UKK11

UKK11

உலாவரும் கனாக்கள் கண்ணிலே-11

கிழக்கு கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கும் மாநிலம் ஒடிசா (பழைய பெயர் ஒரிசா). இந்த மாநிலம் மேற்கே மத்திய பிரதேசம், தெற்கே ஆந்திர பிரதேசம்,வடகிழக்கே மேற்கு வங்காளம், வடக்கே ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களால் சூழப்பட்டுள்ளது. வங்காள விரிகுடா மாநிலத்தின் கிழக்கே உள்ளது.

பல்வேறு வாழ்விடங்கள், மலைப்பாங்கான பசுமையான பகுதியுடன் இணைந்து உள்ளது. கடற்கரை மற்றும் ஆறு பள்ளத்தாக்குகள்  காண்பவரைக் கவரும் வகையில் இயற்கையாகவே இம்மாநிலத்தில் அமைந்துள்ளது.

மகாநதி, பிராம்மணி மற்றும் பான்சதாரா போன்ற முக்கிய ஆறுகள் இங்கு ஓடுகிறது. பீடபூமி, மலைகள் மற்றும் கடற்கரை சமவெளி போன்ற மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது, இம்மாநிலம்.

சுபமரேகா, பைதாராணி, ருஷிகுல்யா மற்றும் புதபலங்கா போன்ற ஆறுகளால் வடிவமைக்கப் பட்ட பல கழிமுகங்கள் உள்ளன. முழு மாநிலத்தில் நான்கில் மூன்று பங்கு மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளைக் கொண்டுள்ளது. இங்குள்ள முக்கிய ஈர்ப்புகளில் ஒன்று வன இயற்கை வாழிடங்கள் அதிகமாக இருப்பது தான்.

கட்டிடக்கலை அம்சங்களாக உள்ள கோவில்கள், ஏராளமான. நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றால் உலக பாரம்பரிய தளமாக இம்மாநிலம் விளங்குகிறது. இங்கே பண்டைய கால கோவில்களுடன், இடையில் ஆட்சி செய்த பெரும் ஆட்சியாளர்களின் மூலம் கட்டப்பட்ட கோயில்கள் நூற்றுக்கணக்கானவை உள்ளன. அவை நிகரில்லா, பிரமிக்கத்தக்க வகையில் இருப்பது நம் முன்னோர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக உள்ளன.

புவனேஸ்வரிலுள்ள கோனார்க் சூரியக் கோவில் மற்றும் பூரிக்கு உலக பாரம்பரிய தளம் எனும் சான்று வழங்கப்பட்டுள்ளது. தவிரவும், தண்ணீர் விளையாட்டுகள் அல்லது சூரிய ஒளியில் குளிர் காய உலக புகழ்பெற்ற நீண்ட நெடிய கடற்கரை 500 கிமீ நீளம் அமைந்துள்ளது.

சில்கா, உலகின் பல பகுதிகளில் இருந்து, பல வகையான பறவைகள் இனங்கள் மில்லியன் கணக்கில் கருப்பு ஏரி பகுதிக்கு வருவதால், பறவைகள் புகலிடமாக அங்கீகாரம் பெற்றுள்ளது. டால்பின்களும் இங்கே காணப்படும்.

இங்கேயுள்ள முக்கிய கடற்கரைகள் சில கோபால்பூர்,சாந்திபூர், பூரி மற்றும் சந்த்ரபாகா.  இவை தவிர  சிறிய கடற்கரைகளான ஆர்யபள்ளி, அஸ்தரங்கா, பலராம்காடி, பாரதீரி, தல்சரி மற்றும் ராம்சந்தி போன்ற இடங்களும் சிறந்த பொழுதுபோக்கு தளமாகும்.

இங்கே எல்லா இடங்களிலும் காணப்படுகின்ற பசுமை மற்றும் அடர்ந்த காடுகள் காரணமாக. வனவிலங்கு சரணாலயங்கள் நிறைய உள்ளன. தவிர, அருவிகள், ஏரிகள் மற்றும் அருங்காட்சியகங்களும் இங்கு உள்ளன.

