UEJ-36(1)
UEJ-36(1)
உன்னோடு தான்… என் ஜீவன் …
பகுதி 36
அதிகாலை வேளையில், அமுதனின் கையில், கார் வேகமாய் சென்று கொண்டிருந்தது அந்த மலை பாதையில்… அதில் இருந்த அனைவரும், நடக்கப்போகும் இந்த திருமணம் குறித்த, மகிழ்வில் ஆழ்ந்திருக்க, ஆரனின் மனம் முழுவதும், இந்த திருமண தருணத்தை பற்றி பேசிய தினத்தை நினைவு கூர்ந்த வண்ணம் இருந்தது.
ஹரிணியை சந்தித்துவிட்டு, அவளின் சம்மதத்தின் பேரில், அடுத்ததாக ஜோசியரையும் சந்தித்து, நல்ல முகூர்த்த நாட்களை கேட்டு, அதில் எது அவர்களுக்கு சரியாக இருக்கும் என்பதையும் அன்றே முடிவு செய்துவிட்டு தான், வீட்டிற்கே வந்தனர் கௌதம் தம்பதியினர்.
ஆரன் வந்த போது, சச்சும்மாவும், அம்முவும் மட்டுமே இருக்க, அம்முவோடு நேரத்தை செலவிட ஆரம்பித்தவன், வெகு நேரம் சென்றும் கௌதமும், காயத்ரியும் வராது போகவே, யோசனையோடு அம்முவின் கேள்விக்கு பதில் சொன்னபடி இருந்தான். அப்போது கௌதம், காயத்ரி இருவரும் சிரித்த முகமாய், சந்தோஷமாய் வருவதை பார்த்ததும், அவன் முகத்திலும் அதே சந்தோஷத்தின் சாயல் படந்தது.
கௌதமை கண்டதும், எப்போதும் போல இப்போதும், “அப்பா..!” என்றபடி தாவி சென்றவளை, பூமாலையென அழகாய் கரங்களில் தாங்கியவனின் கன்னத்தில் இதழ் பதித்த தனது இளவரசிக்கு, அதையே திரும்ப பரிசாக்கினான் அவளின் தந்தை…
தினமும் நிகழும் நிகழ்வு தான் என்றாலும், பார்க்க பார்க்க ஆனந்தம் மட்டுமே நிறைந்திருந்தது, அங்கிருந்த இருவருக்கும்… மனதில் சிறு தூசாய் தனது தனிமை வருத்தினாலும், கௌதமின் தனிமையை விட, தன்னை சுற்றிலும் இத்தனை பேர் இருப்பதால், அவன் இத்தனை வருடமாய் அனுபவித்த வேதனையின் வீரியத்தை விட, தான் அனுபவிப்பது மிக மிக குறைவு என்பதை கொண்டு, இப்போதெல்லாம் தன்னையே தேற்றிக்கொள்ள பழகியிருந்தான் ஆரன்.
அம்மூவின் கொஞ்சல் மழையில் முழுதாய் நனைந்து முடித்த கௌதம், அங்கிருந்த இருக்கையில் அமர, காயத்ரி சென்று அம்மூவை சச்சும்மாவிடம் ஒப்படைத்து வந்தாள், தாங்கள் பேசும் விசயத்திற்கு எந்த தடையும் ஏற்படகூடாது என்ற எண்ணத்தில்…
கௌதம், “ஆரா, நானும், செல்லம்மாவும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்திருக்கோம். இத்தனை நாள் இவங்கள நீ பார்த்தது போதும். இனி, அவங்கள நா பார்த்துக்கறேன்…” என்று சொன்னவனின், அடுத்த வாக்கியத்தை தொடரும் முன்பே,
“கௌதம், அவங்கள பாரமா, நா எப்பவும் பார்க்கலடா.. அப்ப இருந்த சூழ்நிலைக்கு, என் வேதனைய தீர்க்க வந்தவங்களா தான் பார்த்தேன். நீ, இப்படி பேசறது ரொம்ப ஹர்டிங்கா இருக்குடா…!” என்று மனமார, வருந்தி சொன்னவனை பார்த்த கௌதம்,
“அவசரகுடுக்கை, நா, சொல்ல வர்றத முழுசா கேட்டுட்டு, பதில சொல்லு.. நா அவங்கள பார்த்துக்கறேன். நீ, உனக்கு வரப்போற உன் மனைவிய பாருன்னு சொல்ல வந்தேன்..!” என்றதும், முதலில் புரியாது விழித்தவன், புரிந்ததும்,
