உன்னோடு தான் … என் ஜீவன் …
பகுதி 33
ஆரன் சொன்ன அனைத்தையும் கிரகிக்கவும், ஆரன், காயத்ரி இருவரின் இத்தனை வருட கஷ்டங்களையும், ஆதரவிற்கு ஏங்கி நிற்கும் நேரத்தில், தான்.. விலகி நிற்க வேண்டியிருந்த சூழலையும், மனது சுற்றிக்கொண்டிருக்க, கண்களோ கண்ணீர் மழையில் நனைந்து கொண்டிருந்தது கௌதமிற்கு…
நிச்சயமாய், அவர்கள் இதுவரை அடைந்த அனைத்திற்கும், ஏதோ.. ஒரு வகையில் நான் மட்டுமே காரணமாய் இருக்க, அதை சரி செய்து கொடுக்க வேண்டிய நான், அவர்களுக்கு, மேலும் துன்பத்தையே கூட்டியிருப்பதை உணர்ந்தவன், ஆரனின் கேள்வியை உள்வாங்கவே சில நொடிகள் தேவைப்பட்டது…
‘ஆரன், காயத்ரியின் சார்பில் கேட்ட கேள்வி, அவளை இத்தனை வருடமாய் தாயாய், தந்தையாய், சகோதரனாய், நல்ல காவலனாய் நின்று, அவளின் அனைத்து வேதனையையும் பார்த்தவன் என்ற விதத்தில், வந்த நியாயமான கோபம் தந்த கேள்வி… அதற்கு பதில் சொல்வது என் கடமை…!’ என்ற நிலையை உணர்ந்தவன் போல, தனது கரகரத்த தொண்டையை சரி செய்தவன்,
“என்னையே மறந்திருந்த காலத்துல, உங்கள நினைக்க முடியாதோடா! அதோட அவளோட வாழ்ந்ததா, நீ சொல்ற எதுவும் இப்பவரை எனக்கு தெரியலைங்கும் போது.. எப்படி என்னால உனக்கு விளக்க முடியும்…?!” என கேட்ட நொடி, ஆரனின் அதிர்வுக்கு அளவீடு என்பதே இல்லாது போனதோ…
கௌதம் சொன்னதில், முதல் பாதி கூட ஓரளவு புரிந்து போக, மறுபாதியை அவனால் ஏற்றுக்கொள்ளவே இயலாத நிலையில், அதிர்ச்சியில் அடுத்த வார்த்தை பேசுவதையே மறந்து உறைந்து நின்றான்.
சில மணித்துளிகள் கணமான அமைதியில் கடக்க, தன்னை மீட்டுக்கொண்ட ஆரன், “அப்ப, நீ காயத்ரிகூட வாழவே இல்லன்னு சொல்றையா..?!” என பல்லை கடித்தபடி கேட்க,
“நிச்சயமா, நா அவகூட வாழ்ந்திருக்கேன் ங்கறதுக்கு ஆதாரமா, என்னோட அம்மாவே திரும்ப, என் செல்லம்மா மூலமா குழந்தையா வந்திருக்கும் போது, அத மறுக்க நா தயாரா இல்ல ஆரா.. ஆனா, அது நடந்ததுக்கான சந்தர்ப்பமும், நினைவும் எதுவுமே இல்லங்கறது தான் உண்மை…!” என்று கூறியவனை பார்த்த ஆரன்…
“என்னடா விளையாடறையா…?! உன்னையே மறந்திட்டன்னு சொல்ற, அவளோட வாழ்ந்தத மறந்துட்டேன்னு சொல்ற, என்ன ஆச்சி உனக்கு?! எதாவது ஆக்சிடெண்ட்டுல மாட்டிட்டியா ஜெர்மன்ல!” என தான் யூகித்த விசயத்தை கொண்டு கேட்க, மறுப்பாய் தலையசைத்தவன்,
“நா இந்தியா வர்றதா, உன்கிட்ட சொன்ன மாதிரி வந்து சேர்ந்தது உண்மை! ஆனா….” என்றபடி அமுதனை பார்க்க,
“ஆரன் அண்ணா, கௌதம் அண்ணா ஜெர்மன்ல இருந்து டெல்லி வந்தது என்னை பார்க்க தான்!” என்றவன், அப்போதைய நிகழ்வை சொல்ல துவங்கினான்.