மீன்வளம் மாநில பொருளாதாரத்தின் முக்கியமான கூறுகளில் ஒன்றாக உள்ளது. பரந்த கடலோரம் காரணமாக, உள்நாட்டு, உப்பு நீர் மற்றும் கடல்சார்ந்த மீன்பிடித்தலில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

நிலக்கரி, சுண்ணாம்புக்கல், பாக்சைட், இரும்பு தாது மற்றும் பல்வேறு கனிம வளங்களைக் கொண்ட வளமான பூமியாக இம்மாநிலம் திகழ்வதால், இங்கு ஜியாலஜிகல் சர்வே ஆஃப் இண்டியா எனும் மத்திய அரசின் மண்ணியல் ஆராய்ச்சி நிறுவனம் இங்கு தனது ஆய்வினை மேற்கொண்டுள்ளது.

நாட்டின், பாக்சைட் இருப்புக்களில் மூன்றாம் நிலையில் இம்மாநிலம் உள்ளது. ரூர்கேலா உருக்கு ஆலை இந்தியாவில் முதலாவது ஒருங்கிணைந்த எஃகு ஆலையாகும். மேலும், ஜிண்டால் ஸ்டீல் இந்தியா, நிலாச்சல் இஸ்பாட் நிகாம் லிமிடெட், போஸ்கோ மற்றும் எஸ்ஸார் ஸ்டீல் போன்ற பெரும் தொழிற்சாலைகளும் தொழில்துறை துறையில் பெரும்பங்கு வகிக்கிறது.

 

இம்மாநிலத்தின் சுவர்க்கம் என அழைக்கப்படும் கோராபுட் மாவட்டத்தில், பொட்டங்கி (Tehsil) தாலுகாவின் பொட்டங்கி என்ற கிராமத்தில் அமர் வேலை பார்க்கும் ஜியாலஜிகல் சர்வே ஆஃப் இண்டியா நிறுவனத்தின் கிளை அலுவலகம் இயங்கி வந்தது.  அந்நிறுவனத்தின் நிரந்தர தொழிலாளர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மிகவும் சொற்பமான வீடுகளைக் கட்டி தந்திருந்தனர்.

அதிக நாட்கள் ஒரே இடத்தில் தங்கியிருந்து வேலை பார்க்கும் வாய்ப்பு இல்லாததால், பெரும்பாலும் புறம்போக்கு இடங்களில் தற்காலிக குடியிருப்புகளை ஏற்படுத்தித் தருவது அந்நிறுவனத்தின் வழமை.  ஆகையால் அது போன்ற இடத்திலேயே அமருக்கு கொடுக்கப்பட்டிருந்த வீடும் அமைந்திருந்தது.

அர்ச்சனாவிடம் தனது அலுவலகம் சார்ந்த எந்த விடயமும் அமரால் பகிரப்படாத நிலையில், சென்னை, பாங்களூர் போன்ற மெட்ரோ நகரங்களை மனதில் கற்பனை செய்து வந்தவளுக்கு கிராமப்புறத் தோற்றம் மிகுந்த ஏமாற்றத்தைத் தந்திருந்தது.

மலை, நீர் வீழ்ச்சி, பசுமை, அடர்காடுகள் என பலதரப்பட்ட வித்தியாசமான இடங்களை வரும் வழிநெடுக பார்த்தவளுக்கு, வேலைக்காக அழைத்து வந்தானா அல்லது இரண்டாவது தேனிலவிற்கு அழைத்து வந்திருக்கிறானா எனும் சந்தேகம் வந்திருந்தது.

ஆனாலும் புது மாப்பிள்ளைக்கான தேஜஸ் சற்று குறைந்தார் போன்ற தோற்றத்துடன், உடன் வரும் புது மனைவியின் பாதிப்புகள் எதுவும் இல்லாமல் சாதாரணமாக இருந்தான் அமர்நாத்.

 

வீட்டின் அமைப்பு மிகவும் சாதாரணமாக, ஆனால் எல்லா வசதிகளுடன் அமைக்கப்பட்டு இருந்தது.  அமர் பெரும்பாலும் தனக்கு வேண்டிய உணவை தானே சமைத்து உண்பதால், அனைத்து அத்தியாவசிய பொருட்களும் அடுக்களையில் இருந்தது.

மதிய உணவிற்கு பிறகு இருப்பிடம் வந்தவுடன் இருவரும் சற்று இளைப்பாறினர்.  இரண்டு நாள் தொடர் பயணத்திற்குப் பின் இருப்பிடம் வந்த அர்ச்சனாவிற்கு அசதியிலும், உறக்கத்திலும் பொழுது கழிந்தது.