“என்னதூ..!!! கல்யாணமா?! எனக்கா..?! நோ..! அதெல்லாம் முடியாது” என்றதும்,
“ஏன்?” என்ற கௌதமிடம்,
“ஏன்னா, என்ன சொல்ல…! ஹும்..!!” என்று யோசிப்பது போல இழுத்தவன், “இஷ்டமில்லைன்னு .. சொல்லலாம்.. இல்ல.. கஷ்டமின்னு கூட சொல்லலாம்… நமக்கெல்லாம் இதெல்லாம் செட்டே ஆகாதுப்பா !” என்று நக்கலாய், விளையாட்டு போல சொல்லிட, இப்படியே பேசினால், இவனை வழிக்கு கொண்டுவர முடியாது என்ற முடிவுக்கு வந்த கௌதம்,
“அப்படிங்களா சார், நாங்க உனக்கு பொண்ணு பார்த்து, முடிவு பண்ணி கல்யாண தேதி வரை பிக்ஸ் பண்ணிட்டு வந்தாச்சு. நா, சொல்லற நாள்ல சொல்ற பொண்ணு கழுத்துல தாலி கட்ற அவ்வளவு தான். மீறி எதாவது ஏடாகூடமா செஞ்சு வச்சா.. செல்லம்மாவையும், அம்மூவையும் கூட்டிட்டு சென்னைக்கு போயிட்டே இருப்பேன் பார்த்துக்க..!” என்று கோபமாய் சொல்லியவன்,
“செல்லம்மா, அம்மூவ தூக்கிட்டு ரூமுக்கு வா. அந்த மடையன், யோசிச்சு நல்ல பதிலா, காலைல சொல்வான்!” என்றபடி சென்று விட, ஆரன் தலையில் தான் இடியும், மழையும் வெளுத்து வாங்கியது,
தனிமையை நினைத்து மட்டுமல்ல, அவனின் மனதை நினைத்துமே..
‘ஆரா போச்சு, நீ கட்டி வச்ச கோட்டையெல்லாம், புல்டவுசர் கூட இல்லாம, ஒரே பாமை வச்சு ஜல்லி ஜல்லி யா நொறுக்கிப்புட்டானே… இந்த கௌதம்!’ என்று தலையில் கைவைத்து அமர்ந்திருந்தவனை, பார்க்கும் போது பாவமாய் இருந்தாலும், அவனின் எதிர்காலம், நல்ல விதமாய் அமைய, இது தேவை தான் ! என்ற எண்ணத்தில் கௌதம் சொன்னதை செய்தாள் அவனின் செல்லம்மா…
வெகுநேரம் அங்கேயே அமர்ந்திருந்தவனை, மாடி வளைவிலிருந்தவாரே பார்த்திருந்த கௌதமின் அன்பை, எப்போதும் போல பிரமித்து போய் பார்த்திருந்தாள் அவளின் செல்லம்மா… ஆரன், அவனின் அறைக்கு சென்று மறையும் வரை, அங்கே நின்றுவிட்டு வந்த கௌதம், எதுவும் பேசாமல் காயத்ரியின் மடியில் தலைசாய்க்க,
அவனின் கூந்தலை மெல்ல வருடிவிட, கண்களை மூடியவன், மெல்லிய குரலில், “ஆரன் சின்ன வயசுல இருந்து, எப்பவும் தனியா இருந்ததே இல்ல செல்லம்மா, யாராவது அவன் கூடவே இருக்கணும். அப்படி இருந்தவன், தனியா இருக்க விட்டுட்டு, எப்படி நா சுயநலமா வாழ முடியும் சொல்லு, செல்லம்மா! அவன் எப்படியாவது, இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கனுமின்னு ஒரு வேகத்துல, நம்ம போயிடுவோமுன்னு சொல்லிட்டேன். அது அவன ஹர்ட் பண்ணியிருக்கும் ன்னு நினச்சா கஷ்டமா இருக்கு..” என்றிட,
“வலிக்கு பயந்தா, வைத்தியம் பார்க்க முடியாது ! எல்லாம் நல்லதுக்காக சொன்னது தானே.. காலைல தெளிவான முடிவோட வருவாங்க.. நீங்க தூங்குங்க” என்ற படி, தனது செயலை தொடர, அவள் சொன்னதை மனம் ஏற்றதாலோ, அவளின் மெல்லிய தலைகோதலாலோ, கௌதமின் விழிகள் மெல்ல தூக்கத்தில் ஆழ்ந்தது.
