிட்டது என்று சொல்ல மனம் நினைத்தாலும், அதை தவிர்த்து, ப்ளாக் டீ’யின் நன்மைகளை மட்டும் சொன்னான்.

எங்கே தன் கடந்த காலத்தை சொல்லி, அவள் இயல்பாக இல்லாமல், தன்மேல் பரிதாபப்பட்டு விடுவாளோ என்ற எண்ணம் அவனை தடுத்தது.

அன்று இரவு, அடுத்தநாள் என்ன சமைப்பது என்று யோசிக்க, சின்ன வயதில் அடிக்கடி ஸ்வாமிநாதன் செய்துதரும் எலுமிச்சை சாதம் நினைவுக்கு வந்தது. அதையே செய்ய முடிவு செய்தான்.

கொஞ்ச நாட்களாக, பழைய ஆஃபீஸ் வேலை, ஆய்வறிக்கைக்கான வேலை, என கொஞ்சம் அதிகம் வேலை இருப்பதால், இரவு தூங்கும் நேரம் குறைய ஆரம்பித்தது. ஆனால் செய்யும் அனைத்து வேலையையும் விரும்பியே செய்தான்.

அடுத்த நாள் அவள் சொன்னதற்காக, தட்டுத்தடுமாறி, கையை சுட்டுக்கொண்டு, சுத்தமாக சுவையில்லாத சாதத்தை சமைத்து எடுத்துச்சென்றான்.

அவன் மறுத்தும் கேட்காமல், அவன் செய்ததை அவள் சாப்பிட்டாள்.

கை சுட்டுக்கொண்டதை பார்த்து அவள் முதலில் பதறினாலும் பின் சகஜமாக “முதல் முறை அப்படித்தான் இருக்கும்” புன்னகையுடன் சொன்னாள்.

செழியன் வெளியில் முறைத்தாலும், மனதில் சின்ன வயது நிகழ்வு நினைவுக்கு வர, ‘சுட்டுக்கொள்வது முதல் முறை அல்ல’ என நினைத்து புன்னகைத்தான்.

அடுத்து வந்த நாட்களும் அழகாக நகர்ந்தது. அவளுக்காக உணவு தினமும் எடுத்துச்சென்றான்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. காலையில் இருந்து சோர்வாக உணர்ந்த செழியன், வெளியில் சாப்பிடலாமா என்று யோசித்தபோது, வாசல் அழைப்பு மணி அடிக்க, அதை திறந்தவன் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது. ப்ரியா வந்திருந்தாள்.

‘இவள் எங்கே இங்கே’ என அதிர்ச்சியுடன் பார்க்க, அவனிடம் ஒரு பையை கொடுத்துவிட்டு வீட்டினுள் வந்தாள்.

அந்த பையில் ரைஸ் குக்கர் இருந்தது. ‘ஐயோ அதே உணவை நான் இன்றும் சமைக்கவேண்டுமோ’ என அவன் பதற, அவள் உணவு செய்வதாக சொன்னாள்.

ஆனால் அதற்கு முன் டீ வேண்டும் என அவள் சொல்ல, அவளை பார்த்து முறைத்தவண்ணம் டீ போடச்சென்றான்.

தனக்காக அவள் வந்ததை நினைத்து மனதில் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது.

‘இதுபோதாதா… இந்த உரிமை போதாதா…  இருவருக்கிடையில் இருப்பது காதல் தான் என்று சொல்வதற்கு’ என அவன் நினைக்கையில்… ஹாலில் இருந்து அவள்… “இந்த லேம்ப் இன்னும் யூஸ் பண்றியா இளா?” அவள் தந்த விளக்கை பற்றி கேட்டாள்.

உடனே கொஞ்சமாக வெளியில் அவன் எட்டிப்பார்க்க, அவள் முகம் ஆர்வத்துடன் அந்த விளக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

அதை பார்த்து சிரித்த செழியன் வேண்டுமென்றே “ஹ்ம்ம் யூஸ் பண்ணுவேன். ஹால்’ல படிக்கடறப்ப, யூஸ் ஆகும்” என்று சொன்னதும் அவள் முகம் கோபத்துக்கு மாறியது.

அதை ரசித்துக்கொண்டே அவன் வெளியே வர, அவள் தலையில் அடித்துக் கொள்ளும்போது அவளிடம் டீயை நீட்டினான். அவளும் முறைத்தபடி வாங்கிகொண்டாள்.

அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் செழியன். கோபத்திலும் அழகாக தெரிந்தாள் அவனுக்கு. அதுவும் அந்த கண்கள், பின் அந்த கன்னம். அதை கிள்ளி… ‘தினம் தினம் உன் ஞாபகத்துடன் தான் இருக்கேன். இது உனக்கு தெரியாதா’ என்று சொல்லவேண்டும் என இருந்தது.

அவள் சமையலறைக்குள் சென்றதும், மறுபடியும் அவன் மனம் அலைபாய்ந்தது. ‘ஐயோ என்னதிது’ என தன்னையே திட்டிக்கொள்ள, அவள் சமையலறைக்குள் இருந்து குரல் கொடுத்தாள்.

அவன் உள்ளே சென்றதும், அவள் திரும்ப, இருவரின் கண்களும் நேர்கோட்டில் சந்தித்துக்கொண்டது. அவள் கண்களில் தெரிந்த காதல், ஆசை, அவனுக்குள் பல புது உணர்வுகளை தட்டி எழுப்ப, அவள் கொஞ்சம் பின்னே நகர்ந்தாள்.

அடுப்பில் இருந்த சுடு தண்ணீரில் மோதிவிடுவாளோ என பயந்து, பதறி அவளை தன்பக்கம் இழுக்க, அவளும் பயந்து அவன் மேல் பட்டும் படாமல் இடித்து நின்றாள்.

ஒரு நொடி… அவளின் ஸ்பரிசம், அவளுக்கே உரிய அவளின் நறுமணம், படபடத்த கண்கள், இருவரின் நெருக்கம், அவனை கொஞ்சமாக தன்னிலை இழக்கச்செய்தது. இதயம் வேகமாக துடிக்க, ஏதாவது தவறு நடந்துவிடுமோ என பயந்து, சட்டென பின்னே தள்ளிகொண்டான்.