இளைப்பாறியவன் தனது வருகையை தெரிவிக்க அங்கிருக்கும் தனது அலுவலகத்திற்கு கிளம்பினான், அமர்.

“அர்ச்சனா…”

“அர்ச்சனா…”, ‘அசதியில் உறங்குகிறாளோ!’ என எண்ணியவன் அதற்கு மேல் காத்திருக்காமல், வீட்டைப் பூட்டிவிட்டு கிளம்பினான்.

திட்ட மேலாளரைச் சந்தித்துப் பேசியவன், அடுத்த நாள் முதல் பணிக்கு வருவதாக அறிவித்துவிட்டு, வீடு திரும்பினான்.

 

õõõõõõõõõõõõõõõõõõõõõõõõ

 

அமரைப் பார்த்த அவனுடன் பணிபுரியும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாத்யூ என்பவர்,

“ஹெலொ அமரா! நாட்டிலிருந்நு எப்பலானு வந்நு?”

“ஆஃப்டர் நூன் வந்தாச்சு சார்”

“மேரேஜெல்லாம் கழிச்சிட்டு, இப்பலானோ இவிடே திரிச்சு?”

“ஆமாம் சார்”

“பாரியா இவிடே வந்நுட்டுண்டோ?”

“ஆமா, கூட்டிட்டு வந்திருக்கேன் சார்”

“காணிச்சிட்டில்லல்லோ, எப்பலானு இண்ட்ரோ செய்யும்?”

“தூங்குறாங்க, எழுந்தவுடனே அழச்சுட்டு வரேன் சார்”

“இரவில ஊணு கழிக்க எண்ட கொட்டத்து வரணும், அமரு”

“எதுக்கு சார் சிரமம் உங்களுக்கு, என் வைஃப் சமச்சுருவாங்க”

“இன்னு ஒரு திவச மட்டும் அவிட வரூ”

“சரி பாக்கறேன் சார்”, என மாத்யூவுடன் பேசியபடி இருந்தவன், சில பணி நிமித்த பேச்சுக்களுக்குப் பின் வீடு திரும்பினான்.

 

***********************************

 

மாலை முடிந்து இரவு துவங்கும் வேளையிலும், உறக்கத்திலிருந்து எழாமல் உறங்கிய அர்ச்சனாவை அழைத்துப் பார்த்து, எழுப்பும் முன் சோர்ந்திருந்தான்.

பொட்டங்கி கிராமம் ஆகையால் அங்கு நாட்டு மாட்டுப் பால் வீட்டிற்கு வந்து தருவார்கள்.  மாலை அலுவலகம் சென்றவனைப் பார்த்த பால் ஊற்றுபவர், அப்பொழுதே அமரைச் சந்தித்து பேசிவிட்டு, சிறிது நேரத்தில் பாலைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுச் சென்றிருந்தார்.

“ரெஃப்ரெஷ் பண்ணிட்டு டீ போடு அர்ச்சனா”

நீண்ட நாட்களுக்குபின் அமர் கேட்ட டீயை அரை மணி தியாலத்திற்கு பின் போட்டு வந்து கொடுத்தாள், அர்ச்சனா.

டீயைக் குடித்தவள், மீண்டும் உறங்கச் செல்ல மனம் ஆயத்தமாக,

“அர்ச்சனா…” முதல் அழைப்பிற்கு எந்த பதிலும் இல்லாமல் போக மீண்டும் அழைத்தான்.

“அர்ச்சனா…”

நான்கு புற சுவர்களுக்குள், அடுக்களை, படுக்கையறை, ஹால் என சுவரால் தடுக்கப்பட்டு இருந்தது.  தனியறைகள் எதுவும் இல்லை.

அடுக்களைப் புறமிருந்து வந்து நின்றவளை பார்த்தவன்,

“காய், வேற எதுவும் வேணுமினா என்ன வேணுமுன்னு சொன்னா இப்போ போயி வாங்கிட்டு வரேன்”

“இங்க பக்கத்துலயே விக்குமா?”

“இல்ல டவுனுக்கு இப்போ ஜீப் போகும், அதுல போயி தான் வாங்கிட்டு வரணும்”

“ரொம்ப நேரமாகுமா?”