******
கௌதம், ஆரனுக்கு அழைத்து, தான் வருவது குறித்து பேசிவிட்டு, அமுதனுக்கு அழைத்தவன், “ஹலோ அமுதா, நா கௌதம் பேசறேன்…” எனவும்,
“ஹாய் அண்ணா! எப்படி இருக்கீங்க?! என் லைப்பே மாறி போச்சு உங்களால்.. நா நன்றி சொல்லனுமின்னு, ட்ரை பண்ணிட்டே இருந்தேன். தேங்க் காட் இப்ப நீங்களே கால் பண்ணிட்டீங்க!” என படபடவென பேசியவனின், உணர்வுகள் புரிந்தது போல, அவன் முடிக்கும் வரை காத்திருந்தவன்,
“அமுதா, பேசி முடுச்சிட்டையா…?! நா நல்லா இருக்கேன். நீ சொன்ன, தேங்க்ஸ் அக்சப்ட் பண்ணிட்டேன். போதுமா…!” என சிரிக்க..
“சொல்லுங்க அண்ணா, எப்படி, என்னோட நெம்பர் உங்களுக்கு கிடச்சது..?!” என்றவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல், “அமுதா, நாளைக்கி மார்னிங், ஒரு டென் போல, ஏர்போர்ட் வந்திடு, உன்னை படிக்க வச்ச பவுண்டர், உன்னையே அவரோட பி ஏ வா ஆக்கிக்க போறாராம்!” என்று சொன்ன நொடி, சந்தோஷத்தின் உச்சத்தை அடைந்த அமுதன்,
“என்ன அண்ணா சொல்றீங்க! நிஜமாவா..?! என்னால நம்பவே முடியல. சக்கரவர்த்தி க்ரூப்ஸ் ஆப் கம்பெனில நா வேலை பார்க்க போறனா..! ஓ.. மை காட்.. அதுவும் சாரோட பி ஏ. வா..?!” என்றவனின் அதீத சந்தோஷ கூச்சலில், கௌதமும் மகிழ்வோடு வாழ்த்து சொல்லி வைத்தவன், தனது செல்லம்மா குறித்த நினைவுகளோடு தூக்கத்தில் ஆழ்ந்தான்.
அமுதனிடம் சொன்னது போலவே, டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய கௌதமிற்கு, சில நாட்களாய் தெரியும் வித்தியாசம் இப்போதும் தெரிய, அதை உதாசினப்படுத்தி, பார்மலிட்டிஸ் முடித்த படி வெளியே வந்தவன், அமுதனுக்கு அழைப்பு விடுக்க போனை எடுக்கவும்,
“அண்ணா!” என்றபடியே அமுதன், கௌதமை நெருங்கவும் சரியாகி போனது. “ஹாய், அமுதா…!” என்றபடி கை கொடுத்தவன், மெல்ல தடுமாற.. “என்ன ஆச்சி அண்ணா..?!” என கேட்ட அமுதனிடம், “நத்திங் அமுதன்! ப்ளைட் ஜேர்னி ஏதோ செய்யுது போல..?!” என சொல்லும் போதே மீண்டும் தடுமாற்றம் வந்திட, கௌதமை பிடித்து அருகே இருந்த இருக்கையில் அமர்த்திய அமுதன்..