மறுநாள் ஆரனின் பதிலுக்காக காத்திருந்து பார்த்த கௌதம், அவன் அவனுடைய அறையை விட்டே வெளி வாரது போக, கவலையோடு செல்லம்மாவின் முகத்தையே பார்த்திருந்தான்.. ‘என்ன செய்ய?!’ என்பதாய்..
“நீங்க வந்து சாப்பிடுங்க. ஆரன் கண்டிப்பா, நல்லபதிலோட வருவாங்க..!” என்றதும், அவளுக்காக இருமனமாய் சென்று டைனிங் டேபிளில் அமர்ந்த நேரம், ஆரனும் வந்து அமர, இருவருக்கும் சேர்த்தே பரிமாறினாள் காயத்ரி.
கௌதமோ, ஆரனின் பதிலுக்காய், அவனின் முகம் பார்க்க, அவனோ வைத்த உணவை உண்பதே கடமை என்பது போல சாப்பாட்டில் மூழ்கியவன், “மாமி, காரசட்னி செய்யல..?!” என்று, அது தான் இப்போதைய முக்கிய பிரச்சனை போல கேட்க, கௌதமிற்கு பொறுமை பறக்க துவங்கியது.
“ஏன்டா எரும, நைட் எவ்வளவு பெரிய விசயத்த பத்தி பேசிட்டு போனேன். அதபத்தி ஒத்த வார்த்த பதில் சொல்லாம, நாங்க போறத பத்தி கவலைபடாம, கொட்டிக்கறதுலையே குறியா இருக்கையே, இதுல காரசட்னி ஒன்னு தான் குறைச்சல், உன்னையெல்லாம்…” என்றதும்,
“சொல்லு, என்னையெல்லாம் எக்ஜிபிஷன்ல வைக்கணூமா?!” என்று கேசுவலாக கேட்க,
“இல்லடா, ஜுவூல வைக்கணும்..!” என்று பதிலுக்கு பல்லை கடித்தபடி பேசியவனை, ‘அப்படியா..!’ என்பதாய் பார்த்தவன், தனது உணவில் மீண்டும் கவனத்தை திருப்ப, நொந்து போனதென்னவோ கௌதம் தான்.
இருவரின் பேச்சையும் கேட்ட காயத்ரிக்கு சிரிப்பு வந்தாலும், கௌதமின் நிலைக்காக அதை அடக்கியவள், “ஆரன், என்ன இது… இப்படி பொறுப்பில்லாம பதில் சொல்றீங்க.. உங்க நல்லதுக்காக தானே சொல்றாங்க..?” என சொன்னதும்,
“மாமி, இதுல நா சொல்லாட்டி துரை அப்படியே விட்டுடுவானா?! அது தான் அவன் அகராதியிலேயே கிடையாதே, ஒரு முடிவு எடுத்தா, அதை செஞ்சி முடுச்சிட்டு தான் உக்காருவான்னு தெரியாதா, எனக்கு. இதுல போயிடுவோமுன்னு பூச்சாண்டி வேற..! போ, போயி அவன அடுத்த வேலைய பார்க்க சொல்லு..! இனி நா புது மாப்பிள்ளை, அதுக்கு தகுந்த கெத்தோட இருக்க வேணாமா..?! நல்லா சாப்பிட்டு உடம்ப தேத்தி வேற வைக்கனும், நமக்கு வர்றது கோவை சரளாவா போயிட்டா, உதை வாங்க தெம்பு வேணுமில்ல..!” என்று தனது ஒப்புதலையும் அவனின் பானியில், சொன்னவனை சந்தோஷத்தோடு, அணைத்துக் கொண்ட கௌதம்,
“சம்மதமுன்னு, ஒரு வார்த்தைய சொல்லாம, இவ்வளவு பில்டப் தேவையாடா?!” என்றதும், “கௌதம், ஒரு வார்த்தையில சொன்னா, என்னடா கிக், இப்படியெல்லாம், மண்டைய காயவிட்டு பதில் சொல்றதுல தான், கிக்கே…!” என்று தன் வாயலேயே தனக்கு ஆப்பை தேடிக்கொண்டான் ஆரன்.