“இன்னும் வேற யாரும் வண்டில வந்தா, எல்லாரும் அவங்கவங்க வேலய முடிச்சுட்டு ஒன்னாதான் திரும்பி வர முடியும், அதனால எவ்வளவு நேரமாகும்னு தெரியாது, ஏன் கேக்குற”

“இல்ல இங்க தனியா இருக்க ஒரு மாதிரி இருக்கு அதான்”, அமருடன் செல்லும் உத்தேசத்துடன் அர்ச்சனா கேட்க, அதை அறிந்திருந்தாலும் அறியாதவன் போல

“டிவி பாத்துட்டு இரு, நான் போயிட்டு சீக்கிரமா வந்துறேன்”

“சரி, உங்களுக்கு என்ன காய் வாங்கணுமோ வாங்கிட்டு வாங்க”

“வீட்டைப் பூட்டிட்டு இரு”, என்றவன் கிளம்பிச் சென்றிருந்தான்.

 

அமர் சென்றபின் படுக்கையில் படுத்தவளுக்கு உறக்கம் வராமல் போக, எழுந்தவள் மொபைலை எடுத்து தனது தாயிக்கு அழைத்தாள்.

நீண்ட நேரம் நெட்வொர்க் இல்லாமல் இருந்து பிறகு தொடர்பு கிட்ட சுசீலா எடுத்து பேச ஆரம்பித்தார்.

“என்ன அர்ச்சனா, அங்க இடமெல்லாம் எப்டியிருக்கு, வீடு எல்லாம் எப்டியிருக்கு”

“போம்மா நீ வேற, சரியான பட்டிக்காடு மாதிரி இருக்கு”

“என்ன சொல்ற அர்ச்சனா, நம்ம சத்தியவாடிய விடவா பட்டிக்காடு?”, எதிர்பாரா கன்னிவெடிக்கு கலங்கியிருந்தது மனம்.

“அட நான் ஏன்மா பொய் சொல்றேன் உங்கிட்ட?”, அரிச்சந்திரனுக்கு உறவாகியிருந்தாள்.

“அதான, அங்க மாப்ள என்ன செய்யுறாரு?”

“அவரு சாமானெல்லாம் வாங்க போயிருக்காரு”

“எங்க பக்கத்துலயா?”

“நானும் அப்டி நினச்சு தான் கேட்டேன், அது கொஞ்ச தொலவாம்”

“நீயும் கூட போகாம தனியாவா வீட்ல இருக்க என் ராசாத்தி”, மெழுகாக உருகினார்.

“போகலாம்னு நினச்சேன்,  ஆனா நிறய பேரு சேர்ந்து ஜீப்ல போவாங்களாம், வர நேரமாகுமாம், அதான் விட்டுட்டுப் போயிருக்காரு”

“போயிட்டு வரதுக்கு ரொம்ப நேரமாகுமா?”

“ஆமா அப்டி தான் சொல்லிட்டு போனாரு, அப்பாவை போன் போடச் சொல்லுமா”

“அப்பா வர நேரம்தான், வந்தா பேசச் சொல்றேன்”

“சரி வைக்கட்டா”

“வையி”, என தாயின் பேச்சுடன் அலைபேசியை அணைத்தவள், முகநூலில் சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டிருந்த தனது கணக்கில், அர்ச்சனாவால் இடுகை போடப்பட்டிருந்த அமர், அர்ச்சனாவின் திருமண புகைப்படங்களுக்கான லைக்ஸ், கமெண்ட்களைப் பார்த்தபடி இருந்தாள்.

 

ஒரு மணி தியாலத்திற்கு பிறகு வீடு வந்த கணவனுடன் வந்த மாத்யூவை கண்டவளுக்கு, இருவரும் பேசிக்கொள்வது புரியவில்லை.  அதன் பிறகு அர்ச்சனாவையும், கிளம்பச் செய்து மாத்யூ வீட்டிற்கு சென்று இரவு உணவை உண்டார்கள்.

மாத்யூவின் மனைவிக்கு மலையாளம், ஹிந்தி தவிர ஆங்கிலப் புலமை இருந்தது.  ஆனால், அர்ச்சனாவிற்கு தமிழ் தவிர வேறு மொழிகள் எதுவும் தெரியாததால், அனைத்திற்கும், அமரை எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலையை நொந்தவாறு, உண்டு முடித்து கிளம்பியிருந்தாள், அர்ச்சனா.