“அண்ணா இருங்க, குடிக்க ஹாட்டா எதாவது வாங்கிட்டு வர்றேன்..!” என்றபடி நகர இருந்த சமயம், “வேணாம் அமுதா.. சம்திங் என்னமோ…. எனக்கு… சதா அங்கிள… கால்…!” என வார்த்தைகள் தடுமாற்றமாய் வெளிவரும் போதே, மயங்கி சரிந்தவனை பார்த்த போது, அமுதனுக்கு சர்வமும் நடுங்கி போனது. அவன் முதன் முறை பார்த்த போது, கம்பீரமாய் தன் முன் நின்ற கௌதமிற்கும், இப்போது தன்னிலை இழந்து கிடக்கும் இந்த கௌதமிற்கும் தான் எத்தனை வித்தியாசம்…! என்று எண்ணியவனுக்கு…
கௌதமின் மயக்கத்தை போக்கும் மார்க்கத்தை பார்க்க வேண்டிய அவசியம் புரிய, அங்கிருந்த எமர்ஜென்சியில் டாக்டரை வர வைத்தவன், தனக்கு சதாசிவம் கொடுத்த எண்ணை கொண்டு அவரை அழைத்தவன், கௌதம் தன்னிடம் தெரிவித்த விசயத்தையும், இப்போது கௌதம் மயக்கம் கொண்டு மருத்துவ பரிசோதனையில் இருப்பதையும் தெரிவிக்க…
“அமுதன், கௌதம் வேற யாருமில்ல.. உன்னோட பவுண்டரே அவன் தான். உன்னை, அவனுக்கு பி ஏ வா கூட்டிட்டு வர்றேன்னு சொல்லி தான், நேத்து எனக்கு மெசேஜ் அனுப்பினான். ஓய்வே இல்லாம, ஒரு மாசத்துல முடிக்க வேண்டிய வேலைய, இவ்வளவு சீக்கிரம் முடுச்சிட்டேன்னு சொல்லும் போதே நினச்சேன். உடம்ப பார்த்துக்காம, நல்லா ரெஸ்ட் எடுக்காம… அவன..! ஓகே நீ பாரு.. நா அடுத்த ப்ளைட் எப்பன்னு பார்த்திட்டு கிளம்பி வர்றேன்.!” என்று சொல்லிட…
அமுதனுக்கும், அவர் சொன்னது போல, இது கௌதமின் ஓய்வில்லா வேலையால் வந்த மயக்கம் போலும், என அலட்சியமாய் காத்திருக்க, அவர்கள் நினைவை தூள் தூளாக்கியது மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ரிப்போர்ட்…
ஏர்போர்ட் மருத்துவர்கள் பரிந்துரைத்த மருத்துவ மனைக்கு கௌதமோடு சென்ற அமுதனுக்கு, அவர்கள் செய்த பரிசோதனைகளை பார்க்கும் போதே விசயம் ஏதோ பெரியது என புரிந்தாலும், அதை மருத்துவர் வாயால் கேட்ட போது, அதிர்ந்து தான் போனான்.
கௌதமின் ரிப்போர்ட்டோடு, அப்போது தான் வந்திறங்கிய சதாசிவத்தையும் அழைத்துக்கொண்டு, மருத்துவரிடம் செல்ல, அதை முழுமையாய் பார்த்து முடித்தவர்,
“சார் பேஷன்ட்டுக்கு நீங்க யாருன்னு தெரிஞ்சிக்கலாமா?!” என கேட்க, “சார், நா அவனோட அங்கிள் அன்ட் ஆல் சோ கார்டியன் டூ., இது அவனோட பி. ஏ.” என்றவர், “கௌதமுக்கு என்ன சார் பிரச்சனை..?” என்று கேட்க,
“சார், அவருக்கு சமீபத்தில் ஏதாவது ஏக்சிடென்ட் ஆச்சா?!” என விசாரித்தவருக்கு விடையாக,
“இல்லையே டாக்டர்..! அவனுக்கு அப்படி எதுவும் நடக்கலையே..!” என்ற சதாசிவத்திடம்,
“நோ மிஸ்டர் சதா, அவருக்கு குறைஞ்சது ஆறுமாசத்துக்கு முன்னாடி தலையில பலமா அடிபட்டிருக்கு. அந்த அடியில, ரத்தம் வெளிய வராம, உள்ளையே மூளையில ப்ளட்கிளாட்டா மாறி இருக்கு!” என்றவர்,