அவன் சொன்னதும், ‘அப்படியா ராசா, அதே கிக் எப்படின்னு, நானும் அனுபவிக்க போறேன்!’ என்பது போல மர்மசிரிப்போடு, உணவில் கவனத்தை செலுத்திய கௌதமிடம், “ஆமா கௌதம், யார் அந்த பொண்ணு..?!” எனக்கேட்க,
“அதுவா ஆரா, பொண்ணு எல்லாம் நல்லா தெரிஞ்ச பொண்ணு தான்!” என்றவன், அடுத்து பதில் சொல்லாது உணவில் மீண்டும் கவனத்தை திருப்ப,
“தெரிஞ்சவங்களா?! யாருடா அது…?!” என்று, ஆர்வ மிகுதியில் ஒரு எதிர்பார்ப்போடு கேட்க,
“கேட்டதும், உடனே சொன்னா என்னடா கிக், இப்படியெல்லாம் மண்டைய காயவிட்டு, பதில் சொல்றதுல தான் கிக்கே!” என அவனை பார்த்து கண்சிமிட்டி, அவன் சொன்னதை அவனுக்கே திருப்பி சொல்ல, ஆரனின் முகம் போன போக்கில், காயத்ரி, கௌதம் இருவராலும் சிரிப்பை அடக்க இயலாது போயிற்று.
ஆரன் எழுந்து வேகமாய் அங்கிருந்து செல்ல போக, அவனை தடுத்தவன், விளையாட்டை கைவிட்டு, “ஹரிணி தான்டா பொண்ணு” என்றதும்,
“வாட்..! கம் எகெய்ன்..?! ஹரிணியா…? என்னோட பிஏ ஹரிணியா..?!” என்றவனின் குரலில் இருந்தது, அதிர்ச்சியா, மகிழ்ச்சியா மற்ற இருவருக்குமே விளங்காத போதும்,
“ஆமாம், அதே ஹரிணி தான்!” என்றதும், அமைதியாய் அமர்ந்து உண்டவனின் முகம், தீவிர சிந்தனையில் இருப்பது புரிந்தாலும், அவனாக பேசட்டும் என்று காத்திருந்தனர் கௌதமும், காயத்ரியும்…
தனது உணவை உண்டு முடித்தவன், அதே தீவிர முகபாவத்துடன், “ஹரிணிக்கு இதுல சம்மதமா?!” என்று, அவள் கேட்ட அதே கேள்வியை கேட்க, ரெண்டு பேரின் ஒற்றுமையை எண்ணி மனதில் நிம்மதி அடைந்த கௌதம், “உனக்கு ஓகே வா, அத மட்டும் சொல்லு..? ஹரிணிகிட்ட கேட்டாச்சு, உன் பதிலுக்காக தான் வெயிட்டிங்..!” என்றதும்
“உங்க விருப்பம் போல செய்ங்க!” என்று வெறுமையான குரலில் சொல்லி செல்ல, அவனின் பதிலில் குழப்பமே மிஞ்சியது இருவருக்கும்.. “என்ன செல்லம்மா, இப்படி ஒரு ரியாக்க்ஷன்ல சொல்லிட்டு போறான். அவனுக்கு விருப்பம் இல்லாம எப்படிடா..?!” என்று கவலையாய் கேட்க,
“இல்ல கௌதம், அவருக்கு ஹரிணி தான் பொண்ணுன்னு சொன்ன ஷாக்ல அப்படி ரியாக்ட் பண்றார். எல்லாம் சரியாகிடும்” என்று தேற்றியவள், அடுத்த அடுத்த வேலைகளை பட்டியலிட, கௌதமிற்கு ஆரனிடம் பேசும் சந்தர்ப்பத்தமும் கிட்டவே இல்லை இது பற்றி மீண்டும் பேச…