வீட்டிற்குள் நுழைந்தவள், “இங்க தமிழ் பேசுறவங்க யாருமில்லயா?”

“இல்ல”, என்றவன் அவனுடைய ஆடையை மாற்றுவதில் கவனமாகியிருந்தான், அமர்.

“அப்ப எனக்கு எப்படி பொழுது போகும்?”

“வீட்ல சமையல், ட்ரெஸ் வாஷிங்குனு வேல இருக்குமில்ல, அத செஞ்சாலே நேரம் போயிரும்”

“அப்ப நான் உங்களுக்கு வேலக்காரியா?”

“நான் அப்படி சொல்லலயே!”, என்றவன் தனது இரவு நேரக் கடமைகளை முடித்துவிட்டு, படுக்கைக்குச் சென்று விட்டான்.

அவன் பின்னால் படுக்கை இருக்கும் இடம் வரை சென்றவள், “அப்ப நீங்க சொன்னதுக்கு என்ன அர்த்தம்?”

“எனக்கு தெரியல? நீ சொல்ற அர்த்தத்துல நானும் சொல்லல”

“இது கிராமம்னு ஏன் எங்கிட்ட சொல்லல?”

“நீ கேக்கல, நான் சொல்லல”

“கேட்டாதான் சொல்லணுமா?”

“உனக்கு இப்போ என்ன பேசணும்னாலும், அத நாளைக்கு நான் ட்யூட்டிக்கு போயிட்டு வந்த பின்ன பேசு, நாளைக்கு காலைல சீக்கிரமா நான் கிளம்பணும்”

“எங்க போறீங்க”, குரலில் சற்று பதற்றம் தெரிய

“வேல பாக்குற இடத்துக்கு தான்”

“அப்போ இது வேல பாக்குற எடமில்லையா?”

“இங்க இருந்து டூ அவர்ஸ் ட்ராவல்”

“எல்லாத்தையும் எங்கிட்ட மறச்சிருக்கீங்க”, என பழைய பல்லவியை பாட

“பேசாம படு”, வந்த அசதி அரட்டியது.

“என்னைக் கண்டாலே உங்களுக்கு ஆகல”

“ஆமா ஆகல, இனி என்ன செய்ய முடியும், சோ பேசாம தூங்கு, என்ன தொந்திரவு பன்ணாத”

“அப்ப என்னை எங்க வீட்லயே கொண்டு போயி விட்ருங்க”

“இன்னும் மூனு மாசத்துக்கு என்னால இங்க இருந்து எங்கயும் வர முடியாது, அதுக்கப்புறம் பாப்போம்”

“அதுவரை நான் இப்டி தான் இருக்கணுமா?”

“எப்டி இருக்க சொன்னேன்”

“உங்களுக்கு வேல பாத்துட்டு, யாரும் சாதி சனம் இல்லாத மாதிரி இப்டி தனியா முடங்கி இருக்கணும்னு ஒன்னும் எனக்கு தலையெழுத்து இல்ல”

“வேற என்ன செய்யணுமோ செய்யி, இப்ப என்ன தூங்க விடு”, என்றவன் பத்து நிமிடத்தில் உறங்கியிருந்தான்.

அர்ச்சனாவிற்கு புதிய இடத்தால் வந்த மிரட்சி  போயிருக்க, மொழி பற்றிய மிரட்சி அவளை இன்னும் மிரட்டியது. யாருடனும் பேச முடியாமல், கணவனும் அவனது பணிக்கு சென்ற பின் தான் எவ்வளவு நேரம், டிவியையும், அலைபேசியையும் பார்ப்பது என யோசித்தபடி,  படுத்த சிறிது நேரத்தில் உறங்கிய கணவனை மனதால் தாளித்தபடியே உறங்கியிருந்தாள்.

õõõõõõõõõõõõõõõõõõõõõõõõõõõõõõõõ

 

இரவு அர்ச்சனாவின் அழைப்பிற்கு பின், செழியனின் வருகைக்காக சுசீலா காத்திருந்தார்.  மகளின் பேச்சால், மனம் சற்று தொய்வடைந்திருந்தது.