“இந்த மாதிரி மூளையில ஏற்படற ரத்தகட்டியால, அடிக்கடி தலைவலி, உடல் சோர்வு, பசியின்மை, வாந்தி, சில சமயம் மயக்கம், அதோட கண்பார்வை கோளாறு, கை கால் செயல்படாம போறது இதெல்லாம் வரும். அதுல அவருக்கு பாதிக்கும் மேலான சின்டம்ஸ் இருந்திருக்கு. இதனால, வரக்கூடிய தலைவலி நார்மலா வர்றத விட அதீத வலியுடையதா இருக்கும். அவரோடவே இருக்கீங்க, எப்படி தெரியாம போச்சு?!” என்று ஆச்சர்யத்தோடும், அவர்கள் அலட்சியம் ஏற்படுத்தியிருக்கும் விளைவால் சிறு கோபத்தோடும் கேட்க,
அவர் சொல்வதை கேட்ட அதிர்ச்சியில் அவருக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதை கூட மறந்து இருந்தவர்கள், அடுத்து மருத்துவர், “ஓகே லீவ் இட், இப்ப அவரோட கன்டிஷன் ரொம்ப கிரிட்டிக்கலா இருக்கு. அவரோட மயக்கம் இன்னுமே தெளியல. அது எந்த மாதிரியான விளைவ கொடுக்குமின்னு சொல்ல முடியாது. அதோட, அப்படியே விடவும் முடியாது. இப்பவே இமிடியட்டா ஆபரேஷன் மூலமா, அந்த கட்டிய ரீமூவ் பண்ணியே ஆகணும். இல்லாம போனா அவரோட உயிருக்கே ஆபத்தா முடியும்!” என்றதும்,
“என்ன டாக்டர் சொல்றீங்க.. நோ.. அவன நம்பி எத்தனையோ பேர் இருக்காங்க. அவனுக்கு எதுவும் ஆகிட கூடாது. எத்தன லட்சம், கோடி ஆனாலும் சரி, எங்க கௌதம் நல்லபடியா வரணும்..!” என உணர்ச்சிவசப்பட்டு பேசிய சதாசிவத்தை அமைதியாய் அமரச்சொன்ன மருத்துவர், “சார், அவருக்கு ஆபரேஷன் இங்கன்னு இல்ல, இந்த உலகத்துல எங்க போனாலும் சிக்கலான ஒன்னு தான். இதுல சின்னதா ஒரு பிழை நடந்தாலும், அதோட பாதிப்பு எப்படி வேணுமின்னாலும் இருக்கலாம்..” என்றதும்,
“என்ன மாதிரி பாதிப்பு டாக்டர்?” என்ற அமுதனுக்கு, மனதில் அவ்வாறு எதுவும் நேர்ந்திட கூடாது என்பது இருந்தாலும், தெரிவதை முழுமையாய் தெரிந்து கொண்டு, முடிவெடுக்க நினைத்து கேட்க,
“சம்டைம்ஸ், அந்த க்ளாட்டை எடுக்கும் போது, அது மூளை நரம்பை பாதித்து, அவரோட செயல்பாட்டை முழுமையா முடக்கலாம் அல்லது கோமா ஸ்டேஜ்க்கும் கொண்டு போலாம். அப்படி எல்லாம் நடக்காம, நல்லபடியா வெற்றி பெறவும் வாய்ப்பு இருக்கு. இங்கையே, நீங்க பார்த்தாலும், பாரின் போய் பார்த்தாலும் விளைவு ஒன்னு தான். அந்த கட்டி இருக்க கூடிய அளவு, அதோட நிலை இதெல்லாத்தையும் விட, அந்த இறைவனின் அருள் இருந்தா எல்லாமே நல்லதா நடக்கும்.
எவ்வளவு சீக்கிரம் செய்யறமோ, அவ்வளவு தூரம் அவருக்கு நல்லது..” என்று அவரின் கடமையை சரியாய் செய்து முடித்தவர், முடிவு எடுக்கும் பொறுப்பை சதாசிவத்திடம் ஒப்படைத்தார். அவரின் வயதும், கௌதம் மீதான அன்பும், அவரை உடைந்து போக வைக்க, அவரால் மேற்கொண்டு எதையும் சிந்திக்க இயலாமல் தவித்து தான் போனார்.
அமுதன் தான், தனது பொறுப்பை உணர்ந்து, சதாசிவத்திடம் பேசி அவருக்கும் தைரியத்தை அளித்து, அடுத்து செய்ய வேண்டிய பார்மாலிட்டீஸ் முடித்தான்.
அடுத்த நாள் விடியலில், அவனின் ஆபரேஷன் நல்லபடியாய் முடிந்தது என தெரிவித்தாலும், அவனின் மயக்கம் தெளிவதை வைத்து தான், மத்த விசயத்தை சொல்ல முடியும் என்று சொல்லிட, அவனுக்காக வேண்டியபடி காத்திருப்பதை தவிர வேறு வழியில்லாமல் போனது, அங்கிருந்த இருவருக்கும்.