திருமண வேலை எதிலும் பட்டும் படாமலும், ஒதுங்கி அம்மூவோட ஐக்கியமானவனை பார்க்கும் போது, மனதில் சிறு உறுத்தல் தோன்றாமல் இல்லை கௌதமிற்கு…
இருந்த ஒரு மாத இடைவெளியில், ஹரிணி வீட்டிற்கு செல்லும் நாள் மட்டுமே அவளை சந்தித்தவன், சம்பிரதாய பேச்சோடு நிறுத்திக்கொள்ள, அது வேறு மனதில் குழப்பத்தையே கொடுத்தது கௌதமிற்கு…
ஆனால், முடிவு செய்து ஆரம்பித்த பின், அதை எப்போதும் முடித்தே பழகியவனுக்கு, ஆரன் எப்போதும் கடமையிலிருந்து விலகிட மாட்டான் என்பது திண்ணமாக தெரியும் என்பதால், தனது சலனத்தை ஒதுக்கி அடுத்த வேலையில் மூழ்கினான்.
நாள் நெருங்க, நெருங்க அதை பற்றி யோசிக்கும் நிலை இல்லாமல், திருமண ஏற்பாடு கௌதமின் நேரத்தை எடுத்துக்கொள்ள வேறு எதையும் கவனிக்கும் நிலை இல்லாது போனது.
கார் நின்ற அதிர்வில், தன்னிலைக்கு வந்த ஆரன், அப்போது தான் தாங்கள் வரவேண்டிய இடத்திற்கு வந்து விட்டதை உணர்ந்தவன், வண்டியிலிருந்து இறங்க, அவனை தொடர்ந்து அனைவரும் இறங்கி, அவர்களுக்காக ஒதுக்கியிருந்த அறைக்கு சென்று தயாரானவர்கள், சரியான நேரத்திற்கு சந்நிதிக்கு செல்ல, முன்பே செய்திருந்த ஏற்பாட்டின் படி அனைத்தும் நல்ல படியாய் துவங்கியது.
ஆரன் அருகே, மணமகள் அலங்காரத்தில் இருந்த ஹரிணியை, ஒரு வித ஆராய்ச்சி பார்வை மட்டும் பார்த்துவிட்டு, பட்டுவிடம் தனது பேச்சுவார்த்தையை தொடர்ந்தவனை, என்ன செய்வது?! என்பதே புரியாது தவித்ததென்னவோ, கௌதமும், காயத்ரியும் தான்…
முகூர்த்த நேரத்தில, திருமலையில் பெருமாளிடம் வைத்து அர்ச்சித்த தட்டோடு வந்த அர்ச்சகர், அதிலிருந்த மாலையை ஆரன், ஹரிணியிடம் கொடுக்க, அடுத்து அவர் சொன்னது போன்று, அனைத்தையும் செய்து முடித்து ஹரிணியின் கழுத்தில், மூன்று முடிச்சிட்டு தன்னில் சரிபாதியாய் ஏற்றுக்கொண்டான் ஆரன் சாமுவேல்.
அடுத்து அவரே, மற்றொரு தட்டில் அதே போன்ற மங்கள பொருட்களோடு வர, குழப்பமாய் பார்த்த சிலருக்கு, அதை கௌதம் பெற்றதும் புரிந்து போனது நடக்க போகும் நிகழ்வு குறித்து….