‘நெருக்கி ஒரு லட்ச ரூபா சம்பாத்தியம்னு சொன்னத நம்பி எம்புள்ளய கொடுக்க ஒத்துக்கிட்டேன், அதுக்கு பட்டிக்காட்டுல கொண்டு போயி வச்சிருந்தா எம் புள்ள என்ன செய்யும்?’, என மனதில் புலம்பியபடி இருந்தார் சுசீலா.

பத்து மணிக்கு வந்த செழியனுக்கு ஒரே ஆச்சரியம். மருமகள் வந்தபின்பு, இரவு உணவை ஜனதா எடுத்து வைப்பதால், சுசீலா உறங்கச் சென்று விடுவார்.  ஆனால் இன்று, சுசீலா கீழே இருப்பதால், விடயம் ஏதோ இருக்கிறது என்பதை உணர்ந்தவர், அதைக் கேட்காமல்

“என்ன சுசீலா, இன்னும் தூங்கலயா?”

“எந்தூக்கமெல்லாம் போச்சு”, வராத துக்கம் தூக்கலாக வார்த்தைகளின் வழியே வெளிப்பட்டது.

“ஏன் என்ன செய்யுது?”, புலியல்ல ஆனாலும் பதுங்குவது அவரின் மரபாகிப் போனது.

“அருமாந்திரப் புள்ளய ஒரு காய்கறி கூட கிடைக்காத இடத்துல கட்டி கொடுத்துருக்கீங்க”, பழி போட ஆளை நியமித்துவிட்டார்.

“நீ யார சொல்ற?”, புரிந்தாலும், புரியாத புதிராய் வினாவெழுப்பி தப்பிக்க நினைத்தார்.

“ஊருல உள்ளவுகளயா சொல்லுவேன், எல்லாம் நம்ம அர்ச்சனாவத்தான் சொல்லுறேன்”

“அதுக்கு என்ன இப்போ! ஊருக்கு போயிருச்சாமா”

“ம்… போயிட்டு தான் ஒரே அழுகை, இப்படி ஒரு இடத்துல கொண்டு வந்து வச்சிருக்காகனு”

“எங்க போன் போட்டு குடு, நான் கேக்குறேன், இல்லனா சேகரு வந்துட்டானானு பாரு, அவன பேசச் சொல்லுவோம், மாப்பிள்ளைக்கிட்ட”

“என்னத்த மாப்பிள்ளைக்கிட்ட பேசப் போறீங்க?”

“என்னமா ஊருக்கு போனவங்ககிட்ட நல்லபடியா ஊருக்கு போயிட்டீங்களானு கேக்கக்கூடாதா?”

“மாப்பிள்ள தான ஊருக்கு போயிட்டு, உங்கட்ட போனு போட்டு பேசிருக்கணும்”

“யாரு பேசுனா என்ன சுசீலா, அவரு அங்க என்ன வேலய இருக்காரோ!”

அப்பொழுது அங்கு வந்த சந்திரசேகரிடம், செழியன் அமரிடம் பேசுமாறு கூற, நேரம் பார்த்தவன்,

“அப்பா மதியம் அங்க போனவுடனே பேசுனாரு மாப்பிள்ள, இப்போ பத்து மணிக்கு மேலாச்சு… என்ன பேசணும் மாப்பிள்ளைட்ட?”

அதற்கு மேல் சுசீலா கூறியவற்றை செழியன் மகனிடம் கூற, அமைதியாகக் கேட்டிருந்தவன்,

“ஏம்மா, மாப்பிள்ளை எங்க இருக்காரோ அங்க தான் அர்ச்சனா இருக்கணும், அது கிராமமா இருந்தா விடமாட்டிங்களா?”

“ம்… ஏன் நீ ஜனதாவை நம்ம சத்தியவாடி கொண்டு போயி விடு, அது அங்க இருக்குதானு நானும் பாக்கறேன்.”

“ஏம்மா நான் விருத்தாசலத்துல இருக்கறதால ஜனதாவும் இங்க இருக்கு, நான் இங்க இருக்கும் போது ஜனதாவை மட்டும் சத்தியவாடில கொண்டு போயி ஏன் விடணும்?”

“நான் பாத்து கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தேன் அவள, அதனால நான் சொல்ற மாதிரி நீ கேளு சேகரு”

“என்னம்மா பேசுறீங்க? நீங்க பெரியவங்க பாத்து வச்சதால என்ன சொன்னாலும் எப்டி கேக்கமுடியும், எத கேக்கணுமோ அதத் தான் கேக்க முடியும்”

“அப்போ அத சத்தியவாடில கொண்டு போயி விடமாட்டியா?”