மூன்று நாட்கள், மூன்று யுகமாய் கழிய, கௌதமை பரிசோதித்த மருத்தவர் குழு, கௌதமால் மயக்கத்திலிருந்து விடுபட முடியா நிலைக்கு சென்றுவிட்டாதாக சொல்ல, சதாசிவத்திற்கும், அமுதனுக்கும் அதிர்ச்சியில் அடுத்த கட்டமாய் என்ன செய்ய வேண்டும் என்பதே விளங்கவில்லை.
அன்று, அவர்களை சந்தித்த மருத்துவர் மீண்டும் இருவரிடமும், “இங்க பாருங்க சார், நா அப்பவே சொன்னது தான். இப்ப அவரோட நிலை இப்படி இருக்குன்னா, இதுவே தொடரணும் அப்படின்னு இல்லை. ஒரு மாசம், ரெண்டு மாசத்துல கூட அவர் ரெக்கவர் ஆகலாம். அதே மாதிரி ரெண்டு வருஷமும் ஆகலாம். எதையும் உறுதியா சொல்ல முடியாது. காத்திருப்பது தவிர வேறு வழியில்லை” என்றிட,
சதாசிவத்திற்கோ, சென்னையில் ஒரு பைனான்ஸ் கம்பெனி ஏமாற்றி சென்றதன் விளைவால், கௌதமினால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட, பைனான்ஸ் கம்பெனி மீதும் மக்கள் சந்தேகம் கொண்டிருக்கும் இந்த நிலையில், கௌதமின் நிலை வெளியே தெரிந்தால், அவனின் தொழில் எதிரிகளுக்கு, சாதகமாய் மாறி போகும் வாய்ப்பு அதிகம். இப்போது இல்லாவிட்டாலும், நாளை மீண்டு வரும் கௌதமிற்கு, அவனின் ராஜ்ஜியத்தை காப்பாத்தி கொடுக்க வேண்டிய கடமை தனக்கிருப்பதாய் உணர்ந்தவர்,
“அமுதன், கௌதம் ஜெர்மன் போனது அப்படியே இருக்கட்டும், நீ, இங்க இருந்து கௌதமை பார்த்துக்கோ. நா சென்னை போறேன். கௌதமோட அப்பீஷியல் மெயில் ஐடி, பாஸ்வோர்ட் எனக்கும் தெரியும். சோ, அத வச்சு தேவையான விசயத்தை, அவன் செய்யற மாதிரி நம்மளே செய்யலாம், கௌதம் சரியாகி வர்ற வரை” என்றவர் மேலும்,
“கௌதம் இப்படி இருக்கற விசயம் உன்னையும், என்னையும் தவிர வேற யாருக்கும் தெரியவே கூடாது. யாராவது ஒருத்தருக்கு தெரிஞ்சாலும் கூட, அது வெளிய ஈசியா பரவ சான்ஸ் இருக்கு!” என்றவர், செய்ய வேண்டியதை முடித்துக்கொண்டு, பத்து நாட்களுக்கு பிறகே சென்னை சென்றார்.
அதன் பின் நாட்கள் வேகமாய் செல்ல, ஆறு மாதம் சென்ற நிலையில், கௌதமின் உடல்நிலை முன்னேற்றம் என்பதே இல்லாது இருக்க, சதாசிவத்தை வரவழைத்த மருத்துவர், “சார், கௌதம் இதுவரைக்கும் ரெக்வர் ஆகிட ச்சான்ஸ் இருக்குன்னு பார்த்தோம். பட், கொஞ்சம் கூட அதுக்கான சாத்தியம் தெரியல. அதனால…” என்று தயக்கத்தோடு நிறுத்திட..
மருத்துவர் அடுத்து என்ன சொல்ல போகிறாரோ, என்ற பதட்டத்தோடும், பயத்தோடும் காத்திருந்தவரின் எண்ணத்தை உண்மையாக்கும் படி, “அவரோட லைவ் சப்போர்ட் சிஸ்டத்த ரிமூவ் பண்ணிடலாமா..?! அதோட அவரோட உடல் உறுப்புக்களை வேற சிலருக்கு தானம் செய்யலாமே…?” என்றதும், சதாசிவம் வெளிப்படையாய் அழுதார் எனில், அமுதனோ மனதால் கண்ணீரை சிந்தினாலும், தான் திடமாய் இல்லாது போனால், கௌதமின் நிலை நிச்சயம் ஆபத்தில் முடியும் என்பதை கொண்டு..