சற்றும் இதை எதிர்பார்க்காத காயத்ரியின் விழிகள் கண்ணீரில் பளபளக்க, ‘நிஜம் தானே?!’ என்பதாய் கௌதமை பார்த்தவளுக்கு, இமை மூடி, ‘ஆம்..!’ என்று சொன்னவன், ஆரனை போன்றே சடங்குகளை முடித்து, அன்று அவளின் கரத்தில் கொடுத்து வைத்த மாங்கல்யத்தை, இன்று அவளின் கழுத்தில் அணிவித்து, அவளின் நெற்றியில் குங்குமம் சூடி, சம்பிரதாய முறையோடும், தன் மனைவியாய் மாற்றிக்கொண்டான் கௌதம் சக்கரவர்த்தி…
ஆரனுக்கும், கௌதமின் செயலில் பெரும் நிம்மதியும், ஒருவித நிறைவும் கிடைக்க, சந்தோஷத்தோடு தனது வாழ்த்தை இறுகிய அணைப்பின் மூலம் வெளிப்படுத்தினான். காயத்ரியோ, மிகவும் நெகிழ்ந்த நிலையில் இருக்க, ஹரிணி அவளை அணைத்து வாழ்த்த, அந்த இடமே மகிழ்ச்சியாலும், நெகிழ்ச்சியாலும் மூழ்கி கிடந்தது.
அம்முவிற்கு நடந்தது குறித்து எழுந்த கேள்விகளுக்கு பதில் சொல்லி சமாளிப்பது தான், பெறும்பாடாய் போயிற்று அனைவருக்கும்.. ஒருவழியாய் அனைத்தையும் முடித்துக்கொண்டு, திருமண ஜோடிகளோடு இல்லம் வந்தவர்களை, தேவியை கொண்டு சச்சும்மாவும், ஹரிணியின் அன்னையும் ஆலம் சுற்றி வரவேற்ற செய்ய, அடுத்து இருவரும் ஒன்றாய் விளக்கேற்றி முறையாய் செய்ய வேண்டிய சடங்குகளை செய்யது முடித்தனர் நிறைவாய்….
அடுத்து அனைவரும், சிறிது நேரத்திற்கு பின் கிளம்பி தேவாலயம் செல்ல, ஆரன், ஹரிணி திருமணம் ஆரனின் முறைப்படியும் நடத்தி முடிக்கப்பட்டது.
மிக நெருங்கிய நட்புகளை மட்டுமே அழைக்கப்பட்டதால், வந்திருந்தவர்களுக்கு, அருகே இருந்த ஹோட்டலில் டின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, அதனை முடித்து திரும்பும் போதே நேரம் வெகுவாய் கடந்திருந்தது.
அம்மு வரும் வழியிலேயே உறங்கிவிட, வண்டியிலிருந்து இறங்கியதும், சச்சும்மா, “காயத்ரி, அம்முவ நா என்கூட வச்சுக்கறேன், இன்னைக்கி” என்று சொல்ல, கௌதம் மறுக்க நினைத்தாலும், சில விசயத்தை தெளிவு படுத்த, அம்மு இன்று மட்டும் அங்கிருப்பது சரி என தோன்ற, மறுப்பேதும் சொல்லாது உள்ளே சென்றுவிட்டான்.
தேவியையும், சாம்பவியையும் அம்முவோடு சேர்த்து கெஸ்ட்ஹவுஸ் அழைத்து சென்றார் சச்சும்மா. அவர் சென்றதும் ஆரனும் உள்ளே சென்றுவிட, கீழிருந்த அறையில் காயத்ரி, ஹரிணியை தயார் செய்யும் வேலையை தொடங்கினாள் அடுத்த சடங்கிற்காக… ஹரிணியின் அன்னை, பாலை காய்ச்சி கொண்டு வர, அதனை ஹரிணியிடம் கொடுத்து, ஆரன் அறையில் விட்டவள், நேராய் தங்கள் அறைக்கு செல்ல, காயத்ரியை வரவேற்றது வெற்று அறை தான்….
காயத்ரி, ஹரிணியை தயாராக்கி விட்டு வரும், முன்பே கௌதம் மனதில் இருந்த குழப்பத்தை போக்கவென மொட்டை மாடியை சரணடைந்தான். எவ்வளவு நேரம் சென்றது என்பது தெரியாமல், வானத்து நிலவை பார்த்திருந்தாலும், மனதில் பதியாமல் நின்றிருந்தவனை பின்புறம் எழுந்த அரவம் நிகழ்வுக்கு கொண்டுவர, திரும்பி பார்த்தவன் அதிர்ந்து போனான் அங்கிருந்த உருவத்தின் செயலை பார்த்து….