“நான் இங்க இருக்கும் போது என் பொண்டாட்டிக்கு அங்க என்னம்மா வேல?”

“அப்போ அவள திருவிழாவுக்கு ஊருக்கு விடமாட்டியா?”

“நான் வரும்போது கூட்டிட்டு வருவேன்”

“அப்போ, சொந்த பந்தமெல்லாம் வருமே, அவங்களுக்கெல்லாம் யாரு ஆக்கிப் போடறது?”

“இவ்ளோ நாளு நீங்க என்ன பண்ணீங்க? அதே மாதிரி இந்த வருசமும் பண்ணுங்க”

அதுவரை அமைதியாக மனைவியையும், மகனையும் பார்த்தவாறு இருந்தவர், “அவ யாருக்கு இது வரை ஆக்கிப்போட்டா, புதுசா சொல்றா”, இது செழியன்

கணவனை முறைத்த சுசீலா, “உனக்கு கல்யாணம் ஆனா கோவிலுக்கு குடும்பத்தோட வரதா நேந்திருக்கேன், அதுக்காவது வருவியா?”

“ஏம்மா கோவிலுக்கு வரும்போது ஜனதாவ நானே கூட்டிட்டு வந்து சாமி கும்பிட்டுட்டு, நான் திரும்பும்போது அவளையும் கூட்டிட்டு வந்துருவேன்”

“ஏன் நாலு நாளுக்கு மட்டும் அங்க விட்டா என்னாகிற போகுது?”

“நாலு நாளும் நான் விருத்தாசலத்துல தான இருக்கேன், வீட்டுக்கு வந்தா என்ன கவனிக்க வீட்ல இங்க யாரு இருப்பா?”

“இவ்ளோ நாளா தனியா தான எல்லாம் பண்ண, இப்போ அவ என்ன மந்திரம் போட்டானு தெரியல, பெத்தவங்க, பெரியவங்க, கூடப் பிறந்தவங்க எல்லாரும் வேணும் சேகரு”

“எதுக்கு அவள பத்தி இப்போ பேசுறீங்க, நான் யாரையும் கண்டுக்காம விடலயே”

“ஆளு இப்டி இருந்துகிட்டே உன்ன வளைச்சு போட்டுருக்குன்னா, கொஞ்சம் நல்லா இருந்திருந்தா இவள புடிக்க முடியாது போலயே”

“தேவையில்லாம எதுக்கும்மா அவள பத்தி பேசுறீங்க?”

“எம்புள்ளய எனக்கு இல்லாம ஆக்குனவ எப்டி நல்லா இருப்பா?”

“அம்மா”, என மகனின் அதட்டலில் சற்று நிதானித்த சுசீலா

அதற்கு மேல் தந்தையிடம் திரும்பியவன், “அப்பா தேவையில்லாத பேச்சு பேச வேணாம்னு சொல்லுங்க, ஜனதா வேற நான் வேற இனி இல்ல, ரெண்டு பேரும் ஒண்ணுதான்”, என்றவன் அதற்குமேல் அங்கு நிற்காமல் அவனது அறைக்குச் சென்றுவிட்டான்.

அறையில் ஏதோ வேலையாக இருந்தவள், கணவனின் வாடிய முகத்தைக் கண்டு அருகில் வந்தாள்.

“ஏங்க ஒரு மாதிரி இருக்கீங்க?”

“ம்… எப்பவும் மாதிரிதான் இருக்கேன்”

“இல்லையே… வேல டென்சனா? சரி வாங்க சாப்பிடலாம்”

“நீ போயி சாப்பாடு எடுத்து வையி, நான் வரேன்”

கணவனின் வாடிய முகம் வேறு எதோ விடயம் என்பதைக் கூற, அதற்குமேல் பேச்சை வளர்க்காமல் உணவை எடுத்து வைக்க ஆயத்தமானாள்.

அதற்குள் அங்கு வந்த சுசீலா,

“மயக்குற அளவுக்கு ஆளு இல்லனாலும், என்ன சொக்கு பொடி போடுறாளுகன்னு தெரிய மாட்டேங்குது”, என்ற சுசீலாவின் வார்த்தைகளைக் கேட்ட ஜனதாவிற்கு தன்னைத் தான் மாமியார் பேசுகிறார் என்பது புரிந்தாலும், எதுவும் பேசாமல் வேலையில் கவனமாகியிருந்தாள்.