“சாரி டாக்டர், நாங்க அதுக்கு ஒத்துக்க மாட்டோம். எத்தன வருஷம் ஆனாலும் அவரோட லைவ் சப்போர்ட் இருக்கட்டும். இங்க வச்சு பார்க்கறதா இருந்தாலும், ஓகே! நீங்க முடியாதுன்னு சொன்னா, நாங்க வேற ஏற்பாடு செஞ்சிக்கறோம்” என்று முடிவாய், திடமாய் சொல்லிட,
கௌதமிற்காக, எவ்வளவு செலவு வேண்டுமானாலும் செய்ய தயாராய் இருப்பவர்களை, வெளியே விட அந்த மருத்துவ நிர்வாகமே தயாராய் இல்லாத போது, மருத்துவரும் அங்கேயே சிகிச்சையே தொடர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார்.
கௌதம் அனுப்புவது போன்ற, மெயில்கள் அனைத்து கிளைகளுக்கும் தொடர்ந்து சதாசிவம் மற்றும் அமுதன் மூலமாக அனுப்பப்பட, கௌதம் ஜெர்மனிலேயே தங்கிவிட்டதாக அனைவராலும் நம்பப்பட்ட நிலையில் …
எப்போதும் போல அன்றும், தனது மொபைல் வழியாக மென்மையான இசையை வழிய விட்டுவிட்டு, கௌதமிடம் எப்போதும் பேசுவது போல பேசிக்கொண்டிருந்த அமுதன், அப்போது தான் கவனித்தான்.. கௌதமின் லைவ் சப்போர்ட் மானிட்டரில் வந்த மாற்றத்தை… மருத்துவரும் கௌதமின் மூளை, அந்த பாடலை உள்வாங்குவதாய் சொன்ன போது, அமுதனுக்கு மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..
மீண்டும், மீண்டும் அதே பாடல்களை ஒலிக்க வைக்க, அதுவே கௌதமின் உடல்நிலையில், நல்ல முன்னேற்றத்தை தந்தது. சரியாய் அந்த மருத்துவ மனைக்கு வந்த ஒன்பதாவது மாதம் மெல்ல கண்விழித்தான் கௌதம்.
அன்று சதாசிவமும் அமுதனும் கொண்ட மகிழ்ச்சி, சிறிது நேரத்திலேயே பொய்த்து போனது கௌதமின் அந்நிய பார்வையால்.. கௌதமை பரிசோதித்த, மருத்துவர், “கௌதம் ரெக்கவர் ஆகிட்டாலும், அவரோட மூளை ப்ளாங்க் ஸ்லைட் மாதிரி இருக்கும். கொஞ்சம் கொஞ்சமா ரெக்கவர் ஆகிடுவார்.. டோன்ட் வொரி..” என்றிட, அந்த நாளுக்காய் காத்திருந்தனர் அமுதனும் சதாசிவமும்…
மெல்ல சுற்றியிருக்கும் விசயத்தை கிரகிக்க முயன்ற கௌதமிற்கு, மனதில் தோன்றிய முதல் பெயர், “செல்லம்மா” மட்டுமே… கௌதம் பேச இயலாமல் திக்கி சொன்ன, அந்த பெயரை கேட்ட போது, சதாசிவத்திற்கு குழப்பமே எஞ்சியது.
அமுதன், “சதா சார், அந்த செல்லம்மா யாரா இருக்கும்?! கௌதம் சார் அவரோட பேர கூட இன்னும் சொல்லாம, செல்லம்மான்னு சொல்றாருன்னா ரொம்ப முக்கியமானவங்களா இருப்பாங்களோ…?!” என்றிட…
“மேபி , நா சென்னையில, அவனோட காலேஜ், வீட்டுல முதல்ல வேலை செஞ்சவங்க, ப்ரண்ட்ஸ் யாராவது கிட்ட தகவல் கிடைக்குதான்னு மறைமுகமா விசாரிக்கறேன்” என்றதும், “சதா சார் எனக்கு முதல்ல இருந்தே ஒரு டவுட். கேட்கலாமா?!” எனவும்,
“என்ன டவுட்.?!” என்றவரிடம், “நீங்க எதுக்கு, கௌதம் அண்ணா வீட்டில வேலை பார்த்தவங்கள மாத்தினீங்க..?!” என கேட்டவனிடம் வந்தவர்,
“அது வந்து அமுதன், கௌதமோட நடவடிக்கை எல்லாமே அவங்களுக்கு நல்லாவே தெரியும். ஆபிஸ்ல, கௌதம் நேரடியா எதுலையும் தலையிட்டதில்ல. பட், வீடு அப்படி இல்லையே. சோ, கௌதம் ஜெர்மன்ல இருந்தா கூட, வீட்டுக்கு ஒரு போன் பண்ணி நிலைமைய கேட்கலை ன்னா, சந்தேகம் வர்றதுக்கு வாய்ப்பு அதிகம். சின்ன தீப்பொறி போதும், நெருப்பு பிழம்பா மாறி போக. அதனால தான்…” என்றவர், செல்லம்மாவை தேடும் பணிக்காக சென்னைக்கு அழைத்து சொல்ல,
கல்லூரி, நட்பு இரண்டு இடத்திலும் கிடைத்த பதில், “தெரியாது!” என்பதே.. வீட்டில் வேலை செய்தவர்களை அழைத்து கேட்க, தோட்ட காரரும், வாயில் காப்போரும் சொன்னது, “செல்லம்மா, அப்படின்னு யாரும் வர மாட்டாங்க சார். காயத்ரின்னு ஒரு பொண்ணு மட்டும், ஆரன் தம்பி கூட வரும். சில நேரம் நம்ம ஐயா கூட போகும்!” என்று சொல்லிட.. சமையல்காரர் மாரியை அழைத்த போது தான் தெரிந்தது, அவருக்கு பக்கவாதம் வந்ததால், அவரால் பேச முடியாத நிலையில், இந்த ஆறு மாதமாய் இருப்பது.
எல்லா இடத்திலும் ஏமாற்றமே மிஞ்ச, அமுதனிடம் அப்படி யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றுவிட, அடுத்து கௌதமின் வார்த்தைக்காக காத்திருக்கும் நிலை அனைவருக்கும்…
கௌதம் மெதுவாக, அனைவரையும் அடையாளம் காணத்துவங்கியதும், சதா சிவத்திடம், “அங்கிள் ஆரன் ஏன் வரல, காயத்ரியும் தான்..?!” என்று தனது நட்பும், காதலியும் வராது போன ஏக்கத்தில் கேட்க,
“அவங்களுக்கு, நீ இன்னும் ரெக்கவர் ஆனது தெரியாது. நா, சொல்லி வரச்சொல்றேன்” என்றவரை, தனியாக சந்தித்த அமுதன், “யார் சார் அவங்க?” என கேட்க, “ஆரன், கௌதமோட பெஸ்ட் ப்ரண்ட். அந்த பொண்ணு அவனோட லவ்வர்!” என்றிட…
“ஓ.. அப்ப அவங்கள வரச்சொல்ல போறீங்களா? யாருக்கும் தெரிய கூடாது ன்னு சொன்னீங்க..!” என அமுதன் சந்தேகத்தோடு கேட்க,
“நிச்சயம் அவங்கள வரவைக்க போறது இல்ல அமுதன், ஏற்கனவே, அந்த பையனும், பொண்ணும் பல சிக்கல்ல மாட்டி, ஏதோ இப்ப தான் கல்யாணம், குழந்தைன்னு செட்டில் ஆகி இருக்காங்க.
அந்த பையன் ஏற்கனவே வந்தப்ப, நா கோபமா பேசற மாதிரி பேசி அனுப்பிட்டேன். இப்ப செல்லம்மா பத்தி கேட்க கூட, அவன காண்டாக்ட் பண்ணல. ஏன்னா, அப்ப அவனுக்கு கௌதம் நிலைமைய சொல்ல வேண்டி வரும். அது தெரிஞ்சா, அடுத்த நிமிஷம் அவன் இங்க வர்றதுக்கு வாய்ப்பு அதிகம்.. அதனால தான்…” என்றவரின் வார்த்தையில், “செல்லம்மா பத்தி, அவருக்கு தெரிந்திருக்குமின்னா, அவர வரவைக்கறதுல தப்பில்லையே?!” என்று அமுதன் வாதிட,
“அமுதன், கௌதம் இப்ப நல்லாவே இம்ப்ரூவ் ஆகிட்டு வர்றான். கொஞ்ச நாள்ல சென்னை கூட்டிட்டு போயிடலாம். அவன் அங்க வந்த பிறகு மத்தத பார்க்கலாம்” என்று முடித்துவிட,
கௌதம், ‘தன்னை மறந்த சூழலிலும் அந்த பெயரை மறக்காமல் இருப்பதிலேயே, புரிந்து கொண்டிருக்க வேண்டாமா?! அவர் கௌதமிற்கு எவ்வளவு முக்கியம்!’ என்ற அதங்கத்தை வெளிப்படுத்த முடியாமல், கௌதமை கவனிக்கும் வேலைக்கு சென்றான் அமுதன்.