ஆனால் அதே நேரம் அங்கு வந்த சந்துருவிற்கு தனது தாயின் வார்த்தைகளைக் கேட்டிருந்தாலும், கேட்காதது போல உணவின்முன் வந்து அமர்ந்தான்.  அதற்குமேல் அங்கிருக்காமல் சென்றிருந்தார் சுசீலா.

சந்துருவிற்கு தாயின் பேச்சில் கோபம் மூண்டாலும் அதைக் காட்டாமல், உண்டதாக பேர் செய்துவிட்டு விரைவில் எழுந்துவிட்டான்.

கணவன் ஏனோ தானோ என உண்டது மனதை வருத்த ஜனதாவிற்கும் உணவு இறங்கவில்லை.  அவளும் வேலைகளை முடித்துவிட்டு அறைக்குத் திரும்பியிருந்தாள்.

யோசனையுடன் படுத்திருந்த கணவனைப் பார்த்தவள், அதற்கு மேல் பேச்சை வளர்க்கவில்லை.  தனது கணவனின் நடவடிக்கைகளுக்கு காரணம் தனது மாமியாரின் பேச்சுக்கள் என்பதை உணர்ந்திருந்தாள்.

ஆனாலும் மனதில் சற்று வருத்தம் இருந்தது.  மாமியாரின் ஜாடை பேச்சைக் கேட்ட கணவன் தனக்காக அவன் தாயிடம் எதுவும் கேட்கவில்லையே, என நினைத்தவாறு உறங்காமல் கண்களை மூடிப் படுத்திருந்தாள்.

பத்ரியின் மனைவி உமாவை தனது தாயார் அன்பரசி மகளைப் போல பார்த்துக் கொள்வதை நேரில் பார்த்தவளுக்கு, சுசீலாவின் ஜாடை பேச்சுகள் வருத்தத்தை தந்திருந்தது.

மாமியாரின் பேச்சால் மன உளைச்சல் இருந்தாலும், கணவனுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்த ஜனதாவிற்கு கணவன் ஒழுங்காக உணவு உட்கொள்ளாத வருத்தம் மேலிட, படுக்கையில் இருந்து எழுந்தவள் கிச்சனில் சென்று அங்கிருந்த பாலை சூடு செய்து எடுத்து வந்து கணவனை அழைத்தாள்.

“ஏங்க இந்த பாலையாவது குடிச்சிட்டு படுங்க”

ஜனதா எழுந்ததை உணர்ந்தவன், அவள் திரும்பி வரும்வரை தவித்திருந்தான்.  இப்போது எங்கு செல்கிறாள், என்னவென்று யோசித்தபடி படுத்திருந்தவனின் பொறுமை போகும் முன், பாலுடன் அறைக்குள் வந்து தாளிட, அவனுக்கு புரிந்திருந்தது, அவளின் தாயுள்ளம்.

அவன் எதிர்பார்த்தது போல, அவனுக்காக பாலைக் கொண்டு வந்து கொடுத்திருந்தாள்.

அவளின் செயலில் மனம் மகிழ்ந்தாலும், அவளின் நிகரற்ற அன்பு, காதலுக்கு தான் அருகதையானவனா என மனம் கேட்க, பாலை வாங்கி பாதி அருந்தியவன் மீதியை அவள் வேண்டாமென்று கூறுவதைக் கேட்காமல் வற்புறுத்தி குடிக்கச் செய்தான்.

தன் தாய் அவளை(ஜனதாவை) ஜாடை பேச, அவளின்(சுசீலா) பிள்ளைக்கு(சந்திரசேகர்) தாயாகும் உள்ளத்தை கொண்டிருந்த மனைவியை கொண்டாட மனம் விழைந்தது.

முதுகு காட்டிப் படுத்திருந்தவளை மார்போடு அணைத்தவன் உள்ளம் மன அழுத்தம் மறையப் பெற்று சாதாரண மனநிலைக்கு மாறியிருந்தது. தனது அணைப்பிற்குள் இருந்தவளின் மனதில் எழுந்திருந்த கனலயும் சேர்த்து அணைத்திருந்தான், சந்திரசேகர்.

*************************

error: Content is protected !!