கௌதம், கோமாவில் நீண்ட நாள் இருந்து மீண்டதால், அவனின் நினைவுகளில் இன்னும் பல குழப்பங்கள் இருக்க, ஆரனின் தொலைபேசி எண் நினைவில் இல்லாது போனது. கௌதமின் தொலை பேசியும், அன்று ஏர்போர்ட்டில் தவறி போயிருக்க, சதாசிவம் மட்டுமே ஆரனை அழைத்து வர ஒரே மூலமாகி போனார்.
கௌதம், ஓரளவிற்கு யாரின் துணையில்லாமல், மெதுவாய் தனது வேலைகளை செய்ய ஆரம்பித்த பிறகு, அவனை சென்னை அழைத்துவர கேட்க, அந்த மருத்துவரோ, சில பல பரிசோதனைகளுக்கு பின், சதாசிவத்தை அழைத்து, “சார், இன்னும் அவருக்கு முழுசா எதுவும் நினைவில் இல்ல. அடிபட்ட நாளில் இருந்து, அந்த இடைப்பட்ட ஆறு மாத காலத்தில நடந்த விசயங்கள், அவரோட மைண்டல சுத்தமா இல்ல. அதற்கு முன்பு நடந்தது மட்டுமே அவருக்கு தெளிவா இருக்கு. சோ, அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோங்க. அவர்கிட்ட கட்டாயபடுத்தி, அந்த டைமை நியாபக படுத்த பார்க்காதீங்க!” என்று சொல்லிட…”சரி!” என்றவர், அதனை அமுதனிடமும் சொல்லி இருக்கலாம்.
சென்னை வரும் வரை பொறுமையாய் இருந்த கௌதம், வந்த அடுத்த நொடி “ஆரனும், காயத்ரியும் வந்தே தீரவேண்டும்!” என்று பிடிவாதம் செய்ய, சதாசிவம் வேறு வழியின்றி, “கௌதம், ஆரனுக்கும், காயத்ரிக்கும் கல்யாணம் ஆகிடுச்சுப்பா. இப்ப இங்க இல்ல அவங்க” என்று சொன்னதும், அதிர்ச்சியில் உறைந்து போன கௌதமின் உதடுகள் மட்டும், “நோ, பொய் சொல்றீங்க, இத நம்ப மாட்டேன்!” என திரும்ப திரும்ப சொல்ல, கண்களோ கண்ணீரை பொழிந்தது.
கௌதமின் இந்நிலை, அமுதனுக்கு பலவிசயத்தை உணர்த்த, அதை உணர வேண்டிய சதாசிவமோ, தனது வயதின் காரணமாகவோ, அல்லது கௌதம் அவர்களுக்காக இப்படி இருப்பது பொறுத்துக்கொள்ள முடியாததாலோ, கடுப்பின் உச்சத்தில், அன்றைய பேப்பரோடு வந்தவர், கௌதமிடம் கொடுத்துவிட்டு,
“இப்ப தெரியுதா, ரெண்டு பேரோட லட்சனம். லவ் பண்ணி ஊரெல்லாம் சுத்தினது பத்தாதுன்னு ரூம் போட்டு.. ச்சை..! என்ன ஜென்மங்களோ! அதுக்கு டீசன்ட்டா கல்யாணத்த பண்ணிட்டு, எதையாவது செய்ய வேண்டியது தா…!” என்றவரின் வார்த்தை முடியும் முன்பே…
“ஸ்டாப் இட்… யூவர் ப்ளடி ஸ்பீச்…!” என கத்திய கௌதமின் கோபம் கலந்த ஆக்ரோஷமான வார்த்தையில், ஒரு நிமிடம் அதிர்ந்து அடங்கியது அந்த இடமே….